Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மறதியிலிருந்து (1920)

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
May 1, 2026
மறதியிலிருந்து (1920)

ஹெச். பி. லோவ்கிராஃப்ட்

தமிழில் – எழில் சின்னதம்பி


என் இறுதி நாட்கள் என்னை நெருங்கியபோது, வாழ்வின் அருவருப்பான அற்பத் துன்பங்கள், என்னைப் பைத்தியக்காரத்தனத்தை நோக்கித் தள்ளத் தொடங்கின. சித்திரவதை செய்பவர்கள், தாங்கள் பிடித்து வைத்தவர்களின் உடலின் ஒரே இடத்தில் இடைவிடாது நீரைப் பீய்ச்சிச் துன்புறுத்திக் கொடுமைப்படுத்துவதால் ஏற்படும் வேதனை போல நான் துயரம் அடைந்தேன். அதனால் உறக்கத்தின் ஒளிரும் புகலிடத்தை நான் அதிகம் நேசித்தேன். என் கனவுகளில், வாழ்க்கையில் நான் வீணாகத் தேடிய அழகை ஓரளவிற்குக் கண்டேன்; பழமையான தோட்டங்களிலும் மாயக் காடுகளிலும் அலைந்து திரிந்தேன்.

ஒருமுறை, மென்மையாகவும் நறுமணத்துடனும் காற்று வீசியபோது, தெற்கிலிருந்து வந்த அழைப்பைக் கேட்டு, விசித்திரமான விண்மீன்களின் கீழ் முடிவில்லாமலும் சோம்பலாகவும் பயணம் செய்தேன்.

மற்றொரு முறை மென்மையான மழை பொழிந்தபோது, பூமிக்கு அடியில் சூரிய வெளிச்சமில்லாத ஒரு நீரோட்டத்தில் படகில் நழுவிச் சென்றேன்; ஊதா நிற அந்திப்பொழுது, மின்னும் கொடிவீடுகள் மற்றும் வாடாத ரோஜாக்கள் நிறைந்த மற்றோர்  உலகத்தை அடையும் வரை அந்தப் பயணம் தொடர்ந்தது.

இன்னொரு முறை, நான் ஒரு பொன்னிறப் பள்ளத்தாக்கின் வழியாக நடந்தேன்; அது நிழல் படிந்த தோப்புகளுக்கும் சிதைவுகளுக்கும் இட்டுச் சென்றது. அதன் முடிவில் பழங்காலக் கொடிகளால் படரப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சுவரும், அந்தச் சுவரில் ஒரு சிறிய வெண்கலக் கதவும் இருந்தன.

பலமுறை நான் அந்தப் பள்ளத்தாக்கின் வழியாக நடந்திருக்கிறேன். பேய்த்தனமான அந்த அரைகுறை வெளிச்சத்தில் நான் நீண்ட நேரம் நின்றிருப்பேன்; அங்கிருந்த ராட்சத மரங்கள் விகாரமாக வளைந்து நெளிந்து கிடந்தன. ஒரு மரத்தின் தூர் முதல் அடுத்த மரம் வரை சாம்பல் நிறத் தரை ஈரமாகப் படர்ந்திருந்தது. சில நேரங்களில் மண்ணில் புதையுண்ட கோயில்களின் பாசி படிந்த கற்களை அது வெளிப்படுத்தியது. ஆனால், எப்போதும் என் கற்பனையின் இலக்கு, அந்தப் பிரம்மாண்டமான கொடி படர்ந்த சுவரும், அதிலிருந்த சிறிய வெண்கலக் கதவும்தான்.

சிறிது காலத்திற்குப் பிறகு, விழித்திருக்கும் நாட்கள் அவற்றின் சாம்பல் நிறத்தாலும் ஒரே மாதிரியான தன்மையாலும் தாங்க முடியாத வலியாக மாறியபோது, நான் அடிக்கடி அந்தப் பள்ளத்தாக்கிலும் நிழல் தோப்புகளிலும் போதை தந்த அமைதியோடு மிதப்பேன். ஆர்வமும் புதிய வண்ணங்களும் அற்ற ஒரு சலிப்பான உலகிற்கு இனி நான் ஊர்ந்து செல்ல வேண்டிய அவசியமில்லாதபடி, இவற்றை எப்படி எனது நித்திய இருப்பிடமாக மாற்றிக் கொள்வது என்று வியப்பேன். அந்தப் பிரம்மாண்டச் சுவரில் இருந்த சிறிய கதவைப் பார்த்தபோது, அந்தக் கதவுக்கு அப்பால் ஒரு கனவு தேசம் இருப்பதை நான் உணர்ந்தேன்; அதற்குள் ஒருமுறை நுழைந்துவிட்டால் திரும்ப முடியாது என்பதையும் அறிந்திருந்தேன்.

