விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆணவக் கொலைக்குத் தனிச்சட்டம் கோருகின்றன. அண்மையில் முன்னாள் தமிழக பாஜக தலைவரும் அதே கோரிக்கையில் இணைந்தார்.
ஆணவக் கொலைக்குத் தனிச்சட்டம் தமிழ்நாட்டில் தேவையா? என்பது குறித்த எவ்விதமான சட்ட விவாதங்களும் இதுவரை முழுமையாக நடந்தேறவில்லை.
அண்மையில் நடந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் படுகொலை என்பது ஒரே ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல.
இளவரசன், கண்ணகி முருகேசன் மற்றும் கோகுல்ராஜ் ஆகியோரின் படுகொலைகள் உள்ளிட்ட பல படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இதை ‘ஆணவக் கொலை’ அல்லது கௌரவக் கொலை என்ற சொல்லால் அடையாளப்படுத்த முடியாது. இவை சாதிவெறிக் கொலைகள். தமிழ்நாட்டில் நடக்கும் இந்தச் சாதிவெறிக் கொலைகளில் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த கணிசமான எண்ணிக்கையினர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று தயக்கமின்றிக் கூறலாம்.
தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான இந்துச் சமூகங்கள் உள்ளன. அவற்றில் 76 பட்டியல் சாதியினர், 36 பட்டியல் பழங்குடியினர், 252 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 41 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 68 பட்டியல் நீக்கப்பட்ட சமூகங்கள் உள்ளன. இவை தவிர உயர் சாதிகளாகவும் ஏராளமான அகமணச் சமூகங்கள் உள்ளன. எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்ற ஏழு தொகுதிகளைக் கொண்ட நூல் தொகுப்பில் ஆயிரத்திற்கும் மேல் எண்ணிக்கையில் இந்துச் சமூகங்களைப் பட்டியல் செய்துள்ளார். இந்தச் சமூகங்கள் ஒவ்வொன்றும் அகமணச் சமூகங்கள், தங்கள் சமூகத்தில் உள்ளவர்களோடு மட்டுமே திருமண உறவைப் பேணுகின்றன.
இந்துத் திருமணச் சட்டம் அத்தை மகள், மாமன் மகன் திருமணங்களைத் தடைசெய்கிறது, இருப்பினும் தென்னிந்தியாவில் இது வழக்காறு என்ற நடைமுறையால் காப்பாற்றப்படுகிறது. தாய்வழி மாமாவின் மகள் அல்லது தந்தை வழி அத்தை மகள்களைத் திருமணம் செய்வது தமிழ்நாட்டில் ஒரு வழக்கமான நடைமுறையாகும். முறைப்பெண் திருமணங்கள் தமிழ்நாட்டில் ஏராளம் நடந்தேறுகின்றன. பல தென்னிந்தியச் சமூகங்களில் தாய் தனது மகளை தம்பிக்குத் திருமணம் செய்வதும் நடைமுறையில் உள்ளது. பாதித் தமிழ்த் திரைப்படங்கள் முறைப் பெண் திருமணத்தை மையமாகக் கொண்டுள்ளன.
நர்மதை நதிக்கு வடக்கே அத்தை மகள், மாமன் மகன் திருமணம் செய்த தம்பதியைக் கொல்ல ஒரு முழு கிராமமும் ஆயுதம் ஏந்துவதைக் காண்பது அரிதல்ல. 2019 ஆம் ஆண்டில் கௌரவம் மற்றும் பாரம்பரியத்தின் பெயரில் திருமணச் சுதந்திரத்தில் தலையிடுவதைத் தடை செய்யும் ஒரு சட்டத்தை ராஜஸ்தான் கொண்டு வர முயற்சித்தது. இந்த மசோதா இன்னும் சட்டமாக மாறவில்லை. விந்திய மலைக்கு வடக்கில் நடக்கும் கௌரவக் கொலைகள் பெரும்பாலும் நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்வதால் நடப்பவை.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலை என்று அழைக்கப்படும் பெரும்பாலான படுகொலைகள் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தால் தண்டிக்கக் கூடிய வன்கொடுமைக் கொலைகளாகும். வன்கொடுமைச் சட்டம் அக்கொலைகளைத் தடுப்பதற்கான விரிவான வழிமுறைகளையும் வன்கொடுமைகளைக் கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் வழங்குகிறது.
