ஆஸ்பத்திரி மதில் சுவருக்கு வெளிப்பக்கமாய் ஒட்டி நிற்கும் புங்க மரத்தடியில் கருத்த நீரோடும் அந்தக் கால்வாயோரம் உடல், வாய், முகமெல்லாம் ஈ மொய்க்க ஒருக்களித்துப் படுத்து கிடந்தாள் ஊர், பேர், மொழி தெரியாத அந்த மூதாட்டி.
உயிர் இருக்கிறது என்பதை வருவோர் போவோர் எல்லாம் கண்டுகொள்ளவோ என்னவோ கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது கைகள் அசைந்தன. அவள் சுற்றியிருந்த அந்த அழுக்குக் கந்தலின் மேல் இன்னொரு ஆடையாக மரணம் அவளை மூடிக் கொண்டிருந்தது. எட்டி எடுக்கும் தூரத்தில் குடித்து மீந்த தண்ணீர் பாட்டில் ஒன்று. பாதித்தின்ற ரொட்டித் துண்டைக் காகம் ஒன்று கவ்விப் பறக்க எம்பி எம்பி எத்தனித்துக் கொண்டிருந்தது. அதை எட்டி அதட்டக் கூட அவள் கைகளில் திராணியில்லை.
வண்டியை ஓரங்கட்டி விட்டு வந்த பூபாலன் சொன்னான். “இவங்க நேத்து சாயங்காலத்திலிருந்து இங்கதாம்பா கடக்குறாங்க”
நந்தன் ஒன்றும் புரியாமல் நின்றான். கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அவர்களைப் பார்த்துக் கொண்டே கையில் குளுக்கோஸ் பாட்டிலுடன் பிரசவ வார்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள் கவிதா.
“பூபாலு ஏதாவது ஹோம்ல கேட்டுப் பார்க்கலாம் வண்டி மட்டும் ஒண்ணு ரெடி பண்ண முடியுமா பாரு”
சுவரில் எழுதிக் கொண்டிருந்த ஒரு தூரிகையாளன் இவர்களைத் திரும்பிப் பார்த்தான் .
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்…” எனப் பாதியில் நிற்க நீல பெயிண்ட் டப்பாவுடன் இவர்களை நெருங்கி வந்தவன் சொன்னான்.
“அதோ அந்த கார்னர்ல இருப்பாங்க சார் கேட்டுப் பாருங்க”
“அதெல்லாம் பிரச்சனை இல்லப்பா நம்ம ஆம்புலன்ஸ்லயே கொண்டு போயிடலாம் எடம் மட்டும் எங்கன்னு சொல்லு”
என்றான் பூபாலன்
“அப்படியெல்லாம் போக முடியாது பூபாலு நிறைய ரூல் இருக்கு”
“அட போப்பா ரூலு வெங்காயம்”
அவனை ஆதரவாய்ப் பார்த்துக் கொண்டே ஓரமாய் வந்து நின்ற நந்தன் செல்போனைக் கையில் எடுத்தான். உதவும் கரங்கள். அன்பு இல்லம், அனாதை விடுதி, ஆதரவற்றோர் இல்லம் எனத் தெரிந்த இடமெல்லாம் தேடித்தேடி எண் வாங்கிப் பேசினான். எல்லோரும் ஏதோ ஒன்று சொல்லித் தட்டிக் கழித்தனர்.
மேலுக்கும் மேடைக்கும் மட்டுமே சொற்களைக் கருணை மழையாகப் பொழிந்த அந்தக் கதாநாயக ஜிகினா காரர்களை நந்தன் ஒருகணம் எண்ணிப் பார்த்தான்.
கைவிடப்பட்டவர்களுக்காகக் காக்கும் இல்லம் தொடங்கிச் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக மனிதருள் மாணிக்கம் பட்டத்தைச் சுட்டிக் கொண்டு போன மாதம் தொலைக்காட்சியில் தொண்டைக் கம்ம உடைந்து போய் உரை நிகழ்த்திய அந்த நடிகரின் ஞாபகம் கூட வந்தது அவனுக்கு.
இந்த இடைவெளியில் ஆஸ்பத்திரியின் மூத்த மருத்துவர் ஆறுமுகம் இவர்களைக் கவனித்தபடி அருகில் வந்தார்.
