1
நைந்தாடையுடுத்திய கொலையுண்ட அம்மனிடம் வேண்டினேன்.
புறக்கணிப்பும் தரித்திரியமும் பார்க்காத மலர்கள் பூமியில் இருக்கக் கூடும் என்றேன்.
மனித ரேகை படிந்திடாத எவரையும் கைவிடாத பொம்மைகள் இருக்கக்கூடும்.
பாட்டியின் குரலொலிக் கதைகள் காப்பாற்றும் குழந்தைகளுக்கு
சுதைபொக்கு மண்ணில் பொட்டு வைத்து பூக்களாக மாறும் கனவு வேண்டும்.
பொம்மை பிடித்து உறங்கும் பித்தம் வழிந்த நித்திரையில்
மாயங்களை நொடிகளாக்கும் தேவதைகள் துணையிருக்க வேண்டும்,
அப்பா, வெயிலில் சுருண்டு உன் விரல் எழுதிய கடிதத்தின் நீலத்தில் மூழ்கிவிட்டேன்.
அரளிப்பூக்கள் பார்த்த சாவின் வேகத்தை நெடுஞ்சாலைப் பயணத்தில் படித்துவிட்டாயா?
நகரும் பாதங்களின் கூடவே வரும் அணங்குருக்களிடம் பேசினாயா?
கருங்குருவியும், காகமும் பறக்காத ஆகாயம் கண்டு வேப்பம்பழமாகி நின்றழாதே!
தானே புறண்டழுகிற மரங்களின் காத்து பொல்லாப்புகளை வீழ்த்தி வரும்.
சிறகுகள் கிழிபட்டு அருவமல்லாது தனிமை குவிகிற பாதை கடந்து எப்போது வருவாய்?
வலியைத் துணியாகச்சுற்றிய பச்சைப் பட்டுப்பாதைக்குப் பலிகொடுத்த வனகன்னியர்
விருட்சங்களின் கோபத்தைச் சொல்ல பறவைகளுடன் காத்திருப்பார்கள்.
சிரசுகள் ஊர்ந்து வரும் நீர்மை
கைவிட்ட நம்நிலத்தில் அரசங்கன்றுகள் காத்திருக்கும் என்று சொல்லுங்கள்.
கடக்கும் சாலைகளின் வெற்றிடத்தில் திசை சூழ் அமணர் சீவரங்களை கிழிப்பது நீதமா
அமணர் ஏந்திய யாக்கைப் பேழையில் சொற்களின் பிறப்பை எடுத்துவாருங்கள்.
காடோ செடியாய் காற்றோடு பேசித்திரியும் புல்லூத்தில் உறங்கும் பாவைகளே
உன்னைச்சுற்றியிருக்கும். யாசகத்தில் உடைபடும் பொம்மைகள்
கசியும் மோனத்தை நீ தொடர முடியாது
கனவு வழித்தடத்தில் அவைகளின் சுவாதீன உறக்கம்
வழி உடைக்கப்பட்டவைகளைத் தட்டி எடுத்து வருவேன்.
கண்ணீரை விதைகளாகப் பெற்ற அய்யனே
உனக்காக அழாப்பொம்மையினைச் சித்திரமாக்கி வைத்துள்ளேன்.
இற்று நொறுங்கும் விம்மல்கள், என்னைத் தழுவிக்கொள்ளும் விம்மல்கள்,
மண்கூரையில் வீசும் தின்னைக்காற்று தீரா
துயர் வீசிய காற்றில் ஓடி ஓடி மறையும் ஊர்கள்.
உறைந்த கோட்டைக்குள் ஒழுகும் திட்டங்களும் உத்தரவுகளும்
கலைஞனின் சிருஷ்டி வாசலில் மண்டியிட்டு விலகட்டும்.
கனவும் நினைவும் பித்தவெடிப்பேறிய கால்களாய் வரும் பலநூறு தந்தையர்களுக்கு
அடக்கிய அழுகையின், முத்தங்களின் ரேகையில் சாரம் சுமக்க
உறவுகளின் உப்பைப் பதுக்கி வைத்துள்ளேன் கண்மூடி.
2
அன்று மழை பெய்திருக்கவில்லை.
