சிந்திய மைத்துளி வடிவத் தோட்டம்
ஒரு குப்பியிலிருந்து சிந்திய மைத்துளி வடிவில்
ஒரு தோட்டத்தை உருவாக்கியுள்ளேன்
இதுவரை உலகத்தில் உருவாக்கப்பட்ட
தோட்டங்களை ஒப்பிடும்போது
அது எல்லா விதங்களிலும் தவறானது
தவறு என்பது பிழை என்ற அர்த்தத்தில் அல்ல
நீங்கள் அருகில் இருக்கும்போதே
அது வேறொரு இடத்தில் இருப்பது போன்ற அர்த்தத்தில்
உருவாக்கி உள்ளேன்
ஒரு புகைப்படம் எடுத்தது மாதிரி
இன்னொன்றை யாராலும் உருவாக்க முடியாது
ஒரு பூச்செடியை நட்டேன்
அது என் இதயத்தை வெளியே கொண்டு வந்தது
பிறகு செடிகளை கொடிகளை பயிர்களை மரங்களை நடுவதோடு
எனது காலத்தை நட்டேன்
அந்தத் தோட்டத்தைப் பற்றி சொல்வதற்கு
இன்னும் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது
அது அவ்வளவு நல்ல தோட்டம் இல்லை
முதல் பூச்செடியை நட்டது மாதிரி
என்னையே நடச்சொல்லி உரிமை கோரி நிற்கிறது.
அவ்வளவுதான் என்றான்
ஒவ்வொரு நாளும்
மதியம் இரண்டு மணிக்கு
அவன் தன் கட்டை விரல்களால்
பறந்து சென்று திரும்புகிறான்
எங்கு செல்கிறான் என்று பார்த்து வர ஆசையாக இருந்தது
ஒரு நாள் அவன் பின்னாலேயே போனேன்
இப்படி பறந்து எங்கே போகிறாய்? என்று கேட்டேன்
எனக்கென்று இலக்கு எதுவும் இல்லை
காதுகளால் பறந்து செல்லும் ஒருவனை
பின்தொடர்கிறேன் அவ்வளவுதான் என்றான்.
முழங்கால் காதலர்கள்
நான் எங்கேயாவது போய்த் திரும்பும் போதெல்லாம்
வேறு யாரோ இரண்டு பேரின் முகங்களின் வடிவில்
முழங்காலை மடக்கி அமர்ந்திருப்பாள்
அந்த முகங்கள் யாருடையது என
நான் திரும்பத் திரும்ப யோசிப்பேன்
ஒரு நாளும் அவளுடைய முகத்தைப் பார்க்காமல்
முழங்காலை மட்டும் பார்ப்பதை அவளும் கவனித்தது போல
குறையின்றிக் காட்டுவாள்
இருப்பு கொள்ளாமல்
“இந்த முகங்கள் யாருடையவை” என ஒரு நாள் கேட்டேன்
“என்னுடைய முன்னாள் காதலர்கள்” என்றாள்
Image credit : stockbyte
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று கூறிக்கொள்ளும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார், தற்போது மொழிப்பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் எழுத்தெனப்படுவது என்ற புதிய நோக்கில் இலக்கண நூலும் “a piece of moonshine at dinner” (Writersgram publication) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.
சிறார் இலக்கியத்தில் தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும், லிமொ ஆகிய நான்கு நாவல்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply