குறுங்கதைகளின் டைனோசர்
அகஸ்த்தோ மொன்டொரசோ இலத்தீன் அமெரிக்கப் புனை கதையாளர்களுள் மிகவும் விசித்திரமானவர். இடாலோ கால்வினோ தனது இறுதி உரைகளுள் ஒன்றில் கதையைச் சுருங்கச் சொல்வதற்கான எடுத்துக்காட்டாக இவரது குறுங்கதைகளைக் குறிப்பிடுகிறார். அவருடைய மிகப் பிரசித்தி பெற்ற (EL DINOSAURIO) என்னும் கதை ஏழு சொற்களால் ஆனது. நுணுக்கமான சொற்பின்னல்களில் மனித வாழ்வின் அவலங்களையும் அபத்தங்களையும் உலவ விடுகிறார். பின் நவீனத்துவ மினிமலிசம் சார்ந்த எழுத்தாளர் என்று விமர்சகளால் குறிப்பிடப்படும் மொன்டொரசோவின் பெரும்பான்மையான கதைகள் ஊடிழைப் பிரதிகளாக (intertextual text) வாசிக்கப்படுகின்றன. கிரேக்க ரோமானிய இலக்கியக் கர்த்தாக்கள் முதல் தன்னுடைய சமகாலத்தவரான போர்ஹே வரை கதாபாத்திரங்களாகத் தன் குறுங்கதைகளில் வடித்துள்ளார்.
புனைவுக்கும் அபுனைவுக்குமான மெல்லிய இடைவெளியை இவரது குறுங்கதைகள் அழித்து விடுகின்றன. இலக்கிய வகைமைகளின் கட்டமைப்புகளைக் கலைத்துப் போட்டு, அவை ஒன்றோடொன்று மாறிக் கலந்து இயையும் புதிய வகைமைகளாகத் தன் குறுங்கதைகளைப் புனைந்துள்ளார். ஒரு வரி குறுங்கதை, ஒருபக்கக் குறுங்கதைகள் என்று புனைவின் எல்லைகளில் நின்று விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு அபூர்வ புனைவாளுமையாக அகஸ்த்தோ மொன்டொரசோ திகழ்கிறார்.
1.கிரகணம்
சகோதரர் பார்த்தலோம் அரசோலா தனது முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த பின் இப்போது தன்னை எவராலும் காப்பாற்ற இயலாது என்ற உண்மையை ஒப்புக் கொண்டார். க்வாதமாலாவின் கட்டற்ற பயங்கரமான காடு ஆவேசத்துடன் அவரை விழுங்கிக் கொண்டிருந்தது. நிலப் பரப்புகளை பற்றிய அறியாமையுடன் அமைதியாக தன் மரணத்திற்குக் காத்திருந்தார்.
தொலைவிலிருக்கும் ஸ்பெயினை ஆழ்ந்து அவதானித்தவாறு மீட்சியின்றித் தனியனாக அவர் அங்கேயே இறக்க விரும்பினார். முக்கியமாக லாஸ் அப்ரோஹோஸ் மடாலயத்தில் ஒரு நாள் ஐந்தாம் சார்லஸ் மன்னன் தன் மாட்சிமை பொருந்திய ஸ்தானத்திலிருந்து கீழிறங்கி இவரைச் சந்தித்த தருணத்தில் மீட்சிக்கு வழிவகுக்கும் இவருடைய ஆன்மீக ஆற்றலை தான் மிகவும் நம்புவதாகத் தெரிவித்தான்.
விழித்தெழுந்த போது இவரைச் சுற்றி சலனமற்ற முகத்துடன் மாயன் இனத்தவர்கள் சூழ்ந்திருந்தனர். அவரை ஒரு பலிபீடத்திற்கு முன் பலியிடத் தயார் செய்தனர். அந்த பலிபீடம்தான் இறுதியாக தனது விசாரங்கள், தனது விதி ஆகியவையிடமிருந்து மேலும் தன்னிடமிருந்தும் அவரைக்காத்துப் புகலிடம் அளிக்கப் போகும் இறுதிப் படுக்கை என்று உணர்ந்தார்.
மூன்று ஆண்டுகள் காடுகளினூடே சுற்றித் திரிந்ததால் இனக்குழுக்களின் மொழிகளில் ஓரளவு பரிச்சயம் உடையவராக இருந்தார். மிகவும் பிரயாசையுடன் சில சொற்களை அவர்களுக்குப் புரியுமாறு பேசினார்.
