Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பளியர்

தி.கோபிநாத் . Avatar
தி.கோபிநாத் .
September 1, 2025
பளியர்

படம் 1

பளியர், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவுகளில் வாழும் பழங்குடியினர். இவர்கள் மொழி தமிழ். வேட்டை மற்றும் சேகரிப்பு சமூகம். 1960 வரையிலும் கூட குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்ந்த இம்மக்களுக்கு தற்போது மலையடிவாரத்தில் அரசு வீடுகள் கட்டி குடியமர்த்தி உள்ளது.

இன்று இவர்கள் சமவெளி மக்களைப் போலவே வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும் தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் மலைப்புறத் தோட்டங்களில் கூலிகளாகவும் பணி செய்கின்றனர். இன்றைக்கும் தேனடைகளை எடுக்க உயரமான பாறைகளில் சுலபமாக ஏறி இறங்குகிறார்கள். சிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவது வழக்கம். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடையே இவர்களின் தோற்றம் என்று நூற்றாண்டு பழமையான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு மலைச் சரிவிலும், தேனி மாவட்டம் வருசநாட்டு மலைப்பகுதிகளிலும் கணிசமாகக் காணப்படுகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல் வட்டத்தில் தருமத்துப்பட்டி, பன்றிமலை, ஆடலூர், பழைய கன்னிவாடி, சத்திரப்பட்டி, கோம்பை, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் வடகாடு கிராமத்திலும் பழனி வட்டத்தில் குட்டிக்கரடு, பாலசமுத்திரம், பெரியம்மாபட்டி, காவலப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய கிராமங்களிலும் கொடைக்கானல் வட்டத்தில் வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி, அடுக்கம், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, பூலத்தூர், வெள்ளகவி, தாண்டிக்குடி, காமனூர், கே சி பட்டி, பாச்சலூர் ஆகிய கிராமங்களிலும் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தலையணை, கோட்டமலை, கருப்பாநதி வனப் பகுதிகளிலும் சுமார் 36 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இம்மக்களிடம் புல்லாங்குழல், சத்தக்குழல், கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகளும் அவை சார்ந்த ஆதி இசையும் இன்றளவும் உயிர்ப்போடு உள்ளன. இந்த இசைக்கருவிகளை இவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். மலையெங்கும் வனதேவதைகள் நிறைந்திருக்கின்றன என்பது இவர்கள் நம்பிக்கை. இசையால் அத்தேவதைகளை தங்களின் வாழ்விடத்துக்கு வரவைக்க முடியும் என்பது அவர்கள் வழிபாடு. பளிச்சியம்மனே முதன்மை தெய்வம். துணையாகக் கருப்பு, மாரியம்மன், கன்னிமார் போன்றவையும் உண்டு. இவர்களது வழிபாட்டில் இசை முதன்மையானது.

 



படம் 2

மலைபடு பொருட்களை சேகரிப்பது இவர்களின் தொழில். பாசம் எடுத்தல், தேன் எடுத்தல், வள்ளி கிழங்கு தோண்டுதல் என்று சொல்கிறார்கள். ‘பாசம்’ என்பது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய மசாலாப் பொருள் ஆகும். கல்பாசி என்று கூறப்படுகிறது. பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாசி அடர்வனப் பகுதிகளில் மரங்கள் மீதும் கற்கள் மீதும் படர்ந்து வளரக்கூடியது. இதைச் சேகரித்து விற்பது இவர்களின் வழக்கம்.