“யார் சார் நீங்க? என்ன வேணும்” என்று எதுவும் தெரியாதவர் போல் கேட்டார்.
பூபாலனைப் பார்த்ததும் முகவாட்டம் கொஞ்சம் மாறியது அவருக்கு
” ஓ தம்பி நீங்க ஆம்புலன்ஸ் டிரைவர் தானே.
இது ஏதோ நார்த் சைடு இருந்து வந்திருக்குப்பா தமிழ் தெரியல நம்ம உயிரவாங்க… இங்க கொண்டாந்து போட்டுட்டு
போயிருக்காங்க. சொல்லி இருக்கோம் வருவாங்க நீங்க கிளம்புங்கப்பா” எனச் சாதுரியமாக அவர்களை அங்கிருந்து அனுப்புவதில் அவசரம் காண்பித்தார் அவர்.
கவிதா திரும்பி வரும் போது இந்தப் பக்கம் திரும்பி ஆறுமுகம் பேசுவதைக் கவனித்தும் கவனிக்காமலும் படி ஏறிப் போனாள்.
முந்தைய நாள் பகல் 11 மணிக்கு பூபாலன் சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அவசர கேஸ் ஒன்றை ஏற்றிக்கொண்டு
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது தான் மாமண்டூர் அருகே ஒரு புளிய மரத்தடியில் அந்தக் கிழவியை அவனும் உதவிக்கு உடன் வந்திருந்த கவிதாவும் பார்த்திருந்தனர்.
திரும்பு காலில் அந்த இடத்தில் அவள் இல்லை. ஆம்புலன்ஸை ஓரங்கட்டி விட்டு இருவரும் இறங்கிச் சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடிப் பார்த்தனர்.
20 மீட்டர் தூரத்தில் தனியாக தென்னங்கீற்று கூரை போட்ட சிறிய கடை ஒன்றில் வந்து விசாரித்தனர். எலுமிச்சை பழங்களைக் கூறுகட்டிக் கொண்டிருந்த அந்தக் கடைக்கார அம்மா சொன்னாள்.
“ரெண்டு மூணு நாளா இங்கதான் சுத்திங்கெடந்துச்சி நம்ம பாச தெரியல அதுக்கு…
காலயில ரெண்டு வாழப்பழம் குடுத்தேன் துன்னுச்சி… தோ…கொஞ்ச மின்னேடி இப்பதான் எப்பா
இதே மேரி ஒரு வண்டி வந்து ஏத்தி மோச்சி. இன்னா ஏதுன்னு தெரியல”
அதற்கு மேல் அவளிடம் கேட்க எதுவுமில்லை. இருவரும் புறப்பட்டார்கள்.
பூபாலன் வீட்டிற்குப் போனதும் கவிதாவிடம் இருந்து போன் வந்தது அப்போதே புறப்பட்டு மதுராந்தகம் ஹாஸ்பிட்டல் வந்தான். அதே கிழவிதான் இது என்பதை நேரில் பார்த்து உறுதி செய்து கொண்டவன், அப்போதே விஷயத்தை நந்தனிடம் கலந்து இரவே இருவரும் பேசி முடிவு செய்து கொண்டு தான் மறுநாள் காலை அங்கு வந்திருந்தனர்.
இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என இருவருக்கும் சந்தேகம் தட்டியது. கொஞ்சம் ஓரமாய் வந்து நின்றனர் .
யாரோ ஒருத்தி தலைவிரிக்கோலமாய் வியர்வையில் முடி ஒட்டி நெற்றி குங்குமம் கரைய சாவுக்கிடங்கு பக்கமாய் அடித்துக்கொண்டு அடுத்தபடி ஓடினாள்.
“அய்யோ என் சாமி எப்பா…
எப்படிடா மனசு வந்துச்சு என்னை வுட்டுட்டுப் போவ என் கருப்புல கொத்தே அய்யோ அய்யோ வுட்டுட்டேனே…”
ரத்தம் தோய்ந்த கையுறைகளோடு காக்கி பேண்ட் சட்டை அணிந்த சகோதரன் ஒருவன் பிணம் வெட்டும் அறையிலிருந்து பாதிக் கதவைத் திறந்தபடி சுற்றும் மற்றும் பார்த்துக்கொண்டே மெதுவாகப் பேசினான். நந்தனைப் பார்த்துதான் சொன்னான். கொஞ்சம் குடித்திருந்தான் அவன்.
