கோட்பாடு சார்ந்த நூல்களைக் கற்க வேண்டும் என்று எப்போதேனும் எத்தனிப்பதுண்டு. அவ்வாறு வாசித்த மிக முக்கிய நூல்கள் என் கைரேகைகள் பட்டோ, பென்சிலின் கூர்நுனி கீறியோ சல்லடை ஆனதுதான் மிச்சம். அப்படி ஒரு நூலை வாசித்தேன் என்பதே, பிறகொரு காலம் அந்தப் புத்தகம் கண்ணில் பட்டால்தான் நினைவுக்கே வரும். இவ்வாறான எண்ணங்களை எழவைத்த நூல்கள் பல என் வீட்டு நூலகத்தில் இப்போதும் உண்டு. அவற்றுள் ஒன்று ‘திணையியல் கோட்பாடு.’ இரண்டாம் வாசிப்பின் போது ஆசான் கஜேந்திரன், பிரவீண் பஃறுளி ஆகியோரிடம் வெவ்வேறு தருணங்களில் திணையியல் குறித்துக் கூடுதலாக உரையாட முடிந்தது. மேலும் ஆய்வு மாணவர் சந்ரு மாயவனிடம் பகிர்ந்தேன், ”எனக்கே மிக முக்கியத் திறப்புகளை உண்டாக்குகிறது” என்றார்.
இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் எழுதியுள்ள ‘திணையியல் கோட்பாடு’ 54 பக்கங்கள் கொண்ட மிகச் சிறிய நூல்தான். ஆனால், இந்நூல் உண்டாக்கும் திறப்புகள் மிக முக்கியமானவை. பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய இந்நூல் குறித்து பாமயனிடம் உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது நீண்ட கால விருப்பம் தடாரி மூலம் சாத்தியமாகி உள்ளது. நாம் இழந்து போன பண்பாட்டுத் தளத்தைப் பெரும் நம்பிக்கையுடன் மீட்டுருவாக்கம் செய்கிறார் பாமயன். பேராற்றின் ஓரத்தில் ஒற்றைக் கூழாங்கல்லை ஏந்திய உள்ளங்கை போன்றதுதான் இவ்வுரையாடல். இனி உரையாடலுக்குள் செல்வோம்…
திணையியல் நோக்கிய உங்களின் பயணம் எப்போது தொடங்கியது?
1990களில் பூவுலகின் நண்பர்கள் அமைப்புடன் செயலாற்றியபோது சூழலியல் பற்றிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்து வந்தோம். அப்போது என்ற சொல்லுக்குச் சரியான சொல்லைத் தேடியபோது திணை (Eco) என்ற சொல் பொருத்தமாக அமைந்தது. அதனால் அதைப்பற்றிக் கூடுதலாக தமிழ் செவ்விலக்கியங்களைக் கூர்ந்து படிக்கத் தொடங்கினேன். அது முதல் இதுபற்றிப் பேசியும் எழுதியும் வந்தேன். மார்க்சிய அறிஞர் கோவை ஞானி, ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், தமிழ்நாடு பசுமை இயக்கச் செயலாளர் அரங்கராசன் ஆகியோர் எனக்கு நல்ல ஊக்கமளித்து இதைப் பற்றிக் கூடுதலாக எழுதத் தூண்டினார்கள்.
சூழலியலின் ஒரு பிரிவான திணையியல் தற்போது மெய்யியலாக விரிவாக்கம் பெற்றுள்ளது குறித்தும், இது இலக்கியங்களில் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பது குறித்தும் கூறுங்கள்?
திணையியல் என்பது செய்யுளியல் (கவிதையியல்) அல்லது பாவியல் (poetic) சட்டகம் மட்டுமல்ல அஃது ஓர் ஆழமான மெய்யியல் முறைமையாகும். இதை வேறொரு வகையில் சொல்வதால் சூழல் அதாவது வாழிடம், மக்களின் அகத்தின் உணர்வுகள், அவை வாழிடத்துடன் கொண்டிருக்கும் புறத்தின் உறவுகள் என்று தெளிவான முறையியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டகமாகும். இது பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் வகையில் ஆழமாக வேர்கொண்டுள்ளது. இதை நாம் ஆழமாகப் பார்க்கத் தவறிவிட்டோம். திணை என்பது முதலில் வாழும் நிலம், காலம், (முதற்பொருள்) தெய்வம், உணவு, மரங்கள், விலங்குகள் (உரிப்பொருள்) ஆகிய சூழலியல் கூறுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
இரண்டாவதாக, உணர்வுலகத்துடன் அதாவது அகத்தின் எழும் உளவியல் உணர்வுகளும் அதன் தொடர்புடைய மெய்ப்பாடுகளும் எவ்வாறு சூழலியல் பாங்குகளுடன்(pattern) ஒத்திசைவாய் அமைகின்றன என்று விளக்குகிறது. மூன்றவதாக சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள், தொழில், கல்வி, பயணம், போர், அமைதி போன்றவற்றில் உள்ள நெறிமுறைகள், அறக்கோட்பாடுகள் யாவும் இயற்கையின் இயக்கத்துடன் இணைந்து எவ்வாறு உருப்பெற்றுள்ளன என்று விளக்குகிறது.
திணையியல் நிலம் பொழுது என்ற இயற்கைசார் அறிதலியலாக அல்லது மெய்காண் இயலாக அல்லது அறிவுத் தோற்றவியலாக அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள சூழல் அமைவு, பண்பாடு ஆகியவற்றின் சாரத்தில் இருந்து உருவாகும் அறிதல்முறை என்று இதை விளக்க முடியும். திணைக் கோட்பாடு, உண்மை, அழகு, அறம் என்ற பட்டறிவின்படியான மெய்யியல் பார்வையைக் கொண்டு தற்போது முன்னிலைப்படுத்தப்படும் அருவமான சிந்தனைவயப்பட்ட கோட்பாடுகளுக்கு ஓர் அறைகூவலாக விளங்குகிறது.
ஒவ்வொரு திணையும் அண்டத்தின் இசைவோட்ட முறையில் அதாவது நிலம், பருவம், நாள் ஆகியவற்றோடு நேர்கோட்டு முறையில் அல்லாமல் ஒரு சுழற்சி முறையில் பிணைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் இயங்குமுறையை எதிரொளிக்கும் கண்ணாடியாக திணை அமைகிறது.
சூழலியல், பொருளியல், அரசியல் முதலிய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்த, புதிய உலகம் ஒன்றை உருவாக்கும் பண்பாட்டு வேர்களில் இருந்து கிளைத்த, முழுமையான சிந்தனை முறையாக திணைக் கோட்பாட்டைக் காண முடியும்.
அடிப்படையில் திணைக் கோட்பாடு நிலம், பொழுது, மரங்கள், விலங்குகள், மனவுணர்வுகள் முதலியவற்றின் இருப்பு நிலைமைக்குரிய நுண்திறன் மிக்க மெய்யியல். அனைத்து உணர்வுகளையும், நடவடிக்கைகளையும் திணையுடன் அறநெறிப்படி பிணைக்கிறது. ஆனால் மேற்கத்திய செவ்வியல், புத்தியல் சிந்தனைகள் உண்மை நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய கருத்துரைப் புனைதல்களையும், பொதுவிதிகளையும், களநிலவரத்திற்கு அப்பாற்பட்ட தருக்கப் பார்வைகளையும் கொண்டிருக்கின்றன.
