சந்திப்பு ஒன்று :
மெரினா கடற்கரைக்கு எதிரில் நான் முதுகலை பயின்ற கல்லூரி. கல்லூரிக்கும் கடலுக்கும் நடுவில் கடலைப் பார்த்திருப்பதைப்போல் ஒரு கல் இருக்கை இருந்தது. இருக்கையின் இடது ஓரத்தில் பூளூமேரியா மரம் ஒன்று வளர்ந்திருந்தது. மெல்லிய வாசனையோடும் வெண்ணிறப் பூக்களோடும் கணிசமான உயரத்தில் இருந்த மரம் அந்தக் கல் இருக்கையை மேலும் அழகாக்குவதாகத் தோன்றியது.
அந்தக் கடல். அலைமோதும் காற்று. அழகிய இருக்கை எல்லாமும் சேர்ந்து என்னை அழைப்பது போல் அடிக்கடி தோன்றும்.
ஒருநாள் மாலை கல்லூரி முடிந்து அந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். எதிரில் நீல நிறக் கடல் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல் தோன்றியது. நானும் சிரித்தேன். வெண்ணிற நுரைகளை அள்ளி வந்து கரையில் போட்டுவிட்டு பின்வாங்கியது ஒரு அலை. கரையில் கோபித்துக் கிடந்த நுரைகளைப் பிடிவாதமாக இழுத்துச் சென்றது மற்றொரு அலை. இச்சிறு பிள்ளைத்தனத்தைப் பார்த்தும் எதுவும் கூறாமல் கெடுபிடியான ஆசிரியர் போலக் கைகட்டி வேடிக்கை பார்த்தது கரை. நான் முதலில் இருந்த புன்னகையை மாற்ற மறந்தவளாய் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
விளையாட்டிற்கு இடையே ஓரப் பார்வையில் பார்க்கும் குறும்புச் சிறுவனைப் போல் கடல் என்னை பார்த்ததாக உணர்ந்து மீண்டும் சிரித்துக் கொண்டேன். ஒரு மாலையை அங்கு கழிப்பது என் நாளை அழகாக்குவதாக நம்பினேன். ஆகையால் அன்றிலிருந்து தொடர்ந்து கல்லூரி முடிந்தபிறகு அந்த இருக்கையில் சென்று அமர்வதை வழக்கமாக்கினேன்.
எப்போதாவது என் தோழிகள் என்னோடு சேர்ந்து கொள்வதுண்டு. சில சமயம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள் ஓய்விற்காக அங்கு வந்து அமர்வதுண்டு. யாரும் உடன் அமராமல் போனாலும் கூட எந்தவிதத் தனிமையும் அந்த இருக்கை எனக்கு கொடுத்ததில்லை. நாளடைவில் ஒரு குட்டி வீடு போல் அந்த இடம் மாறியிருந்தது.
வீடு என்பது எப்போதும் நமக்கானது. பாதுகாப்பானது. அடைக்கலம் தருவது. தோன்றும் எல்லாவற்றையும் செய்யலாம். எதுவும் செய்யாமலும் இருக்கலாம். ஏனெனில் அது வீடு.
ஒரு நாள் மாலை நான் கடற்கரை இருக்கையில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும். பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மிக வேகமாக வந்து அந்த இருக்கையில் அமர்ந்தான்.
அமர்ந்தவன் மிக ஆழமான அமைதியோடு முன்னிருந்த கடலை பார்த்தான். நான் அவனைப் பார்த்தேன். எத்தனை ஆவலான பார்வை என்று தோன்றியது. ஏதோ நீண்ட சிந்தனையில் இருப்பது போல் வெகுநேரம் அவன் எதுவும் பேசவில்லை.
நான் பூளூமேரியா மலர்களை வெறித்தேன். தன் ஐந்து இதழ்களை விரித்து மொத்த பல்லும் காட்டி எயிறு தெரியச் சிரிக்கும் சிறுமி போல் ஒவ்வொரு மலரும் சிரித்துக்கொண்டிருந்தன.
