காலத்தின் முன்னே எப்போதும் பதினாறு வயது மாறாத பருவப் பெண்ணாய்த் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நான் இப்போதெல்லாம் சோர்ந்து அமர்ந்திருக்கிறேன். நீண்ட காலமாக மரணம் எங்கள் வீட்டு வாசலை நீங்காமல் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்த விருந்தாளியாக இருந்து கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம். என்னுடைய அப்பா, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், சித்திகள், அத்தைகள், மாமாக்கள் என்று நெருங்கிய உறவினர்கள் அனைவரும் அதாவது என்னுடைய பால்யத்தில் என்னை வளர்த்தெடுத்து ஆளாக்கியவர்கள் வயது முதிர்ந்தும், நோய்வாய்ப்பட்டும் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு நீங்கிக் கொண்டிருந்தார்கள். நான் வளர்ந்து பெரிய மனுஷியாகி குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டாலும் அவர்கள் எல்லோரும் என்னை ஒரு சிறு பெண்ணாகவே நடத்தினார்கள். அப்படியென்றால் அவர்கள் என்னை மதிப்பற்ற முறையில் நடத்தினார்கள் என்ற அர்த்தமில்லை. மாறாக அவர்கள் என் பருவ வயதினைத் தாண்டவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இல்லை இல்லை அது அப்படி இருக்க வாய்ப்பில்லை. நான்தான் வளர விரும்பாமல் அவர்கள் என்னைச் சிறு பெண்ணாகவே நடத்தும்படியாக அவர்களைத் தூண்டினேன் என்று சொல்லலாம்.
இந்த உலகத்தில் நான் நம்ப விரும்பாத உண்மை என்பது என்னவென்றால் அது நான் வளர்ந்திருக்கிறேன், என் வயது பதினாறைத் தாண்டி மூன்று பத்து வருடங்கள் ஆகிவிட்டது என்பதைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாததுதான். வாழ்வின் முழுப் பாதியில் சரி பாதியை நான் நிறைவு செய்யப் போகிறேன் என்பதை மறக்க விரும்பினேன். அதை மறைக்கும் விதமாக இந்த உலகம் இன்றும் எனக்குப் புரியாத ஒன்றாக இருப்பதாகவே என் உறவுகளிடம் காட்டிக் கொண்டேன். உதாரணமாக என் பெரியம்மாவிடம் நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என இரண்டாயிரத்து முப்பதாவது முறையாகக் கேட்டிருப்பேன். என் மாமாவிடம் எங்கள் குலதெய்வம் உருவான மூலக்கதையைச் சொல்லுங்கள் என்பேன். அவர் பதிலுக்கு, “ஒரு லட்சம் தடவை உனக்கு அதைச் சொல்லிவிட்டேன்” என்று ஒரு லட்சத்து ஒன்றாவது முறையாக அதை எனக்குச் சொல்வார். பெரியப்பாவிடம் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் என்ன வேறுபாடு என்ன என்பேன். அவர் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஆரம்பித்து சோவியத் ரஷ்யாவின் வரலாறு முழுக்கச் சொல்லி முடிப்பார்.
