Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

ஜெயமோகனும் இன்ன பிறரும் நிறுவ முனையும் ‘பார்ப்பன – யாசகர் – அம்பேத்கர்’

சா. திருவாசகம்
சா. திருவாசகம்
September 1, 2025
ஜெயமோகனும் இன்ன பிறரும் நிறுவ முனையும் ‘பார்ப்பன – யாசகர் – அம்பேத்கர்’

அண்ணல் அம்பேத்கர் குறித்து கைக்கு வந்ததை எழுதுபவர்கள் ஒருபுறம் எனில் வாய்க்கு வந்ததைப் பேசுபவர்கள் மற்றொரு புறம். இருபுறங்களிலும் பங்காற்றுபவர்களும் உண்டு. அவர்களில் முதன்மையானவர் எழுத்தாளர் ஜெயமோகன். கைக்கும் வாய்க்கும் வருவதை வெளிப்படுத்தும் துணிவு எப்போதும் அவருக்கு இருந்து வருகிறது. அவருடைய பேச்சு மற்றும் எழுத்தின் வன்மை அத்தகையவை. அந்த வன்மையைக் கண்டு பலரும் பல நேரங்களில் பயந்து ஓடி விடுகிறார்கள். ஆனால் எல்லோரும் எல்லா நேரங்களிலும் அவ்வாறு இருக்க முடியாது அல்லவா. சில நேரங்களில் பதில் சொல்ல வேண்டியதாக உள்ளது.
♦
முன்பொரு காலத்தில் (2005 அல்லது 2006) ஜெயமோகன், டாக்டர் அம்பேத்கர் குறித்து கைக்கு வந்ததை எழுதி மாட்டிக் கொண்டார். அம்பேத்கர் ஒன்றும் பெரிய மக்கள் தலைவர் இல்லை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கூட தலைவர் இல்லை, அவரோட கூட்டங்களுக்குக் கூட்டமே வராது என்பது போல இன்னும் பல. இதில் என்ன தமாஷ் என்றால் அந்த புரட்டுகள் அருண் ஷோரி எழுதிய worshipping false Gods என்கிற புத்தகத்தில் சொல்லியிருந்தவை (அக்கட்டுரை ‘தமிழினி’ என்றொரு பத்திரிகையில் வெளியானதாக நினைவு. வேறாகவும் இருக்கலாம்.) அந்த அவதூறுகளுக்கெல்லாம் தலித் எழுத்தாளர்கள் பலர் சான்றுகளுடன் பதில் சொல்லி ஓய்ந்தாயிற்று. அதன் பிறகு ஜெயமோகன் இன்க்ளூசிவ் ரைட்டிங்குங்குள் நுழைகிறார். அதாவது எல்லா தரப்பாரையும் அரவணைத்தல். அவ்வாறான அரவணைப்பு செயல்பாடுகளில் ஒன்று. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குறித்து மிகப்பெருமையாகப் பேசுவது. அவருடன் கூட்டங்களில் கலந்து கொள்வது. அவரைக் குறித்துப் பேசும் அதே வேளையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி குறித்தும் நல்லதாக ஒரு சொல் சொல்லி விடுவார். புகையிலையை ஒழிக்க அவர் படாத பாடுபட்டார் என்பதாக. இருதரப்பாரும் மகிழ வேண்டும். ராமதாஸ், அன்புமணி வாகையறாக்கள் உண்டாக்கிய அழிமானங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. புகையிலை ஒழிப்பு மட்டும் போதும். ஏணிச் சின்னத்தில் ஒரு குத்து. தென்னைமரச் சின்னத்தில் ஒரு குத்து.

அதனுடைய தொடர்ச்சியாக அவர் அம்பேத்கர் குறித்து தவறாகப் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். அருண் ஷோரியையும் மறைக்கவில்லை. அருண் ஷோரியை அருகில் வைத்துக் கொண்டே அம்பேத்கரைப் புகழ்ந்து பேசுகிறார். சட்டென்ற மாறுதல். உள்ளொளி தரிசனம்.

சில ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் – காந்தி இருவரையும் ஒப்பிட்டு தலித் அரசியல் என்றொரு தொடர் எழுதினார். அதைச் சுருக்கமாக அல்லது எளிமையாகச் சொல்ல முயன்றால், இருவரும் அவரவர் தரப்பில் உண்மையும் நேர்மையும் கொண்டவர்கள். அவர்களுக்குப் பிறகான அரசியல் பிழைப்பாளர்கள்தான் அவர்களை எதிரெதிராக நிறுத்துகின்றனர் என்பதுதான் அதன் மையம். நான் அந்தத் தொடருக்குள் ஆழ நுழையவில்லை. எழுத வந்த பிரச்சினைக்கு வருவோம். எந்தத் தரப்பார்க்கும் சேதாரமில்லாத அந்தத் தொடர் அது வெளியான காலத்திலேயே வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். அத்தொடர் முழுக்க முழுக்க காந்தியின் தூய்மையை வெளிப்படுத்த எழுதப்பட்டது. துணைக்கு அம்பேத்கரை வைத்துக் கொண்டார். அவ்வளவுதான்.

அதில் உள்ள இரண்டு பத்திகளைப் பார்க்கலாம்.

“இன்றுவரை மொத்தத் தலித்துக்களும் உத்வேகத்துடன் உச்சரிக்கும் அம்பேத்கர் என்ற பெயர் அம்பேத்கரின் ஆசிரியரும் வழிகாட்டியுமான மகாதேவ் அம்பேத்கர் என்ற தேஸாஸ்த பிராமணரின் குலப்பெயராகும். குருவின் பெயரில் இருந்து, அவரது வாரிசாக தன்னை நினைத்து, அம்பேத்கர் சூட்டிக்கொண்டது. மகாதேவ் அம்பேத்கர், தியானேஸ்வரின் பக்திமரபில் வந்தவர். சாதி மத ஆசாரங்களுக்கு எதிரானவராக தன்னை அமைத்துக் கொண்டவர். அன்று மகாராஷ்டிராவில் உருவாகி வந்த மதச்சீர்திருத்த இயக்கங்களில் ஈடுபாடுள்ளவர். பீமாராவ் அம்பேத்கரின் ஆரம்பகால கல்விக்கும் வளர்ச்சிக்கும் பேருதவி புரிந்திருக்கிறார். அதற்கான தன்னுடைய ஆசாரமான சாதியின் எதிர்ப்பையும் ஒதுக்குதலையும் சந்தித்திருக்கிறார்.”

‘அம்பேத்கர்’ என்கிற பெயருக்கு ஜெயமோகன் தரும் காரணம் இதுதான்.

பாலர் பள்ளிக்கூடப் புத்தகத்தில் இருந்தும் பலரின் மேடைப் பேச்சுகளிலிருந்தும் உருவான கருத்து இது. இக்கருத்திற்கு வரலாற்று ஆதாரம் இருந்தால், ஜெயமோகன் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் காட்டலாம். இந்தக் கருத்து பொய்யாக உருவாக்கப்பட்டது என்பதைத் தகுந்த வரலாற்று ஆவணங்களுடன் நிறுவி ஒரு சிறு நூலே வந்திருக்கிறது. (கழுவப்படும் பெயரழுக்கு. ஆசிரியர் யாக்கன். கலகம் வெளியீடு) இந்நூலில் அம்பேத்கர் சிறுவனாக இருக்கையில் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தது, சேரும்போது அவருடைய பெயர், ஊர் குறித்த தகவல்களைச் சான்றுகளுடன் சொல்லப்பட்டுள்ளன. அதாவது புகைப்படச் சான்றுகளுடன். வேறு வழியே இல்லை. அம்பேத்கர் என்கிற பெயர் வேறு எந்தப் பார்ப்பனருடையதும் அல்ல. அது அம்பேத்கரின் ஊர்ப் பெயரிலிருந்து வந்ததுதான் என மறுக்க முடியாத அளவிலான சான்றுகள்.

