Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

தவக்கோலம்

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா
December 2, 2025
தவக்கோலம்

சிவகாமி ஆயா உள்பக்கமிருந்து கதவைத் திறந்தாள். விடிகாலையின் காற்று குளுமையாக முகத்தில் படர்ந்தது. மெல்ல அடியெடுத்து வைத்து முற்றத்தில் நின்று வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்களின் ஒளி மங்கி மறைந்து தெரிந்தது. கண்களைச் சிமிட்டிக்கொண்டாள். இடப்பக்கமாகப் பார்வையைச் சுழலவிட்டாள்‌. ஆளரவம் எதுவும் இல்லை. தூரத்துமேட்டில் வண்டிகளின் வெளிச்சம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கலாகப் போய்க்கொண்டிருந்தன. வலப்பக்கம் இருட்டின் முடிவில் ஏதோ முருகன் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. முற்றத்தை விட்டுக் கொஞ்சம் நகர்ந்து, ஒளி கசியாத இருட்டில் சேலையைத் தூக்கி நின்றாள். தரதரவென்று தாரை நிலத்தைக் கிழித்து, மண் வாசம் மேலெழுந்து வந்தது.

மெல்ல இருட்டிலிருந்து வெளியே வந்து குடிசையைப் பார்த்தாள். முற்றத்தின் ஒரு மூலையில் கிடந்த ஆட்டுரலிலிருந்து பூனையொன்று எழுந்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, எம்பிக் குதித்து ஓடி வந்து சிவகாமியின் கால்களுக்கு இடையில் உரசி நின்று மியாவ் என்றது.

மெல்லமாக நடந்து வந்து குடிசையினுள் நுழைந்து, சுவரில் கைவைத்துத் தேடித் தீப்பெட்டியை எடுத்து உரசினாள். வெளிச்சத்தில் வந்து நின்றுகொண்டு மியாவ் மியாவ் என்றது பூனை.

“ந்தா தள்ளு. சாமி” என்று பூனையை மனத்துக்குள் விரட்டினாள்.

“விளக்கு எங்க வச்சேன்?”

அடுப்புத்திட்டின் மேலிருந்த விளக்கை ஏற்றிவிட்டு தீக்குச்சியை அடுப்பினுள் அணைத்துப் போட்டாள். விளக்கொளியில், பாத்திரங்களை உருட்டி, சிறுசெம்பை எடுத்த பிறகு விளக்கை வாசற்படியின் காற்றுப்படாத மூலையில் வைத்து, கதவைப் பாதி அடைத்துவிட்டு மெல்ல நடந்தாள். மியாவ் அவளைப் பின்தொடர்ந்தது.

வீதியைக் கடந்து அய்யாவு கடைமுன் நின்று சைகை காட்டினாள்.

“என்ன ஆயா.. தாத்தா இன்னும் வரலையா” என்றான் அய்யாவு.

இல்லையென்று சைகை காட்டிவிட்டு லவுக்கையிலிருந்து பத்துரூபாய் நோட்டை எடுத்துச் செம்போடு சேர்த்து நீட்டினாள்.

“பத்து ரூபாய்க்கும் போடவா” என்றான்.

பூனையைக் காட்டி கைகளால் காற்றை அளைந்தாள்.

“சரி சரி, நல்லா ஆத்தித் தரேன். சொம்பு பூரா” என்று சொல்லி கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்திலிருந்து பாலை முகந்து, ஆத்திவிட்டு கிழவியின் செம்பில் ஊற்றினான்.

பாலைப் பார்த்ததும் பூனை மியாவ் மியாவ் என்றது.

“ஓம் புள்ளைக்கு நல்ல பசிபோல” என்றான்.

முகத்தைத் தாழ்த்தி ஆமாம் என்பதுபோல பூனையைப் பார்த்துத் தலையாட்டினாள்.

கம்பியில் கட்டியிருந்த நியூஸ் பேப்பர் துண்டுகளில் ஒன்றை உருவி செம்பின் வாயை மூடி ஆயாவிடம் தந்து

“பாத்து போ ஆயா” என்றான்

பால் செம்பை எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

“ஒங்கப்பனும் கேட்டான். நீயும் கேக்கற. தாத்தா இன்னும் வந்தபாடில்ல. பெருசு பெரிய தவிப்புக்காரன் பாத்துக்க” கடையில் அமர்ந்திருந்த பொட்டுக்காரன், அய்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இருவத்தி மூனு வருஷமாச்சு போயி. எங்கையோ நல்ல ஊத்து உடம்பா பெருசுக்கு சிக்கிருக்கு. அதான் இந்த ஊம ஒடம்ப விட்டுட்டான்.” பொட்டுக்காரன் சொல்வதைக் கேட்டுக்கொண்டே சிவகாமி ஆயா குடிசைக்கு வந்து சேர்ந்தாள். பூனை பாய்ந்து பாய்ந்து செம்பைப் பார்த்தது. ஆட்டுக்கல்லின் குழியில் வாங்கி வந்த பாலை ஊற்றினாள். ஒரு எம்பு எம்பி ஆட்டுக்கல்லின் மேல்நின்று பாலை நக்கத் தொடங்கியது பூனை.

“நல்லா நக்கு. வேறென்ன தெரியும் ஒனக்கு” பூனையைப் பார்த்து மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

அது குடித்து முடிக்கும்வரைப் பார்த்திருந்துவிட்டு குடிசைக்குள் நுழைந்தாள்.

