இடையனின் காதல்
-எழில் சின்னதம்பி
ஆண்டியன் மலையில் இருந்த பனிமூடிய சிகரங்களில் ஒன்று சஹுவாசிராய். அந்தப் பனி மூடிய சிகரத்தின் சரிவுகளில், யூகாய் ஆற்றின் பள்ளத்தாக்கிற்கு மேலே இருந்த ஒரு கிராமத்தில் ‘அக்கோய்னபா’ என்ற பெயருடைய, மிகவும் வசீகரமான ஒரு பூர்வகுடி இளைஞன் வாழ்ந்து வந்தான். இன்கா மன்னர்கள், சூரியக் கடவுள் ‘இண்ட்டி’க்குப் பலியிடுவதற்காக வளர்க்கப்பட்ட வெள்ளை லாமாக்களை அவன் மேய்த்து வந்தான். இன்கா அரச விழாக்களில் வெள்ளை லாமாக்களே பலி கொடுக்கப் படுவது வழக்கம். அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளை லாமாக்களை வளர்த்து வந்த பலருள் அக்கோய்னபாவும் ஒருவன். அந்த லாமாக்களை மேய்க்கும் வேளைகளில் அவன் தன் கையில் வைத்திருந்த புல்லாங்குழலை மென்மையாகவும் இனிமையாகவும் இசைப்பதுண்டு. லாமாக்கள் மேய்ப்பதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் எளிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான் அக்கோய்னபா.
ஒருநாள், அவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும்போது, அவ்வழியாக இரு பெண்கள் வந்தார்கள். அந்த அழகிய அந்தப் பெண்கள், ‘அக்யா’ எனப்படும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பெண்களாவர். ‘சூரியனின் மகள்கள்’ என்றும் அந்தப் பெண்கள் அழைக்கப்படுவர். நாடு முழுவதும் பத்து அல்லது பதினோரு வயதில் இருக்கும் இளம் பெண்கள் அழகு, திறமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றாகத் தங்கவைக்கப் படுவர். அந்தப் பெண்கள் தங்குமிடம் ‘அக்யவாசி’ (தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வீடு) என்றழைக்கப்படும். அவர்கள் சூரியனுக்கும் இன்கா அரசனுக்கும் அர்ப்பணிக்கப் பட்டவர்களாவர். சடங்குகளில் பயன்படுத்தப்படும் துணிகளை நெய்தல், சடங்குகளுக்கான ‘சிச்சா’ மக்காச்சோள மது தயாரித்தல், அரசனுக்கு உணவு தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் சிலர் மன்னனுக்கும் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் இரண்டாம் நிலை மனைவிகளாக்கப் பட்டனர்; சில பெண்கள், போர்களில் வீரச்செயல் செய்த வீரர்களுக்கு மனைவியாக, மன்னனால் பரிசளிக்கப்பட்டனர். எப்போதாவது மன்னனுக்காக உயிர்ப்பலி கொடுக்கும்போது இந்தப் பெண்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பலிகொடுக்கப் படுவதுமுண்டு.
இந்தப் பெண்கள் கடவுளுக்கும் மன்னனும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள். பிற காதல் விசயங்களில் கவனத்தைச் சிதறவிடப் படாதவர்கள். பகலில் அவர்கள் பச்சை வயல்களைப் பார்க்கவும், மற்ற இடங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அந்தி சாயுமுன் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிவிட வேண்டும். அவர்கள் தங்கள் இருப்பிடமான அக்யவாசிக்குள் நுழையும்போது, தங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, காவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்பே அக்யவாசிக்குள் மீண்டும் அனுமதிக்கப் படுவார்கள். அக்யவாசியிலிருந்து வந்த இந்த இருவரும் அக்கோய்னபா லாமா மேய்த்துக்கொண்டே புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தபோது வந்தனர். அவர்கள் அவன் முன் நின்றபோது, அவனது மந்தையைப் பற்றியும், அந்தப் புல்வெளிகளைப் பற்றியும் விசாரிக்கத் தொடங்கினர்.
