இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
1.
இவ்விளவேனில் காலம்முழுவதும்
கோதுமையைப் போல விளைகிறது வெயில்
பனையிலிருந்து இறக்கிய கல்லின் நொதிப்பு
மூக்கைத் துளைத்துப் போதை தருகிறது.
நிழலுக்கு வேம்பின் மடி
கதையாடலுக்குப் பல்லாங்குழியின் முத்துக்கள்
கூட்டாஞ் சோறு விளையாட்டில்
பங்கீடுக் கணக்குகள்
அரிசியும் பருப்பும் கொண்டாரேன்
உப்பும் எண்ணெய்யும் அவளுடைய பங்கு
மூட்டிய தீயில் பொங்கிப் பொங்கி வெந்தன
அரிசியும் பருப்பும்.
2.
காயத்தின் மீது எச்சிலைக் களிம்பாய்த் தடவினேன்
காற்றுபட்டு அது ஆற ஆற வலி கூடுகிறது
வீக்கம் நரம்புகள் சுருண்டிருப்பதைக் காட்டுகின்றன
ஒத்தடம் கொடுக்கக் கொடுக்கத் தானாய் வடிகிறது வீக்கம்.
உடம்பு காயத்திற்குப் பழகுகிறது
பழுத்த மரத்தின் மீது எறிகிற கல்லாய்.
ஒவ்வொரு மரக்கிளையிலும் பறவைகளின் பாட்டுகள்
பழுக்கக் காத்திருக்கின்றன காய்கள் பழமாகிற காலத்திற்கு.
3.
குப்பை கொட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிலம்
காட்டுக் கீரைகளை விளைச்சலாய்த் தந்தது
கொல்லையில் ஒதுக்குப்புறத்தில் தானாய் விளைந்த தக்காளி
யாரும் எதிர்பாராமல் விளைந்தது
ஆசைக்கொரு பப்பாளியும், சப்போட்டாவும் வைத்தது
காய்ந்து காய்ந்து முளைக்காமலே வாடிப் போனது
சொத்தையென வீசியனவெல்லாம்
பறங்கியும், வெள்ளரியுமாய் முளைத்தன
கருப்பை அகற்றிய அன்றுதான்
கண்ணில் பட்டது
எதிர்வீட்டு மா பூவாய்ப் பிஞ்சாய்க் காய்த்துக் குலுங்கியது.
கல்லெறிந்தால் ஒரு பழமாவது கிடைக்கும்.
4.
ஒவ்வொரு கனவுக்கும் பலன்கள் சொல்லப்படுகின்றன
மொட்டவிழ மணத்துடன் மலர்கள் பூப்பது போல
இறந்தவர்கள் எழுந்து நடப்பது போல
சினைப் பசு கன்று ஈனுவது போல
மரக்கிளை முறிவது போல
பறவை கூடுவது போல
தொடுக்கப்பட்ட மாலை உதிர்வது போல
குளிரவைக்கப்பட்ட விளக்கு ஒளிர்வது போல
அடுக்ககம் ஒன்று சரிந்து விழுவது போல
மற்றும் ஓசையின்றி வற்றிப் போகும் ஆறு
காடுகளில் பற்றியெரியும் நெருப்பு
கடலின் பின்னிருந்து எழும் ராட்சத அலை
ஒவ்வொரு கனவுக்குப் பின்னும் ஒரு திரை விழுகிறது
ஒவ்வொரு கனவுக்குப் பின்னும் ஒரு நீரலை சலனித்து அமைகிறது
ஒரு வெளிச்சத்திற்குள் இருள் நுழைவது போல
ஒரு இருளுக்குள் வெளிச்சம் சுடர்ந்தெழுவது போல
ஒரு கயிற்றின் முடிவும், தொடக்கமும் பிணைந்து இறுகுவது போல.
5.
நாடகப் பொம்மைகளின் நடுவே
எனது கதாபாத்திரமும் இணைந்து கொண்டது
கேலிக் கூத்தாக
அவைகளை நானே இயக்கினேன்
அவைகளின் ஒவ்வொரு அசைவையும்
நானே ஒவ்வொரு கதாபாத்திரங்களாகவும் நடித்துக் கொண்டிருந்தேன்
இறுதியில் ஒரு கதாபாத்திரம் இறக்கும் பொழுது
நானும் இறந்து போகவேண்டியவனாக இருந்தேன்
முடிவில்
பொம்மைகளை மூட்டைக் கட்டிக் கொண்டு
தழும்பேறிய இந்த முதுகில் சுமந்து கொண்டு நடக்கிறேன்
மையத்திலிருந்து விலகி.
Art : fawaz fawaz







Leave a Reply