நேரம் கடந்துகொண்டிருந்தது. மதியம் ஒரு மணிக்கு ரயில். சித்திரை வெயில் வெப்பத்தோடு பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே நான் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தேன்.
இரண்டாம் எண் நடைபாதையில் சிதம்பரம் டு சேலம் ரயில் எந்தவித அசைவுகளுமின்றி நின்றிருந்தது. பெண்களுக்கான முதல் பெட்டியில் ஏறிச் சன்னலோர இருக்கையாகப் பார்த்து அமர்ந்துகொண்டேன். கைப்பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையை ஒத்தி எடுத்தேன். ரயில் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருக்கலாம் என எண்ணிக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 12 : 50 எனக் காட்டியது.
ரயிலில் இருந்து இறங்கி அருகில் தெரிந்த நீர்க்குழாய்க்கு நடந்தேன். முகத்தைக் கழுவிக்கொண்டும் என் கைப்பையில் இருந்த பாட்டிலில் நீரை நிரப்பிக்கொண்டும் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். அப்பாடா என்பது போல் ஒரு பெரும் ஆசுவாசம் நெஞ்சில் படர்ந்திருந்தது.
முது கல்வியியல் படிப்பிற்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. மூன்றாவது தேர்வு நடந்து முடிந்திருந்தது. காலையில் பேருந்தில் வந்து தேர்வை முடித்துவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு ரயிலில் கிளம்புவது வழக்கம். முன்தினம் தாமதமாக வந்ததால் ரயிலைத் தவறவிட்டிருந்தேன். அதன் காரணமாகத்தான் இன்று இத்தனை அவசரமாக வந்து சேர்ந்ததும்.
மீண்டும் பேருந்திலேயே செல்லலாம்தான். ரயில் கட்டணத்தைவிடப் பேருந்துக் கட்டணம் அதிகம், அதோடு மிக விரைவாக வீடு சென்றடையும் சாத்தியம் ரயில் பயணத்தில்தான் அதிகம். தவிர எப்போதாவதுதான் ரயில் பயணத்திற்கான வாய்ப்புகள் அமைகின்றன. பிள்ளை போல் தாலாட்டி அழைத்துச்செல்லும் ஒரு பயணத்தை யாருக்குத்தான் தவறவிடத் தோன்றும்.
அமைதியாகச் சாளரத்தைப் பார்த்தேன். இடதுபுறம் தெரிந்த ரயில்பாதை ஓரமாகப் புதிதாக ஒரு நித்யகல்யாணி செடி ஒரே ஒரு பிங்க் நிறப் பூவைச் சுமந்து காற்றோடு அசைந்துகொண்டிருந்தது. அதன் அசைதல் மூலம் காற்றின் தாளம் எப்படியிருக்கும் என்று உணர்ந்து புன்னகைத்தேன். அப்படியே ஆகாயத்தைப் பார்த்தேன். கோடைகால மேகங்கள் அங்கங்கு சிறு சிறு பொதிகளாகத் தொங்கிக்கொண்டிருந்தன.
ஒரு பெரிய சத்தத்தை ஊளையிட்டது ரயில். தன் பூக்கூடையை முதலில் மேலேற்றிய ஒரு பெண் கையில் மாட்டியிருந்த ஒரு சாக்குப்பையோடு மெல்ல மேலேறினாள். பின் எனக்கு எதிரில் இருந்த சாளர இருக்கையில் வந்து அவள் கையில் இருந்த சாக்குப் பையை முதலில் வைத்தாள். பின் பூக்கூடையை இழுத்துத் தூக்கி இருக்கையில் வைத்துக்கொண்டாள். பெரிதாக அந்த நிறுத்தத்தில் கூட்டமில்லாததால் அந்தப் பெட்டியில் நாங்கள் சில பெண்கள் மட்டுமே அப்போது இருந்தோம்.
என்னைப் பார்த்தவள் முதலில் சிரித்தாள். பரஸ்பரப் புன்னகை அது என்று தெரிந்ததால் நானும் புன்னகைத்தேன். சற்றும் தாமதிக்காமல் சாக்குப் பையில் இருந்த மல்லி உதிரிகளை எடுத்து மடியில் நிரப்பிக்கொண்டாள். பின் நூற்கண்டு ஒன்றை எடுத்து ஒவ்வொரு மல்லியாக எடுத்துத் தொடுக்கத் தொடங்கினாள்.
அவளைப் பார்த்துவிட்டு பின் பூக்கூடையைக் கவனித்தேன். கூடை முழுவதும் ரோஜாக்களை நிரப்பி வெயிலுக்குத் தோதாக ஈரத்துணியைப் போட்டு மூடியிருந்தாள்.
சுற்றும்முற்றும் பார்த்தேன். எனக்குப் பின்னாடி இருக்கையில் இரண்டு பெண்கள் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு இடது புற இருக்கையில் ஒரு பாட்டி அமர்ந்து தன் பையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.
ரயில் சென்றது. சாளரத்தின் அசைவும் வெளியில் தெரிந்த செம்மண் நிலமும் தொலைக்காட்சியைப் பார்ப்பது போல் தோன்றின. பையைத் திறந்து பார்த்தேன். “பெண்கள் வரலாறு” நூல் உள்ளே இருந்தது.
மனிதர்களோடு இருக்கும்போது நூலை எடுப்பது சரியான முடிவாகத் தோன்றவில்லை. சற்றும் யோசிக்காமல் “நானும் பூ கட்டவா?” என்றேன் எதிரில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம்.
என் முகத்தைப் பார்த்தவள் “கட்டு” என்று ஒரு சதுரங்கக் காகிதத்தில் மடித்திருந்த ஊசி மல்லியையும் ஒரு வெள்ளை நூற்கண்டையும் நீட்டினாள்.
சிறுவயதில் கற்றுக்கொண்ட பழக்கம். ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போதே சரோ சித்தி சொல்லிக் கொடுத்தாள்.
நான் அவள் கொடுத்த மல்லியை வாங்கி என் மடியில் வைத்து நூலைப் பிரித்தபடி முதலில் அப்பெண் எப்படி பூத்தொடுக்கிறாள் என்று கவனித்தேன். என் பார்வையைக் காட்டிலும் வேகமாக அவள் கைகள் செயல்பட்டன. எப்படிப் பூவை அடுக்குகிறாள் எப்படித் தொடுக்கிறாள் என்று அறியவே சிரமமாக இருந்தது.
பின் நானாகவே இரண்டு மல்லிகளை மேல் வைத்தும் இரண்டைக் கீழ்ப் பக்கமாக அடுக்கியும் நூலினைக்கொண்டு கட்டத் தொடங்கினேன்.
இருவருக்குள்ளும் பெரும் அமைதி. வார்த்தைகள் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது நிச்சயமாகப் புன்னகைத்துக் கொண்டோம்.
திரும்பிப் பார்த்தேன். ஏற்கெனவே அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் கடைசி இருக்கைக்கு நகிர்ந்திருந்தனர். பக்கத்தில் இருந்த பாட்டி தன் கையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தாள்.
நான் பூ தொடுத்தேன். பூத்தொடுத்தல் என்பது எழுதுவதும், சமைப்பதும் போல. கவனம் வேறெங்கேயும் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு மனமும் பார்வையும் பூத்தொடுத்தலில் ஒன்றுகிறதோ அந்த அளவிற்குப் பூச்சரத்தில் நேர்த்தி மலரும். என்னைக் காட்டிலும் அப்பெண் தொடுக்கும் பூச்சரம் மிகுந்த நெருக்கமாகவும் அழகாகவும் இருந்தது. மிகத்தேர்ந்த எழுத்தாளரின் மொழி நடையைப் போல.
அதைப் பார்த்த நான் “எத்தனை வருசமா பூ கட்டுறிங்க” என்றேன்.
“பொறுந்ததுல இருந்தே இதுதான் பொழப்பு. தாத்தா கட்டுனாருனு நினைக்கிறேன். அப்புறம் எங்கம்மா இப்ப நானு.” என்று நிறுத்தினாள்.
நான் கண்களை அகல விரித்துப் பின் வெறுமையான ஒரு சிரிப்பைக் காட்டினேன். பூக்கட்டுவதிலேயே கவனம் குவிந்திருந்ததால் ரயில் நிற்பதும் செல்வதும்கூடத் தெரியாமல் போனது. அனேகமாக அது மூன்றாவது நிறுத்தம் என்று நினைக்கிறேன்.
நான் மீண்டும் “உங்க பேரு என்ன? என்றேன்”.
பூங்கொடி என்றாள். நல்ல பெயர். அதற்கேற்பத்தான் இருந்தாள் ஒல்லியாகக் கொடி போல். அவள் உடுத்தியிருந்த ஆரஞ்சு வண்ணப் புடவை கனகாம்பரம் பூவை நினைவுப்படுத்தியது. ஆனால் என் பெயரை அவள் கேட்கவே இல்லை. நானாகவே கூறினேன்.
என் பேரு கீதா.
ம்ம் என்றாள் என்பது போல்தான் தோன்றியது. ஆனால் அவள் கவனம் முழுவதும் பூக்கட்டுவதில்தான் இருந்தது.
உழைக்கும் மனிதர்களின் இயல்பு இது. எதைக் காட்டிலும் செய்யும் வேலைக்குத்தான் முதல் முக்கியத்துவம் அவர்களுக்கு. நானும் என் வேலையைக் கவனித்தேன்.
அந்த நிறுத்தத்தில் புதிதாக ஒரு ஆணும் பெண்ணும் ஏறினர்.
இருவருமே அழகாக இருந்தனர். இளமையோடும். புதிதாக ஏறிய அப்பெண் ஊதா நிறச் சுடிதார் அணிந்திருந்தார். கருத்த நிறம். ஆனாலும் நிறைந்த அழகாகத் தோன்றினாள்.
“இறங்கிப் போ. இது லேடிஸ் கம்பார்ட்மென்ட்” என்றாள் சுடிதார் பெண். கொஞ்சல் கலந்த மொழியாக அது தோன்றியது.
“இருக்கட்டுமே. உன்னை விட்டுட்டு நான் எப்படிப் போறது” என்றான் அந்த ஆண்.
நான் மௌனமாகப் புன்னகைத்தேன். அவர்களின் அந்த நடத்தையே ஒரு கவிதையை வாசித்து ரசிக்கும் உணர்வைத் தந்தது.
ஒவ்வொரு நிறுத்ததிலும் இரண்டு நிமிடங்களுக்குப் பக்கமாக ரயில் நிற்கும்.
சுடிதார் பெண் அதே கொஞ்சல் மொழியில் இப்போதும் கூறினாள். “நீ இறங்கு நான் போயிக்கிறேன்”. அவளது பார்வை எங்கள் ஒவ்வொருவரையும் சுற்றியபடி இருந்ததாகத் தோன்றியது .
அந்த ஆண் மட்டும் எங்கள் இருக்கையை நோக்கி நடந்து வந்தார். அம்மா ஒரு முழம் பூ எவ்வளவு என்றார் பூங்கொடியிடம்.
நாப்பது என்றாள் பூங்கொடி.
ஒரு முழம் கொடுங்க என்றார் அவர்.
தன் கையிலிருந்த சரத்தில் ஒரு முழம் கத்தரித்து அந்த ஆணிடம் கொடுத்துவிட்டு அவர் கொடுத்த நாற்பது ரூபாயை வாங்கித் தன் பையில் வைத்துக்கொண்டாள்.
பூவை வாங்கிக்கொண்டு போன ஆண் சுடிதார் பெண்ணின் கையில் தந்தார். அதை வாங்கியதும் முன்பைவிடச் சற்றுக் கூடுதல் ஒளி தோன்றியது அந்தப் பெண்ணின் முகத்தில்.
கைபேசி ஒலித்தது. சத்தம் மிக அருகில் கேட்டதால் நிச்சயம் பூங்கொடியின் கைபேசி தான். என் கைபேசி ஓசை இப்படி இருக்காது என்று எண்ணிக்கொண்டே நான் பூக் கட்டினேன்.
கைபேசியை எடுத்துக் காதில் வைத்தவள்… “சொல்லு” என்றாள். ஒரு வித அசட்டைத்தனம் அதில் இருந்தது. பின் “வந்துகிட்டே இருக்கேன். சைக்கிளை எடுத்துகிட்டு வந்து ஸ்டேஷன் கிட்ட நில்லு” என்று கூறிவிட்டுப் பதில் எதிர்பார்க்காமல் கைபேசியை அணைத்தாள். சாக்குப் பையில் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் அருந்திவிட்டுப் பேசத்தொடங்கினாள் பூங்கொடி.
எந்த ஊரு.
ஆத்தூர் என்றேன்.
டீச்சரா என்றாள்.
எப்படி அறிந்திருப்பாள் என்று வியந்தாலும் அதைத் காட்டிக்கொள்ளாது ஆமாம் என்று பதிலுரைத்தேன்.
எவ்ளோ பூக்கட்டிருக்க என்றாள் மீண்டும்.
நான் என் கையில் இருந்த சரத்தைத் தூக்கிக் காண்பித்தேன். ஒரு முழத்திற்கு மேல் இருந்தது.
மீண்டும் பூங்கொடி கைபேசி ஒலித்தது.