இந்நூல் வெளிவருவதற்கு முன் சராசரிகள் பலரும் அம்பேத்கர் என்கிற பெயர் ஒரு பார்ப்பன வாத்தியாருடையது என்றே அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சராசரிகளின் நோக்கம், அம்பேத்கர் போன்ற ஒரு அறிவுஜீவி ஒரு பார்ப்பனராக இருக்க வேண்டும் அல்லது பார்ப்பனரின் மேற்பார்வையில் உருவாகி வந்திருக்க வேண்டும். சொந்தத் தேடலால், உழைப்பால், முயற்சியால் உருவாக முடியாது என்கிற கற்பிதமும் போலிக் கருத்தியலும்தான். இப்படியான தவறான கருத்தியலையே ஜெயமோகன் என்கிற எழுத்தாளரும் சுமந்து வருவது அவருடைய பரந்துபட்ட அறிவுக்குத் தகுதியாக இல்லை.
♦
டாக்டர் அம்பேத்கர் – மோகன்தாஸ் காந்தி ஆகிய இருவரின் செயல்பாடுகள், நோக்கங்கள் முரண்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் பலரும் விவாதித்துள்ளார்கள். அவரவர் வசதிக்கும் மன விருப்பத்திற்கேற்பவும் முடிவுகளைச் சொல்லி வருகிறார்கள். அவற்றில் பல பொருட்படுத்தத்தக்கவை அல்ல. சில பொருட்படுத்தாமல் கடக்கக்கூடியவை அல்ல. எழுத்தாளர் ஜெயமோகனின் காந்தி அம்பேத்கர் குறித்த பார்வையும் பொருட்படுத்தாமல் கடக்கக் கூடியவை அல்ல. அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

காந்தி குறித்து எழுத்தாளர்கள் பலருக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது. காந்தியைத் தொடாத எழுத்தாளர்கள் குறைவு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாம் காந்தியோடு பேசுவேன், காந்தியோடு விளையாடுவேன், சாப்பிடுவேன், தூங்குவேன் என்கிற ரீதியில் குறித்து சுமார் அரை டஜன் நூல்கள் எழுதியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனும் அதேபோல ஓரிரு நூல்கள் எழுதியுள்ளார். அட்டன்பரோ இயக்கத்தில் காந்தி என்கிற திரைப்படம் வெளியானது. மூன்று மணி நேரத் திரைப்படத்தில் அம்பேத்கரைக் குறித்து ஒரு காட்சி கூட இல்லை. அதாவது அவர்களைப் பொறுத்த அளவில் காந்தியின் வாழ்வில் அம்பேத்கர் ஒரு பொருட்டல்ல எனக் கருத இடம் உண்டு. எரவாடா சிறையில் காந்தி அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் வெறும் செரிமானப் பிரச்சினைக்காக மட்டுமே எனச் சொல்லாமல் விட்டார்களே என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அட்டன்பரோ, எஸ்.ராமகிருஷ்ணன் போல அல்லாமல், ஜெயமோகன் காந்தி குறித்து எழுதும் போது அம்பேத்கரையும் பேசுகிறார். அந்த வகையில் ஜெயமோகன் அவர்களிடம் ஒரு எழுத்து நேர்மை உண்டு.

சாக்ரடிஸ் ஸ்டுடியோ என்கிற யூ டியூப் சேனலில் தத்துவயியல் பேராசிரியர் முனைவர் முரளியுடன் காந்தி அம்பேத்கர் முரண் குறித்து ஜெமோ பேசியுள்ள ஒரு காணொளியை அண்மையில் பார்க்க நேர்ந்தது. அது குறித்து பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளதாக நான் நினைக்கிறேன். கீழ்க்கண்ட பத்திகளில் வருவன அந்த நேர்காணலில் ஜெயமோகன் அவர்களின் கருத்தும் அவற்றிற்கான எனது மறுப்பும் :

1. காந்தியின் வருகைக்குப் பின்னரே தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமை குறித்து அதிகம் பேசப்பட்டது. அவற்றை காந்திதான் பேசினார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தியைப் போல உழைத்தவர் வேறு எவரும் இல்லை என்கிறார்.