உறவினர் திருமணச் சடங்குகளில் என்னை நலங்குச் சடங்கை முன்னால் நின்று நடத்தச் சொன்னார்கள் என்றால் மறுகணம் அங்கிருக்கும் என் அத்தைகளைப் பார்ப்பேன். என் அத்தைகளில் எவராவது ஒருவர் என்னோடு இணைந்து நலங்குச் சடங்கை எனக்கு முதலிலிருந்து கற்றுக் கொடுப்பார்கள். அப்பாவோடு அமர்ந்து டீக்குடிக்கும் காலை மாலை வேளைகளில் எங்கள் குடும்பத்தினர் நாடோடியாய்ப் பயணித்த கதையைத் திரும்பத் திரும்பக் கேட்பேன். சித்தியிடம் சித்தப்பாவின் ஒற்றைக்கையைப் பற்றிக் கேட்டால், அவள் சித்தப்பாவின் முதல் மனைவியின் வீட்டார்கள் அவரின் கையைத் துண்டாக்கிய கதையை, அவர்களை அசிங்கமாக வசை பாடியபடிச் சொல்வாள். தூரத்து உறவினர்களைக் காணும் போதெல்லாம் பெரியம்மா முறை இருப்பவர்களை அத்தை என்று சொல்லியும், அத்தை முறை இருப்பவர்களை சித்தி என்றும் மாற்றி மாற்றிச் சொல்வேன். அப்போதெல்லாம் அம்மா என்னை முறைத்தபடி அவர்கள் எந்த வகையில் எங்களுக்கு உறவு என்பதை விளக்கிச் சொல்வாள். இப்படித்தான் அவர்களிடம் எப்போதும் சிறு பிள்ளையாக நின்று கொண்டிருந்தேன். விடாது நச்சரித்து, அவர்களின் நினைவுகளைக் கிளறிக் கிளறி ஆழமாகத் தோண்டியெடுத்து அவர்களின் வாழ்வின் புதையல்களை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு நாளும் பொழுது கழிந்து கொண்டிருப்பதை மிகவும் அச்சமான முறையில் கூர்ந்து கவனிக்கும் சோம்பலான வாழ்வு என்னுடையது.
நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு என்னைத் திருமணம் செய்து கொடுத்து உசிலம்பட்டிக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வாழ அனுப்பி வைத்தார்கள். தினமும் சலவை செய்த தூய்மையான ஆடையை உடுத்திக் கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் என் சிறுவயது கனவாக இருந்தது. ஆரம்பத்தில் டாக்டர் இன்ஜினியர் வழக்கறிஞர் இப்படி ஏதாவது ஒரு வேலையைப் பார்க்க வேண்டும் என்றிருந்த கனவு மெல்ல மெல்ல சரிந்து டீச்சர் அல்லது நர்ஸ் வேலையாவது பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அப்படி எதற்கும் வழியில்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
நான் திருமணம் வேண்டாமென்று மறுத்தபோது என் உறவினர்கள் ஒருவரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. நான் திருமணம் செய்து கொள்வதே நல்லது என்று வற்புறுத்தினார்கள். எனக்கு உதவி செய்யாத எல்லோர் மீதும் கோபத்தோடும் வருத்தத்தோடும்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பின் அவர்களோடு பேசவே கூடாது என்று சபதம் கொண்டேன். அவர்களை நேரில் கண்டாலும் சரியாகப் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டேன். எதற்காக அப்படி இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாத அல்லது விசயம் என்னவென்பதையே அறியாத அவர்கள் எப்போதும்போல் அன்பாகப் பேசினார்கள். திடீரென்று அமைதியான பெண்ணாக மாறிய என்னை மீண்டும் கலகலப்பாக மாற்ற அவர்களோடு நான் இருந்த பொழுதுகளையும் நிகழ்வுகளையும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் கணவரோடு அவர்களைப் பார்க்கச் செல்லும்போது, எனக்கும் அவர்களுக்குமான அணுக்கமான அன்பினை என் கணவருக்குத் தெரியப்படுத்தும் விதமாக விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.
இப்படித்தான் என் மாமா வீட்டுக்குச் சென்றபோது அவர் என் கணவரிடம் “லீலா நல்லா ருசியா சமைச்சுக் குடுக்குதா” என்று ஆரம்பித்தவர் என் கணவரின் பதிலை எதிர்பாராமல், “அதெல்லாம் நல்லா சமைக்காமலா இருக்கும். ருசி தெரியாத வயசுலயே சாப்பாடு ருசியா வக்கனையா இருந்தாதான் சாப்பிடும். லீலாவுக்கு அப்ப ஒரு நாலு வயசு இருக்கும். என் மூத்த அக்கா மகள கேரளாவுல சீந்தலார்ன்னு ஒரு இடத்தில கல்யாணம் பண்ணிக் குடுத்தோம்”
மாமா அந்தப் பேரைச் சொன்னதும் அந்த ஊரில் நான் பார்த்த தேயிலைத் தோட்டம் மட்டும் பச்சைப்பசெலென்று நினைவில் வந்து நின்றது. மற்ற எதுவும் ஞாபகமில்லை. அந்தப் பசுமையை யோசித்தபோது ஏற்பட்ட அமைதியும் குளுமையும்தான் கடந்தகாலத்தின் அற்புதங்களைப் பின்தொடர்ந்து செல்லும் பிரேமையை முதன்முதலில் எனக்குள் ஏற்படுத்தியது.
கடந்த கால கற்பனையில் மிதந்து கொண்டிருந்த என்னை “லீலா உனக்கு அந்த ஊரு ஞாபகம் இருக்கா” என்று கேட்க நான் சிரித்தபடி சந்தேகத்தோடு “ஞாபகம் இருக்கு மாமா” என்றேன். மாமா விஷயத்தைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
“எங்க சொந்தக்காரங்க நாங்க மொத்தம் ஐம்பது அறுபது பேரு இருந்திருப்போம். பொண்ண மறுவீடு விட ரெண்டு வேன் புடிச்சு மாப்பிள்ள வீட்டுக்குப் போனோம். எங்க ஊர்லருந்து வெள்ளனவே கிளம்பிட்டதால யாரும் வீட்டுல சாப்பிடல. எல்லாரும் மாப்பிள்ள வீட்ல சாப்டுக்கலாம்னு முடிவு பண்ணிக் கிளம்பிட்டோம். சீந்தலார்க்குப் போய்ச் சேரவே நாலஞ்சு மணி நேரம் ஆகிப்போச்சு. அது எப்பவும் மழ பேஞ்சுகிட்டிருக்கிற ஊரு. அன்னைக்கும் நல்லா மழ பேஞ்சு ஊத்துது. மழையில பெரும் பசியெடுக்கும் தெரியும்ல. காலையிலிருந்து சாப்பிடாததால எல்லாருக்கும் பசியில காதடைச்சுப் போயிருச்சு. எப்படா சோறு போடுவாங்கன்னு காத்துக் கெடக்கோம். அவங்க என்னடானா அப்பதான் சாம்பார்ல காய்கறிகளைப் போட்டு வேக வச்சிட்டு இருக்காங்க. ஆம்பள பொம்பளை எல்லாம் பசியில நெளியுது. ஒரு வழியா ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணி சாப்பாட்டைப் போட்டுட்டாங்க. வீடெல்லாம் சொதச் சொதன்னு ஈரமா இருக்கு. ஈரத்துமேல சாக்குப் பாயெல்லாம் விரிச்சு எலையைப் போட்டுச் சூடா பரிமாறுனாங்க. எல்லாரும் காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி சாப்பாட்டுல கைய வச்சு ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டோம். அம்புட்டு நேரம் பசியா இருந்தவங்க முகத்துல சோத்தக் கண்ட ஒரு சின்ன மகிழ்ச்சியோ திருப்தியோ இருக்கனும்ல. அப்படி எதுவுமில்ல. அங்க ஒரு மயான அமைதி. எல்லாரும் வேண்டா வெறுப்பா சாப்பிட்டுக்கிட்டிருக்காங்க. திடீர்னு சாப்பாட்டுப் பந்தியிலிருந்து லீலா கத்தி அழுவுது ’எனக்கு இந்தச் சோறு வேணாம் ஒன்னும் வேணாம். இதுல உப்பு இல்ல புளி இல்ல ஒரப்பில்ல’ன்னு கத்திக் கூப்பாடு போடுது.
