Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

ரிஷி நடுத்தெருவழியாகச் செல்வதில்லை இப்போதெல்லாம்…

முத்துவேல் .
முத்துவேல் .
April 1, 2026
ரிஷி நடுத்தெருவழியாகச் செல்வதில்லை இப்போதெல்லாம்…

பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் வந்து கொண்டிருந்தான் ரிஷி. கூட்டாளிகள் கூட்டத்தில் சிதறி அங்கொருவராய் இங்கொருவராய் முன்னும் பின்னுமாய்ப் போய்க்கொண்டிருந்தனர். அந்தச் சலசலப்பு அவனுக்கு எரிச்சலூட்டுவது போலிருந்தது.

எல்லோரும் போய்விட ரிஷி மட்டும் கொஞ்சம் பின் தங்கி மெதுவாய் நடந்து வந்தான். பள்ளிக்கூடத்தின் எதிரில் நிற்கும் ஆலமரத்தின் விழுதுகளில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஆட்டு உறுப்புகளின் வீச்சம் தாங்காமல் மூக்கைச் சுருக்கி நெளித்தான். குனிந்து ஒரு கூழாங்கல்லை எடுத்தவன் சிமெண்ட் கட்டையில் நின்று புதுக் குளத்தில் எறிந்தான். எழும்பிய அதன் வட்டங்களைப் பார்த்துக் கொண்டே நடந்து பெருமாள் கோயில் குளத்துச் சாலை மேட்டில் ஏறி நின்று பார்த்தவன் சாலையோரமே வந்து வடிவேல் வெல்டிங் கடை சுவரில் சுமாராக வரைந்திருந்த அந்த விநாயகர் படத்தை எப்போதும் போல் இப்போதும் உற்றுப் பார்த்தான்.

கையில் மாடு கட்டும் கயிற்றோடு வந்த ராமாயி “இன்னடா பையா தனியா போற” எனக் கேட்டுக்கொண்டே குளத்தின் இறக்கத்தில் இறங்கிப் போனாள்.

ரேஷன் கடையைத் தாண்டி நேராக நடந்து வந்தவன் டீக்காரமூட்டு முக்கூட்டில் நின்றான். டீக்காரம்மாள் வடை போண்டா சுட்டுக்கொண்டிருந்தாள். அதன் மணம் வாங்கச் சொல்லியது அவனை. ஆனால் கையில் காசில்லை. வீட்டிற்குப் போய் ஆயாவிடம் காசு வாங்கிக்கொண்டு திரும்பி வரவேண்டும் என்று நினைத்தபடி புத்தகப் பையை நன்றாகத் தூக்கி முதுகில் போட்டுக் கொண்டான்.

கீதா கடையிலிருந்து நேராக நடுத்தெருவே பம்பாய்க்காரர் வீட்டுப் பக்கம் போக வேண்டியவன், பாலத்தின் இடது பக்கம் திரும்பி நொண்டித் தாத்தா வீட்டைக் கடந்து ராஜவேல் வீட்டு வளைவில் திரும்பி கல்லு வீட்டுத் தெரு வழியாக ஆயா வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

“இம்மா நேரம் எங்கடா போன… பள்ளிக்கொடம் வுட்டு எம்மா நேரமாச்சி”

வாசல் பெருக்கிக் கொண்டிருந்த பிரேமா நிமிர்ந்து ஈர்க்கையை இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டே கேட்டாள். அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எட்டித் திண்ணையில் பையைப் போட்டவன்

“ஆயா காசு குடுத போண்டா வாங்கப் போறன்” .

என மூக்கை உறிஞ்சியபடி பக்கத்தில் வந்து புடவையைப் பிடித்துக் கொண்டு செல்லம் கொஞ்சினான்.

“கை கால கழுவிட்டு துணிமாத்திக்கினு போடா…”

“நீ காசு குடுத மொதல்ல” என நச்சரித்தான் அவனின் அவசரம் அவளுக்குப் புரிந்தது. எக்கிலிருந்து மணி பர்ஸை எடுப்பதைப் பார்த்தவனுக்குப் பரவசமாய் இருந்தது. பத்து ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு ஓடினான்.

எந்தப் பக்கம் போகிறான் என்று பிரேமா பொணம் போற வாட்டைக்காய் வந்து சாய்ந்து பார்த்தாள். கல்லுவீட்டு தெரு பக்கமாய்த்தான் போய்க் கொண்டிருந்தான்.

இப்போதுதான் இரண்டு மாதங்களாக நடுத்தெரு வழியாக அண்ணாதுரை வீட்டுப் பக்கமாக ரிஷி பள்ளிக்கூடமோ கடைக்கோ போவதில்லை. பிரேமாவுக்கு எல்லாம் புரிந்தது. ஆனாலும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. மகள் பிரமிளாவிடவும் இதைப்பற்றி இதுவரை எதுவும் பேசியதில்லை.

பிரமிளாவை அச்சரப்பாக்கம் பக்கத்தில் பெருங்கரணையில்தான் கட்டிக் கொடுத்தார்கள். ஒரு ஆறு மாதங்கள் நன்றாய்த்தான் போனது. அவள் புருஷன் குடியிலும் சீட்டாட்டத்திலும் கஞ்சாவிலும் மூழ்கி வீட்டிலேயே விழுந்து கிடந்தான்.

இருந்ததை வைத்துக் கொண்டுத் திருப்பி குடும்பம் நடத்தினாள். பிரமிளா கடைசியாகக் காதில் கிடந்த ஒரே ஒரு மொட்டுக்கம்மலும் கூட அடமானக் கடைக்குப் போய் அவன் குடிக்கும் சொத்துக்குமானது. வேறு வழி இல்லாமல் பஸ் வேலைக்குப்போய்தான் அவனைப் பார்த்துக் கொண்டாள்.

நாளுக்கு நாள் அவனது கொட்டம் அதிகமானது. குடி கஞ்சாவோடு இன்னொருத்தியோடு உறவும் இருந்தது. இப்போதெல்லாம் அன்றாடம் வாய்ச் சண்டை இழுத்து பிரமிளாவை அக்கம் பக்கம் பார்க்க அடித்தும் போட்டான்.

வேலைக்குப் போன இடத்தில் பாஞ்சாலை அக்கா பக்கத்தில் வந்து பேசினாள்.

பிரமிளாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது கண்ணுக்குக் கீழே சிவந்து வீங்கி இடது கண் புதைந்திருந்தது.