“இதைப் பாரு தல இவனுங்கள பத்தி உங்குளுக்குத் தெரியாது
வேற மாதிரி ஆளுங்க… எவ்வளவோ நடக்குது…அது வயசான கேசு போனாபோவுது வுட்டுட்டுக் கெளம்புற வழியப் பாருங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்”
அவன் சொல்வது உண்மைதான் அந்த எச்சரிக்கைக்குப் பின்னால் எண்ணற்ற காரணங்கள் இருந்தன.
“பூபாலு கவிதாவுக்குப் பேச முடியுமா?”
“பேசலாம்பா… ஒரு நிமிஷம்… கவி பேச முடியுமா…கொஞ்சம் தனியா வரியா நந்தன் பேசனுங்கிறாப்பல… முக்கியமான விஷயம் வாட்ஸ் அப் கால்ல வா…”
கவிதாவுக்குக் கை நடுங்கியது. யாரும் பார்க்காமல் கழிவறை வெளிச்சுவரை ஒட்டிய ஒட்டு சந்துக்கு வந்தாள் குதிரைப்புடுக்கன் மரத்தடி மறைவில் நின்றபடி பேசத் தொடங்கினாள்.
“சொல்லு இன்னா”
“நான் நந்தன் பேசறேம்பா.. என்னதான் நடக்குது இங்க அவங்கள எங்கேயாவது கூட்டிப்போய்ச் சேக்கலாம்னு இருக்கோம்…ஆனா லெட்டர் தர மாட்றாங்க”
“நான் சொன்னேன்னு யாருக்கும் தெரிய வேணாம் வேலயே கூடப் போயிடும்… நேத்து மதியம் இருக்கும் பப்ளிக் யாரோ கால் பண்ணி போலீஸ் வந்து இருக்காங்க.
இங்க இருந்து ஆம்புலன்ஸ் போய் அந்தப் பாட்டிய கொண்டு வந்து சேத்திருக்காங்க. அவங்களுக்குத் தமிழ் பேச வரல எந்த ஊரு எதுவும் தெரியல. ட்ரிப் மட்டும் ஏறுச்சாம். இன்ஸ்பெக்டர் வந்தாரு டாக்டரும் அவரும் தனியாப் பேசனாங்க. ட்யூட்டி முடிஞ்சு நைட் ஏழு மணிக்குப் போகும் போது பாத்தா வெளியே மரத்தடியில் தூக்கிப் போட்டுட்டு இருக்காங்க… சரி சரி என்ன கூப்பிடுறாங்க அப்பறம் பேசுறேன்”.
அவசரமாய் அழைப்பைத் துண்டித்தாள் கவிதா.
நந்தனுக்கும் பூபாலனுக்கும் நடந்தது எல்லாம் தெள்ளத் தெளிவாக இப்போது புரிந்தது.
அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் அத்தனை பிணந்தின்னிக் கழுகுகளுக்கு மத்தியில் எப்படி ஒரே ஒரு அன்னப்பறவை கவிதா உருவில் அங்கு நடமாட முடிகிறது.
அவள் நெஞ்சில் சுரந்த கருணையாலும் இரக்கத்தாலும்தான் இரவெல்லாம் அந்த மூதாட்டியின் உயிர் முடிந்து வைக்கப்பட்டிருந்தோ…
முந்தைய நாள் இரவில் அவள் வாங்கிக் கொடுத்து விட்டுப் போனதுதான் அந்த ரொட்டியும் தண்ணீர் பாட்டிலும்.
காப்பகங்களுக்கு அழைத்து எடுக்காத எண்ணில் இருந்து திரும்ப அழைப்பு வந்தது உத்திரமேரூரிலிருந்து ஒரு பாதிரியார் பேசினார்.
அவரிடம் விவரத்தைச் சொல்லி நந்தன் விளக்கினான்.