பிளேட்டோ ‘என்றும் மாறாத நிற்றிய பூதவுலகிற்கு அப்பாற்ற கருத்துகள் உள்ளன’ என்று உறுதிப்பட நிறுவ முயன்றார். ‘ஒரு மரமோ, ஒரு செயலோ அல்லது ஒரு வடிவமோ இந்த மாறாத கருத்தின் நிழல்களே’ என்று கூறினார். ‘அழகு, நீதி, நன்மை வடிவங்கள் ஆகிய கருத்துகள் களநிலைமைகளையோ, பண்பாட்டுக் கூறுகளையோ அல்லது நடப்புகளையோ சாராமல் தனித்து இயங்கும் தன்மை கொண்டவை’ என்றும் கூறினார்.
மெய்யான அறிவு, புலன்களின் பட்டறிவில் இருந்து உருவாவதில்லை என்றும், மெய்யியல் இயற்கையான வாழ்க்கையில் இருந்து வருவதில்லை என்றும், ஆழமன ஆன்மச் சிந்தனையில் இருந்து தோன்றும் என்றும் பிளேட்டோ விளக்கிச் சென்றுள்ளார்.
இது முற்றிலும் திணைக்கோட்பாட்டிற்கு எதிர்நிலையில் உள்ளது. இதேபோல தெகார்தே ‘நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்’ என்று சிந்தனையை, புலன்வழி அறிவில் (அனுபவத்தில்) இருந்து அப்புறப்படுத்துகிறார். புலன்களால் பெறப்படும் துய்ப்புணர்வுகள், வரலாற்று அறிவுகள் ஐயத்திற்குரியன. எனவே ஐயமில் அறிவு ஒன்று வேண்டும் என்று கருதி, அதுவே சிந்திக்கும் செயல்பாடாக இருக்கும் என்று கருதினார். சிந்தனை என்பது பொருள், உடல், பண்பாடு, சூழல் என்று எதையும் சாராத ஒன்றாக இருக்கும் என்பது தெகார்தேயின் கருத்து.
தாமஸ்கோப்ஸ், இம்மானுவல் காண்ட் போன்றவர்கள் பேசிய ‘அறிவொளித் தாராளவியம்’ (Enlightenment liberalism) என்பது இயற்கைச் சூழலையும், சிந்தனையையும் பிரித்தே நோக்குவதாகும்.
ஆனால் தமிழ் மரபில் இயற்கையும் மக்களும் பிரிக்க முடியாத கூறுகள். இப்படியான ஒரு தெளிவான மண் சார்ந்த மெய்யியல் தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே உருவாகி வந்துள்ள நிலைமையை நாம் பார்க்க முடிகிறது. தொல்காப்பியம் வரையறுக்கும் முதல், உரி, கருப்பொருள் எல்லாம் இயற்கையும் மக்களும் கலந்து உறவாடி ஒரு வாழ்வியலை அமைக்கின்றன. அதுவே திணை என்று ஆகிறது. எளிமையாகச் சொன்னால் திணையியல் என்றால் இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்வைப் பற்றிய ஆய்வு எனலாம். திணைக் கோட்பாடு என்பது இயற்கையுடன் இணைந்து வாழும் நெறி என்பதாகும்.
கருப்பொருள்கள் நிலம் மாறினாலும் மாறலாம், ஆனால் தலைமக்கள் இடம் மாறக்கூடாது என்பது எதன் அடிப்படையில்?
கருப்பொருள்கள் நிலம் மாறினாலும் மாறலாம் ஆனால் தலைமக்கள் இடம் மாறக் கூடாது என்ற அடிப்படையில் தமிழ் முன்னோர்கள் அதைத் தனியாகப் பிரித்துள்ளனர். அதாவது திணையில் உள்ள தொழிலைத் தலைமக்கள் பின்பற்றுவர். அந்தத் தொழிலே அவர்களை அடையாளப்படுத்துகிறது. பிறப்பு அடையாளப்படுத்துவதில்லை.
‘எந்நிலமருங்கும் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்’ – (தொல்: பொரு: 21)
பெயர் சூட்டலில் அதாவது அடையாளப்படுத்தலில் திணையை மிகவும் இன்றியமையாத ஒன்றாக தொல்காப்பியர் சுட்டுகிறார், எந்த நிலத்தில் யார் இருக்கின்றனரோ அந்த நிலத் திணையின் பெயரையே அவர்கள் பெறுவார்கள் என்கிறார் அவர்.
‘ஏனோர் மருங்கினும் எண்ணுங்காலை
ஆனாவகைய திணைநிலைப் பெயரே’ – (தொல்: பொரு: 23)
கருப்பொருள்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவு தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு அதாவது உயிருள்ளவற்றோடு உயிரற்றவற்றோடு கொண்டிருக்கும் உறவுதான் திணையம் என்பதாகும். இந்த உறவுகளை நுட்பமாகப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் சூழலில் இயங்கும்போது அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உறுதிப்பாடு ஏற்படுகிறது. முக்கோணத்தின் மூன்று முனைகளாக உள்ள முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் தமக்குள் கொண்டிருக்கும் உறவு வகிக்கும் பொறுப்பு என்பவை இன்றியமையாத காரணிகளாகும்.
சங்க இலக்கியங்கள் முழுவதும் இதற்கான சான்றுகளைத் தேடிக் காண முடியும்.
‘எரிமருள் வேங்கை இருந்த தோகை’ (ஐங்குறுநூறு: 294)
அதாவது வேங்கை மரத்துள் இருந்த மயிலை இப்பாடல் குறிக்கின்றது.
இதேபோல மாமரத்திற்கும் குயிலுக்கும் இருக்கும் உறவு பதிவு செய்யப்பட்டுள்ளது,
குயிலும்
‘தேம்பாய்மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்’ அகம்: 341
பனைமரத்துடன் அன்றில் பறவைக்கு இருக்கும் நெருக்கம் அகநானூற்றில் உள்ளது,
‘பராரைப் பெண்ணை சேக்கும் கூர்வாய்
ஒருதனி அன்றில்’ (அகம்: 305)
யா மரத்தில் இருக்கும் பருந்து,
‘பருந்திருந்து
உயாவிளி பயிற்றும் யா’ (அகம்: 19)
இப்படி பறவைகளுக்கும் மரத்திற்கும் உள்ள உறவு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் அதன் வாழிடத்திற்கும் உள்ள உறவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் முதரில் செறியும்’ (அகம்: 6)
நீர்நாய் தனது மறைவிடமான புதருக்குள் சென்று ஒளியும் காட்சியை அகம் கூறுகிறது.
இதேபோல பல்வேறு உயிரினங்களும் அவற்றின் வாழிடத்திற்கும் உள்ள உறவுகள் மேலும் பல ஆய்வுகளுக்கு இட்டுச் செல்கின்றன.
‘வாழிடம்’ மட்டுமல்லாது ஒழுகலாறு என்பது திணை என்ற தமிழ்ச் சொல்லுக்கு எவ்விதத்தில் ஆழமான பொருளைத் தருகிறது?
திணை என்ற சொல் ‘திண்’ என்ற வேர்ச்சொல் அடிப்படையில் உருவானதாகும்.
திண் – திண்ணை – திணை, கூட்டம், கூடுதல். 73
திண் – திணை = திரட்சி, கூட்டம், குலம், பகுப்பு, குலவொழுக்கம், ஒழுக்கம். 74
‘திண்’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் செறிந்த, வலிமையான என்ற வகையில் கையாளப்பட்டுள்ளது.
‘செறிவுடைத் திண் காப்பேறி வாள்கழித்து’ (பட்: 226)
– செறிந்த வலிய பாதுகாப்பு
‘பூணாகம் திளைப்பத் திண்காழ்’ (திருமுருகு.32)
செறிவு என்பதன் பொருள் திரட்சியானது என்று நேரடியாகக் கொண்டாலும் அதன் நுட்பமான பொருள் உறவு என்பதாகும்.
