Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

அம்மிக்கல்லும் சைனா ஸ்பீக்கரும்

முத்துவேல் .
முத்துவேல் .
January 3, 2026
அம்மிக்கல்லும் சைனா ஸ்பீக்கரும்

“அம்மிக்கல்லு பொலியறதே …
ருப்பு ஒரலு கொத்தறதே …
கிரேண்டர் கல்லு பொலியறதே…
ஆட்டுக்கல்லு அம்மிக்கல்லு கொத்தறதே …”

காலை எட்டரைக்கெல்லாம் அரவிந்தர் தெரு முனையிலிருந்து கத்த ஆரம்பித்தாள் கிருஷ்ணவேணி. அவள் தோளில் ஒரு பழைய நரம்பு பைய்யும் கையில் ரெண்டு கொத்து உளிகளும் சுத்தியலும் இருந்தன, டெஸ்லா எலட்க்ரானிக்ஸ் கடையின் ஷட்டரை தூக்கியபடியே அவளை கவனித்தான் பாலு.

பல வருடங்களாய் இந்த பாண்டிசேரியின் பழங்காலத் தெருக்களில் கிருஷ்ணவேணியைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறான் அவன், முன்பெல்லாம் அவள் வீட்டுக்காரனோடு ஜோடியாய் வந்தவள் கொஞ்ச நாட்களாகத் தனியாகத்தான் வருகிறாள், அவளின் உருமாறிய கோலத்திலிருந்து புருஷன் இறந்துவிட்டதை இவனாகவே யூகித்துக்கொண்டான்.

கிருஷ்ணவேணிக்கு பாண்டிச்சேரியை ஒட்டிய தேங்காய் திட்டுதான் பூர்வீகம். எழுபதை தொட இன்னும் சில ஆண்டுகள் தாம் இருக்கும், பிள்ளைக் குட்டிகள் எதுவும் கிடையாது… புருஷங்காரன் போய்ச் சேர்ந்தது முதல் ஜீவனத்தை ஓட்ட அவள் மட்டும் தனியாகவே அம்மிக் கொத்தப்போனாள். நொச்சிக் கொம்பு தட்டி மூடிய அரையாள் உயரம் மண் சுவர் கொண்ட… அந்தச் சுவருங்கூட பக்கத்திலிருந்த பள்ளத்திலிருந்து அரை கசங்கு கூடையில் அவள் சத்துக்குத் தூக்க முடிந்த அளவுக்கு மண்ணெடுத்து வந்து அவளாகவே குழைத்து வைத்துக் கொண்டதுதான். அந்தப் பனையோலை குடிசை ஒன்றுதான் அவளுக்கு ஆஸ்தி.

வாலில் வெள்ளை விழுந்த செவுள் நாயொன்றும் சாம்பல் நிற பூனையொன்றும் அவளின் சுக துக்கங்களை பகிர அந்த குடிசையில் எப்போதும் காத்துக் கொண்டிருந்தன.

பாண்டிச்சேரியின் அத்தனை தெருக்களும் அவளுக்கு அத்துபடி, பிரிட்டிஷ் கால கட்டிடங்களும் பருத்துவளர்ந்த பாதாம் மரங்களின் நிழலும் அவள் மீது வெயில் விழாமல் பார்த்துக் கொள்வது தொழிலுக்கு ஏதுவாகத்தான் இருந்தது.

அண்ணா சாலையில் இறங்கி நடப்பவள் ராஜா தியேட்டர் சிக்னலை தாண்டி வலதுபுறம் வந்து நின்று… அரவிந்தர் தெருவிலிருந்துதான் கத்த ஆரம்பிப்பாள். அங்கிருந்து தொடங்கினால்தான் ராசியென்பது அவளது நம்பிக்கை.அதன்படி அன்றைக்கு போதும் எனும் அளவுக்கு வருவாயும் கிடைத்து வந்தது.