“நீங்க எந்த எடம்னு மட்டும் சொல்லுங்க நாங்களே வந்து எங்க வண்டியில் கூட்டிட்டு வந்துடுவோம்”
“ரொம்ப நன்றி சார் மதுராந்தகம் ஜிஎச் பக்கத்துலதான் சார்”
“நாங்க இப்போ அங்கதான் சார் இருக்கோம், அவங்களுக்குத் தமிழ் தெரியல, கொஞ்சம் மோசமான கண்டிஷன்லதான் இருக்காங்க,
உடனே வந்தா நல்லா இருக்கும் சார்”
“ஒண்ணும் பிரச்சனை இல்லங்க… நாங்க பாத்துக்குறோம், உடனே ஏற்பாடு பண்ணிடுவோம். நீங்க அவங்களுக்கு என்ன வேணும்”
“சார் என் பேரு நந்தன் சென்னையில ஜெர்னலிஸ்ட்டா இருக்கேன்”
“ஓ…அப்படிங்களா ஒண்ணும் பிரச்சனை இல்ல. ஹாஸ்பிட்டல்ல ஒரு லெட்டர் மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க மத்தத நாங்க பாத்துக்கறோம்”
அந்த பாதிரியாரின் பேச்சில் எந்த ஈரமும் இல்லாது இருந்தது.
இருந்தாலும் அந்த நேரத்தில் அவசரத்திற்கு அவர் முன் வந்தாரே என்று நினைத்தபடி ஆஸ்பத்திரிக்குள் வந்து தலைமை மருத்துவரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
“அப்படியெல்லாம் லெட்டர் கொடுக்க முடியாது தம்பி ஹாஸ்பிட்டல் காம்பவுண்டுக்குள்ள இருந்தாதான் எங்க கண்ட்ரோல்ல வரும். வெளியதான கெடக்கு போலீஸ்லயோ முனிசிபாலிட்டிலயோதான் லெட்டர் தரணும். பின்னாடி ஏதாவது ஒண்ணுனா எங்களுக்குதான் பிரச்சனை”
நாட்டு சட்ட திட்டங்கள் மயிரிழை அளவுக்கும் வழுவாமல் மனித குரூரத்தின் மொத்த வெளிப்பாடாக அந்த மூத்த மருத்துவரின் பதில் இருந்தது. பாதிரியாருக்குப் பேசினார்கள்
“பரவால்லங்க போலீஸ்ல லெட்டர் கொடுத்தா இன்னும் பெட்டர் வாங்கிடுங்களேன்”
நேரம் மதியம் 1 மணி ஆகி இருந்தது. இருவரும் மதுராந்தகம் காவல் நிலைய கடைசிப் படிக்கட்டில் வந்து நின்றனர்.
“சார் அய்யாவப் பாக்கணும்”
நந்தன்தான் கேட்டான்
“என்ன விஷயம்”
நடந்து கொண்டே கேட்ட கான்ஸ்டபிள் அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் இடதுபுற அறைக்குள் போய் மறைந்தார்.
திரும்பி வந்த பிறகு அவர் ஏனோ நந்தன் பக்கம் திரும்பவே இல்லை.
மேசை முன் நாற்காலியில் அமர்ந்திருந்த இன்னொருவரிடம் போய் நின்றனர்.
“சார் அய்யாவப் பாக்கணும்”
ஏதோ கெட்ட வார்த்தையை உதிர்த்து விட்டது போல் கீழிருந்து மேல்வரை இருவரையும் பார்த்தார் அவர்
“என்ன விஷயம்? யார் நீங்க”
“சார் என் பேரு நந்தன் பிரஸ்ல இருக்கேன்”
“பிரஸ்ஸா எங்க வச்சிருக்க
கல்யாணப் பத்திரிக்க அடிப்பாங்களே அதானே”
பல்துறை உலகப் பொது அறிவை எல்லாம் தொப்பையில் தூக்க முடியாமல் சுமந்தபடி அவர் கேட்ட தொனியில் இருந்து நந்தனுக்கு நன்றாகப் புரிந்து விட்டது.
அவரும் எந்தப் பதிலும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்த பிறகு இருவரும் உதவிக் காவல் ஆய்வாளர் எனப் பெயர்ப் பலகை பொறிக்கப்பட்ட அறைக்குள் ஏதோ தைரியத்தில் வந்தனர். ஆய்வாளர் அமர்ந்திருந்தார்
“சார் வணக்கம் என் பேரு நந்தன் சென்னையில் ஜெர்னலிஸ்ட்டா இருக்கேன். ஒரு அம்மா ஆஸ்பிட்டல் கிட்ட….”
