பால் செலான்
இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் இன்றியமையாத கவிஞர் என்று கொண்டாடப்படுபவர் பால் செலான். இரண்டாம் உலகப் போரின் கொடூரமான அனுபவங்களையும் வதை முகாம்களில் தன் பெற்றோர்களைப் பறிகொடுத்ததையும் செலான் தன்னுடைய பிரத்யேகப் படிமமொழியில் கவிதைகளாக்குகிறார். “மிகச் சிறந்த இசையைப் போல தத்துவ தரிசனங்களைப் போல செலானின் கவிதைகள் தன் அக அனுபவங்களைக் கட்டமைத்ததாக” ஜார்ஜ் ஸ்டைனர் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்ஸ் புனைவு மொழியில் புரிந்த அற்புதங்களை செலான் கவிதைகளில் புரிந்திருக்கிறார். கவிதைகளைத் தவிர தன்னுடைய நனவிலியின் ஆழத்தில் உறையும் அனுபவங்களை நுண் மொழிகளிலும் வெளிப்படுத்தி உள்ளார் பால் செலான்.
ஒரு நிழல் இறுதியாகத் தனக்குரியவனைக் கண்டடைந்தது.
நினைவின் ஒளி ஊடுருவும் பகல் பொழுதை விடக் கருமையானது வேறு எதுவும் இல்லை.
இலையுதிர்க் காலத்திடமிருந்து பறவைகளை எப்படி விரட்டுவது என்பதைக் கற்றுக் கொள்.
மீன் வலைகளின் மொழியை மீன்களுக்குக் கற்றுக் கொடு.
ஒரு திடீர் சூறைக் காற்று முகமூடியைக் கிழித்தெறிந்து முகத்தைப் புலப்படுத்தியது.
யாரோ ஒருவர் துப்பாக்கித் தோட்டாவின் கனவிற்குள் புகுந்து அதைக் கடந்து சென்றார்.
அவன் ஆப்பிளின் தோலைச் சீவினான், குறுங்கத்தியைத் தன் நெஞ்சில் பாய்ச்சுவதற்கு முன்.
கரையில் பொறுமையாகக் காத்திரு.
மூழ்கியவன் உன்னைக் காப்பாற்றுவான்.
பூமியில் பிரார்த்தனைகள் நிறுத்தப்பட்ட கணத்தில் திடுக்கிட்ட கடவுள் கண்விழித்தார்.
ஓர் இரவில் பகல் பொழுதுகள் வெண்மையடைந்தன.
ஒரு சொல்: மிகப் புராதனமானது, சாம்பல் அடைந்திருந்தது; நிசப்தம் அதனிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டது.
கட்சி படுத்துவதை கற்றுக் கொள்பவன் காட்சிக்குப் புலப்படாததைக் கண்டடைகிறான்.
இங்கே பூமியின் அடியாழத்தின் நடுவில்
ஒரு மனிதனின் இருப்பிற்கு மேலே
புலப்படாத பாதைகள், இயக்கங்கள்;
அப்பாதைகளின் ஊடாக வஸ்துக்கள் நகர்கின்றன.
நிமித்தங்களை விற்பவன்
மறு கரையில் இருந்து பயணிக்கிறான்.
ஒவ்வொரு சாம்பல் துகளிலிருந்தும்
ஒவ்வொரு தூய கவிதையில் இருந்தும்
ஒரு பீனிக்ஸ் பறவை மீண்டெழுகிறது.
தன்னுடைய சிதைவுகளின் மேலிருந்து
கவிதை எழுந்து நிற்கிறது; உன்னை எதிர்நோக்குகிறது.
நீ கொலையுண்டவர்களை மேலெழுப்பி விட்டாய்;
கொலைகாரர்கள் மேல் நோக்கி நீந்தி அவர்களைப் பின் தொடர்கிறார்கள்.
வார்த்தைகளிடம் அலறும் ஒருவனிடம் மொழி தன்னை மறைத்துக் கொள்ளும்.
மொழிக்கு வசமாகும் ஒருவனை வார்த்தைகள் தேடி வரும்.
காடுகள் என்னை விட்டு நீங்கும் போது
பீச் மரங்களே, உங்களை எதிர்நோக்குகிறேன்.
இரகசியத்தை வெளிப்படுத்தாதே
இல்லையேல்
இரகசியம் உன்னை வெளிப்படுத்திவிடும்.
Illustration by Andrea Ventura
கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.








Leave a Reply