உலகளாவிய சுயசரிதை நாவல்களைத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது போய்ச்சேர்ந்த இடம் கறுப்பு இலக்கியம். அதில் எழுதப்பட்டிருந்தவை ஒருவித பிரமிப்பை உண்டாக்கின. வாழ்க்கையை அவர்கள் பார்த்த விதம் அலாதியானதாக இருந்தது. அமெரிக்காவில் 1950களில் நடைபெற்ற சிவில் உரிமைப் போராட்டத்திற்குப் பிறகு அவர்களின் இலக்கியங்கள் சர்வதேசக் கவனத்திற்கு உள்ளாயின. தொண்ணூறுகளில் அடுத்தடுத்து முக்கியமான விருதுகளைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அரசியல், கலை இலக்கியம், R&B, தொழில், மாடலிங், ஊடகப் பங்கேற்பு முதலியவற்றில் நுழைந்த புதியவர்கள் அந்தந்தத் துறைகளில் இன்று அசாத்தியச் சாதனைகளைச் செய்கிறார்கள். பூர்விக நேசிப்பில் இருந்து விலகிவிடாமல் தங்கள் மீதான உலகத்தின் பார்வையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தமிழில் எழுத வேண்டும் என்றதன் விளைவே இந்தத் தொடர்.
பொதுவாக, கறுப்பு இலக்கியம் என்றாலே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஆக்கங்கள் மட்டுமே என்பதாக அறியப்பட்டிருக்கிறது. அது கறுப்பு இலக்கியத்தின் ஒரு பகுதி மட்டுமே; முழுமையல்ல. ஏறக்குறைய 190 நாடுகளில் சிறிதும் பெரிதுமான எண்ணிக்கையில் கறுப்பர்கள் வாழ்கிறார். அவர்கள் அனைவருக்கும் தொன்மையான மரபும் கலை இலக்கியங்களும் இருக்கின்றன. அவற்றை இந்தத் தொடர் விரிவாகப் பேசவிருக்கிறது.
கறுப்பர்களின் இலக்கியச் செயல்பாடுகள் பதினேழாம் நூற்றாண்டு முதல் அறியப்பட்டாலும் அவற்றிற்கு முன்பாக அவர்களிடம் பிற இனங்களில் இருந்ததைப் போலவே செழுமையான வாய்மொழி இலக்கியங்கள் உண்டு. தொடக்கத்தில் எழுதப்பட்ட கறுப்பு இலக்கிய வரலாறுகள் வாய்மொழி இலக்கியங்களைத் தவிர்த்துவிட்டே எழுதப்பட்டன. அதைக் குறைபாடு உடையதாகச் சொன்ன வரலாற்றாளர்கள் வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கிய வரலாற்றை எழுதி, அதில் செவ்வியல் தனித்துவமும் அடர்த்தியை உடையதுமான தொடர்ச்சியைக் காட்டினர்.
இப்படியான மாற்றம் கறுப்பு இலக்கியத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே பிற இனங்களின் இலக்கியங்களிலும் நிகழ்ந்தது. அச்சு வரவுக்குப் பிறகு அதன் உதவியோடு இலக்கியச் செயல்பாட்டில் பங்கெடுத்த மொத்த இனமும் அதற்கு முன்பான தங்களுடைய எழுதப்படாத வாய்மொழி இலக்கியங்களையும் இணைத்து தமது இருப்பின் வரலாற்றை நீட்டித்துக் கொண்டன. இதைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலக இலக்கியத்தில் நிகழ்ந்த பொதுமையான அம்சம் எனலாம். இதனூடாக வெவ்வேறு இனங்களின் இலக்கியங்களில் இருந்த தனித்துவமான குரல்கள், தம்முடைய நோக்கம் சார்ந்து ஒத்துப் போகும் குரல்களை இனம் கண்டு கொள்ளத் தொடங்கின. ஒரு பிராந்தியத்தின் வெள்ளை இலக்கியங்கள் வேறொரு பிராந்தியத்தின் வெள்ளை இலக்கியங்களை இனம் கண்டுகொண்டது போல கறுப்பு இலக்கியமும் தம்மை ஒத்ததான பிற பிராந்தியங்களின் இலக்கியங்களைக் கண்டு கொண்டது. இதற்குச் சான்றாக இந்தியாவில் எழுதப்பட்ட தலித் சுயசரிதைகளைச் சொல்ல முடியும்.