மறுப்பு : காந்தி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஆண்டு 1918. அதற்கும் பல ஆண்டுகள் முன்பிருந்தே பட்டியலின மக்கள் தங்களின் வரலாற்றையும் உரிமைகளையும் பேசி எழுதி வந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மகாத்மா புலே பிறந்தது 1827 ல். அவரும் அவருடைய மனைவி சாவித்ரி பாயும் இணைந்து 1860, 70 களில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பல வழிகளில் போராடியுள்ளனர். தமிழ்நாட்டில் அயோத்திதாசர் பிறந்தது 1845 ல். தாழ்த்தப்பட்ட மக்கள் பூர்வ பௌத்தர்கள் என நிறுவி அவர் எழுதிவை யாவும் 1900 ஆம் ஆண்டுகளிலேயே நிகழ்ந்தவை. இவர்களுடைய தாக்கம் இந்தியா எங்கும் பரவியுள்ளது. அவற்றின் விளைவாகப் பட்டியல் இன மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராடத் தொடங்கியதன் விளைவாக வேறு வழியின்றி இந்திய தேசிய காங்கிரசும் அந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசவும் அவற்றில் பங்கெடுக்கவும் ஆரம்பித்தது. டாக்டர் அம்பேத்கர் ‘காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன’ என்கிற தனது நூலில் பல கேள்விகள் கேட்பார். காங்கிரஸ் கட்சி 1885 ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவர்கள் பேசத் தொடங்கியது 1917, 1918 ஆம் ஆண்டுகளில்தான். இவ்வளவு ஆண்டுகள் இடைவெளிக்கான காரணம் என்ன, அந்தக் காலங்களில் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லவே இல்லையா எனக் கேட்கிறார். காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்துப் பேசக் காரணம், வேறு வழியில்லை என்பதுதான். தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களாகவே தங்களின் உரிமைகள் குறித்துப் பேசத் தொடங்கி விட்டார்கள். வேறு வழியின்றி காங்கிரசும் அவற்றைப் பேசியாக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர்.

நாட்டின் விடுதலைக்காக எவ்வளவோ போராட்டங்கள் நடத்திய காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரே ஒரு உண்ணாவிரதம், சத்தியாக்கிரகப் போராட்டம் கூட நடத்தவில்லை. அவருக்குத் தெரியும் சாதியைக் கைவிடுமாறு உண்ணாவிரதம் இருந்தால் சத்தியமாக அவர் செத்துப் போயிருப்பார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தனி வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்துள்ளார். அந்த உண்ணாவிரதங்களில் அவர் உயிர் போகாது. அம்பேத்கர் போன்ற கருணையாளர்கள் காப்பாற்றி விடுவார்கள். அதுவும் அவருக்குத் தெரியும்.

2. தனித் தொகுதி பயனற்றது. அதனால் எந்த நன்மையும் விளைந்திருக்காது. ஏனெனில் அந்தப் போராட்டங்கள் நடந்த 1930 களுக்குப் பிறகு சுமார் பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெற்று விட்டது. ஆகவே பெரிய பயன் இல்லை என்பது ஜெயமோகனின் கருத்து.

மறுப்பு : அம்பேத்கர் தனித்தொகுதி கேட்டுப் போராடிய காலகட்டம் 1930கள். அன்றைய சூழலில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்கிற எண்ணமே ஆங்கிலேயரிடம் இல்லை. சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்கிற எவ்வித உறுதியும் யாரிடமும் இல்லை. அந்தச் சூழலில் பட்டியலின மக்களுக்குத் தனித்தொகுதி என்பது எவ்வளவோ பரவாயில்லை என்கிற நிலைதான் அம்பேத்கருக்கு இருந்தது. அதாவது சாவதற்குப் பதில் நோயுடன் வாழ்வது எவ்வளவோ மேல் என்கிற நிலை. இன்னும் பன்னிரண்டு ஆண்டுகளில் சுதந்திரம் கிடைத்து விடும் அதுவரையில் அரசியல் அநாதைகளாக இருக்கலாம் என்கிற யூகமெல்லாம் காந்திக்கு இருந்திருக்கலாம். அம்பேத்கருக்கு அவ்வாறு கிடையாது. எனவே தனித்தொகுதியின் விளைவு, பயன் குறித்த ஜெயமோகனின் கருத்து மிக மேலோட்டமானது.

