ஆதி மருத்துவர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையிலான உறவு சகோதரத்தன்மை கொண்டது அல்ல. அவர்களுக்குள் ஆதிக்கமும் சார்பு நிலையும் இருப்பதாக பண்டிதர் ஆனந்தம் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கோ.ரகுபதி பதிவு செய்கிறார். புதுமைப்பித்தனின் ‘நாசகார கும்பல்’ சிறுகதையில் மருத்துவர்களை ஜாதி இந்துக்கள் எவ்வாறு ஒடுக்குகின்றனர் என்பதைக் காண முடியும். கிடைத்த தரவுகளைக் கொண்டு ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளர் ஆக்கப்பட்ட வரலாறு’ என்னும் நூலை 2006 ஆம் ஆண்டு பேராசிரியர் கோ.ரகுபதி வெளியிட்டார். அதில் பண்டிதர் ஆனந்தம் குறித்துச் சிறு அறிமுகத்தை அவர் கொடுத்தார்.
பண்டிதர் ஆனந்தம் 1876 மார்ச் 16 அன்று கும்பகோணம் சாமிநாதன்- கமலம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். இந்தக் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அரசக் குடும்பங்களுக்கு மருத்துவம் செய்து வந்தனர். பெற்றோர் அவருக்கு சிவானந்தம் எனப் பெயர் சூட்டினார். தமிழ் இலக்கியம், தமிழ் மருத்துவம் பயின்றவர். நந்தன் மீது பற்றுக் கொண்டவர்.
சென்னை மாகாண சட்டசபையில் ஏ.எஸ்.கிருஷ்ணராவ் நவம்பர் 1914 ஆம் ஆண்டு ‘ஆயுர்வேத-யுனானி வைத்தியங்கள் என்னும் சுதேச வைத்திய முறைகளை’ அரசாங்கம் ஆதரித்து அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் தன் அரசியல் பொருளாதார நலனுக்காக ஆங்கில மருத்துவத்தைப் பரப்புவதற்காக நிறுவியிருக்கும் மருத்துவமனைகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானவையாக இல்லை. மக்களில் படித்தோருக்கு சுதேச வைத்தியத்தின் மீது நம்பிக்கை குறைவு ஏற்படவில்லை. ஆகவே சுதேச வைத்திய முறைகளான ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றைத் தேச மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பரவச் செய்ய வேண்டும் என அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. அவர்கள் ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளை ஆதரிப்பதற்கு ஜாதியும் ஒரு காரணம். ஏனென்றால் தீண்டத்தகாதோர் எனக் கருதப்பட்டோர் உட்பட அனைத்து ஜாதியினரும் மருத்துவமனைக்குச் சென்று வருவதால் தங்களின் புனிதத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதிக்க ஜாதியினர் அங்கு செல்ல விரும்பவில்லை. மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய நரசிம்மையர்.
மேனாட்டு முறையை அனுசரித்த சாஸ்திரங்களின்படி வைத்தியம் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு இஷ்டமுமில்லை. ஆகவே ஜனங்களுக்கு வைத்திய உதவி வேண்டிய அளவுக்குக் கிடைக்கும்படிச் செய்வதற்கு இது ஒன்றுதான் ஏற்ற வழியாகும். அதாவது, ஆயுர்வேத யுனானி வைத்திய சாலைகளையும் பாடசாலைகளையும் ஸ்தாபித்து… எனக் கூறுகிறார். எனவே மருத்துவத்தில் சுதேசியம் என்ற முழக்கம் ஜாதியைப் பாதுகாத்தல் என்பதன் மறுமொழி எனலாம்.