அவர்கள் வருவதைக் கவனிக்காத அக்கோய்னபா திகைப்படைந்தான். அவர்களைப் பார்த்தது வாய் பிளந்தான். அந்தப் பகுதியில் நான்கு அழகிய தெளிவான நீரூற்றுகள் இருந்தன. அந்த நீரூற்றுகளில் இரண்டு மனித வடிவத்தில் தனக்கு முன் தோன்றுவதாக நினைத்து, அவன் திகைப்படைந்து வாய்வார்த்தை வெளிவராமல் நின்றான். ஆனால் அவர்கள் லாமாக்களைப் பற்றி விசாரிப்பதைத் தொடர்ந்தனர்; பயப்பட வேண்டாம் என்று அவனிடம் கூறினர். தாங்கள் அக்யவாசியிலிருந்து வருவதாகவும் இந்த நிலம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் இருவர் என்றும் கூறினர். தங்களைப் பார்த்து அச்சம் வேண்டாம் என்று உறுதிப்படுத்த அவனது கையைப் பிடித்துக் கொண்டனர்.
இறுதியாக, அக்கோய்னபா எழுந்து நின்றான். அந்த இரண்டு இளம் பெண்களின் பேரழகால் எழுந்த பிரமிப்பு நீங்காமல் அவர்களுடைய கைகளில் முத்தமிட்டான். அவர்களுடன் சிறிது நேரம் அமைதியாகப் பேசிய பிறகு, தன் லாமாக்களை ஒன்று சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதால் தான் செல்லவேண்டுமென்று சொல்லி, மன்னிப்புக் கோரினான். உரையாடலைத் தொடர விரும்பிய அந்த இரண்டு கன்னியர்களில் மூத்தவள், அந்த இளம் மேய்ப்பனின் தோற்றத்தாலும் நடத்தையினாலும் மிகவும் கவரப்பட்டிருந்தாள். அவள் பெயர் சுக்கியாந்தோ. அவள் அந்த இளைஞனிடம் அவனது பெயரையும், அவனது வீடு எங்கே இருக்கிறது என்பதையும் சொல்லும்படி கேட்டாள். தான் ‘லாரே’ பழங்குடியினத்தைச் சேர்ந்தவன் என்றும், தன் பெயர் அக்கோய்னபா என்றும் அவன் பதிலளித்தான். அவன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளது கண்கள் அவன் நெற்றியில் சூடியிருந்த வெள்ளித் துண்டின் மீது நிலைத்தன. அவர்கள் அதைக் ‘கம்பு’ என்று அழைப்பார்கள். அது மிகவும் அழகாகப் பிரகாசித்தது. அக்கோய்னபா அந்த ‘கம்பு’வை எடுத்து அவளைப் பரிசோதிக்க அனுமதித்தான். அந்த வெள்ளித் துண்டில் இரத்தம் உறிஞ்சும் உண்ணியின் நேர்த்தியாக செதுக்கப்பட்ட உருவத்தை முதலில் சுக்கியாந்தோ கவனித்தாள். அந்த உண்ணிகள் ஒரு இதயத்தைத் தின்பதைக் கண்டாள். அந்த ஆபரணத்தின் பெயர் என்ன என்று சுக்கியாந்தோ கேட்டபோது, அதன் பெயர் ‘உதூசி’ என்று அவன் பதிலளித்தான்.
சுக்கியாந்தோ அவனிடம் உதூசியைத் திருப்பிக் கொடுத்தாள். அவனிடம் விடைபெற்றுச் சென்றார்கள் சகோதரிகள். அந்த ஆபரணத்தில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்த அந்த உண்ணிகள் உயிருடன் இருப்பதைப் போலவும், ஒரு இதயத்தைத் தின்பது போலவும் இருந்த அந்தக் காட்சி சுக்கியாந்தோவின் மனதில் தீவிரமான நினைவாக நீடித்தது. திரும்பிச் செல்லும் வழியெங்கும் அவள் தன் சகோதரியுடன் அக்கோய்னபாவைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றாள். அவர்கள் தங்கள் இருப்பிடமான அக்யவாசிக்கு வந்தபோது, காவலர்கள் அவர்களைக் கவனமாகச் சோதித்துப் பார்த்தனர்; அவர்கள் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் எடுத்துச் செல்கிறார்களா என்று பரிசோதித்தனர். ஏனென்றால், நாட்டில் பல பகுதிகளிலிருந்து வந்த பெண்கள் தங்கள் காதலர்களால் பரிசாகக் கொடுக்கப்பட்ட காதல் தாயத்துகளைத் தங்கள் கழுத்தணிகளில் உள்ள மணிகளுக்கிடையேயோ அல்லது மேலாடையைச் சுற்றிப் போர்த்திய தோட்பட்டிகைகளிலோ மறைத்து வைத்திருக்கும் நடைமுறை பரவலாக இருந்தது. இந்த நடைமுறையை அறிந்திருந்த காவலர்கள் விழிப்புடன் இருந்து, கன்னியர்களைக் கவனமாகச் சோதித்தனர்.
