Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

ஜி. குப்புசாமி
ஜி. குப்புசாமி
April 1, 2026
”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருந்ததி ராயின் ‘Mother Mary Comes to Me’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டையொட்டி, THE NEWYORK TIMES, August 30 இதழில் வெளிவந்த நேர்காணல்.
பேட்டி கண்டவர் : Lulu Garcia – Navarro
(தமிழில் : ஜி.குப்புசாமி)


சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘Mother Mary Comes to Me’ (‘அன்னை மேரி என்னிடம் வருகிறார்’) என்ற உங்கள் சுயசரிதை மிகவும் தீவிரமான தனிப்பட்ட குரலில் எழுதப்பட்டிருக்கிறது. உங்களுடனும் உங்கள் சகோதரனுடனும் உங்களுடைய தாய் கொண்டிருந்த உறவு, அவரது இயல்பு — இவற்றை உலகமே படிக்கும்படி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த வகையில் எழுதியிருப்பது, உங்கள் துக்கத்துடனும் தாயின் இல்லாமையுடனும் நீங்கள் சமரசம் செய்து கொள்ளும் ஒரு முறையா?

அப்படியில்லை. அத்தகைய தனிப்பட்ட துக்கத்தைப் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும், அதனை காலம் ஆற்றுப்படுத்திவிடும். நான் இந்தப் புத்தகத்தை எழுதியது, மிஸஸ் ராய் இலக்கியத்தில் ஒரு தனித்துவமான இடத்துக்குத் தகுதியானவர் என்று நினைத்ததால்தான். அவரை மிகவும் நல்லவர், மகத்தானவர் என்ற ஒரே பரிமாணத்தில் காட்டுவது என் நோக்கமாக இருக்கவில்லை, அவருடைய மொத்த ஆளுமைத் திறனை, அவரிடமிருந்த எல்லா குணவிசேஷங்களோடும் சேர்த்துச் சொல்வதே சரியென்று நினைத்தேன். சில விதங்களில், அவரை ‘ மகத்தானவர்’ என்ற ஸ்திதிக்கு ஆளாக்கியதே அவருடைய ‘நல்லதல்லாத’ அம்சங்கள்தான்.

உங்கள் முதல் நாவலான ‘God of Small Things’ கூட சற்று சுயசரிதைத் தன்மை கொண்டதுதான் அல்லவா? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதும்போது, அது உங்களுக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்குமா? மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற அச்சம்?

எனக்குக் கவலை இல்லை. ஏனெனில், என்னுடைய அம்மாவுக்கே அந்தக் கவலை இருக்கவில்லை. ஆம், நானும் என் அண்ணனும் அவரது இருண்ட குணாம்சங்களால் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மற்றவர் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தியிருந்தால் அவராலும் எந்தச் சாதனைகளையும் செய்திருக்க முடியாது, நானும் எதுவும் செய்திருக்கவோ எழுதியிருக்கவோ முடியாது.

தாய்–மகள் உறவு தனித்துவமானது. அதில் அன்பும் முரண்பாடுகளும் இருக்கின்றன. பல மகள்களுக்கு அவற்றைச் சமாளிக்க முடிவதில்லை…

பல தாய்களுக்கும் கூட — அதை மறந்துவிடாதீர்கள். இந்தப் புத்தகம் உண்மையில் தாய்–மகள் பற்றியது அல்ல என்று நான் நினைக்கிறேன். இது, உண்மையில் தாயாக இருந்த ஒரு மகளைப் பற்றியது; பெரியவளாக வளர்ந்து, அவளுடன் பெரியவளைப் போலவே நடந்துகொண்ட மகளைப் பற்றியது. இது எப்போதும் என்னைக் குழந்தையைப் போலவே நடத்திக்கொண்டு குறையும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதல்ல நான் சொல்ல வந்தது. ஆம், அது எனக்குச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அவருக்கும் கடினமாகத்தான் இருந்தது. மேற்கத்திய நாடுகளில் பெண்ணிய இயக்கம் எழும்பியபோது, அதைத் தகர்க்கும் வழியாக ‘தாய்மை’ என்ற கருத்தாக்கத்தைப் பேயாக்கினார்கள். இங்கே, பெண்களை மதிப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் வழி — தாயைத் தெய்வமாக்குவது; ஆனால் அவள் சமூக நெறிகளுக்கு உட்பட்டு நடந்தால் மட்டுமே அந்தத் தகுதி வழங்கப்படும். இரண்டிலும் மூச்சுத் திணறல் இருக்கிறது. தவறுகள் செய்யவும், கோபப்படவும் இடமில்லை. ஆகவே, தாய்–மகள் பற்றிய கிளிஷேகளை விட்டு விலக வேண்டும்.

‘அன்னை மேரி என்னிடம் வருகிறார்’ நூலில் ஒரு காட்சி. சென்னை அத்தை வீட்டிலிருந்து விமானத்தில் திரும்புகிறீர்கள். நீங்கள் சாதாரணமாக ஒரு கேள்வி கேட்கிறீர்கள்; தாய் கோபப்படுகிறார்; பின்னர் உங்களைக் குரூரமாகக் கேலி செய்வது தொடங்குகிறது. உடனே “உனக்கு அப்பாவும் நானே, அம்மாவும் நானே. உன்னை இரண்டு மடங்கு நேசிக்கிறேன்” என்றும் சொல்கிறார். இரு வேறு முகங்கள்…

அதுதான் என்னைத் தொடர்ந்து கிழித்துக்கொண்டும், உடனே மீண்டும் தைத்துக்கொண்டும் இருந்த அம்சம். உடைத்து நொறுக்குவது; மீண்டும் ஒட்டிச் சேர்ப்பது. அது எங்கள் உறவின், போராட்டத்தின் ஒரு பகுதி. ஆனால் நான் பிடித்துக் கொண்டது ‘மீண்டும் தைக்கும்’ பக்கத்தையே. நான் வீட்டைவிட்டு வெளியேறிய காலத்தில் வெளியேறியிருக்கவில்லை என்றால் நான் முற்றிலும் நொறுங்கியிருப்பேன். ஆனால் நான் வெளியேறினேன்.

உங்கள் தாயின் கடைசி ஆண்டுகளில் உறவு மாறியதா?

அதிகமாக இல்லை. அவருடைய இறுதிக் காலத்திலும் என்னால் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் இருக்க முடிந்ததில்லை; இருள் பீடித்துவிடும். ஆனால் உடல்நலம் குன்றியிருந்தபோது, நான் வருவது அவருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. நான் வந்தவுடன் கோபம் வந்துவிட்டது. “இந்த டாக்டர்கள் உன்னைப் பார்க்கத்தான் விரும்புகிறார்கள்…” என்று சத்தமிட்டார். அவரைக் கையாள்வது கஷ்டம். உடல் பலவீனமாக இருந்தாலும், அதை ஒரு காரணமாகப் பயன்படுத்தி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்.

நீங்கள் நீண்ட காலமாக கேரளாவை விட்டு டெல்லிக்குப் போய்விட்டீர்கள். கேரளாவுடன் உங்கள் உறவை எப்படி வர்ணிப்பீர்கள்? வெகுதூரத்திலிருந்து பார்ப்பதைப் போலவா அல்லது…

இந்த உறவு மிகவும் தனித்துவமானது. அவர் உயிருடன் இருந்தபோது இங்கே நீண்ட காலம் இருக்க முடியவில்லை. எனவே கேரளாவுடன் எனது உறவு என்பது அவருடனான உறவாகவே இருந்தது. அவர் இறந்தபின் மாறிவிட்டது. இப்போது அடிக்கடி வர முடிகிறது; மக்களைச் சந்திக்க முடிகிறது. பதினாறு வயதுக்குப் பின் இருந்த காலத்தைவிட கடந்த மூன்றாண்டுகளில் அதிகமாக இங்கே இருந்திருக்கிறேன். இங்கே எனக்கு ஒரு ஆழமான பிணைப்பு இருக்கிறது. நான் இங்கே வசிக்காவிட்டாலும், இதை ‘வீடு’ என்று நினைக்காமல் இருக்க முடியாது.

அப்படியானால், இதுதான் உங்கள் வீடு?

ஆம்.

உங்கள் எழுத்தில் அதை உணரமுடிகிறது — மீனச்சல், அய்மனம், மீன்கள்… பதினாறு வயதில் தில்லிக்குக் குடிபெயர்ந்துவிட்டீர்கள், முற்றிலும் வேறுபட்ட நிலப்பரப்பு. தில்லி எந்தளவுக்கு மாறுபட்டிருந்தது?

