தன்னைத்தானே
தோலுரிக்கும் அரவமே
சுயத்தின் பரிசுத்தம்.
நிழலுக்குப் பின்னே
ஓடித்திரியும்
நிஜத்தின் மீது
அடிமையின் வீச்சம்.
முலை அறுத்தவளின்
கதையோ
மாட்டைப் போல்
தோலுரித்த
முப்பாட்டனின்
உழைப்புச் சுரண்டல் கதையோ
அறிந்திடாது
அதிகாரத்தின் மகுடிக்கெல்லாம்
நெளிகின்றான்
தன் மாயத் தோலுரிக்கத் தெரியா அறிவிலி.
இன்னும் இன்னும் வீசுகிறது
அவன்மீது
அடிமையின் வீச்சம்
பிணத்திற்கு மேல்
பிணம் ஏற்க
கனன்ற வயிற்றோடு
வாய் பிளந்து நிற்கிறாள்
பாதாளப் பைரவி.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் செ.புனிதஜோதி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சுப்புவின் கனாமகள், நிழல்களின் இதயம், மௌனக்கூத்து ஆகிய கவிதை நூல்களும் வைகை கண்ட நயாகரா என்கிற பயணக் கட்டுரையும் எழுதியுள்ளார்.
கணையாழி, தாமரை, காலச்சுவடு, ஆனந்தவிகடன், இனிய உதயம், தமிழ்வெளி, கொக்கரக்கோ ஆகிய இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அசோகமித்திரன் நினைவு படைப்பூக்கம், சௌமா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பொதிகை, மக்கள், வேந்தர், தமிழன் ஆகிய தொலைக்காட்சிகளில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றங்களில் பங்குகொண்டுள்ளார்.








Leave a Reply