பளியரின் பிரதானத் தொழில் தேன் சேகரித்தலாகும். இதற்கு இருவகையான உத்திகளைக் கையாளுகின்றனர். மலைப்பகுதியிலுள்ள உயரமான பாறைகளிலும், மரங்களிலும், ஆழமான பள்ளத்தாக்குகளிலும் காணப்படும் தேன்கூடுகளே இவர்களது இலக்கு. கூட்டமாக தேன் எடுக்க செல்லும் போது, யாராவது ஒருவர் தேன் கூட்டினைக் கண்டு விட்டால், அதைத் தன்னுடன் வந்தவர்களுக்கு அறிவிக்க ‘ஊ… ‘ என்று கூவுகின்றார். அதைக் கேட்ட மற்றவர்கள் அவரை நோக்கிச் செல்கின்றனர். உயர்ந்த பகுதிகளில் உள்ள தேனை எடுப்பதற்கு, மூங்கில் ஏணியைக் கொண்டு தேன்கூட்டின் அருகில் செல்கின்றனர். வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம் இரண்டையும் நன்கு மென்று தேன் கூட்டின் மீத ஊதுகின்றார்கள். இந்த நெடி தாங்காமல் தேனீக்கள் பறந்து செல்கின்றன. பின், தேன் அடைகளை ஒரு பாத்திரத்தில் சேகரித்து, அதைக் கயிறு கட்டி, கீழே நிற்பவர்களிடம் தருகின்றனர். இன்னொரு வகையில், காய்ந்த சருகினை பந்து போலச் சுருட்டி, அதன் மீது பச்சிலை கொடியினைச் சுற்றி, அதனைக் கம்பியால் முறுக்கிக் கட்டி தீ மூட்டுகின்றனர். அதன் உள்ளே உள்ள சருகு கங்கு போலாகி, பச்சிலையிலிருந்து புகையயைக் கிளப்புகிறது. அதைத் தேன் கூட்டின் அருகில் காட்டுகின்றனர். தேனீக்கள் கலைந்து பறக்கின்றன. பின், தேன் அடைகளை எடுக்க ஆரம்பிக்கின்றனர். எடுத்த தேனினை மெல்லிய தகட்டினால் ஆன பெட்டிகளில் சேகரித்து பயன்படுத்துகின்றனர்.

கிழங்கு எடுத்தல் இவர்களின் முதன்மைத் தொழில். கிழங்கினை வெயில் காலங்களிலேயே எடுக்கின்றனர். அக்காலங்களில் தான் கிழங்கு முற்றியும், பருத்தும் இருக்கும் என்கின்றார்கள். வேலை இல்லாத நாட்களில் பளியர் இனத்தைச் சார்ந்த பெண்கள் வீடு பெருக்க பயன்படும் விளக்கமாறுக்கான குச்சி வெட்டுவதற்கு செல்கின்றனர். இதனை ‘மாறு வெட்டுதல்’ என்று கூறுகின்றனர். இதற்காக மலைகளுக்குள் பல மைல் தூரம் வரை கூட சென்று வருகின்றனர்.

 



படம் 3

பளிச்சியம்மன் தெய்வம் மற்றும் கதை

முன்னொரு காலத்தில் பளியர் மக்களின் நாட்டாமை ஒருவன், தனது அழகிய மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறான். அவளோ ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அந்தப் பகுதியில் மரணப் பாறை என்றொரு பாறை இருக்கிறது. உயரமான சுவர் போல நீண்ட மலைப்பகுதி அது. யாராலும் ஏற முடியாத பகுதி. அங்கேயொரு பாறை இடுக்கில் தேன் கூடு இருந்திருக்கிறது. எதிர்மலையிலிருந்து பார்த்தால் மட்டுமே அது தெரியும். அதுவும் சின்ன நெற்றிப் பொட்டு போலத் தெரியும். அந்தப் பாறையில் இறங்கி யாராலும் தேனெடுக்க முடியாது. அந்தத் தேனடையை யார் எடுத்து வருகிறானோ அவனையே திருமணம் செய்து கொள்வதாய் மகள் கூறிவிடுகிறாள். போட்டி நடந்தது. அவளை மனதில் நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் செடி கொடிகளை நீண்ட கயிறு போல் செய்து மரத்தில் கட்டி இறங்க முயற்சி செய்கிறான். முடியவில்லை. வேறு பலரும் முயன்று, தோல்வி தான். உடனே அப்பெண் தானே இறங்கி எடுப்பதாகச் சொல்லி இறங்க ஆரம்பிக்கிறாள். அனைவரும் வியந்து பார்க்க, முதலில் முயற்சி செய்தவன், தன்னால் முடியாததை ஒரு பெண் சாதிப்பதா என்று கயிற்றை வெட்டி விடுகிறான். அவள் விழுந்து இறந்துபோகிறாள். அவளையே பளிச்சியம்மன் என்ற பெயரில் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்தப் பளிச்சியம்மனுக்கு சிறுமலை பகுதியில் வேறு மாதிரியாகவும், வருச நாட்டு பகுதியில் வேறு மாதிரியாகவும் கதை சொல்கிறார்கள்.