திருக்குறளில் செறிவு என்ற சொல் கலத்தல், கூடுதல், புணர்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
புதிது புதிதாக அறிய வரும்போது நமது அறியாமை உணரப்படுவதுபோல செம்மையான அணிகளைக் கொண்ட தலைவியோடு கூடும்போதெல்லாம் விருப்பம் அதிகரிக்கிறது.
‘அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு’ (குறள் – 1110)
செறிந்தவர் என்றால் அருகில் இருப்பவர் என்று பொருள். ‘தம் பக்கத்து நெருங்கி வந்தவர்களையெல்லாம் விலகி நிற்கச் செய்து’ என்ற பொருளில் பெரியபுராணம் கூறுகிறது,
‘செறிந்தவர் தம்மை நீக்கி’ (பெரியபுராணம்: 589)
முருகனை வழிபடும் வெறியாடல் புரியும் பெண்களுடன் நெருக்கமாகச் சென்று என்று பட்டினப்பாலை கூறுகிறது.
‘வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்’ (பட்:155)
இப்படியாக திணை என்ற சொல் திணிந்த, செறிந்த என்று விரிந்து திணை என்றும் பொருள் கொள்ளப்பட்டது.
‘திணை என்னும் பலபொருளொருசொல் ஈண்டு மக்கள் தன்மையாகிய ஒழுக்கத்தை உணர்த்திநின்றது.77
ஒழுக்கம் > ஒழுகலாறு.
மக்கட்சுட்டுடையார் தமது நாகரிகமும் பண்பாடும் காலந்தொறும் வளர்தற்கேற்ற விதிமுறைகளை வகுத்து அவற்றுள் செறிவுற்று ஒழுகலின் அவ்வொழுகலாறு திணை எனப்பட்டது.’78
இவ்வாறாக பாவலரேறு பாலசுந்தரம் விளக்குகிறார்.
ஒழுக்கம் என்ற சொல் கூட ‘ஒல்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக பாவாணர் குறிப்பிடுவார்.
ஒல் > ஒல்கல் என்பதற்குப் பொருந்துதல்
‘வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு
ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும்’ (தொல்: எழு:115)
ஒல்வழி என்பதற்கு பொருந்தும் வழி என்றும், இணையும் வழி என்றும் பொருள்.79
‘ஒக்கல்’ என்பதற்கு சேர்ந்தவர் அல்லது சுற்றத்தார் என்று பொருள் உண்டு. ஒத்த தன்மை கொண்டதால் அவர் ஒக்கல் என்று ஆனவர்கள்.
செறிவு, இணைதல், திரள்வதால் என்று திணை பல பொருள் ஒரு சொல்லாக அறியப்பட்டது.
எனவே திணை என்பது ஒரு தொகுப்பான கூட்டமாகும். கூட்டத்தின் செயல்பாடுகள் ஒழுகலாறுகளாக அறியப்படுகின்றன. இப்படியாக திணை என்ற சொல் இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள் என்ற பல பொருள்களைக் கொண்டு திகழ்கிறது.
குலமும் ஒழுக்கமும்
நிலமும் திணை என நிகழ்த்தும் கிளவி (திவா:11:101)
மா, திணை, வேலி, நிலம் என்ற பொருளில் வரும்
மாவும் திணையும் வேலியும் நிலமெனல் (பிங்: 4:30)
குடி, திணை, விழுப்பம், ஒழுக்கம், குலம் என்ற பொருளில் வரும்
குடி திணை விழுப்ப மொழுக்கங் குலமெனல்.(பிங்: 5:228)
விடப்படாத்திணையே மாவேவேலி பூநிலநாற்பேரே (சூடா: 5:4)
திணை என்பது நிலமும் ஒழுக்கமும் ஆகும்.
திணை நிலங் குல மொழுக்க (சூடா: ணகரவெதுகை: 17)
இவ்வாறாக திணை என்ற சொல் ஒழுகலாறு என்று மலர்ச்சி பெற்றுள்ளது.
இயற்கைக் கோட்பாடான திணையக் கோட்பாடு மாந்த விடுதலைக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயிரின விடுதலைக்கும் எவ்வாறு வழிகாட்டுகிறது?
மனித நேயம் என்ற சொல்லாட்சி 14 ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது பற்றிய பார்வைதான் மிகவும் முற்போக்கான பார்வை என்று இதுவரை அறியப்பட்டு வந்துள்ளது. இச்சொல் மேற்குலச் சிந்தனை மரபில் தோன்றியது, குறிப்பாக மறுமலர்ச்சிக் காலம் என்று அறியப்படும் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் உருவான கருத்தாக்கம். இச்சொல் 1350களில் ஆங்கில மொழியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதற்கு முன்பு இச்சொல் பயன்பாட்டில் இல்லை. 137
மனித உரிமைகள் பற்றிய கூற்றுகள், வால்டேர், ரூசோ, மாண்டஸ்கியூ போன்ற பிரெஞ்சு அறிஞர்கள் மூலம் பரவலானது,
மத சகிப்புத்தன்மை, சிந்தனையின் சுதந்திரம், அறிவு பரவல் ஆகியவற்றை வலியுறுத்தினார். அவர் “அனைவரும் சிந்திக்க, பேச, எழுத சுதந்திரம் பெற வேண்டும்; அதுவே மனித குலத்தின் அடிப்படை” எனக் கூறினார். மனிதகுலத்தின் முன்னேற்றம் அறிவியல், கல்வி, பகுத்தறிவு மூலமே சாத்தியமென வால்டேர் முழங்கினார். மதம் அல்லது அரசின் அடக்குமுறை மனிதநேயத்தைக் கெடுக்கும் எனக் கண்டித்தார் 138.
இப்படியான முற்போக்குப் பார்வைகள், மனிதநேயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாக உருவாகின. மனிதர்களை முதன்மையாகக் கொண்டதாகும். இதற்கான துறைகள் மேற்கத்திய அறிவுலகத்தில் உருவாகி பெரிதாக வளர்ந்தன. மனிதர்களின் வாழ்க்கை, அவர்களுக்கான பொருளியல் என்ற அடிப்படையில் மனிதர்களை இயற்கையின் மாபெரும் உயிரியாகக் கணித்து இதை உருவாக்கினார்கள். அதன் விளைவாக மனிதர்களுக்கே எல்லாம் என்ற எண்ணம் உருவாகியது.139
ஆனால் திணை மெய்யியல் என்பது மக்களிடம் மட்டுமல்லாது மற்ற உயிரிகளிடத்திலும் அன்பு செய்யும் உயிர்மநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.
மாந்த நேயத்தையும் தாண்டிய விரிவான பொருளைக் கொண்டது உயிர்ம நேயம். ‘வாடிய பயிரைக் கண்டபோது வாடிய’ வடலூர் வள்ளல் பெருமகனாருக்கு முந்தைய சிந்தனை மரபு இதுவாகும். இன்றைய மாந்தனை நடுவப்படுத்தும் (Anthropocentric) சிந்தனைப்போக்கின் விளைவாக எழுந்துள்ள சிக்கல்கள் உலகத்தையே முடிவிற்குக் கொண்டுபோகும் நிலைவந்துள்ளது. 140 அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்பதைத் தமிழ் அறம் உறுதி செய்கிறது.