இறுதியாக, அவர்கள் அக்யவாசிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். அங்கே மிகச் சிறந்த சுவையான உணவுகள் பரிமாறப்பட்டு, மற்ற சூரியப் பெண்மகள்களால் அவர்கள் வரவேற்கப்பட்டனர்.
சுக்கியாந்தோவுக்கு உணவு உண்ண விருப்பமில்லை. நீண்ட நடைப்பயணத்தால் களைப்படைந்து சோர்வாக இருப்பதாகத் தன் சகோதரியிடம் கூறி, நேரடியாகத் தன் அறைக்குச் சென்றாள். ஆனால் சுக்கிலாந்தோவுக்கு ஒரு கணம் கூட நிம்மதி இல்லை. அவள் லாமா மேய்ப்பன் அக்கோய்னபா மீது ஆழ்ந்த காதல் கொண்டிருந்தாள்; தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியாததால் மேலும் துன்பப்பட்டாள். இருப்பினும், அவள் புத்திசாலித்தனம் நிறைந்த விவேகமான இளம் பெண் என்பதால், படுத்து ஓய்வெடுக்கச் சென்றாள்; விரைவில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.
அக்யவாசியில் பல அறைகள் இருந்தன. மேலும் இன்காப் பேரரசின் நான்கு திசைகளிலிருந்தும் (வடமேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு) கொண்டுவரப்பட்ட ஏராளமான ‘தேர்ந்தடுக்கப்பட்ட பெண்கள்’ இந்த அறைகளில் வசித்து வந்தனர் (‘தவான்தின்சுயு’ – நாற்புறமும் சூழ்ந்த அரசு என்றே இன்காவினர் தங்களது இராச்சியத்தை அழைத்து வந்தனர்). அக்யவாசியின் சுவர்களுக்குள் இனிப்பான, படிகம் போலத் தெளிவான நீர் கொண்ட நான்கு நீரூற்றுகளும் இருந்தன. அந்த நீரூற்றுக்கள் அந்தந்தப் பெண்கள் வந்த திசையை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. அந்தப் பெண்கள் தாங்கள் வந்த பிராந்தியத்தை நோக்கிய நீரூற்றிலேயே குளித்தனர். வடமேற்கு நோக்கிப் பாய்ந்தது ‘கற்கள் நீரூற்று’; தென்மேற்கு நோக்கிப் பாய்ந்தது ‘தவளைகள் நீரூற்று’; வடகிழக்கு நோக்கிப் பாய்ந்தது ‘நீர்ப்பாசி நீரூற்று’; தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்தது ‘கடற்பாசி நீரூற்று’.