லைஃப் இஸ் சோ போரிங்.. என்று ஒரு குரல் கேட்டது.
நான் திரும்பிப் பார்த்தேன்.
அந்தச் சிறுவன் தான். நான் அவனைப் பார்த்தேன். ஆனால் அவன் அப்போதும் என்னைப் பார்ப்பதாக இல்லை.
ஐ டோன்ட் வான்ட் எனிபடி. ஐ நீடு பீஸ். ப்ளிஸ் காட். எனக்கு அது மட்டும் கொடுங்க என்று கூறினான்.
அவன் அழுகிறானா என்று பார்த்தேன்.
ஆம். அழுகிறான்.
என்ன கூறுவது என்று தெரியவில்லை. பூளூமேரியா மரத்தைப் பார்ப்பது போல் நான் ஒரு பக்கமாகத் திரும்பி அமர்ந்தேன்.
அவன் அழுகையின் இடையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் என் காதுகளுக்கு எட்டியது. மிக உருக்கமான ஒரு கையறு நிலை எது என்றால் சக மனிதனின் அழுகையை சகித்துக் கொள்வது தான். எழுந்து வேறெங்கேயோ சென்றிருக்கலாம் அல்லது விடுதிக்குத் திரும்பியிருக்கலாம். ஏனோ மனம் துணியவில்லை. நான் அந்த இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன். அதே இருக்கை தான். அதே கடல் தான் அதே ப்ளூமேரியா மலர் தான். ஏனோ எல்லாமும் செயலிழந்து காணப்பட்டது.
சிறிது நேரம் சென்றது. அச்சிறுவனின் அழுகை ஓய்ந்ததாக தோன்றியது. அவனைப் பார்த்தேன். முன்பு இருந்ததைக் காட்டிலும் ஆழமான அமைதியை அவனிடம் உணர முடிந்தது.
சிறிது நேரம். அதே அமைதியில் நானும் ஆழ்ந்தேன். பின் தயங்கி தயங்கி ஹாய் என்று நான் கையை நீட்டினேன்.
கலங்கித் துடைக்கப்பட்டிருந்த அந்தக் கண்கள் என்னைப் பார்த்தன. பின் எதுவும் பதில் கூறாமல் மீண்டும் கடலைப் பார்த்தான்.
நானும் சிறிது நேரம் அமைதி காத்தேன். பிறகு “உனக்குத் தண்ணி எதாவது வேணுமா”? என்றேன்.
உடனே “நோ தாங்க்ஸ்” என்று கூறிவிட்டு அச்சிறுவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.
உரையாடல் தொடர்ந்தால் ஏதேனும் ஆறுதல் கூறலாம் என்று தான் நினைத்தேன்.
துயரத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆறுதல் வேண்டி ஏக்கத்தோடு நிற்பது. மற்றொன்று எல்லாவற்றிலிருந்தும் விலகி ஓட தூண்டுவது. இச்சிறுவன் இரண்டாம் தரத்தில் இருப்பதாக யூகித்தேன்.
விலகி செல்லும் எதுவொன்றையும் விட்டுவிடுவது தான் சரியான முதிர்ச்சி என்று அவ்வப்போது தோன்றும்.
“ஐ டோன்ட் வான்ட் எனிபடி. ஐ நீடு பீஸ். ப்ளிஸ் காட். எனக்கு அது மட்டும் கொடுங்க” என்ற அவன் குரல் மீண்டும் என் காதில் விழுந்தது.
“உன்னால முடியும்னா அவனுக்கு அத கொடுத்துடேன்” என்றேன் கடலைப் பார்த்து. ஒரு பெரிய அலை வந்து கரையில் மோதிவிட்டு சென்றது.
சந்திப்பு இரண்டு :
மிக இயல்பான ஒரு மாலை அது. கடற்காற்றில் உடைகளும் தலை முடியும் ரிதத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்தன உடன் ப்ளூமேரியா மலர்களும் சேர்ந்துகொண்டன.
