மழைக்குச் சுடச் சுட
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சுடச் சுட எழுதித்தானே ஆகவேண்டும்
சுடுவதற்கு எத்தனையோ இருக்கிறது
சூடாகாமல் எப்படி இருப்பது?
ஈரம் ஏறி ஏறியே கனத்த மண்டை இது
மனிதம் சொட்டிக்கொண்டிருக்கும்
கடைசி இரவினில்
எப்படி நான்
கவிதையை முடிக்க முடியும்..
ஒவ்வொரு துளியின் கனத்தையும்
கண்கள் பார்த்திருக்கிறது
நத்தைகளின் நடமாட்டம்
நடைபெறாமல் போனால்
மழையை என்ன செய்ய..
மழையில்தான் என்ன செய்ய..
நாய்க்குட்டி நடுங்கிக்கொண்டிருக்கும்
இந்த இரவில்
எழுத்துதனில்
எடையேறிக் கொண்டே இருக்கிறது
மேலோகம் பூலோகமாகிப்
பூலோகம் மேலோகமாகி
மூழ்கி மிதக்கிற
கடக்க முடியா இந்நாளைக்
கட்டுப்படுத்துகிறேன்
புயல் கரையைக் கடக்கிறது
கிச்சுகிச்சு மூட்டுபவள்
கிட்டே இருக்கையில்
கிண்டுவதற்குக்
கிச்சடி இருக்கையில்
என்ன கவலை..
வேறென்ன வேண்டும்..
தவளைகளின் ஒருமித்த கூக்குரல்
அடிவயிற்றைக் கலைக்கிறது
உச்சுக் கொட்டிக் கொள்ளும்
உறுத்தல்கள் ஏன்?
அபாயங்கள் முன்கூட்டியே
முடிவெடுப்பதில்லை – அதற்காக
உபயங்கள் ஒருபோதும்
உள்வாங்குவதில்லை
இவ்வளவு மழையிலும்
இவ்வளவு இருட்டிலும்
பொழுது விடிகிறதே!
அவரவர்க்கு
அவரவர் பொழுதுகள்
விடியும்பொழுதுதான்
தோன்றுகிறது;
‘என்ன பொழப்புடா இது?’.
Art : lidbergev
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பிறந்தவர். கவிதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தும் முதல் நூலாகப் பருக்கை எனும் நாவலை வெளியிட்டவர். ‘செத்தை’ சிறுகதைத் தொகுப்பு, “இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்” எனும் ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். இவை மூன்றுமே முக்கியமான பங்களிப்புகள். முதல் நூலுக்கே சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். தொடர்ந்து இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் மொழி, மானுடத்திற்காகச் செயலாற்றி வருகிறார். திரைப்பாடலாசிரியராகவும் முயற்சித்து வந்தவர் தற்போது பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக மாணவர்களுக்காக இயங்குகிறார். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தகக் கண்காட்சிகள், ஊடகங்கள், இதழ்களில் சிறப்பான கட்டுரைகளை அளித்திருக்கிறார். இவரது நான்கு கவிதை நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.








Leave a Reply