சமூகச் சிந்தனையாளரும் கல்வியாளருமான டாக்டர் வசந்தி தேவி, முற்போக்கான அரசு ஊழியரும் இந்திய அரசின் முன்னாள் செயலாளருமான பி.எஸ்.கிருஷ்ணனை நேர்காணல் செய்த போது திரு.கிருஷ்ணன் சுதந்திர இந்தியாவில் முதல் வன்கொடுமைக் கொலை என 1957 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டார். கிருஷ்ணனின் நேர்காணல்கள் ‘சமூக நீதிக்கான அறப்போர்’ என்ற பேரில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் அருமையான நூலாக வெளிவந்தது.
எழுபது ஆண்டு கால குடியாட்சியால் இந்நோயைக் குணப்படுத்த முடியவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டில் பிறந்த போது, திரு.கிருஷ்ணன் பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையராக இருந்தார். இந்தச் சட்டம் 2015 ஆம் ஆண்டில் மேலும் கூர்தீட்டப்பட்டது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான விரிவான நடைமுறைகளையும் இச்சட்டம் வழங்குகிறது. நிலம், வேலை, கான்கிரீட் வீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்கவும் வழிவகை செய்கிறது.
தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர், இது மாநிலத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 விழுக்காடாகும். அதே விகிதம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
திருநெல்வேலியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த புத்திசாலி மாணவர் ஒருவர், ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறியோடு வளர்க்கப்பட்ட ஒரு பள்ளி மாணவரால் வெட்டப்பட்டார். நல்வாய்ப்பாகப் பாதிக்கப்பட்ட மாணவர் உயிர் பிழைத்தார். இதனால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே வன்முறையைத் தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்க தமிழ்நாடு அரசு முயற்சித்தது. அதற்கான தீர்வைக் கண்டறிய மேனாள் உயர்நீதி மன்ற நீதிபதி சந்துருவை தமிழக அரசு நியமித்தது.
சாதி வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களைக் குணப்படுத்த, பள்ளிப் பெயர்களில் இருந்து சாதி முன்னொட்டுகளை நீக்குதல், நெற்றியில் தலையில் சமூக அடையாளங்கள், வண்ண வண்ணக் கயிறுகள் அணிவது மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் பிற சாதி அடையாளங்களைத் தடை செய்தல் போன்ற தொடர்ச்சியான பரிந்துரைகளை நீதிபதி சந்துரு குழு பரிந்துரைத்தது. ஆனால் இவை நோயின் அறிகுறிகளை மட்டுமே குணப்படுத்துகின்றன எனக் கூற இயலும்.
தமிழ்நாட்டில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆண் அல்லது பெண், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருடன் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருடன் காதல் அல்லது திருமண உறவுகளில் ஈடுபட்டால், அத்தம்பதிகளில் யாராவது அல்லது பட்டியல் சமூக ஆண் அல்லது பெண் ஆணவக் கொலை செய்யப்படுகின்றனர்.
ஆனால் இந்து ஆதிக்கச் சமூகங்களுக்குள் ஆணவக் கொலைகள் மிகவும் அரிதானவை. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், கௌரவக் கொலை அல்லது சாதிவெறிக் கொலைகள் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சமூகங்களிடையே அரிதினும் அரிதானவை. உதாரணமாக வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை செட்டியார் அல்லது செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவரை நாடார் , கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவரை வன்னியர், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவரை மறவர் கொல்வது போன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை. இதுபோன்ற ஆணவக் கொலைகளை பாரதீய நியாய சன்ஹிதா என மறுபெயரிடப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் மூலம் கையாள முடியும் அதற்கு மரண தண்டனை கூட வழங்க முடியும்.
சமூகத்திற்கு உண்மையான ஆபத்து வன்கொடுமைக் கொலைகளாகும். சத்திரிய மற்றும் உயர் சாதி அடையாளங்களை மூடத்தனமாக தமிழ்நாட்டில் தேடும் அனைத்துச் சமூகங்களும் சாதிகளும் ஆணவக் கொலைகளிலும் வன்கொடுமைக் கொலைகளிலும் பங்கெடுக்கின்றன. அந்த மூடர் கூடத்தினர் வரலாற்றில் சில ஆயிரங்கள் பின்னோக்கித் தேடினால் ஆப்பிரிக்காவில் தங்கள் வேர்களைக் கண்டறிய முடியும்.
