Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மருத்துவர் : வரலாறும் வலிகளும்

பெருமாள் குமாரசாமி
பெருமாள் குமாரசாமி
February 1, 2026
மருத்துவர் : வரலாறும் வலிகளும்

தட்டச்சு : கவிஞர் நுட்பவினைஞன்
Image credit: Compton Verney


ஜாதி முறைதான் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகவும் தனித்துவமான பண்பாக உள்ளது. மிகவும் சிக்கலான நிகழ்வுகளில் ஒன்றாகவும் அது இருக்கிறது. அந்த வகையில், ஓரிரு பகுதிகளில் எளிதாகச் சுருக்கி உடைத்துவிட முடிவதாக அது இல்லை. மேலும், ஜாதியானது ஒரே படித்தானதாகவும் இல்லை. வட்டாரத்துக்கு வட்டாரம் கணிசமாக வேறுபடுகிறது. இந்தக் குழுக்களில் உறுப்பினராக இருப்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, அது மாற்ற முடியாததாக உள்ளது. 

ஜாதி முறையின் மிகவும் திட்டவட்டமான கூறுகளில் ஒன்று அதன் சமூக முன்னுரிமை ஏற்பாடாகும். பொதுவாக பார்ப்பனர்கள் உச்சியிலும் புதிரை வண்ணார்கள் அடிமட்டத்திலும் இருத்தப்படுகிறார்கள். இந்தப் படிநிலை வரிசையின் தோற்றுவாய்கள் பெரிதும் தவறென மறுக்கப்பட்டாலும் தோராயமாக கி.பி. 700 வரை – அதாவது மனுஸ்மிருதியின் காலம்வரை – அது முழுமையாக வலுப்பெறவில்லை என்பதைப் பொதுவாக அறிவாளிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியச் சமூக அமைப்பு மதரீதியான சட்ட ஒப்புதலைப் பெற்றது. 

ரிக் வேதத்தைப் பாடிய ஆதிக் கவிஞர்கள் அஸ்வினைப் பெரிதும் போற்றுகிறார்கள். காரணம் அவரது மருத்துவ ஆற்றல். அவர் மருத்துவம் பார்த்ததால் மனிதனின் அன்பைப் பெற்றவனாக இருக்கிறார். அதனால் தேவர்களுக்கும் மருத்துவம் பார்ப்பவராகப் போற்றப்படுகிறார். பின்னர் தேவர்களின் மருத்துவராகவும் வர்ணிக்கப்படுகிறார். இந்த ரிக் வேத கதையின் தொடர்ச்சியாகத்தான் மகாபாரதத்தில் உள்ள மருத்துவ ஞானம் பெற்றவர்களான நகுலனும் சகாதேவனும் அஸ்வினி புத்திரர்கள் என்று அழைக்கப்படுவதற்கான காரணம். 

ஆனால், அஸ்வினுக்கு இந்த நல்ல பெயர் நீண்ட காலம் நிற்கவில்லை. நால்வர்ணக் கோட்பாடு வலிமை பெற்றதும் அதன் தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் தப்பவில்லை. வேதத்தில் மிகப் பிந்தியதான யஜுர் வேதம் சொல்கிறது. “பிராமணர்கள் மருத்துவத்தில் ஈடுபடலாகாது.” ஏனென்றால் மருத்துவன் புனித மற்றவன்; யாகத்துக்குத் தகுதியற்றவன்.

எனவே, பிராமணர் அத்தொழிலைச் செய்யக்கூடாது எனச் சொல்லுகிறது. மருத்துவம் ஏன் புனிதம் அற்றவன்? என்று கேட்டால் அதற்கும் யஜூர் வேதம் சொல்லுகிறது. மருத்துவத் தொழில் எல்லோருடனும் பழகுகிற, எல்லோரையும் சிகிச்சையின் பொருட்டு தொட்டுப் புழங்குகிற தொழில். ஆதலால் அத்தொழிலைச் செய்பவரை வர்ணக் கோட்பாட்டின்படி புனிதம் அற்றவன் என்று முடிவு கட்டுகிறது. 