கறுப்பு இலக்கியங்கள் ஏனைய விளிம்புநிலை இலக்கியங்களை விடப் பெரும்பாலும் பரிசோதனை முயற்சிகளில் முந்திக் கொண்டவையாக உள்ளன. இப்போதும் அவற்றில் நிகழ்த்தப்படும் சோதனை முயற்சிகளைப் பிற பிராந்தியங்களின் இலக்கிய முயற்சிகளுக்கு முன்மாதிரியாகக் கொள்வதற்கு அதிக அளவில் சாத்தியங்கள் இருக்கின்றன. அந்தவகையில் கறுப்பினத்தவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டுக் கூறையும் விரிவாகப் பார்க்க இருக்கும் நிலையில் இதில் அவர்களின் வாய்மொழி இலக்கியம் பற்றிப் பேசலாம்.
வாய்மொழி இலக்கியம்
ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடம் வாய்மொழி இலக்கியம் பற்றிய பேச்சு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மாற்றுக் கருத்துகள் எழுந்தன. வாய்மொழி இலக்கியத்தின் தரம், உண்மைத்தன்மை ஆகியன வெள்ளையர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. கீழாகப் பார்க்கும் நிலை இருந்தது. ஆப்பிரிக்கர்களுக்கு என்று தனியான இலக்கிய வகைமை இருக்க முடியாது என்றெல்லாம் வெள்ளையர்கள் தரப்பில் பேசினர். வெள்ளையர்களில் இலக்கியத்தை நேர்மையாக அணுகியவர்களும் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரூத் ஃபின்னேகன் (Ruth Finnegan). கறுப்பர்களிடம் அவர்களின் வாய்மொழி இலக்கியங்களைச் சேகரித்து அதன் பாரம்பரியத் தொடர்ச்சியை உலகத்திற்கு அளித்தவர். கறுப்பர்கள் பக்கத்தில் இருந்து பேராசிரியர் ஹென்றி லூயிஸ் கேட்ஸ் ஜூனியர் (Henry Louis Gates Jr.) போன்றவர்கள் விமர்சனம் செய்தனர். இவர்கள் தமது விமர்சனங்களில் இலக்கியம் என்றாலேயே அது எழுத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எழுதப்படாததாகவும் இருக்கலாம். எழுத்து இல்லாமலேயே பாதுகாக்கப்பட்ட இலக்கியங்களும் உண்டு. ஆகவே, வாய்மொழியை இலக்கியமாக ஏற்கத் தயங்க வேண்டியதில்லை. தயக்கம் இருக்கிறதென்றால் எழுத்து இல்லாத சமூகங்களைச் சமூகமாக ஏற்காத மனநிலையின் வெளிப்பாடே அது என்றெல்லாம் பேசினர்.
அவர்களைத் தொடர்ந்து வாய்மொழி இலக்கியத்திற்கு ஆதரவாக இருந்தவர்களிடம் வாய்மொழி இலக்கியத்தின் தன்மையை எழுத்து இலக்கியத்தின் தன்மையால் அளவிட்டு நிராகரிப்பதில் நியாயமில்லை. எழுத்து இலக்கியம் இயம்பப்படுவது. வாய்மொழி நிகழ்த்தப்படுவது. எழுத்து தனிநிலையில் நிகழ்வது, வாய்மொழி சமூகப் பங்கேற்புடன் உருப்பெறுவது. இரண்டும் வேறுவேறானவை என்பதற்காக மறுக்காமல் வரலாற்றில் இரண்டுக்கும் அதற்குரிய இடத்தைத் தந்தாக வேண்டும் என்ற பேச்சு அழுத்தமாகவே வெளிப்பட்டது.
ஓலோடுமரே
கறுப்பர் வாய்மொழி இலக்கியத்தின் தனித்தன்மை ஓலோடுமரே (Olodumare) ஆகும். உருவமற்ற இது, மேற்கு ஆப்பிரிக்காவின் பிரபலமான யோருபா மதத்தின் பரம்பொருளாகும். இலக்கியத்தின் நாயகனை வழிநடத்தும் சக்தியாகவோ மையப்பொருளாகவோ செயல்படுவது அதனுடைய வேலையாகும். ஒருவகையில் அதை ஓர் உத்தியாகக் கொள்ளலாம். இந்த ஓலோடுமரே அங்கம் வகிப்பதான வாய்மொழி இலக்கியங்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் நிறைய உண்டு. சான்றாக, ‘மனிதனுக்குத் தலை கொடுத்த கதை’யைச் சொல்லலாம். முன்னொரு காலத்தில் மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஓலோடுமரே கூட இருந்தனர். அப்போது ஓலோடுமரே அவர்களைப் பார்த்து நீங்கள் பூமிக்குச் செல்லப் போகிறீர்கள். அவ்வாறு போகும்போது உங்களுக்கான தலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டும் எனக் கூறியது.
பூமிக்குப் போக வேண்டிய நாளும் வந்தது. மனிதர்கள் அனைவரும் வரிசையில் நின்றனர். அவர்களின் முன்பு அழகான தலைகள், சாதாரண தலைகள், எளிமையான தலைகள் என அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மனிதர்கள் அவரவருக்குத் தேவையான தலையை எடுத்துக் கொண்டு பூமிக்குப் போனார்கள். அழகிய தலையை எடுத்துக் கொண்டவர்கள் கஷ்டப்பட்டு வாழ வேண்டியதானது. சாதாரண தலையை எடுத்தவர்கள் பணக்காரர்களாக உயர்ந்து விட்டார்கள். இது அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கியது. இதுகுறித்து ஓலோடுமரேவிடம் விளக்கம் கேட்டபோது நான் தலையைத்தான் கொடுத்தேன். அதை வைத்து வாழ வேண்டிய வழிகளை நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நடத்தை உள்ளவன் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும் என்று பதில் சொன்னது என்பதாகக் கதை முடிகிறது. இந்தக் கதையின் அம்சங்கள் நுட்பமானவை. யாரும் போராடவில்லை. யாரும் யாராலும் ஏமாற்றப்படவில்லை. ஆனால் ஓலோடுமரே ஒரு நெறியை உருவாக்கி அளிக்கிறார். அந்த நெறியைப் பற்றிக் கொண்டு முன்னேறுங்கள் என்கிறார். அதேசமயம் அவர் போராடக் கூடாது என்றோ ஏமாற்றாதீர் என்றோ சொல்லவில்லை. இத்தகைய இலக்கியங்கள் கறுப்பர்களின் அடிமைக் காலத்தில் அவர்களுக்கு உந்துசக்தியை அளித்தன. இதுபோலவே டோகோன் (Dogon) மக்களின் விண்மீன் புராணங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் வாய்மொழியாக இருந்தவை. வெறுமனே சொல்லப்பட்டுக் கொண்டிருந்தவை மட்டுமல்ல. சடங்குகளாக, இசையாக, நடனமாக நிகழ்த்தப்பட்டவை. அதேபோல மாலி பேரரசைத் தோற்றுவித்த சன்டியாதா கெய்தா (Sundiata Keita) என்பவரின் வரலாற்றைப் பேசும் ‘சன்டியாதா காவியம்’ அரச அமைப்பை நியாயப்படுத்துதல், குல மரபை உறுதிப்படுத்துதல், சமூக ஒழுக்கத்தை நிலைநாட்டுதல் என்னும் நோக்கில் நீண்டகாலமாக வாய்மொழியாகவே இருந்து வந்திருக்கிறது. வலுவானவனை எளியவன் வெல்வதான கேலிப் பாடல்கள், கேலி நடிப்புகள் ஆகியன தீவிரமான இலக்கியத்தின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. இவற்றை இலக்கியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் ரூத் ஃபின்னேகன்.
ஆவணங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வரலாற்றை எழுதி, அதை உண்மையானவை என்று நம்பிய வெள்ளையர்கள், வாய்மொழி இலக்கியங்களை வரலாற்றுக்கான ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளாததில் வியப்பில்லை. கடந்த கால வரலாற்றை நினைவில் வைத்திருந்து எழுதுவதும் வரலாறே என்று கறுப்பர்களிடமிருந்து கருத்துகள் வெளிப்பட்டன. பெல்ஜியன் வரலாற்று ஆய்வாளரான ஜான் வன்சினா (Jan Vansina) என்பவரின் ‘Oral Tradition as History’ நூலை மையமாக வைத்து விவாதித்த ரூத் ஃபின்னேகன், எல்லா வாய்மொழியையும் வரலாற்றைக் கொண்டதாகச் சொல்ல இயலாதே தவிர, அதில் வரலாறே இல்லை என்று சொல்ல முடியாது என்றார். எழுத்தில் ‘வரலாற்று உண்மை’ இருக்கும் என்றால் வாய்மொழியில் ‘சமூக உண்மை’ இருக்கும். இரண்டும் வரலாற்றின் இருவேறு முகங்கள் என்றார். தனது ஆய்வின் பங்களிப்பாக, செயல்பாட்டின் நடவடிக்கைகளே வாய்மொழி இலக்கியம் என்று காத்திரமான வரையறுப்பைச் செய்து வாய்மொழி இலக்கியத்திற்கு மாற்று வரையறுப்பைத் தந்தார்.
ஆனான்சி கதைகள்
மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளான கானா, கரீபியன் பகுதிகளில் ஆனான்சி (Anansi) கதைகள் பிரபலமானவை. அடிமைகளாகத் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் இந்தக் கதைகள் புழக்கத்தில் இருந்தன. இவற்றில் ஆனான்சி தலைவனாக வருகிறான். தமிழில் ‘சிலந்தி மனிதன்’ என்று வைத்துக் கொள்ளலாம். வலிமை இல்லாத சிறிய மனிதனான அவன், தனது புத்திசாலித்தனத்தால் கடவுளையும் அரசனையும் ஏமாற்றுகிறான். சில கதைகளில் நீதியைச் சொல்பவனாகவும் தன்னிடமே அதைச் சோதித்துக் கொள்பவனாகவும் இருக்கிறான். இத்தகைய வாய்மொழிக் கதைகள் பின்னாளில் தொகுக்கப்பட்டு தெனாலிராமன் கதைகளைப் போல ஏராளமான பதிப்புகள் வந்திருக்கின்றன. சான்றாக, 1924இல் வெளியான மார்த்தா வாரன் பெக்வித் (Martha Warren Beckwith) என்பவரின் ஜமைக்கா ஆனான்சி கதைகளைச் (Jamaica Anansi Stories) சொல்லலாம். இந்த நூலில் இருந்து புரிதலுக்காக ஒரு கதையைப் பார்க்கலாம்.
ஆனான்சியிடம் ஞானம் நிரம்பிய கலசம் ஒன்று இருந்தது. அதை மறைத்து வைத்து தான் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை உருவானது. எனவே, யாருக்கும் தெரியாமல் உயர்ந்த மரத்தில் ஏறி மறைவாக வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக அந்தக் கலசத்தைத் தன் உடம்பில் முன்புறமாகக் கட்டிக் கொண்டு மரத்தில் ஏறினான். அவனால் ஏற முடியவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனான்சியின் மகன் முதுகில் கட்டிக் கொண்டால் தானே ஏற முடியும் என்று தந்தையிடம் சொன்னான். அப்போதுதான் ஆனான்சிக்குத் தெளிவு பிறந்தது. ஞானம் நிரம்பிய கலசம் கைவசம் இருந்தும் மரத்தில் ஏறுவதற்கு உரிய ஞானம் இல்லாமல் போய்விட்டதே என உணர்ந்தான் என்பது கதை. இதில் ஞானம் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது அனைவருக்கும் உரியது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கறுப்பர்களை அறிவற்றவர்களாகச் சொல்லிக் கொண்டிருந்த வெள்ளையர்களிடம் உரையாடலை நிகழ்த்திய கதை இது. இதுபோன்ற கதைகளை வெள்ளையர்கள் இலக்கியமில்லை என்றார்கள்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஆனான்சி கதைகளைப் போல அமெரிக்காவில் தந்திரக்கதைகள் (Trickster Stories) உள்ளன. Br’er Rabbit (Brother Rabbit), Tar Baby, High John the Conqueror, Signifying Monkey, John and Old Master முதலியவை அமெரிக்கக் கறுப்பர்களிடம் இருக்கும் கதைகளில் சில. சான்றாக, நரியும் முயலும் கதையைப் பார்க்கலாம். காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நரி, அங்கிருக்கும் முயலைப் பிடித்துச் சாப்பிடத் திட்டமிடுகிறது. அதற்காகப் பலவிதங்களில் முயற்சித்தும் முயலைப் பிடிக்க முடியவில்லை. எனவே, ஒரு மரத்திலிருந்து பிசின் எடுத்து மனிதனைப் போன்ற பொம்மை ஒன்றைச் செய்து முயல் வரும் வழியில் வைத்து விடுகிறது. அதை உண்மையான மனிதன் என நம்பிய முயல் அருகில் சென்று பேச்சு வளர்க்கிறது. பொம்மை பேசவில்லை. ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற முயல் பொம்மையின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடுகிறது. கை ஒட்டிக் கொள்கிறது. நரி வருவதற்குள் தப்பித்துப் போக முயற்சி செய்கிறது மறு கையும் மாட்டிக் கொள்கிறது. மகிழ்ச்சியோடு நரி முயலின் அருகே வருகிறது. அதைப் பார்த்த முயல் ‘என்னை நீ அடிக்கலாம், உதைக்கலாம், சமைத்துக் கூடத் தின்னலாம். ஆனால் அந்தப் பயங்கரமான முட்புதரில் மட்டும் எறிந்து விடாதே’ என்று கெஞ்சுகிறது. அதை நம்பிய நரி, முயலைக் கொடுமைப்படுத்த வேண்டும் என நினைத்து முட்புதரில் தூக்கி வீசுகிறது. புதருக்குள் விழுந்த முயல் எனது வீட்டுக்குள் எறிந்ததற்கு நன்றி என்று சொல்லிவிட்டுத் தப்பி விடுவதாகக் கதை முடிகிறது. வலியவர்களிடம் சூழ்ச்சி செய்துதான் தப்ப வேண்டும். வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற போராட்டத்தில் சூழ்ச்சியும் அறம்தான் என்பதை இக்கதை உணர்த்துகிறது. அடிமைகளாக இருந்தவர்களிடம் புழங்கிய இந்த வாய்மொழிக் கதை அவர்கள் தங்களுடைய அடிமையான வாழ்விலிருந்து தப்பிப்பதற்கான உளவியல் பலத்தைக் கொடுப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. இதுபோன்ற கதைகளையும் இலக்கியமாகப் பார்க்க வேண்டும் என்ற குரல் கறுப்பர்களிடம் இருந்தும் ஒலித்தது.
அமெரிக்கக் கறுப்பர்களிடம் ‘சூழ்ச்சிக்காரக் குரங்கு’ (The Signifying Monkey) கதைகள் நம்பிக்கையை விதைப்பதாக இருந்தன. சான்றாக ஒரு கதை. ஒரு காட்டில் சிங்கம், யானை, குரங்கு இருந்தன. சிங்கத்தை வீழ்த்த வேண்டுமெனக் குரங்கு நினைத்தது. ஆனால் நேரடியாக மோதி வீழ்த்த அதனிடம் பலமில்லை. அதனால் சிங்கத்திடம் சென்று உன்னை யானை கீழ்த்தரமாகப் பேசுகிறது. உன்னிடம் சத்தம் மட்டும்தான் பெரியதாக உள்ளதாம். வலிமை யானையிடம்தான் இருக்கிறதாம் எனக் கூறியது. சிங்கத்திற்குக் கோபத்தை அடக்கமுடியவில்லை. யானையிடம் சென்று காரசாரமாகச் சண்டையிட்டது. யானை சிங்கத்தைத் தூக்கித் தூர வீசியது. அவமானமடைந்த சிங்கம் கூனிக்குறுகி நடந்துபோனதை மரத்தில் மறைந்துகொண்டிருந்த குரங்கு பார்த்துச் சிரித்தது. சிங்கம் ‘தன்னை வீழ்த்தியது யானை அல்ல, குரங்கு’ என்று புரிந்து கொண்டது என்பதாக அந்தக் கதை முடிகிறது. இது, வலிமையற்ற ஒருவர் வலிமை கொண்ட இருவரை வன்முறை இல்லாமல் கூட வீழ்த்த முடியும் என்பதைச் சொல்கிறது. இத்தகைய கதைகள் கறுப்பர்களுக்கு நம்பிக்கையை அளித்தன. இந்த வாய்மொழி இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே பின்னாளில் கறுப்பு நகைச்சுவை (Black Comedy), ராப் சண்டைகள் (Rap Battles), ஸ்டாண்ட் அப் நையாண்டி, (Stand-up Satire), அரசியல் நையாண்டி (Political Satire) ஆகியன உருப்பெற்றன.
(நிறம் ஒளிரும்…)
Art : fenwayhealth.org
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.







Leave a Reply