Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பழைய தோழர்

கீதா கார்த்திக் நேத்தா
கீதா கார்த்திக் நேத்தா
December 1, 2025
பழைய தோழர்

நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அது புதன் கிழமை என்பதால் பொருட்காட்சியில் பெரிதாகக் கூட்டமில்லாமல் இருந்தது. வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் மக்கள் கூட்டம் திரளாகத் தென்படும் இடம் அது. மற்ற நான்கு நாட்களும் பெரும்பாலும் வெறிச்சோடியே இருக்கும்.

அரசு பொருட்காட்சி என்பதால் மக்களுக்குத் தேவையான துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், பொம்மைக் கடைகள், செருப்புக் கடைகள், சமையல் பொருட்களோடு ஊறுகாய் போன்றவைகளும் விற்கப்பட்டன. இவற்றோடு ஒரு புத்தகக் கடையும் இடம்பெற்றிருந்தது. அப்புத்தகக் கடையில் பகுதி நேரப் பணிக்காக நான் சேர்ந்திருந்தேன். அங்கிருந்த புத்தகங்களை எடுத்துத் துடைத்து மீண்டும் அடுக்கி வைக்க வேண்டும். மேலாளர் இல்லாத சமயத்தில் விற்பனையாகும் புத்தகங்களுக்கு ரசீது தர வேண்டும் அதுதான் எனக்கான வேலை. நண்பகல் இரண்டு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை எனக்கு அங்கு பணி என வரையறுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வீதம் எனக்கான சம்பளம் பேசப்பட்டிருந்தது.

நான் பணிக்குச் சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தன. நாட்கள்தான் எத்தனை வேகமாக நகர்கின்றன என்று சிந்தித்துக் கொண்டே ஒவ்வொரு புத்தகமாக எடுத்துத் துடைத்துக்கொண்டிருந்தேன். “பார்த்திபன் கனவைத்” தொடர்ந்து “அலையோசையைத்” துடைத்து முடித்தேன். ஏதோ ஒரு நூல் தவறிக் கீழே விழுந்தது. அருகில் சென்று பார்த்த சமயம் “முப்பது நாட்களில் தமிழில் இருந்து இந்தி கற்றுக் கொள்ளலாம்” என்றிருந்தது. அதை எடுத்து மீண்டும் விழாத ஒரு இடத்தில் வைத்தேன்.

திடுமெனக் கடையின் மேலாளர் கடைக்குள் நுழைந்தார். கோபம் போன்ற வினோத உணர்வு அவர் முகத்தில் கொப்பளித்தது.

“ம்ம் இன்னைக்கு எத்தனை புத்தகம் வித்துருக்கு?” என்று ரசீது புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார். கடைசி இரண்டு நாட்களாக ஒரு புத்தகம் கூட விற்றதற்கான எந்த ரசீதும் இருக்கவில்லை.

எரிச்சலடைந்து எழுந்தவர், “என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று என்னைப் பார்த்துக் குரல் உயர்த்தினார்.

நான் அமைதியாக நின்றேன்.

“உனக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா? உன் சம்பளத்துக்காவது நீ வித்துருக்கணும்ல” என்று குரல் சற்றும் குறையாமல் அதே சத்தத்தோடு கேட்டார்.

எனக்கு என்ன கூறுவது என்று புரியாமல் நான் பேச்சற்று நின்றேன்.

மேசை மீது இருந்த பேனாவை எடுத்து எங்கேயோ வீசிவிட்டு அங்கிருந்து வந்த வேகத்திலேயே கிளம்பினார் மேலாளர்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும்.

“பிசிராந்தையார்” கீழே விழுந்தது.

நிலைகுலைந்து அப்படியே நின்றிருந்தேன்.

மேலாளருக்கு என்னென்ன அழுத்தமோ‌? இப்படி ஒரு கடையைப் போட்டுவிட்டு அதில் விற்பனை இல்லை என்றால் கண்டிப்பாக அவருக்கு மேலிருக்கும் எத்தனை பேருக்கு அவர் பதில் சொல்ல வேண்டுமோ? என்று பல சிந்தனைகள் மனதிற்குள் ஓடின.

இருப்பினும் இங்கிருக்கும் அத்தனை கடைகளிலும் வார நாட்களில் இதுதான் நிலை. கையைப் பிடித்து மக்களை இழுத்துவர வழி இல்லை அல்லவா.

நான் கீழே விழுந்த “பிசிராந்தையாரை” எடுத்து மீண்டும் அடுக்கினேன்.

ஒரு புதிய வாடிக்கையாளர் புத்தகக் கடைக்குள் நுழைந்தார்.

முகத்தை இயல்பாக்க முயன்றவாறே
அவரை நோக்கி நான் நடந்து சென்றேன்.

என்னைப் பார்த்தவர் புன்னகைத்தார். சற்று முன் நடந்த சம்பவத்தின் விளைவால் சோர்ந்திருந்த நிலை மாறி மெல்லப் புன்னகைத்தேன். அது எத்தனை உண்மையாக வெளிப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை.

அவர் முதல் வரிசையில் இருந்து முறையே ஒவ்வொரு அடியாகப் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு நகர்ந்தார்.

சங்க இலக்கியங்கள் பிறகு இக்கால இலக்கியங்களான சிறுகதைகள் ஒன்றிரண்டு கவிதை நூல்கள் பின் குழந்தைகளுக்கான நூல்கள் என அவரது பார்வை நீண்டதாக அவர் தலை அசைவதைப் பார்த்த எனக்குத் தோன்றியது.

கம்யூனிசம் தொடர்பான புத்தகங்கள் சிலவற்றை அவர் கையில் எடுத்துப் பார்த்ததாகத் தெரிந்தது. பிறகு மீண்டும் அதை இருந்த இடத்திலேயே அடுக்கினார்.

புத்தகங்களை மனிதர்கள் பார்க்கும்போதெல்லாம் புத்தகங்களும் மனிதர்களைப் பார்க்கும். நாம் கையில் எடுக்கும் புத்தகங்கள் நம்மைத் தொட நினைத்தவையாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டு
நான் மேசைக்கருகிலேயே நின்றேன். அவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு மெல்ல தன் உடலை நகர்த்திக்கொண்டிருந்தார்.

மேலாளரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

நான் வாடிக்கையாளரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பார்க்கும் பொருளில் இருந்து எண்ணம் வேறொரு இடத்திற்குத் தாவும் நிகழ்வை என்னால் உணர முடிந்தது. இந்த வாழ்வு துயரத்தால் நிறைந்தது. அப்படியென்றால் உண்மையான பொருள்: மனிதனின் இதயம் எல்லாவற்றிலும் இருந்து ஒரு துயரத்தைத் தான் எப்போதும் எடுத்துக்கொள்கிறது. அந்த அளவிற்கு நேரமும் பொறுமையும் இருக்கும் பட்சத்தில். இப்படியான ஒரு வினோதச் சிந்தனை ஏனோ என் மனதில் அப்போது மேலோங்கியது. நானே என்னை ஒருமுறை உலுக்கி எழுப்பி நிகழ்தருணத்திற்குக்கொண்டு வந்தேன்.

மீண்டும் வாடிக்கையாளரைப் பார்த்தேன். சராசரி உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, மாநிறம். தோளில் ஒரு தோல் பையை மாட்டியிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார். தலையில் அங்கங்கே தென்படும் நரை முடிகள் அவர் எப்படியும் அவரின் ஐம்பதில் இருக்கலாம் எனத் தோன்றச் செய்தது.

அவர் இன்னும் மிகமெதுவாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தார்.

நான் கடையின் வெளிப்புறமாக என் பார்வையைத் திரும்பினேன்.

பின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த திருக்குறள் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். மேலாளர் வீசி எறிந்த பேனா அலமாரிக்கு அடியில் இருப்பது என் கண்களுக்குப் புலப்பட்டது. அதை எடுத்து ரசீது புத்தகத்தின் உட்பகுதியில் செருகினேன்‌.

அந்த மனிதர் இப்போது அறிவியல் புத்தகங்கள் அடுக்கியிருந்த அலமாரிக்கு அருகில் நின்றார்.

நான் மீண்டும் என் பார்வையை வெளியில் பதித்தேன்.
மாலைக்காற்று மிக ரம்மியமாக வீசிக்கொண்டிருந்தது.

திடுமென வாடிக்கையாளர் வெளியேறிச் சென்றார். மீண்டும் புத்தகங்கள் எல்லாம் என்னைப் பார்த்தன. நானும் நிதானமாக அவைகளைப் பாத்தேன்.

இது வழக்கம்தான். பொருட்காட்சி தானே. அங்குப் பொருட்களைக் காண்பதற்கு எல்லாம் பணம் செலுத்த வேண்டியதில்லை அல்லவா. அதனால் பெரும்பாலான மக்கள் வந்து பார்த்துச் செல்வதோடு முடித்துக்கொள்வதுண்டு.

கடைசி அலமாரியில் இருந்த மொழிபெயர்ப்பு நூல்களை இன்னும் துடைக்காதது நினைவில் வர, என் வேலையைத் தொடர்ந்தேன்.

சரியாகப் பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். மீண்டும் அதே வாடிக்கையாளர் கடைக்குள் நுழைந்தார்.

அவர் கையில் இரண்டு தேநீர்க் குவளைகள் இருந்தன.

நானும் புத்தகங்களும் அமைதியாக அவரைப் பார்த்தோம்.

“வாங்க தோழர் உங்களுக்குத்தான். வந்து எடுங்க” என்றார் வாடிக்கையாளர்.

“தோழர்!” இந்த வார்த்தைக்குத்தான் எத்தனை ஈர்ப்பு!

“டீ ஆறிட்டா நல்லாருக்காது வாங்க” என்றார் அவர். அப்படி அழைக்கும்போது அவர் முகத்தில் கபடமற்ற ஒரு அன்பை என்னால் உணர முடிந்தது.

எல்லாவற்றிற்கும் மேல் அங்கு ஒரு தேநீரின் விலை பத்து ரூபாய் என்பது நினைவில் ஆடியது. ஒரு தேநீர் வீணாகப் போனால் பத்து ரூபாயும் அது உருவான காலமும் அதற்கான உழைப்பும் அவமதிக்கப்படுவதாகும் என்ற சிந்தனை உந்தித் தள்ள நான் தேநீரைக் கையில் எடுத்தேன்.

“ஸ்டூடன்டா? தோழர்”

“ஆமாம் சார்” என்றேன்.

“பாக்க ரொம்ப களைப்பா தெரிஞ்சிங்க. எனக்கும் டீ குடிக்கணும் போல இருந்தது. அதான் சேர்ந்து குடிப்போம்னு வாங்கிட்டு வந்தேன்.” என்றார் வாடிக்கையாளர்.

“நன்றிங்க சார்” என்றேன்.

“என்ன படிக்கிறீங்க தோழர்” என்றார் மீண்டும்.

“பி.ஏ தமிழ்” என்று சுருக்கமாக முடித்தேன். மூளைக்குள் தோழர் என்ற வார்த்தை முட்டி மோதிக் கொண்டிருந்தது.

“ஓ. தமிழ் மாணவியா நீங்க. நல்ல விஷயம்தான். இவ்வளவு புத்தகங்களுக்கு இடையில இருக்குறது ஒரு நல்ல சூழல்தான். ஆமா நீங்க வாசிப்பிங்களா?” என்றார் தோழர்.

“சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் பாடப் புத்தகங்கள் மட்டும் வாசிக்கிறேன்” என்றேன். கூறிக்கொண்டிருக்கும் போதே நினைவு என் பால்யத்திற்குத் தாவியது.

நான் மிகவும் சிறுமியாக இருந்தபோது அப்பா நன்றாக வாசிப்பார். வீட்டில் அவரது இருப்பு கையில் புத்தகத்தோடு இருப்பதாகத்தான் நினைவில் இருக்கிறது. வீட்டில் இருந்த நூல்கள் பொது நூலகத்தில் இருக்கும் மற்ற நூல்களைக் காட்டிலும் வேறுபட்டவையாக இருந்தன. ஒருநாள் இதென்ன புத்தகம் என்று கேட்ட போது இது மாஸ்கோ நூல்கள் என்று என் கையில் ஒன்றைக் கொடுத்துப் பிரித்துப் பார்க்கச் சொல்லிச் சிரித்தார். அட்டைகள் தடிமனாகத் தொட்டுப் பார்க்கும்போது மிருதுவாக இருந்தது அப்பாவின் மாஸ்கோ நூல்கள்.

அப்பா எப்போதும் சிவப்பு வண்ண ஜோல்னா பை ஒன்றை மாட்டியிருப்பார். பைக்குள் ஒன்றிரண்டு சில்லரைக் காசுகள், இரண்டு மூன்று பேனாக்கள். ஒரு சிவப்பு நிற டைரி. ஏதேனும் ஒரு மாஸ்கோ புக்கோடு சிவப்பு நிறத் துண்டு ஒன்று அதில் இருக்கும். இவைகளைக் கீழே கவிழ்த்து மீண்டும் உள்ளே அடுக்குவது எனக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று.

அப்போதெல்லாம் அப்பாவைத் தோழர் என்று அழைப்பார்கள். அப்பா தோழராக இருந்தார். தோழராகவே வாழ்ந்தார். இப்படித்தான் தோழர் எனக்கு மிகவும் பரிச்சயமான சொல்லாகியிருந்தது.

“பொதுவா ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் தருவிங்க” என்று நினைவுகளைக் கலைத்துக் கேட்டார் தோழர்.

“பொதுவாகப் பத்து சதவீதம். மாணவர்களுக்கு முப்பது” என்றேன்.

இதற்குள் அவர் அவரின் தேநீரை அருந்தி முடித்திருந்தார். பின் மீண்டும் புத்தகங்களைப் பார்க்கச் சென்றார்.

அப்பாவின் நினைவு கடை முழுவதும் நிறைந்தது.

ஒருமுறை வயது முதிர்ந்த தோழர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா. இரண்டு பாட்டிகள் அப்பா அம்மா அண்ணன் தம்பி நான் என ஏழுபேர் கொண்ட குடும்பத்தில் எப்போதும் எட்டாவதாக யாராவது வந்தவண்ணம்தான் இருப்பார்கள்.

“இது சன்முகம் தோழர். தோழருக்கு விடுதி பார்த்துக்கிட்டு இருக்கேன். அதுவரைக்கும் இங்கதான் இருப்பார்” என்று வீட்டில் இருந்த ஒரே ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரை அழைத்து வந்து அமரவைத்தார் அப்பா.

“முருகா.. ஒனக்கு ஏன் சிரமம். நான் அந்தக் கோயில் பக்கம் எங்கயாவது இருந்துக்குறேனே” என்றார் சண்முகம் தாத்தா.

“இந்த மழையிலையும் காத்துலையும் கோயில்ல கெடப்பியா? நீ இங்கேயே இரு என்றார் அப்பா.

இந்தத் தோழர்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு இதயம் அமைந்து விடுகிறதோ என்று என் கையில் இருந்த தேநீரைப் பார்த்தேன்.

சிவப்புத் துண்டு ஒன்றைத் தோளில் போட்டப்படி வீட்டில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் நிழற்படம் கண்முன் வந்துசென்றது.

நான் தேநீர்க் கோப்பையை மேசையின் கீழே வைத்துவிட்டு மெல்ல நடந்தேன்.
கண்ணில் பட்ட ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். சில நிமிடங்களுக்குப் பின் ஏதோ சிந்தனையில் மீண்டும் அதே இடத்தில் அடுக்கினேன்.

கட்சி நிதி வேண்டி ஒவ்வொரு பேருந்தாக உண்டியல் குலுக்குவதும் பொதுப் பிரச்சினைக்காக விண்ணப்பம் எழுதுவதும் பொதுச்சொத்துக்களைச் சீர்திருத்த வேண்டிச் சதா போராடிக்கொண்டும் இருந்த அப்பா அப்போது தோழராக இருந்தார். அப்பாவைக் குறித்த சிந்தனை இன்னும் அதிகமானது. நான் மேசையில் வந்து அமர்ந்து கொண்டேன்‌.

வாடிக்கையாளத் தோழர் கைநிறையப் புத்தகங்களோடு மேசை அருகில் வந்தார். “எனக்கு உங்க பெயரில் ரசீது வேண்டும்” என்றார்.

நான் திகைத்து “ஏன்” என்றேன்.

“மாணவர்களுக்கு முப்பது சதவீதம் கழிவு. அதனால் உங்க பெயரில் ரசீது போடுங்கள்” என்றார். “புத்தகங்கள் அவசியமான ஒன்று. கழிவில் வாங்கினாலும் அதன் மதிப்பு குறைவதில்லை. கழிவுத் தொகையில் இன்னும் இரண்டு நூல்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லவா அதனால் உங்கள் பெயரில் ரசீது போடுங்கள்” என்றார்.

இந்த வாரத்தின் முதல் விற்பனை அது. எந்தக் காரணத்தை வைத்தும் அதை விட்டுவிடக் கூடாது என்று எண்ணினேன். மேலும் அவர் கூறுவது சரிதான் என்பதும் நான் அறிந்ததே. ஆகையால் நான் என் பெயரில் ரசீது போட்டு பணத்தை வாங்கினேன். மொத்தம் பன்னிரண்டு நூல்களை அவர் வாங்கினார்.

ஒரு பெரிய துணிப்பையில் புத்தகத்தை வைத்து “மகிழ்ச்சி தோழர்” என்றேன்.

பையிலிருந்த ‘புயலிலே ஒரு தோணி’யும், ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலும் எடுத்து மேசை மீது வைத்தவர் ‘இது உங்களுக்குத்தான்’ என்றார்.

ஒன்றும் புரியாமல் நான் அவரைப் பார்த்தேன்.

“உங்க பேருல வழங்கப்பட்ட கழிவு விலையில் வாங்கின நூல்கள் இவை உங்களுக்குத்தான். நல்லாப் படிங்க தோழர்” என்று அங்கிருந்து விடைபெற்றார்.

நான் மேசை மீது இருந்த புத்தகத்தையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தேன். புத்தகங்களும் கடை நிரம்பிய அப்பாவின் நினைவும் கடையில் இருந்து மெதுவாகச் சென்றுகொண்டிருந்த தோழரையே பார்த்துக்கொண்டிருந்தன.


Art : Torah Ahavat Olam 70

கீதா கார்த்திக் நேத்தா
கீதா கார்த்திக் நேத்தா

ஆசிரியர் குறிப்பு.

சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top