“அம்மிக்கொத்தறதே…” என்று காலையில் தொடங்கும் போது இருந்த அந்த குரலின் உற்சாகமும் சத்தமும்… வெயில் ஏறி நேரம் ஆக ஆக… குறைத்து கொண்டே வரும். சமயங்களில் ஒரு வேலையும் கிடைக்காமல் போன நாட்களும் உண்டு.அப்படித்தான் கடுங்கோடை நாளொன்றில் தண்ணியில்லாமல் நாக்கு ஒட்டி உலர்ந்து பசி மயக்கத்தில் பழைய ஜெயிலுக்கு பின்புறமுள்ள தெருவில் மயங்கி சுருண்டு விழுந்தவளை குப்பை அள்ளிக்கொண்டிருந்தவர்கள் வந்து தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து டீயும் பன்னும் வாங்கி வந்து மரத்தடியில் அமர்த்தி சாப்பிட வைத்து தேற்றிவிட்டுப் போனார்கள்.

ஏதேனும் ஒன்றிரண்டு வேலை கிடைத்தால் ஒரு பன்னீர் சோடாவோ டீயோ வாங்கி நிழல்வாட்டமாய் நின்று குடிப்பாள்.கொஞ்சம் தேவலையாக இருக்கும், அதற்கென தரும் அந்த பத்து ரூபாயை மனமில்லாமல் தான் தருவாள்.
கிருஷ்ணவேணி கொஞ்ச நாட்களாக ஒரு திட்டத்திற்காக வேண்டி காசு சேர்த்து வந்தாள்.

நடுவில் கோயில் அன்னதானம் போட்டால் பூக்காரியிடம் பைய்யை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டுப்போய் வரிசையில் நின்று வாங்குமவள்”உன்னும் ரெவ போடு சாமி” -என வாய்திறந்து கேட்டு வாங்கி அன்றையப் பொழுதை தள்ளுவாள்.

டெஸ்லா எலக்ட்ரானிக்ஸ் பாலு அந்த வழியில் அப்படித்தான் அவளை அடிக்கடி பார்த்திருக்கிறான்.
அவன் கடையை எதிர்த்தாப்போலிருக்கும் டீக்கடையில் மதியவேளைகளில் பொட்டலஞ்சோறும் காரபோண்டாவும் சமோசாவும் வடையும் சகாயவிலையில் கிடைக்கும். அதைவாங்கி தன் நரம்புபைய்யில் வைக்கும் கிருஷ்ணவேணியையே பாலு பார்ப்பான்.

உழைத்து தளர்ந்த அந்த எலும்புக் கைகளில் வண்ணம் உதிர்ந்த அலுமினிய வளையலும் அவளின் அந்த சாயலும் தன் அம்மாவை ஞாபகபடுத்துமவனுக்கு. பாலு தன்னார்வத்தில்தான் எலக்ட்ரானிக்ஸ் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

ஒருகட்டத்துடன் தேங்கி நின்றுவிடாமல் அதில் கரைகண்டு நுரைத்தள்ளியவனாய் மேலே மேலே போய்க் கொண்டிருந்தான், ரேடியோ. தொலைக்காட்சிப் பெட்டிகளை பழுது நீக்குபவனாய் தொழிலை ஆரம்பித்தவன்,
இன்றைய தேதியில் எலக்ட்ரானிக்ஸ் மைக்ரோ ப்ராசஸ் எனும் மின்னணுவின் இண்டு இடுக்குகளில் அவனது புத்திக்கூர்மையும் லாவகமும் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தது.

கடலூர்… விழுப்புரம்… திண்டிவனமென எங்கெங்கிருந்தோ அவனை மருத்துவர்களும் முதலாளிமார்களும் மக்களுமாய் தேடி வந்தனர்.

