1.காதல் உண்ணி – சார்லஸ் சிமிக்
வின்செண்ட் வான்கோவின் ‘இரவு’ ஓவிய வரிசையில் ஒன்று அவர் மனநோய் விடுதிச்சாளரத்தின் வழியே கண்ட அந்தப் பின்னிரவுக்காட்சி. இரவு உருகி நதியெனச் சுழித்துத் துடிதுடிக்கும் ஆகாயத்தின் நிலக்காட்சி. ஒளி துகளாக அன்றி அலையாகக் காட்சியளித்த இரவு. வான் தொட்டு நிற்கும் சைப்ரஸ் மரம். நட்சத்திரங்களின் சுழல் நடனத்தின் அருகே பிறை நிலவு. வான்கோ அவ்வோவியத்தை வரைந்த நாட்காட்டிக் கணக்கின்படி அது முழுநிலவுக்காலம் என்று கண்டுபிடித்துச் சொன்னார்கள். அப்படியெனில் வான்கோ முழு நிலவை ஏன் உடைத்து வரைந்தார். அந்த ஹீனத்தில் தனது ரோகத்தின் பிம்பத்தைக் கண்டாரா, முழுமையின்மையின் ஏக்கத்தை, ஆழ்காயத்தின் வேதனையை. பிரசித்தி பெற்ற அந்த ‘நட்சத்திர இரவு’ ஓவியங்கள் வான்கோவின் காலத்தில் கவனம் பெற்றதல்ல. அவரே அத்தகைய ஓவியர்தானே. அவை வரையப்பட்ட காலத்தில் இன்னும் மின்சாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இரவில் மனிதரைக் கடத்திக் கற்பழிக்கத்தக்கக் கருவிகள் உருவாக்கப்படவில்லை. அன்று வழக்கில் இருந்தவை கேஸ்ட்லைட் விளக்குகள்தாம். உண்மையிலேயே அவை நட்சத்திர இரவுகள். இப்போது போல இல்லை அன்று எங்கிருந்தும் ஒருவர் நட்சத்திர இரவில் வாழலாம். எனவே அவை மிகச் சாதாரண ஒன்றாக இருந்திருக்கலாம், போகப்போகத்தான் நட்சத்திர இரவு புலப்படத் தொடங்கியுள்ளது. இன்று நட்சத்திரங்களைக் காண ஒருவர் வீட்டில் இருந்து வெகு தூரம் சென்றாக வேண்டும், மேலும் மேலும் இருட்டிற்குள்.
சார்லஸ் சிமிக் இரவிருட்டின் கவிஞர். அவரது சில கவிதைத் தொகுதித் தலைப்புகள் : தூக்கமின்மை ஹோட்டல், அவை இரவில் மேய்பவை, இருட்டில் கிறுக்கியவை, ரா உலா, இரவு 3 மணிக்கு ஒலித்த குரல். அவர் எழுதிய இரவுக் கவிதைகளைச் சேகரித்தால் ஒரு மொத்தத் தொகுதி அளவிற்கு வரும் என நினைக்கிறேன். அவரது கவிதை சுற்றம், ஆந்தைகள், எலிகள், கரப்பான்கள் என இரவாடிகளின் நடமாட்டத்தால் ஆனது. இருக்கும் வெளிச்சமும் நோயாளிகளின் இறுதி யாமங்களுக்குத் துணையிருப்பதைப் போன்ற, இருட்டோடு தனியே போராடும் நொய்ந்த விளக்குகளின் வெளிச்சம். உதாரணத்திற்கு, ‘துருவப்பகுதி இரவில் பனியில் மாட்டிக்கொண்ட ஒரு பெரும் கப்பலின் மேற்தளத்தில் எரிந்துகொண்டிருக்கும் சில விளக்குகள்’, ‘இன்னும் விழித்திருக்கும் சலவைக்கடையின் விளக்கு’,’தாமதமாக இரவுநடை செல்லும் நாளில் கண்படும் மூடப்போகும் கறிக்கடையில் எரியும் விளக்கு’. கவிஞராக, சிமிக்கும் இருட்டில் பார்வை அதிகரிக்கும் திறனுடைய ஒருவரே. ஷங்கர்ராமசுப்ரமணியனின் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் இந்நூலில் இரவு எண்ணங்கள் என்றொரு கவிதை உள்ளது. சிமிக்கின் கணிசமான கவிதைகளை நாம் அப்படி அழைக்கலாம்.
இரவு எண்ணங்கள்
ஒளி அவற்றை அச்சமூட்டுகிறது
இருட்டும் கூட.
அவை நமது கட்டிலை நோக்கி
ஊர்ந்துவருகின்றன
பேசுவதற்கு அல்ல,
கிசுகிசுக்க
பிணவறையில்
ஒருவர் செய்வதைப் போன்று.