“அடி போடி அறிவு கெட்டவளே அவுரு பெரிய மயிறு…அந்த தூமைக்கி சம்பாரிச்சி கொட்றதும் இல்லாம அடி ஒத வேற வாங்கணுமா…? புள்ளதாசின்னு கூடப் பாக்காம ராத்திரி குடிக்கூதி அதப்புல முடிய இசுத்துப்போட்டு அந்த அடி அடிக்கிறான். வந்த ஆத்தரத்துக்கு வேலிக்கத்தான் கட்டையால ரெண்டு வைக்கலான்னு பாத்தேன். இன்னா ஜென்மன்டி அதெல்லாம் அதும்பவுசுக்குக் கூத்தியா ஒரு கேடு. அது எங்க கடந்த கவுச்சடையோ த்துப்…”

ஆத்திரத்தை அடக்க முடியாமல் பாஞ்சாலை பேசியது சற்று ஆறுதலாகத்தான் இருந்தது பிரமிளாவுக்கு. கூடவே விடிகாலையில் குடித்தெளிந்து அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுது மன்னிப்பு கேட்டதைக் கேட்ட நினைப்பும் வந்து போனது.

கொஞ்சம் மனமிறங்கிப் பொறுத்துக் கொண்டாள். அந்தப் பொறுமை அன்று இரவே முடிவுக்கு வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவள் நேருக்கு நேராய் அவன் இன்னொருத்தியோடு இருப்பதைக் கண்டதும் இடிந்து நொறுங்கிப் போனாள். கை காலெல்லாம் உதற ஆரம்பித்தது. மண்டை சூடாகி வெடித்து விடும் போல் இருந்தது. மாங்கிளையிலிருந்து தவறி நெருப்பில் விழுந்த புழுவைப் போல சுருண்டு துடித்தாள். வெளி வாசலில் வந்து நின்று கலங்கிக் குமுறிக் குமுறி அழுதாள். வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கிணற்றில் போய் விழுந்து விடலாம் போல இருந்தது அவளுக்கு.

“இந்த மண்ணாதாண்டா போவ பாவி உனக்கு நல்ல சாவே வராதுடா புழு புடிச்சி தாண்டா சாவ…”

வீட்டு மேலும் அவன் மேலும் மண்ணை வாரி வாரி விட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். சத்தம் கேட்டு பாஞ்சாலை ஓடி வந்தாள்.

“இன்னடி… இன்னாடி …இருடி …” என அவன் பக்கம் திரும்பினாள்.

“யாரு பெத்த பொண்ணோ அவ ரொணத்த துன்னுட்டு அவளயே இந்தக் கொலவத பண்றேயேடா… நீதான் நல்லா இரு. வாடி பாவிமொவள…” என பிரமிளாவின் தலையிலிருந்த மண்ணைத் தட்டி விட்டு அவள் கையைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துப் போனாள்.

ஆற்றமாட்டாமல் அழுதபடியே தன் கண்ணால் பார்த்ததைச் சொல்லிக் கொண்டே வந்தாள் பிரமிளா.

“அது ஒரு லோலு பட்டு லொங்கழிஞ்ச நாயி வுட்டுத் தள்ளுடி”

“இல்லக்கா இதுக்கு மேல அவங்க கூட நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன். அப்படியே அந்த இடத்திலேயே செத்துட்டங்கா… பாவி நல்லா இருப்பானா… புள்ள மேரி பாத்தனே.”

புரியாத வலியும் வேதனையும் வாட்டி வைத்தது அவளை. இரவு 11 மணிக்கு மேலாகியும் பச்சைத்தண்ணீரைக் கூட வாயில் வைக்க மறுத்தாள். என்ன சொல்லியும் பாஞ்சாலையால் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. கண்ணில் பொட்டுத் தூக்கம் கூட இல்லாமல் துடித்தெழுத அந்த கடைசி இரவு தான் அவள் பெருகரணையில் இருந்தது.

காலையில் முதல் வண்டிக்கே புறப்பட்டு கடுக்கலூர் வந்து சேர்ந்தாள். அம்மா பிரேமாவிடம் அனைத்தையும் அழுது கொட்டினாள்.

“ஏந்தலையிலதான் அந்த பாழுங்கடவுளு இப்படி எழுதிட்டான்னா உனக்குமா? போ… வந்து சேந்துட்ட இல்ல. எந்த மயிரானும் வாணாம்… இந்தக் குடிசயில உனுக்குன்னு தனி ஒலயா கொதிக்கப்போவுது போ… ஆண்டவன நெனச்சிக்கின்னு தலயமுழுவு அந்தத் தரிகெட்டத்தூமய”

அதிலிருந்து கடுக்கலூரில்தான் இருந்தாள். ரிஷி பிறந்த பிறகும் கூட பெருகரணைக்குப் போக வேண்டும் என அவளுக்குத் தோணவில்லை. ஊர்க்காரர்கள் கூட வந்து பிரேமாவிடம் பேசிப் பார்த்தார்கள். அவளும் வேண்டாம் என்றாள்.

“அங்க போய் என்னாத்த வாரிக்கப் போறா…போங்க. ஒரு புள்ள பொறந்ததுக்கே வந்து எட்டிப் பாக்கல அந்த வறுப்போக்கு நாயி” என வேரறுத்துப் பேசினாள்.

பிரமிளாவின் தம்பி அஜித்தும் அவனது நண்பர்களும் பெருகரணைக்குப் போய் அவனைப் பார்த்தனர்.

அவன் பேசிய பேச்சும் நக்கலும் ஆத்திரமூட்ட பேச்சுவார்த்தை கைக்கலப்பில் முடிந்து எல்லோரும் ஊருக்குத் திரும்பினர்.

பிரமிளாவின் பாவம் தானோ என்னவோ அவனும் சீக்கிரமே ஒரு நாள் செத்தும் போனான்.

ஊர்க்காரர்கள் உறவினர்களென பிரமிளாவை வற்புறுத்திக் கடைசி காரியமென இட்டுக் கொண்டு போயினர். அந்த ஊர் எல்லையைத் தொட்டதும் அவளுக்குக் கண் கலங்கியது. அழுகையை அடக்கி வைத்துக் கொண்டாள்.

யாரோ ஒரு இளைஞன் ரிஷியைத் தூக்கிக் கண்ணாடி பெட்டிக்குள் இருந்தவனின் முகத்தைக் காண்பித்தான். தாலி அறுப்பது பிரமிளாவா? அவனோடு இருந்தவளா? என்ற தகராறு வந்தது இரண்டு ஊர்க்காரர்களின் பேச்சும் முற்றி அலம்பல் சலம்பல் அதிகமானது. ஆளாளுக்கு ஒன்று பேசினார்கள். பிரமிளாவிற்கு ஆத்திரம் பொங்கியது. அங்கு நிற்கவே கூசிப்போனவள் ஏதோ முடிவெடுத்தவளாய் ரிஷியைக் கையில் பிடித்துக் கொண்டு எழுந்து வெளியே தெருவுக்கு வந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தனர்‌. பிணம் எடுக்க இன்னும் நேரம் இருந்தது. கழுத்தில் இருந்த தாலிக் கயிற்றைக் கழட்டி வேலிக்காத்தான் புதரில் மேல் விசிறி கடாசினாள். கண்களில் நீர் கோர்த்துக் கலங்க ரிஷியை இட்டுக் கொண்டு பெட்ரோல் பங்க் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்றாள்.

