பள்ளி விடுமுறை நாள் அது. மிகப் பரபரப்பாக எல்லோரும் தென்பட்டனர். வெகுநாட்களுக்குப் பிறகு ஊரில் நிகழும் குடமுழுக்கு நிகழ்வு அது. பல மாதங்கள் பார்க்காத முகங்களை எல்லாம் அன்று பார்க்க முடிந்தது. எங்கு பார்த்தாலும் நல விசாரிப்புகள், புத்தாடை, வாசல் கோலம் என ஊரே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
பத்து மணிக்கு நல்ல நேரமாம், நான் போறேன் நீ கெளம்பி கோயிலுக்கு வந்துடு என்று கூறிவிட்டுச் சென்றாள் அம்மா. நான் வீட்டை விட்டு வெளியேறித் தெருவை ஒருமுறை பார்த்தேன். ஆட்கள் நடமாட்டம் எதுவுமின்றி அமைதியாகக் கிடந்தது தெரு. நிச்சயமாக எல்லோரும் கோயிலுக்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
பிறகு மிக சாவகாசமாக தெரு வழியே நடந்தேன். தெரு முழுவதும் போடப்பட்டிருந்த கோலங்களால் சாலை வண்ணமயமாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு வாசலின் கோலமாகப் பார்த்துக்கொண்டு நடந்தேன். விழாக்கள் என்பது கோலமின்றி வேறு என்னவாக இருக்கக்கூடும் எனத் தோன்றியது.
எப்போதாவது இரு சக்கர வாகனங்கள் மட்டும் வந்துசெல்லும் தெரு அது. பிள்ளைகள் விளையாடுவதும் பெண்கள் அமர்ந்து ஊர் நியாயம் பேசிக்கொண்டிருப்பதும் தெருவின் வாடிக்கை. காலை ஏழு மணிக்குப் பால்கார சங்கர் மாமா, எட்டு மணிக்குப் பூ விற்கும் ராணி அக்கா இவர்களைத் தொடர்ந்து இட்லி விற்கும் சாமந்தி ஆயாவோடு அவ்வப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அன்றாடப் பணிக்குச் செல்லும் மனிதர்கள் என எப்போதும் உயிர்ப்போடு இருக்கும் தெரு அது.
சில மாதங்களுக்கு முன்பு இதே தெருவில் இரண்டு குரங்குகள் புகுந்திருந்தன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண். முதலில் அது பெரிய அச்சுறுத்தலாக இல்லாமல் இருந்திருந்தாலும் இரண்டொரு நாட்களில் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குரங்குகள் நுழையத் தொடங்கின. கண்களில் பட்ட காய்கறிகள், தக்காளி, தானியங்கள் என எல்லாவற்றையும் இறைத்தும் கடித்துத் துப்பியும் சேதம் செய்தன. இதனால் தெருவில் பிள்ளைகள் விளையாடப் பயந்தனர். பெண்கள் தெருவில் நடக்கவே தயங்கினர். என்ன செய்வது என்று புரியாமல் தெரு மக்கள் அனைவருமே விழி பிதுங்கி நின்றோம்.
தூரத்தில் இருந்து பார்க்கும் போதே மலர் சித்தியின் கோலம் மிக அழகாகத் தெரிந்தது. அருகில் வர வர அவள் வரைந்திருந்த மயில் என் நடைக்கும் நெருங்கும் என் பார்வைக்கும் ஏற்ப நடனம் ஆடுவது போல் ஒரு தோற்றமளித்தது. ஊரில் வருடம் ஒருமுறை நிகழும் கோலப் போட்டியில் மலர் சித்தி கோலம்தான் எப்போதும் பரிசு பெறும். அத்தனை நேர்த்தி, அழகு, மலர் சித்தியும் அத்தனை பண்பானவள்தான். அவள் கோலத்தைப் போலவே.
எதிர்த்த வீட்டு சீதா அக்கா அவளது வீட்டில் ஒரு நாய் வளர்த்தாள். நாயா மலையாடா என்று அடையாளம் காண முடியாத அளவிற்குப் பருமனான உயிராக வளர்ந்திருந்தது அந்த நாய். எப்போதும் கட்டியே இருக்கும் அந்த நாய் சீதா அக்காவின் செல்லப் பிராணி. புதிய மனிதர்கள் யாராவது தெருவிற்குள் வந்தால் குரைத்துக் குரைத்து அவர்கள் பின்னாடியே சென்று தெருவை விட்டு வெளியேற்றிவிடும் அந்த நாய். சீதா அக்கா பூர்வீகம் திருச்சி. அவருக்குப் பள்ளி செல்லும் இரண்டு மகன்கள் இருந்தனர். கணவர் வெளிநாட்டில் இருந்தார்.
குரங்குகள் ஊருக்குள் நுழைந்ததிலிருந்து மலையாட்டு நாய் குரைத்துக் குரைத்து குரங்குகளைத் துரத்தத் தொடங்கியிருந்தது. குரங்குகளும் பதிலுக்கு ஏதோ ஒரு சத்தத்தை எழுப்பித் தங்களது எதிர்ப்பை அந்த நாய்க்குக் காட்டிய வண்ணம் இருந்தன.
நாட்கள் செல்லச் செல்ல குரங்குகள் மலையாட்டு நாயைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. நாங்கள் ஓரளவிற்குக் குரங்குகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணினோம். தேவையான பொருட்களைப் பத்திரப்படுத்திக் கொள்வதோடு குரங்குகளுக்காகச் சில உணவுகள் எடுத்து வாசலில் வைப்பதையும் அன்றாடமாக்கிக் கொண்டோம். ஆனால் மலையாட்டு நாய் மட்டும் இரவும் பகலும் குரைத்துக் குரைத்து ஓய்ந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் குரங்குகளைக் காட்டிலும் மலையாட்டு நாய் குரைத்த சத்தம்தான் தெரு மக்களுக்குப் பெரிய இடையூறாகிப் போனது. தெருவிற்குள் சகஜமாக யாராலும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
ஒன்றிரண்டு பெரியவர்கள் சீதா அக்காவிடம் நாயைக் குறித்துப் புகார் செய்தனர். அவள் பதிலுக்குத் தன் நாய்க்கு ஆதரவாகப் பேசி அப்பெரியவர்களை உதாசீனம் செய்தாள்.
எதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் எல்லோரும் தள்ளப்பட்டிருந்தோம். பிறகு ஒருமனதாக எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம். என் தந்தை குரங்களை அப்புறப்படுத்த வேண்டி நகராட்சிக்கு ஒரு கடிதம் எழுதினார். பெரியவர்கள் சிலர் மலையாட்டு நாயையும் அப்புறப்படுத்த வேண்டி கோரிக்கை வைத்தனர். அதனால் அந்தக் கருத்தையும் இணைத்துக்கொண்டு படிவத்தில் கையெழுத்துப் போட்டோம்.
ஒருநாள் காலை தெருவே அமைதியாக இருந்தது. மலையாட்டு நாய்ச் சத்தம் எதுவும் இல்லை. அதற்குள்ளாகவா நகராட்சியில் இருந்து வந்து தெருவின் நிலையைச் சரிசெய்து விட்டனர் என்று வியப்பாக இருந்தது. நான் பள்ளிக்குக் கிளம்பியபோதுதான் கவனித்தேன். சீதா அக்காவின் வீட்டு வாசலில் இரண்டு குரங்குகள் அமர்ந்திருந்தன. குரங்குகளுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் தயிர் சாதமும் அருகில் நான்கைந்து தக்காளிப் பழமும் வைக்கப்பட்டிருந்தன. சீதா அக்காவிற்கு எத்தனை கனிவான மனது என்று எண்ணிக்கொண்டே பள்ளிக்கு விரைந்தேன்.
உணவு இடைவேளையில் வீட்டிற்கு வரும்போதுதான் பார்த்தேன். தெருவை ஒட்டியிருக்கும் சாலை ஓரமாக ஆண் குரங்கு மரணித்திருந்தது. இதை அறிந்த பெண் குரங்கு மரணித்த குரங்கின் அருகிலேயே படுத்திருந்தது. இதைப் பார்த்ததும் பொங்கிக் கொண்டு வந்த விம்மலை என்னால் தடுக்கவே முடியவில்லை.
மரணித்த குரங்கைப் பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை. அதன் அருகிலேயே படுத்திருந்த குரங்குதான் அதிகம் பாதிக்கச் செய்தது. அத்தனை அன்பு ஏனோ ஒரு ஈட்டியைப் போல் என் நெஞ்சில் குத்தியது. இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது. எங்கேயோ அப்புறப்படுத்தி இரண்டு குரங்குகளையும் உயிரோடு விட்டிருக்கலாம். சீதா அக்காவின் செயல்தான் இது என்று மக்கள் வெளிப்படையாகவே பேசினர். ஆனால் அவள் அதற்குச் செவி சாய்த்ததுபோல சிறிதும் தோன்றவில்லை.
மறுநாள் காலை அருகில் இருந்த பெண் குரங்கும் மரணித்ததாக அறிந்தேன்.
மலையாட்டு நாய் திரும்பவும் குரைக்கத் தொடங்கியிருந்தது. சீதா அக்காவின் முகம் முன்பை விடத் தெளிவாகத் தென்பட்டது. பாவம் மனிதனுக்கு இத்தனை பிரகாசத்தைக் கொடுக்குமா என்று மனம் கேள்வி எழுப்பியது.
தெரு மக்கள் ஒன்றாகச் சேர்ந்து அந்தக் குரங்குகள் இரண்டும் இறந்துபோன இடத்திலேயே அவைகளைப் புதைத்தனர். பின் அங்கு ஒரு சிறிய கட்டடம் அமைக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அங்கு ஒரு சிலை எழுப்பப்பட்டது. பின் அது கோயில் ஆனது. கோபுரம் எழுப்பி இப்போது அதற்கு குடமுழுக்கு விழா நிகழவிருக்கிறது.
கோலங்களைப் பார்த்து முடித்து ஆற அமர நான் விழாவிற்குச் சென்றேன். எல்லாமும் முடிந்து அன்னதானம் நிகழ்ந்துகொண்டிருந்தது. மக்கள் அன்னதானத்தை வாங்க வரிசையில் நின்றனர். எல்லோர் முகத்திலும் பக்திமயம். நானும் சென்று வரிசையில் நின்றேன்.
மலையாட்டு நாய் தொடர்ந்து வர சீதா அக்கா ஒரு பாத்திரத்தோடு கோயிலுக்கு வந்தாள். நேராக உள்ளே சென்றவள் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு நெஞ்சில் கைவைத்து எதையோ முணுமுணுத்தாள். பிறகு அங்கிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள். பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வெளியே வந்தவள் அதைத் திறந்து அதில் இருந்த சக்கரைப் பொங்கலை எடுத்து எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கத் தொடங்கினாள். மலையாட்டு நாய் அவளைப் பின் தொடர்ந்தது.
Art : saatchiart
ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.








Leave a Reply