இரண்டு விசைகள் சார்லஸ் சிமிக் கவிதைகளின் வானிலையைத் தீர்மானிக்கின்றன. ஒன்று வரலாற்று நினைவு, மற்றது துணையற்ற நவீன மனிதனின் பாதுகாப்பற்ற நிலை. யுகோஸ்லாவியாவில் பிறந்த சிமிக் தனது பிராயத்தை இரண்டாம் உலகப்போரின் அவலங்களிலும் போருக்குப் பிந்தய இடப்பெயர்ச்சி அலைக்கழிப்புகளிலும் கழித்தார். வரலாற்றுக்காரணிகளால் அல்லற்பட்ட குழந்தைப்பருவம் அவரது. இக்கவிதைகளில் அது ஒரு கொடுநிழலாகவே பின் தொடர்வதைக் காணலாம். போரின் வன்முறையும் அடக்குமுறையின் உத்திகளும் அவரது பால்ய நினைவின் பகுதியானவை. போர்ச்சூழலை ஒரு வளர்ந்த மனிதன் எதிர்கொள்வதைப் போன்ற அணுகுமுறை அல்ல சிமிக்கிடம் இருப்பது. அவர் தனது குழந்தைமையின் சித்திரக்கதைப் புத்தகத்தில் இருந்தபடியே அதை அவர் எதிர்கொள்கிறார். எனவே அவை பிள்ளை நினைவில் இருந்து வரும் குறளிகள் போல வெளி வருகின்றன.
‘..அம்மாவின் கையிலுள்ள
நீள் ஊசிகள்
வேகவேகமாகச் சிலுவைகளை
உண்டாக்கிக் கொண்டிருந்தன
என் தலைக்குள்ளிருந்ததைப் போன்றே
அந்தச் சிலுவைகள்
கருப்பாய் இருந்தன
நான் புத்தகத்தில் திருப்பிய பக்கங்கள்
சிறகுகளைப் போல படபடத்தன
“ஆன்மா ஒரு பறவை”
அப்பா ஒருமுறை சொன்னர்.
எனது புத்தகம் முழுக்கத் தீவிர போர்ச் சித்திரங்கள்:
எனது இதயம்
குத்திக் கிழிக்கப்பட்டு
கிளைகளில்
ரத்தம் வழிய
ஈட்டிகள், வாள்கள்
ஒரு குளிர்காலத்து வனத்தை
அங்கே உண்டாக்கியிருந்தன..’
மறைவில் எங்கோ பதுங்கியிருக்கும் அபாயம், நிலுவையிலுள்ள தண்டனைகள், விகார ஜீவிதங்கள், மரணத்தின் பரிச்சய நிழல், அஞ்சி நடுங்கும் இலைகள் என இரவுப்பறவைகளின் விருட்டென்ற விழிக்கோள அசைவுகளால் நிரம்பியது இக்கவியுலகு. ஒரு கவிதையில்,
இரவு வந்தவுடன்
ஆந்தைகளால் தலைப்புச் செய்திகளை
வாசிக்க முடியும்.
ஆந்தைகளின் அலறல்
படுக்கையில் உள்ள சுண்டெலிகளை
நடுங்க வைக்கின்றன.
என்று எழுதுகிறார். நகைமுரண் தொழிற்படாத கவிதைகளை இவரது உலகில் எண்ணிவிடலாம். நவீனத்துவ இயல்பின் இன்றியமையாத பண்பாகக் கருதப்படும் அது சிமிக் எனும் ஆளுமையின் ஓர் அடிப்படைக்கூறாகவே அமையப்பெற்றது போல. தன்னுள் எழும் உணர்ச்சிகரத்தைத் தானே நம்பாத கவிஞனின் உணர்திறன் அது. மிகத்துயரமான விஷயங்களை எழுதும்போதும் மிகத்தீவிர உணர்ச்சிகளை மையமிடும் போதும் கூட இக்கவிதைகள் தன்னைத் திறந்த மேனியாய் வெளிப்படுத்துவதில்லை. சாம்ராஜ்யங்கள் கவிதையில் வரும் பாட்டி போல ஏதோ ஒருகட்டத்தில் அவை சுதாரித்துக்கொள்கின்றன. சிமிக்கின் கவிதையில் நாம் எந்த இடத்தில் திகிலடையப் போகிறோம் அது எந்த இடத்தில் சிரிப்பாக மாறும் என்ற நிச்சயம் இல்லை, நகைச்சுவைத் திகில் படைப்புகளைப் போல. கூடவே பெரிய தயக்கங்கள் இன்றிச் சிரிப்பை மட்டும் உத்தேசிக்கும் கவிதைகளையும் அவர் எழுதுகிறார்.
படுக்கையறை இசை
எங்கள் காதல் புதியது
ஆனால்
படுக்கையின் ஸ்பிரிங்குகளோ
பழையது
எங்களுக்குப் பிடித்த பாடல்களை
இசைத்துக்கொண்டிருந்தோம்
கீழ்த் தளத்தில் உள்ளவர்கள்
முள்கரண்டிகள் காற்றில் உறைய
சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்
“ஷேக் இட் பேபி”
“ஸ்லோ பூகி”
“ஷௌட் சிஸ்டர் ஷௌட்”
இதற்கு மேல் பொறுப்பதற்கில்லை!