மருத்துவத்தில் சுதேசியம் பேசிய பலரும் பார்ப்பனர் ஜாதியைச் சேர்ந்தோர். எம்.துரைசாமி அய்யங்கார் நடத்திய வைத்திய கலாநிதி என்ற தமிழ்ப் பத்திரிகை ஆயுர்வேத மருத்துவத்தைப் பரப்பும் பணியைச் செய்தது. ஆயுர்வேதம், யுனானி ஆகிய சுதேசிய வைத்திய சாலைகளை அரசாங்கம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. ஆயுர்வேத மருத்துவத்தை நிறுவனமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் சுதேசிய மருத்துவம் எவையெவை எனக் கூறியதில் பெருந்தவறு செய்தனர். மொழிகள் பல பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில் சித்த மருத்துவம், பழங்குடி மக்களின் மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டுப்புற மருத்துவம் எனப் பல்வேறு மருத்துவ முறைகள் இருப்பினும் இந்தியாவில் சுதேசிய மருத்துவம் ஆயுர்வேதம், யுனானி ஆகியவை மட்டுமே எனக் கூறினார். பொதுவாக அனைத்து நிலைகளிலும் இஸ்லாமியர்களை எதிர்க்கும் பார்ப்பனர்கள் யுனானி மருத்துவத்தைச் சுதேசிய மருத்துவம் எனக் கூறியதை அவர்களின் அரசியல் தந்திரமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவத்தில் சுதேசியம் என முழக்கப்பட்ட பார்ப்பனர்களின் அரசியலானது, தமிழ்ச் சித்த மருத்துவம் உட்பட இதர மொழி பேசும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவத்தில் இருந்த பன்மைத்தன்மையை ஒழித்துவிட்டு அதன் மீது ஆயுர்வேதம் என்ற ஒற்றைத்தன்மையை ஒட்டுவதற்கான முயற்சியே. இதன் ஊடாகத் தமிழ்ச் சித்த மருத்துவத்தைக் கபளீகரம் செய்வதே அந்த அரசியலின் உள்ளீடு.
சமஸ்கிருத மருத்துவத்தை நிறுவனமயமாக்கும் நிகழ்வுப் போக்கில் தமிழ்ச் சித்த மருத்துவம் கபளீகரம் செய்யப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தவராகவும் அதனால் கொதிப்படைந்தவராகவும் தென்படுபவர் பண்டிதர் ஆனந்தம் என்று பேராசிரியர் கோ.ரகுபதி சொல்கிறார். சித்த மருத்துவம் தாக்குதலுக்கு உள்ளானபோது அதைப் பாதுகாக்க இரண்டு வடிவங்களில் போராட்டங்களைக் கட்டமைத்தார் ஆனந்தம். அவை 1. களப் போராட்டம் 2. அறிவுச் செயல்பாடு என்றும் பேராசிரியர் கோ.ரகுபதி சொல்கிறார்.
களப் போராட்டம்
சங்கம் நிறுவுவதில் களப்போராட்டம் வெளிப்பட்டது. பிற்காலத்தில் பார்ப்பனர் அல்லாத இயக்கத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த பி.தியாகராயர் தலைமையில் 1915 டிசம்பர் 23 அன்று பண்டிதர் ஆனந்தம் தென்னிந்திய ஆயுர்வேத (சித்தா) வைத்திய சங்கத்தை நிறுவினார். இது ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தின் துணையுடன் ஆயுர்வேதத்தை நிறுவனமாக்குவதற்கு முயன்ற (1914) அடுத்த ஆண்டு 1915 தமிழ் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக பண்டிதர் ஆனந்தம் நிறுவினார் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்தப் போராட்டத்தில் அவருக்குத் தோள் கொடுத்தோர் மருத்துவர்களும் பார்ப்பனர் அல்லாதோரும். ஆனால் அவர்கள் தாமாகவே முன்வந்தனர் எனக் கூற இயலாது. காரணம் சித்த மருத்துவம் கபளீகரம் செய்யப்பட இருக்கும் சிக்கலின் தீவிரத்தை உணர்ந்தவர் என்ற முறையில் பண்டிதர் ஆனந்தம் அதை மற்றவர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை ஒருங்கிணைத்திருக்க முடியும். இந்தப் போராட்டத்தில் அவர்கள் பண்டிதர் ஆனந்தம் அவர்களுடன் இணைந்ததற்கு