ரயில் சத்தமிட அந்த ஆண் இறங்கிச் சென்றார். தன் கை முழுவதையும் வெளியே நீட்டி விடைபெற்றுக்கொண்டிருந்தாள் சுடிதார் பெண். அவளது கண்கள் ஏதோ ஒரு வினோத உணர்வை வெளிப்படுத்தின. பூங்கொடி தொடுத்த பூ அவள் தலையில் காற்றிலாடிக் கொண்டிருந்தது.
இதற்குள் கைபேசியை எடுத்துப் பேசிவிட்டு துண்டித்திருந்தாள் பூங்கொடி. இந்த ஆளுக்கு இதே வேலைதான். மூச்சுக்கு முந்நூறு தரம் போனு என்று சலித்துக்கொண்டவளைப் பார்த்த நான் “யார்?” என்று வினவினேன்.
“வேற யாரு. என்ன கட்டுனவன்தான்”. என்று முகத்தை இன்னும் சற்று இறுக்கிக்கொண்டாள்.
பூக் கட்டுவதில் இருந்த கவனம் சிறிதும் குறையாமல் “உங்கள அவருக்கு ரொம்பப் பிடிக்குமா?” என்றேன்.
“புடிக்கும் புடிக்கும். ஒம்போது வருசம் ஆச்சு. தனியா ஒரு கிலோ அரிசி கூட வாங்கிட்டு வரத் தெரியாது அந்தாளுக்கு. எல்லாத்துக்கும் நாந்தான். மூனு புள்ளங்களோட இந்தாளு ஒரு புள்ள. வண்டி ஏறி எம்புட்டு நேரமிருக்கும் இதுக்குல்ல இத்தனை போனு”. என்னத்த சொல்றது என்று தலையில செல்லமாக அடித்துக் கொண்டாள்.
உங்களுக்குப் பிடிக்குமா? என்றேன்.
“புடிக்காமலா இருக்கும். புருசனாச்சே” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். இன்னும் கூடுதலாக அழகேற்றியது அவள் முகத்திற்கு அந்தச் சிரிப்பு.
ஒன்பது வருசம் சாதாரணம் இல்லதான். எப்படி நடந்தது உங்க கல்யாணம் என்றேன் நான் கையிலிருந்த பூச்சரத்தை அளந்து பார்த்துக்கொண்டே.
“என் அத்தை மவ கல்யாணத்துக்கு வந்தேன். மாப்ளைக்கு இவரு ப்ரண்ட்.
அப்படித்தான் ஆரம்பிச்சது”.
“அங்கதான் பாத்திங்களா”? என்றேன்.
“ஆமாம். அந்தக் கல்யாணத்துலையே சுறுசுறுப்பா ஓடிட்டு இருந்த ஒரே ஆளு இவருதான். ஊரு புள்ளைங்க கண்ணெல்லாம் இவரு மேலதான் அன்னைக்கு”. பூங்கொடியின் கண்களில் ஒருவிதப் பெருமிதம் மின்னியது.
ம். அப்புறம் என்றேன்.
“எல்லாப் பொண்ணுங்களும் அவரைப் பாக்கும்போது எனக்கும் பாக்கத்தான தோணும்”. ஒருவித ரம்மியமான சிரிப்பை வெளிபடுத்தினாள் பூங்கொடி. செல்லம் கொஞ்சும் சிறுமியைப் போல் தென்பட்டாள் அப்போது .
அவளைப் பார்த்து ரசித்துக்கொண்டே “ஆமா” என்றேன்.
என் பதிலுக்குச் சின்னதாக ஒரு வெட்கச் சிரிப்பு எட்டிப் பார்த்தது அவளிடம்.
“மேல சொல்லுங்க” என்றேன்.
“எங்க ஊரு கிராமம். என்னதான் தெரு விளக்குலாம் இருந்தாலும் ஒரு முறைக்காக இன்னமும் தீப்பந்தம் கொளுத்தி எடுத்துக்கிட்டுதான் பொண்ண கூப்பிடவே வருவாங்க. அதோடவே தான் பொண்ணு மாப்ள ஊரையும் சுத்தி வருவாங்க”.
சரி. அப்புறம்.
“அப்படி ஊரச் சுத்தி வரும்போது ஊர்வலத்துல வந்த ஒரு தீப்பந்தம் கூட்டத்துல தெரியாமா என் கால் மேல விழுந்துருச்சு”.