வாசற்படியில் வைத்த விளக்கை எடுத்துத் தலைக்குமேல் உயர்த்திப் பிடித்தாள். கீற்றுகளின் இடுக்கில் செருகியிருந்த சுருட்டை உருவி எடுத்து விளக்குத் தீயில் பற்றவைத்து இழுத்தவாறு நிலைப்படியில் அமர்ந்துகொண்டாள். விளக்கை காற்றுபடாத இடமாக மீண்டும் வைத்தாள். சுருட்டை இழுத்துப் புகையைக் காற்றில் விட்டாள். விடியாத இருட்டில் மிதந்து மிதந்து போனது புகை.

தனது உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டே சுருட்டை இழுத்து இழுத்து விட்டாள். சுருட்டைத் தரையில் தேய்த்து அணைத்து மீதிப்பாதியை இடுப்பில் செருகிக்கொண்டு எழுந்து முற்றத்தில் கற்களைத் தேடினாள்.

கீழே கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துப் பக்கத்துவீட்டுக் குடிசையின் மேல் வீசினாள். வீசிவிட்டு அப்படியே நின்றாள். பூங்கோதையின் சின்னமகள் ஓடிவந்தாள்.

“என்னா ஆயா, வாசல் தெளிக்க தண்ணி வேணுமா” என்று கேட்டாள்.

கறைப்பற்கள் தெரிய ஆமாம் என்று தலையாட்டினாள். “அப்டியே பூங்கோத வாகு” என்று மனதில் நினைத்துக்கொண்டாள் ஆயா.

பூங்கோதையின் மகள் சிறு வாளியில் தண்ணீர் எடுத்துவந்து முற்றத்தில் வைத்துவிட்டு ஓடினாள்.

சிவகாமி ஆயா செம்பில் தண்ணீர் அள்ளி வாசலைத் தெளித்துவிட்டு கைகால்களை மீந்திருந்த நீரில் கழுவிக்கொண்டாள்.

மோட்டுவளைவிலிருந்து கொட்டாங்கச்சியை எடுத்துக் கோலம் போட்டாள். கோலம் போடும்போது எப்போதுமே கைகள் நடுங்கியதில்லை.

நின்ற வாக்கில் ஒற்றைக்கண்ணை வரைந்து அதன் உள்ளே பூ மலர்வது போன்ற கோலம் ஒன்றை அனாயாசமாகப் போட்டாள்.

எத்தனையோ பேர் கேட்டும் கோலத்தின் ரகசியத்தைச் சொன்னதே இல்லை ஆயா. நொடிப்பொழுதில் அழகழகான கோலங்களை மாற்றி மாற்றி வரைந்துகொண்டேயிருப்பவள். கோலத்திற்கென்றே பேர் போனவள். ஊர்த் திருவிழா, கோவில் காரியம், காதுகுத்து என ஊரில் எந்தப் பெரிய காரியங்களுக்கும் சிவகாமி ஆயாவின் கோலம்தான் ராசி.

ஆயாவுக்கு அதில் பெருமையும் உண்டு. வருமானமும் உண்டு. காசை பெரிதாக எண்ணாதவள்தான் இருந்தாலும் தருவதை மறுக்கமாட்டாள்.

கொட்டாங்கச்சியை ஆட்டுரலில் வைத்துவிட்டு முற்றத்திலிருந்து கல்லொன்றை எடுத்து பூங்கோதையின் குடிசை மீது மீண்டும் வீசினாள். வீசிவிட்டு ஓலை வைத்து வேய்ந்திருந்த குளியல் தட்டியை நோக்கிப் போனாள்.

ஒரு பெரிய சில்வர் போகணி நிறையத் தண்ணீர் நிறைத்துக்கொண்டு வந்து குளியல் தட்டியினுள் வைத்துவிட்டு நிமிர்ந்தாள் பூங்கோதை.

மார்பின் மேல் கையை வைத்துத் தேய்த்து “சோஉ சோஉ” என்றாள் ஆயா.

குடிசையின் உள்சென்று சோப்பு டப்பாவைக் கொண்டுவந்து தட்டியினுள் ஓரமாக வைத்துவிட்டு “தண்ணி ஊத்திக்கிட்டு கூப்புடு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பூங்கோதை.

தட்டியினுள் சென்று துணிக்கதவை இழுத்துவிட்டு உடைகளைக் களைந்தாள் சிவகாமி ஆயா.

லவுக்கையைக் கழற்றியதும் பொத்தென்று சரிந்தன முலைகள். சீலையைத் தட்டியின் மேல் போட்டுவிட்டு மடக்மடக்கென்று நான்கு செம்புகள் தண்ணியெடுத்து உடலில் ஊற்றினாள். வெறுங்கைகளால் உடலை ஒருமுறை தேய்த்துக்கொண்டாள். மார்புகளைத் தேய்த்துவிட்டாள்.

“சும்மா கன்னுக்குட்டி தலையாட்டம்ல இருக்கு அம்மாடி” என்ற கணவனின் குரல் நினைவில் வந்து போனது கிழவிக்கு.

இரண்டொரு செம்புகள் ஊற்றி சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளித்துவிட்டு உடைகளை அலசிப் பிழிந்து பாவாடையை மார்வரை ஏற்றிக்கட்டிக்கொண்டு தட்டியைவிட்டு வெளிவந்தாள்.

பிழிந்த துணிகளைக் கூரையின்மேல் விரித்து கற்களை எடைக்கு வைத்துவிட்டு குடிசையின் உள் சென்று வேறு சேலை உடுத்தி, சாமி படத்தின்முன் நின்று விளக்கை ஏற்றி “முவுவா” என்று வணங்கி திருநீற்றை நெற்றி முழுக்கப் பட்டையாகத் தீட்டிக் கொண்டாள்.

