ஸ்பானிய மொழியில் : – மெர்சே ரோடோரெடா
ஆங்கிலத்தில் : டேவிட் எச். ரோசெந்தால்
தமிழில் : சமயவேல்
இப்போதுதான் இவள் வரவேற்பறையை இறுதி செய்து முடித்திருந்தாள். தன் கைவேலையை ஆய்வு செய்வதற்காக இவள் சற்றுப் பின்சென்று வாசலில் நின்றாள். முந்தைய நாள் இரவு திரைச்சீலைகளைத் துவைத்து உலர்த்தி, காலையில் இஸ்திரி செய்திருந்தாள். கஞ்சி போட்டிருந்ததால் எல்லாம் பார்க்க அழகாக இருந்தன. அவை கிரீம் நிறத்தில், பச்சை நிறப் புள்ளிகளுடன், பிரிந்து, அடியில் அலைவுடன் இருந்தன. இரு புறமும் ஒரு பச்சை ரிப்பன் அவற்றைக் கூட்டிப் பிடித்திருந்தது.
ஜன்னல்களுக்குக் கீழே ஒரு திவானும் இரண்டு சாம்பல் நிற வெல்வெட் சாய்வு நாற்காலிகளும் இருந்தன. காபி மேஜையின் மீது ரோஜாப் பூக்களுடன் ஒரு நீல நிற மலர்க்குவளை. அந்தப் பெரிய பிரிட்டனி அலமாரி அப்போதுதான் மெருகேற்றப்பட்டிருந்தது; அதற்கு எதிரே, புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த இவளது மேசை, அதன் சுத்தமான மைக்கூடு, புதிய இளஞ்சிவப்பு மை உறிஞ்சி.
அனைத்தும் மிகுந்த சிரத்தையுடன் தேய்த்துக் கழுவப்பட்டு, தூசி தட்டப்பட்டு, புத்தம் புதியது போல ஆக்கப்பட்டிருந்தன.
கதவின் வலதுபுறத்தில் இருந்த பரிசுப் பெட்டியின் மீது, பிரெஞ்சு மது நிரம்பிய ஒரு படிகக் குடுவையும் இரண்டு கோப்பைகளும் பளபளத்தன. சிறிய, கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிற சமையலறையில், கேக்குகள் நிறைந்த ஒரு தட்டிலிருந்து நாவூறும் நறுமணம் எழுந்தது. குளிர்சாதனப் பெட்டியில் இன்னும் ஆறு கேக்குகள் இருந்தன: அவற்றில் மூன்று கஸ்டர்டும், மூன்று ஸ்ட்ராபெர்ரிகளும். எல்லாம் தயாராக இருந்தன.
ஒரு சிறிய குளியலறையுடன் சேர்ந்து அடுக்ககத்தை முழுமையாக்கும் படுக்கையறைக்குள் மார்டா நுழைந்தாள். இவள் என்ன ஆடை அணிவது? அல்லது ஒரு மேலங்கி அணிவது சிறந்ததா? விரிந்த பாவாடையும், மேலாடையிலும் பைகளிலும் வெள்ளைப் பூக்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட அந்த நீல நிற மேலங்கியா? அதை அணிந்திருந்தபோது இவள் மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் உணர்ந்ததால், “ஏதாவது நடந்தால், அது இந்த மேலங்கியின் தவறாகத்தான் இருக்கும்” என்று நினைத்தாள். இவள் இன்னும் அணியாத ஒரு லேஸ் வேலைப்பாடுள்ள டல்லே ரவிக்கை ஒன்றும் அங்கே இருந்தது… இறுதியாக, இவள் ஒரு பழுப்பு நிறச் சட்டையுடன் கூடிய உடையையும் தங்கக் குண்டுகள் பதித்த ஒரு தடிமனான ஸ்வேட் பெல்ட்டையும் அணிய முடிவு செய்தாள். இவள் தன் முகத்தையும் கைகளையும் கழுவி, கவனமாகத் தன் தலைமுடியைச் சீவினாள். ஆனால்… இவள் ஒப்பனை எதுவும் செய்துகொள்ளவில்லை. மிகவும் மெல்லிய காலுறைகளையும் சில மெல்லிய தோல் காலணிகளையும் தேர்ந்தெடுத்தாள்.
வாசனைத் திரவியம். தோளுக்கு மேல் திரும்பிக் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, இவள் வரவேற்பறைக்குத் திரும்பினாள். இவள் உட்கார்ந்து கொண்டாள்.