மர உடம்புகளில் அணில் தாவி ஓடவில்லை.
பறவைகளும், மேகங்களும் அந்தரத்தை மாயம் செய்யவில்லை.
நாய்க்குட்டிகள் வண்ணத்துப்பூச்சியுடன் விளையாடவில்லை.
பன்றிக்குட்டிகள் கூட்டாய் இசையொலிகளால் மடுவில் பாலருந்தவில்லை.
கழுதைகள் தன்நிலத்தின் தான்தோன்றிப்புழுதியைத் தழுவவில்லை.
தும்பிகளும், பொன்வண்டுகளும் குழந்தைகளின் கைகளுள் காதல் கொள்ளவில்லை.
ஈரம் தேடி மனிதவீடு நுழைந்த தவளைக்கு முகாந்திரமில்லை.
கூடிக்கரையும் காகங்களுக்கு பெண்ணிட்ட அன்னமில்லை.
கலவி கொள்ள ஏங்கிப்பாடும் பூனைக்கு காமப்பூ கடித்துவரும் துணையில்லை.
தந்திக்கம்பிகளில் கூட்டொலி பயணம் பாடும் சிட்டுக்குருவிகளில்லை.
பங்குனிக் கொடைகளில் சேந்தாண்டி வேசம் போட இளம்பருவத்துப் பிள்ளைகளில்லை.
குழந்தைமையைச் சுற்றித்தூங்க வரும் குடைராட்டினங்கள் இல்லை.
இழுப்பை எண்ணெய் வீசும் பித்தமேறிய இருட்டு நாய்கள்
ஊளையின் கோடுகள் ஒவ்வொரு ஊரின் மரணத்திற்குப்பின்னும் அழியவில்லை.
நாயை வெல்லும் மனிதர்கள் பூமியில் பிறக்கவேயில்லை.
நாயை வளர்த்தார்கள் அதனால் அது மனிதர்களை பகைக்கவேயில்லை.
அவை மீன்களைப்போல இருந்தன.
மனிதர்கள் கருவாட்டு மண்டையர்களாய் தோற்று
அதன் வேதனை நாய்களை அண்டியது.
கதை சொல்லி உறங்கவைத்த கனவின் திண்ணைகளில்லை.
கல்லம்மி கொத்துறது அம்மி கொத்துறது, அம்மி கொத்துறது
அழைக்கும் மருதாணி பிடித்த விரல்களில் சுடரிகளில்லை.
வாழும் தற்கணத்தில் மறைந்தலைந்த விந்தைகளின் நிழல்களை முதுகில் கட்டி இழுத்து
வந்த கோமாளி முகமிருந்தது.
அது அனாதைமை இறகுபிடித்த இமைக்கூட்டத்தை கோமாளிகளாக்கியது.
தற்கணத்தை உயிர்ப்பிக்கும் நாடகத்தில் தொலைந்தவர்கள் மறுபிறப்பெடுத்தார்கள்.
நொடிக்கு நொடி உருமாறும் உணர்வெழுச்சிமை ஒப்பணை வனத்தில் மறைந்துலவும்.
3
அநேகராயிருக்கிறபடியாள் அவள் பெயர் கரும்புலியாத்தா.
கடல்கிராம மீனவப்பெண்கள் குலவையிட
வளைகளில் நெளியும் மீனின் வாசம் சுமந்தவள் நான்.
ஊர்க் காற்றில் விந்தை திறக்கும் பறவைகளின் சிறகு அவள்
அடிக்கடலில் சமவெளி நதிகளில் இருக்கும் உயிர்களில் இருப்போரை நீங்கள்
காணப்போவதில்லை.
கபாடபுரத்தின் பலிபீடத்தில் வைத்த அவன் சிரசு எல்லோருடன் உரையாடுகிறது.
பித்தன் வெளியேறிப்போகிறான்.
அவளை எவரும் பார்த்திடாத போதும் அவளோடு எல்லோரும் அலைகிறார்கள்.
யார் யாரென அடைபடாத மௌனப் புதிரில் எல்லோருமாய் அலைகிறார்கள்.
பஞ்ச காலத்தில் மூலி அலங்காரி என்றார்கள், அல்லி அரசாணி என்றார்கள்.