கதவைப் பூட்டிவிட்டு பூங்கோதையின் குடிசை மேல் கல்லொன்றை வீசினாள்.

விளக்குமாறு ஒன்றை எடுத்துவந்து பூங்கோதையின் சின்ன மகள் கிழவியிடம் நீட்டினாள். பூங்கோதையும் கூடவே வந்தாள்.

குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு விளக்குமாற்றைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ஊரைப் பார்த்து நடக்கத் தொடங்கினாள் சிவகாமி ஆயா.

பூங்கோதையும் அவள் மகளும் சிவகாமி ஆயாவையே பார்த்தபடி நின்றார்கள் ” நடக்கவே முடியல… அப்ரம் ஏம்மா‌ ஆயா தெனமும் தொலைவாப் போவுது” என்றாள் சின்ன மகள் .

“தெரில கண்ணு. நான் ஒன்னாட்டம் இருக்குறப்ப இருந்தே ஆயா இப்படித்தான் தெனத்துக்கும் விடிஞ்சும் விடியாம கிளம்பிரும். சாமிக்கே ஆயா வந்து நின்னாத்தான் சந்தோஷம். சாமி காரியம்னா சுடுகாட்டுக்கே கெழவி போவும். சரி வா”

பூத்திருந்த வெள்ளிகளின் ஒளி வானக் கருமையில் ஒளிந்திருந்து மங்கித் தெரிந்தது. நிலவைக் காணவில்லை. ஆகாயத்தின் சுயஒளியில் காட்சிகளெல்லாம் தெரிந்தன.

விளக்குமாறைத் தொங்கவிட்டபடி சிவகாமி ஆயா மெதுவாக மிக மெதுவாக நடந்து போனாள். தூரத்தில் வந்துகொண்டிருந்த நாய், கிழவியை நின்று பார்த்துத் திரும்ப வந்த வழிக்கே ஓடத்தொடங்கியது. நாயைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே நடந்தாள்.

சைக்கிளில் பூமூட்டையைக் கட்டி முருகேசன் வந்துகொண்டிருந்தார். ஆயாவைப் பார்த்து தலையசைத்தார். ஆயா சிரித்தது.

மரகதம் வாசல் தெளித்துக்கொண்டே ஆயாவைப் பார்த்தாள். ஆயா சிரித்தது.

மாரியம்மன் கோவில் முன், ஓடிவந்த நாய் நின்று ஆயாவைப் பார்த்துக்கொண்டிருந்தது.

விளக்குமாறை ஓரமாக வைத்துவிட்டு கோவிலின் வாசல் நடுவில் நின்று கைகளை உயர்த்திக் கோபுரத்தைப் பார்த்து வணங்கினாள்.

நாய் வந்த வழியே மீண்டும் ஓடியது.

விளக்குமாறை எடுத்துக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினாள். கொஞ்சநேரத்தில் முழுக் கோவிலும் துலக்கி வைத்த பாத்திரம் போலச் சுத்தமாக ஆனது.

கோவில் குழாயிலிருந்து நீர் பிடித்து, விதை விசிறுவது போல கையில் அள்ளிய நீரை, கோவிலைச் சுற்றி விசிறிக்கொண்டே சென்றாள். ஓடிவந்த பாப்பம்மா தண்ணீர் பக்கெட்டை வாங்கி ஆயாவுக்கு உதவினாள். மண்வாசம் கோவிலைச் சுற்றி மணந்தது.

பாப்பம்மா ஓடிப்போய் கோலமாவு டப்பாவைக் கொண்டுவந்து நீட்டி சிவகாமி ஆயாவின் முகத்தையே பார்த்துநின்றாள். ஆயாவின் முகத்தில் புன்னகை மட்டுமே மின்னியது.

விரல்களில் கிள்ளிய கோலமாவைப் புருவ நடுவில் வைத்து வேண்டிக் கொண்டு முதல் புள்ளியை வைத்தாள்.

புள்ளிகள் போன போக்கு என்ன! கைகள் போன போக்கு என்ன!

பாப்பம்மா பார்த்துமுடிப்பதற்குள்

மாரியம்மாவின் அரைமுகம் பலவண்ண நிறங்களில் ஜொலித்தது. இடது பக்க அரைமுகத்தை வெறும் வெள்ளை மாவைக் கொண்டு வரைந்தாள்.

பச்சை நிறத்தில் மூக்குத்தி வரைந்து இடது மூக்கில் தொங்கவிட்டாள்.

கோலடப்பாவை பாப்பம்மாவிடம் தந்துவிட்டு நிலத்தில் ஊன்றி எழுந்து நின்றாள் ஆயா.

சற்றுத் தள்ளிநின்று கோலத்தைப் பார்த்தாள்.

அரைமுகம் வண்ணங்களாக, அரைமுகம் வெள்ளையாக, மூக்குத்தி நிஜத்தில் ஜொலிப்பதுபோலவே ஜொலித்தது.

பாப்பம்மாவைப் பார்த்துத் தலையாட்டினாள் ஆயா. பாப்பம்மாவும் தலையாட்டினாள்.

விளக்குமாறை எடுத்துக் கொண்டு கோவிலின் அடுத்த தெருவுக்கு நடந்தாள்.

பாப்பம்மா பிரமாண்டமாகச் சிரிக்கும் அம்மன் கோலத்தைப் பார்த்தபடியே நின்றாள்.