3. காந்தி, காங்கிரஸ் கட்சியை விடவும் மேலான தலைவராக இருந்தார். அவருடைய பேச்சிற்கு முன் கட்சியினர் பணிந்தனர்.

மறுப்பு : அவ்வாறு இருந்தது உண்மையாக இருந்தால், தனது கட்சியில் இருந்த ஆதிக்கச் சாதியினரைச் சாதியைக் கடைப்பிடிக்கக் கூடாது எனச் சொல்லும் வல்லமையும் துணிவும் ஏன் இல்லை? ஏனெனில் காந்திக்குத் தெரியும். சாதி இந்தியன் ஒருவன் எதைச் சொன்னால் கேட்பான் கேட்கமாட்டான் என.

4. காந்தியின் தாக்கம் அம்பேத்கரிடம் கூட இருந்தது. அம்பேத்கர் இறுதிக் காலத்தில் துறவுக் கோலம் பூண்டது அதற்கு உதாரணம்.

மறுப்பு : காந்தியின் தாக்கம் அம்பேத்கரிடம் துளியும் இல்லை. இருந்திருந்தால் காந்தியின் ஆடைப் பழக்கத்தையேதான் அவரும் மேற்கொண்டிருக்க வேண்டுமே. அவ்வாறில்லாமல் மேலை நாட்டுப் பாணியில் அல்லவா ஆடை உடுத்தினார், பட்டியலின மக்களை ஒன்றிணைத்து அவர் மேற்கொண்ட அகிம்சைப் போராட்டங்கள் கூட, அதனால் அம்மக்களுக்கு எவ்விதத் தீங்கும் நேரக் கூடாது என்பதாலேயேதான். அதே நேரம் இப்படியான அகிம்சை வழியையே எந்நேரமும் மேற்கொண்டிருக்க மாட்டோம் எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும் அம்பேத்கர் துறவுக் கோலம் பூண்டது அவருடைய இறுதிக் காலத்தில் இல்லை. அவருடைய நேசத்திற்குரிய மனைவி ரமாபாய் அவர்கள் இறந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் அந்த நிலைக்கு ஆளானார். அந்தத் துறவு நிலை கூட புத்தரை ஆழ்ந்து படித்ததன் விளைவுதானே தவிர, காந்தி அல்ல. மேலும் தன் வாழ்வில் பெரும் தாக்கம் உண்டாக்கியவர்கள் என புத்தரையும் கபீர் தாசரையுமே குறிப்பிடுவார் அம்பேத்கர். ஆகவே ஜெயமோகன் மற்றும் டி.ஆர்.நாகராஜ் போன்றவர்கள் குறிப்பிடுவது போல அம்பேத்கர் காந்தியின் வாழ்விலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அம்பேத்கரின் போராட்டங்கள்தான் காந்தியையும் காங்கிரசையும் செயல்பட வைத்தன.

5. அம்பேத்கர் அமைச்சராகப் பதவி ஏற்றது காந்தியின் பரிந்துரையால்தான். காந்தி இல்லையெனில் அம்பேத்கர் அமைச்சர் இல்லை.