இங்குதான் புதிய பிரச்சனையை அது சந்திக்கிறது. அப்படி என்றால் நம் முன்னோர்கள் தேவர்களிலே மருத்துவ ஆற்றல் கொண்ட தேவரான அஸ்வினைச் சொல்லி உள்ளனரே! அவரை என்ன செய்வது? மருத்துவத் தொழிலே கேவலமானது, தீட்டானது என்ற முடிவுக்கு வந்தபின் தொழிலை தேவர்களில் ஒருவர் எப்படிப் பார்க்க முடியும்? இந்தக் கேள்விகளோடு அஸ்வினை அணுகுகிற யஜுர் வேதம் வெளிப்படையாக அஸ்வின்மீது தாக்குதல் தொடுக்கிறது. அத்தாக்குதலின் உச்சமாக அது அறிவிக்கிறது. தனது மருத்துவத் தொழில் காரணமாக அஸ்வின் தேவர்களில் ஒருவன் என்ற தகுதியை இழக்கிறார். அதன்பின் அஸ்வின் அழித்தொழிக்கப்பட்டு விடுகிறார். 

மருத்துவம் பார்க்கும் மனிதனின்மீதும் தெய்வத்தின்மீதும் இவ்வளவு கடுமையான தாக்குதலைத் தொடுப்பதற்கான காரணத்தை யஜூர் வேதம் சொல்லுகிறது. “எல்லா வகையான மனிதர்களும் மருத்துவர்களை நோக்கி ஓடுகிறார்கள்”. அதுதான் இந்தக் கோபத்தின் அடிப்படை. 

சரி இதற்காக யஜுர் வேதாந்திகள் மருத்துவர்களின் மீது ஏன் இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்று கேட்டால், மருத்துவன் உடலை மையப்படுத்தித் தனது பகுத்தறிவால் வினைபுரிகிறான். பாவம், புண்ணியம், அதிர்ஷ்டம், துரதிஷ்டம், மாயவாதம் என எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டுக் கண்ணுக்கு முன்னால் இரத்தம் வழியும் காயத்திற்கு மருந்து கட்டி சரிப்படுத்துகிறான்.

உலகம் நான், அண்ட சராசரம் நான், நீயும் நான், அவனும் நான், பொன்னும் நான், மருந்தும் நான் என வியாக்கியானம் பேசுவோருக்கும் எதிராகத்தான் மருத்துவ அறிவியலின் ஒவ்வொரு செயலும் இருந்தது. எனவே, அந்த அறிவியலை ஒழிப்பதே அடுத்துவந்த மதவாதிகளின் தலையாயக் கடமையாக இருந்தது. 

இந்திய வரலாற்றில் மருத்துவர்களின்மீதும் மருத்துவ அறிவின்மீதும் கொடூரமான தாக்குதல்கள் அதன்பின் அரங்கேறத் தொடங்கின. தர்மச் சட்டங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட எல்லாச் சட்டங்களும் மருத்துவர்களைச் சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தையே கொண்டிருந்தன. அபஸ்தாம்பர் எழுதிய சட்ட நூல் “மருத்துவன் அல்லது அறுவையாளன் தருகிற உணவு அருவருக்கத்தக்கது. அதனை உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்கலாகாது” என்று கூறுகிறது. வசிஷ்டரின் சட்ட நூலோ “மருத்துவன் தரும் உணவை ஏற்பது விலை மகளிர் தரும் உணவைப்போல அசுத்தமானது” என்கிறது. இந்தப் போக்கின் உச்சத்தை மனுவின் சட்ட நூலிலே பார்க்கலாம். மனு சொல்கிறார் “மருத்துவர்கள் தரும் உணவு புண்ணில் இருந்து வரும் சீழுக்குச் சமம்” என்று.

இந்தத் தர்மச் சட்டங்களே இந்தியாவில் அதிகாரத்தில் இருந்தவர்களால் பெரும்பாலான காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால்தான் ஆதியில் பெரும் அறிவுத்துறையாக வளர்ந்த இந்திய மருத்துவத்துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனாலும் இதற்கு எதிரான தத்துவ மரபு கொண்டவர்களும் எளிதில் வீழ்ந்து விடவில்லை. ஏனென்றால், வலியால் துடிப்பவன் மருந்தைத் தேடித்தான் ஓடுவானே தவிர மந்திரத்தைத் தேடி அல்ல. எனவே, மருத்துவரை நோக்கி மக்கள் ஓடியபடியேதான் இருந்தனர். மருத்துவ அறிவு மதவாதிகளுக்கு எதிராகத் தன்னைத் தக்கவைக்கிற போராட்டத்தை நடத்தியபடியே இருந்தது.