மனித மூளையையும் இருதயத்தையும் பரிசோதிக்கும் இயந்திரங்களின் பாகங்களும் அவைகளின் செயல்பாடுகளும் இயக்கமும் அவனுக்கு தண்ணிப்பட்ட பாடாய் இருந்தது. பழைய வால்வு ரேடியோ பெட்டியில் தொடங்கிய பயணம்.இன்றைய தேதிக்கு அயல் நாட்டிலிருந்து இறக்குமதியாகும் அத்தனை மருத்துவ எந்திரங்கள் வரை எப்படி இயங்குகிறது? அவைகளுக்கு என்னென்ன கோளாறுகள் வருமென்பதை விரல் நுனியில் வைத்திருந்தான்.

அதன் பொருட்டே பாண்டிச்சேரி பெரியாஸ்பத்திரி தொடங்கி இந்திராகாந்தி மருத்துவமனை… ஜிப்மர் மருத்துவக்கல்லூரி உட்பட இன்னும் எத்தனையோ மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு விடியலிலும் பாலுவின் வருகைக்காக மருத்துவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

பாலு வெறும் வருமானத்திற்காக அந்த தொழிலை செய்து வந்தானென்று சொல்ல முடியாது , அதன் மீது அவனுக்கொரு நேசமிருந்தது , அளவுகடந்த மன நெருக்கமும் பெரு விருப்பமும் இருந்ததாலயே தன் கடைக்கு ‘டெஸ்லா எலக்ட்ரானிக்ஸ் ‘ என்று பெயர் சூட்டிக் கொண்டான்.

தன் நண்பன் கண்ணனுக்கு பக்கத்திலிருந்த கடையை வாடகைக்கு எடுத்து குறைந்த விலையில் புதிதாக இறக்குமதியாகியிருந்த சைனா ஸ்பீக்கர்களை விற்பனை செய்ய வழி செய்து கொடுத்தான்.

சாலையோரம் காய்கறி பழம் விற்பவர்கள் , இளநீர்… வாழைப்பழத்தள்ளுவண்டி சிறுவியாபாரிகள்.
தென்னைமரம் சிரைக்கழிப்பவர்கள். மரஞ்செடிகளுக்கு உரம் வைப்பவர்கள் என சைனா ஸ்பீக்கரை கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமாய் வாங்கிக் கொண்டு போனார்கள்.

கடையிலேயே அவர்களின் விற்பனை பொருளை அல்லது அவர் சார்ந்த தொழிலை அவரவர் வாய்மொழியாகவே அந்தந்த ராகங்களுடன் பேசச்சொல்லி பதிவு செய்தும் கொடுத்தனுப்பினர். அதற்கு பணம் எதுவும் கிடையாது.

“எளநீ எளநீ…செவ்வெளநீ…
இருவது இருவத்தஞ்சி…இருவது இருவத்தஞ்சி… எளநீ”

“வாழப்பழே… வாழப்பழே…
ரஸ்த்தாளி… பூவன்…மலவாழப்பழே… வாழப்பழே…”

“காய்கறி காய்கறி… தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு… காய்கறி காய்கறி…”

“புளிமா புளி…பூண்டுமா பூண்டு… காய்கறி காய்கறி…வாங்கம்மா வாங்க… அம்மா வாங்க அக்கா வாங்க அண்ணி வாங்க… புளிமா புளி…பூண்டுமாபூண்டு…
காய்கறி காய்கறி…
கிலோ அறுவது நூறு அறுவது நூறு…
கம்மி வெல… கம்மி வெல… புளிமா புளி பூண்டுமாபூண்டு…”

-டெஸ்லா எலக்ட்ரானிக்ஸ் வாசலே இப்படியான குரல்களால் நிறைந்து வழிந்தது.பாலுக்கும் கண்ணனுக்கும் ஒரே சிரிப்பு வேறு.அந்த கூட்டத்தையும் அங்கு நடப்பதையும் சற்றுத் தள்ளி பாதாம் மரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணி கூட்டம் கொஞ்சம் குறைந்த பின்பு அருகில் வந்து கண்ணனிடம் கேட்டதை பாலு கவனிக்கத் தவறவில்லை.