சுக்கியாந்தோ உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சிறிய இரவுப் பறவை மரத்துக்கு மரம் பறப்பதைப் போலக் கனவு கண்டாள். அது பறந்து அமரும்போதெல்லாம், மென்மையாகவும் இனிமையாகவும் பாடியது. சிறிது நேரம் பாடிய பிறகு, அது அவளது ஆடையின் மடிப்புகளில் வந்து அமர்ந்து, “வருத்தப்பட வேண்டாம்! கவலைப்படுத்தும் எதையும் நினைக்க வேண்டாம்” என்று கூறியது. தான் இறந்துவிடுவது போல் உணர்வதால் தனது வேதனையைத் தீர்க்க முடியுமா என்று அவள் பறவையிடம் கேட்டாள். அதற்கு அந்தச் சிறு பறவை அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு அவள் ஏன் துன்பப்படுகிறாள் என்று கேட்டது. வெள்ளை லாமாக்களைப் பராமரிப்பவனான அக்கோய்னபா மீது காதல் கொண்டதால் அவள் கவலையடைந்ததாகக் கூறினாள். தான் ஒரு அக்யா-வாக இருப்பதால் அவனுடன் வாழ முடியாதா என்ற கவலை வருவதாக் கூறினாள். அப்படியே அவனுடன் வாழ நினைத்தால் அவனுடன் ஓடிச் சென்று தப்பித்து வேறு இடத்துக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவள் கூறினாள். ஆனால், அப்படித் தப்பிச் செல்லும்போது பாதுகாவலர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டால், அவள் மரண தண்டனைக்கு ஆளாகிவிட நேரிடும் என்றும் பறவையிடம் கூறினாள்.
பதிலுக்கு அந்தச்சிறு இரவுப்பறவை அவளைத் தன் படுக்கையை விட்டு எழுந்து, நான்கு நீரூற்றுகளுக்கும் நடுவே அமர்ந்து, தன் மனதில் மேலோங்கியிருக்கும் எண்ணத்தைச் சத்தமாகப் பாட அறிவுறுத்தியது. அந்த நீரூற்றுகள் அவளுடைய பாடலை அங்கீகரித்தால், அவை அவளுடைய பாடலைப் பிரதிபலித்துத் திரும்ப முணுமுணுக்கும். இதன் மூலம் அவள் விரும்பியதைச் செய்ய அவளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அந்தப் பறவை பறந்து சென்றது.
சுக்கியாந்தோ கண் விழித்தாள். பயத்துடனும், மிகுந்த அவசரத்துடனும் அவள் தன் ஆடைகளை அணிந்தாள்; அக்யவாசியில் இருந்த மற்ற அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததனர். ஒலி எழுப்பாமல் நகர்ந்தாள்; நான்கு நீரூற்றுகள் இருந்த இடத்துக்குச் சென்று, அவற்றுக்கு நடுவே அமர்ந்தாள். உண்ணிகளால் உண்ணப்பட்ட இதயத்தைக் கொண்ட அந்த வெள்ளி ஆபரணத்தை மட்டுமே மனதில் நினைத்து, பின்வருமாறு பாடினாள்:
“உறிஞ்சு உண்ணியே! நகர்ந்து வா! என் இதயம் தேடி வா!”
நான்கு நீரூற்றுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவளுடைய பாடலைப் பாடத் தொடங்கின. பின்னர் சேர்ந்து பாடின. நீரூற்றுகள் சாதகமாக இருப்பதை அறிந்த சுக்கியாந்தோ மகிழ்ந்தாள்; அங்கிருந்து கிளம்பி அறைக்குச் சென்றாள்; இரவின் எஞ்சிய நேரத்தை நிம்மதியாக உறங்கிக் கழித்தாள். அந்த நேரத்தில் நீரூற்றுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
இரண்டு சூரியக் கன்னிகைகளும் விடைபெற்றுச் சென்றபிறகு, லாமா மேய்ப்பன் அக்கோய்னபா, தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான். அழகிய சுக்கியாந்தோவை நினைப்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. தன் எண்ணங்களுக்குள் சிக்கி அவன் கலக்கமடையத் தொடங்கினான். அவனது அப்பாவி மார்பில் ஒரு புதிய உணர்வு வேரூன்றியது; அது அவள் மீதான காதல் நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. அவன் தன் புல்லாங்குழலை எடுத்து மிகவும் மனமுருகி வாசிக்கத் தொடங்கினான். அதன் சோகம் பாறைகளையும் இரக்கப்பட வைத்து இளக்கியது. இறுதியில், தன் துயரத்தால் துவண்டு, உணர்வை இழந்து தரையில் விழுந்தான்.