இயல்பான காரணங்கள் இருந்தன. ஆயுர்வேத மருத்துவத்தை நிறுவுவதற்கு முன்னின்ற பார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாதோர் மீது பல நிலைகளில் ஆதிக்கம் செலுத்தியதால் தமிழ் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டம் இயல்பாகவே பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகவும் இருந்தது. எனவே பார்ப்பனர் அல்லாதோர் பண்டிதர் ஆனந்தம் அவர்களுடன் கைகோர்த்தனர். மருத்துவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் பாரம்பரியத் தொழில் தமிழ்ச் சித்த மருத்துவம் என்பதால் சித்த மருத்துவத்தின் மீதான தாக்குதல் என்பது அவர்களைத் தாக்குவதற்கு ஒப்பானது. அதுபோலவே தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பது என்பதும் மருத்துவர்களையும் பாதுகாக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆகையால் அவர்களும் அந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பண்டிதர் ஆனந்தம் உருவாக்கிய இந்தச் சங்கத்திற்குப் பின்னர்தான் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகப் பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்தனர். எனவே பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பிற்கான முன்னோடி அமைப்பாக பண்டிதர் ஆனந்தம் உருவாக்கிய மருத்துவர் சங்கத்தைக் கூறலாம். சங்கம் நிறுவப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
சுதேசி மருத்துவ முறைகளை ஆராய்வதற்கு 1920 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மருத்துவர் கோமன், தன் ஆய்வு அறிக்கையில் இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதன் மருந்துகளைத் தவிர கற்றுக் கொள்வதற்கு வேறு ஏதுமில்லை எனக் கூறினார். அது இந்தியாவிலுள்ள சுதேசிய மருத்துவ முறைகள் மீது பாதகத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்த பண்டிதர் ஆனந்தம் அவற்றைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னையில் 1923 அக்டோபர் 20, 21 ஆகிய நாட்களில் தென்னிந்திய மருத்துவர் மாநாட்டை ஒருங்கிணைத்ததோடு அதில் தமிழ்ச் சித்த மருத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ முறைகளைக் கற்பிப்பதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1924 ஜூலை 1 அன்று கல்வி நிலையம் நிறுவ முனைந்த போது அந்த வைத்திய முறைகளோடு சித்த மருத்துவமும் கற்பிக்கப்பட வேண்டுமென்று பண்டிதர் ஆனந்தம் குரல் எழுப்பினார். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்காக சென்னை மாகாணத் தலைமை அமைச்சர் பனகல் அரசரை பண்டிதர் ஆனந்தம் சந்தித்தார்.
சுதேச வைத்திய ஆராய்ச்சிக் கழகத்தை (உஸ்மான் கமிட்டியை) பனகல் அரசர் ஏற்படுத்திய காலத்தில் ஆயுர்வேத யுனானி வைத்தியத்தோடு நம் தமிழ்நாட்டு சித்த மருத்துவ முறையையும் ஆதரிக்க வேண்டுமென நாம் கிளர்ச்சி செய்தோம். அப்போது பனகல் அரசருக்கு முதலில் அது புதுமையாகவும் சிறிது வெறுப்பாகவும் தோன்றியது. என்றும் பின்னர் அதன் உண்மைகளை உணர்ந்து தமிழ்ச் சித்த மருத்துவ முறையையும் ஆதரித்தார் என மருத்துவன் இதழில் பண்டிதர் ஆனந்தம் குறிப்பிடுகிறார். இறுதியில் இதர சுதேச மருத்துவ முறைகளோடு சித்த மருத்துவமும் இணைத்துக் கற்பிப்பதற்கு ஏற்றப்பட்டது.