அடுத்த தெரு பெருமாள் கோவிலை வணங்கிவிட்டுக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினாள்.

ஆயாவுக்குக் கொஞ்சமும் மூச்சு இரைக்கவில்லை. முகம் வாடவில்லை. எண்பது வயது கிழவி என்றால் யாராலும் நம்பமுடியாது.

ராஜேந்திரன் மாமா சொல்வார்.

“சாமி நெனப்பு உள்ள வந்துட்டா, உடம்பு சதையால எலும்பால ஆனதில்லை மாப்ள. ஏதோ ஒரு அருள் வரும் போல. அதுவே அவயங்களா மாறிப்போடும். சங்கவே சங்காது.”

வரைஞ்சிட்டு கெழவி கோலத்த எப்டி பாப்பா, பாத்திருக்கியா!

பெத்த பிள்ளய தொட்டில்ல போட்ட மாதிரி பாப்பாளாக்கும்! கெழவிக்கு அருள் வந்து பாத்திருக்கியா. பிறவி ஊம. ஆனா அந்தன்னிக்கி ஒரு சொல்லு சொல்லுவா. புரிஞ்சுகிட்டா பொழச்சிப்போம்.”

“எல்லாம் திருக்குறிப்பு மாப்ள. அந்தந்தப் பாதையில போனாத்தான் அந்தந்தக் குறிப்பு கெடைக்கும். கெழவி பாக்காத செழிப்பா இல்ல வறட்டா! எப்பவும் இப்டியேதான், ஒரே மாதிரியேதான் இருப்பா. யார் போயி நின்னாலும் சாமி எப்டி ஒரே மாதிரியே பாக்குது. அது மாதிரி”

ஈரமான வாசலில் பெருமாள் சக்கரம் ஒன்று வண்ணமாகச் சுழன்று நின்றது.

விளக்குமாறை எடுத்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி ஆயா.

ஊரிலுள்ள ஏழு கோவில்களையும் கூட்டிப் பெருக்கி, வாசல் தெளித்து, கோலமிட்டு, ஆயா வீடு திரும்பும்போது வானம் மெல்ல விடிந்து வந்தது.

சூரிய ஒளியில் கோலங்களெல்லாம் உயிர்பெற்று நின்றன.

நடுவீதியின் சின்ன மேட்டை ஏறி போஸ்ட் ஆஃபீஸ் அருகிலிருந்த குமுதா கிழவியின் திண்ணையில் சென்று அமர்ந்தாள் ஆயா. விளக்குமாறைத் திண்ணையடியில் போட்டுவைத்தாள். குமுதா கிழவி ஆளைக்காணவில்லை. உள்ளே டி‌வி ஓடிக்கொண்டிருந்தது.

தரையிலிருந்து மூன்று கற்களை எடுத்து திண்ணையில் முக்கோணம் போல வைத்துவிட்டு விளக்குமாறோடு நடையைக் கட்டினாள்.

குடிசை வந்து சேர்ந்தபோது வெள்ளை வெயில் இளித்து நின்றது. கூரையில் காய்ந்த உடுப்புகளைத் தொட்டுப் பார்த்தாள். இன்னும் காயவில்லை‌. கதவைத் திறந்து உள்ளே சென்றாள். விளக்குமாறை ஓரமாக வைத்துவிட்டு வாசற்படியில் அமர்ந்துகொண்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். தலையை நீட்டி ஆட்டுக்கல்லில் பார்த்தாள். “மியாவ்” என்று ஓசையிட்டாள்.

பூங்கோதை வீட்டுப் பக்கமிருந்து ஓடி வந்து ஆயாவின் மடிமேல் ஏறி அமர்ந்துகொண்டது பூனை.

நிலத்தில் அசையும் வெயிலைப் பூனையும் ஆயாவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். காகம் ஒன்று தனியாக நிலத்தில் தத்திக்கொண்டிருந்தது.

ஆயாவின் நினைவில் தாத்தாவின் குரல் வந்தது.

“ஏன்டி சிவகாமி, இந்தா மாமன் தாரேன் கொஞ்சூண்டு சாராயம் குடிடி… சும்மா ராஜவீரம் வரும்… ஒனக்கு பேச்சுகூட வரும்டி… இந்தா ஆக்காட்டு ஆக்காட்டு.”

கண்களைத் திறந்து பார்த்தாள் ஆயா.

சட்டென்று காதுகளை ஆட்டிக்கொண்டு கண்ணை விடைத்துக் கூர்மையாக ஆயாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது பூனை.

பூனையை இறக்கிவிட்டு எழுந்து சாமி படத்திற்குப் பின்னிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்துவந்து வாசற்படியில் மீண்டும் அமர்ந்தாள். படத்தை உற்றுப்பார்த்தாள்.

தாத்தா மீசையை முறுக்கியபடி ஆயாவின் தோள்மேல் கைபோட்டு நின்றிருந்தார். தாத்தாவின் நெஞ்சுவரைதான் ஆயா இருந்தது.

படத்தை மடியில் வைத்துக்கொண்டே சுவரில் சாய்ந்து விட்டத்தை வெறித்தாள்.

திருமணக் கோலத்தில் சிவகாமியும் சேகரும் அய்யனாரப்பன் கோவிலிருந்து வெளியே வந்தனர்.

“ஏய் ஊமச்சி… நல்லா கும்புட்டுக்கிட்டியா சாமிய?’ என்றான் சேகர். தலையாட்டினாள் சிவகாமி.

சிவகாமியின் தோள்மேல் கைவைத்து மீசையை முறுக்கியபடி “எட்ரா படம்” என்றான் சேகர்.

ஓரமாக நின்றிருந்த போட்டோகிராபர் வேண்டா வெறுப்பாகப் படம் எடுத்தான்.

“நம்ம கல்யாணத்துக்கு எவனும் வரவேணாம். நீயி நானு நம்ம சாமி… அது போதும்… சரியா” என்றான்.

சரி என்பது போல மீண்டும் தலையாட்டினாள்.

“குடிச்சுப்புட்டு கோயிலுக்கு வந்தா சாமிக்கு வலிக்குதா இல்ல சொந்தக்காரனுங்க கூதிக்கு வலிக்குதா… எவம்போனா எனக்கென்ன… ஓங் கழுத்துல எப்டி டீக்கா தாலி கட்னேன். போதையில எந்தக் கண்டாரஓலி கழுத்துல போயி தாலி கட்னேன்… நீ சொல்லு”

சிவகாமி அமைதியாக நின்றாள்.

அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு எம் 80 வண்டிக்கருகில் வந்து நின்றான். வண்டியின் கேரியரில் சாராயம் நிறைந்த டயர்டயூப் கட்டியிருந்தது. வண்டியை முடுக்கிவிட்டு ” உக்காருடீ என் சரோசா தேவி” என்றான் சேகர்.

கண்களில் நீர் வடிய ஏறி அமர்ந்துகொண்டாள் சிவகாமி.

மணமகனும் மணமகளும் மணவுடையில் சாராய ட்யூப் கட்டிய வண்டியில் கோவிலை விட்டுக் கிளம்பினர்.

தலையாலடித்துக் கொண்டது தள்ளிநின்ற கூட்டம்.

சிவகாமியின் அம்மா “இவ்வளவு நாள் வச்சிருந்து இந்தக் கெணத்துல எம்பிள்ளைய எறக்கிட்டனே” என்று மாரடித்துக் கதறினாள்.

அய்யனாரப்பன் சிலையிலிருந்து காகமொன்று கரைந்தது.

பாறைக்கிணற்றைத் தாண்டி ஒற்றைப் பொலித்தடத்தில் வண்டி நூல் போட்டது போல போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் பிசகினாலும் வயலில் விழவேண்டும். சிவகாமி பயத்தில் சீட்டை இறுக்கிப் பிடித்திருந்தாள்.

வண்டி சென்று சுஜாதா வீட்டு பின்பக்கம் நின்றது. விருட்டென்று சிவகாமி இறங்கி ஓரமாக நின்றாள். சுஜாதா அக்கா எழுந்து வந்தாள். சாராயக்கடையே குடிப்பதை நிறுத்திவிட்டு சிவகாமியை உற்று உற்றுப் பார்த்தது.

“ஏன்டா தண்டக்கேன.. அந்தப் பிள்ளைய ஏன்டா இங்க கூட்டியாந்த… புத்தி இருக்குதா உனக்கு. பாவம் எப்டி நிக்குறா பாரு. ஓம் மொகரைக்கு வெள்ளையும் சொள்ளையும்… கல்யாணம் வேற… போடா ட்யூப போட்டுட்டு நாளைக்கு வா… கருமம் புடுச்சவன…”

சுஜாதா ஏசித் தள்ளினாள். எதையும் காதில் வாங்காமல் குடத்திலிருந்து உரிமையாக ஒரு டம்ளர் சாராயம் எடுத்து மடக்மடக்கென்று குடித்துவிட்டு வண்டியைக் கிளப்பி ” சிவகாமி ஒக்காரு” என்றான்.

வண்டி விர் விர் விர் என்று புகைக்குள் வேகமெடுத்தது.

ஜல்லிக்கற்கள் பதித்திருந்த மண் ரோட்டில் வண்டி டக டக டகவென அதிர்ந்துகொண்டு பறந்தது.

“நிப்ப நிப்பே” என்று சேகரின் தோளைக் குத்தி நிறுத்தச் சொன்னாள் சிவகாமி.

வண்டியை மேலும் வேகமாக முறுக்கினான் சேகர்.

“சலோ சலோ ஹே… டெல்லி சலோ” உரக்கக் கத்தியபடி போய்க்கொண்டேயிருந்தான்.

மூன்று சாலைகள் பிரியும் இறக்கத்தில் வண்டியை விட்டு எகிறிக் குதித்தாள் சிவகாமி. விழுந்த வேகத்தில் ஜல்லிக்கற்களில் முட்டித் தேய்ந்தது. உருண்டு போய் போஸ்டர் கம்பத்தில் முட்டி மயங்கினாள்.

புதுச்சேலை கிழிந்து, இடுப்பில், கை கால்களிலெல்லாம் சதை உராய்ந்து ரத்தம் வழிந்தது. கூட்டம் கூடி சிவகாமியைத் தூக்கிக்கொண்டு ஓடியது.

வண்டியை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டு சீட்டைத்தூக்கி உள்ளிருந்த சாராயப் பாட்டிலை எடுத்தபடி “ராத்திக்குள்ள வந்திரு… இன்னிக்கு நமக்கு முத ராத்திரி” என்றான் சேகர்.

ஆஸ்பத்திரியிலிருந்து நேராக அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள் சிவகாமி. கடும்போதையில் வந்து என்னென்னவோ செய்து பார்த்தான் சேகர். ஊரே கூடி அவனை அடித்துத் துரத்தியது.