வரலாற்றின் இடைக்காலத்தில் நாவிதர்களே பொதுவான மருத்துவ சிகிச்சையை எல்லோருக்கும் செய்து வந்தனர் என்றாலும் குறிப்பாகப் போர்க் காலங்களிலும், அதன் பிறகு இராணுவ வீரர்களுக்கு மருத்துவமும் அறுத்துவமும் புரிந்தனர். இதன் காரணமாக இவர்கள் தங்களிடம் தீட்டிய கத்தி ஒன்றை வைத்திருப்பது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக மருந்துகளால் நோய் குணம் ஆகாது என்று எண்ணப்பட்ட பொழுது நாவிதர்கள் தேவையான அளவு கீறியோ அல்லது அட்டையைக் கடிக்க விடுவதன் மூலமாகவோ இரத்தத்தை வெளியேற்றினர். 

இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யும் நாவிதர்கள் சங்கம் 1318 இல் உருவானது. 1505 ஆம் ஆண்டு பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நாவிதர் அறுவை மருத்துவர்களையும் பேராசிரியர்களாக நியமனம் செய்தது. இங்கிலாந்தில் 1540 இல் நாவிதர்கள் அறுவையாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால், நடைமுறையில் முடி திருத்துதலையும் சவரம் செய்தலையும் செய்து வந்த நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தடை செய்யப்பட்டிருந்தது. பிரான்சில் 1743 ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1745 ஆம் ஆண்டிலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நாவிதர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். 1800 ஆம் ஆண்டில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து நாவிதர்கள் இணைப்பை இச்சங்கம் முழுமையாகத் துண்டித்தது. இதன் எச்சமாகவே இன்றும் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைப் பட்டம் பெற்ற பின்பு டாக்டர் என்று அழைக்கப்படாது திரு, திருமதி, செல்வி என்றே பட்டத்திற்கு முன் போட்டுக் கொள்கின்றனர். 

உலகில் நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், பேராசிரியர்களாக இருந்தனர் என்பதைத் தாண்டி, இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து வளர்த்தது நாவிதர்களேயாவர். இதுகுறித்து பண்டைய வரலாற்று அறிஞரான டி.டி.கோசாம்பி “போரில் அல்லது நோயில் மூக்கு இழந்தோருக்கு மாற்று மூக்கு ஒட்டறுவை முறை சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய நாவிதரின் கண்டுபிடிப்பே” என்கிறார். இது தவிர, இந்நாவிதர்கள் சமூகத்தைச் சேர்ந்த உபாலி என்பவர் பவுத்த சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து உள்ளார். இப்பவுத்தர்கள் காலத்தில்தான் மெய்ஞான அறிவியலோடு அறுவை சிகிச்சையானது தோன்றி வளர்ச்சி அடைந்ததாக வரலாற்று அறிஞர் வாட்ஸ் குறிப்பிடுகின்றார். 

ஆனால், இன்றைய நிலையில் தமிழ்நாட்டுக் கிராமங்களில் மக்களுக்குத் தேவையான முக்கியமான பணிகளைச் செய்து வந்த 18 வகை இனங்களுடன் நாவிதர்களும் அடக்கம். இந்த ஜாதியினர் யாவரும் குடிமக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இப்பதினெட்டு வகை இனத்தவரும் குடிமக்கள் பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டபோதிலும் வண்ணார், நாவிதர் மட்டுமே குடிமக்கள் என்ற பெயரை இன்றுவரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், கிராம மக்களுக்கு வெளுத்தல், மழித்தல் பணியுடன் மங்கலக்காரியங்கள் மட்டுமின்றி அமங்கலக்காரியங்களுக்கும் அவசியமான பணிகளை வண்ணார்கள், நாவிதர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். 

இவைகளைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றன. சான்றாக மங்கலச் சடங்குகளின்போது அடிப்படைப் பணிகளில் நாவிதர்கள் ஈடுபட்டிருந்தமையால் அவர்கள் மங்கல வினைஞர், மங்கலையன் என்றும், நாவிதப் பெண் மங்கலை என்றும் அழைக்கப்பட்டனர். இதுவே கொங்கு மண்டலச் சதகத்தில் மங்கலை எனும் சொல் நாவிதப் பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மங்கலம் என்னும் சொல் மருத்துவக் குலத்தைச் சேர்ந்தோரின் பெயர்களுடன் இணைத்துக் காணப்படுவதாக முதுநிலை கல்வெட்டு ஆய்வாளர்கள் ஏ.சுப்பராயலுவும் கே.ஜி.கிருஷ்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு பெயர்களுடன் மங்கலம் என்ற அடைமொழியும் இணைக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் சில சான்றுகளாவன “மூவேந்தர் மங்கலப் பேரரையன் மாறன்காரி”, “பாண்டி மங்கல விசையரையன் மாறன் எயினன்” என்பதாகும்.