சிறிது நேரம் சென்றிருக்கும்.
அறுபதை மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். நான் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு புன்னகைத்தார். பின் மீண்டும் இருவரும் கடலை வெறிக்கத் தொடங்கினோம்.
தலைமுடியும் தாடியும் வெண்ணிறத்தில் இருந்த அவரது முகம் ஒரு அபரிமிதமான அமைதியை கூறிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தவர் பின் தனது இடது காலை நீட்டினார். தன் அரைக்கால் சட்டையை சற்று மேலேற்றி அவ்விடது காலை கவனமாக கழற்றி இருக்கையின் ஒரு ஓரமாக வைத்துக்கொண்டார்.
அது செயற்கை கால் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.
இப்போது மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். அம்முகத்தில் சிறு நிம்மதியை என்னால் காண முடிந்தது.
என்னைப் பார்த்தவர்
ஸ்டூடன்டா என்றார்.
நான் ஆமாம் என்றேன்.
என்ன படிக்கிறிங்க.
எம்.ஏ.,
நானும் ப்ரிசிடன்ஸி ஸ்டூடன்ட் தான். 70ஸ் ல என்று சிரித்தார்.
சற்று வியப்பாகத்தான் இருந்தது. இவ்வளவு பழைய மாணவரை நான் சந்தித்தது.
அதெல்லாம் ஒரு காலம் என்றபடி மீண்டும் கடலைப் பார்த்தார்.
சிறிது நேரம் அமைதியாக கடந்தது.
பின் வீடு எங்க என்றார்.
ஹாஸ்டல் என்றேன்.
ஓ.. என்றவர். மேலும் எதுவும் கூறவில்லை.
மீண்டும் சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதி.
பின் அவர் தொடர்ந்தார். “இந்த கால்ல ஒரு சின்ன கட்டி மாதிரி தான் ஆரம்பிச்சது. வலி இல்லை ஒன்னும் இல்லை. நானும் விட்டுட்டேன். அப்புறம் பார்த்தா அது அசுர வேகத்துல வளர ஆரம்பிச்சிடுச்சு”.
நான் கேட்காமலேயே அவர் கூறத் தொடங்கியது சற்று வியப்பாகத் தோன்றினாலும் மிகப் பொறுமையாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்.
“என்ன இப்படி வளருதுனு காட்ட தான் டாக்டர்கிட்ட போனேன். அவரு கால் எடுக்கனும்னு சொல்லிட்டாரு. இப்படி தான் இந்த கால் போனது” எனத் தன் காலின் தொடைப் பகுதியை தானே தடவிக் காட்டினார்.
என்னிடம் கூற வார்த்தைகள் இல்லை. நான் மௌனமாக என் விரல்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். ப்ளூமேரியா மலர்கள் அசைந்து கொண்டிருந்தன.
“கால எடுக்கனும்னு சொன்ன உடனேயே என் பசங்க ஒரே அழுகை. என் பொண்டாட்டி எல்லாம் துடிச்சிட்டா. இவங்க முன்னாடி நாம கொஞ்சம் உடைஞ்சாலும் சரியா இருக்காதுன்னு நான் தான் சொன்னேன். கால் தானே போகுது. உயிரா போகுது. உயிரோட தான இருப்பேன்னு அவங்கள தேத்துறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆச்சு”.
“நாம வாழ சொந்தம் முக்கியம். ஒரு வகையில அது தான் எல்லாத்தையும் கடந்து இப்படி துணிச்சலா நிக்க வைக்கிது காலே இல்லைனாலும்.” என்று ஒரு தீர்க்கமான பார்வையால் என்னைப் பார்த்தார்.
நான் ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.
அவர் கூறுவது சரிதான். நாம் வாழ சொந்தங்கள் அவசியம். வாழ்கையின் கடினமான காலத்திலும் கூட நம்மை இழுத்து பிடித்து நிறுத்த சொந்தங்களால் தான் முடியும். என்று எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன்.