மயக்கம் தெளிந்தபிறகு, அவன் கண்ணீருடன் அழுதான். “ஐயோ, ஐயோ உனக்காக! துயரமான, மகிழ்ச்சியற்ற, யோகங்கெட்ட இடையனே! உன் மரண நாள் நெருங்குகிறது. இந்த ஆசை நோய்க்கு உனக்கு மருந்தில்லை. பாவம், இடையனே உன்னால் என்ன செய்ய முடியும்? உனது ஆறுதல் எட்டாத தூரத்தில், கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அல்லவா உள்ளது?” என்று தன்மீது பாவப்பட்டுக் கொண்டே தனது சிறிய குடிசைக்குள் சென்றான். துன்பமிகுதியால் சோர்வடைந்து உறங்கினான்.
‘லாரேஸ்’ கிராமத்தில் அக்கோய்னபாவின் தாய் வாழ்ந்து வந்தாள். தன் மகன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவனைக் குணமளிக்கும் வழியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவன் இறந்துவிடுவான் என்றும் ‘வில்லாக்’ என்றழைக்கப்படும் வருங்கூறிகள் அவளிடம் கூறியிருந்தனர். அவனது துன்பத்திற்கான காரணத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாள். மிகவும் நேர்த்தியான ஒரு மரக்கோலை எடுத்துக் கொண்டாள். அது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்ந்தாள். ஓய்வெடுக்காமல், அவள் உயரமான மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் நடந்து மகனின் குடிலை நோக்கிச் சென்றாள்.
சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் நடந்து, அவள் விடியற்காலையில் மகனின் குடிலுக்கு வந்து சேர்ந்தாள். உள்ளே, தன் மகன் சுயநினைவின்றி, முகம் முழுவதும் வழிந்தோடும் கண்ணீரால் நனைந்திருப்பதைக் கண்டாள். அவன் நினைவு தெளிந்து கண்களைத் திறந்தபோது, தன் தாயைப் பார்த்து உரத்த குரலில் அழத் தொடங்கினான். அவள் அவனை முடிந்தவரை ஆறுதல் படுத்தினாள்; விரைவில் அவனைக் குணமடையச் செய்வதாகக் கூறினாள்; மனம் தளர வேண்டாம் என்று மகனிடம் சொல்லி அவனைத் தழுவினாள்.
பின்னர் அவள் வெளியே சென்று, மலைகளுக்கு மத்தியில் இருந்த செந்தட்டிச் செடியின் இலைகளைச் சேகரிக்கத் தொடங்கினாள். இந்த அரிக்கும் செந்தட்டி இலைகளைச் சுக்கியாந்தோ உண்டால், கட்டுப்படுத்த முடியாத காதலுணர்வைத் தூண்டி அவளை அவனுடன் சேர்த்து வைக்கும் என்று அக்கோய்னபாவின் தாய் நம்பினாள். போதுமான அளவு இலைகளைச் சேகரித்த பிறகு, அவள் குடிலுக்குத் திரும்பி, அந்த இலைகளைக் கொண்டு ஒரு குழம்பைத் தயாரித்தாள். அது வெந்து கொண்டிருந்தபோது வாசலில் இரண்டு அக்யாக் கன்னிகைகள் வந்து நின்றார்கள்.
சுக்கியாந்தோ அதிகாலையிலேயே எழுந்து உடை அணிந்திருந்தாள்; அவளுடைய இதயம் வேறு எந்த வேலையையும் செய்ய அனுமதிக்கவில்லை. அக்யவாசியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படும் நேரம் வந்ததும் வேகவேகமாக நடந்து, அவளது சகோதரியுடன் நேராக அக்கோய்னபாவின் குடிசைக்கு விரைந்து வந்தாள்.
கன்னியர்கள் குடிசையை அடைந்ததும், பயணத்தால் களைப்படைந்து வாசற்படியின் அருகே அமர்ந்தனர். வயதான தாயைப் பார்த்த அவர்கள், அவளுக்கு வணக்கம் கூறினர். ஏதாவது உணவு தர முடியுமா என்று கேட்டனர். அக்கோய்னபாவின் தாய் அவர்களிடம் செந்தட்டி இலைக்குழம்பு மட்டுமே வைத்திருப்பதாகச் சொன்னாள். குழம்பு வெந்ததும், அவள் அதை அவர்களுக்குப் பரிமாறினாள். மிகுந்த விருப்பத்துடன் அவர்கள் உணவை உண்டனர்.