“அந்த ரேடியா இன்னா வெலதான் எப்பா “

“தொள்ளாயிரத்தி அம்பதுரூபா பெரிமா நீ தொள்ளாயிரபா குடு போதும் “
இதற்காகத்தான் கிருஷ்ணவேணி பணம் சேர்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொருநாளும் தொழிலுக்கு போய் வந்ததும் அன்றைக்கு கிடைத்த வருமானத்தையும் ஏற்கெனவே கள்ளுப்பல்லாவில் சேர்த்து வைத்திருந்ததையும் எடுத்து எண்ணிப்பார்ப்பாள். இந்ததடவை எல்லாம் சேர்த்து ஐநூற்று எழுபது ரூபாய் இருந்தது. அதை அப்படியே எடுத்து முடிந்து கொண்டு பாலு கடைக்கு வந்தாள்.சிற்றெறும்பு கால்களை விட சிறிய கால்கள் கொண்ட ஐ.சியொன்றை பி.சி.பியில் உற்றுப் பார்த்து அனல் குழாயில் ஆவிபறக்க உண்ணிப்பாய் பொறுத்திக் கொண்டிருந்தான் பாலு.

ஏதோ தயக்கமும் அச்சமும் சூழ மூன்றாவது படிக்கட்டிலேயே நின்றாள் கிருஷ்ணவேணி.

“இன்னாம்மா”

“இந்தா எப்பா இத்த எண்ணிப்பாத்து வச்சிக்க.உன்னும் எவ்வளவு சேருதோ கொண்டாந்து சிறுவ சிறுவ குடுத்துர்றேன்”

“செரி செரி அவரு இன்னும் வரல… அந்தக் கடையில டீ சொல்றேன் குடிச்சிட்டு மரத்தடியிலயே கொஞ்ச நேரம் ஒக்காரு வருவாரு”

பாலு கடையிலிருந்தபடியே டீ மாஸ்டருக்கு சைகை காண்பித்தான். கண்ணன் வந்ததும் கிருஷ்ணவேணி அழைக்கப் பட்டாள். ஏதோ பெரிய புதையல் கிடைக்க இருப்பது போல அவள் முகத்தில் அத்தனை மலர்ச்சியும் ஆசையும்.
மரநாற்காலிஒன்றை எடுத்துப் போட்டு கண்ணன் அவளை உட்காரச்சொன்னான்.

“வேணாஞ்சாமி நிக்கிறேன்”

“சரி நீ எப்படி பேசுவ சும்மா பேசிக்காட்டு…”

“அம்மிக்கல்லு கொத்தறதே…”

“கொஞ்சம் கிட்ட வா…”

அவள் குரல் அசலாக பதிவு செய்யப் பட்டது. நடுநடுவே கொஞ்சம் கூச்சப்பட்டாள். இரண்டுமூன்று டேக்குகளுக்குப் பிறகு சரியாக பதிந்தது.

பாலு ஐநூறு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு எழுபது ரூபாயை அவளிடமே திருப்பிக் கொடுத்தான்.

“இந்தாம்மா எடுத்துட்டு போ… இனிமேல் நீ காசெல்லாம் தர வேணாம் இத கொண்டு போய் பத்தரமா வச்சிக்க” – என இருவருமாய் சைனா ஸ்பீக்கரை கிருஷ்ணவேணியிடம்
தந்தனர்.

அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை ஒலிப்பதிவு செய்த குரலை பரிசோதிக்க போட்டுக் காண்பித்த போது வெற்றிலைக்கறை பல் தெரிய வெட்கமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

“நீங்க நல்லா இருப்பீங்க சாமி அய்யா…”

கும்பிட்டு வாஞ்சையுடன் இரண்டு கைகளையும் ஏந்தி அதை வாங்கிக் கொண்டவள் தன் குடிசைக்கு எடுத்து வந்து நடுவீட்டில் கொண்டு போய் வைத்தாள். மஞ்சள் குங்குமம் குழைத்து சிறியதாக அதன் முகப்புறத்தில் வைத்து கற்பூரம் ஏற்றி தன் குலசாமியை நினைத்துக் கொண்டு விழுந்து கும்பிட்டாள்.