அதிர்ச்சி அளிக்கும் அளவு. தில்லி ஒரு மாநகரம். உணவு, மொழி ஆகியவற்றைத் தாண்டி, மக்கள் ஒருவரோடு ஒருவர் நடந்துகொள்ளும் விதம் — அந்தச் சாதி அடுக்குகள் — இவையெல்லாம் மிகவும் சகிக்க முடியாதவை. நான் இங்கே முதலில் வந்தபோது கடைக்காரர்களிடம், காய்கறி விற்பவர்களிடம் மக்கள் பேசும் விதம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இப்படியெல்லாம் கேரளாவில் பேசினால் நக்சலைட்கள் உங்கள் தலையை வெட்டிவிடுவார்கள் என்று சொல்வேன். சக மனிதர்களிடம் அப்படியெல்லாம் பேசக்கூடாது. அந்த அவமதிப்பு பரஸ்பரம் எல்லோரிடமும் இருந்தது.

உங்கள் எழுதும் செயல்முறை என்ன? மிகவும் தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் எப்படி எழுதுகிறீர்கள்? புனைவற்ற எழுத்திலிருந்து அது எந்தவிதத்தில் மாறுபட்டதாக இருக்கும்?

இலக்கிய பாணி என்ற வகையில் வேறுபட்டதாக இருக்கலாம்; ஆனால் எந்தவகையான எழுத்துக்கும் தேவைப்படுகிற கலைத்திறனிலும், ஒழுக்கத்திலும் வித்தியாசம் கிடையாது. நாவலாக இருந்தாலும் கட்டுரையாக இருந்தாலும், அது கோருகின்ற மொழியையும், வடிவத்தையும், அதற்கேயுரிய மரபுக்கூறையும் நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கைக்கொள்ளவேண்டும். எழுதுவது என்றால் பகலிரவாக அதிலேயே மூழ்கியிருப்பது. அதையே சிந்தித்துக் கொண்டிருப்பது, அதனுடனே தூங்குவது, அதனுடனே விழித்தெழுவது, அதனுடனே விளையாடிக்கொண்டிருப்பது….

இதுவரை இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இவற்றுக்கிடையில் பல அல்-புனைவு நூல்கள்…

அதற்குக் காரணம் நான் எழுதும் புனைவுகளின் தன்மை. நான் எழுதுவது வெறும் ‘கதை’ அல்ல; ஒரு பிரபஞ்சத்தைப் பற்றி எழுதுகிறேன். அதற்கு அதிக நேரம் தேவைப்படும். அதிக எண்ணிக்கையில் புத்தகங்களைத் தயாரித்துத் தள்ளுவதில் எனக்கு ஆர்வமில்லை. ஒரு எழுத்தாளருக்கான உண்மையான வாழ்க்கையை வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். உட்கார்ந்து எதையோ எழுதிக் குவிப்பதில் அல்ல. சில நேரங்களில் கூட்டத்தின் மத்தியில் இருந்துகொண்டும் எழுதியிருக்கிறேன்; சில சமயம் தோழர்களுடன் காடுகளில் அலைந்துகொண்டிருக்கும்போதும் எழுதியிருக்கிறேன்; சில சமயம் காஷ்மீரில் இருக்கும்போது. நான் வெறுமனே வாசிப்பதும் எழுதுவதுமான எழுத்தாளர் அல்ல; நான் எழுதுவதில் வாழ வேண்டும்.

அருந்ததி ராய் ‘ ஓர் எழுத்தாளர் – ஒரு செயற்பாட்டாளர்’. இதைப் போன்ற அடையாளப்படுத்தலை எவ்வளவு வெறுக்கிறீர்கள் என்று உங்கள் நூலில் சொல்கிறீர்கள்.

அதைப் பற்றி இந்தப் புத்தகத்தில் நகைச்சுவையாக நிறைய பேசியிருக்கிறேன். அது ‘சோஃபா – பெட்’ என்று சொல்வது போல. நான் ஒரு செயற்பாட்டாளர் என்று மக்கள் ஏன் நினைக்கிறார்களென்று புரியவில்லை. எழுத்தாளரின் வேலை மக்களை மகிழ்விப்பது மட்டும், அவர்கள் சமகால அரசியலைப் பற்றி எழுதக்கூடாதென்று நினைக்கிறார்கள். ஆனால் வரலாறு முழுக்க எழுத்தாளர்கள் அரசியல் பற்றி எழுதிவந்திருக்கிறார்கள். நன்றாக விற்கக்கூடிய சரக்கை என் எழுத்தில் உருவாக்கிச் சந்தையில் கடைபரப்ப வேண்டும் என்கிறார்கள். அது எழுத்தாளரையும் செயற்பாட்டாளரையும் மதிப்பிழக்கவைக்கும் வழி.