அது அதிகாலை நேரம். மணி மூன்றாகியிருந்தது. காலை முழுவதும் புழுதியுடன் போராடியதால் இவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள். ஆல்பர்ட் நான்கு மணிக்கு வருகிறான். அதுவரை ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தாள். ஆல்பர்ட் இவளை வீட்டில் வந்து சந்திப்பது இதுவே முதல் முறை… அதனால் இவள் பதற்றமாக உணர்ந்தாள். இவள் எழுந்து, மேசைக்கு நடந்து சென்று, காபி மேசையில் வைப்பதற்காக ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க முயன்றாள். எந்தப் புத்தகம்? ஒருவேளை ஷேக்ஸ்பியரா? “ஓ, என் அழகிய வீராங்கனையே!” என்று சைப்ரஸில் டெஸ்டிமோனாவை வரவேற்கும்போது ஒத்தெல்லோ இவளிடம் கூறுவான்.
ஒரு சிப்பாய் தன் காதலிக்கு வழங்கும் பாராட்டில் இதைவிடப் பரிதாபகரமானதும் தூய்மையானதும் வேறு என்ன இருக்க முடியும்? ஆன்டனி தன் மரணத்திற்கு முன், கிளியோபாட்ராவை ‘எகிப்து’ என்று அழைத்தான், அந்த ஒற்றை வார்த்தையில் இவளுடைய ராணிக்குரிய கம்பீரத்தையெல்லாம் ஊட்டியிருந்தான். ஒருவேளை, இவ்வளவு தீவிரமான ஒரு புத்தகத்தைப் பார்த்தால், ஆல்பர்ட், “இவள் ஒரு அகம்பாவம் பிடித்தவள்” என்று நினைக்கலாம். அடிப்படையில் இவள் அதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு, மேலும் யோசிக்காமல், ‘அன்னப் பறவையின் வழி’ (Du côté de chez Swann) புத்தகத்தை எடுத்து ரோஜாக்களுக்கு அருகில் வைத்தாள்.
இவள் மீண்டும் உட்கார்ந்துகொண்டாள். அந்தச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, தனிமையை உணர்ந்தாள். தனிமையும் வெறுமையும். ஆல்பர்ட்டின் வரப்போவது குறித்த இவளது உற்சாகம் கரைந்துவிட்டதைப் போலவும், அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்பது போலவும் இருந்தது.
இவளுக்கு நிதிப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இவளது அம்மா வழி வந்த ஒரு சிறிய பரம்பரைச் சொத்திலிருந்து வரும் வருமானம், இவள் வாழ்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் செயலாளராக இவள் செய்த வேலை இவளுக்குச் சில வசதிகளையும் சில ஆடம்பரங்களையும் கூட அளித்தது. அங்கிருந்த அனைவரும் இவளைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருந்தனர்; இவளை நேசித்த, இவளது நம்பிக்கைக்குரிய இரண்டு மூன்று தோழிகள் இவளுக்கு இருந்தனர்: நல்ல, சுயநலமற்ற தோழிகள். இவளது இதயம் ஏன் இதைவிட மேலான ஒன்றை இவ்வளவு தீவிரமாக விரும்புகிறது?
இதற்கு முன்பு ஒருமுறை, இளமையின் அத்தனை பெரு விருப்பத்துடனும், இவள் காதலில் விழுந்திருந்தாள். இப்போது இவள் அதை ஒரு தவறு என்று நினைத்தாள், தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்: “ஒவ்வொரு காதல் விவகாரத்திலும், கசப்பு குவிந்துவிடுகிறது, அதுபோக, கர்ப்பமாகிவிடவும் கூடும்.” இவளுக்கு இருபது வயதாக இருந்தபோது, சரியான நேரத்தில் செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை இவளது உயிரைக் காப்பாற்றியது, ஆனால் இவளை மரண பயத்துடன் விட்டிருந்தது.
இவள் எழுந்துகொண்டாள். சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. இவள் ரோஜாக்களை மறுசீரமைத்து, அவற்றுள் மிக அழகானவற்றை ஜன்னலைப் பார்த்து இருக்கும்படி வைத்தாள்.
வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. நாள் முழுவதும் மேக மூட்டமாக இருந்தது. ஒரு விடாப்பிடியான தூறல், சும்மா எல்லாவற்றையும் சேறாக ஆக்கும் மழை.
“நான் காதலிக்கிறேனா?” சமையலறையில் நடக்கையில் ஆச்சரியம் அடைந்தாள். பேஸ்ட்ரிகளில் ஒன்றைச் சாப்பிடும் ஆசையை இவளால் அடக்க முடியவில்லை. அடுப்பில் இருந்த காஃபி இன்னும் சூடாக இருந்தது. தனக்கு ஒரு கோப்பையில் ஊற்றிக்கொண்டு, அதில் ஒரு ஆஸ்பிரின் மாத்திரையைப் போட்டாள். அதைக் குடிப்பதற்காக மேஜையின் மீது உட்கார்ந்தாள்.
நிச்சயமாக, இவளுக்கு ஆல்பர்ட்டைப் பிடித்திருந்தது. இளமையான, ஒரே நேரத்தில் துடிப்பான, கலகலப்பான, எளிமையான ஆள்; ஒரு அற்புதமான தோழன். அவர்கள் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிந்திருக்கவில்லை, ஆனாலும் அவன் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று இவள் அடிக்கடி உணர்ந்தாள்… ஆனால் காதல், மிகவும் சிக்கலானதும் பரந்ததுமான ஒன்று: அவனைப் போன்ற ஒரு நல்ல இளைஞனிடம் அது உண்மையிலேயே உருவெடுக்க முடியுமா? உண்மையான காதல் இவளுக்குப் பின்னால் இருந்தது: “அன்பே, என் ஒரே ஒருத்தி நீ, என் ராஜ்யம்…” சொற்களின், உணர்வுகளின் எரிமலை. அதன்பிறகு, சாம்பலின் சுவை. அவன் வெகு தொலைவில் இறந்துவிட்டான், அவனது கடைசிக் கடிதம் இவளுக்குக் கிடைத்தது, ஒருவேளை அவனது சடலம் கிடைக்காமல்கூட இருக்கலாம். அந்தக் கடிதம் விஷம் போல இருந்தது. ஒரு ஏக்கத்தின் ஓலம் இவளை ஊடுருவிப் பிளந்தது. ஒரே ஒரு ஆசை: திரும்பிச் செல்ல வேண்டும். அது ஒரு சபிக்கப்பட்ட காலம். இப்போது ஆல்பர்ட். மிகுந்த ஓய்வில் இருக்கிறான், நிச்சயமாக… பக்கத்தில் வேறு யாரும் இல்லை, ஆனாலும் அது எவ்வளவு ஆழமாகச் சென்றது? ஒரு நாள் இவளை அவன் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்பான், அவர்கள் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு எடுப்பார்கள். அவன் உண்மையுள்ளவனாக இருந்தால், அவன் கண்டிப்பானவனாகவும், கடுமையாகவும், சோகமாகவும் இருந்திருப்பான். அவன் மெதுவாக மூப்படைவான். அப்படி இல்லையென்றால், அவன் கனிவானவனாகவும், பரந்த மனப்பான்மை கொண்டவனாகவும் இருந்திருப்பான்; அவனுக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டு, இவள் விலக்கப்பட்டிருந்த ஒரு உலகத்திற்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டுவிட்டிருப்பான். இவள் மேசையிலிருந்து இறங்கி முன்னும் பின்னும் நடந்தாள், ஒரு கையில் காஃபிக் கோப்பை, மறு கையில் இரண்டாவது பேஸ்ட்ரி.
“அவன் எனக்கு ஒரு பூங்கொத்தும் ஒரு பெட்டி சாக்லெட்டுகளும் கொண்டு வருவான். நாங்கள் வானிலை குறித்தும் அரசியலும் பேசுவோம். அவன் தனது வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்வான், ஆனால் நாங்கள் இருவரும் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருப்போம். புறப்படுவதற்கு முன், உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா என்று சொல்லி ஒரு முத்தம் கேட்டிருப்பான், அதை நான் மகிழ்ச்சியுடன் தந்திருப்பேன்.”
“அல்லது ஒருவேளை அவன் உறுதியுடன் புயலாக உள்ளே நுழைந்து சற்றே நாடகத்தனமாக, ‘நீயில்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று சொல்லியிருப்பான். அவன் என் கைகளை இறுக்குவான். ‘நான் சொல்வது புரிகிறதா? அது சாத்தியமற்றது; நீயில்லாமல் என்னால் வாழ முடியாது! நீ எனக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், இரவு முழுவதும் என் அருகில் வேண்டும்.’ அவனது கண்கள் பிரகாசிக்கும், அவன் பேராசையுடன் என்னை முத்தமிடுவான்: என் கன்னங்களில், கழுத்தில், உதடுகளில். என்னையும் கிளர்ச்சியூட்ட அவன் என் ஆடையின் பொத்தான்களைக் கழற்ற முயற்சிப்பான். ஆம், என் மார்பகங்கள் அழகாக இருக்கின்றன, அவற்றை அவன் கொஞ்சம் பார்ப்பதில் பாதகமில்லை… ஒருவேளை நான் அதை மிகவும் விரும்பியிருக்கலாம். ஆனால் எனக்கு விருப்பமில்லை. இல்லை, நான் மிகக் கண்டிப்பானவள் என்பதல்ல. பல விஷயங்களைப் பற்றி எனக்கு என் சொந்தக் கருத்துக்களும், எப்படி வாழ வேண்டும் என்பது பற்றிய ஒரு குறிப்பிட்ட எண்ணமும் உண்டு, ஆனால். . .” இவள் படுக்கையறைக்குத் திரும்பினாள். பிறகு குளியலறைக்கு. இவள் கழுவுதொட்டியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கினாள். யூ-டி-கோலன் பாட்டிலை நிமிர்த்தி வைத்தாள். கண்ணாடியில் பனி படிந்திருந்ததால், அதைத் துடைத்துவிட்டுத் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
“உன் வாழ்க்கையை ஏன் சிக்கலாக்கிக் கொள்கிறாய்? நீ தனியாக உணர்கிறாயா? அவன் உன்னை விட்டுப் போய்விட்டால் நீ இன்னும் மோசமாக உணர்வாய். எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஆடையை அவர்கள் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் அம்மாவுக்குச் சொந்தமானதாக இருந்த ஒரு பழங்கால மோதிரத்தை அவர்கள் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள், அது மிகவும் ஆடம்பரமாக இருக்கும், ஒருவேளை என்னைப் போன்ற ஒரு இளம் பெண்ணுக்கு அது மிக அதிகமாக இருக்கலாம். என்னிடம் பத்து ஜோடி கையுறைகளும், ஒரு நேர்த்தியான உள்ளாடைத் தொகுப்பும் உள்ளன. இந்த ஆண்டு என் வங்கிக் கணக்கு கணிசமாக வளர்ந்துள்ளது. யாரும் என்னை முத்தமிடுவதில்லை. ஆனால் முத்தங்கள் பெரும்பாலும் விலை உயர்ந்தவையாக அமைந்துவிடுகின்றன…”
தேவாலய மணி ஒலித்தது. மணி மூன்றரை. இவளால் அடையாளம் காண முடியாத ஒரு ஆபத்திலிருந்து தப்பித்து, ஓடிவிட வேண்டும் என்று தோன்றியது. அவனை அழைத்தது இவளுடைய முட்டாள்தனம். இவள் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, ஆனால் அவனிடம் நிறைய நம்பிக்கைகள் இருந்தன, இவளால் பகிர்ந்துகொள்ளவே முடியவில்லை.
இவள், உறுதியுடன் கம்பளித் தொப்பியையும் மழை அங்கியையும் அணிந்துகொண்டு தனக்குப் பின்னால் கதவை மூடினாள். படிக்கட்டை அடைந்ததும், மழையின் வாசனையை உணர்ந்தாள். சட்டென்று படிகளில் இறங்கினாள்.
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. ஒருபுறம் ஒற்றை மாடி வீடுகளின் அடுக்கு, மறுபுறம், ஒரு தோட்டம். சுவரோரமாக இருந்த மரங்களில் இலைகளே இல்லை. இவள் தனது ஜன்னலிலிருந்து ஒரு டென்னிஸ் மைதானத்தையும் நீச்சல் குளத்தையும் பார்க்க முடிந்தது. வசந்த காலத்தில், கருவேலம் மற்றும் ஹனிசக்கிள் மரங்களின் நறுமணம் இவளைத் தலைசுற்ற வைத்தது. மாலையில் வேலையை விட்டு கிளம்பி, மெள்ள தெருவை நோக்கிச் சென்றாள்; இரவில் தன் பால்கனி வழியாக ஊடுருவிய அந்த மயக்கும் நறுமணத்தை நுகர்ந்து ரசித்தாள்.
தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஓரத்து நடைபாதை, கூழாங்கற்கள், அவற்றின் இடுக்குகளுக்கு இடையில் முளைத்திருந்த புற்கள் என அனைத்தும் பளபளத்தன. சுவர்களுக்குக் கீழே நீர் வழிந்தோடியது, ஓடு வேய்ந்த கூரைகளிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. வானம் ஈயம் போலக் காணப்பட்டது. மரங்களும் வீடுகளும் தங்களுக்கான ஒளியை ஒரு காற்றோட்டக் குழாயிலிருந்து பெறுவது போல, அனைத்தும் பால் போன்ற பிரகாசத்தில் மூழ்கியிருந்தன.
இவள் நடக்கத் தொடங்கியபோது, தான் எங்கே போகலாம் என்று யோசித்தாள். தெருக்களில் தன்னைத் தள்ளிக்கொண்டு செல்லும் இந்தத் தப்பி ஓடும் உந்துதல் எங்கிருந்து வந்தது? ஒரு ஜன்னல் ஓரத்தில் கழுத்தில் கயிறு கட்டிய பூனைக்குட்டி நின்றிருந்தது. அதன் மூக்கின் மீது ஒவ்வொரு துளி நீர் விழும்போதும், அது நிமிர்ந்து பார்த்தது. உள்ளே குழந்தைகள் அலறும் சத்தம் இவளுக்குக் கேட்டது.
இவள் தன் கைகளை பாக்கெட்டுகளில் வைத்தபடி, தொப்பியைத் தாழ்த்தியபடி நடந்தாள். தெருக்கள் வெறிச்சோடி இருந்தன. காற்று அசைவற்று இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் புட்டிகளைச் சுமந்து சென்ற ஒரு பெண் இவளுடைய பாதையைக் கடந்தாள்; புட்டிகள் ஒன்றோடொன்று மோதிச் சத்தம் எழுப்பின. இவள் ஒரு மழலையர் பள்ளியைக் கடந்தாள், சிறு குழந்தைகள் பாடுவதை இவளால் கேட்க முடிந்தது. இவள் நகரத்தின் மையத்தை நெருங்கியபோது, தெருவில் அதிகமான மக்கள் இருந்தனர். வழிப்போக்கர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் கவலைகளையும் சுமந்துகொண்டு, குடைகளின் கீழ் அவசரமாகச் சென்றுகொண்டிருந்தனர். கடைகளின் ஜன்னல்கள் நிறைந்திருந்தன, சிலர் விளக்குகளை எரியவிட்டிருந்தனர். ஒரு மளிகைக் கடைக்காரர் தனது வெளிப்புறப் பழக்கடையை ஒரு பெரிய தார்ப்பாயால் மூடியிருந்தார்.
இவள் ஒரு காஃபிக் கடைக்குள் நுழைந்தாள். ஆண்கள் பில்லியர்ட்ஸும் சீட்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். சிலர் வியாபாரம் பேசுவது போல கிசுகிசுத்து விவாதித்துக்கொண்டிருந்தனர். “ஒரு காஃபி.”
“எங்கள் இயந்திரம் இப்போதுதான் பழுதானது.”
“அப்படியானால், கொஞ்சம் மூலிகைத் தேநீர்.”
தூறல் விழுந்துகொண்டே இருந்தது. கார்கள் கடந்து சென்றன, மழையில் ஒளிர்ந்தன, ஒரு சலசலக்கும் டிராம் வண்டி, ஒரு வேகன், அதன் தூக்கக் கலக்கமுள்ள ஓட்டுநர் தலையில் ஒரு ஈரமான சாக்கால் மூடியிருந்தார். தெருவின் மறுபுறம் இருந்த திரையரங்கிற்குள் மக்கள் நுழைந்தனர். மதுக்கூடத்திற்குள், கனவு காணும் ஒரு சிறுவன் மெதுவாகத் துண்டு சிகரெட்களைச் சேகரித்துக் கொண்டிருந்தான். ஒரு லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் இவளிடம் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறாயா என்று கேட்டார், இவள் சோர்வான சைகையுடன் மறுத்தாள்.