எனவே, ஒவ்வொரு இரவுக் கனவிலும், அந்தப் பழங்காலச் சுவரில் மறைந்திருக்கும் கதவின் தாழ்ப்பாளைக் கண்டுபிடிக்க முயன்றேன்; அது மிக அழகாக மறைக்கப்பட்டிருந்தது. சுவருக்கு அப்பால் இருக்கும் உலகம் நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், அதிக அழகும் பிரகாசமும் கொண்டதாக இருக்கும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

பின்பு ஓர் இரவு, ‘சகாரியன்’ எனும் கனவு நகரத்தில், பழங்காலக் கனவு ஞானிகளால் எழுதப்பட்ட மஞ்சள் நிறப் பாப்பிரஸ் சுருள் ஒன்றைக் கண்டேன். விழிப்புலகில் பிறந்திராத அளவுக்கு ஞானமுடையவர்கள் அவர்கள். அதில் கனவுலகைப் பற்றிய பல விசயங்கள் எழுதப்பட்டிருந்தன; அவற்றுள் பொன்னிறப் பள்ளத்தாக்கு, புனிதத் தோப்பு, கோயில்கள் மற்றும் சிறிய வெண்கலக் கதவு கொண்ட உயரமான சுவர் ஆகியவற்றைப் பற்றிய ரகசியங்களும் இருந்தன. இதைப் பார்த்தபோது, அது நான் அடிக்கடி செல்லும் இடங்களைப் பற்றியது என்று உணர்ந்து, அந்த மஞ்சள் நிறச் சுருளை நீண்ட நேரம் வாசித்தேன்.

சில கனவு ஞானிகள், கடக்க முடியாத அந்தத் தாழ்வாரத்திற்கு அப்பால் இருக்கும் அதிசயங்களைப் பற்றி மிக அழகாக எழுதியிருந்தனர்; ஆனால் மற்றவர்களோ திகிலும் ஏமாற்றமும் மட்டுமே அங்கே இருக்கின்றன என்று சொன்னார்கள். எதை நம்புவதென்று எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் அந்த அறியப்படாத தேசத்திற்குள் என்றென்றைக்குமாக நுழைய நான் மென்மேலும் ஏங்கினேன்; ஏனெனில், சந்தேகமும் இரகசியமும் மிகப்பெரிய ஈர்ப்புகள். சாதாரண வாழ்வின் தினசரி சித்திரவதையை விடப் புதிய திகில் எதுவும் பயங்கரமானதாக இருக்க முடியாது. எனவே, அந்தக் கதவைத் திறந்து என்னை உள்ளே தள்ளும் அந்த மருந்தைப் பற்றி அறிந்தபோது, அடுத்தமுறை நான் விழித்திருக்கும்போது அதை உட்கொள்ள முடிவெடுத்தேன்.

நேற்றிரவு நான் அந்த மருந்தை உட்கொண்டு, கனவுலகின் பொன்னிறப் பள்ளத்தாக்கிலும் நிழல் தோப்புகளிலும் மிதந்தேன்; இம்முறை நான் அந்தப் பழங்காலச் சுவரை அடைந்தபோது, சிறிய வெண்கலக் கதவு சற்றே திறந்திருப்பதைக் கண்டேன். அதற்கு அப்பால் இருந்து ஓர் ஒளி வெளிப்பட்டது; அது அந்த ராட்சத வளைந்த மரங்களையும் புதையுண்ட கோயில்களின் உச்சிப் பகுதிகளையும் விசித்திரமாக ஒளிர்வித்தது. நான் திரும்பவே முடியாத அந்த நிலத்தின் மகிமைகளை எதிர்பார்த்து, பாடிக் கொண்டே மிதந்து சென்றேன்.

ஆனால், கதவு அகலமாகத் திறந்தபோது, மருந்தின் மாயமும் கனவும் என்னை உள்ளே தள்ளிய அந்தத் தருணத்தில், எல்லாக் காட்சிகளும் மகிமைகளும் முடிவுக்கு வந்ததை நான் அறிந்தேன்; ஏனெனில் அந்தப் புதிய தேசத்தில் நிலமோ கடலோ இல்லை, மனிதர்களே இல்லாத எல்லையற்ற விண்வெளியின் வெண்மை நிற வெறுமை மட்டுமே இருந்தது. ஆகவே, நான் கற்பனை செய்ததை விட அதிக மகிழ்ச்சியுடன், வாழ்க்கை என்ற அரக்கன் ஒரு சிறுபொழுதுத் தனிமைக்காக என்னை எங்கிருந்து அழைத்தானோ, அந்த ஆதி முடிவிலியான ஸ்படிக மறதிக்குள் மீண்டும் கரைந்து போனேன்.

****

மறதியிலிருந்து : இருப்பின் துயரமும் வெறுமையின் அமைதியும்

‘மறதியிலிருந்து’ என்பது லோவ்கிராஃப்ட்டின் வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்ட ஒரு ‘வசனகவிதை’ போன்ற படைப்பாகும். இது பயத்தை விடத் தத்துவார்த்தமான விரக்தியையே அதிகம் பேசுகிறது. இருத்தலின் சலிப்பு, அறியப்படாததன் மீதான ஈர்ப்பு போன்றவற்றைச் சொல்கிறது. ‘வாழ்க்கை’ ஒரு அரக்கன் என்பது இக்கதையின் கருத்து. பொதுவாக மரணத்தைத்தான் நாம் கொடூரமான ஒன்றாகக் கருதுவோம்; ஆனால், லோவ்கிராஃப்ட்  வாழ்க்கையை ஒரு அரக்கனாகச் சித்தரிக்கிறார். “வாழ்க்கை எனும் அரக்கன் ஒரு சிறு பொழுது தனிமைக்காக என்னை எங்கிருந்து அழைத்தானோ” என்ற வரி, நாம் பிறப்பதற்கு முன்பே ஓர் அமைதியான நிலையில் இருந்தோம் என்றும், பிறப்பு என்பது அந்த அமைதியைக் குலைத்த ஒரு விபத்து என்றும் வாதிடுகிறது. மற்ற கதைகளில் நாயகர்கள் ஒரு கனவுலகத்தையோ அல்லது அழகிய நகரத்தையோ தேடுவார்கள். ஆனால் இக்கதையின் நாயகன் தேடுவது மறதியை. எதையும் உணர முடியாத, எதையும் நினைக்கத் தேவையில்லாத அந்த வெள்ளை நிறச் சூனியம் அவனுக்குப் பேரின்பத்தைத் தருகிறது. இது வாழ்க்கையின் அனைத்துப் போராட்டங்களிலிருந்தும் கிடைக்கும் ஒரு நிரந்தர விடுதலையாகக் காட்டப்படுகிறது. வெண்கலக் கதவென்பது வாழ்விற்கும் மரணத்திற்கும் அல்லது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடையிலான எல்லையைக் குறிக்கிறது. ‘இருப்பதே துன்பம்’ என்ற புத்தரின் தத்துவத்தோடு லோவ்கிராஃப்ட்டின் இந்தச் ‘சூனிய வாதம்’ ஓரிடத்தில் ஒத்துப்போவது வியப்பிற்குரியதுதான்.


Art : kisaru

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி.
சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு – தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிப்பொறுப்பு.

மொழிபெயர்ப்புக் கதைகளும், கலை இலக்கியக் கட்டுரைகளும் கல்குதிரை, சிறுகதை, தினவு, தடாரி, காலச்சுவடு, சிறுவர்களுக்கான ‘இயல்’ போன்ற இதழ்களில்  வெளியாகியிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல்வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத்தொகுப்பான ‘சிலந்தி’ டிசம்பர் 2025ல் வெளியாகியிருக்கிறது.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மறதியிலிருந்து (1920)

    மறதியிலிருந்து (1920)

    May 1, 2026
  • ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    May 1, 2026
  • றஹீமா பைஸல் கவிதைகள்

    றஹீமா பைஸல் கவிதைகள்

    May 1, 2026
  • ஹிம்சானா கவிதைகள்

    ஹிம்சானா கவிதைகள்

    May 1, 2026
  • நவீன இலக்கிய மடங்களும் அமெரிக்கப் பஜனைகளும் : ஒரு விமர்சனப் பார்வை

    நவீன இலக்கிய மடங்களும் அமெரிக்கப் பஜனைகளும் : ஒரு விமர்சனப் பார்வை

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (6)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (103)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (82)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (46)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (41)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (6)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மறதியிலிருந்து (1920)

    மறதியிலிருந்து (1920)

    May 1, 2026
  • ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    May 1, 2026
  • றஹீமா பைஸல் கவிதைகள்

    றஹீமா பைஸல் கவிதைகள்

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (6)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (103)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (82)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (46)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (41)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top