Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நான்காம் வகுப்பு (அ-பிரிவு)

கீதா கார்த்திக் நேத்தா
கீதா கார்த்திக் நேத்தா
August 1, 2025
நான்காம் வகுப்பு (அ-பிரிவு)

வேலைக்குச் சேர்ந்து ஒருவாரம் ஆகியிருந்தது. மாணவர்களின் பெயர்கள் மற்ற விவரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அப்போதுதான் தெரிந்துகொண்டிருந்தேன்.

வழக்கமான ஒரு பள்ளி வேலை நாள் அது. வகுப்பு தொடங்கிய சில மணிநேரங்களில் என் வகுப்பில் ஒரு சிறுவன் மயங்கி விழுந்தான். ஒன்றும் செய்வதறியாது பதற்றத்தில் தலைமை ஆசிரியரை அழைத்து பின் பள்ளிக்கு அருகில் இருந்த மெடிக்கல் பணியாளர் ஒருவரை அழைத்துவந்து பார்த்தோம். ஏதோ பாக்கு போன்ற போதைப்பொருள் அவனது வாயில் இருந்தது அப்போதுதான் தெரியவந்தது. “ஒன்னும் இல்லை. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க சரியாய்டும்” என்றார் மெடிக்கல் பணியாளர். அவனது பெற்றோர் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் போனதால் நீர் அருந்த வைத்து வகுப்பின் பின்புறமாக அவனை அன்று முழுவதும் படுக்க வைத்திருந்தேன்.

மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகளுக்கு ஆசிரியை நான். சிறுவர்களுக்கு ஆசிரியராக இருப்பது ஒரு மேடையில் இரண்டு வேடங்களை ஏற்பதற்குச் சமம். ஒரே சமயத்தில் ஆசிரியராகவும் பெற்றோருக்கும் சற்று மேலான அக்கறையோடும் நடந்துகொள்ள வேண்டும்.

அம்மாணவன் பெயர் வேலு. அன்று நடந்த சம்பவத்தையும் வேலுவையும் நினைக்கும்போதெல்லாம் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியது. ஏழு வயதுச் சிறுவன் போதைப்பொருளைப் பயன்படுத்தும் அளவிற்கு அவன் வாழ்வில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற சிந்தனை அன்று இரவு முழுவதும் விடாமல் என்னைத் துரத்தியது.

மறுநாள் அவனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு பள்ளிக்குச் சென்றேன். ஆனால் அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் வேறொரு மாணவனை அழைத்துக்கொண்டு வேலு வீட்டிற்கு விரைந்தேன். அவன் அங்கும் இல்லை. அன்று என்னால் அவனைச் சந்திக்க முடியாமல் போனது. பெரும் ஏமாற்றத்தை உணரச் செய்தது அவனற்ற அவன் வீடு. அன்றிலிருந்து ஒருவாரம் கடந்தது. பிறகு ஒரு விடுமுறை நாளில் எதேச்சையாகப் பள்ளி இருந்த தெருவில் வேலுவைப் பார்த்தேன்.

தயங்கித் தயங்கி என் அருகில் வந்தவன் மிஸ்.. என்று வளைந்து நெளிந்து நின்றான்.

பள்ளிக்கூடத்துக்கு ஏன் வரல என்றேன்.

கொஞ்சமும் நா கூசாமல் உடம்பு சரியில்லை மிஸ் என்றான். அவன் கூறுவது பொய் என்று அவனுக்கும் தெரியும் எனக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அந்தப் பொய்யையும் நம்ப வேண்டிய சூழலில் அப்போது இருந்தேன்.

என்னாச்சு. மாத்திர போட்டியா? என்றேன் அக்கறைத் தொனியில்.

இல்ல மிஸ். என்று பாவமாக முகத்தைக் காட்டினான்.

சரியாய்டும். ரெஸ்ட் எடு என்றேன்.

சரிங்க மிஸ் என்று தலையாட்டிவிட்டு எதிர்த் திசையில் காற்றாய் ஓடினான்.

வேலு… மீண்டும் நான் அழைத்தேன்.

சுவரில் எறிந்த பந்தாய் ஓடிய வேகத்தில் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தான்.