’சின்ன விஷயங்களின் கடவுள்’ விஷயத்தில் இதை உணர்ந்தீர்களா? அந்நாவலில் பொதிந்திருக்கும் அரசியலைப் பெரும்பாலோர் மறந்து விடுகிறார்கள். அந்த அம்சத்தை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு கேரளா, அதன் அழகான நிலப்பரப்பு இவற்றைப் பற்றி மட்டுமே….

அப்புறம் அந்தக் குழந்தைகள் பற்றி. அவர்களுக்கு வாய்த்த வாழ்க்கையைப் பற்றி. பிறகு வழக்குகள் போடப்பட்டன. பின்னர் புக்கர் கிடைத்ததும் அதைக் குழந்தைகள் பற்றிய புத்தகமாக்கிவிட்டார்கள். மக்கள் எப்போதும் அப்படித்தான். சங்கடம் அளிக்கும் விஷயங்களை எளிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

’சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் முரண்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். வெளுத்தாவின் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு அவன் பெரும் சிக்கலில் தவிக்கும்போது, காம்ரேடுகள் அவனுக்கு உதவத் தயங்குகிறார்கள், அவனை ஒதுக்குகிறார்கள். இந்த அம்சம் கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?

“வர்க்கமே சாதி” என்று சொல்லி சாதிப் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து வந்ததே கம்யூனிஸ்ட்டுகளின் முக்கியத் தவறு. கட்சியில் இருப்பவர்களே சாதியவாதிகளாகவும் கட்சித்தலைவர்கள் மேல் சாதியினராகவும் இருந்திருக்கிறார்கள். இப்போது மாறியிருக்கலாம் என்று நம்புகிறேன். நான் இங்கே வசிக்கவில்லை, எனவே வல்லுநரைப் போல கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் அனைத்துக் கட்சிகளும் சாதிப் பிரச்சனைகளை நேரடியாகச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இப்போது எல்லாக் கட்சிகளிலும் இது தொடங்கியிருக்கிறது. அதனால் இப்போது சாதி வேறுபாடே இல்லையென்றோ, உயர்சாதி மனப்பான்மையுடன் மிக மோசமாக யாரும் பேசுவதில்லையென்றோ சொல்லவில்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் (ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள், பெண் இயக்குநர்கள் குறித்து) பேசிய கருத்துகளைச் சமீபத்தில் படித்தேன். அதிர்ச்சிகரமாக இருந்தது.

உங்கள் அம்மா ஒரு டைப்ரைட்டரை உங்களுக்குப் பரிசளித்ததைப் பற்றியும், அந்த டைப்ரைட்டரில் முதலில் உங்கள் தந்தையைப் பல வருடங்கள் கழித்து பஹர்கஞ்ச் ஓட்டலில் சந்தித்ததைப் பற்றி எழுதியதையும் உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்…

உண்மையில் அவரை முதல்முறையாகச் சந்தித்த சம்பவமே வேடிக்கையாக அமைந்துவிட்டது. வீட்டிற்கு வந்து, அம்மா கொடுத்த டைப்ரைட்டரில் அதைப் பற்றி எழுதினேன். பெரும்பாலும் அந்த அனுபவம் புத்தகத்தில் இருக்கிறது. என் தந்தையை முதல்முறையாகச் சந்தித்தபோது எனக்கு இருபத்தைந்து வயது.

அதுதான் உங்கள் எழுத்து வாழ்க்கையின் தொடக்கம் எனலாமா, அதாவது இலக்கியத்துக்குள் உங்கள் முதல் காலடி?

அந்தக் காலகட்டத்தில் எழுதுவதற்குப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தேன். சோதனை முயற்சியாகச் சில திரைக்கதைகள் போல. ஆம், அதுதான் கிட்டத்தட்ட தொடக்கம்.

‘சின்ன விஷயங்களின் கடவுள்’ எப்போது உங்களுக்குள் உருவெடுத்தது?