மறுப்பு : அம்பேத்கர் என்கிற பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியருடையது என்கிற தவறான பரப்புரைக்கு நிகரானது இந்தக் கருத்து. தாழ்த்தப்பட்ட ஒருவர் தானாக அறிவாளியாக முடியாது அவருக்கு ஒரு பார்ப்பனர் ஆசானாக இருக்க வேண்டும் என்பதைப் போல அம்பேத்கர் போன்ற ஒருவர் அவராகச் சட்ட அமைச்சர் ஆக முடியாது, அது காந்தியைப் போல ஒருவர் சிபாரிசு செய்தால்தான் உண்டு என்கிறார் ஜெயமோகன். அமைச்சரவைப் பட்டியலைப் படிக்கும் காந்தி தனது பென்சிலை எடுத்து அந்தப் பட்டியலில் ஒரு பெயரைச் சேர்க்கிறார். அது அம்பேத்கரின் பெயர் என. இது சராசரிகள் பலரும் சொல்லும் வரலாற்றுத் தகவல். அதே தகவலைத் தனது புனைவுத் திறன் மூலம் ஆர்வமூட்டும் வகையில் சொல்கிறார் ஜெயமோகன். உண்மை அதுவல்ல.

இந்தியா சுதந்திரம் அடைந்த உடனே அமைந்த நாடாளுமன்ற அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அமைச்சர்களின் பட்டியலைத் தயாரித்தவர் ஜவஹர்லால் நேரு. அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்களாக இருந்த பலரும் அமைச்சர் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் பெயரும் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறுகிறது. அந்தப் பட்டியலை வல்லபாய் படேல் அவர்களிடம் அனுப்பி ஆலோசித்து ஒப்புதல் வாங்குகிறார் நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை அந்தந்தத் துறையில் தேர்ந்த வல்லுநர்களாலும் அக்கறை கொண்டவர்களாலும் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தவர் நேரு. அதன் விளைவாகவே சட்ட வல்லுநராக இருந்த டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பணியாற்ற வேண்டும் என நேரு விரும்பினார். அதற்கு அம்பேத்கரும் ஒப்புதல் அளித்தார். நேருவும் பட்டேலும் ஆலோசித்து உருவாக்கிய அந்தப் பட்டியல் பிறகுதான் காந்தியின் பார்வைக்குச் செல்கிறது. அந்தப் பட்டியலைப் படிக்கும் காந்தி ஜெயமோகன் சொல்வது போல உண்மையாகவே தனது பென்சிலை எடுத்து அந்தப் பட்டியலில் ஒரு பெயரைச் சேர்க்கிறார். ஆனால், அது அம்பேத்கரின் பெயர் அல்ல. சண்முகம் செட்டியார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகம் செட்டியார் நிதித்துறை அமைச்சராக வேண்டும் எனப் பரிந்துரைத்தவர் காந்தி. இந்தப் பரிந்துரையை இரண்டு விதமாக அணுக முடியும். ஒன்று, சண்முகம் செட்டியார் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர். காங்கிரசின் கொள்கைகளுக்கு முழுக்க எதிரான கட்சி அது. ஆனாலும் கூட அவர் அமைச்சராக வேண்டும் என காந்தி விரும்பியது நாட்டின் நலன், காந்தியின் பெருந்தன்மை. இரண்டு, பணம், கணக்கு வழக்கு சார்ந்த நடவடிக்கைகளுக்கு செட்டியார்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள் என நினைத்தாரோ என்னவோ. இதில் இன்னொரு செய்தியும் உள்ளது. தமிழ்நாட்டில் வணிகம், பணம் தொடர்பான நடவடிக்கைளுக்குப் புகழ் பெற்றவர்கள் செட்டியார்கள் என்பதைப் போல குஜராத்தில் பனியாக்கள். காந்தியும் ஒரு பனியா.

6. 1952 ல் அம்பேத்கர் முனிசிபாலிட்டி தேர்தலில் தோற்றுப் போனவர். ஆனாலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அது முழுக்க காங்கிரஸின் தயவால் கிடைத்தது.