எனக்கு ஒரு உதவி செய்றியா? என்றேன்.

உதவிகள் கேட்பதற்கோ செய்வதற்கோ வயது ஒரு தடையில்லை. இருப்பினும் சிறுவர்கள் தங்களிடம் கேட்கப்படும் உதவிகளுக்கு எப்போதும் மறுப்பு தெரிவிப்பதே இல்லை. அந்த வகையில் பெரியவர்கள் காட்டிலும் சிறுவர்கள் பெருந்தன்மை வாய்ந்தவர்கள்.

ஆர்வமான தொனியில் என் அருகில் வந்து என்ன மிஸ் என்றான் வேலு.

என் கைல ஒரு சின்ன காயம் அதனால என்னால எழுத முடியல. க்ளாஸ்லையே உன் கையெழுத்து நல்லாருக்கும். நான் சார்ட் (chart) வாங்கித் தரேன். எங்கூட வந்து நான் சொல்ற திருக்குறள கொஞ்சம் எழுதித் தர்றியா? என்றேன்.

சரி என்று உடனே சம்மதித்தவனை வீடு வரை அழைத்து வந்தேன். வீட்டில் இருந்த ஒரு சார்ட்டையும் கலர் பேனாக்களையும் அவன் முன் வைத்து எழுதக் கூறினேன். அவனுக்காக இரண்டு மூன்று ரொட்டித்துண்டுகளை சார்ட் அருகில் வைத்துக்கொண்டு நானும் உடன் அமர்ந்தேன்.

சில நிமிடங்கள் கடந்தன. நான் ஸ்கேலை வைத்து அளவுகளைக் காட்ட அவன் எழுதுவதற்காகக் கோடு வரைந்தான்.

ரொம்ப இயல்பாகப் பேசத் தொடங்கினேன். “வேலு தம்பிக்கு பெருசாகி என்னவாகனும்”.

அவன் எதுவும் கூறவில்லை.

நான் தொடர்ந்தேன்.
டாக்டரா? டீச்சரா? லாயரா? என்னவாக விருப்பம் என்றேன் மீண்டும்.

அவன் கண்களை உருட்டி உருட்டி ‌என்னைப் பார்த்தான். பின் அவன் எழுதுவதில் ஆர்வமாக இருப்பது போல்
காட்டிக் கொண்டான்.

நானும் எதுவும் பேசாமல் அமைதியானேன்.

என்னவாகுறது? அவன் என்னிடம் கேட்டான்.

நீ சொல்லு என்றேன்.

ஒன்றும் கூறாமல் அவன் மீண்டும் எழுதுவதில் அவன் கவனத்தைக் குவித்திருந்ததாகத் தோன்றியது.

திடுமென ‘நான் போலிஷ் ஆய்டவா மிஸ்’. என்றான். ‌அந்தக் குரலில் ஒரு தெளிவு தென்பட்டதாக உணர்ந்தேன்.

அடேங்கப்பா. போலிஸா? பெரிய வேலைதான். உனக்கு நல்லாதான் இருக்கும் போலிஷ் ட்ரெஸ். அப்போ நீ போலிஸே ஆயிடு என்று சிரித்தேன் .

ஆமால்ல. தொப்பிலாம் போட்டுக்கலாம். என்று பென்சிலை வாயோடு வைத்துக்கொண்டு அவனும் சிரித்தான். பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது அந்தச் சிரிப்பு அவனுக்கு.

சில மணி நேரங்கள் சென்றிருக்கும் ஒருவழியாக இருவரும் சேர்ந்து எழுதி முடித்தோம். வீட்டிற்குக் கிளம்பும் முன் மிஸ் என்று இழுத்தான் வேலு. பின் “போலிஷ் வேலைக்குப் போகனும்னா என்ன பண்ணணும் மிஸ்” என்றான்.

இந்தக் கேள்விக்காக தான் காத்திருந்ததைப் போல் மிகுந்த ஆர்வத்தொனியில் “அதுக்கு நீ ஸ்கூல் விடாம வரணும். ஸ்கூல முடிசிட்டா போலிஸ் வேலைக்கு என்ன பண்ணணும்னு உனக்கே தெரிஞ்சிரும்”. என்றேன்.