‘Electric Moon’ முடித்த பிறகு நான் தனியாகப் பணியாற்றுவதென்று முடிவெடுத்தேன். அதுவரை என் கையில் பணமும் இல்லை, இருப்பதற்கு ஓர் இடமும் இல்லை. எந்நேரமும் பணத்தைப் பற்றிய கவலையிலேயே இருந்தேன். எப்படி ஜீவித்திருப்பது, எப்படி வாடகை கொடுப்பது, எப்படி ஒவ்வொரு வாரத்தையும் கழிப்பது என்று. ‘Electric Moon’ எழுதியதற்குக் கிடைத்த பணம் ஒரு வருடத்துக்குப் போதுமானதாக இருந்ததால் நான் உண்மையிலேயே எழுத விரும்புவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு அவகாசம் கிடைத்தது. அந்தத் திரைப்பட எழுத்து எனக்கு ஒரு பயிற்சியாக, என் திறமையைத் தீட்டிக்கொள்வதற்கான முயற்சியாக இருந்தது. அதனால் அடுத்து வந்த பெரிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

நீங்கள் வைக்கும் தலைப்புகள் அலாதியாக இருக்கின்றன. The Algebra of Infinite Justice, God of Small Things… இந்தத் தலைப்புகள் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போது எப்படித் தோன்றுகின்றன?

எழுதும் போது தானாக வந்து திரையில் தோன்றி ஹலோ, நான் வந்துவிட்டேன், என்று அறிவிக்கும்.

அப்புறம் ‘Mother Mary Comes to Me’. இதுவும் அப்படித்தான் தோன்றியதா? அப்போது ‘பீட்டில்ஸ்’ கேட்டுக்கொண்டிருந்தீர்களா?

ஆம், உண்மைதான். இது எப்படித் தோன்றியது என்று யாரும் என்னிடம் கேட்பதேயில்லை. இது ஒரு rock n roll புத்தகம்தான். ‘Let It Be’ பாடலிலிருந்து எடுத்த வரி. பால் மெக்கார்ட்னியின் தாயின் பெயரும் மேரி. “Mary Roy, who never said Let It Be” என்று நூல் அர்ப்பணிப்பில் குறிப்பிட்டுள்ளேன். மெக்கார்ட்னியின் சிறு வயதிலேயே அவர் காலமாகிவிட்டார். என்னுடைய அம்மா அவருடைய அம்மா கிடையாதுதான் (சிரிக்கிறார்). எனது நூலை எழுதத் தொடங்கியவுடனே அந்தப் பாடல் வந்து பட்டாம்பூச்சியைப் போல என் மணிக்கட்டின்மீது உட்கார்ந்துகொண்டது.

அந்த நூலை ஏன் அவரது மரணத்திற்குப் பின் எழுதினீர்கள்?

அவர் மறைவு என்னைப் பாதித்த விதம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஏன் அந்தளவுக்கு நொறுங்கிப்போனேன் என்று புரியாமல் அவமானமாக உணர்ந்தேன். நான் ஒன்றும் சிறுமியல்ல, அவரும் இளவயதினர் அல்ல. மேலும் அவருக்கு ஆஸ்துமா இருந்ததால் எனது மூன்று வயதிலிருந்து இப்போதுவரை அவரிடம் மனம் திறந்து வெகுநேரத்துக்குப் பேசிக்கொண்டிருக்க முடிந்ததில்லை. எல்லாவற்றையும் உள்ளே வைத்துக் கொண்டிருந்தேன். அவரை எதிர்த்து எதுவும் பேசியதில்லை. அந்த உணர்ச்சிரீதியான மிரட்டலைத் தாண்டி வந்தபின் அவரை ஒருபோதும் வென்றெடுக்க நான் முயன்றதில்லை; அவர் ராணியாகவே இவ்வுலகைவிட்டு வெளியேற வேண்டும் என விரும்பினேன். அப்படியே வெளியேறினார். அந்த அசாதாரணமான பெண்மணியைப் பற்றி உண்மையான நூலை நேர்மையான விதத்தில் எழுத விரும்பினேன்.

மதத்துடன் உங்களுக்கு உறவு எத்தகையது? நீங்கள் எப்போதுமே தனித்து விடப்பட்டிருந்ததால் சாதியைப் பற்றி யாரும் உங்களுக்குச் சொல்லித் தரவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். மதத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் நாத்திகரா?

எந்தவொரு வட்டமும் முழுமையடைய அனுமதிக்காத ஆள் நான். ப்ரூஸ்ட் சொன்னதைப்போல எல்லாவற்றின் சாத்தியத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எல்லாமே எனக்குத் தெரியும் என்பதில் நம்பிக்கை இல்லை, ஆனால் இறைநூல்களில் நம்பிக்கை கிடையாது; ஆனால் அதிசயங்கள், மாயங்கள், அற்புதங்கள், அழகான விஷயங்கள், நம்மெல்லோரையும் படைத்ததோடு எங்கெங்கும் அழகுகளை உருவாக்கியிருப்பவர் யாரோ, அவர் மீது நம்பிக்கை உண்டு. அவையெல்லாவற்றுக்குமான அறிவியல்ரீதியான விளக்கங்கள் மீது ஆர்வம் இல்லை.