யாருக்கும் தெரியாத இராவணக் குமாரெத்தி கடல்கன்னி வாமக்கா என்றார்கள்.
இரத்தம் கசிய கொங்கைகளை அறுத்து வைத்த தோல்சீலை கலகத்தின்
மடக்கு ஓலைக்கன்னியவள்.
கைரேகைத் தண்டனை மறுத்து துப்பாக்கி ரணங்கள் துளைத்த நாவின் தாகத்திற்கு
நீரிட்ட மாயக்காளவள்.
தன் காம வாசல் திறக்க ஓடைகள் புலம்ப கொலைச் சிந்து பாடும் தேவதை புகுந்த
பேய்மகளவள்.
மறைத்த கதையை நினைவால் திறக்க வந்த மருள் நுழைந்து துடித்தாடும் தாதியவள்.
உரிமை மறுத்த இனச்சடங்கில் பலிகேட்கும் கருப்பிறங்கிய கொலைத்தெய்வமவள்.
வதையுறுவர் வதைப்போரை மறுத்த வனாந்திரம் பூசிய விழிக்கடவில் காத்திருப்பவளவள்.
நிறங்களும் எளியோரின் பிறசெயல் அப்படியவர்கள் விரல்சுட்டுவதற்குள் தப்பித்தோடியவள்.
எளியோரின் விரல்களுக்கிடையில் நழுவும் எழுதாமை நூல்கள் எவை
எழுதப்படியும் பேயின் சுரைவிதைப் பற்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு சுரைவிதைப்பல்லும் சுரை மாரியம்மனாக இருக்கிறாள்.
தொற்றுகளை விடுவித்து முத்தாய் உதிர்ந்து
எளியோரின் மேனிதொட்டு எழுதியவற்றை பார்க்காமல் வாசிக்கிறாள்.
சமூகவெறுமை படிக்க நகரங்களில் தனித்தலையும்
மனிதக்கண்வெளிதாண்டிய வனப்பறவையில் எவரும் பார்த்திராத
மாரியின் கண் மேனியெல்லாம் ஓடியதை கண்ணீருக்குள் படிந்த உப்பு அவள்.
பெரியவர் மறுத்த குழந்தைமை காப்பாற்றும் அதிகாரமுதிர்ந்த மௌனமவள்.
மனித ஒளியுள் அன்பின் ஈரத்தை விட்டுச்செல்லும் உயிரின் இருளவள்.
ஒருபோதும் திரும்பாத அவள் பசியை மறுத்த புத்தனின் திசைபார்த்து நின்ற ஞானத்தின் விருட்சமவள்.
நாங்கள் அநேகராயிருக்கிறபடியாள் அவள் பெயர் கரும்புலியாத்தா.
பயண வெளியில் வாழ்வின் கனவைப் பார்த்த பொம்மைகள் காத்திருக்கும்.
4
வறுமையும், வாதையும் தொற்றெனப் பின் துரத்த
பசியால் முளைத்தெழுந்த கூரையின் கோபுரம்
மொழுகிய மண்திண்ணையில் சாணியின் வாசனை
கொம்பு முட்டி உறவு நிறுத்தி உணவு கேட்கும் மடுக்கள் வற்றிய பசுக்கள்
காளைகளை அழைத்து வந்தது வறண்ட தம் நாவுகளில் வனப்புல்லின் நினைவுகள் எழ
பசியைக் கடக்க நாக்குகளின் சாவிகொண்டு அழுத குழந்தையின் உயிர் கேஸம்
நக்கிப்பேச
கண்ணீரில் முளை விட்ட விந்தைச் சிரிப்பு.
மீட்பரின் விரல்கள் தோன்றி பசிக்குப் பலியிடக்
காத்திருந்த ஒரு துண்டு ரொட்டியைத் தரும் குழந்தைமை.