படம் 4

பளியர்களின் வழிபாட்டுமுறைகள்

பளியர்கள் மலையிலுள்ள பல தெய்வங்களை வணங்குகின்றனர். ஆதியில் பளிச்சி என்ற பெண் தெய்வத்தை மட்டுமே பிரதானமாக வணங்கியிருக்கிறார்கள். இதையே பால்க்ஸ் என்பவர் இந்திய மக்கள் கணக்கீட்டு அறிக்கையில் ‘பளிச்சியம்மாளைத் தவிர வேறெந்த கடவுளைப் பற்றியும் இவர்களுக்குத் தெரியவில்லை’ என்று எழுதுகிறார். ஆண்டுக்கு ஒரு முறை பளிச்சியம்மனுக்கு திருவிழா எடுக்கின்றனர். அந்நேரத்தில் மக்களில் சிலர் காடுகளுக்கு சென்று, கரகம் எடுத்து, வேண்டி காட்டிலிருந்து பளிச்சியம்மனை ஊருக்குள் கூட்டி வருவதாகக் குறிப்பிடுகின்றனர். ஊருக்குள் வந்த பளிச்சியம்மன் மூன்று நாள் தங்களுடன் இருப்பதாகவும், திருவிழா முடித்த மூன்றாவது நாள் பளிச்சியம்மனை பூஞ்சோலைக்கு கொண்டு போய் விட்டு விடுவதாக குறிப்பிடுகின்றனர். இந்நேரத்தில் பளிச்சி அம்மன் குறித்து பாடல்கள் பாடி வணங்குகின்றனர்.

பளிச்சியம்மன் தவிர்த்து கருப்பு, மாரியம்மன், கன்னிமாரம்மன் ஆகிய தெய்வங்களையும் இவர்கள் வணங்குகின்றனர். தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான இசை வாசிக்கப்படும். தெய்வங்கள் தங்களுக்குப் பிடித்த இசையை கேட்கும் போது, யாராவது ஒருவருடைய உடலுக்குள் வந்திறங்குவதாக இவர்கள் நம்புகிறார்கள். வனதேவதைகளை வரவழைக்க அந்த தேவதைகளுக்கு பிடித்த குழலை மட்டும் தான் இசைக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர். குறிப்பாக சிறுமலை மலைப்பகுதியில் உள்ள கருப்புக் கோவில் எனும் குடியிருப்பில் உள்ள பளியரினப் பெண் வனதேவதை வழிபாடு பற்றி குறிப்பிடும் பொழுது, தெய்வங்கள் அங்கு இருக்கக்கூடிய அனைத்து நபர்களுடைய உடலுக்குள் வந்தும் இறங்கும் என்கிறார். அதனால் ஊரே தரையில் உருண்டு புரளும் என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு தேவதைக்கும் தனியானவொரு ஆட்டம் உள்ளது. தெய்வத்தின் அருள் வந்து ஆடுகிறவர்கள் அந்தந்த தேவதைக்கான ஆட்டத்தையே ஆடுகிறார்கள். அதைக்கொண்டே எந்த தேவதை வந்திருக்கிறது என்பதை இம்மக்கள் அறிந்து கொள்கின்றனர்.

 


படம் 5

படம் 6

குடியிருப்புகள்

ஆரம்ப காலங்களில் மரங்களின் மீது பரண் அமைத்தும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றும் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகில் உள்ள வேலப்பர் கோவில் அருகில் பளியர் சமூக மக்கள் குடியிருந்த ஆதிகால குகைகளைக் காண முடியும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு இக்குகைகள் சிறியதாகத் தோன்றினாலும், அதன் உட்புறம் பெருங்கூட்டமே தங்கிக் கொள்ள முடியும் என்று, அக்குகையில் சிறுவயதில் வாழ்ந்திருந்த பழியர்ப் பெண்ணொருவர் குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் இவர்கள் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்ந்திருக்கின்றனர். தற்காலத்தில் இவர்கள் மலைகளிலிருந்து கீழே இறக்கப் பட்டு அரசு கட்டிக் கொடுத்திருக்கும் தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி மக்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாய தோட்டங்களில் வேலை செய்தும் தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர்.