பொதுவான அறிவியல் என்பது மாந்த குலத்தின் மகிழ்ச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்பது என்பதேயாகும். இயற்கையை வென்று அதை அடக்கி மாந்தன் தனது மகிழ்ச்சியைத் துய்த்துக் கொள்வதே உச்சமட்ட நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தப் போக்கால் பல பக்க விளைவுகள் தோன்றின. இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் என்பதோடு வளங்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டது. தோண்டத் தோண்ட கன்னெய் கிடைக்கும் என்று ‘அறிவியல்’ கூறினாலும் நடைமுறையில் அந்தப் புதுப்பிக்க முடியாத வளங்கள் தமக்குரிய அளவோடு நின்றுவிட்டன. தொழில்மயம் அதன் விளைவாக ஏற்பட்ட மீத்தொழில்நுட்பம் வளர்ந்தன. ‘தொழில் பரட்சியால்’ உயர்தட்டு நடுத்தட்டு மக்களின் வருமானம் நுகர்வைப் பெருக்கியது. மாந்தர்களைத் தவிர வேறு யாரும், எதுவும் அழிக்கப்படலாம் என்ற கொள்கை உருவானது.
நீடித்த நிலைபேற்றுப் பொருளியல் (Economy of Permanence) பற்றி குமரப்பா விரிவாக ஆய்வுகள் செய்து வெளியிட்டார். மாந்தன் மட்டுமே வாழ்வதற்கான இடமன்று இந்த உலகம், எண்ணற்ற உயிரினங்கள் வாழ்வதற்கு உரிமை பெற்றது. வரைமுறையில்லாமல் காடுகளை அழித்துக்கொண்டே போவதும், நிலத்தைத் தோண்டிக் கொண்டே செல்வதும், தவளை முதல் பூச்சிகள்வரை யாவற்றையும் கொன்றொழித்துக் கொண்டே போவதும் சரியான போக்கல்ல, இது அறமல்ல என்ற கருத்தை முன்வைத்துப் பல அறிஞர்கள் பேசத் தொடங்கினர். மாந்தன் பேராற்றல் மிக்கவன் அல்லன், இயற்கைதான் பேராற்றல் மிக்கது என்று எதிர்க் குரல் கிளம்பியது. ஜேம்ஸ் லவ்லாக் என்ற அறிஞர் இந்த பூவுலகம் உயிருள்ளது, ‘கையா’ என்ற தாயாக உள்ளது என்றார்.142 ஆர்னி நாஸ் என்பவர் மாந்தன் இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரியில் ஒரு கண்ணிதான், பிற கண்ணிகளுக்கு ஏதாவது ஊறு ஏற்படுமானால் அது மாந்த குலத்தையும் பாதிக்கும் என்றார். அத்துடன் இந்த முழுமையான சூழல் மண்டலம் (உலகும் அதிலுள்ள உயிர்களும்) மாந்தனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை கொண்டது (the living environment as a whole has the same right to live and flourish) என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டில் இந்த அறிஞர்கள் முன்வைக்கும் கருத்துகளை நமது பண்டை அறிஞர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகவும் நுட்பமாக அறிவித்துள்ளனர்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் ‘எல்லா உயிர்க்கும்’ என்ற சொற்றொடரைக் கையாண்டுள்ளது. ஒரு செல் உயிரி முதல் ‘பேராற்றல் மிக்க’ மாந்தன் வரை அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இந்தத் திருக்குறளில் கருத்து அப்படியே அறிஞர் ஆர்னிநாசின் வரிகளில் காணப்படுகிறது.
‘பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ (புறம்:192)
பெரியோரை வியந்து பாராட்டலும், சிறியவரை இகழ்ந்து பார்த்தலும் இல்லை என்று விளக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் இப்படியான உயிர்ம நேயக் கருத்துகள் விரிவாகக் காணப்படுகின்றன.
அன்பு செய்தலும் அருள் செய்தலும் வாழ்வின் அடிப்படை நெறிமுறைகளாகும். அனைத்து உயிர்களின் மீதும் நேயம் கொள்வது அடிப்படை. உயிர்களின் தோற்றம் பற்றிப் பார்க்கும்பொழுது உடலில் (மெய்) இருந்து உயிர் தோற்றம் பெறும், உயிர்களின் இருப்பு என்பது அன்பின் வழியாகவே அமைகிறது. உடம்பில் இருந்து உயிர் தோன்றுகிறது, அந்த உயிரின் இயக்கம் அன்பினால் ஆகியது.
மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே (தொல்:எழு:18)
அந்த உயிர்களின் நிலைப்பாடு அல்லது உயிர்களின் தன்மை என்பது அன்பின் வழியால்தான் அமையும். அப்படிப்பட்ட அன்பு இல்லாத உடல் எலும்பின் மீது தோலைப் போர்த்திய அளவில்தான் இருக்கும். எனவே உயிர்கள், அன்பு செய்வதற்காகவே தோற்றம் பெறுகின்றன.
‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு’ (குறள்:80)
இன்றைய அறிவியல் துறையும் அவ்வாறே கூறுகிறது.
‘நே’ என்ற ஓரெழுத்தே ஒரு சொல்லாகவும் உள்ளது. இதற்கு அன்பு, அருள் என்ற பொருள் உண்டு.
‘நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக் கவுரியர் மருக!’ (புறம்.3 )
என்று இரும்பிடத்தலையார் என்ற புலவர் நேஎ என்ற சொல்லை அன்பிற்கான பொருளில் பயன்படுத்துகிறார்.
நேஎ + அம் = நேயம் என்று சிறப்புப் பின்னொட்டுப் பெற்று பயன்படுத்தப்படுகிறது.
உயிர்மநேயம் என்ற கருத்தாக்கம் மனித விடுதலையை மட்டுமல்லாது அனைத்து உயிர்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்கிறது.
மாற்ற இயலாத அமைவை, எந்தச் சூழலில் மாற்றினால் நீடித்து இருக்காது. அது திணைமயக்கமாவது மட்டுமன்றி, அந்நிலத்தின் கருப்பொருளாகவும் கருதப்படுவது குறித்து இந்தப் பேரண்டம் என்ற புடவி ஒரு சீரான இசைவியக்கத்தில் இயங்கி வருகிறது. உயிர்கள் இந்த ஓட்டத்தில் பிறக்கின்றன, வளர்கின்றன, மறைகின்றன, மீண்டும் பிறக்கின்றன. ஆனால் மனிதச் சமூகம் இந்த இசைவியக்கத்தில் பல தடைகளையும், குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த இசைவோட்டம் என்ற இயக்கம் ஓர் அமைவாக உள்ளது. அமைவு (system) வேறு அமைப்பு (structure) வேறு. அதாவது ஒரு கட்டிடம் என்பது அமைப்பு, செரிமான மண்டலம் என்பது அமைவு. தானாக இயங்கும் தன்மை கொண்டது அமைவு. அமைப்பில் நீங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்யலாம். ஆனால் அமைவில் உள்ள ஒரு அலகைத் துண்டித்தாலோ மாற்றினாலோ அமைவு இயங்காது.
இந்தப் புடவி (பிரபஞ்சம்) குறிப்பிட்ட இசைவியக்கத்துடனும், பாங்கியலோடும், சுழற்சி முறையிலும் (பகல்-இரவு, பருவங்கள், கோள்களின் சுற்றுப்பாதைகள், பருவச் சுழற்சிகள்) இயங்கி வருகிறது.
இந்த இசைவியக்கங்கள் தாமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அவை இயற்கை விதிகளால் இயங்குகின்றன. (ஈர்ப்பு விசை, வெப்ப இயக்கவியல் போன்றவை)
மனிதத் தொழில்நுட்பம், எவ்வளவு முன்னேறியிருந்தாலும், இந்த ஓட்டங்களுக்குள் செயல்படுகிறது, அவற்றுக்கு வெளியே அல்ல.