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் தேவையானது உடற்கூறு அறிவு. இதற்கு சவப் பரிசோதனை அவசியம். இது இந்தியாவில் இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு விதியாகப் பிணம் எரிக்கப்படுவதாலும் அல்லது ஆற்றில் மிதக்க விடுவதாலும் மற்றும் மனு சாஸ்திரம் ஒரு சண்டாளனை, ஒரு பிரேதத்தை அல்லது பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சையாகத் தொட நேர்ந்துவிட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனிப் பரிசுத்தத்தைப் பெறுவான் என்பதாலும், புத்த சமண மதங்களும் திருக்குறளும் கொல்லாமையைப் போற்றுவதாலும் உடற்கூறு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலேயே தழைக்கவில்லை எனலாம். இக்காரணத்தை மிகவும் துல்லியமாக ஆய்ந்த சாட்டோபாத்தியாயா அறுவை சிகிச்சைக்கான வளர்ச்சியில் மேல் ஜாதியினருக்கு எவ்விதப் பங்கும் இருந்திருக்கவில்லை என்பதை விளக்கமாக உடலை முதன்மைப்படுத்தியதால்தான் தந்திரர் ரசவாதம், ரசாயனம் போன்ற அறிவியல்களை வளர்க்க முடிந்தது. வைதீகர் தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை. பிணங்களை வைத்துக் கீழ் ஜாதியினரே அறுத்து ஆய்ந்தார்கள். இதை மேல் ஜாதியினர் தீட்டாகக் கருதியதால் ஒதுக்கினார்கள். தவிர “தந்திரரின் சவ சாதனை” மனித உடல் பற்றி அவர்கள் அறிய உதவியது. இன்றும் கூட (1959) பிணத்தைத் தொட மேல்ஜாதியார் மறுப்பதால் அறிவியலை மறுக்கிறார்கள் என்கிறார். 

சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது. இராஜராஜனின் கி.பி 1014 ஆம் ஆண்டைய கல்வெட்டு ஒன்றில் பஞ்சவன் மங்கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்றும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல்லாகும். எனவே, பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவரைக் குறிப்பிடுவதாகும். அணையன் பவருத்திரன் என்பவர் கோலினமை (கோலினமை-கோலி-மயிர்) என்ற தொழிலில் வல்லவன் என்ற குறிப்பு வருகின்றது. 

இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும். எனவே, கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்பு உடையதாகவே இருக்கும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஏ.சுப்பராயலும் கருத்துத் தெரிவிக்கின்றார். 

திருவிடலூர் சிவயோகநாதர் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கி.பி. 1016 ஆம் நாளிட்ட கல்வெட்டில் இராணி குந்தவை ஆர்க்காட்டு கூற்றம் சிறீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி அரையன் உத்தமசோழன் என்ற நாவிதனுக்குச் சல்லிய போகமாக வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 

இதே ஆலயத்திலுள்ள மற்றொரு கல்வெட்டில் குந்தவை இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஒரு வேலி 4 மாநிலத்தையும், வேம்பத்தூரிலுள்ள ஒரு வீட்டையும் அரையன் உத்தமசோழன் என்ற இராஜேந்திர சோழ பிரயோகத்தரையன் ஆகிய அம்பஷ்டனுக்குச் சல்லிய கிரியா போகமாக (அறுவை மருத்துவத் தொழிலை விருத்தியடையச் செய்வதற்கான மானியத்தின் பெயர்) வழங்கியிருப்பது தெரிய வருகின்றது. ஆக, அரசர்களால் அளிக்கப்பட்ட அம்பஷ்ட மான்யம் (அம்பட்டன் மான்யம்) நிலங்கள் பின்னாளில் ஆன்மீக ஜாதிகளான பார்ப்பனர்களாலும், நிலவுடைமை ஜாதியினரான சற் சூத்திரர்களாலும் அபகரிக்கப்பட்டபோதும், தங்கள் ஜாதிப் பின்னடைவினால் நாவிதர்கள் அம்பட்டன் மான்ய நிலங்களை மீட்க வாய்ப்பின்றிப் போனார்கள் என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் எஸ்.கே.அந்தோணிபால்.

இந்தியாவில் மருத்துவக் கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் மருத்துவர் ஜாதியின் ஆண்களா? அல்லது பெண்களா? என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது. பண்டைய காலத்தில் சடங்குகளைப் பெண்களே முன்னின்று நடத்தினர். இன்றும் கிராமப்புறங்களில் பாட்டி வைத்தியம் என்ற பெயர் புழக்கத்தில் இருப்பது அன்று பெண்களே மருத்துவம் செய்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

இதற்கு ஒரு இலக்கியச் சான்றாகக் கொங்கு மண்டலச் சதகத்தில் கார்மேக கவிஞர் (9 ஆம் நூற்றாண்டு) விரிவாக எடுத்துரைக்கின்றார். 

கொங்கு நாட்டு மன்னனின் மகள் பிரசவ வலியால் துன்புற்றபொழுது, சிசு வெளிவராத நிலையில் ஒரு நாவிதப் பெண், வயிற்றைக் கீறி, சிசுவை வெளியே எடுத்ததைச் சிறப்புற விளக்குவது இங்கு நினைவுகூரத்தக்கதாகும். 

இதுபோலவே வயிற்று வலி ஏற்படும் குழந்தைகளுக்குக் குடல் தட்டி இன்றுவரை நிவர்த்தி அளிப்பதும் பெண்களே ஆகும். மேலும், நாவிதப் பெண்கள் இன்றும் சில கிராமங்களில் பிரசவம் பார்த்து வருவது என்பது ஆதி காலத்தில் மருத்துவத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்து இன்றுவரையில் தக்கவைத்து உள்ளதன் எச்சமென்கிறார் மருத்துவச்சி பட்டம்மாள் பூபதி தாட்டிமானப்பல்லி. 

மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் 1850-51 போர்டு ஆப் எஜுகேஷன் அறிக்கையின்படி என்ன கற்பிக்க வேண்டும்? எப்படிக் கற்பிக்க வேண்டும்? என்பது 1835 ஆம் ஆண்டில்தான் தெளிவானது. ஆனால், 1835 இல் யாருக்குக் கற்பிக்க வேண்டும்? ஏன் கற்பிக்க வேண்டும்? என்பது காலனிய அரசிற்கு விடுவிக்கப்படாத கேள்வியாகவே இருந்தது. 

இந்த அறிக்கையின்படி ஒரு சிறிதளவே கல்வி அளிக்க அரசு முனைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அதுவும் உயர் ஜாதியினருக்கு ஐரோப்பிய அறிவியலைக் கற்பிப்பது என்பது மேலை இலக்கியங்கள் அவர்கள் நாட வழி அமைக்கவே ஆகும் என்பதும் அவர்கள் எண்ணமாக இருந்தது. 

இந்நிலையில் மிஷினரிகள் கீழ்த்தட்டு வர்க்கத்திற்குக் கல்வி அளிக்க முன்வந்தாலும், அரசு முன்வரவில்லை. இதைப்பற்றி எல்பின்ஸ்டன் குறிப்பிடுகையில் கவனமாக நாம் கல்வியை ஒரு புதிய வகுப்பினருக்கே அளிக்க வேண்டும். இதைப் பார்ப்பனர் அல்லது பார்ப்பனர்களை ஒத்தவர்களுக்கே அளிக்க வேண்டும். அரசு எல்லோருக்கும் கல்வி என்பதை விதியாகக் கொள்ளத் தேவையில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்றார். ஆக, அரசு சமூகத்தினூடே தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இதுபோலவே மருத்துவக் கல்வி என்பதும் ஒரு சமூக மாற்றத்திற்கு என்பதற்குப் பதிலாக, காலனிய அரசை மேலும் வலுப்படுத்தக்கூடிய விதத்திலேயே அமைந்தது. 

