தமிழ்நாட்டிலுள்ள சமூகச் சூழலில் மிகப் பின்தங்கிய ஜாதிகளுக்கும் கீழானதாக, எல்லா நிலைகளிலும் விடுதலையையும் மேம்பாட்டையும் தொலைத்துவிட்ட சமூகமாக குலத்தொழில் ஜாதியினரான வண்ணார் மருத்துவர் இருப்பதை விளக்கத் தேவையில்லை. எந்தச் சாதாரணருக்கும் புலப்படும் ஒரு சமூக யதார்த்தம் அது.
விடுதலை என்பதன் இரு கூறுகளாக 1. சிவில் உரிமை, 2. அரசியல் உரிமை ஆகியவற்றை புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். சேலம், தர்மபுரி, கரூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊர்களில் ஜாதி இந்துக்களால் குலத்தொழில் ஜாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட ஜாதிய வன்முறைகளோடு குலத்தொழில் ஜாதியினர் மீது சுமத்தப்பட்டிருக்கிற கொடூரம் போன்றவை குலத்தொழில் ஜாதியினர் அனுபவிக்கும் சிவில் உரிமைகளின் தன்மையை விளக்குபவை.
அரசியல் உரிமை என்பது சட்டம் இயற்றுவதில் பங்கு கொள்வதற்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் உள்ள உரிமையாகும். சமுதாய வாழ்க்கை நிலை பெற்று முன்னேறுவதற்கும் அல்லது நடப்பதற்கும் தேவையான நிலைமைகளை வகுப்பதில் நேரடியாகவும் தீவிரமாகவும் பங்கு எடுப்பதுதான் வாக்குரிமை. புரட்சியாளர் அம்பேத்கரின் மேற்கண்ட விளக்கங்கள் தெளிவுபடுத்துவது போல்தான் குலத்தொழில் ஜாதியினர் நிலைமை இருக்கிறதா? தங்கள் சமுதாய வாழ்க்கை முன்னேறுவதற்கும் அல்லது நடப்பதற்கும் தேவையான நிலைமைகளை வகுப்பதில் நேரடியாகவும் தீவிரமாகவும் குலத்தொழில் ஜாதியினர் பங்கு இருந்திருக்குமானால் நூற்றாண்டு காலமாய் நிலைமைகள் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்குமா? குறைந்தபட்சம் சுடுகாட்டுப் பணிகளில் குறிப்பிடத்தக்க அளவில் வண்ணார் மருத்துவர் தொடர்ந்து கொண்டிருப்பார்களா?
நவீனத் தொழில்நுட்பம் வண்ணார் மருத்துவரின் முதுகெலும்பை முறித்தது என்றால் அதை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தூண்டிவிட்டு துணை போனது. இதர கைத்தொழில்களான கைத்தறி போன்றவை நசிந்து போது அரசும் இதர ஜாதி இந்துக்களும் அவர்களின் வாழ்வுக்கு முட்டுக் கொடுக்க எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது வரலாறு. மிகப் பின்தங்கியவர்களில் அடுக்கிய மூட்டையில் அடிமூட்டை குலத்தொழில் ஜாதியினர் என்பதால் அவர்களைப் பொருட்படுத்தும் பொறுப்பை அன்றிலிருந்த அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. வெளியில் இருந்து வந்த மிஷினெரிகளும் அவர்களைப் புறக்கணித்து சக மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை விடவும் அய்ம்பது அறுபது ஆண்டுகள் பின்தங்கியிருக்கத் தங்களால் ஆனதைச் செய்தார்கள். விளைவு சமூகத்தின் கடைக்கோடியில் அதன் ஒட்டுமொத்தக் கொடூரங்களையும் சுமப்பவர்களாக வண்ணார் மருத்துவர் வாழ்ந்து வருகிறார்கள்.
1954 ஆம் ஆண்டில் பட்டியல் சேர்க்கை கோரிக்கையை வண்ணார் சம்மேளனம் என்ற அமைப்புதான் தமிழ்நாட்டில் முதன்முதலில் முன்வைக்கிறது. அன்றிலிருந்து களத்தில் இருக்கும் வண்ணார் மருத்துவர் அமைப்புகளாலும் பட்டியல் சேர்க்கை கோரிக்கை வலியுறுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன.