புடவியின் ஓட்டத்தை இன்றுள்ள அறிவியல் நுட்பங்களால் எளிதில் மாற்ற இயலாது. அவ்வாறு ஓர் இசைவியக்கம் குலையுமானால் பேரண்டம் தன்னைச் சீர்செய்து கொள்ளும்.
புத்துலக அறிவியல், மீவுயர் தொழில்நுட்பங்கள் (மரபீனிப் பொறியியல், விண்வெளிப் பயணம், செயற்கை நுண்ணறிவு) பன்னெடுங்காலமாக உருவாகி வந்துள்ள திணை ஒழுங்குகளை (காலநிலை, சூழல் அமைவுகள், மரபியல் வளம்) மாற்றி வருகின்றன. ஆனால் இந்த மீநுட்பங்கள் மூலம் காலம், ஈர்ப்புவிசை, காடு, கடல், மலை ஆகியவற்றின் ஒருங்கிணைவு போன்ற இயற்கை விதிகளைத் திருப்பி எழுதவோ, திருத்தி எழுதவோ முடியாது.
எடுத்துக்காட்டாக இந்தப் பூமியை மாசுபடுத்தலாம். ஆனால் கரிமச் சுழற்சி சமன்பாட்டைச் சீர்படுத்துவது கடினம். மானுடச் சமூகம் அவ்வளவு பேராற்றலை இன்னும் பெறவில்லை. ஒரு குறிப்பிட்ட தங்களது வாழ்வியல் இசைவியக்கத்தை வேண்டுமானால் குலைத்துக் கொள்ள முடியுமேயன்றி, பேரண்ட இசைவியக்கத்தைக் குலைக்க இயலாது
சங்க இலக்கியத்தைச் சூழலியல் முறையில் எவ்வாறு அணுகுவது?
சங்க இலக்கியமே சூழலை அடிப்படையாகக் கொண்டதுதான். அகத்திணை, புறத்திணைகள் சூழலியல் பெயர்களையே பெரிதும் கொண்டுள்ளன. நிலம், பொழுது, உணவு, மா, மரம், புள் என்ற கருப்பொருள் அமைவு யாவும் சூழலை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. எனவே சூழலியல்முறையில் சங்க இலக்கியங்களைச் சிறப்பாக அணுக முடியும்.
மரபுசார்ந்த கல்வியியல் உலகம் திணையவியல் என்னும் கருத்தாக்கத்தை இலக்கிய வகைப்பாடு என்பதோடு மட்டுமல்லாமல், விரிந்த பார்வையுடன் கூடிய மெய்யியல் என்பதைக் காணத் தவறியது ஏன்?
‘தமிழர்களுக்கு என்று தனித்ததொரு மெய்யியல் சிந்தனை உள்ளதா?’ என்று பலரும் பல காலங்களாகக் கேட்டுக்கொண்டே வருகின்றனர். வேதங்களில் இருந்துதான் மெய்யியல் சிந்தனை தமிழ் மக்களுக்கு வந்தது என்று நாகசாமி போன்ற வைதீக ஆதரவாளர்கள் ஒருபுறம் கூறிவருகின்றனர். மறுபுறம் வைதீகத்தை மறுத்த அறிஞர்கள் தமிழர்களுக்குப் புத்த மதமும், சைன மதமும் வந்த பின்னர்தான் மெய்யியல் சிந்தனை வந்தது என்று கூறி வந்தனர்.
இந்த இரண்டு பார்வைகளையும் மறுத்து, தமிழர்களுக்கு மூத்ததொரு மெய்யியல் சிந்தனையாக ஆசீவகம் இருந்துள்ளது என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களும் மற்ற சில அரிதான அறிஞர்களும் எடுத்துரைத்தார்கள். ஆனால் ஆசீவகத்தைத் தோற்றுவித்த மக்கலிக் கோசாலர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர் என்று வாதிடும் பலர் உள்ளனர். குறிப்பாக ஏ.எல் பாசம் மக்கலிக் கோசர் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர் என்று கூறுகிறார். விக்கிபீடியா தமிழ்ப் பதிப்பில் மக்கலிக் கோசர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது. ஆனால் அதே விக்கிபீடியா ஆங்கிலப் பதிப்பு மக்கலி கோசாலர் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர் என்கிறது!? இந்த முரண்பாடுகள் இன்றும் உள்ளன.
மதங்களில் இருந்துதான் இந்திய மெய்யியல் சிந்தனை தோற்றம் பெற்றதாகச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஃகெகல் போன்ற அறிஞர்கள், இந்தியா, சீனா போன்ற கீழைத் தேயத்தவர்களுக்கு மெய்யியல் சிந்தனை மரபு என்ற ஒன்று இல்லவே இல்லை என்று ஒரே அடியாக அடித்துத் தள்ளிச் சென்றுவிட்டனர்.
தமிழ்ச் சிந்தனை மரபு, வைதீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அறிஞர் இராதாகிருஷ்னன், நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களால் நிறுவப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், பேராசிரியர் க.கைலாசபதி இதற்கு மாற்றான ஒரு சிந்தனையை முன்வைத்தார். தமிழ்ச் சிந்தனை மரபு என்பது சமயம் சாராத தன்மை கொண்டது என்று நிறுவினார். அகம் – புறம் என்ற பிரிவை விளக்கி அதற்கான தரவுகளை முன்வைத்து வைதீக மரபில் இருந்து மாறுபட்டது என்று விளக்கினார்.
க.கைலாசபதி முதன்முதலாக சங்க இலக்கியத்தைச் சமற்கிருத வழிபாடு அல்லது பக்தி மரபுகளின் தாக்கம் இல்லாமல் மக்கள்மய நோக்கில் ஆராய்ந்தார். இதன்மூலம் சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் உண்மை வெளிப்பாடுகள் என்பதை உறுதியுடன் தெரிவித்தார்.
அகம் – புறம் என்ற பிரிவை ‘காதல் -வீரம் அல்லது போர்’ என்ற எளிய இருமைக் கட்டமைப்பாக உலகளாவிய ஆய்வாளர்களுக்கு எடுத்துரைத்தார்.31
ஆனால் அன்றையச் சூழலில் சங்க இலக்கியத்தின் அகம் – புறம் என்ற செழுமையான தளத்தை, ‘காதலும் போரும்’ என்ற எளிய இருமையாக பேரா.கைலாசபதி சுருக்கிப் பார்த்ததால் செவ்வியல் இலக்கியத்தின் மெய்யியல் ஆழம் துளக்கமுறவில்லை. செவ்வியல் இலக்கியங்களில் சாரமாக உள்ள விழுமியங்கள் விளக்கமுறவில்லை.
திணை என்பது இலக்கியக் கோட்பாடு மட்டுமே என்று அணுகியதால் திணையியல் என்ற அறிவிலைக் கண்டறிய முடியவில்லை. இது அறிவியல் மட்டுமல்ல, அறிதலியலாகவும் (Epistemology), மெய்யியலாகவும் (Philosphy), மெய்யியமாகவும் (Idealogy) உள்ளது.
கடலும் கடல் சார்ந்த பகுதி நெய்தல் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் நெய்தல் (coastal) பகுதியும், கடல் (Marine) பகுதியும் சற்றுத் துல்லியமாக வேறுபடுத்துகிறீர்களே.
ஆம். தொல்காப்பியர் ‘வருணன் மேய பெருமணல் உலகு’ என்று கூறுகிறது. பெருத்த கடற்கரை மணற்பரப்புதான் நெய்தல். சங்க இலக்கியம் முழுவதும் கடலோரக் காட்சிகளே நெய்தலுக்குள் சுட்டப்படுகின்றன. கடலின் உட்புறம் என்பது வேறு திணை.
