‘இத்யாதி’ சொற்கள் கொண்டு
இயற்றாவிட்டால்
கேள்விக்குறியாகிறது கவிதை
இமயத்தையே குடைந்து
சுரங்கம் அமைத்தாலும்
சுரைக்காய்க்கு உப்பில்லை என்றே
சொல்லிடப்படலாம்
இத்யாதிகளுக்காக
வித்யாதரம் பயின்றால்
ரௌத்திரம் அடங்கிப்
பௌத்திரத்தால் முடங்குகிறது கவிதை
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்
தழுவல்கலை கை வராமல்
மூக்கைச் சொரிந்துகொள்வதோ?
தமிழ் கவிதையில்
‘க்’ போடாத தமிழின் புணர்ச்சியில்
ஆத்திச்சூடிகள் களவாடப்பட்டு
ஆட்டுப் புளுக்கைகள் மேடை ஏற்றப்படுகின்றன
‘வளர்ச்சிதை மாற்றம்’ என்பது
வளராது, சிதைந்து மாற்றம் பெறுவதாக
வரலாற்றுக்கு லொட லொட்டைகள்
தகவல் பரிமாற்றம் செய்கின்றன
வெளிப்படை என்பதாக
நிருவாணத்திலேயே நீந்துகிறார்கள்,
கட்டுமானங்கள் எல்லாவற்றையும்
கல் அடுக்குகள் என்கிறார்கள்,
கொட்டை என்றார்கள்
பிழிவு என்றார்கள்
புட்டுப்பார்த்தால்
புண்ணாக்கு மிச்சமில்லையா என்கிறார்கள்,
கருத்து உரைக்காதே
என்று கடிந்து
உரைப்பதெல்லாம் கருத்து என்கிறார்கள்
புதுச்சொல் கேட்டார்கள்
புரட்சிச்சொல் போட்டார்கள்
புழுக்கத்தை வார்த்தார்கள்
புலம்பித் தீர்த்தார்கள்
இவை எல்லாமிங்கே
புடலங்காய் கவிதை என்றேத்தியோர்
புடலங்காயில் கவிதை என்றெழுதினார்கள்
சொல் வேண்டும் என்றார்கள்
சொல்லே வேண்டாம் என்றார்கள்
சொல்ல வேண்டாத சொற்களையே
சொல் என்றெடுத்தார்கள்
இப்படியேவா எழுதுவது
சலித்தார்கள் சரிதான்;
வீணை வாசிக்கிறேன் என்று
நவீனத்தின் நரம்பு பிடிபடாமல்
வீணாய்ப் போன கடைசியில்
எப்படி எழுதினாலும் கவிதை என்றார்கள்
கவிதை இருக்கிறது
கண்டுபிடியுங்கள் என்றார்கள்
கண்டெடுக்கத் தெரிந்தவனுக்கே
கவிதை என்றார்கள்
சுவைக்கத் தெரியாதவன் வெற்றிலைக்குச்
சுண்ணாம்பு ஒரு கேடா என்றார்கள்..
நாக்கு போடாமல்
நக்கிப் பார்த்தவர்கள்
தேன் சுவைக்கு
விளக்கம் தருவர்,
தேனின் சுவையையே
விமர்சிக்கவும் செய்வர்,
நள்யாமத்தின் பிழிவு என்பர்,
அடர்கருந் திராட்சையின் மணம் என்பர்,
அப்படியே அடுக்கடுக்காக இட்டும் கட்டுவர்
தேங்காய் எண்ணெயின்
நிறத்தூய்மை ரசித்தவனுக்குத்
தேனின் சுவைத்தூய்மை
தெள்ளத் தெளிவு.
நிழலில் உட்கார்ந்து
வெயிலின் சுத்தத்தைப் பார்த்தவனுக்குத்
தேங்காய் எண்ணெயின்
தெளிவு பிறக்கும் என்பது,
தெரிவதில்லை
இருட்டுக்குள் இருந்து
தெவிட்டுதல் பற்றித் தெரியும் என்றவனுக்கு..
அச்சச்சோ!
இந்தக் கவிதையில் கடைசியாக
என்ன சொல்ல வந்தேன்?
சரி, போய்த்தொலைகிறது விடுங்கள்
கடைசியாகக்
கவிதையில் ஏதாவது சொல்லி இருக்கிறேனா..
விதையைத் தொலைத்துப்
பழத்தைத் தின்போரது
மெழுகுமுலாம் மினுமினுப்பில்
நாட்டுக் கவிதை அல்ல
தமிழ்க் கவிதையே
தலைமுறை விருத்தியடையாது
வேறென்ன சொல்வது?
உங்களுக்கு இப்போது
கொட்டையில் ஒளிந்திருக்கும் கவிதை எனத்
தலைப்பிட்டு இருக்கலாம் என்றுதானே தோன்றுகிறது.
Art : Demetrius Goosbey
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பிறந்தவர். கவிதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தும் முதல் நூலாகப் பருக்கை எனும் நாவலை வெளியிட்டவர். ‘செத்தை’ சிறுகதைத் தொகுப்பு, “இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்” எனும் ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். இவை மூன்றுமே முக்கியமான பங்களிப்புகள். முதல் நூலுக்கே சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். தொடர்ந்து இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் மொழி, மானுடத்திற்காகச் செயலாற்றி வருகிறார். திரைப்பாடலாசிரியராகவும் முயற்சித்து வந்தவர் தற்போது பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக மாணவர்களுக்காக இயங்குகிறார். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தகக் கண்காட்சிகள், ஊடகங்கள், இதழ்களில் சிறப்பான கட்டுரைகளை அளித்திருக்கிறார். இவரது நான்கு கவிதை நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.








Leave a Reply