சினிமாவுக்குப் போவது பற்றி என்ன? ஆனால் இவள் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துவிட்டாள். எலிசபெத் மகாராணியின் பச்சை இறகு விசிறி. ஒரு சமயம் படிக்கட்டிலிருந்து இறங்குகையில் ஏற்பட்ட மகாராணியின் நிழல் இவளுக்கு நினைவிருந்தது. அந்தக் கண்ணாடி, உள்ளே ஒரு ராணி… இவள் அந்தத் திரைப்படத்தை மறந்துவிட்டாள். அந்த மழை வலேரியின் அந்த வரிகளை இவளுக்கு நினைவூட்டியது. அவை ஏன் பிரபலமாயின – வலேரி அவற்றை பிரபலப்படுத்தினாரா அல்லது அதற்கு நேர்மாறாக நடந்ததா – இவள் ஆச்சரியம் அடைந்தாள்.
களைப்படைந்தது போல இவள் உணரத் தொடங்கினாள். பணம் செலுத்திவிட்டு வெளியேறினாள்.
மழை இன்னும் பெய்துகொண்டிருந்தது. காலையிலிருந்து மழை பெய்து கொண்டிருந்தது. பெருமழை இல்லை, வெறும் அமைதியான, சீரான தூறல் மட்டுமே. இவள் சில மரங்களின் அடியில் நடந்தாள். அவற்றின் இலைகள் நிறைந்த கிளைகள் இணைந்து, ஒரு பசுமையான, ஈரமான சுரங்கப்பாதையை உருவாக்கின. இவள் ஒரு தேவாலயத்தைக் கடந்தாள். மணிகள் நான்கு அடித்தன. நான்கு மணிதானா? ஒவ்வொரு மணியோசையும் இவளது இதயத்தைக் குத்தியது… இவள் செய்துகொண்டிருந்தது அபத்தமாக இருந்தது. இவளது இயல்புக்கு மாறானது. ஒரு டாக்சியை அழைத்து, ஓட்டுநரிடம் தன் முகவரியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இவள் எதுவும் செய்யவில்லை. இவளை விடவும் வலிமையான ஏதோ ஒன்று இவளைத் தடுத்து நிறுத்தியது.
அந்த மனிதன் தன்னை நேசித்தான் என்பதை இவளால் உணராமல் இருக்க முடியவில்லை. கண்கள் பொய் சொல்வதில்லை, குரலின் தொனியும் பொய் சொல்லாது. ஆனால் இவளுக்கு ஒரு கடந்த காலம் இருந்தது. சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ, இவள் ஒரு பைத்தியக்காரத்தனமான காரியத்தைச் செய்துவிட்டாள் என்பதை அவனிடம் சொல்ல வேண்டியிருக்கும். இரண்டு விஷயங்கள்: நேசிப்பதும் தன் குழந்தையின் பிறப்பைத் தடுப்பதும். அவனுக்கு இப்போது நான்கு வயதாகியிருக்கும், இவள் தனியானவள் இல்லை.
ஆனால் இல்லை, அதற்காக இவள் அவனை விட்டுப் பிரியவில்லை. “அப்படியானால் அது என்ன?” என்று இவள் பொறுமையின்றித் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். “ஒரு புதிய காதலுக்கு ஏன் இந்தப் பயம்? ஒரு முரட்டுக் கிழவியைப் போல, ஏன் இந்த ஆழ்ந்த சிந்தனை?
“இவள் அடர்ந்த இலைகளுக்கு அடியில் விரைந்தாள். இவளால் தனது காலடி ஓசையையும், மூச்சுவிடும் சத்தத்தையும், நெற்றியில் துடிக்கும் இரத்த ஓட்டத்தையும் கேட்க முடிந்தது. இவள் தாள லயத்துடன் நடந்தாள். ஓ என் அழகிய வீராங்கனையே! அந்த நடைபாதையில் ஒவ்வொரு நூறு கெஜத்திற்கும் ஒரு இருக்கை இருந்தது. கடலுக்கு அடியிலான ஒளியையும், இலைகளின் மீது விழும் மழையின் ஓசையையும் அமைதியாக ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று இவளுக்குத் தோன்றியது. ஒருவித அடக்கம் இவளைத் தடுத்தது. எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒரு சொற்றொடர் இவள் மனதில் மிதந்து