மூடப்பட்ட பட்டணத்து வீதிகளில் அலைவுறும் பெற்றோர்
அலைக்கழிக்கப்படும் வாழ்வில் கவிழ்ந்து ஊழெடுத்து
அனாதைமை வெளியை உயிர்பிக்கக் கிளம்பிய
ஓடிக்கொண்டிருக்கும் பித்தம் வெடித்த கால்கள்
தரித்திரியங்களை ஆடையாகச்சுற்றி வாழவந்த கூட்டத்தை
ஆளுயர லத்தி பிடித்த கைகள் விரட்டுகிறது. சிதறியோடும் பாதைகளைப் பிடித்த
கூட்டம் மரணத்தைக் குடையாக ஏந்திய மக்கள்
பேசும் மொழி தொலைத்து ஊர்துறந்து பசியை பாஷையாகப் பெற்றவர்கள் பெருகும் நாளில்
அரண் காக்கும் கதவுகள் திறந்து வந்த அரசனின் சலித்த வாக்குகள்.
உதிர் சுண்ணாம்பாய் உணர்வைக்கொள்கிறது.
சொரணையும் கோபமும் எதிர்ப்பும் களவாடப்பட்டுவிட்ட நாளில்
துரத்தும் முத்திரையிடப்பட்ட சொற்கள்
முத்திரையிடப்பட்ட வாழ்கை
முத்திரையிடப்பட்ட கூட்டம்
முத்திரையிடப்பட்ட மரியாதை
முத்திரையிடப்பட்ட அக்கறை.
5
பஞ்சகால நினைவுக்கதவுகள் உடைத்து
பரதேசம் போன பாதைகள் கிளைபிரிய
தனித்தனி மரமாகி பழுப்பு இலைகள் தூக்கி
களத்து மோடுகளில் அனாதைக் கோமாளியாகி
இச்சிக்காய், காரக்காய் தழுவிய பால்ய நாவுகள்
பாடிச்சொன்ன குலவை நிலத்தில் விளக்குகள் நடமாட
மூலிகைச்சாறில் வேடமிட்ட விவசாயிகளின் அகங்கையில்
ஆடியாடி கனவுகொள்ளும் மந்திரவயல்கள்
வைக்கோல் சுற்றிய கிரீடத்தில் பதுங்கிய சாலிநெல்
ஒற்றைத்தானியமேந்திய விதூஷக நடிகர்கள்
கண்ணீர்த்துளிகளை வார்த்தைகளாய்ப் பரிமாறிய வேளை
பாங்கிணறு திறந்து வந்த துயரம் வீசிய தொன்மத்தின் பிள்ளைகள்
வற்றிய குளக்கரையில் புலம்பிய பூச்சிகள் தொட்டு
அதிகாரத்தின் உரையாடலைக் கூந்தலில் சுற்றி
கசியும் இமைக்கூட்டத்திடம் சமர்ப்பித்த களத்தில்
கதிரென இலையென தான்யமென வீழ்ந்து நடிக்கும் தீயுடலிகளின்
வியர்வைத் தெறிப்பில் கிளம்பிய அனாதைச் சிறுவர்களின் ஒப்பனை முகங்கள்
குதித்து நடித்த பறவை நிலையின் சிறகுகள்
சாம்பல் பூசிய மேனியில் மறையும் உழுதநிலம்
துக்கத்தை ஆடையாகப் போர்த்திய பாங்கிணற்றுப்பெண்
பறவைகள் புலம்ப அறுத்துத்தந்த கூந்தலைப்பிடித்த பயணம்
பார்வையாளர்கள் உயிரினங்களாகி மனித நிலை கடக்க
உடலின் எல்லைகள் தாண்டிய பாத்திரங்கள்
அர்ப்பணிப்பின் நொடிகளைப் பெற்று
நடிப்பின் வாழ்வில் காயம், பயம், எதிர்பார்ப்பு, அவமானம்,
துறவுகளில் அலைவுறும் பசியின் கோபம் பிடித்து
வீழ்ச்சியைப் பாடும் சங்கீதமையின் நொடிகளை வாங்கிய இருளுக்குள்
அதிரும் கரவொலிகள் பேய்மைகொண்ட நாடகவாசல் திறக்கும்.