தன் அடையாள அட்டையை அவரிடம் காண்பித்தபடி எல்லாவற்றையும் எந்த பிசிரும் இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொன்னான்.
அவர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது ஆசுவாசமாகவும் இருந்தது.
இன்ஸ்பெக்டர் ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணினார் வெளிப்படையாய் எந்தப் பதிலும் பேசாமல் ஐந்தாறு உம் கூட்டியவர் கடைசியாக …
“இங்க வந்திருக்காங்க பாத்துட்டுச் சொல்றேன்”
என்று சொல்லி முடித்தார்.
அடுத்தது உத்திரமேரூர் பாதிரியாருக்குப் பேசினார். அவரிடமும் உடைத்துப் பேசாமல் ஏதோ மழுப்பலாய்ப் பதில் சொல்லி அழைப்பைத் துண்டித்தவர்
அவர்களின் பக்கம் திரும்பினார்.
“டிபார்ட்மெண்டில் இருந்து லெட்டர் தர முடியாது. அந்தப் பாதருக்கும் பேசினேன். ஒண்ணு பண்ணுங்க, நீங்க ஹாஸ்பிட்டல் போங்க டாக்டர் கிட்ட சொல்லி இருக்கேன் லெட்டர் தருவார். உடனே போய்ப் பாருங்க” என்றவர் மனைவியின் அழைப்பை எடுத்துப் பேசிக்கொண்டே அவர்களைக் கையசத்து அனுப்பி வைத்தார்.
கடிதம் கிடைத்துவிடும் ஆவலில் திரும்ப ஆஸ்பத்திரிக்கே வந்தார்கள். காலையிலிருந்து அலைந்ததில் இருவரும் துவண்டு போயிருந்தார்கள். நந்தனுக்குத் தலைவலியுடன் லேசான காய்ச்சல் வேறு. காலையில் வாங்கிய செய்தித்தாள் அவன் கையில்தான் இருந்தது. ஆஸ்பத்திரிக்குள் நுழையும்
முன் புங்க மரத்தடிக்கு வந்தான். முன்பை விட அதிகமாக அவளை ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. மேற்கில் சாயத் தொடங்கிய சூரியன் மரக்கிளை அசைவுக்கேற்ப அவள் முகத்தில் விழுவதும் விலகுவதுமாய் இருந்தது. சூரிய ஒளி படுகையில் கண்சிமிட்டுவது இன்னும் கொஞ்சம் பளிங்கரமாய்த் தெரிந்தது. பூபாலனிடம் ஐஸ் இல்லாமல் சாத்துக்குடி சாரு ஒன்று வாங்கி வரும்படிச் சொல்லிவிட்டு நந்தன் அவள் அருகில் வந்து நின்றான்.
அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்று நினைத்த அந்த உடல் பயத்தில் நடுங்கியது. நெருங்கி வரும் அவனின் உருவத்தைக் கண்டு உயிர் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாய்க் கால்களைச் சுருக்கி அசைத்தது. துர்வாடை வீசியது. என்ன பெரிய வாடை இந்த அக்கிரம அநியாயத்தை விடவும் அந்த நாற்றம் ஒன்றும் குமட்டவில்லை அவனுக்கு. சட்டைப் பாக்கெட்டில் இருந்த மாஸ்கை எடுத்து முகத்தில் மாட்டிக் கொண்டவன் புங்கமர இலைக் கொத்தொன்றை ஒடித்து ஈக்களை ஓட்டினான். அந்தக் கண்கள் அவனை ஏக்கமாய் நோக்கியது “எழுந்துடு எழுந்துடு “எனச் சைகை காண்பித்தான். எழும்ப முயன்ற அந்த எலும்புக் கைகள் தரையில் ஊன்றித் தடுமாறின. கண்களில் சிறிது ஈரம் சுரந்தது.
சுண்டிக் காய்ந்து வற்றி விட்ட ஏரியின் தண்ணீர் எங்கோ பூமிக்கு அடியில் ஒளிந்ததைப் போல் சொற்கள் அவள் இதயத்தின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்திருக்க வேண்டும். கையில் இருந்த செய்தித்தாளை இரண்டாகச் சேர்த்து விரித்துப்போர்த்திப் பின்கழுத்திலும் இடது கை பக்கமாகவும் பிடித்துத் தூக்கி வண்டி மாட்டின் முதுகெனத் திரண்ட புங்க மரத்தின் பக்கவாட்டில் சாய்த்து உட்கார வைத்தான். இன்னொரு இலைக்கொத்து ஒடித்து அவள் மேல் ஒட்டி இருந்த சருகுக் குப்பைகளைத் தட்டிச் சுத்தமாக்கினான். தலை ஒரு பக்கமாய்ச் சாய்ந்திருந்தது.