 


படம் 7

தேன் சேகரித்தல்

பளியர்களின் முதன்மைத் தொழில் தேன் சேகரித்தலாகும். மலையின் உயரமான பாறைகளிலும் மரங்களிலும் ஆழமான பள்ளத்தாக்கிலும் தேன் சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். பளியரில் தேன்கூட்டை முதலில் பார்க்கும் ஒருவர் அதைத் தமக்காக உரிமை கொள்ள அம்மரத்தில் தாவரக் கொடியைக் கட்டி வைக்கிறார். அவ்வடையாளத்தை வேறொருவர் கண்டால் அத்தேன் கூட்டை எடுக்க மாட்டார். குறிஞ்சித்தேன், பெருந்தேன் ராட்டுகள் பாறைகளிலும், மரக்கிளைகளிலும் காணப்படும். தூக்குத்தேன் கூடுகள் பெரிய மரக்கிளைகளில் தொங்கும் நிலையில் காணப்படும். புற்றுத்தேன் கூடுகள் தரையில் புற்றுகளுக்கிடையில் காணப்படுகின்றன. தாண்டிக்குடி வனப்பகுதியில் சேகரித்த தேனை அருகிலுள்ள கூட்டுறவு சங்கத்திலும் தனி நபர்களிடத்திலும் விற்பனை செய்கிறார்கள்.

நெடிதுயர்ந்த மலைமுகடு, பாறை உச்சி, மரம் என எங்கிருந்தாலும் தேனடைகளை இனங்கண்டறிந்து, தேன் எடுப்பதில் பளியர்கள் திறன் மிக்கவர்கள். தேனீக்கள் பறந்து செல்லும் திசையைக் கொண்டு தேனடைகள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். இதைத் ‘தேனோட்டொம்’, ‘ஈயோட்டொம் பாக்குறது’ என்று சொல்கின்றனர். பொந்துத் தேன், கொம்புத்தேன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் புகை போட்டுத் தேனீக்களை விரட்டிவிட்டுப் பின் தேனடைக்குச் சேதமின்றி அவற்றிலிருந்து தேனைச் சேகரிக்கின்றனர். மாறாக, மிக உயர்ந்த மரங்கள், பாறைகளின் மீது மூங்கில் ஏணி வழியே ஏறியும் தேனைச் சேகரிக்கின்றனர். நீண்ட வலுவான பாலாங்கொடி, முள்ளுக்கொடி உள்ளிட்ட காட்டுக்கொடிகளைப் பின்னிப் பிணைத்து கயிறு உருவாக்கி, மால் கட்டித் தொங்க விட்டு, அவற்றின் துணையால் ஏறி, நெடிதுயர்ந்த மலைமுகடு, பாறை உச்சியில் அமைந்துள்ள தேனடைகளில், தேனீக்களைச் சுளுந்துக் குச்சியாலான தீப்பந்தப் புகைபோட்டு விரட்டி, ‘பொந்துதேன்’ எடுக்கிறார்கள். ஆபத்து மிகுந்த இத்தகைய தேன் சேகரிப்பின் போது தனது மனைவியின் சகோதரனை துணைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ‘மலையேற மச்சான் தயவு வேணும்’ எனப் புன்னகையோடு குறிப்பிடுகின்றனர்.

 


படம் 8

கல்பாசம்

இந்தப் பாசி அடர்வனப் பகுதிகளிலுள்ள மரங்களிலும் கல் பாறைகளிலும் வளர்கிறது. இதனைச் சேகரிப்பதற்கு உளி ஒன்றை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு எடுக்கப்படும் கல்பாசம் மரப் பட்டைகளுடன் சேர்ந்தே கிடைக்கும். அந்த மரப் பட்டைகளை பிரித்து எடுத்து, சுத்தப்படுத்தி, பாசான்களை மட்டும் கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ கல் பாசம் ரூபாய் 200 இல் இருந்து 300 ரூபாய் வரையிலும் விலை போகிறது. வியாபாரிகள் நேரடியாக இவர்களிடம் வந்து வாங்கி செல்வதாக குறிப்பிடுகின்றனர். தற்பொழுது வனத்துறையினர் கல் பாறைகளில் இருந்து மட்டுமே பாசம் எடுப்பதற்கு அனுமதிப்பதாகவும் மரங்களிலிருந்து பாசான் எடுப்பதற்கு அனுமதிப்பது இல்லை என்றும் சொல்கின்றனர். மரங்களில் இருந்து பாசம் எடுக்கும் பொழுது மரப்பட்டையையும் சேர்த்து எடுத்து விடுவதால், மரத்தின் ஆயுள் குறைந்து விடுவதாக வனத்துறை சொல்வதாக பளியர் குறிப்பிடுகின்றனர். அதனால் தற்பொழுது கல்பாசம் எடுப்பது குறைந்து விட்டது.