மறுப்பு : 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அம்பேத்கர் வெற்றி பெறவில்லை. ஆனால், அவருடைய கட்சியினர் ஆறு பேர் வென்றனர். அவர்களின் துணையுடன் இன்னும் நான்கு எம்.பிக்களைச் சேர்த்து மேல்சபை எம்.பியாக விரும்புகிறார் அவர். அந்த விருப்பத்திற்குக் காரணம் இவ்வளவு ஆண்டுகாலம் தூக்கமின்றி உழைத்து தான் இயற்றிய சட்டத்தை வேறு யாரோ எதற்கோ பயன்படுத்துவதைக் கண்ட ஆற்றாமையே. எனவே நாடாளுமன்றத்தினுள் நுழைய விரும்புகிறார். ஆகவே தன்னிடமுள்ள ஆறு எம்.பிக்களுடன் கூடுதலாக நான்கு எம்.பிக்களைச் சேர்த்து ஒரு மேல்சபை உறுப்பினராக உள்நுழைய விரும்புகிறார். வாக்கு அரசியலில் இப்படியான நிலை நடைமுறை சார்ந்ததுதானேயன்றி முறையற்றது அல்ல. (அந்த நான்கு உறுப்பினரும் கூட அவரைப் போலவே கொள்கை கொண்ட சில தலித் கட்சியினர்தான்) மேலும் அவர் நாடாளுமன்றத்தினுள் நுழைவது தனிப்பட்ட பதவி, அதிகாரம் பணத்திற்காக அல்ல. அது இந்நாட்டின் சமத்துவம் தொடர்பானது. அதற்காகவே அவர் சட்டப்படியே நாடாளுமன்றத்தினுள் சட்ட அமைச்சராக நுழைந்தார். ஜெயமோகனும் இன்ன பிறரும் சொல்வது போல காங்கிரஸ்காரர்கள் இனாமாக அந்தப் பதவியை அவருக்குத் தூக்கித் தந்து விடவில்லை. மேலும் அம்பேத்கர் முனிசிபாலிட்டி தேர்தலில் தோற்றுப் போனவர் எனப் போகிற போக்கில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். அது நாடாளுமன்றத் தேர்தல். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்பது சராசரிகளுக்குக் கூடத் தெரியும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஜெயமோகனின் அந்த யு டியூப் நேர்காணலில் (socretes studios) டாக்டர் அம்பேத்கர் குறித்து அவர் சொல்லியிருக்கும் அவ்வளவும் மேலோட்டமான மற்றும் தவறான வரலாற்றுத் தகவல்கள். ஒரு சராசரி நபர் போகிற போக்கில் அடித்து விடுபவை. அவற்றையே ஜெயமோகனும் பின்பற்றியுள்ளார். புனைவெழுத்தில் ஜெயமோகன் தேர்ந்த எழுத்தாளராக இருக்கலாம். தொடர் பயிற்சியின் மூலமாக எவரும் அதைக் கொண்டு வந்து விடலாம். வரலாற்று நூல்களைப் படிக்காமலும் புனைவு எழுதலாம். முன்முடிவு செய்து கொண்டு நகர்த்திச் செல்வதற்கு. வரலாறு என்பது புனைவு அல்ல. ஆனால் ஜெயமோகன் சொல்லும் வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் காந்தி நேயம் கொண்டதாக இருப்பதால் புனித காந்தி என்கிற முன்முடிவுடனே பேசிச் செல்கிறார்.

வரலாறு ஒரு வாசலில் நுழைந்து மறுவாசலில் வெளியேறுவது போல வசதியான ஒன்றல்ல. அவற்றிற்குப் பல நுழைவாயில்களும் பல வெளியேற்றங்களும் உள்ளன. நமக்கு விருப்பமான வழியில் சென்றால் சிக்கலில் சிக்கிக் கொள்ளக் கூடும். கவனம் தேவை.


 

சா. திருவாசகம்
சா. திருவாசகம்

தருமபுரி மாவட்டம், அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சா.திருவாசகம் (1979), தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் சினிமா துறையிலும் இயங்கி வரும் இவர் தற்போது மாமல்லபுரம் அருகில் திருப்போரூரில் வசித்து வருகிறார். சல்வா ஜூடும், கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன், ஆர்ட்டிக்கிள் 15 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ‘கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ’ என்னும் நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. 

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top