நீங்கள் எழுதத் தொடங்கியதிலிருந்தே பற்பல திசைகளிலிருந்தும் அரசியல் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை துணிவோடு எதிர்கொண்டு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

இந்தச் சூழலில் தாக்குதல்கள் இல்லாவிட்டால்தான் அதிசயம். பேராசிரியர் சாய் பாபா, உமர் காலித் போன்ற என் நண்பர்கள் பலரும் சிறையில் அடைபட்டிருக்கிறார்கள். நான் எழுத்தாளராகப் புகழ்பெற்றிருப்பதாலும், உலகெங்கும் உள்ள என் வாசகர்கள் எனக்குப் பாதுகாப்பாக இருப்பதாலும் நான் பிழைத்திருக்கிறேன். மௌனம் எனது தேர்வு அல்ல. நான் தைரியமாக இருப்பதாலோ, என்னால் உலகத்தை மாற்றமுடியும் என்பதாலோ நான் எழுதவில்லை. நான் நினைப்பதை என்னால் எழுதாவிட்டால், நான் எழுதுவதை நிறுத்திவிட்டு யோகா அல்லது வேறு எதையாவது கற்றுக் கொடுக்கச் செல்லவேண்டும். எழுத்தாளராக எனது ‘சுயத்தின்’ நேர்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே எழுதுகிறேன்.

கொச்சியில் உங்கள் நூலின் முதல் வெளியீடு இதுதானா?

ஆம். தில்லியில் சில சிக்கல்கள். அதனால் அங்கு சின்னதாக ஒரு நிகழ்ச்சி நடந்தது, பொது நிகழ்ச்சியல்ல. சிறிய நிகழ்ச்சி. பொது நிகழ்ச்சியில் நூல் வெளியீடு நடப்பது கொச்சியில்தான்.

உங்கள் நூல்களைப் படித்த உறவினர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?

எனக்கு உறவினர்களோடு நெருக்கம் எப்போதும் இருந்ததில்லை. நான் குடும்ப மையமானவர் அல்ல. 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினேன். வெளியாட்களோடு எப்படிப் பழகுவேனோ அதைப் போலத்தான் உறவினர்களோடும். என்னைப் பொறுத்தவரை உறவுமுறைகள் எதுவும் கிடையாது. என்னுடைய பிரியத்துக்குரிய அண்ணனைத் தவிர வேறு யாரோடும் எனக்குத் தொடர்பில்லை.

இந்திய அரசியல் சூழலைப் பற்றி எப்போதுமே பேசிவருபவர் நீங்கள். தற்போதைய நிலைமை நம்பிக்கையளிப்பதாக இருக்கிறதா? இப்போது மீண்டும் உங்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நூல் 21-ம் நூற்றாண்டின் அதிபயங்கர இனஅழிப்பு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது என்பதை உணர்கிறேன். காஸாவைப் பற்றிச் சொல்கிறேன். இதுவரை நடைபெற்ற இன அழிப்புகளிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது. நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பாலஸ்தீனியக் குழந்தைகள் ஒரு கிளாஸ் தண்ணீருக்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கும் படங்கள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் கேரளாவிலாவது மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதுபோல எதுவுமே நடக்கவில்லை. இன்று மோடியின் அரசாங்கம் நம்மை இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ட்ரம்ப்பின் வரிவிதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கினால் நமது நிலைமை பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் என்று புரிகிறது. ஏராளமான வேலைகள் பறிபோகும். உலகம் முழுவதும் கடுமையான சூழலில்தான் சிக்கியிருக்கிறது.