கருப்பொருள்கள் நிலம் மாறினாலும் மாறலாம், ஆனால் தலைமக்கள் இடம் மாறக் கூடாது என்பதைத் தர்க்கரீதியாக எப்படிப் பார்ப்பது?
ஏற்கெனவே கூறியதுபோல தலைமக்கள் என்ற தொழிலைக் கைக்கொள்கின்றனர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றனர். பிறப்பால் அறியப்படுவதல்லர். அது வருணாசிரம முறை. ஆனால் திணை முறை என்பது நிலமும் பொழுதும் முதன்மை பெறுகின்றன. ‘மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்’ என்பது தொல்காப்பிய நூற்பா. இதன்படி ஆயர் வேட்டுவர் என்று குறிப்புகள் இருக்குமேயன்றி, குறிப்பான பெயர் இருக்காது. பொதுப் பெயர் எல்லாம் திணைநிலைப் பெயர்கள். திணை என்பது நிலம் பொழுதை அடிப்படையாகக் கொண்டது.
உயரம் குறைந்து, மரங்கள் இழந்து நிற்கும் வறிய நிலங்கள் கோடையில் மிக மோசமாகப் பாதிப்படைவது எதனால் நிகழ்கிறது? மர வளமிக்க குறிஞ்சி முல்லை போன்றவை மாறாமல் அரை முல்லை, அரைக் குறிஞ்சி மட்டும் பாலையாக மாறும் அறிவியல் நுட்பமென்ன?
வெப்ப மண்டலப் பகுதிகளில் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே மழை கிடைக்கும். அந்த மழையின் அளவைப் பொருத்து தாவரங்கள் இருக்கும். எனவே குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்கும் மழையால் (நிலமும் பொழுதும்) அந்த இடம் மாறும். குறிஞ்சியும் முல்லையும் மாறும் இயல்பு கொண்டவை.
இந்தியச் சிந்தனை மரபை வடபுல வேத மரபு, தென்புல தமிழிய மரபு என்று காணும்போது எவ்விதமான புதிர்கள் விடுபடும்?
தென்புல தமிழிய மரபு திணை அடிப்படையிலானது. இதற்கு மூலமாக பூதிவியல் சிந்தனை உள்ளது. வடபுல உலகாய்தம் வேறு தமிழிய பூதவியம் வேறு.
காஞ்சி மாநகரில் மணிமேகலை பல சமய அறிஞர்களைச் சந்தித்தபோது பூதவாதியானவன் இயற்பியல், வேதியியல் விதிகளை விளக்குகின்றான். அத்திப் பூவையும் கருப்பட்டியையும் சேர்த்து ஊறவைக்கும்போது உருவாகும் மது பற்றிக் கூறுகிறான். பூதங்களின் சேர்க்கையே உலகு, உடல் என்பது பூதவாதிகளின் கருத்தாக உள்ளது.
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்
அவ் அப் பூத வழி அவை பிறக்கும் (மணி:27-270)
உணர்வு உள்ள பூதம், உயிரிற்ற உணர்வு இல்லத பூதம் என்று பூதவாதி புதிய விளக்கம் தருகிறான்.
பூதவாதிகள் ஐந்து பூதங்களைக் குறிப்பர், உலகாய்தர்கள் நான்கு பூதங்களையே ஏற்பர்.
உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்
உயிர்இல் லாத உணர்வுஇல் பூதமும்
அவ்வப் பூத வழிஅவை பிறக்கும்
மெய்வகை இதுவே வேறுஉரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல் (மணி: 27:276)
இந்த வரிகள் வழியாக உலகாய்தர்களும் பூதவியர்களும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய முடிகிறது.
‘மெய்யில் இருந்து உயிர் தோன்றும்’ தொல்காப்பியம் விளக்கும் அறிதல் முறை மிகவும் நுட்பமானது, தனித்தன்மை கொண்டது. மனிதர்களும் மட்டும் முதன்மைப்படுத்தும் கருத்துமுதல்வாதத்திற்கு மாற்றாக இயற்கையை முதன்மைப்படுத்தும் இயற்கை முதன்மைவாதச் சிந்தனையாகும். இன்றைய நிலையில் நுகர்வு வெறியும், இயற்கைப் பேரழிப்பும் மனித முதன்மைவாதச் சிந்தனையின் வழியானது.
‘உயிரியல் பன்மயம்’ குறித்து விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றைத் தேர்தல் போன்ற அரசியல் எவ்விதமான விளைவுகளை உண்டாக்கும்?
பன்மயம் என்பது வாழ்வின் அடிப்படை நெறிமுறைகளில் ஒன்று. உயிரியியல் வகையில் மட்டுமல்லாது, மனிதர்களின் வாழ்வியலுக்கும் பன்மயம் அவசியமான ஒன்று. மத ஒற்றைத் தன்மையால் ஏற்படும் வன்முறைக்கு மாற்று பன்மயப் பண்புகளே ஆகும்.127 இதன் பொருள் பல உயிர்கள், பொருட்கள், சிந்தனைகள், பழங்குமுறைகள் முதலியவை ஓரிடத்தில் இருக்கும் தன்மை. ஒற்றை ஒன்றே என்ற பார்வைக்கு மாற்றான பன்மையை வலியுறுத்தும் முறை. பன்மயத்தன்மை இல்லாவிட்டால் இயற்கை அமைப்பு சிதைவுறும், சமூகம் தேங்கிவிடும், பண்பாடுகள் உயிர்ப்பிழந்து போகும். பன்மயம் என்பது வகைப்பாடு பற்றியதல்ல, ஒவ்வொரு கூறும் மற்றொன்றோடு கொண்டிருக்கும் உறவின் வழியாக நீடித்த தன்மையையும், மீளுருவாக்கும் தன்மையையும் உறுதி செய்வதாகும்.
பன்மயம் என்ற கருத்தாக்கம் ஒரு கோட்பாடாக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைப் பன்மயவியல் (Diversology) என்று கூறலாம்.
திணையியல் அடிப்படைகளின் உயிரினப் பன்மயம் (Biological diversity) இன்றியமையாதது. இயற்கைக் கூறுகளான காடுகள், கடல்கள், வயல்கள் போன்ற யாவும் உயிர்ப்புடன் இயங்க வேண்டுமாயின் அவற்றில் பன்மயக் கூறுகள் இருக்க வேண்டும். குறிப்பாகச் சூழல் நீடித்து நெடுநாள் இருக்க வேண்டுவதற்கு உயிர்களின் பன்மயம் அடிப்படையானது. பன்மயம் இயற்கையின் மீளுருவாக்கத்தையும், உயிரியல் சமன்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. காட்டில் எண்ணற்ற மரபினங்களும், உயிரினங்களும், சூழல் மண்டலங்களும் இயங்கி வருகின்றன.
பல வகையான மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகளைக் கொண்ட ஒரு காடு, ஓரினப் பயிர் தோப்புகளைவிட வறட்சிக்கும், பூச்சி,நோய்த் தாக்குதலையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றிருக்கும். ஒவ்வொரு இனமும் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது, பயிர்கள் உயிர்வளியைக் வெளியிடுகின்றன, தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன, விலங்குகள் விதைகளைப் பரப்புகின்றன, நுண்ணுயிரிகள் ஊட்டங்களை மறுசுழற்சி செய்து பயிர்களுக்குத் தருகின்றன. இந்த உறவுகளின் வலையமைப்பு மண்ணை வளமாகவும், தண்ணீரைச் சுவையாகவும், காற்றைத் தூய்மையாகவும் வைத்திருக்கிறது.