பாத்தீங்களா இந்த வயசுலயே இவளுக்கு வாய்க்கு ருசி கேக்குதுன்னு லீலாவைக் கேலி பேசிய பெரிய ஆளுக பூராம், அவ சொன்ன மாதிரி சாப்பாட்டுல கொஞ்சம் உப்பு கம்மியாத்தான் இருக்குன்னு தயங்கித் தயங்கிச் சொல்ல, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லா எலையிலயும் கொஞ்சம் உப்பைக் கொண்டு வச்சாங்க. அதுக்கப்புறம்தான் கொஞ்சமாச்சும் சாப்பிட முடிஞ்சது இல்லன்னா யாரும் சரியாச் சாப்பிடாம எலையை மூடி வச்சுட்டு வந்திருப்போம்.”
என் கணவர் சிரித்தபடி என்னைப் பார்த்தார். அப்போது என் நினைவில் எப்போதுமே இல்லாத அந்த நிகழ்வைக் கற்பனை செய்துகொண்டிருந்தேன். அது ஒரு அழகிய கனவாக எனக்குள் அற்புதமான சித்திரத்தை ஏற்படுத்தியது. தேயிலை வாசமும் மழையின் ஈரவாடையும் என் நாசியிலும் நரம்பு நாடியிலும் எதிரொலித்தது. அந்தக் கணத்தில் உப்புச்சப்பில்லாத அந்தச் சாம்பார் வாசனையைக்கூட என்னால் உணர முடிந்தது. அந்தக் கற்பனையில் என் உடலில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்த அந்த உணர்வு இதுவரை நான் உணராத மகிழ்வைத் தந்தது.
அந்த நிகழ்வுக்குப் பிறகு என் உறவினர்கள் என் பால்ய கால பதின்ம கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்திப் பேசும்போதெல்லாம் எனக்குள் அது ஒரு கதையாக விரிந்தது. ஒரு குழந்தை யானை மேலேறி உலகத்தைப் பார்ப்பதைப்போல் அது எனக்கு உற்சாகத்தையும் அளித்தது.
அதன் பின் என் ஞாபகத்தின் கீழடுக்கில் ஒளிந்திருந்த கடந்த காலத்தின் சிறுசிறு நுணுக்கங்களையும் பூதக்கண்ணாடியில் பார்ப்பதைப்போல பெரிதாக்கிப் பார்க்கத் தொடங்கினேன். சலிப்பான என் நாட்கள் சீர்படத் தொடங்கின. மாதத்திற்கு இரு முறை என் சொந்த ஊருக்குப் போய் உறவுகளைச் சந்தித்து நினைவுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
கடந்த காலத்தைப் பற்றி தீவிரமாக யோசிப்பது முதலில் ஒரு விளையாட்டைப்போல ஆரம்பித்தது போகப்போக நான் தீவிரமாக அதில் இறங்கி ஆட ஆரம்பித்தேன். கடந்த காலம் வசீகரமும் சௌந்தர்யமும் நிரம்பி ஒரு லாகிரியைப்போல எனக்குள் மிதக்கத் தொடங்கியது. மூச்சு முட்ட நானும் அதில் மிதந்தேன்.
அதே சமயத்தில் பழைய நினைவுகளை ஞாபகத்திற்குக் கொண்டுவரும்போது நான் விரும்பாத சில விசயங்களும் மேலெழுந்து வந்தன. என் நினைவிலிருந்து அழித்து வைத்திருந்த என்றுமே அதை யோசிக்கவே கூடாதென்று மறைத்து வைத்திருந்தவைகள் என்னைச் சங்கடப்படுத்தின. அதற்காக என்னால் ஞாபகங்களை உயிர்ப்பிக்காமல் இருக்க முடியவில்லை.
நினைவலைகளைத் தொகுத்துக் கொள்வதன் மூலம் நிறைய கதைகளை உருவாக்கி அதற்குள் வாழ விரும்பினேன். அதில் தோன்றும் வெளிச்சமும் இருட்டுமே நான் செல்லும் பாதையைத் தீர்மானிக்கப்போகிறது, நான் அல்ல. என்னுடைய மனிதர்கள் இன்று அவர்கள் என்னுடைய மனிதர்களாக இல்லாத போதும், அவர்கள் தந்த மகிழ்ச்சியும் காயங்களுமே என்னுடன் பயணப்படப் போகின்றன. அவை எனக்கு மிகப்பெரும் தனிமையைத் தந்தாலுமே கூட அதில் கரைந்துவிடத் துணிந்துவிட்டேன். நிகழ்காலத்தின் வெறுமையின் நிழல் கோடுகள் கடந்தகாலத்தால் அழிக்கப்பட்டுவிடும் என்பது உறுதியாகத் தெரிந்தது. எனது ரகசிய அந்தரங்களோடு பட்டாம்பூச்சியின் சுதந்திர வாழ்வை மீண்டும் தரித்துக்கொண்டேன். பறத்தலின் குறுக்கே எதிர்படும் தீக்காடுகளையும், சுருட்டி மண்ணுக்குள் புதைத்துவிடும் சூரைக்காற்றினையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன்.
சீந்தலார் விசயத்தைப் பற்றி மாமா சொன்னதும் ஏற்பட்ட அமைதியான அற்புதத் தருணத்தோடு சேர்ந்து என் உடல் அருவருப்பில் பதற்றமடைந்தது. அது எதற்கென்று தெரியாமல் தவித்தேன். நீண்ட நாள்களாக அதைப்பற்றி எவ்வளவு யோசித்தும் எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. அது நான்கு வயதில் எனக்கு ஏற்பட்ட அருவருப்பின் நினைவலை என்று மட்டும் புரிந்தது. அப்படி அந்த வயதில் என்னைப் பதற்றமடைய வைத்தது எதுவென்று என் மூளையில் மின்சார அலைகள் அங்கும்மிங்கும் ஓடியபடி சிந்திக்கத் தொடங்கின. என் மூளை அருவருப்பை உணர்ந்தால் ஒற்றைத்தலைவலி உடனே தொற்றிக் கொள்ளும். மாத்திரையைப் போட்டு தலையை இறுக்கமாக ஒரு துண்டால் கட்டிக்கொள்வேன். பின் அதைப்பற்றி யோசிக்கவே கூடாதென்று நினைப்பேன். ஆனால் தலைவலி நின்றதும் மூளை தன்னியல்பாகவே மீண்டும் அந்த நினைவலைகளை மீட்டெடுக்கும் வேலையைச் செய்தது. அப்போது ஒழுங்கற்ற வடிவில் அடையாளம் காண முடியாத பல முகங்கள் அலையலையாய் வந்து வந்து போயின.
புலனாகாத அந்த அருவருப்பு எப்போதுமே என்னை அழுத்திக் கொண்டிருந்ததும் மனதில் கழிவாக அது சேகரமாகி இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கழிவை மனதிலிருந்து வெளியேற்றினால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றியது.
விபாசனா என்னும் யோக முறையில் தியானத்தின் மூலம் அப்படியான மனதின் கழிவுகளை வெளியேற்ற முடியும் என்பதை இந்த நாப்பதாறு வயதில் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அத்தனை தெளிவில்லாததால் அந்த விசயத்தை வெளிக்கொண்டு வருவதற்காக எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் இயல்பாகவே அமைதியான முறையில் தியானத்தில் இருப்பதைப்போல நினைவலைகளை மீட்டெடுக்க முற்பட்டுக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் நான் முருங்கைக்கீரை ஆய்வதை ஒரே சிந்தனையில் செய்துகொண்டிருந்தபோது, இளம்பச்சை நிறத்திலிருந்த புழு ஒன்று என் சேலையிலிருந்து கழுத்தில் ஊர்ந்து ஏறியது. அருவருப்பில் கத்தி அதை வீசி எறிந்தேன். ஏதோ பெரிய அநீதி எனக்கு இழைக்கப்பட்டதைப்போல கத்தி அழுதேன். பரீச்சை பேப்பரைத் திருத்திக் கொண்டிருந்த கணவர் பதற்றத்தோடு ஓடிவந்து என்னவென்று கேட்டார்.
வெயிலில் பட்டுப்போல ஊறிச் சென்று கொண்டிருந்த புழுவைக் காட்டி “என் ஒடம்புல ஏறிருச்சு” என்றேன்.
“லூசா நீ இதுக்கா அழுவே. புழுவத் தட்டிவிட்டுட்டுப் போகாம உசுர் போன மாதிரி அழுவுற” எனச் சொல்லிவிட்டுப் புழுவை நசுக்கி வெளியே தூக்கிப்போட்டார். அது மேலும் எனக்கு அருவருப்பைக் கொடுத்தது. அந்தத் தருணத்தில் நான் மறைத்து ஒழித்துவைத்திருந்த புலி மெல்ல தன் பற்களைக் காட்டி எட்டிப்பார்த்தது. என் உடலில் ஓடிக்கொண்டிருந்த அந்தப் புதிர் அலைகள் எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த உருவத்தினைத் தேடி என் அணுக்களைத் தூண்டிக்கொண்டிருந்தன. கடைசியில் அந்த உருவத்தை என் மனக்கண்ணில் வடித்து விட்டேன்.
மழை பெய்து கொண்டிருந்த சீந்தலார் வீட்டின் கொல்லைப்புறம் மூளை அடுக்கிலிருந்து நீந்தி மேலேறி வந்தது. கொல்லைப்புறத்தின் அழகும் சொல்ல முடியாத அருவருப்பும் ஒரே சமயத்தில் அலையாடின. மழைஓசை சுகந்தமாய் எழும்பிய அதேநேரத்தில் தலையில் சுத்தியலால் அடித்ததைப் போல வலியும் பரவியது.
மருதாணி, கருவேப்பிலை, வெள்ளை சிவப்பு மஞ்சள் நிறங்களில் ரோஜாக்கள், செம்பருத்திப் பூக்கள், இன்னும் பெயர் தெரியாத பல மலைப்பூக்களால் கொல்லைப்புறம் மலர்ந்து பூக்காட்டைப்போல் மயக்க வைக்கும் நறுமணத்தோடு இருந்தது. நான் பரவசத்தில் மழைநீர் கோர்த்திருந்த ரோஜாக்களைக் கைகளில் ஏந்திக் கொண்டிருந்தேன். பூக்களைப் பறித்தால் யாராவது திட்டுவார்களோ என்ற பயத்தில் அதைப் பறிப்பதா வேண்டாமாவென்ற தயக்கத்தில் யாராவது வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். கல்யாணப் பெண்ணான தேன்மொழி அக்கா அழுக்குப் பாத்திரங்களைத் துலக்குவதற்காகக் கொல்லைப்புறம் வந்தாள். நான் நின்ற கோலத்தைப் பார்த்து அன்போடு சிரித்தவள் ”ரோஜா வேனுமா பிடிங்கிக்க” என்றாள். நான் அக்காவை நன்றியோடு பார்த்துச் சிரிக்க, அப்போது அக்காவின் கணவர் அங்கே வந்து அக்காவை வீட்டுச் சந்தின் மதில் மறைவுக்குத் தள்ளிக்கொண்டு போனார். ஏதோ ஒரு ஆர்வத்தில் அவர்கள் பின்னால் சென்றேன். மாமா அருகில் வரவர அக்கா அவரைத் தள்ளிவிட்டபடி இருந்தார். திமிறிய அக்காவை மாமா கட்டிப்பிடிக்க அவள் பிடிகொடுக்காமல் விலகினாள். உடனே கோபத்தில் மாமா அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து அவள் கழுத்தைக் கடித்து வைத்தார். அக்கா வலியில் வாய மூடி அழுதாள். அக்கா கன்னத்தில் இன்னும் ஒரு அடிகொடுத்த மாமா அங்கு நின்றுகொண்டிருந்த என்னை அப்போதுதான் பார்த்தார். தன்னுடைய பெரிய முட்டைக் கண்களால் என்னை முறைத்துப் பார்த்தவர் திடீரென்று என்னைத் தூக்கி என் உதட்டில் மாறி மாறிக் கடிப்பதைப்போல் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். நான் கால்களை உதறி அழ ஆரம்பித்தேன். அக்கா ஓடிவந்து அவரை அடித்துத் தள்ளி என்னை அவரிடமிருந்து வாங்கி, அழுதுகொண்டிருந்த என் வாயைப் பொத்தினாள். அந்த முட்டக்கண் மாமா எங்கள் இருவரையும் முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து போனார்.