விடுதிக்கு வந்திருந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. விடுதி வாழ்க்கை என் இயல்பிற்கு ஒத்துவராத ஒன்றாகவே அமைந்தது. விருப்பமே இல்லாமல் தான் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருந்தேன். உணவு, சூழல், காலநிலை எல்லாமும் புதியதாக இருந்தது. முதல்முறை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன். அன்றுதான் அப்பா எழுதிய முதல் கடிதம் எனக்கு கிடைத்தது.
“நீ எப்படி இருக்க, எதுவுமே தெரியாத உன்னை அவ்வளவு தூரத்துல விட்டு வந்துட்டேனேனு கவலையா இருக்கு. உன்னால சமாளிக்க முடியுமானு வருத்தமா இருக்கு. ஒருவேளை இன்னும் கொஞ்சம் வசதி இருந்திருந்தாலும் உன்னை ஹாஸ்டல்ல நான் விட்டுவந்துருக்க மாட்டேன்” என்று வரிக்கு வரி அவருடைய வருத்தத்தை எழுதியிருந்தார்.
காய்ச்சல் ஒருபக்கம் இருந்தாலும் அப்பாவின் அந்த வருத்தம் என்னை இன்னும் வாட்டியது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு தீர்க்கமான முடிவோடு நான் பதில் கடிதம் எழுதினேன்.
“அப்பா நான் நல்லாருக்கேன். எனக்கு இங்க வசதியா தான் இருக்கு. இந்த இடம் பிடிச்சிருக்கு. நான் நல்லா படிப்பேன். என்னைப்பத்தி வருத்தப்படாதிங்க.” என்று எழுதி முடித்தேன்.
அன்று அந்த கடிதத்தால் வந்த உறுதிதான் ஐந்து வருடங்களாக தொடர்ந்து இன்று வரை என்னுடன் நிற்கிறது. என்று எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன்.
என்ன யோசிக்கிற என்றார் அவர்.
நீங்க சொல்றது சரிதான். நாம வாழ சொந்தங்கள் அவசியம். வாழ்கையின் கடினமான காலத்திலும் கூட நம்மை இழுத்து பிடித்து நிறுத்த சொந்தங்களால் தான் முடியும் என்றேன்.
மனிதர்களிடம் தான் எத்தனை கதைகள். எத்தனை வலிகள் என எண்ணிக்கொண்டே ப்ளூமேரியா மலர்களைப் பார்த்தேன். ஆமாம் என்பது போல் அவைகள் அசைந்துகொடுத்தன.
அந்த வழியே வந்த ஒரு டீக்காரரை நிறுத்தினார் அவர்.
டீ சாப்டலாமா? என்றார் என்னிடம்.
இல்லை. நீங்க சாப்பிடுங்க. என்றேன் சிறு தயக்கத்தோடு.
நீ கொடு பா ரெண்டு டீ என்று வாங்கியவர் முதல் குவளையை என்னிடம் நீட்டினார்.
தயக்கத்தோடே வாங்கினேன். அவருக்கான குவளையையும் கையில் வாங்கினார்.. இருவரும் தேநீரை சுவைத்துக் கொண்டே கடலைப் பார்த்தோம்.
சந்திப்பு மூன்று :
அந்த மாலையை வாசிப்பால் நிரப்ப எண்ணி மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் என்ற கவிதை நூலை கையில் பிடித்தபடி அன்று கடற்கரை இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
வழக்கத்தினும் அன்று காற்று சற்றுக் கூடுதலாக வீசியது போல் தோன்றியது.
நான் புத்தகத்தைத் திறந்து முதல் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.
யாரோ அழைத்தது போல் தோன்றியது. நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் நான் அமர்ந்திருந்த கல் இருக்கைக்கு அருகில் வந்தனர்.