சரி. என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து ஓடினான். அதே காற்று வேகத்தில்.

மறுநாள் அவன் பள்ளிக்கு வர வேண்டும் என்று யூகித்தேன். பிள்ளைகள் என்பவர்கள் ஈர நிலம் போன்றவர்கள். எத்தனை ஆழமாகவும் மென்மையாகவும் ஒன்றை விதைக்கிறோமோ அது அத்தனை நிச்சயமாகப் பலன் அளிக்கும். என் யூகம் பொய்க்கவில்லை. மறுநாளே பள்ளிக்கு வந்தான் வேலு. குளித்துத் தூய்மையான ஆடை, நெற்றியில் விபூதி என அவனைப் பார்க்கவே நன்றாகத் தோன்றினான்.

வேலுவைப் பள்ளிக்கு வரவழைக்கும் நோக்கத்திற்காகத்தான் அந்தத் திருக்குறள் வேலையைக் கொடுத்திருந்தேன். மேலும் வேலுவின் பணியைப் பாராட்டும் விதமாக அந்தத் திருக்குறளை வகுப்பில் எல்லோரும் பார்க்கும்படி ஒட்டி வைத்தேன். பின் அன்றிலிருந்து ஒரு மாதம் வரை வகுப்புத் தலைவனாக அவனை நியமித்தேன். நன்றாகப் படிக்கும் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களின் அடிப்படையில் என் வகுப்பின் மாணவத் தலைவர்கள் மாதம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அதன்படி அந்த மாதம் வேலு வகுப்புத்தலைவனாகப் பொறுப்பேற்றான்.

மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கி வைப்பது, தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று சாக்பீஸ் வாங்கி வருவது, வகுப்பினைத் தூய்மையாகப் பார்த்துக் கொள்வது, என ஒரு வகுப்புத் தலைவனாக அத்தனை வேலைகளையும் சிறப்பாகச் செய்து வந்தான் வேலு. அதன்பின் ஒரு நாளும் அவன் விடுப்பு கூட எடுக்காமல் இருந்தது, நான் பதியமிட்ட மரம் நினைத்ததைக் காட்டிலும் கிளை நிறையப் பூக்களாகப் பூத்தது போல் சில்லிட்டது மனம்.

ஒரு நாள் வேலுவின் அம்மா பள்ளிக்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டுச் சென்றார். இருபத்து மூன்று வயதுப் பெண். அச்சமயம் எனக்கும் அதே வயதுதான். வேலுவின் தந்தைக்கு அறுபது வயது. வீட்டிலேயே குடிக்கும் பழக்கமுடையவர் தந்தை. மாலை ஆறு மணிவரை வேலைசெய்து பின் வீடு திரும்பும் தாய் என வேலுவின் சூழல் எனக்குப் புரியவந்தது அப்போதுதான்.

இன்னும் சற்றுக் கூடுதல் அக்கறையோடு வேலுவைக் கையாள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைக் காட்டிலும் அவன் நடத்தைகள் வெகுவாக மாறியிருந்தன. அந்தப் பருவத் தேர்வில் வேலு முதல் மதிப்பெண் வாங்கினான். நான் எதிர்பார்க்காத ஒரு மகிழ்ச்சியாக அது அமைந்தது. முதல் மதிப்பெண் வாங்கிய மாணவருக்குப் பேனா பரிசளிக்க வேண்டும் என்பதும் என் திட்டத்தில் ஒன்றாக வைத்திருந்தேன். அதன்படி மதிப்பெண் அட்டை வழங்கிய அன்று வேலுவுக்கு முதல் பேனாவைப் பரிசளித்தேன்.

பேனாவை ப் பார்த்துக்கொண்டே வெகுநேரம் நின்றவன் கடைசியாக “இனி இந்த இடத்தை யாருக்கும் குடுக்கமாட்டேன் மிஸ்” என்றான்.

என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒரு நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தேன்.