6
தந்தைமை சுமந்த கமலை மாடுகள் தந்த நீரே
எட்டிப்பார்த்த வெற்றுக்கிணற்றில்
பெண்மை கொண்ட தெலங்கல்லில் ஊர்ந்த எறும்புகள்
நினைவில் பதுங்கிய காளைகளை அழைக்க
புல் சுமந்து வந்த காலச்சுருக்கங்கொண்ட பூட்டிகள்
வெற்றிலை எச்சிலொழுகப்பாடி வேட்கையுறவைத்து எளிய சொற்களில்
மீண்டெழுந்து வரும் பூர்வ ஞானம்
பனம்பாடலில் வேட்கைக்குக் காத்திருந்த மரிக்கூட்டம்
பலிக்களத்தில் மனிதக்காத்திருப்பைத் தலையாட்டிட
காத்திருக்கும் பங்குனி உத்திர சுடுவெயில்
சாராயம் காய்ச்சிய உறவுக்காரர்களின் பித்தநிலை நேசத்தில்
எழுந்த பைத்தியக் கொடுவாளுக்கு நொண்டிக்கால்களைப் பெற்று
கருப்பனுக்கும் காளிக்கும் பூசைப்பெட்டி சுமந்து
வறுமையில் மருளேறி புழுதியில் புரண்டெழுந்த
உடலின் அணங்கு நிலைக்குள் எழுந்த வாக்கு
கூகைகள் அடைகாத்த ஊரணியை.
நரிகள் ஊளையிட்டுக் காப்பாற்றி வைத்த கண்மாய்களை
முட்கள் சரிந்திறங்கிய கல்கிணறுகள்
பேய்மை விசும்பிய ஓடையின் கானல்நீர்
உடலில் இறக்கிய பிசாசுநீர்பிடித்து
சுடுவாக்கினை வாங்கிப்பிரியும் மௌனம்
அக்னி சட்டிகள் உலவி கூந்தல் விரியும் மூச்சு
மடங்கிய சுழல் பாதைகளில் குதித்தோடிய
நிறுவனமாகாத தெய்வத்தின் மடியில்
கதைகளை, வாக்கை, மீயொலிகளைக் கேட்டு
எரிசோறு மறைந்த ஆகாயத்திலிருந்து
உருவை மறைத்து இறங்கிவரும் துர்தெய்வங்களின்
கொடுஞ்சொல்லிற்குக் காத்திருக்கும் குற்றத்தை
ரேகையாகப்பெற்ற குலமிருகப்பறவையவர்கள்.
7
பறந்து கிழியும் மூடாக்கதவுகள்
பாலீத்தின் கூரைகளின் அன்பு முணகல்
வறண்ட காடுகளில் கால்நடைத் தடமெடுத்து
ஒத்தையடிப்பாதையில் எதிர்வந்த நரிவால் வணங்கி
பண்பாட்டைச் சுமையாக்கி வந்த நாடோடிகள்
புறநகர் இரயில்வே பிளாட்பார அனாதைமை துடைத்து
வருங்கனாவை தொட்டிலில் உறங்கவைத்து
கணங்களை முன்னுணரும் குழந்தையின் சிரிப்பு
உள்நாட்டு அகதிப்பாடகனின் உதவியில்
துருவரி ஏறிய யுத்தத்தின் கறைபடியா வாள்தூக்கி
வீரனாய், தளபதியாய், மன்னனாய்
யாசகம் செய்த பிளாட்பாரக்கால்களில்
கடகடக்கும் இரயிலின் வெற்று வெளியை
தொலையாத ஊரின் வாழ்வை
சிரிப்பொழுகும் அன்பில் நிறுத்தி
கண்ட பயணியின் கண்வெளிக்குள் மறைய
தெலுங்கானா பழங்குடிக்கிழவி
மந்திரித்து உருட்டிய எலும்புத்தாயக்கட்டைகள்
இரயில்வரா இரவில் தண்டவாள பேரமைதியில்
மகுபா மதுவின் நினைவழைத்தது
அம்மணக்குழந்தைகளின் உப்பு விரிந்த
உடலுக்கு வாடா மலர் பூத்த கிழிந்த சேலை போர்த்தி
அலைவுரும் நகரத்து வெறுமையை விரட்டி
தன் பொக்கை வாய்க்குள்ளிருந்து
ஊதிய ஒற்றை இறகின் மிதத்தலில்
நவீன வாழ்வின் பெயர்தலை கிறுக்கிச்சென்றது.
