கண் உறங்கு
மஞ்சள் நிறத்தில் வியாபித்திருக்கும்
வனாந்தரத்தைப் பிரிந்து வந்ததிலிருந்து
நான்கு திங்களுக்கு ஒருமுறை மட்டுமே
உறங்கியெழுகிறேன்
நான் உறங்காத இருபதாவது இரவிது
நெறிகட்டிய மரங்களைத் தொட்டுப் பார்த்து
நலம் விசாரித்துவிட்டு
வந்த திசையில் மூடப்படாமல் இருந்த
வானத்திலிருந்து பறந்துவந்து
என் மடியில் விழுந்தன மீன் குஞ்சுகள்
அவற்றை ஏந்திக்கொண்டு
தட்டான் முட்டைகளைச் சுமக்கும்
நாணல் புற்கள் சுற்றியுள்ள குளத்திடம் ஓடினேன்
நான் சூலுற்ற அதே காலத்தில்
புதிதாகப் பிறந்த மீன்களின் வீடாய் மாறியிருந்தேன்
வீடாக மாறியதிலிருந்து
டப் டப் ஒரு முத்தச் சத்தம் முடியும் முன்பே
அடுத்த முத்தத்தின் சத்தம் கேட்கத் தொடங்குகிறது
இதென்ன ரோதனை
உறக்கத்தில் விடும் என் மூச்சுக்கற்றை
அடிக்கடி கேட்கவேண்டுமென்று அழுது அடம்கொள்ளும்
அவற்றைச் சமாதானம் செய்ய
இப்போதெல்லாம் உறங்கவேண்டியது உள்ளது
முத்தமிடுவதைத் தவிர
இவைகளுக்குப் பேசத் தெரிந்தவையெல்லாம்
கண் உறங்கு மூச்சுக்காற்று கேட்கணும்
கண்ணு உறங்கு, டப்டப் என்பது மட்டுமே.
கவலைப்படாதே
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
நின்றால் எப்படி? வயிறு பசிக்கிறது
கைநிறைய கற்களை எடுத்துக்கொள்
வாயைத் திறந்ததும் உடனே விழுங்கிவிடு
நீ கவலைப்படாதே
கூழாங்கற்கள் பரப்பிய திறந்தவெளிக் கிணற்றின்
நீரை எல்லாம் நெஞ்சுக்கூட்டுக்குள்
பாய்ச்சிவது வயிற்றின் ஆற்றல்
நீ உன்னுடைய பாடலைப் பாடு!
நான் காதுகளை நீட்டிக் கொள்கிறேன்
இரவு வந்தால் மலை உச்சியில்தான்
மலர்வேன் என்று இந்தப் பித்துநிலவு போல
நீயும் ஏன் இப்படிச் செய்கிறாய்?!
இப்போது பார் மலைகளைக் கண்டுபிடிக்க
தினமும் தண்டவாளங்களுக்குச் செல்ல
வேண்டியது உள்ளது
நீ எங்கேயும் போகத் தேவையில்லை
வட்டமிடும் நீலவானத்தில் பாதியென
உனக்குள்தான் நானும் இருக்கிறேன்
நீ எங்கேயும் போகத் தேவையில்லை
வந்துவிடு என் முதுகில் ஏறிக்கொள்.
Art : Tra terra e mare








Leave a Reply