உலகெங்கும் கடும்துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் குரலற்ற மக்களுக்கு ஆதரவாகப் பேசிவருகிறீர்கள். இவை குறித்த புரிதல் இருந்தாலும் நம்மால் செய்ய முடிவது வெறும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மட்டும்தான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குரலற்றவர்கள் என்று யாருமில்லை; திட்டமிட்டு வாயடைக்கப்பட்டவர்கள் உண்டு. சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் செவிகளை மூடிக்கொள்பவர்களும் உண்டு. உலகளவில் ஜனநாயகத்துக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. உலகெங்கும் மக்கள் கருத்துக்கணிப்புகளைக் கவனித்துப் பார்த்தால் பொதுமக்கள் பாலஸ்தீனத்தின் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராகவே இருப்பது தெரிகிறது. சில நாடுகளில் பொதுமக்கள் தமது அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரசுகளுக்கு எதிராக. நேரடிப் போராட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய போராட்டங்கள் பொது ஊடகங்களின் நிலைப்பாட்டிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. இப்போது என்ன நடக்கப் போகிறதென்ன்று எனக்குத் தெரியவில்லை. விசித்திரமான விஷயம் என்னவென்றால் ஜனநாயக நாடுகளின் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் இனப்படுகொலை, ஒடுக்குமுறை, புரிந்துகொண்டிருக்கும் இனவெறி இஸ்ரேலின் பக்கம் நிற்பது. ஒரு காலத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

இது எதிர்பாராததா?

இல்லை, மோடியும் நேதன்யாஹூவும் பெகாஸஸ் உளவு மென்பொருளை வாங்கிக்கொண்டும் ஆயுதங்களைப் பரிமாறிக்கொண்டும் குலாவி வந்திருக்கின்றனர். நான் முன்பே சொன்னதைப்போல அமெரிக்கா தனது செல்வச் செழிப்பாலும், இந்தியா அதன் வறுமையாலும் இஸ்ரேலை ஆதரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியா ஆயிரக்கணக்கான ஏழை மக்களை அங்கே வேலைக்கு அனுப்பவேண்டியிருப்பதால், பாலஸ்தீனத்தைக் கைவிட்டிருக்கிறது. இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் இந்துத்துவ வலதுசாரிகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதை எதிர்த்துப் பேசுபவர்களை அடித்து நொறுக்குகிறார்கள். கேரளாவில் பல கிறிஸ்துவர்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்குத் தமக்கென்று சில காரணங்களை வைத்திருக்கிறார்கள். வடகிழக்கிலும் இதே நிலைதான். இது வெட்கக்கேடானது. நமது நாடு அதன் பெருமை, மதிப்பு, தார்மீக நிலைப்பாடு அனைத்தையும் உலக அரங்கில் இப்போது இழந்து நிற்கிறது.

சரி, இப்போது உங்கள் புத்தகங்களுக்கு வருவோம், ‘பெருமகிழ்வின் பேரவை’ யில் இடம்பெற்றிருக்கும் தில்லி, உங்கள் தில்லியா? அந்த நகரத்தை அவ்வளவு நேசிக்கிறீர்களா?

ஆம், என்னுடைய தில்லி; தில்லியையும் தாண்டி காஷ்மீரும் இன்னும் பல இடங்களும் உண்டு. நான் எழுதியுள்ள மற்ற நூல்களைவிட இது மிகவும் சிரமத்தையளித்த புத்தகம். நான் குழந்தை உணவை மட்டுமே நான் தயாரிக்க வேண்டுமென்பதில்லை. உலகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடியிருக்கும் அந்தப் பேரவை, அஞ்சுமின் மயானம், விருந்தினர் விடுதி…. அது ஒரு புரட்சி. இந்நாவலில் நான் காட்ட விரும்பியது மாற்று வழி உண்மையிலேயே இருக்கிறது என்பதே; அதனைத் தேடிக் கண்டைய வேண்டும். ‘அன்னை மேரி’ உறவுகளை வேறு முறையில் கையாள்வது பற்றிச் சொல்கிறது. பழங்காலத்தில் மரபு வழிக்குப் பழகியிருந்ததைப் போலவோ அல்லது நவீன காலத்தில் ‘தெரபி’யை நாடுவதைப் போலவோ எல்லோரும் ஒரே விதத்தில் கையாளவேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமானதல்லாத ஒரு மொழிக்குள் தங்களைச் சுற்றிப் பொதிந்துகொண்டிருக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மிஸஸ் ராய் — கேரளாவில் ஓர் நெடிதுயர்ந்த ஆளுமை. இங்கே எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர். இந்த இடத்திலேயே உங்கள் நூலை வெளியிடுகிறீர்கள். இது ஒரு முழுச் சுற்றை முடித்திருக்கும் தருணம் அல்லவா?

அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் அடையாளம். மக்கள் தங்கள் அறிவுத்திறனை நம்புகிறார்கள் என்பதற்கான அடையாளமே அவர்கள் வெற்றுப் புகழுரைகளை விரும்புவதில்லை என்பதுதான். நீங்கள் யாரையும் நேசிக்கலாம், ஆனால் அவர்கள் சிக்கலான மனிதர்களாக இருப்பார்கள். இந்தப் புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பேன். ஏழு வருடப் பிரிவுக்குப் பிறகு அவரிடம் வருகிறேன். அவரும் நானும் ஒரு வயதான சிரியன் கிறிஸ்துவப் பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறோம். அம்மா அவரிடம் அந்த வழக்கைப் பற்றிப் பேசுகிறார். பேசி முடித்ததும் அந்தப் பெண்மணி, “மிஸஸ் ராய், எங்களுக்கு இருக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லும் உரிமைகளை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? நம்முடைய சமுதாயத்தை ஏன் அழிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். எனக்கு அவரிடம் ‘கொஞ்சம் இருங்கள், இவர் போராடிக்கொண்டிருப்பது சொத்துரிமையில் பெண்களுக்குச் சம உரிமைக்காக மட்டுமல்ல. அவர் போராடிக்கொண்டிருப்பது பெண்கள் சம்பிரதாயத் தாய்மார்களாக இருப்பதிலிருந்தும், கீழ்படிந்த பெண்களாக இருப்பதிலிருந்தும், முக்கியமாக உங்களைப் போல ஒரு சலிப்பூட்டும் பெண்மணியாக வாழ்க்கையைக் கழிப்பதிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக’ என்று சொல்லவேண்டும் போலிருந்தது. எனவே நாம் சற்று மோசமானவர்களாக இருப்பதற்கும் இடம் இருக்கவேண்டும். பரவாயில்லை. அந்த இடத்தை அவருக்கு அளிக்க விரும்பினேன்.

உங்கள் அடுத்த திட்டம்?

திட்டங்கள் போட்டுக்கொண்டு நான் வேலை செய்வதில்லை. யாரோ ஒருவர் முன்பு என்னிடம் சொன்னார், உன்னை அவர்கள் எப்போதோ கொன்றுவிட்டிருப்பதைப் போல எழுதிக்கொண்டிருக்கிறாய், என்று. ஒரு வேலையை முடித்திருக்கிறேன், இப்போது வேறு எதுவும் இல்லை. உங்களை நீங்களே மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டும். நான் என்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ளவேண்டும். ஒரு விஷயத்தைச் செய்து முடித்தபின் சில காலத்துக்கு வெறுமையாக இருக்க வேண்டும்.

மனதளவில் நீங்கள் தேசத் துரோகிதானா?

ஆம். எப்போதுமே.


 

ஜி. குப்புசாமி
ஜி. குப்புசாமி

ஆரணியில் பிறந்த ஜி.குப்புசாமி ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு, ‘பனி’, ‘இஸ்தான்புல்’, ‘வெண்ணிறக் கோட்டை ஆகிய துருக்கி நாவல்களை ஆங்கில மூலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ளார். மேலும் ஜான் பான்வில்லின் (The sea, John Banvill) ‘கடல்’ மற்றும் அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (God of small things, Arundati Roy) இரு மொழியாக்கங்களும் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தன. எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் விருது, டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் விருது, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Share :

3 responses to “”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்”

  1. Selvam kumar
    March 31, 2026

    மன உணர்வை புனைவில்லாமல் ஆழமாகவும் விரிவாகவும் விபரிக்கும் தன்மை சிறப்பானது,,,மேலும் சிறந்த சிந்தனையாளரும் கூட,,வாழ்த்துகள்,,

    Reply
  2. விஜய்
    March 31, 2026

    தமிழில் நேர்காணல் வந்தது மிகவும் மகிழ்ச்சி. படித்ததிலும்.

    நேர்காணலில் இருந்து ஒரு தொடர்….
    நான் வெறுமனே வாசிப்பதும் எழுதுவதுமான எழுத்தாளர் அல்ல;நான் எழுதுவதில் வாழ வேண்டும்🌹.

    Reply
  3. முனைவர். தயாநிதி
    April 1, 2026

    அருமையான கட்டுரை. சிந்திக்கத் தூண்டும் எழுத்து. ஆகச் சிறந்த மொழி பெயர்ப்பு.
    அருந்ததி ராய் அவர்களுக்கும், குப்புசாமி அவர்களுக்கும், வழங்கிய உங்களுக்கும் அன்பும் நன்றியும். வாழ்க…!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top