பட்டியல் சேர்க்கை என்று அடிமட்ட வகுப்பினர்கள் கோருவது என்பது அவர்கள் புதிதாக எதையும் கேட்டுவிடவில்லை. இக்கோரிக்கை ஆதிக்க உறுப்பினர்களின் வகுப்புவாதத்திற்கு எதிராகப் பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தும் கோரிக்கையை ஆகும். இடஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாதுகாப்பையும் மற்றும் அதன் நலன்களை உத்திரவாதப்படுத்துவதையும் கொண்ட ஓர் ஏற்பாடாகவே புரட்சியாளர் அம்பேத்கர் கருதினார். இன்று வண்ணார் மருத்துவர் வகுப்பினர் போராடுவதற்கும் இவை காரணங்கள்.
வண்ணார், மருத்துவர் வகுப்பினருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையைத் தெளிவாக எடுத்துக்காட்டி வருவதால் பாதுகாப்பு என்பது குறித்த கேள்விகள் அநேகமாக யாருக்கும் இருக்காது. ஏற்கெனவே இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கும் நிலையில் குலத்தொழில் ஜாதியினர் அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் குலத்தொழில் ஜாதியினர் நலன்கள் பாதுகாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பது போன்ற அம்சங்கள் சிலருக்கு இருக்கக்கூடும். அவற்றைத் தெளிவுபடுத்த சிலவற்றை இங்கே அலசுவது தேவையான ஒன்று.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்யக்கூடிய பல்வேறு அலகுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு குழுவும் அதனதன் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் அதிகாரப் பதவிகளில், பொருளாதாரத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பதே அதன் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்யும் ஒரு அம்சமாகும். எனவே வண்ணார் மருத்துவர் வகுப்பினர் பிரதிநிதித்துவம் பல்வேறு புலங்களில் எந்த அளவில் இருக்கிறது என்பதைக் காண்பதன் மூலமே அச்சமூகத்தின் நலன்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிய முடியும்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டின் ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் முக்கியத்துவம் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ஆஇஅதிமுக ஆட்சிக்காலத்தில், திமுக ஆட்சிக் காலத்தில், குலத்தொழில் ஜாதியினருக்குச் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், திமுக ஆட்சிக்காலத்திலும், ஆஇஅதிமுக ஆட்சிக்காலத்திலும் சட்டமேலவை உறுப்பினராக குலத்தொழில் ஜாதியினர் இருந்திருக்கிறார்கள். மொத்தத்தில் எக்காலத்திலும் வண்ணார் மருத்துவர் வகுப்பினர் 1920 முதல் இன்று வரை சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பது முகத்தில் அறிவதாக உள்ளது. மேற்கண்ட தரவுகள் வண்ணார் மருத்துவர் வகுப்பினர் பிரதிநிதித்துவம் அரசியல் அதிகாரம் என்பதில் எந்த அளவிலே இருக்கிறது என்பதை உணர்த்தப் போதுமானவை.
இப்படி எல்லா நிலைகளிலும் (கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், அதிகாரம் போன்றவற்றில்) தமக்குரிய பங்கை அனுபவிக்க முடியாமல் வஞ்சிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதால் பொருளாதார ரீதியாகவும் வாழ்நிலைகள் சார்ந்தும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்காரணங்களை முன்னிட்டே குறிப்பிட்ட மாதிரியான ஜாதிய வன்கொடுமைகள் வண்ணார் மருத்துவர் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அறியாமை இருள் அவர்களிடம் மண்டிக் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இருந்து மீளும் வழியாக தங்களுக்குரிய பங்கைக் கோரிப் பெறுவது என்கிற முயற்சியில் குலத்தொழில் ஜாதியினர் இறங்கினார்கள். இம்முயற்சியில் முக்கால் நூற்றாண்டு காலத்தைத் தொட்டு விடக் கூடிய நிலையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அட்டவணையில் 115 துணை ஜாதிகள் உள்ளன. ஒவ்வொரு துணை ஜாதியும் தனது சொந்த அடையாளத்தையும் இருப்பையும் கொண்டுள்ளது. 1936 இல் பட்டியல் வகுப்புகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பட்டியல் ஜாதிகள் வரையறுக்கப்பட்டன. 1947 இல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் வரையறுக்கப்பட்டன. புதுவை யூனியன் பிரதேச அனுபவ வெளிச்சத்தில் தமிழ்நாட்டிலுள்ள வண்ணார் மருத்துவர் வகுப்பினரைப் பட்டியல் வகுப்பினர் பட்டியலில் இணைப்பதில் தர்க்க நியாயம் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது.
அ.தீண்டத்தகாத / அரைத் தீண்டத்தகாத குழுக்களின் கொள்கை
ஜாதியமைப்பு முறை சமூகத்தைத் தீண்டத்தக்க மற்றும் அரைத் தீண்டத்தகாத தீண்டத்தகாத குழுக்காகப் பிரித்தது. நான்கு வர்ணங்களுக்குத் தீண்டத்தகாதவர்களாக பஞ்சமர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். நான்கு வர்ணங்களுக்குள் வண்ணார் மருத்துவர் அரைத் தீண்டத்தகாதவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால் தூய்மை, தீட்டு ஆகிய பார்ப்பனிய மதிப்பீடுகள் சூத்திர ஜாதிகளிடையேயும் கசிந்து பரவி அவற்றை தீண்டத்தக்க மற்றும் அரைத் தீண்டத்தகாத குழுக்காக பிரித்தது.
ஆ. சார்ந்து வாழும் கொள்கை :
மரபான ஜாதிய மதிப்பீடுகள் வண்ணார், குறவர், நரிக்குறவர் என்று பிளவுபடுத்தி தனித்தனி வாழிடங்களில் (தெருக்களில்) கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு கூட்டமாய் வாழ்பவர்களைச் சார்ந்து வாழ்பவர்கள் அந்தக் குழுக்களோடு இணைந்து அடையாளம் காணப்படுகிறார்கள்.
இ. இணை ஜாதிகள் கொள்கை :
ஜாதியமைப்பு முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஜாதிகளை வாழும்படிச் செய்திருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்தாலும் சம அந்தஸ்துள்ள ஜாதிகள் ஒரே குழுவாகக் கொள்ளப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட ஜாதிகளைத் தெரிந்தெடுப்பதற்கு இத்தகைய இணை ஜாதிகள் ஒரே குழுவாகச் சேர்க்கப்படுகிறார்கள்.
ஈ. பொதுப் பெயர் கொள்கை!
ஒரு குலத்தின் முக்கிய அம்சமாகப் பொதுப் பெயர் திகழ்கிறது. அவை பொதுவான வரலாறு, பொதுக் கடவுள் போன்றவற்றை உடையவையாகத் திகழ்கின்றன. இடஒதுக்கீட்டில் பயன்கள் இவ்வாறு பொதுப்பெயர் உடைய குழுக்கள் இடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
உ. பரம்பரைத் தொழில்களில் சமநிலைக் கொள்கை :
துணை ஜாதிகளின் பரம்பரைத் தொழிலே ஜாதிப் படிநிலையில் அடிப்படையாக இருந்து வருகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் வர்ண தர்மம் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை நிர்ணயித்து புனிதம், தீட்டு என்ற கருத்துக்களின் படி அவற்றை விளக்கவும் செய்தனர். பரம்பரைத் தொழில்களின் அடிப்படையில் குலத்தொழில் ஜாதிகள் இடஒதுக்கீட்டில் பயன்களைப் பகிர்ந்தளிக்கப்பட குழுக்களாகப் பகுக்கப்பட்டனர்.
குலத்தொழில் ஜாதியினரான மருத்துவர் வகுப்பினரின் பரம்பரைத் தொழிலாக மருத்துவம் பார்த்தல் இருந்து வருகிறது. இடைக்காலத்தில் முடித் திருத்தும் தொழிலும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டது. கெடுவாய்ப்பாக குலத்தொழில் ஜாதியினரின் மக்கள் தொகை குறித்து துல்லியமான கணக்கு என்பது இல்லை. குலத்தொழில் ஜாதியினர் ஒதுக்கப்படுதலுக்கும் இழிவுக்கும் உள்ளாக சதுர்வர்ணத்தவரால் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் புதுவை காங்கிரஸ் அரசால் 1995 இல் இந்திய அரசுக்குப் பட்டியல் வகுப்பினர் பட்டியலில் இணைத்திடப் பரிந்துரை செய்யப்படுவதற்கு முதற்காரணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியவர்களாக குலத்தொழில் ஜாதியினர் இருப்பதாக புதுவை காங்கிரஸ் அரசு கருதியதுதான் என்று குறித்து உரைக்கிறார் சமூகவியலாளர் எஸ்.கே.அந்தோணி பால்.