பக்கத்து வீட்டு சிறுவனை கூப்பிட்டு ஆன் செய்யச் சொன்னாள். அவளின் குரலால் அந்த எளிய ஓலைக் குடிசை நிறைந்து போனது. பூனையும் நாயும் தூண் ஓரம் நின்று நம் வீட்டிற்கு புதிய பிராணி ஒன்று வந்திருப்பதைப் போல அதையே பார்த்துக் கொண்டு நின்றன.

கிருஷ்ண வேணி மறுநாள் தொழிலுக்குப் புறப்பட்டாள். பேருந்தில் வந்துகொண்டிருந்த போது அவளுக்கு மனம் பூரித்துப் போனது. இனிமேல் தொண்டைத் தண்ணி வத்த தெரு தெருவாய் சுத்த வேண்டியதில்லை. பின் மதியத்துக்கு மேல் குரல் அடங்கி கூவ வேண்டி இருக்காது. சுவிட்சைப் போட்டுவிட்டால் அது பார்த்துக் கொள்ளும் என்று நினைத்து நினைத்து நெஞ்சம் குளிர்ந்து போனது.

நன்றியுணர்ச்சியோடு பெருகிய அந்த புண்ணியம் சைனாக்காரனுக்கும் பாலுவுக்கும் போய் சேர்ந்தது.

அரவிந்தர் தெருமுனையை வந்தடைந்த கிருஷ்ண வேணி தன் வீட்டுக்காரனின் பழந்துண்டை சும்மாடுக்கொள்ளி சைனா ஸ்பீக்கரை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாள். அதன்வாய்புறம் காந்தி சிலையை பார்த்தது போல் கிழக்கு நோக்கி இருந்தது. நடந்தபடியே பின்னால் இருந்த சுவிட்சை மெதுவாய் விரலால் தடவி அப்படி நகர்த்தினாள்.

“அம்மிக்கல்லு பொலியறதே…

கிரேண்டர் கல்லு… ருப்பு ஒரலு…ஆட்டுக்கல்லு கொத்தறதே…” என அலறத் தொடங்கியது சைனா ஸ்பீக்கர்.
பாலுவும் கண்ணனும் ஒருவரையொருவர் பார்த்து மெலிதாய் சிரித்துக் கொண்டார்கள்.


 

முத்துவேல் .
முத்துவேல் .
Share :

3 responses to “அம்மிக்கல்லும் சைனா ஸ்பீக்கரும்”

  1. இரா.தெ.முத்து
    January 4, 2026

    முத்துவேல் எழுதிய இந்தக்கதை மானுடநேசம் கைகோர்த்துக் கொள்கிற அழகான கதை.வாழ்த்துகள் முத்துவேல்.
    தடாரி இதழின் வடிவழகு நன்று. கதைக்கான ஓவியம்தான் பொருத்தப்பாடாக இல்லை.
    – இரா.தெ.முத்து

    Reply
  2. மபா நந்தன்
    January 4, 2026

    கதை மிகச் சிறப்பு. பாண்டிச்சேரியில் தெரிந்தவர்களுக்கு அல்லது அதன் சுற்றுப்புற கிராமங்களில் வாழ்பவர்களுக்கு இந்த கதை ரத்தமும் சதையும்மாக உணரப்படும்.

    Reply
  3. Chandru
    January 7, 2026

    It’s a good story it gives live in 1980 I’m very happy to read that The news paper Ananthavikatan send it first prize is given to the writer once again I thank balu & writer

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (80)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (80)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top