பன்மயத்தன்மை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் வெள்ளம், சூறாவளிகள் அல்லது வெப்ப அலைகளிலிருந்து விரைவாக மீள்கின்றன. எடுத்துக்காட்டாக, பல்வேறு மீன் இனத்தைக் கொண்ட பவளப்பாறைகள் அழிவில் இருந்து மீண்டும் உருவாக்க முடியும், மரபீனிப் பன்மயம் கொண்ட பயிர் வகைகள் மாறிவரும் காலநிலையால் மழை, வறட்சிக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள உதவுகின்றன.
உயிரியல் பன்மயம் தவிர்த்த, பண்பாட்டுப் பன்மயம், பற்பல மரபுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், விழுமியங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன. இவை பண்பாடுகளின் நீடித்த தன்மைக்கு உதவுகின்றன. அதேபோல மொழிப் பன்மயம் உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிகளுடன் அவற்றுக்கான உலகக் கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் உள்ள அறிவுச் சொத்துகள் மிகவும் பயன்மிக்கவை.
இனக்குழுக்களின் பன்மயம் நிலம், நிறம், வாழ்முறை என்று தனித்த அடையாளங்களுடன் உள்ளன. இவர்களின் அறிவு மரபு பல வகையிலும் வாழ்க்கைக்கும் கற்றுக் கொள்ளவும் உதவும்.
சமயப் பன்மயம், பல்வேறு நம்பிக்கைகளையும், மெய்யியல் பார்வைகளையும், சடங்குகளையும் கொண்டுள்ளன. இவற்றால் உரையாடலும் ஒருவருக்கொருவர் ஏற்பளிப்பும் பெருகுகிறது.
இத்தகைய பன்மயத்தன்மையை அழிதொழிப்பதன் மூலம், தற்சார்பு அழியும், குறிப்பாக தேனீக்களின் அழிவு உணவைச் சிக்கலுக்கு உள்ளாக்கும், பழங்குடிகளின் வெளியேற்றம் மூலிகை அழிவுக்கு இட்டுச் செல்லும், சமயப் பொறையின்மையால் சண்டையும் பூசலும் பெருகும்.
உங்களுக்கும் உங்கள் மாணவரான ஆதி வள்ளியப்பனுக்குமான சந்திப்பு, உரையாடல் குறித்துப் பகிரலாமா? இந்நூலுக்கு அவர் அளித்திருக்கும் முன்னுரை குறித்து…
ஆதி வள்ளியப்பன் அவர் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நாங்கள் நடத்தும் சூழலியல் வகுப்புகளிலும், முகாம்களில் தவறாது பங்கெடுப்பார். அப்பொழுதே அவர் நுட்பமான வாசிப்புத் திறனும், கேள்வி கேட்கும் திறனும் கொண்டிருந்தார். இன்று மிகச் சிறந்த சூழலியல் எழுத்தாளராகப் பரிணமித்துள்ளார்.
அவர் என்னுடைய திணையியல் கோட்பாடு என்ற நூலுக்கு முன்னுரை கொடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது. அன்றைய காலகட்டத்தில் இருந்தே அவர் திணையியல் குறித்த ஆழமான புரிதல் உள்ளவர்.
இந்தியாவில் சமயம் சாராத மெய்மவியல் பள்ளிகள் இருந்ததற்கான சான்றாதாரங்கள் உண்டா?
திணையியல் ஒரு ஆழமான சமயம் சாரா மெய்யியல். இது தவிர பூதவியல் உள்ளது. அதுமட்டுமல்லாது பல சங்கப் புலவர்கள் குறிப்பான கணியன் பூங்குன்றன், கணிபுன் குன்றன், குடப்புலவியனார் என்று பல சிந்தனைப் பள்ளிகளைக் கொண்ட அறிஞர்கள் உள்ளனர். அந்தச் சிந்தனைகளை நாம் ஆய்வு செய்து வெளிக் கொணர வேண்டும்.
ஒரு வரிகூட எழுதாத சாக்ரடீஸ் மெய்யியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். தொல்காப்பியம் 1610 நூற்பாக்களைக் கொண்ட பெரும் நூல், இதை எத்தனை அறிஞர்கள் மெய்யிலாக அணுகி உள்ளார்கள்.
அறிவியலின் எல்லைகள் எவை. அவற்றுள் அறம் எவ்வாறு முதன்மைப் பங்கு வகிக்கிறது?
அறிவியல் அனுபவ ரீதியாக உற்றுநோக்கல், அளவிடத்தக்கத் தரவுகள் போன்றவற்றைச் சார்ந்துள்ளது. அறிவியலுக்கு அன்பு முதலிய உணர்வுகள், அழகு முதலிய பண்புகள் அறம் முதலிய நெறிகள் கிடையாது. கத்தியை வைத்து ஆளையும் வெட்டலாம், ஆப்பிளையும் வெட்டலாம். எதை வெட்டுவது என்று அறிவியலுக்குத் தெரியாது, அறவியலுக்கு மட்டுமே தெரியும்.
‘அளவிடக் கூடிய அனைத்தையும் கணக்கிட முடியாது (அன்பு, நேயம்), அளவிடக் கூடிய அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை’ என்று ஐன்ஸ்டீன் கூறுவார்.
‘அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக்கடை’ என்று வள்ளுவர் கூறுவார். இரண்டிலும் உள்ள நுட்பமான செய்தி அறிவியல் மட்டும் போதாது அறவியலும் வேண்டும்.
அறிவியல் தோற்கும் இடத்தில் அறவியல் தோன்றுகிறது என்று கூறலாம்.
மருத நிலத்தில் அதிகாரமுள்ளவர்களும், பாலை நிலத்தில் அதிகாரமற்றவர்களும் வாழ்கிறார்கள். விவசாயிகளுக்கு இருக்கும் புனிதப் பிம்பம் மீனவர்களுக்குக் கிடையாது. அப்படியென்றால் வர்ணாசிரம் திணைக்கோட்பாட்டுக்குள் சூட்சுமமாக இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
மருத நிலத்தில் உள்ள அனைவரும் அதிகாரம் உள்ளவர்கள் அல்லர். அவர்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வு என்பது உள்ளது. இன்று நாம் காணும் சமூகம் சூழல் நேய அடிப்படையிலான நிலையில் இருந்து சூழல் எதிர் அடிப்படையான சமூகமாக மாறியுள்ளது. சரியான மருதத் திணை வாழ்வு என்பது அனைத்து மக்களும் வேளாண்மையில் கூட்டாக இணைந்து உற்பத்தி செய்து பகிர்ந்து கொள்வது. ஆனால் அது இப்போது இல்லை. அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். பாலை நிலம் என்ற ஒன்று இல்லை. இயற்கையில் இசைவோட்டத்தில் இருந்து பிறழ்ந்த குறுகிய கால திணை. திணையில் வர்ணாசிரம முறை இல்லை. திணைமவியல் அணுகுமுறை (ecosystem approach) உண்டு.
வெவ்வேறு நிலப்பரப்புகளிலிருந்து பெருநகரங்களில் சங்கமிக்கும் வாழ்வு நாளுக்கு நாள் பெருக்கமடைகிறது. இச்சூழலில் திணை வாழ்க்கையை மீட்டெடுப்பதில் எவ்வாறான சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
இப்போது நாம் வாழ்வது ஏறத்தாழ நகரத் திணை என்றே கொள்ள வேண்டும். இந்தப் போக்கு பாலைத் திணை வாழ்க்கையை நீடிக்கச் செய்கிறது. தொழில்நுட்பத்தின் பெயரால் இயற்கையின் இசைவோட்டத்தைத் (Rhythm) தடுக்கும் போக்கு இது பேரழிவிற்கு இட்டுச் செல்லும். இயற்கையுடன் இணைந்து வாழ்வை நோக்கிப் பயணிப்பதே தீர்வாகும்.
