எந்த வளைதலும், கோணலும், குனிதலும்
தேவையில்லை. நிமிர்ந்து நேராக நிற்பதில் ஒரு “தீ ” தோளுயர்த்தி அடையாளமாகின்றது.
(அ)
ஓர் உள்ளார்ந்த உறவில்
உண்மையைத் தேடாமலிருக்கும் போது
சுவாரசியமாகத்
தீ தன்னைக் கரைத்துக் கொள்ளும்.
(ஆ)
அதிகாரத்தை
எவ்வழியில் எதிர்கொள்ளலாம்
என்ற கேள்வியில்
நற நற வெனப்
பற்களில் சிக்கிய துணுக்குகளைத்
தீ கடித்துத் துப்பியது.
(இ)
காட்டிற் பற்றிய பெருந்தீக்கு
விசாரணை எனும் முடிவுகள்
என்றும் அழுவதில்லை.
(ஈ)
நெடும் வரிசையில்
எத்தனை நெளிதல், பணிதல்
கைக்கூப்பல்?
பிறந்தநாளென்பது
பதவிக்கல்ல…
எனத் தீ
அட்டகாசமாய்ச் சிரித்தது.
(உ)
சாலைகள் அமைதியாகின
பையச் சென்று குளிர்ந்த குரலில்
தீ சற்று இளைப்பாறுங்களென்றது.
(ஊ)
கைநிறைய நிறைய
அள்ளிக்கொண்டு ஓடுவதால்
யாதொன்றுமில்லை.
அங்குமிங்குமாக அலையும் தீயில்
எத்தனையோ மௌனங்கள்
நீர் தெளிக்கப்படுகின்றன.
(எ)
ஓர் அழகான காதல் சம்பவத்தில்
சொற்களை மெலியச் செய்து
தீ உருகி வழியும்.
(ஏ)
ஒரு சீண்டுதல்
சிணுக்கு அழுகையாயிற்று
எந்த அலட்டலுமில்லாமல்
தீ சொடுக்குப் போட்டு
நெட்டி முறித்தது.
(ஒ)
நம்முள்ளிருந்து
ஓர் அந்நியன்/ள்
பதுங்கி நின்று
கட்டளையிடுவார்கள்
அதிலிருந்து
வெளிநடப்புச் செய்பவர்களை
தீ குளிர்ந்த பார்வையால்
கொண்டாடும்.
(ஓ)
விண்ணப்பமென்பது
ஓர் உறுதிமொழியை முறியடித்தலெனக்
கடுங்காற்றில்
தீ கொஞ்சம் களைப்பாறியது.
(ஔ)
சிறு குழந்தையின்
கண்களில் தெரியும்
வெளிச்சத்தில்
தீ ஆர்வமாய்
நின்று பற்றுகின்றது.
Art : Jon Jaylo








Leave a Reply