மரத்தை ஒட்டி அண்டை கொடுத்து உட்காரும்படிச் செய்தவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து மெதுவாய்க் குடுப்பாட்டினான். இரண்டு மூன்று மிடருகள் தொண்டைக்குழிக்குள் போனது தெரிந்தது. பூபாலன் வாங்கி வந்திருந்த சாத்துக்குடி சாரையும் புகட்டினான் பாதிக்கு மேல் பருகி ‘ஏவ்..’ எனச் சிறிய ஏப்பம் வந்தது. எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக கவிதா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
ஆஸ்பத்திரிக்குள் போனதும் அந்த மருத்துவர் இல்லை. போலீஸ்காரர், மருத்துவர், பாதிரியார் மூவருமே ஏதோ திட்டத்துடன் பேசி வைத்துக் கொண்டு செய்வது போல் நந்தனுக்கு ஒரு கட்டத்தில் பொறி தட்டியது. காலையில் கவிதா சொன்னதைத் திரும்பவும் யோசித்துப் பார்த்தான்.
சில மாதங்களுக்கு முன்பு உத்திரமேரூரில் ஒரு ஆசிரமத்தில் இருந்து குவியல் குவியலாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்ததாகவும் செய்தித்தாள்களில் வாசித்தது ஏனோ இப்போது அவனுக்கு நினைவு வந்தது.
மனிதன் இங்கு உயிர் வாழ என்னதான் உத்தரவாதம் இருக்கிறது?
கிழவியை பாதிரியார் காப்பகத்தில் சேர்க்கும் திட்டமும் அந்தக் கணம் கைவிடப்பட்டது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கும் கணக்காய் அந்தச் சதிகாரர்கள் மூவரும் நடந்து கொண்ட விதம், அலைக்கழிப்பு, அவர்கள் பேசிய தொனி,
கவிதா சொன்னது என எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதைத் துல்லியமாய்க் கணித்துக் கொண்டான்.
நேற்று நெடுஞ்சாலையில் கிழவியைப் பார்த்த யாரோ ஒருவர் காவல் நிலையத்திற்குத் தகவல் சொல்லியிருந்தார். அங்கு வந்த காவலர்கள் மருத்துவமனைக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இருவரும் சேர்ந்து கூட்டி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களின் அனுமான யோசனையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் மொழி தெரியாத திசை தெரியாத அவளை தேவையில்லாத சுமையெனக் கருதி சுவருக்கு அந்தப் பக்கமாய்த் தூக்கி வீசி இருந்தனர்.
அந்த வயதில் அவர்களின் குடும்பத்தில் ரத்த பந்த உறவில் ஒருவரும் ஞாபகத்தில் இல்லையோ என்னவோ இவர்களுக்கு. அல்லது இருந்தாலும் அவர்களையும் இப்படி நடத்தும் இந்த இழி மனம் தானா என்பது தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாய் அவளின் அந்த வயதை நோக்கிதானே நாமும் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது இத்தனை பேருக்கும் எப்படி மறந்து போனது. எல்லோரும் இங்கேயே குச்சி அடித்துக் கொண்டு வாழப் போகிறார்களா?
ஒரு உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரிந்து முடிவதைக் காண சகிக்க ஹிட்லரின் இதயம் வேண்டுமல்லவா. அவர்களுக்கு என்ன எந்தக் கணக்கு, வழக்கு, பயணம், நேர விரையம் எதுவுமின்றி வேலை முடிய வேண்டும். அதற்காகவே இந்த ஏற்பாடுகள். இரவுக்குள் அவள் எப்படியும் இறந்து போய்விடுவாள். முனிசிபாலிட்டி ஆட்கள் எடுத்துக் கொளுத்தி முடித்து அனாதைப் பிணம் என்று கணக்கெழுதுவது அவர்களுக்கு எவ்வளவு சுலபம். நந்தனுக்குக் கண்கள் சுழட்டின. ஒரு மணி நேரத்திற்கு மேலாய்க் காத்திருந்தும் மருத்துவர் வரவில்லை. நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அப்போதுதான் இருவருமே உணர்ந்தனர்.