நான் என் உதட்டை விடாமல் துடைத்துக்கொண்டே “அவன் என்னக் கடிச்சிட்டான் என் அப்பாட்டயும் அம்மாட்டயும் சொல்லுவேன்” என்று அழ, பூக்கள் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்ற அக்கா “இங்க இருக்கிற பூவெல்லாம் ஒனக்குத்தான். வேனும்னா எல்லாத்தையும் பிடுங்கிக்க. அம்மா அப்பாட்ட இதைப்பத்திச் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னேன்னா அந்த மாமா என்னை இன்னும் மோசமா அடிப்பாரு. அக்கா பாவம் இல்லயா” என்று என் முகத்தைப் பிடித்துக் கெஞ்சினாள். பின் நிறைய பூக்களையும் மருதாணியையும் பறித்து ஒரு துணியில் கட்டி என்னிடம் கொடுக்க, நான் அதை அம்மாவிடம் எடுத்துக் கொண்டு ஓடினேன். அங்கு நடந்தது பின் எப்போது என் நினைவின் பிடியிலிருந்து நகர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
மிச்சமிருந்த அருவருப்பில் என் உதடுகளை அழுந்தத் துடைத்துக் கொண்டேன். என் கணவர் என் செய்கையைக் கண்டு ”என்னாடி ஒனக்கு நெசமாவே லூஸு புடுச்சிருச்சா. ஒதட்டப் புடுச்சு இப்படித் தொடைக்கிற” என்று சொல்லிவிட்டு மீண்டும் பரீச்சைப் பேப்பரைத் திருத்தச் சென்றுவிட்டார்.
அதன்பின் சிறிது நாள்கள் கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்தேன். ஆனால் எனக்குக் குழந்தைகளும் இல்லாததால் நிகழ்காலத்தில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் போனது. எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடவும் தேவையில்லாமல் இருந்தது. சமைப்பதைத் தவிர நிகழ்காலத்தில் நான் செய்வதற்கு எதுவுமில்லை. ஒரு செக்குமாட்டைப் போல் செய்வதையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தேன்.
ஒருமுறை எங்கள் வீட்டு முற்றத்து ஓட்டில் ஒரு புறா வந்தமர்ந்தது. ஒரு அரை மணி நேரம் அது எங்கேயும் அசையாமல் அதன் எதிர்த்திசையில் இருந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. நானும் அசையாமல் அதை அரை மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் வெறுமை பெருகிப் பெருகி ஊற்றெடுத்தது. புறாவின் கண்களிலும் அதே வெறுமையும் அச்சமும்தான் இருந்தன. பின் ஒரு புள்ளியில் புறா தன் உடலை உலுக்கி வானத்தை நோக்கிப் பறந்தோடியது. நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இறக்கை இல்லாத என் தோள்களைக் கண்டு அவமானத்தில் குமைந்தேன். கனவுகளற்ற நிகழ்காலம் ஒரு சவத்தைப் போல கனத்தது.
நோக்கமும் லட்சியமும் இல்லாத வாழ்விலிருந்து புறப்பட்டுச் செல்ல எந்தச் சிறகுகளும் எனக்கில்லை. ஆனால் கற்பனையில் காலத்தை மயங்க வைக்கும் ஒரு கடந்த கால வெளி இருந்தது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். கண்ணுக்குப் புலனாகாதவாறு பளப்பளப்பான காகிதத்தில் என் முன்னால் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கடந்த காலத்தைப் பிரிக்கத் தொடங்கினேன்.