 



படம் 9

பூந்திக்கொட்டை

பளியர் சமூக மக்கள் துணிகளை துவப்பதற்கு பயன்படுத்தும் ஒரு வகை காய். இதனை இவர்கள் சோப்புக்காய் என்று அழைக்கின்றனர்.

 


படம் 10

படம் 11

கிழங்கு அகழ்தல்

வேலை இல்லாத காலங்களில் மலைகளில் இயற்கையாகக் கிடைக்கும் விதவிதமான காட்டுக் கிழங்குகளைத் தோண்டியெடுக்கின்றனர். புங்கலாங்கொம்பு, குமிலாங் கொம்பு, இரும்புளிக்கொம்பு, தெரணிக்கம்பு போன்றவற்றை ஒருமுனையில் தீயிட்டுக் கருக்கிக் கூராக்கித் தோண்டுகழியாகப் பயன்படுத்துகின்றனர். இதனைக் காரக்கொம்பு என்கின்றனர். நாவாங் கிழங்கு, ஈச்சாங் கிழங்கு, தாலா வள்ளிக் கிழங்கு, நீர்வள்ளிக் கிழங்கு, முள்வள்ளிக் கிழங்கு, பிள்ளை வள்ளிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, நார் கிழங்கு, கருவள்ளிக் கிழங்கு போன்றவை பளியர் தோண்டியெடுக்கும் கிழங்குகளின் வகைகளாகும். கிழங்கு தோண்டியெடுக்கப் புறப்படும் முன்னர் சகுனம் பார்க்கின்றனர். வீட்டில் நாய் சுருண்டு படுத்திருந்தால் சுருள்சுருளாகச் சுருண்ட நிலையில், மிகக் குறைந்த ஆழத்திற்குள்ளாகவே கிழங்கு கிடைக்கும் என்றும் மேலிருந்து கீழாக நாய் ஓடினால் அதிகமாகக் கிழங்கு அகப்படும் என்றும் நம்புகின்றனர். இவை மட்டுமல்லாமல் கிழங்கு தோண்டப் புறப்படுவதற்கு முன்னர் சில விலக்குகளையும் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக கிழங்கு தோண்டப் போகும் முன சீப்பால் தலைவாரக்கூடாது என்கின்றனர். மீறி தலைவாரி சென்றால், குச்சி குச்சியாகத் திண்மையற்ற கிழங்குகளே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 


படம் 12

படம் 13

இசை நிகழ்ச்சியும் இசைக்கருவிகளும்

இம்மக்களின் இசை மிகப் பழைமையானது, இனிமையானது. காடுகளில் கிடைக்கும் மரங்களிலிருந்து இவர்கள் இசைக்கருவிகளைச் செய்து கொள்கின்றனர். ஆட்டுத் தோல்களைப் பயன்படுத்தி தோற்கருவிகளைச் செய்து கொள்கின்றனர். சமவெளியில் காணப்படுகின்ற இசைக்கருவிகளிலிருந்து பளியர் பழங்குடியினரின் இசைக்கருவிகள் வேறுபட்டு காணப்படுகின்றன. இசைக்கருவிகளை வாசிக்கும் முறையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விதவிதமானப் பறவைகளின் ஓசைகளைப் போலவே இவர்களது இசை அமைந்துள்ளது. மலையில் விளையும் நாணல் போன்ற ஒரு தட்டையில் துளைபோட்டு அந்தத் தட்டையை குழல் போல இசைக்கின்றனர். இரு குழல்களை இணைத்து, இரட்டை நாதஸ்வரம் போலவும் வாசிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் பறவைகள் எழுப்பும் ஒலியைப் போல இருக்கிறது இவர்கள் இசை. பெரியகுழல், புல்லாங்குழல், மேளம், கிடுமுட்டி, கைமணி, கொம்பு போன்றவை இவர்களின் இசைக்கருவிகள். மேளக்கட்டையைத் தயாரிக்கக் குமிழ், வேங்கை, பலா மரத்தினைப் பயன்படுத்துகின்றனர். குச்சியைப் புங்கலா மரத்திலிருந்து எடுக்கின்றனர்.