“வேகத்துல நான் அணைச்ச

குஞ்சு ஒன்னு செத்திருச்சே

கோவத்துல நான் வெதச்ச

சோளம் ஒன்னு கெட்டிருச்சே”

வீடே அமர்ந்து ஒப்பாரி வைத்தது .

சிவகாமி தட்டில் சோற்றைப் போட்டுத் தின்றுகொண்டே இருந்தாள். ஒருவருடம் கழிந்தது.

சாராய கேஸில் ஜெயிலுக்குச் சென்று, எங்கெங்கோ விழுந்து பல்லெல்லாம் உடைந்து, கண்ட பெண்களுடன் கூடிச்சலித்து, உடல் வற்றி சிவகாமி வீட்டுக்கு வந்து நின்றான் சேகர்.

அவனைப் பார்த்ததும் அழுது விட்டாள் சிவகாமி. வீட்டிலிருந்த யாரும் அவனுடன் பேசவில்லை.

சாமியை வணங்கி குங்குமம் வைத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

வானம் இடி இடித்து மின்னியது.

சேகரின் குடிசை பாழடைந்து கிடந்தது. ஆட்கள் புழங்கும் இடம் போலவே இல்லை. சுவரெல்லாம் கரையான் பூத்து பூஞ்சை வாடை குடலைப் புரட்டியது. பாயில் மூத்திரமும் வாந்தியும் கலந்து உறைந்து நாற்றம் குபீரென்றடித்தது. ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி ஒதுங்கவைத்துக் கூட்டி மெழுகி குடிசையின் உள்ளும் வாசலின் நடுவிலும் அகல் விளக்கை ஏற்றி வைத்தாள். கோவிலுக்குள் இருப்பதுபோல் கையெடுத்து ஒளியை வணங்கினான் சேகர்.

அன்றிரவு படுத்திருந்த சிவகாமியைப் பின்னிருந்து கட்டியணைத்தான். கைகளை எடுத்துவிட்டாள். சேலையை மெல்ல உருவினான். எழுந்து வெளியே போய் முற்றத்தின் ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்.

விட்டுப் பிடித்தான் சேகர்.

கிடைக்கும் வேலைகளுக்குப் போகத் தொடங்கினாள் சிவகாமி. சேகர் குடிசையிலேயே கிடந்து பழகிவிட்டான். எந்த வேலை செய்யவும் உடல் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. அவனால் சிரமமில்லாமல் புணர முடியும். அவ்வளவுதான்.

எத்தனையோ வழிகளில் சேகர் முயன்றுவிட்டான். ஒன்றும் ஆகவில்லை. அவளே கயிற்றுக் கட்டிலைப் பின்னி, வாசலில் போட்டுப் படுக்கத் தொடங்கினாள்.

வேலை முடிந்ததும் கோவிலில் அமர்ந்திருந்து விட்டு இருட்டியதும் குடிசைக்கு வந்து எதையோ சமைத்து, அவனுக்கும் வைத்துவிட்டுத் தூங்கிவிடுவாள்.

சேகர் பழைய கூட்டத்தோடு பழகத் தொடங்கினான். சாராயத் தொழிலுக்கு மீண்டும் கிளம்பினான். பணம் பார்த்தான்.

சிவகாமியைக் கட்டாயப்படுத்தினான். சிவகாமி குளிக்கும்போது ஓலை மறைவில் நின்று பார்த்தான்.

“சும்மா கன்னுக்குட்டி தலையாட்டம்ல இருக்கு அம்மாடி” என்று புகழ்ந்தும் பார்த்தான்.

அவனால் எந்த வடிவத்திலும் நுழைய முடியாத வைராக்கியமாக வளர்ந்துநின்றாள் சிவகாமி.

பூக்கடை குழந்தைவேல் இறந்து ஊரே கூடியிருந்தது. குடிசையில் சிவகாமி சமைத்துக் கொண்டிருந்தாள். சேகர் வண்டியைக் கழுவிக்கொண்டிருந்தான். குமுதா வந்து சொன்னாள் “நம்ம பூக்கட குழந்த செத்துப் போச்சுடி. மருந்து குடிச்சி நுரை தள்ளி…”

சமைப்பதை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போனாள் சிவகாமி. சேகரும் பின்னாலே நடந்து போய்ச் சேர்ந்தான்.

வாயிலும் வயிற்றிலும் அடித்து சிவகாமி கதறிக்கொண்டிருந்தாள். தரையிலும் மார்பிலும் மாறி மாறி ஓங்கி அடித்துக்கொண்டு அழுதாள். அரசல்புரசலாகத் தெரிந்திருந்த குழந்தை – சிவகாமி உறவு ஊருக்கே வெளிச்சமானது. சேகருக்கும்.

குழந்தைவேலின் மகள் பூங்கோதையை வாரியணைத்துக்கொண்டாள் சிவகாமி.

நேராகச் சாராயக்கடைக்குச் சென்றான் சேகர். குடித்தான். வாந்தியெடுத்தான். மீண்டும் குடித்தான். சாராயத்தை ஊற்ற ஊற்ற பற்றிக்கொண்டு எரிந்தது மனம். எங்கெங்கோ அலைந்தான். யார் யார் காட்டிலோ படுத்துறங்கினான். குடிசைப் பக்கம் வரவேயில்லை.

அவனுக்குப் புரிந்தது பெண்ணின் வைராக்கியம். பெண்ணை விஞ்சமுடியாது. உடலாலும் மனதாலும் எவனாலும் பெண்ணை வெல்லமுடியாது. அவளே விட்டுக்கொடுப்பதால்தான் ஆண் ஆணாகத் திரிகிறான்.