சங்க காலத்தில் திணைக்கோட்பாடு என்பது தொழில்முறை சார்ந்ததாக இருந்தது. கிராமப் பொருளாதாரம் சார்ந்து பேசிய காந்தியின்கோட்பாட்டை திணைவாழ்க்கைக்கு நெருக்கமானதாகவும், நவீனமும் நகர்மயமும்தான் சமூக மாற்றத்தை, விடுதலையைக் கொடுக்கும் என்று பேசிய அம்பேத்கர், பெரியார் போன்றோரின் கோட்பாடுகளைத் திணை வாழ்க்கைக்கு எதிரானதாகவும் பார்க்கலாமா?
காந்தி, குமரப்பா போன்றவர்களின் பார்வையைத் திணை வாழ்க்கைக்கு நெருக்கமானதாகக் காண முடியும். குறிப்பாகப் பரவல்மயம் பற்றிய பார்வை அவர்களுக்கு இருந்தது. ஆனால் அறிஞர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் சாதி ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும் என்று போராடினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்களால் அதைத் தாண்டிய பார்வையை வைக்க முடியவில்லை. இன்று அவர்கள் இருப்பார்களேயானால் நிச்சயம் இந்த நுகர்வு வெறிக்கு எதிராகவும் கார்ப்பரேட் மையப்படுத்தலுக்கு எதிராகவும் பேசி இருப்பார்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நன்கு வளர்ந்த ‘சமூகம் தாங்கும் வேளாண்மை’ (community supported agriculture) இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏன் இன்னும் முயற்சி செய்யும் அளவில் இருப்பதாகச் சொல்கிறீர்கள்?
ஐரோப்பா போன்ற நாடுகளில் சமூகம் தாங்கும் வேளாண்மை வெற்றிகரமாகச் செயல்படக் காரணம் அங்குள்ள மக்களுக்குச் சூழல் விழிப்புணர்வு, உடல் நல விழிப்புணர்வு நிறைய உள்ளது.
சைவப் பூச்சி, அசைவப் பூச்சி போன்ற வகைமை எப்போது தோன்றியது?
விலங்கு உலகத்தில் மாடு போன்றவையும் புலி போன்றவையும் உள்ளது போல பூச்சி உலகத்தில் புழுக்கள் பயிர்களை உண்ணும் சிலந்திகள் பூச்சிகளையே உண்ணும். அந்த உணவு முறை என்பது நம்மிடமுள்ள சைவ/அசைவ என்ற சொல்லாடலுக்குள் எளிமையாக விவசாயிகளிடம் கொண்டு செல்வதற்காக எங்களைப் போன்றவர்கள் உருவாக்கிய சொல்லாட்சி.
செறிவூட்டப்பட்ட அரிசியை நீங்கள் வலியூட்டப்பட்ட அரிசி என்கிறீர்களே?
செறிவூட்டல் என்பது உயர்வுப் பார்வை. ஆனால் இந்த அரிசி அனைவருக்கும் நலம் தராத ஒன்று. எனவே வலிவூட்டப்பட்ட என்றால் வலிமையாக்கப்பட்டது என்ற ஒரு பொருளின் உள்ளே வலியைத் தரும் என்ற பொருளும் உள்ளதால் அவ்வாறு கூறினேன்.
Reverential Ecology, Deep Ecology இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? வள்ளலாரை ஆழ் திணையிலாளராக (Deep Ecology) எதன் அடிப்படையில் வரையறுக்கிறீர்கள்?
மாட்சிமைத் திணைமவியல் (Reverential ecology) என்பதும், ஆழ்மைத் திணைமவியல் (Deep ecology) என்ற இரண்டு பார்வைகளும் சற்று வேறுபாடுகள் உள்ளவை. இயற்கையை வணங்கி மதிக்கும் பார்வை முதல் பார்வை. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து அதைத் தோழமையுடன் அணுகுவது இரண்டாம் பார்வை. வள்ளல் இராமலிங்க அடிகள், வாடிய பயிரைக் கண்டபோது வாடிய இயற்கை நேயர். அவருடைய பல பாடல்களில் அவர் உயிருள்ளவை தாண்டி உயிரற்ற இயற்கைக் கூறுகளை நேயமுடன் அணுகியவர். எனவே அவர் ஆழ்மைத் திணைமவியர் என்று கூறுலாம்.
பயிர்கள், கால்நடைகள், மீன் போன்ற வேளாண்மை சார்ந்த அம்சங்களைப் பார்க்கும் வேளாண் சூழலியலின் (Argo Ecology) இயங்கியல் போக்கு எவ்வாறு உள்ளது?
இன்றைய வேளாண்மை உற்பத்தி முறை இயற்கைக்கு எதிரானதாக உள்ளது. இது நீடித்த வாழ்வியலுக்கு உதவாது.
சந்தை இந்திய விவசாயிகளுக்குச் சாதகமற்றுப் போனது எதனால்? இதை எவ்வாறு சீர் செய்வது? இந்திய வேளாண்மையின் தற்சார்பு அழிக்கப்பட்ட பின்புலம் குறித்துக் கூறுங்கள்.
உழவர்கள் முதலிய திணைசார் மக்களின் வாழ்வியல் சந்தைப் பொருளாரத்திற்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது. இந்த இரக்கமற்ற சந்தைப் பொருளாதாரம் அவர்களைச் சூறையாடுகிறது. சட்டம், திட்டம், கொள்கை, விளம்பரம், முதலீடு என்று யாவும் சந்தையைப் பாதுகாக்கும் முறையில் இயங்குகிறது.
இடுபொருள் யாவும் கும்பனிகளின் கைகளில் உள்ளன. குறிப்பாக பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி முதலிய புரட்சிகள் வெறும் பொருளாதாரக் கணக்கை மட்டும் பார்த்ததே தவிர, அதன் உடன் இயங்கும் சமூகவியல், சூழலியல், பண்பாட்டுக் கூறுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. இதைச் சீர் செய்ய அடிப்படை மாற்றம் தேவை.
நெல் கொள்முதலில் ஆளும் அரசு மிகப்பெரிய தோல்வியடைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நெல் கொள்முதல் மட்டுமல்ல எந்தக் கொள்முதலும் மையப்படுத்தப்பட்ட கொள்முதல் முறையில் இருக்கும்போது பெரும் தோல்வியில்தான் முடியும். உண்மையில் கொள்முதல் நிதி அதிகாரம் முதல் பகிர்வு அதிகாரம் வரை கிராம அளவில் அல்லது மாவட்ட அளவிலாவது இருக்க வேண்டும். இப்போது மாநில அளவில் கூட அல்ல இந்திய அளவில் உள்ளது. இது ஆளும் சக்திகளுக்குச் சாதகமானது, பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது. இந்த முறை இருக்கும்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே தோல்விதான் இருக்கும்.
தஞ்சையில் விளையும் நெல் பல கிலோ மீட்டர் பயணம் செய்து மீண்டும் திரும்பி வந்து தஞ்சை மக்களின் ரேசன் கடைகளுக்கு வர வேண்டிய தேவை என்ன? பல கிலோ மீட்டர் பயணம் செய்வதால் அதற்குச் சுவை கூடிவிடுகிறதா? பெட்ரோல் விரயம், கால விரயம் என்று அனைத்து விரயங்களுக்கும் நமது மையப்படுத்தப்பட்ட அரசியல் வரி வகுக்கிறது.
கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம், ஜனசக்தி ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது தடாரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.








Leave a Reply