குடியரசு தினமும்
தேசியக் கொடியேற்றிய நிமிடமும்
மலம் நாற்றம்
தொண்டையில் நெளிய
ஊர்த் தெருவில் ஏற்றப்பட்டிருக்கும் தேசியக் கொடி கம்பத்தின்
கீழ் நின்று தூரம் பார்க்கிறேன்
என் சேரியின் முதல் தெருவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது
பீ கலந்த தண்ணீர் கொடுத்த நீர்தேக்கத் தொட்டி
முறுக்கேறிய மீசை
புடைத்த மார்பகம்
கையில் ஆளுயரக் கத்தி
காவலுக்கு நாய்
“ஏய்ய ஐயனாரப்பா
ஆடுவெட்டி கோழி அறுத்து
பொங்கல் வைச்சோம்
உனக்கு இன்னும் பசித்தீரவில்லையா
வெட்டுப்பட்டுச் சாகிறோம்
எங்க ரத்தத்தையும் நீ
திருநீறாப் பூசிக்கையா”
யார் யாரையோ
வரைந்து வைத்திருந்த
எங்கள் சேரியின் சுவர்களில்
இப்பொழுது தான்
டாக்டர் அம்பேத்கரை வரைகிறோம்
சப்பாணி மகனும்
செம்மாரி பேரனும்
வாத்தியாருக்கு படித்துக்கொண்டிருக்கிறார்கள்
டெல்லி பல்கலைக்கழகத்தில்
நேற்றைய இரவு எங்க வீட்டிற்கு
ஒரு யானை வந்தது
அச்செய்தி ஊரெங்கும் பரவியது
ஊரார்கள் பேசிப் பேசி
ஒரு யானையை
பல யானைகளாக்கிவிட்டனர்
இன்றைய இரவு
என் வீடு
ஒரு காடாகவே மாறப்போகிறது
உங்களுடைய செய்திக்காகப் பறையடித்தோம்
உங்களுடைய செருப்புக்காக எங்கள் தோலை உரித்தோம்
உன் ஊர் நாறிப்போகும் என்பதற்காக உன் மலம் சுமந்தோம்
நீ அழுகிப் போவாய் என்பதற்காக குழி வெட்டினோம்
உங்களுக்காகவே உழைத்துக் கருத்த
எங்களைப் பார்த்து “ஏய் பறப்பயலே எட்டி நில்” என்கிறாய்
காலம் தூரமில்லை ஆண்டையே
எங்கள் சேரியிலும் இப்பொழுது
பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு விட்டன
Art : Jebasingh Samuvel








Leave a Reply