அவனோடு வாழ்ந்த அந்த அருவருப்பான நாட்களை- நினைவை அடியோடு துடைத்தழிக்க முயன்று கொண்டேதான் இருந்தாள். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவளோடு அது தொற்றிக்கொண்டுதான் வந்தது.

அம்மா வீடும் கடுக்கலூரும் அவள் நாட்களைத் தள்ள அவ்வளவு கடினமானதாக ஒன்றும் இல்லை. பால்ய காலத்து தோழிகளும் பார்த்துப் பழகிய முகங்களுமாய் முண்டச்சி என்பதைத் தவிர அந்த வாழ்வு இலகுவாய்த்தான் இருந்தது. ரிஷியைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள் இங்கிருந்தே பஸ் வேலைக்குப் போய் வந்தாள்.

சென்னையிலிருந்து தன் கல்யாண ஏற்பாடுகளுக்காக அப்போதுதான் அண்ணாதுரை ஊருக்கு வந்திருந்தான். நிச்சயத்தோடு அவன் கல்யாணம் ஏனோ நின்று போனது. அந்த விரக்தியில் ஊரிலேயே கொஞ்ச நாள் இருந்தான். திரும்ப சென்னைக்குப் போகப் பிடிக்கவில்லை. ஊர்ப் பிள்ளைகளைக் கூட்டி டியூஷன் சொல்லிக் கொடுத்தான். அப்படித்தான் பிரமிளா ஒரு நாள் ரிஷியைக் கூட்டிக்கொண்டு அவன் வீட்டுக்கு வந்தாள்.

“அத்த…எதாத..‌. மாமா இல்ல”

“வாமா …ஒக்காரு குளிக்கிறான் தோ. வந்துடுவான்”

“யேந்த… இப்படியே இருந்தா எப்பிடி?

நின்னது நின்னுப்போச்சி…வேற எங்கனா பாக்க வேண்டி தானே”

காது கிட்டத்தில் குரல் தாழ்த்திச் சொன்னாள்.

“அத்தயேங் கேக்கற கொயந்த…அதயே நெனச்சுக்கின்னு கிலி புடிச்ச மேரி கீரான். எதயும் வாயத் தெறந்து சொல்ல மாட்றான். நொண்டியா மொடமா பட்ச்ச படிப்புக்குப் பொண்ணா கெடையாது. அவ இல்லனா இன்னொர்த்தி வுட்டு தள்றானா ஒறக்கம் புட்ச்சிக்கினு கெடக்கிறான் யம்மா. வரான் வரான் …”

“இன்னா பிரமிளா எப்படி இருக்கிற”

“எனக்கு இன்னா மாமா தோதான் இருக்கிறனே பாக்கிறயே… பையனும் டூஷன் வரன்னு சொல்றான். அதான் கேட்டுகின்னு போலான்னு வந்தேன்”

“அனுப்பு அனுப்பு…எந்த கிளாஸ்டா படிக்கிற?”

“நாலாவது மாமா. சொல்லாண்டா ஏன அங்கயே நிக்கிறான”

“வாடா” எனப் பக்கத்தில் அழைத்துத் தட்டில் இருந்த திராட்சைக் கொத்தொன்றை எடுத்து ரிஷியின் கையில் கொடுத்தான் அண்ணாதுரை.

“வாங்கிக்கடா …நைனா தாண்டா” என்றாள் பிரமிளா.

இப்படி ஆரம்பித்த அந்த உறவு தொடர்ச்சியில் எண்ணற்ற ரகசிய முடிச்சுகளை காலம் தன் கைக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்தது.

அன்றாடம் சாயங்காலம் ரிஷியோடு பிரமிளாவும் வந்தாள். அண்ணா துரையின் அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தாள். ஆட்டுக்கொட்டாயோரம் இருந்த மல்லிச் செடியைச் சுற்றிக் கொத்தி எரு வைத்துத் தண்ணீர் வார்த்து விட்டுப் போனாள். அண்ணாதுரையின் பேச்சிலும் நடத்தையிலும் அவளை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய்க் கரையத் தொடங்கி இருந்தாள்.

போலீ சமூக மதிப்பீட்டிற்குப் பஞ்சம் இல்லாத ஆண் பெண்களை அதிகம் கொண்ட அந்த ஊரிலும் அத்தனை பேரின் நவ துவாரங்களும் திறந்து கொண்டு அவர்களையே கவனித்தன. கண் காது மூக்கு வாய் வயிறு புட்டம் வைத்துப் பேசிக்கொண்டன.

திங்கட்கிழமை சாயங்காலம் பிரமிளாவும் ரிஷியும் வழக்கம் போல் வந்தனர். முழங்காலை மடக்க முடியாமல் உட்கார்ந்திருந்த அண்ணாதுரையைப் பார்த்தவள்

“இன்னா மாமா கால்ல இன்னா ஆச்சி. இன்னா அத்த இப்படி வீங்கி இருக்குது”

“கபடி வெள்ளாடப் போயி சுளுக்குப் புடிச்சிக்கினுகீதும்மா… முருவம்மா வந்து எண்ணப் போட்டு உருவிட்டு போச்சி இப்பதான்… இந்தா இத்த இனிக்கி மேல போடு… ஒலையில அரிசி போட்டுட்டு வரேன்”

என எருக்கங்கிளையை அவளிடம் கொடுத்துவிட்டு அண்ணாதுரையின் அம்மா உள்ளே போனாள். கட்டிலில் உட்கார்ந்திருந்தவனின் கால் மாட்டில் அமர்ந்து எருக்கம்பாலை இனிக்கி இனிக்கி வீங்கிய பகுதியில் போட்டு அதன் வேர் மண்ணை மேலே தூவினாள் பிரமிளா. அந்த அருகாமை அவனையும் என்னவோ செய்தது.

சட்டியில் இருந்த மீனை ஆய்ந்து கழுவி அலசி தூரமாய் ஊற்றிவிட்டு “அத்த மீனு எடுத்தாரவா” என்றாள்.

“அடி எம்மா எம்மாத்தம் சீக்கிரம் ஆய்ஞ்சிட்ட… கொழம்பயும் வச்சிட்டு பூடு…எதுனா வேல கீதா…உள்ளதான் வாயேன் கொயந்த இன்னா கூசம் உனுக்கு”

மொட்டு பிடித்திருந்த குண்டு மல்லிச்செடிக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு உள்ளே வந்தாள் பிரமிளா.