என் பால்யம் என்பது என் உடன் வளர்ந்த சில தோழிகள், செம்பருத்தி, வாழை, கொய்யா மரங்கள் கொண்ட வீட்டுத் தோட்டம்; வாசலின் இதமான இளம் வெயில்; பாட்டி உருட்டித் தரும் கை உருண்டைச் சோறு; இரட்டைப் பின்னல்; டிசம்பர் பூ; பள்ளிக்கூட பன்னீர் பூ மரம்; எப்போதாவது வந்து போகும் பெருமாள் வாத்தியார்.. என நீளும் ஒன்று.

பெருமாள் வாத்தியார் கணக்குப் பாட ஆசிரியர்‌. இரண்டு தெரு தள்ளி வசிப்பவர். அவருக்குத் திருமணமாகி ஐந்து பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் இருந்தனர். ஏதோ ஒரு மலை கிராமத்தில் ஓராசிரியர் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். வார இறுதியில் ஊருக்கு வரும் வாத்தியார் ஞாயிறு மாலை மீண்டும் பள்ளிக்குப் புறப்படுவார். அவர் ஊருக்குள் இருக்கும் பாதி வெள்ளி, சனி மற்றும் அவர் கிளம்பும் வரையிலான பாதி ஞாயிறு ஆகிய நாட்கள் எங்களுடன்தான் கழியும்.

தெருவில் உள்ள அத்தனை பிள்ளைகளும் ஒன்றாக இணைந்து விளையாட தெரு முற்றம் ஒன்று இருந்தது. விடுமுறை நாட்களில் வாத்தியாரும் அங்குதான் இருப்பார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பெரும்பாலும் அவர் பிள்ளைகளுடனே இருப்பதாலோ என்னவோ அவர் ஆசிரியர் என்ற உணர்வு எங்களுக்குத் தோன்றியது இல்லை.

சிலநேரங்களில் பிள்ளைகளோடு பெருமாள் வாத்தியாரும் சேர்ந்து விளையாடுவார். தெருவில் அவ்வப்போது வரும் ஐஸ், சுண்டல் போன்ற தின்பண்டங்களைப் பிள்ளைகள் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்து எங்களோடு சேர்ந்து அவரும் உண்பார்.

நான் பெருமாள் வாத்தியாரை நன்றாக அறிந்துகொள்ளும் சமயம் நான்காம் வகுப்பில் இருந்தேன். படிப்பின் மீது சிறிதும் ஆர்வமற்ற மாணவி நான்.

ஒருமுறை விளையாட்டில் தடுக்கி விழுந்து கால் முட்டியில் இரத்தம் கசிந்து அழ ஆரம்பித்தேன். வீட்டில் யாருமில்லாத காரணத்தால் பெருமாள் வாத்தியார் என்னை மெடிக்கலுக்கு அழைத்துச் சென்று கட்டு போட்டுவிட்டு அழைத்து வந்தார். அன்றிலிருந்து சில வாரங்கள் என்னால் விளையாட முடியாமல் போனது. அச்சமயத்தில்தான் பெருமாள் வாத்தியாரோடு அமர்ந்து நானும் விளையாடும் மற்ற பிள்ளைகளை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

அப்படி ஒருநாள் “உனக்கு ரெண்டாம் வாய்ப்பாடு தெரியுமா? கீதா,” என்று பெருமாள் வாத்தியார் என்னிடம் கேட்டார்.

“தெரியாது சார்” என்று பதிலுரைத்தேன்.

தெரியாதது தப்பில்லை. தெரிஞ்சிக்கலாம். ஆர்வம் இருக்குதுன்னா எல்லாத்தையும் பழகிக்கலாம். என்றார்.

நான் ஆமாம் என்பது போல தலையசைத்தேன்.

“நீ பெரிசாகி படிச்சி என்னவாகப் போற” என்றார் மீண்டும் பெருமாள் வாத்தியார்.

சில நிமிடங்கள் யோசித்த நான் “எனக்கு தெரியல சார்.” என்னவாகனும் என்றேன்.

டீச்சர், டாக்டர், வக்கீல் அந்தமாதிரி. கேக்குறேன் என்றார்.

அதுக்குலாம் பள்ளிக்கூடம் முடிக்கணும்ல சார். எனக்கு அதுவே கஷ்டமா இருக்கே. எனக்குப் படிக்க வரல சார் என்றேன்.