அவர்கள் காவலரை அழைத்தனர்
எங்கள் வீட்டின் கதவை உடைத்து
உள்ளே வந்த அந்த
நீலச் சீருடையினரிடம் கேட்டோம்:
பீர் கொண்டுவந்திருக்கிறீர்களா?
இந்த நகைமுரண் இயல்பைப் பேணும் பண்பு அவரை அமெரிக்கக் கவிதைச் சூழலுக்குள் இயல்பான ஒருவராக இருக்கச் செய்கிறது. மற்றபடி அவரது கற்பனையும் கருப்பொருள் தொடர்பான விஷயங்களும் பெரிதும் அவரை ஸ்லாவிய மொழிக் கவிதைப் பரப்பிற்குள் உள்ள ஒருவராகவே எண்ணச் செய்வது. அதிலும் சிமிக் மொழிபெயர்த்து வெளியான நிறைய செர்பிய கவிஞர்களின் நூல்கள் கவனிப்புக்குள்ளானவை, முக்கியமானவை. இப்படியாக நகைமுரண் அம்சமும் ஐரோப்பியக் கவிதை மரபின் பரந்துபட்ட பார்வையும் ஒருங்கிணையப் பெற்ற இருவேறு உலகில் வாழும் ஒருவரின் கவிதை உலகிது எனலாம். அவரே ஒரு கவிதையில் கூறுகிறார்:
“நான் ஜிப்சிகளால் திருடப்பட்டேன். எனது பெற்றோர்கள் மீண்டும் என்னைத் திருடி மீட்டனர். ஜிப்சிகள் என்னை மீண்டும் திருடிக்கொண்டு சென்றனர். இப்படியாகச் சில காலம் கழிந்தது.”
கிழக்கு ஐரோப்பிய நாட்டார் கற்பனையுடன் அமெரிக்கப் பாணியிலான சர்ரியலிச ஆச்சர்யங்கள் இணைந்து இக்கவிதைகளில் சிலநேரம் கோரமான ‘விசித்திரத்தன்மையை’ ஏற்படுத்துகின்றன. இவை பாட்டிகள் கூறும் இருண்ட தேவதைக் கதைகளின் பாத்திர மாதிரிகளைக் கையாள்கின்றன அல்லது அதை ஒத்த ஆட்களை சிகாகோ தெருக்களில் அடையாளம் காண்கின்றன. அமெரிக்காவின் முதிர் முதலாளித்துவ நிலப்பரப்பை சிமிக், அச்சுறுத்தும் பொம்மைகள், இருண்ட வீதிகள், கைவிடப்பட்ட கடைகள், கருப்புச் சிலுவைகள் என நோயர் (Noir) படங்களின் சூழமைவும் ஒளிநிழல்களுமான, குறைவான ஆள் நடமாட்டம் கொண்ட காணுலகமாக மாற்றிக்காட்டுகிறார். அதுவே அவரது நினைவிற்கும் வரலாற்றுக் கற்பனைக்கும் இசைவானதாக இருக்கிறது. அவரது புகழ்பெற்ற கவிதை இது:
கசாப்புக்கடை
தாமதமாக
இரவுநடை போகும்போது
சில வேளைகளில்
மூடப்பட்ட கசாப்புக்கடையின்
முன்னால் வந்து நிற்கிறேன்.
கைதி தனது
சுரங்கவழியைத்
தோண்டும்போதுள்ள ஒளியைப் போல்
கசாப்புக்கடையில்
ஒரே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.
அங்கியொன்று
கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
பெருங்கண்டங்கள் மகாநதிகள் சமுத்திரங்களின்
ரத்தம் அப்பிய வரைபடம்
முடமுற்றோர் அசடுகளைக்
குணமூட்டுவதற்காகக் கொண்டுவரும்
இருள்மண்டிய ஒரு தேவாலயத்து
சொரூபங்களைப் போல
கத்திகள் அங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன
எலும்புகள் நொறுக்கப்படும்
மரத்தண்டு அங்கே வீற்றிருக்கிறது
படுகை வரை உலர்ந்துவிட்ட நதியென
சுத்தமாய்ச் சுரண்டப்பட்ட மேல்புறம்
அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன்
அங்கே இரவின் ஆழத்திலிருந்து வரும்
ஒரு குரல்
எனக்குக் கேட்கிறது.