உஸ்மான் கமிட்டி பரிந்துரையின்பேரில் இந்திய மருத்துவப் பள்ளி 1924 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுதேசி மருத்துவத்துடன் மேலை மருத்துவமும் கற்பிக்கப்பட்டது. 1946 இல் உஸ்மான் கமிட்டி, சோப்ரா கமிட்டி, பண்டிட் கமிட்டி பரிந்துரையின்பேரில் இந்திய மருத்துவப் பள்ளி கல்லூரி ஆகி கல்லூரியின் பெயர் காலேஜ் ஆஃப் இன்டகிரேட்டடு மெடிசன் என்று மாற்றமடைந்தது. 1948 இல் இக்கல்லூரியில் ஜி.சி.ஐ.எம். படிப்பில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை அலோபதி மருத்துவத்துடன் படிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஜி.சி.ஐ.எம். படித்தவர்கள் உள்ளூர் மருத்துவம் மற்றும் மேலை மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க அரசு இசைவளித்தது. ஜி.சி.ஐ.எம். படிப்பு முடிந்து வெளியேறியவர்களுக்கு ஒரு வாய்ப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால டி.எம்.எஸ். படிப்பும் அதை முடித்தவர்களுக்குச் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் குறுகிய கால எம்.பி.பி.எஸ். படிப்பும் படிக்க அரசு அனுமதி அளித்தது.

ஆகவே, உள்ளூர் மருத்துவம், மேலை மருத்துவம் ஆகிய இரு மருத்துவங்களிலும் ஆலோசனை வழங்க தொடங்கப்பட்ட மருத்துவப் படிப்பில் மேலை மருத்துவம் படித்தவர்கள் மருத்துவர் ஆனார்கள். இதன்படி நாட்டு மருத்துவ முறையுடன் மேலை மருத்துவத்தையும் இணைத்துப் படிக்கும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்தது. இது நீடித்து இருந்தால், சுதேசி மருத்துவம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்வுகளுடன் வளர உதவி இருக்கக்கூடும். தற்பொழுது சுதேசி மருத்துவ முறை சித்தா, யுனானி, ஆயுர்வேதம் சென்னை அரும்பாக்கத்தில் 1970 இல் திறக்கப்பட்டு, சுதேசி மருத்துவம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பண்டிதர் ஆனந்தம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். சித்த மருத்துவத்தை மீட்டெடுத்தவர். 

நாவிதப் பெண்கள் மருத்துவச்சி என்று அழைக்கப்பட்டு காலனிய அரசு காலத்திலும் பணிபுரிந்து வந்த பொழுது இவர்களின் மருத்துவ முறை மேலை மருத்துவத்தை ஒத்துவராது இருந்ததன் காரணமாக, 1923 இல் காலனிய அரசு இவர்கள் பணியை மேம்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டது. மருத்துவப் பள்ளிகள், கல்லூரிகள் தோன்றியதற்கும் தங்கள் ஜாதிப் பின்னடைவினால் மேலை மருத்துவம் கற்க வாய்ப்பின்றிப் போனார்கள். 1955 இல் கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய இந்திய மருத்துவக் கல்லூரி மூடப்பட்டு மகளிர் மேலை மருத்துவம் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரியாக மாறி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 1967 இல் கல்லூரி மாணவிகள் தங்களுக்குத் தனிக் கல்லூரி தேவையில்லை. ஆண்களுடன் சேர்ந்து படிக்க விரும்புவதாகப் போராட்டம் நடத்தியதன் விளைவாக 1967 இலேயே ஆண்களும் இக்கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். 

எவருடைய அனுபவ அறிவினால் ஒரு தொழில் வளர்த்து எடுக்கப்பட்டதோ அவர்களிடமிருந்து அந்த அறிவையும் தொழிலையும் அந்தத் தொழிலுக்குச் சம்பந்தம் இல்லாத மற்றொரு குழு கைப்பற்றிக் கொள்வதும் தக்க வைத்துக் கொள்வதும் தொடர்கிறது என்பதை விரிவாகக் கூறுபோட்டு ஆராய வேண்டியவர்களாக உள்ளோம் என்பது தெளிவாகின்றது.


 

பெருமாள் குமாரசாமி
பெருமாள் குமாரசாமி

பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026
  • 21 கவிதைகள் : கல்யாணராமன்

    21 கவிதைகள் : கல்யாணராமன்

    May 1, 2026
  • இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (16)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (5)
  • கட்டுரை (105)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (83)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (16)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (16)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (5)
  • கட்டுரை (105)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (83)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top