நான் அவர்கள் வருவதைப் பார்த்ததும் என்னை இன்னும் சற்று நேர்படுத்தி அமர்ந்தேன். சுற்றும்முற்றும் பார்த்தேன் வேறு யாரும் இல்லை.
அருகில் வந்த இருவரில் ஒருவன் நல்ல உயரம். வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தான். மற்றொருவன் சராசரி உயரத்தில் இருந்தான். கருப்பு நிறத்தில் கோடுபோட்ட சட்டை அணிந்திருந்தான்.
வளர்ந்த இளைஞன் கையை நீட்டி ஹாய் என்று தொடங்கி எதையோ வேறொரு மொழியில் நீளமாக பேசினான்.
அவனை இடைமறித்த நான் “ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்” என்றேன்.
அவனோ எனக்கு எதையோ புரிய வைக்க முயற்சித்தவனாய் மேலும் அதே மொழியில் பேசினான்.
நான் “ஐ நோ ஒன்லி தமிழ்”. சாரி நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு புரியல என்றேன். பிறகு எங்கேயாவது போகுனுமா? என்று நிதானமாக கேட்டேன்.
ஆனால் அந்த வளர்ந்த இளைஞனோ
மீண்டும் முன்பு போலவே வேறு மொழியில் எதையோ பேசினான். அவனது பாவனைகள் எதையோ கூற வந்தாலும் எனக்கு அதன் பொருள் புலப்படவதாக இல்லை.
சாரி. ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட். என்று முகத்தைச் சோகமாகக் காட்டினேன். ஏதோ வழி கேட்கிறார்கள் போல எனக்குத்தான் புரியவில்லை என்று மீண்டும் எண்ணிக்கொண்டேன்.
சராசரி உயரம் கொண்ட இளைஞன் உயரமான இளைஞனைப் பார்த்து ஏதோ கூறினான். அது என்ன மொழி என்று எனக்குத் தெரியவில்லை. வெள்ளை உடை இளைஞனோ அதை மறுத்து அவனுக்கு பதிலுரைத்தான்.
சராசரி உயரம் கொண்ட இளைஞன் தீடீரென கோபமாக முகத்தைத் காட்டி என்னிடம் ஏதோ கேள்வி கேட்டான்.
பதிலுக்கு நானும் ‘லுக் ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட் யுவர் லாங்க்வேஜ்
டு யூ அன்டர்ஸ்டேன்ட்’ என்றேன்.
பிறகு அவனது மொழியிலேயே ஏதோ கூறி கடிந்துகொண்டதாக எனக்குத் தோன்றியது. அவன் முக பாவனைகள் அதை நன்றாகவே வெளிப்படுத்தின.
இதைப் பார்த்ததும் என் மனதில் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. சுற்றும்முற்றும் பார்த்தேன். அதுவரையிலும் கூட வேறு மனிதர்கள் யாரும் அந்தப் பக்கம் வந்திருக்கவில்லை. கண்கள் இருண்டது. அழுவதைப்போல் என் முகம் மாறியது.
அவர்கள் என்னிடம் வழி தான் கேட்கிறார்கள். சுற்றும்முற்றும் வேறு மனிதர்கள் இல்லாததால் என்னை அணுகியிருக்கலாம். எனக்கு அவர்களின் மொழி புரியவில்லை அதை எப்படி புரிய வைப்பது அல்லது அவர்கள் கூற வருவதை எப்படி புரிந்துக் கொள்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
இளைஞர்கள் இருவரும் தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டனர் பிறகு
வெள்ளை உடை இளைஞன் அமைதியாக அந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.
சராசரி உயரம் கொண்ட இளைஞன் சற்று தள்ளி சென்றான்.
பின், “லுக் கேர்ள். காம் ப்ளீஸ். ஓகே” என்றான் அமைதியாக வெள்ளை உடை இளைஞன்.
நான் நின்றுகொண்டிருந்தேன்.
சீ.. ஐம் சேத்தன் ஃப்ரம் கர்நாடகா என்று மீண்டும் கையை நீட்டினான்.