வருத்தத்துடன், சுக்கியாந்தோ தன்னைச் சுற்றிலும் பார்த்தாள்; அங்கே அக்கோய்னபா இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. ஏனெனில், கன்னியர்கள் தொலைவில் வருவதைக் கண்ட அக்கோய்னபாவின் தாய், அவனைத் தான் கொண்டு வந்திருந்த மரக்கம்புக்குள் ஒளிந்து கொள்ளுமாறு அவனிடம் சொல்லி அவனை ஏற்கனவே ஒளித்து வைத்திருந்தாள். அவனைக் காணாததால் அவன் தன் லாமாக்களை மேய்க்க வெளியே சென்றுவிட்டான் என்று சுக்கியாந்தோ நினைத்தாள். அவன் எங்கே இருக்கிறான் என்று தாயிடம் கேட்கக்கூடத் தைரியமின்றி அமர்ந்திருந்தாள். ஆனால், அந்த மரக்கோலைக் கண்டதும் அது மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறி, அது எங்கிருந்து கிடைத்தது என்று அக்கோய்னபாவின் தாயிடம் கேட்டாள்.
அந்த வயதான பெண்மணி, அந்தக் மரக்கம்பு, வெகுகாலத்துக்கு முன்னர் படைப்புக் கடவுள் ‘பச்சகாமாக்’கின் மனைவிகளில் ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்ததாகச் சொன்னாள். மலைகள் நிறைந்த அந்த நாட்டில் உயர்மதிப்புப் பெற்ற கடவுள் பச்சகாமாக். அந்த மரக்கோல் அவளுக்குப் பரம்பரைச் சொத்தாக, வழிவழியாக வந்ததாகவும் பதிலளித்தாள். சுக்கியாந்தோ இதைக் கேட்டவுடன், அதைத் தனக்குத் தரமுடியுமா என்று வற்புறுத்திக் கேட்டாள். அந்த வயதான தாயும் சம்மதித்து அந்த மரக்கோலை அவளிடம் கொடுத்தாள். அதைத் தன் கைகளில் எடுத்தபோது, அது முதலில் நினைத்ததை விட மிகவும் நேர்த்தியாக இருப்பதாகக் கண்டாள். மேலும் சிறிது நேரம் குடிசையில் தங்கிய பிறகு, அவள் வயதான தாயிடம் விடைபெற்றுச் சகோதரியுடன் திரும்பினாள். லாமா மேய்ப்பன் எங்கேனும் வழியில் தென்படுவானோ என்று எண்ணி அனைத்துத் திசைகளிலும் தேடிக் கொண்டே புல்வெளிகள் வழியாக நடந்து, கையில் மரக்கோலைச் சுமந்துகொண்டு அக்யவாசிக்குச் சென்றாள்.
அக்கோய்னபாவை வழியில் காண முடியாததால் அவள் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானாள். அவள் அக்யவாசியில் நுழையும்போது வழக்கம் போலக் காவலர்கள் அவளைக் கவனமாகச் சோதித்தனர். ஆனால் கையில் இருந்த மரக்கோலைத் தவிர தவிர வேறு எதுவும் புதியதாகத் தெரியாததால், அவர்கள் அவளை உள்ளே அனுமதித்தனர்.
கன்னியர்கள் உட்புற அறைகளுக்குச் சென்றனர். அங்கே அவர்களுக்கு அற்புதமான இரவு உணவு பரிமாறப்பட்டது. இருட்டிவிட்ட பிறகு, அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றனர். சுக்கியாந்தோ அந்த மரக்கோலைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு சென்று தன் படுக்கைக்கு அருகில் வைத்தாள். அவள் படுத்தபோது, தான் தனியாக இருப்பதை நினைத்து, அக்கோய்னபாவை எண்ணிக் கலங்கினாள். முந்தைய இரவில் கண்ட கனவு நினைவுக்கு வர அழத் தொடங்கினாள்.