கசாப்புக்கடையில் அன்றைய வியாபாரம் முடிந்து அடைக்கப்படவிருக்கும் நிலைதான் கவிதைக்கு வித்தாக அமைந்தது(கடை திறந்திருந்தால் கவிதை இல்லை). இங்கு உடலோ குருதியோ இல்லாதிருப்பதே மின்னூட்டத்தை வழங்குவது. உரிந்த உடலும் ரத்தப்பெருக்கும் மரித்தவற்றின் ஆவிகள் போல் வாசகமனத்தில் தாமே எழும்புகின்றன. பரிதவிப்பின் குரல்களும், எலும்புகள் உடைபடும் ஓசையும் கேட்கின்றன. மனிதர்கள் விலங்குகளைப் போல் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் வரைபடத்தை அங்கியில் வரைந்து காட்டுகிறது ரத்தக்கறை. வெட்டுங்கருவிகளின் தெய்வீக மின்னல், கருத்தியல்கள் கோரும் பலியாடுகளை இழுத்துவருகிறது. விவரிப்பின் உணர்ச்சியின்மையும் தொல்படிம வெளியும் மனித வன்முறையின் அநாதித்தன்மையினை உணர்த்துவதாக உள்ளது. “படுகை வரை உலர்ந்துவிட்ட நதியெனச் சுத்தமாய்ச் சுரண்டப்பட்ட மேல்புறம் அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன்” எனும்போது எல்லாக் கொடூரங்களினூடும் தப்பித்த ஒருவரின் குற்றவுணர்ச்சியும் அதில் மறைந்து தொனிக்கிறது. ஆனால் கவிதையின் முடிவில், அதே வறண்ட படுகையின் இரவாழத்தில் இருந்து கவிஞருக்கான அழைப்பு வருகிறது. அவருக்கு மட்டும் கேட்கும் அக்குரல் தன்னை ஒலிபரப்பச் சொல்கிறது. அது அவரது படைப்பூக்கத்தினைத் தூண்டும் அகவலாய்த் தோன்றுகிறது. சுவாரஸ்யமாக அங்கே எரிந்துகொண்டிருக்கும் ஒற்றை விளக்கு ஏன் கவிஞருக்குத் தப்பிக்க வழி தேடும் கைதியின் முயற்சியை நினைவுப்படுத்த வேண்டும்?நேர்மாறாக மற்றொரு கவிதையில் நாதியற்ற ஒரு வாழ்க்கை மதிப்பளிக்க வேண்டியதாகிறது, மனித ஜீவிதத்தின் மேல் ஒரு தியானம் ஆகிறது.
காற்று ஓய்ந்துவிட்டது
எனது குட்டிப்படகே
பத்திரமாய் இரு
பார்வைக்கு எட்டும் தூரத்தில்
கரை இல்லை
2. மினாரெட் புதைக்கப்பட்ட நாடு-ஆஹா ஷாகித் அலி
தார்கோவ்ஸ்கியின் சொலாரிஸ் திரைப்படத்தின் இறுதிக்காட்சி : கடற்பாசி இலைகளின் நீர்நடனம். பாஹின் ஆர்கன் இசைக்கீதம் மின்னணு ஒலியுடன் பின்னணியில் ஒலிக்க விண்வெளி மையத்தில் இருந்து படத்தின் நாயகன் பூமிக்குத் திரும்புகிறான். தனது வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள குளக்கரையையும் மரங்களையும் தார்கோவ்ஸ்கியின் கண்களுடன் பார்த்தபடி, தனது தந்தையின் இல்லத்துக்கு மீள்கிறான். மனம் திருந்திய மகனின் வீடு திரும்பல். கேமிரா மெல்ல பின்னகர்ந்து மேலே உயர்கிறது. அது அவனது உண்மையான வீடு அல்ல என அறியவருகிறோம். சொல்லப்போனால் அவ்விடம் பூமியே அல்ல சொலாரிஸ் கிரகத்தின் சித்தக்கடல் உருவாக்கும் எண்ணத்தீவு அது. அங்குதான் அவன் தனது தந்தையைச் சந்திக்கிறான். நிஜத்தில் அவன் பூமிக்குத் திரும்பவில்லை, விண்வெளி மையத்தில்தான் உள்ளான். ஆனாலும் வீடு வேண்டியுள்ளது அவனுக்கு.
அகிரா குரஸோவா சொலாரிஸ் பற்றிக் கூறுகையில் அந்தப்படம் பூமிக்குத் திரும்பவேண்டும் என்ற கூரிய ஏக்கத்தை, பூமிக்கான ஒருவகை ஹோம்சிக்னெஸ் உணர்வை உண்டாக்கியதாகக் குறிப்பிட்டார். நவீன அறிவியல் லட்சியவாதத்தின் தலைகீழாக்கம். மானுடத்தின் விண்ணில் பாயும் ஆசைக்கு மாறாக, கீழ்நோக்கிப் பூமிக்கு இறங்குவதற்கான ஏக்கம். பக்திக்கு நேர் எதிரான திசையில் இயங்கும் விழைவு.
சென்ற நூற்றாண்டின் உலக இலக்கியத்தில் புது வகைமையாய் உருவாகி இன்றும் வலுவான சக்தியுடன் செயல்பட்டுவரும் இலக்கியமுறைகளில் ஒன்று புலம்பெயர் எழுத்து. போர், அரசியல் போன்ற புறக்காரணிகள் முதற்கொண்டு பல்வேறு தனிப்பட்ட காரணங்களின் பொருட்டான இடப்பெயர்ச்சி வாயிலாக எல்லா தேசங்களிலும் புலப்பெயர்வு இலக்கியம் இன்று படைக்கப்பட்டு வருகிறது. அதனுடைய மைய உணர்வு என்று வீட்டிற்கான இந்த ஏக்கத்தைக் கூறலாம். ஏனெனில் இன்று வீடின்மை என்பது நவீன உலகில் பெருவாரியான மக்களால் உணரப்படும் ஒரு கனத்த எதார்த்தம். கல்வி மற்றும் பணி நிமித்தம் அமெரிக்காவில் குடியேறிய காஷ்மீரிக் கவிஞர் ஆஹா ஷாகித் அலியின் கவிதைகள் எனக்குத் தெரிந்து முதன்முறையாகத் தமிழில் நூலாக வருகின்றன, ஷங்கரின் மொழிபெயர்ப்பு வாயிலாக. இக்கவிதைகள் அனைத்திலும் இக்கூரிய ஏக்கத்தினை, ஒருவகை ஹோம்சிக்னெஸ் உணர்வையே நாம் பிரதானமாக உணர்கிறோம்.
நான் வீட்டிலிருந்து பதின்மூன்று ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருக்கிறேன்
நான் இரவிலிருந்து நிலவை சீப்பால் சீவி எடுக்கிறேன்
எனது பெற்றோர் குழந்தைகளைப் போல உறங்கிக்கொண்டிருக்கின்றனர்
“எனது தந்தை இறந்துவிட்டார்”விதுர் எழுதுகிறான்
“அத்துடன் எனது பெற்றோரின் வீட்டுக்கு அடுத்த வீடு எரிக்கப்பட்டுவிட்டது”
நான் கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறேன்
விழித்தெழுந்தால்
எனது உடல் நீராக இருக்கும் அந்தத் தீயைப் பிரதிபலித்தபடி.
எதனால் ஓர் உடல் தீயைப் பிரதிபலிக்கும் நீராகிறது. இது வீட்டிற்கான ஏக்கம் மட்டுமில்லை. எரியும் வீட்டிற்கான ஏக்கம். சார்லஸ் சிமிக் போலவே ஆஹா ஷாகித் அலியின் கவிதை உலகமும் வரலாற்றின் துரதிர்ஷட ரேகைகள் படிந்தது. 1990களில் காஷ்மீரில் ஏற்பட்ட ஆயுதக் கிளர்ச்சி, அரசு எந்திரத்தின் ஒடுக்குமுறை, அரசுக்கெதிரான போராட்டங்கள், அரசியல் வன்முறை, தீவிரவாதம் என ஓர் அசாதாரணச் சூழல் மேலெழுந்து வருகையில் எழுதப்பட்டவை இந்நூலில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள். அக்காலத்திய எதார்த்தத்தை ஷாகித் இப்படி ஒரு வரியில் தீட்டுகிறார்:
“ஒவ்வொருவரும் அவரவரது முகவரியைத் தங்கள் சட்டைப்பையில் வைத்திருக்கின்றனர், தங்களது சடலமாவது வீடு வந்து சேரட்டுமென”
ஆஹா ஷாகித் அலி தன்னை ஒரு அரசியல் கவிஞராக முன்னிறுத்தியவரல்ல, புலம்பெயர் எழுத்தாகவும் தனதை விளக்கிக்கொண்டவரில்லை. தான் ஒரு மகிழ்ச்சியான மனிதராகவும் அமெரிக்கராக உணர்வதாகவுமே கூறினார் என நினைக்கிறேன். ஆயினும் வரலாற்றின் தறிகெட்ட ஓட்டத்தினால் விளைந்த தனது நிலத்தின் துயரப்பின்னணியில் எழுதப்பட்ட இக்கவிதைகள் அவருக்கு உலக அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தன.
இத்தகைய சூழலில் ஞாபகமும் நினைவேக்கமும் கூட மேலதிக மதிப்பைப் பெறுவதாகின்றன. அவை நெருங்கமுடியாத தாயகத்தை நெருங்குவதற்கான ஒரே வழியாகிறது. தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்றான காஷ்மீரில் இருந்து வரும் தபால் அட்டை கவிதையில் “இதுதான் எனது தாயகம். எனது தாயகத்துடன் உணரவே முடியாத அண்மை இது” என்கிறார் கவிஞர். இத்தகைய நிலைமையில் நினைவுகூறல் என்பது எதிர்ப்பாகவும் களச்செயல்பாடாகவும் உருவடைகிறது. ஷங்கரின் தேர்வும் பெரும்பாலும் அத்தகைய கவிதைகளையே தொகுத்தளித்துள்ளன.
ஆஹா ஷாகித் அலி அடிப்படையில் ஒரு லிரிக் கவிஞர். எல்லா லிரிக் கவிஞர்களைப் போலவே அவரும் ஓர் உயர்த்தப்பட்ட மொழிநடையைத் தன் இயல்குரலாகக் கையாள்கிறார். நிலவு, இதயம், முகத்திரை போன்ற உருதுக்கவிதை மரபின் புராதனமான படிமங்களைத் தயக்கமின்றிப் பயன்படுத்துகிறார். அவரால் ‘பைத்திய இதயமே, தைரியமாக இரு’ என்று நாடகீயமாகவும் ‘நிலவு எனது தோளைத் தீண்டியதும் நான் அழிந்து தொலைந்த காதலுக்காக ஏங்கினேன்’ என்று கற்பனாவாதமாகவும் பேசியபடி சாதாரண தொனியிலேயே தொடரமுடிகிறது. எல்லாவற்றுக்கும் மேல் இக்கவிதைகளை நான் எப்படியோ மிருதுத்தன்மையோடு தொடர்புபடுத்திக்கொள்கிறேன்.