திருமணமாகி இவ்வளவு நாள் கழித்தும் தன்னால் மனைவியைத் தொடக்கூட முடியவில்லை. சேகருக்கு உச்சி மண்டையில் உறைத்தது.

குடித்துவிட்டு நெடுஞ்சாலை பக்கம் திரிந்தான். லோடு லாரி ஒன்றை நிறுத்தி ஏறிக் கொண்டான். லாரி போனது. அவன் திரும்பவே இல்லை.

“ஆயா… ஆயா…”

பூங்கோதையின் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தாள் சிவகாமி. மடியிலிருந்த புகைப்படத்தை இடுப்பில் செருகி மறைத்துக் கொண்டாள்.

“இப்பத்தான் வந்தியா…” என்றாள்.

ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள் சிவகாமி.

கொண்டுவந்திருந்த சோற்றுத்தட்டை வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டாள்.

பூங்கோதையின் மகள் பூனையை விரட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்.

சிவகாமி உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள் பூங்கோதை.

டிவிஎஸ் 50 வண்டி வந்து வாசலில் நின்றது. வண்டியை நிறுத்துவிட்டு பம்பைக்காரர் கர்ணன் கேட்டார்.

“என்ன ஆயா… விருந்தா…”

“ஆமா நீயி சடங்காயிட்ட இல்ல… அதான் கறிவிருந்து” என்று பூங்கோதை சிரித்தாள்.

“நான் சடங்கானா ஒனக்குத்தான முதல் பத்திரிக்க” என்று பூங்கோதையைப் பார்த்துச் சிரித்தார் கர்ணன்.

அந்தச் சிரிப்பு அவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்.

“ஆயா பக்கத்தூரு காளியாயி நோன்பி. உன்னதான் முதல்ல அழைக்கச் சொல்லியிருக்கு. ந்தா வந்துட்டேன். கோயில சுத்தி கோலமா போட்டுத் தள்ளு. சாப்டு முடி. தட்சணை தரணும்” என்றார்.

ஆயா தட்டை ஓரமாக வைத்துவிட்டு சேலையில் கைகளைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றது.

“அதா.. சாப்ட்டு பொறுமையா வாங்கிக்க வேண்டியதுதான” என்றார்.

“பம்பக்காரர் எம்டு பிஸி. அவர காக்க வைச்சா குத்தமில்ல” என்று சிரித்தாள் பூங்கோதை.

பழம் தேங்காய் ஆயிரத்தி ஒன்று பணம் அடங்கிய தட்டை கர்ணன் ஆயாவிடம் தந்தார்.

தட்டைப் பூங்கோதையிடம் தந்துவிட்டு சைகை காட்டி கர்ணனை அமரச் சொன்னாள் சிவகாமி ஆயா.

“டீ சாப்டுறியா” என்று சைகையில் கேட்டாள்.

வேண்டாம் என்றார் கர்ணன்.

“இப்பம் கிளம்புனா நேரம் சரியாக இருக்கும். என்ன சொல்ற” என்றார்.

சிவகாமி யோசித்துவிட்டு சரியென்று தலையாட்டினாள்.

வண்டியில் ஏறிக்கொண்டு பூங்கோதையின் சின்ன மகளுக்கு டாட்டா வைத்தாள். பூங்கோதை கர்ணனுக்கு டாட்டா காட்டினாள்.

காளியாயி கோவில் சென்று சேர்ந்தபோது மணி மாலை நான்கை நெருங்கியிருந்தது. கர்ணன் அடுத்தடுத்த வேலைகளுக்குக் கிளம்பிவிட்டார். அங்கிருந்த குளியலறையில் குளித்துவிட்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு கோலம் போடத் தொடங்கினாள் சிவகாமி.

இருட்டத் தொடங்கியதும் சீரியல் பல்புகளை எரியவிட்டார்கள். சிவப்பு மஞ்சள் பச்சையெனக் கோவில் சுற்றுவட்டாரமே வெளிச்சத்தில் மிதந்தது. கூட்டம் கூடத் தொடங்கியது. காற்றோடு அம்மன் பாடல் காதைக் கிழித்தது.

ஒவ்வொரு குழுவாகத் தப்படித்து ஆடி வந்துகொண்டிருந்தது.

சிவகாமிக்கு ஒருமாதிரி ஆனது. காளியாயி சிலையருகில் சென்று நின்று சாமியையே பார்த்தாள். தன்னையும் அறியாமல் கண் இளகி நீர் கசிந்தது. அடுத்தடுத்த குழு வந்து வந்து சென்றுகொண்டேயிருந்தது. சுற்றிலும் மனிதத் தலைகளாக இருந்தன.

கர்ணன் வெள்ளை வேட்டி பனியன் அணிந்து நெற்றி நீள விபூதி பூசி பம்பை அடித்துக்கொண்டு வந்து நின்றார். சிவகாமி கர்ணனைப் பார்த்தாள். பம்பை அடி வெளுக்க வெளுக்க ஒவ்வொருவராக சாமி இறங்கி ஆடியது. பம்பையின் வேகம் கூடியது. பெண்களெல்லாம் சாமியாடத் தொடங்கினார்கள்.

“கர்ணன் பம்பைக்கு காளியாயியே எறங்கி ஆடுவாடா” கூட்டத்திலிருந்து யாரோ கத்தினார்கள்.

கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வந்து சிவகாமி சாமியாடினாள். சிவகாமியைப் பார்த்ததும் அடி வெளுக்கத் தொடங்கினார் கர்ணன். “அம்மா காளியாயி… பாராயா… பாரு”

பம்பை விடாமல் முழங்கியது.

சிவகாமி வட்டமடித்துக்கொண்டே “ஸ்… ஊ… ஸ்…” என்று மூச்சு விட்டாள். பம்பையை மீறி ஆயாவின் மூச்சின் அனத்தல் கேட்டது.

உச்சத்திற்குச் சென்று கொண்டையை விரித்து ஆடத்தொடங்கினாள். தலையை பம்பரம் போலச் சுற்றினாள். சுற்றிக்கொண்டிருந்த கண்களில் சேகரின் உருவம் வந்து போனது. தலை சிவகாமிக்கு மெல்ல நின்றது. உடல் மட்டும் வட்டமடித்தது. கூட்டத்தில் கிழட்டு சேகர் நின்று சிவகாமியைப் பார்த்துக்கொண்டிருந்தான். இவ்வளவு காலமாய் எங்கெங்கோ சுற்றிக் கிடந்து கிடைத்த வேலைகளைச் செய்து குடித்துச் சீரழிந்து நடக்க மாட்டாமல் இன்றுதான் ஊர் திரும்பியிருந்தான்.

அவனை அடையாளம் கண்டதும் ஓய்ந்து சிவகாமி ஆயா மயங்கி விழுந்தது. கூடியிருந்தவர்கள் தூக்கிச் சென்று ஓரமாக அமர வைத்தனர்.

மயக்கம் தெளிந்து மெல்ல எழுந்து ஆயா கூட்டத்தில் அவனைத் தேடினாள். கூட்டத்தை விலகி ஓரமாகச் சென்று உதடுபிரியாமல் சிரித்தாள்… சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

பம்பைக்காரர் கர்ணன் வண்டியில் சென்றுகொண்டிருந்தாள் சிவகாமி. தூரத்தில் வாணவேடிக்கை இரவை வெட்டியது. குடிசை வந்ததும் இறங்கி கதவைத் திறந்து விளக்கை ஏற்றிவைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

திடுமென எழுந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். சிரித்தாள்.

சிரித்துக்கொண்டே படுத்தாள் மீண்டும்.

சேவல் கூவியது.

பூங்கோதையின் சின்ன மகள் எழுந்து மூத்திரம் போய்விட்டு சிவகாமி வாசலைப் பார்த்தாள். உள்ளே விளக்கின் ஒளி அசைந்தது.

“அம்மா, ஆயா ஊட்ல விளக்கு எரியுது” என்றாள்.

டீ போட்டுக்கொண்டு பூங்கோதை, ஆயாவை எழுப்ப வந்தாள்.

அப்போதுதான் பார்த்தாள். ஆயாவின் முற்றத்தில் குளிருக்கு வேட்டியைப் போர்த்திக்கொண்டு யாரோ ஒரு கிழவன் நாய்க்குந்தலாக இருமியபடி உட்கார்ந்திருந்தான்.


Art : SHEFALI DIXIT

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா
Share :

3 responses to “தவக்கோலம்”

  1. சத்திய சீலன்
    December 1, 2025

    நான் உங்களுக்கு தெரிந்த நபர். நாம் அரிதாக சந்தித்துள்ளோம் அண்ணா நான் இவ்வளவு காலத்தில் ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு புத்தகத்தையோ முழுமையாக நான் முழு மனதோடு படித்ததில்லை காரணம் ஏதோ ஒரு கவனக்குறைவு ஏதோ ஒரு மனச்சிதைவு அந்த மாதிரியான விஷயத்தில் நான் அதை சரியாக முழுமையாக படித்ததில்லை ஆனால் இப்பொழுது உங்களுடைய தவக்கோலம் தடாரி இந்த சிறுகதையை நான் முழுமையாக படித்தேன் அதில் எனது தாயார் பெயர் பூங்கோதை பயன்படுத்தி இருக்கிறீர்கள் சந்தோசமாக இருக்கிறது நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன் அண்ணா முதல் முறையா நான் ஆரம்பித்து முடிச்ச ஒரே ஒரு படிப்பு சம்பந்தமான விஷயம்தான் இது மட்டும்தான் அப்படி முழுமையாக மனதில் பதிந்து இருக்கிறது உங்களுடைய சிறுகதை அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல முறையில் இருந்தது நன்றி அண்ணா.

    Reply
  2. Joel
    December 2, 2025

    கருவாச்சி காவியம் தான் நினைவுக்கு வருது இத படிக்கும் போது. கருவாச்சியோட இன்னொரு உருவம் சிவகாமி மாதிரி தோணுது. அதே குடிசை, அதே வாசல், அதே குணாதிசயம், Prodigal Son மாதிரி ஆண் திரும்பி வறான், அதை ஏற்றுக்கொள்ளும் ஒளி கொண்ட மனம்.

    Reply
  3. A ANBARASAN
    December 5, 2025

    கதை நன்றாக வந்திருக்கிறது. 80 வயது முதியவளின் சாமியாட்டத்தை நினைக்கும்போதே மனம் பதறுகிறது. ஆனால் சிவகாமி எந்த இடத்திலும் மனம் பதறவில்லை. கதையை தான் எங்கோ கேள்விப்பட்ட ஒன்று போல தொடர் செவிவழிக்கதை போல வருவது கதையின் முக்கியமான பலம். வாழ்த்துகள் கார்த்திக் நேத்தா.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top