ஆனால் அவளுடைய அழுகை வெகுநேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் அந்த மரக்கம்பு ஏற்கனவே அதன் முந்தைய வடிவத்திற்கு மாறியிருந்தது. யாரோ அவளது பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். ‘சுக்கியாந்தோ…’ திடுக்கிட்டு எழுந்தவள் ஒரு தீப்பந்தத்தைத் தேடி எடுக்கச் சென்றாள். அதைப் பற்ற வைத்துக்கொண்டு, சத்தம் போடாமல் தன் படுக்கைக்குத் திரும்பினாள். அங்கே, அவளுக்கு முன் முழங்காலிட்டு, கண்ணீர் சிந்தியபடி அக்கோய்னபா அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தாள். அது அக்கோய்னபாதானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கேட்டாள், “எப்படி நீ இங்கு நுழைந்தாய்?” அவன் அவளிடம் அந்த அற்புத மரக்கோலைப் பற்றிச் சொன்னான். சுக்கியாந்தோ அவனை அணைத்துக்கொண்டு, மிகவும் நேர்த்தியான வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் மெல்லிய உடைகளால் அவனைப் போர்த்தினாள்.
அவளுடன் அந்த இரவை இனிமையாகக் கழித்தான் அக்கோய்னபா. விடியற்காலை வந்ததும் அவன் அந்தக் மரக்கம்புக்குள் திரும்பச் சென்று மறைந்தான். அவன் முழுமையாக மறைந்து கொண்ட பிறகு, நிலம் முழுவதும் சூரிய ஒளி பரவி காலைப் பொழுதானதும் சுக்கியாந்தோ அக்யவாசியிலிருந்து மீண்டும் புறப்பட்டு வெளியேறினாள். கையில் அந்த மரக்கோலை ஏந்திக் கொண்டே நடந்தாள்.
தனியாக அந்த மரக்கோலுடன் அவள் புல்வெளிகளில் அலைந்தாள். ஆனால் ஒரு மலைப் பிளவில் அவள் தன் அன்பான காதலனுடன் மீண்டும் ஒன்றாக இருந்தாள். அவன் தன் உண்மையான உருவத்திற்கு மாறியிருந்தான். ஆனால், காவலர்களில் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்திருக்க வேண்டும். அந்தக் காவலன் அவளை அந்த மறைவிடத்தில் கண்டுபிடித்து, நடந்ததைப் பார்த்ததும், சத்தமாக அவளைப் பார்த்து இரைந்து கொண்டு ஓடிவந்தான்.
சுக்கியாந்தோவும் அக்கோய்னபாவும் அவனது கூச்சலைக் கேட்டு, கல்கா நகரத்திற்கு மேலே படர்ந்திருந்த மலைகளை நோக்கி ஓடினர். காவலனால் அவர்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. வெகுதூரம் ஓடிச் சென்றதால் களைப்படைந்த அவர்கள், ஒரு செங்குத்தான பாறையின் உச்சியில் ஓய்வெடுக்க அமர்ந்தனர்; களைப்பு மிகுதியால் அங்கேயே இருவரும் உறங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் தூக்கத்தில் கொடுங்கனவுகளையும் பெருஞ்சத்தங்களையும் கேட்டதால் எழுந்துவிட்டனர். அக்யாவிற்குக் காதல் தடைசெய்யப் பட்டதை நினைத்து அவர்கள் அழுது புலம்பினர். ஒன்றாக இணையமுடியாதோ என்று மனம் பதைத்தனர். அவள் ஒரு செருப்பைக் கையில் பிடித்தபடி, மற்றொரு செருப்பைக் காலில் அணிந்தபடி நின்று கொண்டிருந்தாள். தொலைவில் காவலன் தேடி வருவது தெரிந்தது. துக்கம் இன்னும் பலமாய் அழுத்த, அவர்கள் இருவரும் அப்படியே மனவேதனையுடன் நின்றனர். அப்போது வானிலிருந்து ஓர் ஒளி தோன்றி மின்ன, இருவரும் கல்லாக மாறிப்போயினர். கல்ஹாவை நோக்கித் திரும்பியபடி, அப்படியே உறைந்து நின்றனர்.
அந்தச் சிலைகளை இன்றும் கல்கா, ஒய்யாபம்பா போன்ற பல இடங்களிலிருந்தும் காண முடியும். அந்த இரட்டைச் செங்குத்துப் பாறைகள் ‘பிட்டுசிராய்’ என்று அழைக்கப்பட்டன. இன்றும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.
Harani Art
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply