‘தீ’ என்பது ஒரு உற்றகாலத்துதவுதல். அதனுள், பல தரப்பட்ட கருத்துகள், முடிவுகள், தரவுகள் பரிசோதனைக்குட்படுத்தப்படும்.
(அ)
ஒரு சதையைத்
தழுவுதலென்பது
ஒரு எலும்புக் கூட்டோடு உறவாடுதல்.
தனிமை, பரிசுத்தம் மற்றும்
இன்ன பிற கரிசனங்களெல்லாம்
நுழைந்து நுழைந்து
வெளியேறும் காற்றைப் போல இயல்பானது.
ஆனால், எப்போதாவது உணரலாம்….
மிக மிக அபூர்வமாய்….
என்ற ‘தீ’ யின் கண்களில் பெரும் எகத்தாளம்.
(ஆ)
வெறுமையென எதுவுமேயில்லை
இவ்வளவு வெப்பம்..
இவ்வளவு குளிர்..
எல்லாமே எனக்கானது
தலை தாழ்த்த விஷயமேயில்லை
அண்ணாந்து அண்ணாந்து….
பார்வைதான் முக்கியம்
மற்றபடி
ப்பூ…. வென உதறித் தள்ளுமளவு
இங்கு சல்லிக்காசு தானெனத்
‘தீ’ உறுதியாய்ச் சொல்லியது.
இ)
என் உடை எனக்கானது
என் நிறமும் எனக்கானது
எதற்கும் பயந்து
முற்றிருள் கண்டு
நான் வீறிடவில்லை…
படுக்கை எவ்வளவு பெரிது என்பதல்ல…
என் படுக்கையினடியில்
எப்போதும்
விழித்துக் கொண்டிருக்கும் உறக்கம் ஒன்றுண்டு
என்றவுடன்
‘தீ’ ஒரக்கண்ணால் பார்த்துக் கொண்டே
கை குலுக்கியது.
(ஈ)
தினமும் கண்ணாடி பார்க்க
அலுப்பாகவுள்ளது.
என்னை எனக்குத் தெரியும்
அவ்வளவுதான்..
கண்ணாடியினால் சிறிது சிறிதாக
காணாமல் போகிறேன்…
பின் பார்த்தால்,
நடுக்கூடத்திலிருக்கிறேன்.
அது ஒரு போதும்
என்னை எதும் சொல்வதில்லை.
வேறொரு பிரதியைக் காட்டவில்லை
மாறாக,
நிறைய பளீரென வெள்ளைத் தாள்களைக்
கலைத்துக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக அடுக்கியபோது,
ஒவ்வொரு தாளிலும்
ஒரு அதிசயமாக
‘தீ’ப்பற்றுகின்றது.
(உ)
வெப்பம் வெப்பம்
எனச் சத்தம்
கொஞ்சம் பொறுங்கள்…
இதே வெப்பம்தான்
அநேகமான செய்திகளைக்
காது குளிரச் சொல்கிறதெனத்
‘தீ’ கிசு கிசுப்பாகக் கூறியது.
(ஊ)
விலக்கு அளிக்க வேண்டுமென
ஒரே கூக்குரல்
எதிலிருந்து எதை நீக்குவது?
அமைதியாக இறத்தல்
சுலபமானதா என்ன?
முதலில் பேசுங்கள்….
பேசுவதில்
பல நல்ல விலக்குகள் அமல்படுத்தப்படுமெனச் சொல்லி
‘தீ’ அறிக்கைகளை
வாசிக்கத் தொடங்கியது.
(எ)
விலை உயர்வைத்
திரும்பப் பெறுங்கள் என்கிறார்கள்
சந்தைப் பதற்றங்களுக்கிடையில்
விலை உயர்த்தப்பட்டதென்கிறார்கள்
இதற்கு நடுவில்
நின்றெரியும் ‘தீ’
வயிறுகளைக் குளிர வைக்கிறது.
Art : kim







Leave a Reply