அறிவுப் போராட்டம்
சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தின் ஊடாக பண்டிதர் ஆனந்தம் தன் ஜாதியின் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்ட போது பத்திரிகை நடத்துவது அவசியம் என்பதை உணர்ந்தார். விளைவு மருத்துவன் என்ற தமிழ் வைத்திய மாத இதழை 1928 ஆம் ஆண்டு சென்னை 221 தங்கச்சாலை வீதியைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியிட்டார். முதல் இதழ் 1928 அக்டோபர் மாதம் வெளியானது. 1929 ஜூன் மாதம் வரையிலான இதழ்கள் கிடைக்கப்பெற்றன. அதன் பின்னர் வெளிவந்த இதழ்கள் குறித்து அறிந்து கொள்ள இயலவில்லை என்று பேராசிரியர் கோ.ரகுபதி சொல்கிறார். கல்வி நிலையங்களில் தமிழ்ச் சித்த மருத்துவம் கற்பிக்கத் தொடங்கிய பின்னரும் அதன்மீது அறிவுரீதியான தாக்குதல் கொடுக்கப்பட்டதால் அதைப் பாதுகாப்பதற்கான பண்டிதர் ஆனந்தம் அறிவுச் செயல்பாடுகள் மருத்துவமனைகள் ஊடாக வெளிப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் தொடக்க காலங்களில் சித்த மருத்துவத்தை மருத்துவ முறையாக அங்கீகரிக்க மறுத்த போது மேற்கத்திய மருத்துவ முறைக்கு எவ்விதத்திலும் சித்த மருத்துவம் குறைவானதன்று என்ற வாதத்தைக் கீழ்நாட்டு மருத்துவமும் மேல்நாட்டு மருத்துவமும் என்ற கட்டுரையில் முன்வைத்தார்.
பிரிட்டிஷாரின் அலோபதி மருத்துவத்துக்கு ஒரே ஒரு கட்டுரையில் பதில் அளித்த பண்டிதர் ஆனந்தம் பார்ப்பனர்களின் ஆயுர்வேத வைத்தியத்தை எதிர்கொள்வதற்காக தமிழ் வைத்தியமும் சமஸ்கிருத வைத்தியமும் எனத் தலைப்பிட்டு தொடர் கட்டுரை எழுதினார். இதில் தமிழ்ச் சித்த மருத்துவத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலளித்தார். மேலும் சித்த மருத்துவம் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது எனக் கூறி அதைக் கபளீகரம் செய்வதை எதிர்த்துத் தமிழர்களுக்கென மருத்துவ அறிவுப் பாரம்பரியம் இருப்பதை எடுத்துரைத்தார். தமிழ்ச் சித்த மருத்துவம் சுயமாக உருவாகிப் பிற மருத்துவ முறைகளின் துணையின்றித் தனித்துச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்தார். அதேசமயம் அது ஆதி மருத்துவர்களின் பாரம்பரியத் தொழில் என்பதை எடுத்துரைப்பதற்காகக் கடந்த கால வரலாற்றை மீண்டும் எழுதத் தொடங்கினார். முதலில் எழுதிய சிறுத்தொண்டர் வரலாறு முழுமையாக வெளியிடப்படவில்லை.