ஆயினும் லிரிக் கவிதையின் மையமான தனிச்சுயத்தின் குரலிலும் ஷாகித் தனித்து இல்லை. ‘ஒரு தவறான திரும்புதல் தான்/என்னை இங்கே கொண்டுவந்திருக்கிறது’ என்று எழுதுகையில் அது அவரது தனிவாழ்வை மட்டும் குறிப்பதாக நின்றுவிடவில்லை. அவர் தன்னைக் கவிதைசொல்லியாகப் பல இடங்களில் ஒரு தொடர்ச்சியின் கண்ணியாகவே கருதுவதைப் பார்க்கலாம். காலத்தின் மனநிலை மாற்றங்களால் தனிமனிதன் அவ்வளவு தனித்த மனிதனாக இருக்கமுடிவதில்லை. அவன் ஏதோவொரு விதத்தில் புறச்சக்திகளின் போக்கினால் பாதிப்படைகிறான். அந்த இடத்தில் அவன் வீடு அவனது வீடு மட்டுமன்று.
மூதாதைகளே எனக்காக ஒரு காலிமனையை விட்டுச் சென்றிருக்கிறீர்கள்
குடும்பத்து மையவாடியில்
நான் ஏன் உங்கள் கண்களைப் பார்த்து
பிரார்த்திக்க வேண்டும் அரபியில்
என்று சொல்கிறது ஒரு கஸல் கண்ணி. காலத்தால் ஏற்றப்பட்ட இறக்கமுடியாத பொறுப்புடனேயே இக்கவிதைகளால் பேசமுடிகிறது. வரலாற்றுச் சூழல்களால் சமூகக்குரல்களில் பேசத்தலைப்பட்ட எல்லாக் கவிஞர்களைப் போலவே ஷாகித்தின் கவிதைகளும் ஒருகட்டத்தில் தன்மை பன்மை நிலையைக் கைக்கொள்கின்றன. ஆனால் அது எந்த வகையிலும் ஒரு அடையாளக் குழுவாதமாகவோ குறுக்கல் நோக்காகவோ சுருங்கவில்லை. இன்னொரு கவிதையில் அவரே தனது மூதாதையாகப் பனியுக மனிதனைக் குறிப்பிடுகிறார்.
எனது மூதாதை இமாலயப் பனியின் மனிதன்.
திமிங்கல எலும்புகள் கொண்ட பையைச் சுமந்தபடி
சாமர்கண்டிலிருந்து காஷ்மீருக்கு வந்தவன்
என்று கூறிவருபவர் அதில் இருந்து வெளியேற விரும்பும் வேட்கையையும் பதிவு செய்து முடிக்கிறார் கவிதையை:
அவர்கள் என்னைப் பனிக்காலத்திலிருந்து வெளியேற விடமாட்டார்கள்
எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறேன்
நானே கடைசிப் பனிமனிதனாக இருந்தாலும்
வசந்தத்தை நோக்கி நான் பயணிப்பேன்
அவர்களது உருகும் தோள்களின் மீதேறி
புலம்பெயர் மனநிலைகளில் உருவாகும் அதிதீவிர தேசியவாத மனப்போக்கு ஷாகித்தின் கவிதைகளில் காணமுடியாதது. மாறாக அம்மா அப்பா நண்பர்கள் காதலர் என்ற உறவு வட்டத்தின் பிம்பமாகவே தனது தேசியத்தை அவர் உணர்கிறார். அப்படித்தான் கவிதையில் வெளிப்படுகிறார்.
கவிதையின் மெய்யான பாடுபொருள் காதலின் பிரிவுதான் என்றார் பெயிஸ் அகமத் பெயிஸ். காஷ்மீர் பற்றி எழுதப்பட்டிருக்கும் இக்கவிதைகளை நாம் காதல் கவிதைகளாகவும் வாசிக்கலாம். பிரிவின் வேதனை அறிவிப்பாகவும் கூடியிருந்த பொழுதுகளின் அசைமீட்டலாகவும் காணலாம்.’நான் கண்களை மூடுகிறேன். அது என்னை நீங்கவில்லை’ என்று காதலின் மொழியிலேயே அவர் தனது பிரிந்த வாழ்நிலத்தைப் பற்றி எழுதிச் செல்கிறார்.
தனது நிலத்துடனான தொடர்பின்மை இக்கவிதைகளின் முதன்மையான பிரச்சனை. இத்தொடர்பின்மை வெவ்வேறு உறவுநிலைகளுடனான தொடர்பின்மைகளையும் தொட்டுத் தொட்டு பெரும் உணர்வு மையமாகத் திரண்டு செயல்பட்டுள்ளது. அதற்கேற்பக் கடிதம், தபால்தலை, தொலைபேசி போன்ற தொலைத் தொடர்பு சொற்களைப் பரவலாகக் காணமுடிகிறது நூலில். சொல்லப்போனால் இக்கவிதைகளே தொடர்பு கொள்வதற்கான ஒருவகை முயற்சி என்று சொல்லலாம். எழுதுபொருள் என்ற கவிதையில் தொடர்பு கொள்ளல் வேறொரு தளத்திற்கு இப்படி நகர்த்தப்படுகிறது:
நிலவு சூரியனாக மாறவில்லை
அது பாலைவனத்தில்
வெள்ளியிலிருந்து
ரீம் கணக்கில்
உன் கைகள் உருவாக்கிய காகிதங்களில்
வெறுமனே விழுகிறது
தற்போது
இரவு
உனது குடிசைத்தொழில்
பகலோ
பெரும் சந்தை
உலகு காகிதங்களால் ஆனது
எழுது
எனக்கு.
இந்தப் பிரிவினை, கவிஞர் கற்பனையின் மூலம் சரிக்கட்டுகிறார். கற்பனையாக தனது தாயகத்தில் தான் இல்லாத இடத்தில் ஒரு வாழ்வை வாழ முயல்கிறார். மதியத்தில் டில்லி புராண கிலாவிற்குத் திரும்புவதாகக் கனவு காண்கிறார். தனது சொந்த நாட்டில் வசிக்கும் பெற்றோருக்குத் தனக்குப் பதிலாக இன்னொரு பொறுப்புள்ள தனயனை சிருஷ்டிக்கிறார். இன்னும் முன்நகர்ந்து தான் பிறக்கும் முன்னர் தனது தாய் தந்தையரைப் புதுமணத் தம்பதியாய்ச் சந்திப்பதற்காகக் கதவு தட்டுகிறார். ஆனால் இது உண்மையான நிலப்பரப்பு அல்ல,இது அவரது நினைவில் உள்ள ஒரு தீவு. கவிதையாலான ஒரு தாயகம், பின்னணியில் பாஹின் ஆர்கன் இசைக்கீதம்.
அவரது புகழ்பெற்ற கவிதை, அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு. காஷ்மீரின் வன்முறையும் அடக்குமுறையும் நிறைந்த கொந்தளிப்பான காலநிலையைப் பற்றி விரிவாக எழுத எண்ணுகையிலும் கூட மூடிய தபால்நிலையங்களும் முடங்கிய கடிதங்களுமே அவருக்குப் படைப்பூக்கப் பொறியை வழங்கியுள்ளன என்பது சுவாரஸ்யமானது. கட்டான வடிவத்திற்குள் ஏறத்தாழ உரைநடையிலும் உன்மத்த கூற்று மொழியிலுமாய் வெவ்வேறு சொல்முனைகளில் மாறி மாறிச் செல்லும் ஒரு உயர் அழுத்த கவிதை அது.
தொழுகைக்கு அழைப்பவர் இறந்த பிறகு
எல்லா அழைப்புகளும் அற்றுப்போனது நகரம்
எரிப்பதற்காகக் கூட்டிய இலைகளைப் போலானது
வீடுகள்
இப்போது ஒவ்வொரு இரவும் எமது வீடுகளை
நாங்கள் புதைக்கிறோம் – அவர்களுடையதையும், காலியாக
விட்டுச்செல்லப்பட்டவை அவை.
பண்டிட்கள் மற்றும் காஷ்மீரக இஸ்லாமியரின் துயரங்களை ஒருசேரப் பதிவுசெய்தபடிப் புலம்பல்களாகவும் பிரார்த்தனைகளாகவும் மீள்கூறல்கள் கூக்குரல்கள் என வளரும் கவிதையில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரு வாக்கியம் “எதுவும் மிஞ்சப்போவதில்லை. எல்லாம் முடிந்துவிட்டது”. இக்கவிதையினூடே எனக்கு, கடிதங்களைப் பெற்று அனுப்பும் ரகசியத் தபால் ஊழியனின் பாத்திரத்தோடும், தொழுகைக்கு அழைக்கும் பாங்கு சொல்பவரின் பாத்திரத்தோடும் ஒரு லிரிக் கவிஞனது பாத்திரம் எத்தனை பொருந்திப் போகிறது என்று யோசிக்கத் தோன்றியது. அவனும் விளிக்கிறான், உணர்ச்சிகளைக் கடத்துகிறான், மறைசேதிகளைப் பரிமாற்றம் செய்கிறான், காத்திருக்கிறான். முடிவில் பாங்குசொல்பவராக மாறும் கவிதைசொல்லி காதலர்கள் சிறைவாசிகள், பைத்தியங்கள் என அனைவரின் கடிதங்களையும் தாமே வாசிக்கிறார் யாருக்கும் சென்று சேராத பதில்களையும் எழுதுகிறார். ஆனால் அவருக்குத் தெரிந்திருக்கிறது:
”இது ஒரு காப்பகம். நான் அவனது குரலின் மிச்சங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்,
அந்த எல்லைகளற்ற ஏக்கங்களின் வரைபடத்தை”
இக்கவிதைகள் பெரும்பாலும் தன்னுணர்ச்சி பாங்கில் எழுதப்பட்டவை எனினும் நிறைய கலாச்சாரக் குறிப்பீடுகளுக்கும் இடமளித்துள்ளன. பேகம் அக்தர், புராணகிலா, சாந்தினி சௌக், ஜிப்சிகள், பேஸ்லி எனக் கவிஞனின் நினைவு ஒரு கூட்டுக் கலாச்சார நினைவாகப் பரிணமிக்கிறது. ஆகா ஷாகித் அலியின் கவிதையியல், அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், இந்து, இஸ்லாமிய, மேலைத்தேய அழகியலின் மரபுக் கூறுகள் ஒன்றிணைந்து உருவான ஒன்று. ஒருபுறம் அவர் கஸல் போன்ற பெர்சியக் கவிதை வடிவங்களின் தாக்கம் அடைந்தவராக மட்டுமல்லமால் அவற்றை எழுதுபவராகவும் இருந்துள்ளார். மறுபுறம் அவரது கவிதைகளில் ஆங்கிலக் கற்பனாவாதப் படைப்புகளின் பாதிப்பும் பக்திக் கவிதைகளின் உருக்கமும் இழையோடிருப்பதையும் காணமுடியும்.