ஓகே என்ற நான் குழம்பிய பாவனையில் அவனைப் பார்த்தேன்.
ஐ நோ ஒன்லி தெலுங்கு. அன்டர்ஸ்டேன்ட். அன்ட் ஐ நோ லிட்டில் இங்லிஸ். என்றான். அவன் பாவனைகள் மிக கனிவாக என்னைப் பார்த்தன.
நான் புரிந்தது போல் தலையசைத்தேன்.
வாட்ஸ் யுவர் நேம்? என்றான் மிக நிதானமாக மீண்டும்.
கீதா என்றேன்.
ஹவ் நைஸ்.
ஆர் யூ ஸ்டுடன்ட் கீதா. அந்த பார்வையின் கனிவு அப்படியே இருந்தது.
யெஸ் என்றேன்.
ஐம் ஆல்சோ ஸ்டூடன்ட். M.A., தெலுங்கு லிட்ரசர். ஓகே. யு அன்டர்ஸ்டேன்ட். என்றான் மீண்டும்.
நான் புரிந்தது போல் தலையசைத்தேன்.
அன்ட் ஐ வான்ட் டு கோ விவேகானந்தர் ஹவுஸ். ஓகே என்று அவன் பார்வையை இன்னும் கூர்மையாக்கி என்னைப் பார்த்தான்.
நான் மீண்டும் தலையசைத்தேன்.
மொழிகளுக்கு அப்பார்ப்பட்டது மனிதர்களின் பாவனைகள். மொழி கண்டறியும் முன்பு நிச்சயமாக பாவனைகள் தான் மொழியாக புழங்கப்பட்டிருக்கும் என்றும் நிச்சயமாக அந்த பாவனைகள் கண்களில் இருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டேன்.
அவன் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட ஒரு தெளிவு பிறந்தது. அது பார்ப்பதற்கு அழகாக தோன்றியது. பிறகு “வேர் இஸ் தட்.” என்றான் .
என் கையை ஒரு கட்டிடத்தின் பக்கமாக நீட்டி சாலையை கடந்து எதிர்ப்புறம் இருந்த “தட் பிங்க் பில்டிங்” என்றேன்.
இஸ் தட்? என்றபடி இரண்டு இளைஞர்களும் அந்தக் கட்டிடத்தைப் பார்த்தனர்.
யெஸ் என்றேன்.
தட்ஸ் குட்.
முன்பு போலவே ஏதோ ஒரு மொழியில் பேசியபடி வெள்ளை உடை இளைஞனை இழுத்தான் கருப்பு கோடுபோட்ட சட்டை அணிந்திருந்த இளைஞன்.
ஒரு பெரிய விடுதலை உணர்வை மனம் உணர்ந்தது.
சேத்தன் இருக்கையில் இருந்து எழுந்தான். நான் இருக்கையில் அமர்ந்தேன்.
லுக் கீதா என்றான் சேத்தன்.
நான் திரும்பி அவனைப் பார்த்தேன்.
“சாரி அன்ட் தாங்க் யூ” என்றான் ஒரு குழைந்த சிரிப்போடு.
நான் அதற்கும் தலையசைத்தேன்.
பின், ஐ லைக் யுவர் சைலன்ஸ் என்றான். ப்ளூமேரியா மலர் ஒன்றை கையில் வைத்து நீட்டியபடி.
முதல் முறை அப்படி ஒரு வார்த்தையை கேட்டதில் முதலில் சற்று அதிர்ந்தேன். பின் என்ன கூறுவது என்று குழப்பத்தோடு நான் அமைதியாக அவனைப் பார்த்தேன்.
அவன் விடைபெற்றான்.
உடைகளும் தலைமுடியும் மீராவும் காற்றில் அசைந்துகொண்டிருந்தன உடன் மீராவின் கவிதை நூலுக்குள் இருந்த அந்த ப்ளூமேரியா மலரும்.
Art by Wonder
ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.








Leave a Reply