அந்தோனியோ போர்ச்சியா ( 1885-1968) இத்தாலியில் பிறந்து அர்ஜென்டைனாவின் பியோனோஸ் அயர்ஸ் நகரில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர்.
“குரல்கள்” என்பது இவர் தன் வாழ்நாள் முழுவதும் தனிக்குறிப்புகளாக எழுதி வைத்த நுண் மொழிகளின் தொகுப்பாகும். போர்ச்சியா இலக்கிய விமர்சர்களால் ஒரு நுண் மொழியாளராக ( Aphorist) அறியப்படுகிறார்.
காஃப்காவின் நுண் மொழிகளைப் போல சொற் சிக்கனமும் ஆழ்ந்த மெய்யியல் தேடல்களின் தொகுப்பாகவும் ஒலிக்கிறது இவரது “குரல்கள்”. தன் நுண்மொழிகளைப் பிரசுரிக்க வேண்டும் என்ற எந்த விழைவும் இவருக்கு இருந்ததில்லை. பிரசுரித்த பின் ஓர் இலக்கிய அமைப்பின் நூல் சேகரங்களுக்கிடையில் “குரல்கள்” புத்தகத்தின் பிரதிகள் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறியதால் அந்தோனியோ போர்ச்சியா அப்பிரதிகளை எல்லாம் ஒரு நூலகத்திற்கு இலவசமாக வழங்கி விட்டார்.
போர்ஹெ ஐ பிரெஞ்சு இலக்கிய வாசகர்களுக்கு அடையாளம் காட்டிய ரோஜர் கேயோ தான் அந்தோனியோ போர்ச்சியா வையும் அறிமுகப்படுத்தினார்.
ஒரு கதவு திறக்கிறது. நான் உள்ளே நுழைகிறேன். இப்போது நூறு மூடிய கதவுகளுக்கு முன் நின்று கொண்டிருக்கிறேன்.
மனிதன் எங்கும் செல்வதில்லை. அனைத்தும் அவனிடம் வந்து சேர்கின்றன, நாளைய பொழுதைப் போல்.
அனைத்தும் வெறுமையே என்று அறிந்து கொள்பவன் அனைத்தும் எவற்றால் நிரம்பி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்கிறான்.
என் பாதையில் பயணிப்பதற்கு முன் நானே என் பாதையாக இருந்தேன்.
சின்னஞ்சிறு விஷயங்களே நித்தியமானவை மற்றவை எல்லாம் மீச் சிறியவையே.
மெய்மைக்கு உற்றவர் மிகச் சொற்பர் ஆனால் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டவர்கள்.
தன்னை ஒரு நூலால் பிணைத்திருப்பவன் வலியவன் அல்ல, ஆனால் நூல் வலியது.
என் வறுமை முழுமையற்றது ஏனெனில் அது என்னைப் பீடிக்கவில்லை.
களிமண்ணை ஒருபோதும் தொட்டதில்லை ஆனால் களிமண்ணால் வார்க்கப்பட்டிருக்கிறேன்.
தான் ஒரு நினைவாக எஞ்சுவோம் என்று விழைவிலேயே ஒருவன் தன் வாழ்நாளைக் கடத்துகிறான்.
உன் விழிகளை அகல உயர்த்தி மேலே பார்க்கவில்லை எனில் நீ மிக உயர்ந்த புள்ளியில் நிலைத்திருக்கிறாய் என்று நம்பிக் கொண்டிருப்பாய்.
உச்சிகள் உச்சிகளின் ஊடே வழி நடத்துகின்றன.
ஒரு மெல்லிய ஒளிக்கீற்று உன் பெயரை அழித்தது. இப்போது நீ யார் என்று எனக்குத் தெரியவில்லை.
அனைவரும் குற்றமிழைப்பவர்கள் அல்லர். ஆனால் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
அற்பமானவை என்னை அலைகழிக்கும்
போது அவற்றின் அதீத அலைக்கழித்தல்களுக்கிடையே
ஓய்வெடுப்பதற்கு எனக்கு ஓர் அதல பாதாளம் தேவைப்படுகிறது.
தன் வாழ்வை நிழல்களால் நிரப்பாதவன் வெறுமையடைகிறான்.
அவர்களிடமிருந்து உன்னைப் பிரிக்கும் இடைவெளியின் தூரத்தை அவர்களோடு இணையும் போது அறிவாய்.
ஒன்றுமின்மையை நான் ஒப்புக்கொள்ளும் போது நான் அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.
உடைபடாமல் எதுவும் முடிவடையாது ஏனெனில் அனைத்து முடிவற்றது.
துயரம் நம்மைப் பின் தொடர்வதில்லை. அது நமக்கு முன் சென்று கொண்டிருக்கிறது.
வெறுமையை நிரப்பும்போது நாம் வெறுமையை அறிந்து கொள்கிறோம்.
பூரண ஒளியில் நாம் ஒரு நிழல் கூட இல்லை.
பொக்கிஷம் என்ற ஒன்று இல்லாத போது இரவே பொக்கிஷமாகிறது.
மரம் தனிமை அடைகிறது; மேகம் தனிமை அடைகிறது; நான் தனிமையடையும் போது அனைத்தும் தனிமையடைகிறது.
ஒரு கணம் மற்றொரு கணத்தில் அமிழ்ந்து கரைவதைப் போல நூறு ஆண்டுகளும் ஒரு கணத்தில் அமிழ்ந்து கரைகின்றன.
சில இரவுப் பொழுதுகளில் நான் விளக்கை ஏற்றுகிறேன் கண்களை மூடிக் கொள்வதற்காக.
வெகு சிலரே வெறுமையைச் சென்றடைகிறார்கள் ஏனெனில் வழி மிக நீண்டது.
ஆன்மாவை கொல்பவன் ஆயிரம் ஆன்மாக்களை கொல்வதில்லை. அவன் ஒரு ஆன்மாவை ஆயிரம் முறை கொல்கிறான்.
தான் ஒரு நகைச்சுவை நாடகத்தின் நாயகன் என்று அறிந்து கொள்பவன் சிரிக்க மாட்டான்.
ஒரு குழந்தை தன் பொம்மையை வெளியே காட்டுகிறது, ஒரு மனிதன் அதை மறைத்து வைக்கிறான்.
சில விஷயங்கள் பூரணமாக நம்முடையதாகி விடுகின்றன; நாம் அவற்றை பூரணமாக மறந்து விடுகிறோம்.
எனக்கு அருகில் கடக்க இயலாத தூரங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை.
சில நிழல்கள் மறைக்கின்றன
சில நிழல்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒன்றின் இழப்பு நம்மை வருத்திக் கொண்டு இருக்கும் ,நாம் அதை முழுமையாக இழக்கும் வரை.
அந்தகன் தன் தோளில் ஒரு நட்சத்திரத்தைச் சுமந்து செல்கிறான்.
என் காலச் சிதறல்கள் நித்தியத்துவத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன.
கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.








Leave a Reply