இக்கவிதைகளைச் சரளமான கவித்துவ மொழியில் மொழிபெயர்த்திருக்கும் ஷங்கர்ராமசுப்ரமணியன் முன்னுரையில் கூறுகிறார், வரலாற்றுக் காலமாக சமாதானம் அமைதி கூடி வாழ்வதின் நறுமணத்தை வைத்திருக்கும் இந்து இஸ்லாமியப் பண்பாட்டு உறவின் உருவகமாகத் திகழும் கலை ஆளுமையான ஆஹா சாகித் அலி தமிழுக்கு அறிமுகமாவது அவசியமானது என்று வாசித்து முடிக்கையில் நாமும் அத்தகைய எண்ணத்திற்கு வந்துசேர்கிறோம். இப்போது இந்தக் கட்டுரையை முடிக்கும் தறுவாயில், தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘டெல்லியில் கோஸிண்ட்சேவின் கிங் லியர் நாடகத்தைப் பார்த்துவிட்டு வரும்போது’ கவிதையினை முழுமையாகத் தட்டச்சு செய்து முடிக்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது எனக்கு :
டெல்லியில் கோஸிண்ட்சேவின் கிங் லியர் நாடகத்தைப் பார்த்துவிட்டு வரும்போது
கொர்டீலியா, உடைந்த மதில் சுவரில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் போது
லியர் ஓலமிடுகிறான் “நீங்கள் கல் மனிதர்கள்”
பேரரசியும் அரசகுடி பெண்களும் சூடும்
மல்லிகைப் பூக்கள் குவிந்திருந்த சாலையாக முன்பிருந்த
சாந்தினி சௌக்கினுள் நுழைகிறேன்
வாசனைத் திரவியங்களை அவர்கள்
இஸ்பஹானிலிருந்து வரவழைத்தார்கள்
டாக்காவிலிருந்து துணிமணிகளும்
காபூலிலிருந்து தைலங்களும்
ஆக்ராவிலிருந்து கண்ணாடி வளையல்களும் வந்தன.
இங்கே
பெயர் அறியாத பிரபுக்கள்
மறக்கப்பட்ட துறவிகளின் சமாதிகளில்
தற்போது யாசகர்கள் வசிக்கின்றனர்
தெருவோர வியாபாரிகள்
சீப்புகள், முகம் பார்க்கும் கண்ணாடிகளை
சீக்கியக் கோயிலுக்கு வெளியே விற்கின்றனர்.
தெருவின் மறுபக்கம்
ஒரு கொட்டகையில் இந்திப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் படைவீரர்களால்
கால்களில் சங்கிலி இடப்பட்டு
மகன்கள் தூக்கிலடப்படுவதைப் பார்க்க
இந்தச் சாலை வழியாக அழைத்துச் செல்லப்படும்
கவிஞனும் பேரரசனுமான ஸாஃபரை
நினைத்துப் பார்க்கிறேன்
நாடு கடத்தப்பட்ட நிலையில் அவன் எழுதினான்:
“துரதிர்ஷ்டம் பிடித்த ஸாஃபர்
தனது வாழ்க்கையின் பாதியை நம்பிக்கையிலும்
அடுத்த பாதியைக் காத்திருப்பிலும் கழித்தான்.
தன்னைப் புதைக்க டெல்லியின் ஓர் ஆறடியை
அவன் யாசிக்கிறான்”
அவன் பர்மாவுக்கு நாடுகடத்தப்பட்டான். ரங்கூனில்
புதைக்கப்பட்டான்.
(ஸாஃபர் – முகலாயப் பேரரசின் கடைசி மன்னன்)








Leave a Reply