மேளம், குழல் சேர்த்து வாசிப்பதைச் ’சிங்காரம்’ என்று அழைக்கிறார்கள். மேளக் கட்டையும் குழலும் வழிபாட்டிலும், பொழுதுபோக்கிலும் இணைந்தே வாசிக்கப்படுகிறது. வழிபாட்டின் போது வாசிக்கும் இசைவடிவம் வேறு. பொழுதுபோக்கிற்காக வாசிக்கும் இசை வடிவம் வேறு. இடத்திற்கு இடம்கூட இசை மாறுகிறது. குறிஞ்சித் தாளம், கானாங்கோழித் தாளம், காட்டுக்கோழித் தாளம், வேட்டைத் தாளம், வேட்டைக்காரன் தாளம், குன்றுநாதன் தாளம், முருகன் தாளம், பளிச்சியம்மன் தாளம், குலதெய்வத் தாளம், சுன்றக்கோழித்தாளம், குருவித்தாளம், கானமயில் தாளம், மயில்தாளம், நடதாளம், மத்தாலித்தாளம், தும்பித்தாளம், குச்சியடித்தாளம், காடுமரிச்சான் தாளம், வேட்டைக்குத் தயார் செய்தல், வனதெய்வங்களுக்கு எனத் தனித்தனித் தாள வகைகளை இசைக்கின்றனர்.

குழலில் பெரியகுழல், புல்லாங்குழல் என இரண்டு வகை உண்டு. பெரிய குழல் ஊதுவது மிகவும் கடினமானது. மூச்சுவிடாமல் குழலை ஊதவேண்டும். குழலை ஊதிப் பழகியவர் தான் அதை ஊத முடியும். குழல் ஊதத் தெரிந்தவர்கள் மறைந்து போன பிறகு வாசிக்கும் பழக்கம் மறைந்து வருகிறது என வடகரைப்பாறை ‘குழல் முருகன்’ குறிப்பிடுகிறார். இவர்கள் புல்லாங்குழலை ’வீணக்குழல்’ என்று கூறுகின்றனர். புல்லாங்குழலின் கணுப்பகுதிக்கு அருகில் ஒரு துளையும், சற்றுத்தள்ளி மற்ற ஆறு துளைகளும் இடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாமிக்கும் ’ஒவ்வொரு இசை’ இருக்கின்றது. அதனை வாசித்து வழிபாட்டின் போது தெய்வங்களை அழைக்கின்றனர்.

 



படம் 14

தற்போது பளியர் சமூக மக்கள் காடுகளுக்கு சென்று தேன், கிழங்கு வகைகள் சேகரிப்பதை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளனர். காரணம் தேன் மற்றும் கிழங்குகள் என்பது ஒவ்வொரு பருவ காலத்திற்கும் உரியது. அந்தந்த பருவ காலத்தில் மட்டுமே தேனோ, கிழங்கு வகைகளோ கிடைக்கும். ஆகவே எல்லா காலங்களிலும் காடுகளில் இவை கிடைக்காது. அதனால் காடுகளுக்கு சென்று ஒன்றுமே கிடைக்காமல் திரும்பி வருவதற்கு பதிலாக மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளிகளாக வேலைக்கு சென்றால் தினசரி ரூபாய் 500 வரையிலும் வருமானமாக கிடைக்கும் என்கின்றனர். குறிப்பாக சிறுமலைப் பகுதியிலுள்ள பொன்னுருவி எனும் ஊரில் வசிக்கும் பளியர்கள் அங்குள்ள மிளகு படரும் சவுக்கு மரக்கிளை வெட்டுவதற்கும் செளசெள, பீன்ஸ் போன்ற காய்கள் பறிப்பதற்கும் செல்கின்றனர். இம்மக்கள் சவுக்கு மரங்களில் ஏறுவதற்கு ஒத்த ஏணி என்ற ஒன்றை பயன்படுத்துகின்றனர்.

 




படம் – 15

வருச நாட்டு மலைப்பகுதியில் யானை தனது தந்தத்தினால் தோண்டிய ஊற்று. பளியர்கள் காடுகளுக்கு தேன் சேகரிக்கவோ, கிழ்ங்கு தோண்டுவதற்கோ காடுகளுக்கு செல்லும் போது இவ்வூற்று நீரையே குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.


 

தி.கோபிநாத் .
தி.கோபிநாத் .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top