தமிழ்ச் சித்த மருத்துவ அறிவுப் பாரம்பரியத்தைத் தற்காத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் தமிழ்ச் சித்த மருத்துவம் தனித்துவமானது என்று வரலாற்றை ஒப்புக்கொண்ட உயர் ஜாதியினர் கருத்துகளையும் மருத்துவன் இதழில் பண்டிதர் ஆனந்தம் வெளியிட்டார். இந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சுப்பிரமணி அய்யர், வைத்தியர் டி.கோபாலச்சாரியார் ஆகியோரின் கட்டுரைகள், உரை ஆகியன இதழில் வெளியாகின. மேலும் அவரிடம் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த இராமநாதபுரம் அரசர், எட்டயபுரம் அரசர், ஜமீன்தார், நீதிபதிகள், பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத ஜாதி இந்துக்கள் போன்றோர் தமிழ்ச் சித்த மருத்துவம் குறித்தும் அதில் பண்டிதர் ஆனந்தம் நிபுணத்துவம் குறித்தும் எழுதிய கடிதங்களை மருத்துவன் இதழில் பண்டிதர் ஆனந்தம் வெளியிட்டார். அது தற்புகழ்ச்சி செயல்பாடு அல்ல. அது தமிழ்ச் சித்த மருத்துவச் சிறப்புகளை எடுத்து வைக்கிற அறிவுச் செயல்பாடு. இதன் அடிப்படை நோக்கம் வெகுமக்கள் இடத்தில் தமிழ்ச் சித்த மருத்துவத்தின் தனித்துவம் அதன் சிறப்பு போன்றவற்றைப் பரப்புவதன் ஊடாக அதைப் பாதுகாத்தல் ஆகும் என்கிறார். பேராசிரியர் கோ.ரகுபதி தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அதேசமயம் பண்டிதர் ஆனந்தம் இந்தியாவின் இதர மருத்துவ முறைகளைப் புறக்கணிக்கவில்லை. தென்னிந்திய மருத்துவர் சங்க மாநாட்டை 1923 ஆம் ஆண்டு ஆனந்தம் நடத்திய போது ஆயுர்வேத மருத்துவர்களே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர் என்பது அதற்குச் சாட்சி. சித்த மருத்துவம் இதர மருத்துவ முறைகளோடு இணைத்துக் கற்பிக்கப்பட வேண்டுமென்று போராடி வெற்றி கண்ட பண்டிதர் ஆனந்தம் இறுதியில் சித்த மருத்துவத்திற்கு மட்டும் தனிக் கல்வி நிலையம் நிறுவப்படுவதற்கு வித்திட்டார். சென்னை தியாகராய நகரில் பண்டிதர் ஆனந்தம் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவக் கல்லூரியை நிறுவி அதில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முயற்சியை 1950 களின் தொடக்கத்தில் பண்டிதர் ஆனந்தம் மேற்கொண்டார். அந்தக் கல்வி நிலையத்தின் முதல்வர் பொறுப்பையும் பண்டிதர் ஆனந்தம் வகித்தார். மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டதில் பண்டிதர் ஆனந்தம் பங்கு அளப்பரியது. சித்த மருத்துவ வளர்ச்சியில் பண்டிதர் ஆனந்தம் ஆற்றிய பங்கு குறித்துத் தமிழ் மாநிலச் சித்த மருத்துவச் சங்கம் 1973 ஜூலை 24 அன்று நடத்திய கருத்தரங்கு மலரில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
சித்த மருத்துவத்தைப் பற்றி இந்திய அரசாங்கம் அவ்வப்பொழுது அனுப்பிய ஆய்வுக்கு முன்பெல்லாம் சாட்சி பகர முன்நின்றுள்ளார். அவற்றை விவரிப்பின் பெருகுமென விடுகின்றோம். அரசியலார் நடத்தி வந்த எல்லா சித்த மருத்துவப் பள்ளிகளிலும் – ஆராய்ச்சி நிலையங்களிலும் அவரது பணி இல்லாது இருந்ததில்லை. அவர் நடத்திய இந்தப் போராட்டத்தின் விளைவாகச் சித்த மருத்துவ மாணவர்களுக்குப் பட்டங்கள் அளிக்கும் தேர்வாளர் குழுவில் பண்டிதர் ஆனந்தம் இணைக்கப்பட்டார். எனவே, தமிழ் சித்த மருத்துவத்தைப் பாதுகாத்தல், அதன் வளர்ச்சி ஆகியவற்றில் பண்டிதர் ஆனந்தம் பங்கு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பேராசிரியர் கோ.ரகுபதி சொல்கிறார். 1972 ஜூன் 18 அன்று பண்டிதர் ஆனந்தன் மறைந்த போதிலும் அவர் நிறுவனமாக்கியுள்ள சித்த மருத்துவக் கல்லூரி நிலைத்து நிற்கிறது.