8
காதலும் நினைவின் அன்பும் விலகிய நாளிலிருந்து
மனிதனுக்கு தாய்மையூட்ட வந்த காராம்பசுத்தடங்கள்
வசீகர ஞாபகவாசனை பரப்பும் வைக்கோலும், பால்கவுச்சும்
கொம்புகளுரசி மணி குலுக்கியழைத்த காளைகள்
தேடும் வாடிய பயிரின் வெம்மை கண்டு
மூச்சுப்பதித்து விவசாயிகளின் கரம்பிடித்து
வால்சுற்றிக் கூவிய மாடுகள்.
நிலம் ஏங்கிய தவசவொளியைக் காணவந்த
மொழிகளின் கிளி
நீள் கூந்தல் விரித்து குலவையிட்டக் கன்னிமார்கள்.
வட்டக்கிணற்றைச் சுற்றிய வேளை
வனக்குரலில் பாடிய பறவைகள்
காற்றுடன் மோதிய கதிர்களின் நடனத்தைத் தேடிய பூட்டிகள்
வயல்கரங்களில் கொண்டு வந்த தானியங்களை
குலவையால் சிந்திய கதிர்களை
அறுவடையில் பிறக்க வந்த புழுதிக்கால்கள்
நினைவைத் திறந்து வரப்புகளில் கரம்கோர்த்த சடங்கியல் நடை
எல்லோரது கனவு நிலத்தில் காத்திருக்கும் குதிர்களின் முணகல்
காடு வயலாய் அலைந்து வந்தக் கதைக் கோமாளி
கேட்ட கதைகளை விசிறியில் விரித்து பாடிச்சொல்ல
இமையில் நனைத்த விதைகள் வெற்று மேடையில் முழைக்க திரைச்சீலையில் விரிந்து
பிறக்கும் நாடகக்காட்சி
பார்ப்போர் பங்கேற்கக் காத்திருக்கும் இரவு.
9
நெடுஞ்சாலை இரயில் சாலை கால் போனபாதை
உறவு நிழலும் அருகாமையும் விலகிய நாட்கள்
நெருக்கடியும், வெறுப்பும் வெயிலாய் அனலாகி
கானகம் புகுந்து கண்ட உரு
துர்கனவென கடந்து
புலிவரி நீளும்.
வனத்தில் நீர்த்தடம் தேடிட
தவிச்ச வாய் தழுவ நீர்மை சுமந்த தேவதை வருவாளா?
கானகத்தைச் சுமந்த உயிர்களின் அறம்தாண்டிய விந்தை
பாறைகளில் பதித்த முன்னோர் கனவுச்சித்திரம் பெயர்வில் துக்கம் வழிய மௌனம்
காத்த பட்சிகள் கடப்போரின் பாதங்களில் வன யக்ஷரியின் ஒட்டிக்கொண்ட அன்பு.
மனிதர்கள் துரோகித்த காடுகளின் விம்மல்
கேட்டு நிலமெங்கும் விதையூன்றும் கதைக்காதுடைய குழந்தைகள்
கிளம்பிய திசையெங்கும் வாழ்வின் கழுமுற்களால் விலகும் மரணம்.
கால்வழிப்பயணத்தில் நாடோடி உதிரம் புகுந்த உடலுடன் ஓடும் வாழ்வு
நகரத்தின் உறைந்த கண்களுக்குள் பதுங்கிநிமிரும்
வீசிய வறுமைப்புயலில் மறந்துகடக்கும் தேசாந்திர இறகின்
பெருகும் அனாதைமைக்குள்
எளியோரைக்கைவிட்ட நகரம்.
கூடாரங்களை முதுகுகளில் சுமந்து உறங்கும் கழைக்கூத்தின் அந்தர நாட்கள்.
முதுகுகளில் சுருண்டிருக்கும் பண்பாட்டுத்தாதிகள் தலைமுறை நரம்பாயினர்
உடலால் வதங்கி இருப்பின் கலையை அகல்வி ஞானத்தால் திறந்து
கலியுக இராமனும் லஷ்மணனும் அந்தர வியர்வையில் கேட்ட யாசகம்
காவு கேட்ட முள்படுக்கையின் உடலுக்குள் எட்டிப்பார்த்த கொம்பு மாடன்
மரங்கள் திருடப்பட்ட ரயில் சாலையில் விதைகளுடன் ஆலமர விருட்சிகள்
சயாம் ரயிலிலிருந்து பொம்மைகளோடு இறங்கி வந்த முன்னோர்கள்
வனாந்திரங்களில் கூட்டாய் வழிதப்பிப்போனதை அழைத்து வருவார்கள்.