வாத்தியார் சிரித்தார். பின் அவர் கையில் இருந்த ஒரு புத்தகத்தில் ஏதோ இரண்டு மூன்று வார்த்தைகளை எழுதி என்னைப் படிக்கச் சொன்னார்.

மிக சிரத்தையோடு “எ ன க் கு ப் ப டி க் க ப் பி டி க் கு ம்” என்று அவர் எழுதியதை எழுத்துக்கூட்டி வாசித்தேன்.

இதோ உனக்குப் படிக்க வருதே.. என்று சிரித்தார் வாத்தியார்.

நானும் தொலைத்த எதையோ கண்டடைந்ததைப் போல அவருடன் சேர்ந்து சிரித்தேன். ‌

“மூனாவது நாலாவதுல எழுத்துக்கூட்ட வரதே பெருசு தான.. அதலாம் நீ வந்துருவ.. படிச்சிக்கோ. உங்க அப்பா அம்மா கஷ்டப்படுறாங்க.. அதுக்கு ஒரே பலன் நீ படிச்சி மேல வரது தான். படிச்சிக்க” என்றார் பெருமாள் வாத்தியார்.

வேலுவின் அன்றைய முக மலர்ச்சி சிறுவயதில் எழுத்துக் கூட்டி வாசித்த பின் பெருமாள் வாத்தியாரோடு நான் சேர்ந்து சிரித்த நாளின் மகிழ்ச்சியைக் கண்முன் கொண்டு வந்தது.

நினைவில் இருந்த விளையாட்டு முற்றத்தில் பெருமாள் வாத்தியாரும் அவர் கையிலிருந்த புத்தகமும் அவருக்கு அருகில் ஒரு சிறுமியும் அமர்ந்துகொண்டு வேலுவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நான் மௌனத்தில் ஆழ்ந்தேன்.


Art : Bon B

கீதா கார்த்திக் நேத்தா
கீதா கார்த்திக் நேத்தா

ஆசிரியர் குறிப்பு.

சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.

Share :

8 responses to “நான்காம் வகுப்பு (அ-பிரிவு)”

  1. Maheswari N
    August 1, 2025

    உங்கள் எழுத்து மனதுக்குள் ஏதோ ஒரு மேஜிக்கை நிகழ்த்துகிறது கீதா. வாழ்த்துகள்.!! தொடர்ந்து எழுதுங்கள்.

    Reply
    1. கீதா கார்த்திக் நேத்தா
      கீதா கார்த்திக் நேத்தா
      August 1, 2025

      மகிழ்ச்சி மேம். ????❤️

      Reply
  2. Gurusamy G
    Gurusamy G
    August 1, 2025

    இது படிச்சிட்டு என் உணர்வை எப்படி சொல்லனு கூட தெரியலை கீதா . ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி அப்படீனுறமாதிரி உனக்கு ஒரு பெருமாள் வாத்தியார் வேலுவிற்கு ஒரு கீதா டீச்சர்.பள்ளிக்கூடம் போய்தான் பசங்களுக்கு சொல்லி கொடுக்குமா என்ன உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீ கத்துக்கிட்டத நீ உணர்ந்தது நீ அனுபவத்தால் உணர்ந்தது ஏதாவது ஒரு வகையில் மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்த்திரு.அனுபவ பாடம் கற்றுக் கொடுப்பதை வேறு என்றாலும் கற்றுக் கொடுக்க முடியாது கீதா டீச்சர் ????❤️????

    Reply
    1. கீதா கார்த்திக் நேத்தா
      கீதா கார்த்திக் நேத்தா
      August 1, 2025

      மகிழ்ச்சி சார் ☺️

      Reply
      1. STALIN
        August 3, 2025

        Manavarin mattrathirku teacherin alagana seyal

        Reply
  3. STALIN
    August 3, 2025

    Manavarin mattrathirku teacherin alagana seyal

    Reply
  4. Kulasekar
    August 11, 2025

    வாழையடி வாழை.
    பெருமாள் வாத்தியார்
    கீதா மிஸ்
    சங்கிலித் தொடராக தொடரட்டும்.

    Reply
    1. கீதா கார்த்திக் நேத்தா
      கீதா கார்த்திக் நேத்தா
      August 22, 2025

      நன்றி சார்

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top