மருத்துவர் வகுப்பின் முன்னேற்றத்தில் பண்டிதர் ஆனந்தம்
மருத்துவர் வகுப்பினர் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பண்டிதர் ஆனந்தம். சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கி சுமார் 6 ஆண்டுகளுக்குள் தன் சுயசாதி விடுதலைக்கெனத் தென்னிந்திய மருத்துவர் சங்கத்தை 1921 ஆகஸ்ட் 19 அன்று பண்டிதர் ஆனந்தம் நிறுவினார். தன் சுய ஜாதியினரிடமிருந்து முற்றிலும் முரண்பட்ட சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டிருந்த பண்டிதர் ஆனந்தம் அந்த மக்களுக்காகப் போராட வேண்டும் என்ற சிந்தனை 1915 முதல் 1921 ஆம் ஆண்டுகால இடைவெளிக்குள் எவ்வாறு ஏற்பட்டது என்பதை எடுத்து வைப்பது அவசியம். சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அவருடன் இணைந்து இருந்தவரில் அவருடைய சுய ஜாதியினரும் அடக்கம். அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சுய ஜாதியின் எதார்த்த நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பண்டிதர் ஆனந்தம் தன் சுயஜாதி விடுதலைக்கெனத் தனியாக ஓர் அமைப்பு வேண்டுமெனக் கருதியிருக்கலாம். அல்லது அவருடன் இணைந்திருந்த மற்றவர்கள் அதை வலியுறுத்தியிருக்கலாம். இவ்விடத்தில் நாம் குறிப்பிட்டுக் காண வேண்டிய அம்சம் ஆதி மருத்துவர் விடுதலைக்கு என பண்டிதர் ஆனந்தம் முன்வைத்த தனிச் சிறப்பான சிந்தனைகளாகும்.
காலனிய ஆட்சிக் காலத்தில் உருவான ஜாதி இயக்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகள் பாரம்பரியத் தொழிலைக் கைக்கொள்ளுதலும் அதை நவீனமயமாக்குதலும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார். அன்றைய காலத்தில் தன் செல்வாக்கையும் பொருளாதார மதிப்பையும் இழந்து கொண்டிருந்த தங்களின் பாரம்பரியத் தொழிலான சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்குப் போராடிய பண்டிதர் ஆனந்தம் தன் ஜாதியின் பொருளாதார விடுதலைக்கு அந்தத் தொழிலை எவ்வாறு மாற்றுவது எனச் சிந்தித்தார். தமிழ்ச் சித்த மருத்துவத்தைத் தன் வகுப்பினர் முறையாகப் பயில வேண்டும். மருத்துவச்சிகள் நவீன முறையில் செவிலித்தாய்ப் பயிற்சி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
1921 ஆம் ஆண்டு தென்னிந்திய மருத்துவர் சங்கம் தொடங்கியது முதல் தமிழ்நாடு முழுவதும் பண்டிதர் ஆனந்தம் பயணம் செய்தார். 1921 டிசம்பர் 26 முதல் 28ஆம் நாள் வரை ஆக்ராவில் நடைபெற்ற மருத்துவர் ஜாதி மாநாட்டில் பங்கேற்றார். 1924 ஆம் ஆண்டு இலங்கை சென்று மருத்துவர் குலச் சங்கம் ஏற்படுத்தினார். ஆதி மருத்துவர் ஜாதி ரீதியாக இழிவு செய்யப்படும் தொழில்களைப் புறக்கணிக்குமாறு அறிவுறுத்துகிறார். நெல்லையில் மருத்துவர் நடத்திய போராட்டத்தை பேராசிரியர் கோ.