குருதியில் தாவி வந்த நினைவுப்பாதையில் எழுந்தழைக்கும் பனைமரங்கள்.
10
சித்திரா பௌர்ணமி இரவு வேப்பிலைகளின் உதிரோசையில்
குழந்தைப் பாதங்களோடு மைனாக்குருவியின் மஞ்சள் வசீகரம் திறந்து
ஓடி வரும் அம்மாவிற்கு
மூல உதிரம்பட்ட அப்பாவின் கந்தல் வேட்டித்துணிகொண்டு
கரையேறிய துணிமலர்களை வைத்திருக்கிறேன்.
பயத்தின் வாலிப வேகம் கொண்ட கதவுகள்
என்னைத் தாழிட்டுக்கொள்ளும் போது
இருப்பை நிறுவாத; சகோதரியின் பலஹீன ஹிருதயங்கொண்டு
என்னைத்திறந்து நோய்மையின் தூய்மைகொண்டு முத்தமிடுவாள்.
பயத்தால் துடியேறி பைத்தியமடைகிற என் கலை நிலத்தில்
இருளை மொழியாக்கும் ஒளிக்குப்பின்னே மறைந்திருப்பாள்
வியர்வை பூத்து பற்றுதல் தேடிய என் கால்களை
சகோதரனின் அணங்குப்பிடிக்குள் விட்டுப்போனாள்.
அம்மா வளர்த்த பித்தமலர்களின் மொட்டுக்கள்
எங்களுக்குள் மறைந்திருக்கிறது.
ஏமாறக்காத்திருக்கும் கர்ணனின் இதிகாச விரல்களைப்பெற்று
உழைப்பில் அடிமையுறும் தன் நேச மகனின் உருவில்
தன்னை முன்னிறுத்தாத கணத்தில் திரும்பவருகிறாள்.
குடும்பங்களின் முடிவுறாச் சொப்பனங்களைக் கடந்து
எளியோரின் பாதைகளில் நனைந்த தீபங்களுக்குச் சுடரிட்டு
பெண்மையுறும் அனாதைமையின் ரேகைகளை ஆடையாகப்போர்த்தி
திரும்பாமல் திரும்பியலையும் அண்ணனின் இமைநீர்க்குமிழுக்குள்
பேத்தி உருவில் காத்திருப்பாள்.
பிள்ளைகளின் பால்ய சித்திரங்களுக்குள் விளையாட்டின் மாயத்திற்குள்
உடையாத பலூன்களோடும் நோயுடலில் ஊர்ந்த எலும்புகளோடும்
நிராதரவைக் குடையாகப் பிடித்த அக்காவின் விரல்கள் பிடித்து வருவாள்.
பொருளீட்டின் கதவுகள் அடைபட்ட பூட்டுகள் தட்டி இளைப்பாறுதல் தேடி
“அம்மாவின் புத்திரர்கள்” எனும் உதிரப்பாதையில் நிற்கும் மகனைக் கூவி
அசையும் நிழல்களில் நின்று மரக்கன்றைக் கொடுத்துப்போவாள்
அம்மாவின் ஆஸ்துமா மூச்சொலியில் பிறக்கும் கலையின் நொடிகளை
புழுதியுடை உடுத்திய நடிகர்களின் கரம்கோர்த்து நடிக்கும் இருளில் விட்டுச்செல்கிறேன்.
பார்வையாளரெனும் உயிரினங்களுக்கு நடுவே திறந்து மூடும் விரல்களுக்குள்ளே
நமக்கான விந்தையைப் பகிர்ந்தளிக்க
தனிமையின் திறந்தவெளி காட்டி உதிரும் வேப்பிலைகளை
அம்மாவின் அப்பாவின் பாதங்கொண்டு சேகரிக்கும் அப்பாவின் அக்கா.
Art : Ireland’s Great Hunger Museum








Leave a Reply