அச்சச்சோ.. என்று அதிர்ந்த என் முன் அவளது வலது பாதத் தழும்பைக் காட்டினாள்.
“இந்தத் தீக்காயம்தான். என்னால பொறுக்க முடியல வலி. நடக்குறதுக்குச் சாத்தியமே இல்லை. அப்படியே சுருண்டு உக்காந்துட்டேன்”.
அப்புறம் என்னாச்சு என்றேன் பூங்கொடியிடம்.
“அன்னைக்கு என்னைத் தூக்கிட்டுப் போய் ஹாஸ்பிடல் சேத்ததும் என் கூடவே இருந்ததும் இவர்தான்”.
இது நல்லாருக்கே. எப்படியும் நீங்க சந்தோசமா இருந்துருப்பிங்கல்ல என்று சிரித்தேன்.
இருந்தேன் இருந்தேன் என்று ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டாள். அவளது மறைமுகமான அன்பு எங்கேயோ இருந்து எட்டிப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது.
ம். அப்புறம் என்றேன்.
“அப்புறம் இந்தக் காயத்த சாக்கா வச்சு அவர் தினமும் என்னப் பாக்க வர ஆரமிச்சிட்டாரு. எனக்கும் அது புடிச்சிதான் இருந்தது”.
ம் என்று தலையசைத்தேன்.
அப்புறம் என்ன? வீட்ல பேசிக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.
உங்க காதல யாரு முதல்ல சொன்னது.
பூங்கொடி கைப்பேசி ஒலித்தது.
பாரு இது மூனாது முறை என்று கைபேசியை என்னிடம் காட்டினாள்.
நான் புன்னகைத்தேன்.
கைபேசியை எடுத்தவள் “வந்துட்டியா” என்றாள்.
ரயில் சென்றுகொண்டிருந்தது. கோடை மேகங்கள் ரயில் பின்னாடியே நகர்ந்து வந்துகொண்டிருந்தன. சாளரக் காற்று என் புடவையை வருடிக் கொடுத்தது.
கைபேசி வைத்தவள். நீ என்ன கேட்ட என்றாள்.
உங்க காதல யாரு முதல்ல சொன்னது னு கேட்டேன் என்றேன் .
“இம்புட்டு தூரம் கதை கேட்டியே நீயே சொல்லு பார்ப்போம்” என்றாள் பூங்கொடி விளையாட்டுத் தோரணையில்.
எனக்குச் சந்தேகமில்ல. அவர்தான் என்றேன் நான்.
பங்குனி உத்திர திருவிழால வச்சி நாந்தான் சொன்னேன். அவன் சொல்லுவான்னு இருந்துருந்தா எனக்கு வயசாயிருக்கும். என்று நிறுத்தினாள்.
எனக்குள் அப்போது பூத்துக் குமிழியிட்டது பேரானந்தம். ஏனென்று தெரியவில்லை. அறிந்துகொள்ளவும் வேண்டுமா என்ன!
அவள் எல்லாவற்றையும் பைக்குள் எடுத்து வைத்தாள். கையிலிருந்த பூச்சரத்தை நீட்டினேன். அதில் சிறிது கிள்ளி என் கையில் கொடுத்தாள். பின் என் கன்னம் கிள்ளி ஒரு முத்தம் கொஞ்சியவள் “நல்லாரு” என்று ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டுப் படிகளுக்கு அருகில் சென்றாள்.
அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றது. பூங்கொடி இறங்கினாள். நான்கைந்து பெண்கள் பெட்டிக்குள் ஏறினர். ரயில் ஊளையிட்டது. நான் சாளரத்தைப் பார்த்தேன். சைக்கிளைப் பிடித்துக்கொண்டு குங்கும நிறச் சட்டையணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் நடைபாதையில் நின்றிருந்தார். இரண்டு நிமிடங்கள் சென்றது. ரயில் கிளம்பியது. பூங்கொடி குங்குமச் சட்டை மனிதரோடு பேசிக்கொண்டே நடந்துசென்றாள். பூக்கூடையும் சாக்குப் பையும் சைக்கிளோடு கலந்திருந்தது.
புதிதாக ஏறிய பெண்கள் சத்தமாகப் பேசிக்கொண்டனர். ஊதா நிறச் சுடிதார் பெண் ஒரு சோர்ந்த முகத்தோடு சாளரம் பார்த்திருந்தாள். பாட்டி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
என் மடியிலும் கைகளிலும் நினைவிலும் மல்லி வாசம் வீசியது.
Art : alldiamondpainting
ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.








Leave a Reply