திடீரென்று அவர் மனதில் ஒரு கருத்து துளிர்த்து எழுந்தது. அவரது பரந்துபட்ட கல்விக்கும் மேதமைக்கும் அரிஸ்டாட்டிலை ஆழ்ந்து கற்றதற்கான ஞானத்திற்கும் அது சாட்சியமாக விளங்கியது. அன்று முழுமையான சூரிய கிரகணம் ஏற்படப் போகிறது என்பதை நினைவுகூர்ந்தார். தனது மனதின் அடியாழத்தில் இந்தச் சூழலை வைத்து அவர்களை ஏமாற்றித் தன் உயிரைக் காக்க முடியும் என்று நம்பினார்.
”என்னை நீங்கள் கொன்றால் உச்சி வானில் சுடரும் சூரியனை என்னால் இருண்டு போகச் செய்ய இயலும்” என்று அவர்களை மிரட்டினார்.
மாயன்கள் அவநம்பிக்கையுடன் அவரை வெறித்துப் பார்த்ததையும் அறிந்துகொண்டார். அவர்கள் தமக்குள் உரையாடும் போது நம்பிக்கையுடனும் ஒருவித வெறுப்புடனும் காத்திருந்தார்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சகோதரர் பார்த்தலோம் அரசோலாவின் இருதயத்திலிருந்து குபுக்கென்று உணர்ச்சியுடன் பீறிட்ட இரத்தம் பலிபீடத்தை நிறைத்தது (பலிபீடம் கிரகண சூரியனின் ஒளியற்ற சோபையுடன்)
அப்பொழுது மாயன் வானியலாளர்கள் அரிஸ்டாட்டிலின் உன்னதமான உசாத் துணையின்றித் தம் தொல்பழங்காலப் பிரதிகளில் கணித்துக் குறித்து வைக்கப்பட்டிருந்த சூரிய சந்திர கிரகணங்களின் முடிவற்ற தேதிகளை ஒரு மந்திர உச்சாடனத்தின் சன்னமான லயத்துடன் ஒருவன் நிரல் பட ஒப்புவித்துக் கொண்டிருந்தான்.
2. டைனோசர்
அவன் விழித்தெழுந்து பார்த்தபோது டைனோசர் இன்னும் அங்கேயே இருந்தது.
3. நித்திய இயக்கம் 1981
நாம் நிறைய விஷயங்களைச் செய்ய முயற்சித்தாலும் வாழ்க்கை ஒரு கட்டுரை அல்ல; நாம் நிறைய விஷயங்களை சிருஷ்டித்தாலும் வாழ்க்கை ஒரு கதை அல்ல; நாம் நிறைய விஷயங்களைக் கனவு கண்டாலும் வாழ்க்கை ஒரு கவிதை அல்ல.
வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையைப் பற்றிய கதையைப் பற்றிய கவிதை ஒரு நித்திய இயக்கம். சர்வ நிச்சயமாக, அது ஒரு நித்திய இயக்கம்தான்.
4. பிரபஞ்சம்
புகழ்ச்சியின் புத்தார்வத்தின் அல்லது பூரிப்பின் திராட்சை ரசத்தால் நிரப்பப்பட்ட ஜாடியினுள் அவன் கைநிறைய ஈக்களை அள்ளிப் போட்டவாறு தன் வாழ்க்கையைக் கழித்தான்- பிரான்சிஸ்கோ ஃபுல்னே
கடவுள் இன்னும் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை. அரைத் தூக்கத்தில் அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் பிரபஞ்சம் பரிபூரணமாகவும் அதே சமயத்தில் குழப்பங்களின் கூடாரமாகவும் காட்சியளிக்கிறது.
5. உன்னை நான் அறிவேன், முகமூடியே.
அரிய பொன் போன்ற “நான்காம் கான்” எனும் நாளில்தான்” காட்டுன் ஐந்து ஆகு” எனும் பிரபஞ்ச சுழற்சி முடிவடைகிறது. அது மண்டை ஓடுகள் குவியும் நாளாகும். நகரத்தின் தெருக்களிலும் புகலிடங்களிலும் ஈக்கள் அழுது புலம்பும் நாளாகும்.
– சிலாம் பாலத்தின் புத்தகங்களின் புத்தகம்.