அறம் என்பதே முழுமையாகச் செத்துப்போன அந்த நகரத்தின் அந்தி வெயிலில் எதுவும் செய்ய முடியாமல் எல்லோராலும் கைவிடப்பட்ட அனாதைகளாய் அவர்கள் இருவரும் பசியோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் தனக்குச் சாதகமான லாபமாக்கிக் கொள்ளும் அவர்கள். இதயம், மூளை, ரத்தம் எதுவும் இல்லாத வெறும் இயந்திர மனிதர்களாகத் தெரிந்தனர்.
பள்ளிக்கூடம் விடும் நேரம் வந்தது. மாணவர்களும் பொது மக்களும் ஹாஸ்பிட்டல் ரோட்டில் திரண்டனர். திடீரென அவர்களை இடைநிறுத்தி நந்தன் பேசத் தொடங்கினான்.
“உங்கள மாதிரிதான் நாங்களும் இவங்கள யாருன்னு தெரியாது. எந்த ஊரு என்ன மொழி எதுவும் தெரியல. யாரா இருந்தா என்ன நம்மள மாதிரி மனுஷி தானே
இவங்கள ஏதாவது ஒரு ஹோம்ல சேக்க ஒரே ஒரு லெட்டருக்காகக் காலையிலருந்து ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன் ஆஸ்பிட்டல்னு அலையறோம்...”
எனத் தொடங்கி காலையிலிருந்து நடந்தவைகளை எல்லாம் மனதில் ஓட விட்டுக் கோர்வையாய்ப் பேசி முடித்தான்.
நின்று நிதானமாய்க் கேட்டவர்கள் அவரவரின் செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டும் அவளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டும் கலைந்து போயினர். தோளில் சிவப்புத் துண்டு போட்டிருந்த அறுபதைத் தொடும் ஒருவர் அருகில் வந்து பேசினார்.
“தம்பி வாங்க ஆர்டிஓ மேடத்த பாருங்க ரொம்ப நல்ல டைப் தம்பி. இதுக்கு ஏதாவது பண்ணுவாங்க”
அந்த மனிதரை இருவரும் நம்பினார்கள். அப்படியாக ஆர்டிஓவைச் சந்தித்து அனைத்தும் சொல்லப்பட்டது. நந்தன் அந்தக் கிழவியின் புகைப்படத்தை க்காண்பித்தான்.
“உட்காருங்க ரெண்டு பேரும்”
தேநீர் வரவைக்கப்பட்டது. அவரின் உதவியாளர் ஒருவர் வந்தார். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குச் சொல்லப்பட்டது. சிறிது நேரத்தில் ஒரு அரசு வாகனம் வந்தது. மூதாட்டியின் விவரங்கள் அடையாளம் எழுதப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. முதலுதவி செய்யும்போது இரவு 7 மணியாகியிருந்தது. பணி முடிந்து கிளம்பிய கவிதா உதடு பிரியாத ஒரு லேசான புன்னகையோடு பேருந்து நிறுத்தம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். சிறிய ஆறுதலோடு இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர். மறுநாள் காலையில் நந்தன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
“சரிங்க தோழர் அவசியம் வரேன் தோழர்”
அன்றைய செய்தித்தாளுடன் பூபாலன் வந்தான்.
அந்தப் பக்கத்தை இருவரும் ஒன்றாகவே வாசித்தனர்.
“மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு.”
“பணி நேரத்தில் பணியில் இல்லாத ஆறுமுகம், ராமமூர்த்தி உள்ளிட்ட ஐந்து மருத்துவர்கள் அதிரடி சஸ்பெண்ட்”
“ஆபத்தான நிலையில் ஆதரவற்ற வடநாட்டு மூதாட்டி மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் “
மஞ்சள் தலைப்பாகை கையில் துப்பாக்கியுடன் சுவரில் தொங்கும் பகத்சிங் படத்தை இன்னொரு தடவை அண்ணாந்து பார்த்த நந்தன் ஏதோ வேலையாக வெளியில் கிளம்பிப் போனான்.
Art : craiyon.com








Leave a Reply