“குழி பன்னாரம் குழி பன்னாரம்னு ரெண்டு நாளா கேட்டுங்கெடக்கிறான்…எனுக்கா கொயந்த சுடத்தெரியிது. சூனாமூட்ல கூட கேட்டுப் பாத்தேன் இல்லையாம்”

குழம்பைக்கூட்டி உப்பு புளி காரம் சரியாக உள்ளதா வென உள்ளங்கையில் ஊற்றி ‘த்டா’ என நாக்கைத் தட்டி ருசி பார்த்துக் கொதித்துச் சுண்டி வரும்போது மீனைப் போடச் சொல்லிக் கிளம்பியவள்.

“செரி அத்த சரசு வூட்ல பனியாரச் சட்டி இருக்குதான்னு கேட்டுப் பாத்துட்டுச் சொல்றேன். போய் ஒல வைக்கணும் ” எனக் கிளம்பியவளை

“சாப்பிட்டுட்டு போ” என்றான் அண்ணாதுரை.

“இருக்கட்டும் மாமா” என அவன் அம்மாவிற்குக் கேட்கும்படி சத்தமாய்ச் சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்து உதட்டை முறுக்கிச் சுழித்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போனாள்.

மறுநாள் குழி பனியாரம் செய்து ரிஷியிடம் கொடுத்தனுப்பினாள். மரக்காணம் போய் வந்த அன்று வாங்கி வந்திருந்த கத்தரிப்பூ கலர் நைட்டியை ரகசியமாய் வைத்திருந்து ரிஷியிடமே கவரில் போட்டு கொடுத்தனுப்பினான் அண்ணாதுரை. ரிஷிக்கும் எழுதுப் பொருட்களும் நோட்டும் வாங்கிக் கொடுத்தான்.

அந்த நைட்டியை அணிந்து கொண்டு காலையில் கடைக்குப் போய் வந்த பிரமிளாவைப் பல் துலக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தான் அண்ணாதுரை.

தம்பியின் செல்போனை எடுத்து அவன் இல்லாத நேரமாகப் பார்த்து ஊர் வாட்சப் குரூப்பில் இருந்த அண்ணாதுரையின் நம்பரைச் சேமித்துக் கொண்டாள். இருபத்தாறு வயது உடம்பினுள் அணைந்து புகைந்து கொண்டிருந்த ஆசையும் தாபமும் மீண்டும் மெல்ல ஒளி விடத் தொடங்கியது. புதிய பட்சி ஒன்று எதுவோ உடலுக்குள் புகுந்து அவளைச் சிலிர்க்க வைத்துச் சிறகு பூட்டி விட்டது. இலையுதிர் காலத்திற்குப் பிறகு மனோரஞ்சித மரத்தின் பச்சை இலைகள் சுமந்து உடலெல்லாம் பூக்கள் பூப்பதை உணர்ந்து மிதந்தாள். ஒரு பக்கம் ரிஷியைப் பற்றிய யோசனையும் இருந்தது.

அண்ணாதுரைக்கும் அவளை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் தடையும் இல்லை. ஊர் உலகம் உறவுகள் குறித்தான எந்தக் கவலையும் இல்லை. அவனும்தான் பிரமிளா மீது பித்தேரிக் கிடந்தான். அவள்கிடக்க வைத்தாள். சர்ச் பக்கம் விறகு பொறுக்க வந்தவள் இடுப்பில் செருகியிருந்த செல்போனை எடுத்து அவன் நம்பருக்குக் கூப்பிட்டாள். கையும் மனசும் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.

“நான் பிரமிளா பேசறேன் சார்… நானும் டியூஷனுக்கு வரலாமா”

“ஓய் என்ன சொல்லு? நம்பர் எப்படித் தெரியும். திருடி. எங்க இருக்க இப்போ”

“இங்கதான் சர்ச் கிட்ட வெறுவு பொறுக்கிக் கட்டிக்கிட்டு இருக்குறேன். யாரும் இல்ல வந்து தூக்கி வுடறயா”

“ம் தோ… வரேன் அங்கேயே இரு”

அப்படி அந்தி சாய அந்த முட்புதர்களுக்கு நடுவே ஆளுயர அடர்ந்து வளர்ந்து நின்ற அந்த இளம்வேப்பங் கன்றுகளிடையே இருவரும் மறைந்து தொலைந்து போயினர். பின்னிரவுகளில் ராமசாமி வீட்டு முக்கூட்டில் நாய் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்கும். சற்று நேரத்தில் வீட்டுக்குள் தூக்கமும் முழிப்புமாய் இருக்கும் பிரமிளாவின் செல்போனில் சத்தம் வராமல் வெறும் வைப்ரேட்டும் வெளிச்சமும் மட்டுமே தெரியும்‌. கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் ரிஷியைஇழுத்துக் கிடத்தும் பிரேமா மெல்ல எழுந்து பார்ப்பாள். பிரமிளா இல்லாமல் போயிருப்பாள். பிறகு அதிகாலை 4 மணிக்கெல்லாம் அதே இடத்தில்தான் படுத்திருப்பாள்.

இவ்வளவு நடக்கும்போது ஊர் வாய் சும்மாவா இருந்திருக்கும் பிரேமா காதுபடவே பேசிக் கொண்டார்கள்.

“இன்னா தாம்மா எல்லாரும் ஒரு மாதிரிப் பேசிக்கிறாங்க… இன்னா பண்ணலாம்னு இருக்கிற. ஏரிவேலயில அந்த அண்ணியப் பாத்தேன் வூட்டுக்கு வரேன்னு சொல்லுச்சு இன்னா சொல்லச் சொல்ற”

“அந்த அத்த இன்னா சொல்றாங்க பாருமா… அவரு ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்காரு. ரிஷி தான் இன்னா சொல்லுவான் தெரியல”

“கொயந்த தானம்மா அவுனுக்கு இன்னாத் தெரியும். போவ போவ செரியா பூடும் அதப்பத்தி நீ ஒண்ணும் நெனைக்காதே” என அவளைத் தேற்றினாள் பிரேமா.

“ரிஷியும் நம்ம புள்ளதான்” என்று ஏதோ ஒரு ராத்திரியில் அவளிடம் அண்ணாதுரை சொல்லி இருந்தது இப்போது ஞாபகம் வந்தது.

அண்ணாதுரை கொஞ்ச நாட்களாகத்தான் கலகலப்பாகத் தெளிந்திருந்தான். அவன் முகத்தில் இப்போதுதான் சிரிப்பே தெரிகிறது. அவன் அம்மாவிற்கும் இதில் முழுச் சம்மதம்தான்.

அவளையும் கூட குமாரி வந்து கொஞ்சம் குழப்பிப் பார்த்தாள்.

“இன்னாத உங்களுக்கு… அறத்துட்டு வந்தவளப் போயி ஒரு படிச்ச புள்ளக்கிகட்டி வக்கினம்னு பேசறீங்க… ஏதோ பேசிப் பழகுச்சீங்களா அதோட வுட்டுட்டுப் போவாத… இருக்கிறவங்க மக்க மன்சாளு இன்னா நெனைப்பாங்கத சின்னாம்மா”

அண்ணா துரையின் அம்மாவிற்குக் கோபம் தலைக்கேறி கத்தினாள்.

“மட்டு மரியேதி கெட்டுக்கும் போங்கடி உங்க சொந்த பந்தத்திலியும் ஒட்டு ஒறவுலயும் நாயிநரி போவ… எந்தெந்தக் குடியக் கெடுத்த தேவிடியாளுங்க இன்னான்னா பண்றாளுங்க எல்லாம் எனக்குத் தெரியின்டி. எம்புள்ளைக்கிப் புடிச்சிருக்குது அதும் சந்தோசம்தான் எனுக்கு முக்கியம். நேர்ல ஒரு பேச்சி மறவுல ஒரு பேச்சி குடுத்தா ஒரு பேச்சி குடுக்கலன்னா ஒரு பேச்சி… இந்த லங்கடா தேவிடியாளுங்கள பத்தி எனுக்கு ஒண்ணும் இல்லடி”

குமாரிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. உள்ளுக்குள் நறுக்கென்றது எதுவும் பேச மூஞ்சியில்லாமல் எழுந்து விடு விடு எனப் போய்விட்டாள்.

ரெண்டு நாள் கழித்து அண்ணாதுரை அம்மா நாலைந்து பேர்களுடன் பிரமிளா வீட்டிற்கு வந்து சம்மதம் சொல்லி பாக்கு வெற்றிலை மாற்றிவிட்டுப் போனாள். அவர்கள் கிளம்பிப் போகும் போதுதான் எதிரில் பள்ளிக்கூடத்தில் இருந்து ரிஷி வந்து கொண்டிருந்தான்.

நடு வீட்டில் ஒரு தட்டில் பூ பழம் வெற்றிலை பாக்கு இனிப்பு என எல்லாம் இருந்தன. அபூர்வா ஸ்வீட்ஸ்- சூனாம்பேடு என அச்சிடிருந்த அட்டைப்பெட்டியை ஆசையுடன் திறந்த படி பிரேமாவிடம் ரிஷி கேட்டான்.

“எதுக்கு ஆயா இவங்க எல்லாம்வந்து போறாங்க”

“அது ஒண்ணும் இல்லடா அண்ணாதொர நைனாவுக்குக் கல்யாணமாம்” என்று மழுப்பலாய் மறைத்துப் பதில் சொன்னாள்.

அவனுக்குச் சரியாக எதுவும் புரியவில்லை. வேலைக்குப் போயிருந்த பிரமிளா வந்தாள். விஷயம் தெரிந்து மகிழ்ந்தவள் ரிஷியை நினைத்தபோதுதான் கொஞ்சம் சோகமானாள்.

அண்ணாதுரை- பிரமிளா கல்யாணம் குறித்து ஊருக்குள் பரவலாகத் தெரிந்தது. ஏதோ சிங்கத்திற்கும் புலிக்கும் கல்யாணம் நடப்பதைப் போல கதை கதையாய்ப் பேசிக்கொண்டார்கள்.

கோமதியைக் கூட வெறும் உடம்புக்காகச் சமயத்திற்கு மட்டும் எதையோ சொல்லி பொய்யாய் ஏமாற்றி வந்த மணியை அன்னைக்கு ராத்திரி சந்திப்பில் கேட்டே விட்டாள் அவள்.

“உன்னோட தேவக்கி மட்டும் நீ வருவ கல்யாணப் பேச்ச எடுத்தா மட்டும் உனக்கு எரிச்சலு வந்துடும் தைரியமான ஆம்பளன்னா அண்ணாதுரை மாமன் மேரி இருக்கணும்”

குத்தாங்காலிட்டு உட்கார்ந்து கோபமாய்ப் பேசிய கோமதியைக் கொஞ்சி சமாதானப்படுத்தினான். அப்போதைய காரியம் கெட்டுவிடும் என்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வழிந்து நெளிந்து வசியமாக்கி இழுத்து மடியில் கிடத்திக் கொண்டான் மணி.

பிரமிளா -அண்ணாதுரை கல்யாணச் செய்தி பள்ளிக்கூடம் வரை பரவியது.

குச்சியாட்டம் ஆடும் போது ரிஷியின் கூட்டாளி ஒருத்தன் எல்லார் முன்னாடியும் இப்படிக் கேட்டான்”

“இன்னடா ரிஷி உங்க அம்மாவுக்கும் அண்ணாதொர சாருக்கும் கல்யாணம் ஆகப் போகுதாமே. ஜாலிதான் உனுக்கு” ஆத்திரமும் அழுகையும் பீரிட்டு வந்தது ரிஷிக்கு.

உட்கார்ந்திருந்த வாக்கிலேயே கையில் ஒரு பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் அடித்துக் கீழே தள்ளினான். கழுத்திலும் மோவாயிலும் பிராண்டினான். சட்டையை இழுத்ததில் நான்கு பட்டன்களும் படபடவென அறுந்து தெறித்தன. ஜோதிலிங்கம் சார்தான் இரண்டு பேரையும் இலுப்பை மரத்தடியில் முட்டிப் போட வைத்திருந்தார்.

அன்றிலிருந்து தான் ரிஷி நடுத்தெரு வழியாக அண்ணாதுரை வீட்டுப் பக்கம் போவதை நிறுத்திக் கல்லு வீட்டுத் தெரு வழியாகப் போகத் தொடங்கினான்.

அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் புத்தகப் பையை வெளியில் நின்றபடியே திண்ணையில் வீசி எறிந்தான். வாசலில் கிடந்த குப்பை அள்ளும் அன்னக்கூடையை எட்டி ஒரு உதை விட்டான். தென்னை மரத்தடியில் வந்து நின்று விசும்பி விசும்பி அழுதான். பிரேமா அப்போதுதான் எங்கிருந்தோ வந்தாள்.

“இன்னா எப்பா யார்னா அடிச்சாங்களா? எதுக்கு அழுவுற சாமி யார் இன்னா பண்ணது” என முந்தானையால் முகத்தைத் துடைக்கப் போனவளை  இடரி விட்டு கண்ணைக் கசக்கி அழுதவனுக்குத் தேம்பல் கண்டிருந்தது.

பிரேமாவுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் பூவரச மரத்தில் சாய்ந்த படி கையில் இருந்த பானை ஓட்டால் தென்னை மரத்தில் எதையோ கீறிக் கொண்டு வெகு நேரமாய் நின்றிருந்தான். இப்போது அவனுக்கு அன்று தின்ற அபூர்வா கடையின் ஸ்வீட்டும் பழங்களும் நினைவுக்கு வந்தது எதையோ புரிந்து கொண்டவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

அப்போது இனித்துச் சுவைத்த சுவை எல்லாம் இப்போது ஏனோ அடித்தொண்டையில் கசந்து குமட்டியது. அண்ணாதுரை மீதும் அம்மாவின் மீதும் அவ்வளவு வெறுப்பாய் இருந்தது.

உண்டிக்கோலுடன் அந்தப் பக்கமாய் வந்த ஸ்ரீதர் மகனிடம் தனியாகக் கூப்பிட்டு என்ன நடந்தது என விசாரித்துக் கொண்டாள் பிரேமா.

ரிஷியிடம் எதையும் சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தர்மச் சங்கடத்தில் தவித்து நின்றவள்.

“அது கடக்குது கண்டவனுக்குப் பொறந்தது. நீ வா எப்பா…எந்தங்கம் இல்ல…வாடி ஆயா சொன்னா கேளு…இந்தா போயி போண்டா வாங்கித் துன்னுட்டு வா போ…”

எனக் காசு அவிழ்த்துக்கொடுத்தாள். எதைச் சொல்லியும் அவன் சமாதானம் அடைகிறவனாய்த் தெரியவில்லை. அழுதழுது ராத்திரி சோறு கூடச் சாப்பிடாமல் அப்படியே தூங்கிப் போனான். இரவு வேலை விட்டு வந்த பிரமிளாவிடம் எதையும் சொல்லாமல் பிரேமா எப்போதும் போல எல்லாவற்றையும் மூடி மறைத்தாள்.

அதிகாலையில் ரிஷி எழும்பும் முன்பாகவே அவளும் வேலைக்குப் போய் விட்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்ப்பது அரிதாகிக் கொண்டு வந்தது. இப்போதெல்லாம் ரிஷியைத் தூங்கும் போது மட்டும்தான் அவளுக்குப் பார்க்கவே வாய்க்கிறது.

ரிஷி அதிகமாக அவன் கூட்டாளிகளுடன் ஒட்டுவதில்லை. எல்லோரும் தன்னை இளக்காரமாகப் பார்ப்பது போல் தோன்றியது. சில நேரங்களில் தனியாகவே தோப்பில் இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பான். அடிக்கடி குச்சியால் தரையைக் கிளறிக் கொண்டிருப்பதுதான் வழக்கம்.

அம்மா ஏனோ சுத்தமாய்ப் பிடிக்காமல் போனாள். இப்போதெல்லாம் ஏனோ அவ்வளவு அந்நியமாய்த் தெரிந்தாள். அண்ணாதுரைக்குச் சொந்தமாகி விட்டவளாக அடி நெஞ்சில் ஒரு வெறுப்பு பரவியது. எதுவாக இருந்தாலும் ஆயாவிடம்தான் சொன்னான். பின்னாளில் ஆயா அம்மாவாகவே மாறிப்போனாள். இப்போதெல்லாம் அவன் பிரேமாவை அம்மா வென்றே அழைப்பதைப் பார்க்க முடிந்தது. அப்படித்தான் அவனைப் பொருட்படுத்தாமல் பிரமிளா- அண்ணாதுரை கல்யாணம் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தது. பிரேமா ரிஷிக்குப் புதுத் துணி எல்லாம் எடுத்து வந்து போட்டுக் கொள்ளச் சொல்லிக் கெஞ்சிப் பார்த்தாள். அதை எடுத்துக் கூடப் பார்க்காமல் அட்டையோடு தூக்கி வெளியில் வீசி எறிந்தான்.

யார் சொல்லியும் கேட்காமல் அழுது கொண்டே பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தான். ஏதோ தப்பு பண்ணிட்டோமோ என்று பிரமிளாவிற்கு ஒரு பக்கம் உறுத்தியது. பிறகு அவளுக்கு அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

முதலிரவு -மருவு எல்லாமே அண்ணாதுரை வீட்டிலேயே நடந்து முடிந்தது.

பிரமிளாவின் மனதில் எதுவோ ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அண்ணாதுரைக் கண்டு கொண்டான். எதையோ மென்று விழுங்குகிறாள் என்பது அவளின் செயல்களில் தெரிந்தது.

“எதனாலும் சரி செய்ய முடியாத பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது”

என்பதை அக்கணம் உணர்ந்தவன் பிரமிளாவை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான். இடைக்கழிநாட்டில் இருந்து வாங்கி வந்திருந்த பலாப்பழத்தை இருவருமாக எண்ணெய் தடவி அறுத்து நடுநடுவே சுளைகளைத் தின்று கொண்டே அடுக்குச் சட்டியில் நிரப்பினார்கள். அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அமைதியாக இருந்தான் உள்ளே எழுந்து போனவள் ஒரு நீல நிற பிளாஸ்டிக் உறையில் பத்துப் பதினைந்து சுளைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வந்து கொண்டிருந்தனர். ரிஷி வருவான் என்று ராமசாமி வீட்டு முக்கூட்டில் நின்றுகொண்டிருந்தவளையும் கையில் இருந்த நீல நிறக் கவரையும் பார்த்தவன் கொல்லை வீட்டுச் சந்தில் இறங்கித் திரும்பிக் கழனிப் பக்கமாய் ஓடினான்.

“டேய் ரிஷி …நில்றா… எங்கடா போற… வாடா இங்க… டேய் இப்படி எல்லாம் பண்ண அம்மா இருக்க மாட்டேன்” என்று அழுகையும் கம்பலையுமாய் அவனை நோக்கிக் கத்தினாள். அழுது கொண்டே அம்மா வீட்டிற்குப் போனவளைப் பார்த்து பிரேமா ஓடி வந்தாள்.

“இன்னா எம்மா இன்னா அழுவுற? எதுனா சண்டையா? தம்பி எதுனா சொல்லுச்சா”

“எதுவும் வாணாம் நான் வூட்டுக்கே வந்துடறம்மா. ரிஷி என்னப் பாத்துட்டு தொரசாமி மாமன் வீட்டுப் பக்கமா ஓடறான்”

“அட நீ ஒண்ணு இதுக்கா அழுவுற அவன் நல்லாதாம்மா இருக்கிறான். அம்மாவாண்ட என்ன போவச் சொல்லாத ஆயா உங்கிட்டயே இருக்கறேன்னு நல்ல மாதிரிதான் நேத்துக் கூடச் சொன்னான்‌. சின்ன புள்ள கொழந்தைக்கு இன்னா தெரியும். நீயும் அவனாட்டம் அழுவுற… எழுந்து போமே”

தன்னால் முடிந்த எதையோ பேசி அவளை இலகுவாக்கிக் கொண்டிருந்தாள் பிரேமா. மூக்கை இழுத்து உறிஞ்சிக் கண்ணைத் துடைத்துக் கொண்டவள் கையில் இருந்த பலாச்சுளை உறையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு புருஷன் வீட்டிற்குப் போனாள்.

கொஞ்ச நேரம் கழித்து பிரேமாவை முறைத்துக் கொண்டு ரிஷி வந்தான். அவளோ எதுவும் தெரியாதவள் போல் பேசினாள்.

“எங்க தாண்டா போயி சுத்திங் கெடப்ப பள்ளிக்கொடம்வுட்டா நேரா வூட்டுக்கு வர மாட்டியா
“ங்கோத்தா கெயிவி ஒழுங்கா கம்முனு இருந்துரு ஆத்தரத்தக் கெளப்பாத”

பேரன் திட்டுவதை ரசித்தபடி நமட்டுச் சிரிப்போடு அவளும் கூடக் கூடப் பேசி வாயைக் கிளறினாள்.

“பெரிய ஆம்பள இவரு கோவம் வேற வந்துடும் செரி செரி கைய கால கழுவிகின்னு மாடத் தாண்ட பெலாசொள இருக்குது பாரு எடுத்துத் துன்னு”

“ஏது உம் பொண்ணு எடுத்தாந்து குடுத்தாளா எனுக்கு ஒண்ணும் வாணாம் நீயே துன்னு” பையைப் போட்டுவிட்டு எங்கோ ஓடிப் போனான்.

இரண்டு நாளுக்குப் பின் ரிஷிக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. பிரேமாவும் அஜித்தும் கோவிந்து வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அண்ணாதுரை வீட்டு வழியாக அவர்கள் போனதைப் பார்த்த பிரமிளா அவனையும் இட்டுக்கொண்டு வைத்தியர் வீட்டுக்கு வந்து வெளியேவே நின்றனர்.

“ஆயா ஊசி வேணாந்த மாத்தர மட்டும் குடுக்கச் சொல்லுத ” என அழும் தொனியில் கெஞ்சிக் கொண்டிருந்தான் ரிஷி.

“என்னமா சாப்ட்டான் கெணத்துல குளிச்சியாடா”

எனச் சாதுரியமாய்ப் பேசிக்கொண்டே அஜித்தையும் பிரேமாவையும் கெட்டியாய்ப் பிடிக்கச் சொல்லிக் கண்ணைக் காட்டி ரிஷியின் புட்டத்தில் ஊசியைச் செருகினார் கோவிந்து.

அழுது கத்தியவன் வெளியே இருந்த அம்மாவையும் அண்ணா துரையையும் கண்டதும் கப்சிப் என்று அமைதியானான்.

“தே… ஆயா வாத வூட்டுக்குப் போலாம்” என்றதும் கண்கலங்கியபடியே பிரமிளா சிரித்தாள்.

அந்த வருடமே அண்ணாதுரைக்கும் பிரமிளாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு மாதங்கள் கழித்து ஒரு பின்மதியத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்கு வந்தாள் பிரமிளா. நடுவீட்டில் கிடத்திவிட்டு எங்கேயோ போயிருந்தாள். எங்கிருந்தோ வந்த ரிஷி உள்ளே போனான். மண்டியிட்டுக் குழந்தையை உற்றுப் பார்த்தான் அது கை, கால்களை உதைத்தபடி அவனைப் பார்த்துச் சிரித்தது. வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டு கறுப்புப்பொட்டு வைத்திருந்த அதன் கன்னத்தில் முத்தம் வைத்தான். அம்மா வருவதற்குள் அவசரமாய்த் திரும்பவும் வெளியே ஓடிப் போனான்.

குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் கூட ஊரைக் கூட்டிச் சிறப்பாக நடத்தினார்கள். அப்போதும் அந்த வீட்டிற்கு ரிஷி போகவில்லை. ஆயா அங்கிருந்து எடுத்து வந்திருந்த எந்தத் தின்பண்டங்களையும் எடுக்கவில்லை. அவ்வப்போது குழந்தையை யாராவது தூக்கி வைத்திருக்கும் போது மட்டும் கண்டால் பக்கத்தில் போய் யாரோ மாதிரி நிற்பான்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடி மறைந்தன. அந்தப் பிள்ளையையும் பால்வாடிக்குஅனுப்பினார்கள். யாருக்கும் தெரியாமல் இண்டர்வல் பெல்லுக்கும் மதிய உணவு இடைவேளைக்கும் பால்வாடி காம்பவுண்ட் சுவரை எட்டி எட்டி கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கமானது ரிஷிக்கு. அம்மாவின் மீதும் அண்ணாதுரை மீதும் இருந்த கோபமும் வெறுப்பும் அதன் மீது துளியும் வரவில்லை அவனுக்கு. பள்ளிக்கூடம் வந்தால் அதைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

ஒருநாள் பால்வாடி குழாயில் தட்டுக் கழுவும் சாக்கில் அதன் அருகில் வந்து நின்றான். இவனைப் பார்த்ததும் அதுவும் சிரித்தது. அதன் சின்ன கையைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஓடிப்போனான். அதன் முகமும் உருவமும் அந்தப் பிஞ்சு சிரிப்பும் அவன் ஆழ்மனதில் அப்படியே பதிந்து போனது. கணக்கு நோட்டின் வெள்ளைப் பக்கத்தில் அந்தத் தோற்றத்தை ஞாபகப்படுத்தி மொட்டை பென்சிலால் நிறுத்தி நிறுத்தி வரைந்து முடித்தான். அந்த ஓவியம் அதன் சாயலில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இரண்டு மூன்று தடவை எடுத்துப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். கடைசியாக அதன் இடுப்புப் பகுதிக்கு நேராக வலது பக்கத்திலிருந்து அம்புக்குறியிட்டு தம்பி என்று எழுதி மூடி வைத்துக் கொண்டான்.

நாட்கள் போகப்போக அவன் மீதான பந்தமும் பாசமும் ரிஷிக்கு அதிகரித்துக் கொண்டே வந்தது. தின்பதற்கு எது கிடைத்தாலும் அதில் அவனுக்கும் கொஞ்சம் பிரித்துக் கொடுத்தான். இது பற்றி அவன் ஆயாவிடமோ மாமாவிடமோ உடன் படிக்கும் கூட்டாளிகளிடமோ கூடச் சொன்னது கிடையாது. ரகசியப் பெட்டிக்குள் கிடந்த ஒரு கோலிக்குண்டைப் போல அவன் அன்பை வைத்திருந்தான்.

ஒரு நாள் பிள்ளைகள் எல்லோரும் கூட்டமாய்ப் பள்ளிக்கூடத்தை ஒட்டிய கலங்கல் புதர் அருகில் சூரப்பழம் பறித்துக் கொண்டிருந்தனர். கிளை எட்டாமல் தம்பி தனியாக நின்று ஏக்கமோடு பார்த்தான். யாரும் அவனுக்குப் பறித்து தரவில்லை. ரிஷி அப்போதுதான் அங்கு வந்தான்.

இடது கால் செருப்பை வலது காலிலும் வலது கால் செருப்பை இடது காலிலும் மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தவனை உட்கார்ந்து மாற்றி போட்டுவிட்டு முள்ளைத் தாண்டி நிற்க வைத்தான். கறுத்து பழுத்து சடை சடையாய்த் தொங்கிய சூரப்பழ கிளையைத் தாழ்த்திக் கை கொள்ளப் பறித்து எடுத்து வந்து சாப்பிடச் சொன்னான்.

“கொட்டைய முழுங்கக்கூடாது துப்பிடு”

கீழேகிடந்த உறை கவரில் வேண்டும் மட்டும் பறித்துக் கொண்டு அவனும் வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டே இருவரும் சிவன் கோயில் தாண்டி நடந்து வந்து பெருமாள் கோயில் குளத்து மேட்டில் ஏறி நின்றனர். குளம்முழுக்கத் தாமரை பூத்திருந்தது தம்பி கை காட்டினான். முழங்கால் நனையும் மட்டும் இறங்கி எட்டி இரண்டு பூக்கள் தண்டோடு பறித்து வந்தான் ரிஷி. காலை தரையில் தட்டிக் கொண்டு இருவருமாய் ரோட்டுக்கு வந்தனர். வடிவேல் கடையின் சுவரில் வரைந்திருந்த அந்தக் கோணத்தும்பிக்கை பிள்ளையாரைக் கொஞ்சம் நேரம் நின்று பார்த்துவிட்டு ரேஷன் கடையைத் தாண்டி வந்து பஸ் ஸ்டாண்ட் முக்கில் நின்றனர்.

டீக்காரம்மாள் சுடச்சுட போண்டா போட்டுக் கொண்டிருந்தாள். ஜாமென்ட்ரி பாக்சில் இருந்த நோட்டுக் காசை வைத்து விட்டு சில்லறைக்கு மட்டும் வாங்கி இருவரும் தின்றபடிச் சாலையை வேடிக்கை பார்த்தனர். நீலகண்டன் மகன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்திருந்தான். தம்பி அவனையே பார்த்தான்.

“உனக்கும் வேணுமா” எனக் கேட்டுக்கொண்டே சிட்டிபாபு கடைக்குக் கூட்டி வந்து ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் வாங்கித் தந்தான். திரும்ப அதே பக்கம் வந்து பாலம் இடதுபுறம் திரும்பி நொண்டித் தாத்தா வீட்டு வழியாக ராஜவேல் வீட்டு வளைவில் திரும்பி கல்லு வீட்டுத் தெரு வழியாக வந்து ராமசாமி வீட்டு முக்கூட்டில் திரும்பி நின்று தம்பியின் மோவாயில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமைத் துடைத்துக் கையசைத்து அனுப்பி வைத்தான் ரிஷி.

அண்ணாதுரை வீட்டு வாசலில் இருந்த வேப்பமரத்து மறைவில் நின்று பார்த்த பிரமிளாவிற்குக் கண்ணெல்லாம் கலங்கியது. நெஞ்சு விம்மியது உடைந்து ஓ… வென்று அழவேண்டும் போல் இருந்தது. ரிஷியை அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

கண்களில் இருந்து திரண்ட கனத்தத் துளி யொன்று அவளின் வெள்ளி மெட்டியில் விழுந்து உடைந்தது. அம்மா எனத் தம்பி அவளின் கால்களை வந்து கட்டிக் கொண்டான்.


Art : Francisco Pérez
முத்துவேல் .
முத்துவேல் .
Share :

4 responses to “ரிஷி நடுத்தெருவழியாகச் செல்வதில்லை இப்போதெல்லாம்…”

  1. வெங்கடேசன்.பாரதி
    April 2, 2026

    இந்தக் கதை ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த மாற்றத்தையும் அவன் உள்ளுணர்வையும் மிக அழகாக காட்டுகிறது.

    இந்தக் கதையின் முக்கியமானது.

    * முன்னாடி Rishi கவனக்குறைவாக street நடுவில் நடந்தான்
    * ஆனா இப்போ அவன் மாறிட்டான் – careful ஆக, வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டு நடக்கிறான்.

    இதுல hidden meaning என்னனா:

    * வாழ்க்கை எப்போதும் safe இல்ல

    * ஒரு அனுபவம் மனிதனை முழுக்க மாற்றிடும்

    * நாம் எப்படிப் பழகுறோம், அதுக்கே வாழ்க்கை பதில் தரும்

    ஆழமான கருத்து:

    * Freedom இருக்கிறது என்றால் எல்லாம் செய்யலாம் என்பதில்லை.

    * Life-ல responsibility முக்கியம்.

    * ஒரு mistake கூட future-ஐ மாற்றிடும்.

    கவனமா வாழ்றது தான் உண்மையான புத்திசாலித்தனம்

    Reply
  2. சு. ஜெகதீஷ் பவுன் கடுக்கலூர்
    April 2, 2026

    பாசத்திற்குரிய அண்ணன் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நான் சிறுவயதில் இருந்து உங்களை கவனித்து வருகிறேன் உங்களுடைய கவிதைகளில் உங்களுடைய பேச்சாற்றலும் உங்களுடைய நடவடிக்கை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். நம் கிராமத்தில் நடந்த ஒரு கதையை அப்படியே உங்களுடைய அறிவு ஆற்றலின் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் படிக்கப் படிக்க ஆவலாக இருந்தது.
    மேலும் உங்களுடைய நிஜ வாழ்க்கை கவிதைகள் உலகம் எங்கும் பரவ தம்பியின் வாழ்த்துகள் அண்ணா

    Reply
  3. Priya
    April 6, 2026

    Nice story
    Made an interesting reading
    Some lines are heart touching
    Makes one think about the some facts of life
    Pramila and Rishi are unforgettable characters
    Congratulations on achieving many more Muthuvel

    Reply
  4. Raj
    April 7, 2026

    A truly excellent story; it gave me the feeling of actually being there—watching and listening from within that town. I am eagerly awaiting your next story.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top