கொண்டிருந்தது: இப்படிப்பட்ட ஒரு இரவில், கார்தேஜிலிருந்து (Carthage) தப்பி ஓடும் ஏனியாஸை (Aeneas) ராணி டிடோ (Queen Dido) கூப்பிட்டாள்; சிங்கத்தின் நிழல் அவனைப் பயமுறுத்தியது. இல்லை, அது சரியல்ல: இப்படிப்பட்ட ஒரு இரவில், ராணி டிடோ ஒரு வில்லோ கிளையுடன்… இப்போது தப்பி ஓடியது டிடோதான். இவள் சிரித்துக்கொண்டே முணுமுணுத்தாள்: “முட்டாள்!” நாளை, தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்து: “அன்புள்ள ஐயா. செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அனுப்பப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட மத்தி மீன்களின் ஏற்றுமதி, எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாகத் தாமதமாகியுள்ளது…”
அவன் படிக்கட்டுகளில் ஏறியிருக்க வேண்டும். இப்போது அவன் கையில் ஒரு பூங்கொத்துடன் மணியை அடித்துக்கொண்டிருந்தான்; தன் மேற்சட்டையை ஒரு விரைவான, சுயநினைவற்ற அசைவால் சரிசெய்துகொண்டு, படிகளில் வேகமாக ஏறியதால் மூச்சுத்திணறினான். ஒன்றுமில்லை. வெறுமையும் அமைதியும். அவன் மீண்டும் மணியை அடித்தான். அவன் பொறுமையிழந்தான். அவன் மீண்டும் மணியை அடித்தான். பதற்றத்துடன். மேலும் அமைதி. இறுதியாக, நம்பிக்கையின் கடைசி ஒளிக்கீற்றுடன், அவன் மீண்டும் மணியை அடித்தான். இன்னும், ஏமாற்றத்துடன், அவன் தன் தொப்பியை அணிந்துகொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.
இவள் தொடர்ந்து நடந்தாள். ஒரே பிற்பகலில் இத்தனை தெருக்களில் இவள் நடந்ததே இல்லை. இவளது பாதங்கள் உறைந்து போயின. ஆனால் இவள் முகம் வியர்த்திருந்தது. இவள் மணிக்கணக்கில் நடந்தாள். மணி ஏழு அடித்தபோது, களைப்புடன், இவள் தன் தெருவுக்குள் நுழைந்தாள். அந்தத் தெரு எதுவும் சொல்லவில்லை: அவன் மகிழ்ச்சியாக வந்தான் என்றோ, சோகமாகச் சென்றான் என்றோ சொல்லவில்லை.
ஒரு தெருவிளக்கின் நிழல் சுவர் மேல் துண்டு துண்டாக உடைந்து விழுந்திருந்தது. ஒரு வானொலி வால்ட்ஸ் இசை அலைகளை ஒலிபரப்பியது. அந்த வெளிச்சத்திற்கு எதிராக, இவள் மழையின் மெல்லிய ஊசிகளைப் பார்த்தாள். ஒளிபுக முடியாததாக இருந்தது வானம். மழை இரவு முழுவதும் பெய்யும், அதற்கு மேலும் கொஞ்சம் பெய்யும்.
ஒரு களியாட்டத்திலிருந்து திரும்பும் களியாட்டக்காரனைப் போல, இவள் படிகளில் தள்ளாடியபடி ஏறினாள். அந்தப் படிக்கட்டுகள் தெருவைவிடக் கூடுதலாக எதையும் சொல்லவில்லை.
இவள் தன் அடுக்ககத்துக்குள் நுழைந்தாள். வாசனைத் திரவியத்தின் அலை இவளைத் தாக்கியது. சுத்தம் செய்து முடித்ததும், சாய்வு நாற்காலிகளிலும், திரைச்சீலைகளின் நாடாக்களிலும் இவள் கொஞ்சம் தடவியிருந்தாள். அது அவனுக்குப் பிடித்த வாசனைத் திரவியம், அவனை மகிழ்விப்பதற்காக இவள் அதைச் செய்திருந்தாள்.
இவள் கதவை மூடி, சோர்வுடன் தன் தொப்பியைக் கீழே எறிந்தாள். மழை அங்கியைச் சமையலறையில் விட்டுவிட்டாள். இவளுக்குத் தலை வலித்தது, நாக்கு சுண்ணாம்பு போல வெளுத்திருந்தது, கால்கள் வலித்தன.
எல்லாம் அப்படி அப்படியே இருந்தன; ப்ரூஸ்டின் புத்தகத்தில் இருந்த ஆபெபைன் மலர்கள் முன்னெப்போதையும் விட நிச்சயமாக அழகாக இருந்தன. அந்த மதியம் நடந்த அனைத்தையும் யாரால் கற்பனை செய்து பார்க்க முடியும்? அதாவது, நடக்காத எல்லாமும், நிஜமாக மாறவிருந்த தருணத்தில் மீளமுடியாதபடி அமிழ்ந்து போன எல்லாமும்? அவளாலேயே அதை நம்ப முடியவில்லை. தன்னைக்கூட. அவளுக்கு எதுவும் தெரியவில்லை. தான் ஏன் கிளம்பினாள் என்பதும், அவன் ஏன் வந்தான் என்பதுவும் தெரியவில்லை. “எனக்குத் தெரியாததைப் பற்றி என்னால் சிந்திக்க முடியாது, என்னைப் பொறுத்த அளவில் அது இல்லை. சீனா திடீரென்று தோன்றுகிறது, நான் அதைப் பற்றி சிந்திக்கும்போது; ’பூக்கும் செர்ரி மரம்’, ‘நெருப்பு டிராகன்’, ‘சீனா’ அல்லது ‘ஜப்பான்’ என்று சொல்லும்போது. நான் தலாய் லாமா இறந்துவிட்டார் என்று நினைத்தால், அவர் இறந்துவிட்டார். இன்று மதியம் நான் எதிர்பார்த்த அந்த மனிதர், நான் அவரைச் சந்தித்ததால் இருந்தார்; அவர் என்னை விரும்பியதால் நான் அவருக்காக இருந்தேன். கடவுளே, என்ன ஒரு தலைவலி!
இவள் படுக்கையறைக்குள் நுழைந்தாள். இரவு உணவைத் தவிர்த்திருந்தாள். இவளுக்குத் தேவையெல்லாம் தூங்குவது மட்டுமே. உடைகளைக் களையத் தொடங்கினாள்… ஆம், இது எனக்காக, எனக்காகவே நான் மலர்கிறேன், தனித்து விடப்படுகிறேன். இப்போது இவளுடைய தோள்களிலும், கைகளிலும், உதடுகளிலும் முத்தங்களின் தழும்புகள் இருக்கும்; அவற்றை இவள் பற்றிக்கொள்ளலாம், அவை இரவில் இவளுக்குத் துணையாக இருக்கும். அவற்றை இவள் தலையணைக்கு அடியில் மறைத்து வைக்கலாம். ஒருவேளை இவள் தூங்கும்போது அவை வெளியே வந்து, மீண்டும் இவளுடைய கைகளிலும் தோள்களிலும் உள்ள அதே இடங்களுக்குத் திரும்பக்கூடும்.
இவள் தனது மிக அழகான, மிகவும் மெல்லிய, மணப்பெண்ணுக்குரிய இரவு ஆடையை அணிந்துகொண்டாள். அந்த வாசனைத் திரவியம் இவளுக்குத் தலை சுற்றியது. இவள் விளக்கை அணைத்துவிட்டு பால்கனி கதவுகளைத் திறந்தாள். தெருவிளக்கின் ஒளி இவள் அறைக்குள் நுழைந்தது. ஒரே சீரான மழை இடைவிடாமல் பெய்கிறது. இரவு ஈர வாசனையுடன் இருந்தது. குளிராகத்தான் இருக்க வேண்டும்.
வெறுங்காலுடன், இவள் மதுக்குடுவையை எடுக்கச் சென்றாள். இவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். விரல்களில் அந்தக் குடுவை குளிர்ச்சியாக இருந்தது. “நான் குடித்துத் தள்ளாடுவேன்,” என்று இவள் நினைத்தாள். “ஓ என் அழகிய வீராங்கனையே!?…” இவள் அடுத்தடுத்து மூன்று குடுவைகள் குடித்தாள், அனைத்தும் விளிம்பு வரை நிரம்பியவை.
■
மெர்சே ரோடோரெடா (1908-1983), போருக்குப் பிந்தைய மிக முக்கியமான கட்டலான் நாவலாசிரியர். கட்டலான் வாழ்க்கை, போர், மன அதிர்ச்சி பற்றிய நெருக்கமான, குறியீடுகள் நிரம்பிய கவித்துவமான புனைவுகளுக்காக புகழ்பெற்றவர். அவரது மிகவும் பிரபலமான படைப்பு புறாக்களின் காலம் (The Time of the Doves ). இதர குறிப்பிடத்தக்க நாவல்கள்: ஒரு உடைந்த கண்ணாடி (A Broken Mirror), கேமெலியா தெரு (Camellia Street), வசந்தத்தில் மரணம் (Death in Spring).
Image : gettyimages
1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.







Leave a Reply