பார்ப்பனியம் அகமணமுறை கொண்ட பல்வேறு குழுக்களாக மக்களைப் பிரித்து படிநிலையிலான தரங்களில் அவர்களை வைத்து கல்வி, சொத்து, அரசு அதிகாரம் முதலியவற்றை மிகச் சில உயர்ஜாதியினரின் கைகளில் உள்ள தனி ஆதிக்கமாக மாற்றியது. இந்த ஏற்றத்தாழ்வு தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தது. திராவிட இயக்கத்தின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சம வாய்ப்புகளை அளிக்கும் விதமாக
இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. செங்குத்து அடுக்காக ஓர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியின் மேல் மற்றொன்றாக வைக்கப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பயன்களைச் சமமாய்ப் பகிர்ந்தளிக்க இக்கொள்கையால் முடியாததன் விளைவாக, தமிழ்நாட்டில் எம்பிசி ஜாதிகளுக்குள்ளே இடஒதுக்கீட்டுப் பயன்களின் முடிவில் புதிய ஏற்றத்தாழ்வுகள் உருவாகின.
தொழில்களின் தரவரிசைப்படி வர்ண தர்மம் ஜாதிகளுக்கு இடையிலான சமூக ரீதியான தூரத்தை நிர்ணயித்தது. வண்ணார்களின் பரம்பரைத் தொழில் சலவைத் தொழிலாகும். இடைநிலை ஜாதிகளின் பரம்பரைத் தொழில் விவசாயம். வண்ணார்களின் தொழில் தூய்மைற்றதாகவும், இடைநிலை ஜாதிகளின் தொழில் தூய்மையானதாகவும் தரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே வண்ணார்களுக்கும் இடைநிலை ஜாதிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளின் குறியீடாக விளங்கும். அவர்களின் வசிப்பிடங்களுக்கு இடையிலான தூரத்தையும் நிர்ணயித்தது. அவர்களின் பரம்பரைத் தொழில் மீதான தூய்மை, தீட்டு ஆகிய கருதுகோள்கள் இடைநிலை ஜாதிகள் மற்றும் வண்ணார்களுக்கும் இடையிலான சமூக மற்றும் பௌதீக ரீதியிலான தூரத்தை நிர்ணயித்தது. வண்ணார்கள் இடைநிலை ஜாதிகளுக்கு அடுத்ததாக வசிக்கிறார்கள். குறவர்களின் வசிப்பிடங்கள் இடைநிலை ஜாதிகளின் வசிப்பிடங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைக்கப்படுகின்றன. பல்வேறு ஜாதிகளின் வசிப்பிடங்களுக்கு இடையிலான தூரம் என்பது ஒரு ஜாதியை மற்றொன்றில் இருந்து பிரிக்கும் பார்ப்பனியத் தந்திரத்தின் படி அமைந்தது. வண்ணார்களுக்கும் இடைநிலை ஜாதிகளுக்கும் இடையிலான பிளவைச் சுட்டிக்காட்டுவதாகவும் இதுவே அமைகிறது.
ஒவ்வொரு ஜாதியும் ஒரு தனித்த அடையாளத்தையும், குறிப்பிட்ட பிரச்சினைகளையும் உடையது. தங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கவனிக்கவும், தங்கள் சொந்த ஜாதியின் முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பிற ஜாதிகளுக்கு அடித்தளம் இடுவதாக இதுவே அமைகிறது. தனித்த பிரச்சினைகளுக்கு, தனித்த அடையாளத்திற்கான அமைப்புக்கு துணை ஜாதி தலைமை ஏற்படுவதை, படிநிலையாக அமைக்கப்பட்ட இந்தியச் சமூகத்தில் இந்த அடையாளங்கள் தொடரும்வரை தவிர்க்க முடியாது.
ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் உரிமைகளை சமயக் கண்ணோட்டத்திலிருந்தே காங்கிரசாரும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் அணுகினர். அவர்கள் இந்துக் கோவில்களுக்குள் நுழைவதைத்தான் அவர்களுக்கு உரிய முக்கியமான உரிமைப் போராட்டமாகக் கருதினாரே அல்லாமல், நீருக்கும் நிலத்துக்கும் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கும் அவர்கள் நடத்திய போராட்டங்கள் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் இவையே முக்கியமானவகையாக இருந்தன. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் மாண்புக்காகவும் அவர்கள் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் யாவுமே அவர்களது வாழ்வுரிமைகளை முன்வைத்து நடத்தப்பட்டவையாகும்.
அரசியல் அமைப்புச் சபை உறுப்பினர்களில் பலர் ஜாதியை முழுமையாக ஒழித்து விட முடியாது என்ற புரிதலின் அடிப்படையிலேயே இயங்கியதாகத் தெரிகிறது. ஜாதி தொடர்பான செயல்பாடுகளைப் பொது வாழ்க்கையில் தலை தூக்காமல் இருக்கச் செய்தால் போதும் என்ற குறைந்தபட்ச இலட்சியத்தையே அவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் இன்றுமே ஜாதியச் செயல்பாடுகள் பொது வாழ்க்கையில்தான் நிகழ்கின்றன. ஜாதிப் பாகுபாடுகளைப் பொது வாழ்க்கையில் உறுதி செய்வதன் மூலம்தான் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிலைநிறுத்தப்படுகின்றன.
இன்று வரை தொடரும்பிணத்துக்குச் சவரம் செய்வது, சுடுகாட்டில் இறந்த தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பது முறையெல்லாம் இதைத்தான் செய்கிறது. மேலும் சட்டங்கள் இருந்தாலும் கூட, ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் உரிமைகளைப் பொது வாழ்க்கையில் நம்மால் முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. தனி வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, ஜாதியை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை நம்மால் மறுக்க முடியாது.
பொதுவாக, குறிப்பிட்ட சமூகத்தை மக்களே அடிமைப்படுத்த பலவந்தமும் வன்முறையும் கையாளப்படுவது வழக்கம். இவை மூலமாகத்தான் ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ள முரண்பாடு நிரந்தரமாக்கப்படுகிறது. ஆனால் சுத்தம், அசுத்தம் போன்ற எதிர்வுகளைக் கொண்டு சடங்குரீதியான, ஆச்சார ரீதியான விளக்கங்களை உருவாக்கி அடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் போது, அதன் உள்ளுறைகளாக உள்ள வன்மும் ஒடுக்குமுறையும் சட்டென்று புலப்படுவதில்லை. இதனால் அடிமை நிலைமைகளை எதிர்க்கும் செயல்பாடுகள் பெரும் கிளர்ச்சிகளாக வெடிப்பதில்லை. இதன் பொருள் குலத்தொழில் ஜாதியினர் எப்போதும் தம்மீது சுமத்தப்பட்ட நியதிகளையும் வேலைச் சுமைகளையும் மெளனமாக ஏற்று வாழ்ந்தனர் (வாழ்கின்றனர்) என்பதல்ல. வரலாறு நெடுக அவர்களுக்கு எதிராக வன்முறை ஏவப்பட்டதிலிருந்து (இப்போதும் இது நடக்கிறது) அவர்கள் தம்மை ஒடுக்கும் அதிகாரத்தை சுரண்டலை எதிர்த்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ஆனால் இத்தகைய எதிர்ப்புச் செயல்களால் சமுதாய உறவுகளை எல்லாச் சமயங்களிலும் அவர்களால் மாற்றியமைக்க முடியவில்லை. ஆதிக்க ஜாதியினரின் வன்மம் மட்டுமின்றிச் சடங்கும் சம்பிரதாயமும் குறுக்கே நின்று ஜாதி அமைப்பின் அழிவைத் தேடிய செயல்பாடுகளை முடக்கின.
Art : collections.vam
பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.








Leave a Reply