நகைச்சுவையும் கோழைத்தனமும் பொதுவாக ஒன்றோடு ஒன்று இணையும் குணங்களாகும். நீ மட்டும் விதிவிலக்கு அல்ல! நகைச்சுவை ஒரு முகமூடி; கோழைத்தனம் மற்றொரு முகமூடி; இரண்டையும் ஒரே நேரத்தில் கழற்ற எவரையும் அனுமதிக்காதே.
6. நிறைவு
பசியின் தூண்டுதலுக்கும் வெறுப்புணர்வின் உச்சத்திற்கும் இடையே மனிதகுலம் முடிவற்ற ஒன்றைக் கற்பனை செய்ய இயலாது. புயல் மேகங்களின் கீழே எண்ணற்ற ஈக்களின் இரைச்சல் சூழ நிற்கும் மரத்தைப் போன்றது மனிதகுலம். இத்தகைய வெறுப்புணர்வின் இரைச்சலின் ஊடே பிரபஞ்சத்தின் தெய்வீக இசையைக் கேட்க இயலாது.
– ழான் ஹுவாரே ” கடவுளைப் பற்றிய சிந்தனைகள்”
இன்று நான் மிகவும் நன்றாக உள்ளேன், ஒரு பால்சாக்கைப் போல. இந்த வரியை எழுதி முடிக்கிறேன்.
7. ஒன்றைத் தேர்ந்தெடு
டுலிப் மலரும் பட்டாம்பூச்சியும் என்னுடையதை விட மிக மகிழ்வான மேலங்கிகளில் காணப்படுகின்றன;
மிகச் சிறந்த உடையை எனக்கு அணிவித்தாலும் ஈக்களும் புழுக்களும் பூக்களும் என்னை விட ஒளியுடன் பிரகாசிக்கின்றன என்பதை நீ காண்பாய்.
ஐசக் வாட்ஸ் “குழந்தைகளுக்கான தெய்வீகப் பாடல்கள்”
காஃப்காவும் போர்ஹெ யும் நாம் அறிந்த மிகச்சிறந்த நகைச்சுவையாளர்கள். ‘பாபிலோன் லாட்டரி’யும், ‘விசாரணை’யும் முதலில் இருந்து இறுதி வரை மிகச் சிறந்த மகிழ்ச்சி அளிக்கும் தருணங்களை உடையவை.
மாக்ஸ் பிராட் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த நாவலில் கேவுக்கு நடைபெறும் விஷயங்களை வாசிக்கையில் காஃப்கா தரையில் குப்புற விழுந்து சிரித்தானாம். இருப்பினும் இந்த நாவல் உங்களுக்கு ஒரு துன்பியல் ஆவணமாகக் காட்சியளிக்கிறது.
“டான் க்விஹாட்டே” நாவலுக்கான எதிர் வினையையும் இங்கு நாம் நினைவு கூர்தல் நலம் பயக்கும் : அந்த நாவலின் முதல் வாசகர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்; கற்பனாவாத எழுத்தாளர்கள் அந்த நாவலை வாசிக்கும் பொழுது அழுது புலம்பினார்கள்; ஆனால் இலக்கண ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, முக்கியமாக டான் தியேகோ கிளமென்சின் போன்றவர்கள் செர்வான்ட்டிசின் எழுத்தில் இலக்கணப் பிழையற்ற ஒரு வாக்கியத்தைக் காணும் போதெல்லாம் அகமகிழ்ந்தார்கள்.
ஆனால் சமகாலத்தின் நவீன மாந்தர்கள் புத்தகத்தை வாசிக்கும் போது அழுவதும் இல்லை சிரிப்பதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் அழுவதையும் சிரிப்பதையும் திரையரங்கில் ஒரு திரைப்படத்தைக் காணும் பொழுது செய்கிறார்கள். மேலும் அவர்கள் செய்வதுதான் சரியானதாகும்.
8. எழுத்தாளர்
அவள் மிகவும் புத்திசாலி. அவள் காற்றின் ஓட்டப்பந்தயத்தைக் காண்கிறாள். மேலும் ஈக்களின் இருமலைக் கேட்கிறாள்.