அடிப்படையில் வன்கொடுமைச் சட்டம் (Scheduled castes and scheduled tribes prevention of atrocities Act 1989) ஆணவக் கொலைகள் என்று அழைக்கப்படுவதை உள்ளடக்கிய வன்கொடுமைக் கொலைகளைக் கையாள்கிறது. இந்தச் சட்டம் ஒன்றிய அரசால் பல அரசியல் தடைகளுக்குப் பிறகு இயற்றப்பட்டது. அச்சட்ட விதிகள் 1992 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டன. விசாரணை முதல் தண்டனை வரை அச்சட்டம் பல கட்டங்களாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் கீழ் துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அனுபவமிக்கக் காவல்துறை அதிகாரி விசாரணையை நடத்தி 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடித்துச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். மேலும் எந்தவொரு மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இச்சட்டம் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறையையும் வழங்கிறது. போதைப் பொருள் வழக்குகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களில் பின்பற்றப்படும் அனுமானங்கள் வன்கொடுமை வழக்குகளுக்கும் பொருந்தும். அதனால் குற்றத்தை நிரூபிப்பது அரசுக்கு எளிதாகிறது. வன்கொடுமைச் சட்டம் பாதிக்கப்பட்டவரின் விருப்பப்படி சிறப்பு நீதிமன்றம், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகியவற்றை வழங்குகிறது. இது வன்கொடுமை வழக்குகளைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அனுபவமிக்கத் திறமையான வழக்கறிஞர்களை நீதிமன்ற விசாரணையில் அரசு தரப்பு வழக்கை நடத்த உதவுகிறது.
டாக்டர் அம்பேத்கர் தனது நூல் தொகுதியில் மதுரையின் மேலூர் தாலுகா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலித் சமூகத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட பல வன்கொடுமைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில், சில கிராமக் கோயில் பாத்திரங்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டதால் இரண்டு தலித் இளைஞர்கள் ஊரின் நடுவில் கட்டி வைத்துத் தாக்கப்பட்டனர். இந்நிகழ்வு முன்னாள் தமிழக உள்துறை அமைச்சர் கக்கனின் தாத்தாவின் தும்பைப்பட்டி கிராமத்தில் நடந்தது என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அத்தாக்குதல் அப்பகுதியில் உள்ள முழுப் பட்டியல் சாதிச் சமூகத்தினரையும் அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதியினருக்குப் பொதுக் கிணறுகள், தேநீர்க் கடைகள், பொதுக் கோயில்கள் போன்றவற்றில் அனுமதி மறுக்கப்பட்ட பல நிகழ்வுகளை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்.
பட்டியல் சாதியினரை ஊரின் பொதுத் தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றதற்காக ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த சுவாமி ஆனந்த தீர்த்தர் கடுமையாகத் தாக்கப்பட்ட நிகழ்வையும் டாக்டர் அம்பேத்கர் தன் நூல் தொகுப்பில் பதிவு செய்தார்.
சுதந்திரத்திற்கு அரை நூற்றாண்டுக்குப் பிறகும் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் வன்கொடுமை நிலைமை மேம்படவில்லை. மேலூர் தாலுகாவில் பட்டியல் சாதியினர் ஆறு பேர் கொல்லப்பட்ட மேலவளவு படுகொலைகள் நடந்துள்ளன. இதில் அவ்வூர்ப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஆதிக்கச் சமூகத்தின் கட்டளையை மீறிய பஞ்சாயத்துத் தலைவர் உட்பட கொல்லப்பட்ட அனைவரும் பட்டியல் சமூகத்தினர்.
தொண்ணூறுகளில் மற்றொரு குற்ற நிகழ்வில் உலகுபிச்சன்பட்டியைச் சேர்ந்த சிறு நில உடைமையாளரும் ஓரளவு வசதியுள்ள சந்திரன் டாக்டர் அம்பேத்கர் ஒலிப்பேழையை ஒலிபரப்பியதால் அவரை அழைத்த ஆதிக்கச் சாதியினர் சாதிப் பஞ்சாயத்தில் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்தினர்; சந்திரன் மறுத்து விட்டார். எனவே ஆதிக்கச் சாதியினர் அவரை வெட்டிக் கொன்றனர். விளிம்புநிலை மக்கள் இன்று வரை வணங்காமுடி சந்திரன் என அப்பகுதியில் அவரை அன்புடன் நினைவுகூருகின்றனர்.
மேலூர் வழக்கில் சமூகச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான பொ.ரத்தினம் வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மனிதச் சமூகங்களே வெட்கப்படக்கூடிய மேலூர் படுகொலைகள் வழக்கை மதுரை மாவட்டத்திற்கு மாற்றினார். அம்முயற்சியில் பல வழக்கறிஞர்கள் திரு ரத்தினத்திற்குத் துணை நின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இவ்வழக்கு சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இடதுசாரி சித்தாந்தப் பின்புலம் கொண்ட பிரபல வழக்கறிஞர் திரு.திருமலை ராஜன் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் குற்றவாளிகளுக்கான ஆஜரான தமிழ்நாட்டின் அனைத்துப் பிரபல குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு எதிராக நின்று அரசுத் தரப்பு வழக்கை நடத்தினார். திரு.திருமலை ராஜன் மற்றும் அவரது அணியினரின் முயற்சிகள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனையை உறுதி செய்தன.
கண்ணகி முருகேசனின் வழக்கில் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த மணமகனும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மணமகளும் திருமணம் செய்ததற்காக முழு கிராம மக்களின் முன்னிலையிலும் உயிருடன் எரிக்கப்பட்டனர். மணமகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. சிபிஐ விசாரித்த அவ்வழக்கில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது. வன்கொடுமைச் சட்டத்தில் பிரிவு 8-இல் சொல்லப்பட்ட அனுமானம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கோகுல் ராஜ் கொலை வழக்கில், சாதி அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் குற்றவாளி யுவராஜ் சக சாதி வெறியர்களுடன் கல்லூரி நாட்கள் முடிந்த சமயம் பொறியியல் பட்டதாரி ஒருவர் அந்தப் பகுதியில் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த தனது வகுப்புத் தோழியுடன் நட்புடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறியாளரான இளைஞன் கோகுல்ராஜைக் கடத்திக் கொலை செய்தனர். மேலும் சிறப்பு நீதிமன்றத்தால் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தண்டனைக்குள்ளாயினர். அத்தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன் இவ்வழக்கின் அரசு தரப்பிற்காக நடத்தினார். சில சாட்சிகளை இன்னொரு அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரித்த பின்னரும் வழக்கின் சட்டச் சிக்கல்களைக் களைந்து வழக்கை மீட்டெடுத்தார். 1989ஆம் ஆண்டு வன்கொடுமைச் சட்டம் கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க உதவியது என உறுதியாகக் கூறலாம்.
தமிழ்நாட்டில் வன்கொடுமைச் சட்டம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். தமிழ்நாடு அரசின் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் பண நிவாரணம், வீடு, நிலம் வழங்கல் உள்ளிட்ட வன்கொடுமைச் சட்டத்தின் சில விதிகள் மட்டுமே ஓரளவு பயன்படுத்தப்படுகின்றன எனக் கூறலாம்.
தமிழ்நாடு அரசு வன்கொடுமைச் சட்டத்தின் விதிகளைச் சோதிக்க திருநெல்வேலி மாவட்டத்தைத் தேர்வு செய்யலாம். வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆதிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களை நிராயுதபாணியாக்குவதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. அட்டவணை சாதிச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அட்டவணை சாதிச் சமூகங்களைச் சேர்ந்த குற்றப் பின்னணி இல்லாதவருக்குக் குறைந்தது 10,000 ஆயுத உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். நெல்லை மாவட்ட புதிய எதிர்கால குற்ற மனநிலை கொண்டவருக்கு அது அச்ச மனநிலையை ஏற்படுத்தும், குற்றங்களைத் தடுக்கும்.
அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்பைச் சுற்றி ஐம்பது அரிவாள்கள் எனக் கூறுவதைப் போல் ஆணவக் கொலைச் சட்டம் மாநில அரசின் இடுப்பில் இன்னொரு அரிவாளாகத் தொங்கும். பலமாக இருக்கும் வன்கொடுமைச் சட்டத்தையே முழுமையாகப் பயன்படுத்தவில்லை.
ஆயுத உரிமங்கள் வழங்குதல், வன்கொடுமை புரிபவர்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றம், விழிப்புணர்வு திட்டங்கள், வன்கொடுமைப் பகுதிகளை அறிவித்தல், சமூகக் கூட்டு அபராதம் போன்ற தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படாத விதிகள் தாராளமாகப் பயன்படுத்தப்படலாம். வன்கொடுமைச் சட்டத்தின் இந்த விதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இன்றுவரை அவை உறை பிரிக்காத புத்தம் புதிய விதிகளாக அரசின் அலுவல் அறைகளில் பத்திரமாக இருக்கின்றன.