ரகுபதியின் நூல் விரிவாக விவரிக்கிறது. இவ்வாறு தொழில் செய்ய மறுத்தவர்களை இலங்கைக்குச் செல்ல பண்டிதர் ஆனந்தம் உத்தரவிட்டதாகவும், அவர்கள் சென்றதை அறிந்த ஜாதி இந்துக்கள், மருத்துவர்கள் வீடுகளைத் தாக்கியதாகவும் நேரடிச் சாட்சிய ஆய்வுகளுடன் பேராசிரியர் ரகுபதி தருகிறார். இவ்வாறு பாதிக்கப்பட்ட மருத்துவர் குடும்பங்களைக் காப்பாற்ற சென்னையில் 1924 ஆம் ஆண்டு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், அதில் டாக்டர் நடேசனார் உட்படப் பலரும் கலந்து கொண்டதாகவும் அந்நூல் கூறுகிறது. 17.12.1924 அன்று திருநெல்வேலிக்கு வந்த பண்டிதர் ஆனந்தம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரவுகிறது. தஞ்சை செல்கிறார் பண்டிதர் ஆனந்தம் அங்கும் பரவுகிறது, சேலத்திலும் பரவுகிறது. மருத்துவர்கள் பணிகளைச் செய்ய மறுத்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து சவரம் செய்யத் தொழிலாளர்களை மற்ற ஜாதியினர் அழைத்து வருகிறார்கள்.
‘‘சலூன் கடைகள் காலனிய ஆட்சிக் காலத்தில் உருவாகிய முதலாளியச் சமூகத்தின் விளைவு அல்ல. அது மருத்துவ ஜாதியினர் விடுதலைக்காக நடத்திய போராட்டத்தின் உற்பத்தியாகும்’’ (ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளர் ஆக்கப்பட்ட வரலாறு பக்கம்.54 ) தமிழ்ச் சமூக அமைப்பில் மருத்துவர் சமூகம் மேன்மையடைய தொடர்ந்து தொண்டு ஆற்றியவராக பண்டிதர் ஆனந்தம் இருந்துள்ளார் என்கிறார் எழுத்தாளர் பா.திருமாவேலன் (பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தரின் தமிழ்நாடு பக்கம்:12)
பாரம்பரியச் சித்த மருத்துவத்தை நவீனமயமாக்கும் சிந்தனையை முன்வைத்து அதேசமயம் இதர நவீனத் தொழில்கள் பலவற்றையும் ஆதி மருத்துவர்கள் கற்க வேண்டுமென பண்டிதர் ஆனந்தம் வலியுறுத்தினார். ஆதி மருத்துவர் ஜாதியினரின் முன்னேற்றத்திற்காக அவர்கள் இந்திய அளவில் ஒருங்கிணைந்து ஆக்ராவில் நிறுவப்பட்ட இந்திய மகாவீர் இன்டஸ்ட்ரியல்ஸ் லிமிடெட் என்னும் தொழிற்சாலையில் பண்டிதர் ஆனந்தம் தன்னை இணைத்துக் கொண்டார். ஆதி மருத்துவர் சங்கத்தை ஆசிய அளவில் கட்டமைத்தார். தன் சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட பண்டிதர் ஆனந்தம் போராட்டத்தை நடத்துகிற போது தனக்கு மட்டும் சலுகை தருவதை மறுத்தார். மருத்துவர் ஜாதிக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் 1923 ஏப்ரல் 1 அன்று தன் ஜாதியினரை அழைத்துக் கொண்டு அந்தக் கோயிலுக்குள் சென்றபோது பண்டிதர் ஆனந்தம் அவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. ஆனால், இந்துக்கள் எல்லோரும் ஆலயத்துள் செல்லுங்காலம் வரும் போதன்றி இதுபோது நான் ஆலயத்துட் செல்வேன் எனக் கூறி அதை மறுத்தார். (திராவிடன் 18 மே 1929 பக்கம்:7)
ஓவியம் : மருது
பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.








Leave a Reply