– கிரிம் சகோதரர்கள் “புத்திசாலி எல்சா”
எழுத்தாளர்களுடன் நேரடிப் பழக்கம் ஆபத்தை விளைவிக்கும் “ஒரு கவிஞன் தான் உலகிலேயே மிகக் கவித்துவமற்ற ஒரு மனிதன்” என்று கீட்ஸ் எழுதுகிறான். ஒரு தொலைவில் இருந்து நீங்கள் பாராட்டும் உங்கள் அபிமான எழுத்தாளரின் அருகில் சென்றால் அவரை வாசிப்பதை நீங்கள் அறவே நிறுத்தி விடக்கூடும். இது மிக இயல்பாகவே நடக்கக் கூடிய ஒன்றுதான். அவர்களது படைப்பைப் பொறுத்தவரையில் இப்பொழுது சமகாலத்தில் நடக்கக் கூடியதும் மிகவும் விவேகத்திற்குரிய விஷயமானதுமான நடைமுறை என்னவெனில் அவர்களுடைய மிகச் சிறந்த மற்றும் உலகறிந்த நல்ல படைப்புகளை ஒரே வேளையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் புத்தகங்களாக வெளியிடுவதுதான். மிக மோசமான புத்தகங்களை அரசாங்கமே உயர் பதிப்பாகத் தோலால் செய்யப்பட்ட மேல் அட்டையுடன் சித்திரங்களுடன் ஏழைகள் அவற்றை வாங்கிப் படிக்க நினைக்கக் கூட இயலாத தொலைவில் வைத்து அதே சமயத்தில் பெரும்பான்மையான கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான்.
9. நகைச்சுவை உணர்வு
இடமும் காலமும் ஞானிகள் சொல்வது போல, இருக்கக்கூடும் இல்லாத வஸ்துக்களாக. ஒரு நாள் மட்டும் வாழும் ஈ ஒன்று, நம்மைப் போலவே ஒரு நெடிய வாழ்வை வாழ்ந்தது இன்று.
— ட்டீ. யெஸ். எலியட் “பாடல்”
நகைச்சுவை உணர்வு என்பது எதார்த்த உணர்வு அதன் உச்ச நிலையை அடைவதாகும். மிகுந்த நகைச்சுவை உணர்வை உடைய இலக்கியங்கள் என்று வரையறுக்கப்படுவதைத் தவிர மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் சிரிப்பிற்கும் நகைச்சுவைக்கும் உரியதாக விளங்குகின்றன. போர்க்களத்தில் நாம் செய்வது கேள்விக்குரியதாக இருப்பதல்ல, ஏனெனில் போரில் மனிதன் கேலிக்குரிய செய்கைகளைச் செய்வதை நிறுத்தி விடுகிறான். எடுவர்டோ டாரஸ் சொன்னது போல “சிருஷ்டிலேயே மனிதன் மிகவும் முட்டாள்தனமான படைப்பு என்று வரையறுக்கப்படுவது அவனுக்குத் திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை. இருப்பதிலேயே அவன் மட்டும்தான் மிக அபத்தமான பிராணி எனும் அரிய பெயரை அவன் தனக்குத் தானே அளித்துக் கொள்கிறான்”.
பையா, அந்த ஈக்களை விரட்டி விடு
……. சிசெரோ, ”சொற்பொழிவுகள்”
10. அச்சுப் பிழைகளின் இறுதிப் பட்டியல்
47 ஆம் பக்கத்தில் ஏதோ ஒரு பத்தியில் ஒரு காற்புள்ளி விடுபட்டிருக்கிறது. அச்சுக் கோர்ப்பவர் சுயநினைவோடோ அல்லது மறதியின் ஊடோ அதை அந்தக் குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட பொழுதில் அச்சு எந்திரத்தில் சேர்க்கத் தவறி இருக்கிறார். இதனால் உலகிற்கு ஏதோ ஒரு உற்பாதம் நிகழ்ந்தால் அதற்கு அவரே முழுப் பொறுப்பாகிறார்.
அறியப்படாத காரணங்களுக்காகப் புத்தகத்தின் இறுதியில் ஸ்பானிய மொழியில் அச்சடிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பக்கம் கடைசியாக வருவதைத் தவிர புத்தகம் 152 ஆம் பக்கத்தில் முடிவடைகிறது. ஆனால் அதே சமயத்தில் புத்தகம் பின்னோக்கிய இயக்கத்தில், வாசகன் இந்தப் புள்ளியை அடைய எடுத்துக்கொண்ட உபயோகமற்ற பகுத்தறிவுக்கு எதிரான பயணத்தைப் போல, இதே பக்கத்தில் மீண்டும் ஒரு முறை துவங்க இயலாது என்பதை எவரும் சொல்ல இயலாது.
கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.








Leave a Reply