ஆணவக் கொலைக்கான ஒரு மாநிலச் சட்டம் நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் அமிலத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவே. குற்றவியல் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய மாநில அரசின் பொதுப் பட்டியலில் உள்ளன. அதன்படி மாநிலத்தால் இயற்றப்படும் சட்டங்கள் பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவுடன் (BNSS) முரண்படக் கூடாது. எடுத்துக்காட்டாகப் புதிய ஆணவக் கொலைச் சட்டத்தில் முன்பிணை இல்லை என வன்கொடுமைச் சட்டத்தைப் போன்று ஒரு பிரிவைச் சேர்ப்போமானால் அது பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவுக்கு முரணாக இருப்பதாக உயர் அல்லது உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் வாய்ப்புண்டு. தமிழ்நாடு மாநில அரசின் சட்டங்கள் கிண்டியைத் தாண்டுவதே கடினம். அதனால் மத்திய அரசு அச்சட்டத்தை இயற்றுவதே சிறந்தது. தற்போதுள்ள அரசியல் சூழலின் ஆளுநரைத் தாண்டினாலும் குடியரசுத் தலைவரை அச்சட்டம் தாண்டுமா எனத் தெரியாது. ஒருவேளை தாண்டினாலும் தமிழ்நாடு நிதி நிறுவனங்கள் (வைப்புத் தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல்) சட்டம் 1997 எஸ்.பகவதி எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.டி.தினகரன், பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா மற்றும் கே.சந்துரு ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வால் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக அது ஒன்றிய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் ஒன்றிய அரசின் பல சட்டங்களுக்கு முரணானது எனவும் கூறப்பட்ட வாதத்தை அச்சட்டம் இயற்றப்பட்டு 10 வருடங்களுக்குப் பின்னர் 2007 ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றம் நிராகரித்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் அதே வாதங்கள் தொடர்ந்தன. 2011 ஆம் ஆண்டில் கே.கே.பாஸ்கரன் வழக்கில் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. மெட்றாஸ் உயர் நீதிமன்றத்திற்கு நேர் எதிராக பாம்பே நீதிமன்றம் மகாராஷ்ட்ர மாநில நிதி நிறுவன வைப்புத் தொகையாளர்கள் தொடர்பான சட்டத்தை இரத்து செய்திருந்தது.
எப்படியோ பதினான்கு ஆண்டுகள் அச்சட்டம் உறைநிலையில் நீதிமன்ற வாசல்களில் கழித்தது. நகை முரணாக ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவைச் சேர்ந்த தமிழக முன்னாள் தலைவருமான ஒருவர் ஆணவக் கொலைக்குப் புதிய சட்டம் கோருபவர்களின் பட்டியலில் இணைந்தார். ஆனால் எளிதான காரியமாக அவர் அதிகாரத் தொடர்புடன் இருக்கும் கட்சியின் ஒன்றிய அரசு அதே ஆணவக்கொலைச் சட்டத்தை ஏன் இயற்றக் கூடாது என்ற கேள்விக்கு அவர் பதிலளிப்பாரா எனத் தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்க ஹிரா சட்டம் (West Bengal Housing Regulation Act 2017) இதேபோன்ற காரணத்தால் ஒன்றிய அரசின் ரெரா சட்டத்திற்கு (Real Estate Regulation and Development Act 2016) முரணாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தால் Forum for peoples Collective Efforts and another vs State of West Bengal 2021( SCC 599 வழக்கில் ரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டமியற்ற ஒன்றிய அரசே அதிகத் தகுதி வாய்ந்தது, சக்தியும் வாய்ந்தது. அங்கு ஆளுநர் தடைகள், குடியரசுத் தலைவர் எனத் தடைக்கற்களைத் தாண்ட வேண்டியதில்லை.
சாதி வெறிக் கொலைகளை ஆணவக் கொலை அல்லது கௌரவக் கொலை என்பன போன்ற மென்மையான வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆணவக் கொலைக்குத் தனிச் சட்டம் வேண்டுமா என்ற விவாதத்தை விட முக்கியம் வன்கொடுமைச் சட்டத்தின் முழுமையான செயல்பாடே! தமிழ்நாடு அரசு இன்னும் தீவிரமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்தினால் ஆணவக் கொலைகள் அறவே அழிந்து போகும் எனக் கூறமுடியாது. ஆனால் மிக மிகக் குறைந்து போகும். அதற்கு ஆளுங்கட்சியின் அரசியல் அக்கறை போதுமானது.
Thanks for Art : newindianexpress








Leave a Reply