இப்போது இந்த நிகழ்காலத்தில் யாராவது என்னிடம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் கடந்தகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் சொல்வேன்.
ஒன்றிரண்டு உறவுகளைத் தவிர கிட்டத்தட்ட எல்லா நெருங்கிய உறவினர்களும் மரித்துவிட்டார்கள். நான் கடந்தகாலத்தை வாழ்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டார்கள். எனக்கு அது பெரிய வெறுமையைக் கொடுத்தது. அதை உடனடியாக மறைக்க விரும்பி இந்த வாழ்க்கையில் என் நினைவில் இருக்கும் முதல் ஞாபகம் எதுவென்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
ஒரு பரந்த இடத்தில் காம்பவுண்ட் சுவரைப்போல சுற்றிப் படலடைத்த இரண்டு மூன்று குடிசை வீடுகளும் திண்ணையும் அடுப்படியும் கொண்ட இடத்தில் நான் இருக்கிறேன். அது என் கொள்ளுப்பாட்டி சீனியம்மாவின் வீடு. உடல்நலமில்லாத பாட்டி வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருக்கிறாள். நான் அந்தக் கட்டிலைச் சுற்றி ரவுண்டடித்துக் கொண்டே இருக்கிறேன். ’ஏபிசிடி உங்கப்பன் தாடி வந்தா வாடி வராட்டி போடி, ரிங்கா ரிங்கா ரோஸஸ், கரகரவண்டி காமாட்சி வண்டி இதில் எந்த விளையாட்டுப் பாடல் என்று நினைவில்லை இந்த மூன்றில் ஏதோ ஒரு பாடலைப் பாடி கட்டிலை இடித்துக் கொண்டே சுற்றுகிறேன்.
கிட்டத்தட்ட அது அவளது மரணப் படுக்கையாக இருந்திருக்கும். ஈனஸ்வரத்தில் முனகும் பாட்டி அப்போதும் என்னிடம் அன்பான குரலில் “சந்திர சூரியரே கட்டிலை ஆட்டாதத்தா பாட்டிக்கு ஒடெம்பெல்லாம் வலிக்குது” என்று சொல்கிறாள். “சந்திர சூரியரே சந்திர சூரியரே” என்று என் கொள்ளுப் பாட்டி கொஞ்சுவதுதான் என் முதல் ஞாபகமாக இருக்கிறது. அதைத்தவிர அவளைப்பற்றிய எந்த ஞாபகமும் இல்லை.
காலம் வெளிக்கனவு 1
முந்தைய நாள் பகலும் இரவும் இடியும் மின்னலுமாய்க் கொட்டிய மழை, மலைக்குப் பின்னே எச்சரிப்பதைப்போல ஒளிர்ந்த சூரியனைக் கண்டு விலகி ஓடியது. பொந்தில் அடைந்து மூச்சுமுட்டிக் கிடந்த எலியைப்போல மழை நின்றதும் விருட்டென்று எல்லோரும் தெருவுக்கு ஓடிவந்தோம். எங்கள் தெரு ஏதோ கனவில் பீடிக்கப்பட்டிருப்பதைப்போல பிரமாண்டமாய்க் காட்சியளித்தது. எங்கள் கண்ணுக்குப் புலப்பட்ட அழகைக் கண்டு முதலில் திகைத்து நின்றோம். ஊரின் எல்லாத் தெருக்களும் காட்டு வெள்ளம் கொண்டு வந்த குறுமணலால் நிரம்பியிருந்தது. அதைப் பார்த்தபோது எங்கள் வீடெல்லாம் ஆற்றங்கரையில் இருப்பதைப்போன்ற தோற்றத்தைத் தந்தது. பொன்வெயில் பட்ட குறுமணல் தங்கத்தைப்போல மின்னியது.
முதலில் அது நிஜமற்ற ஒன்று என்றும் எங்களை வசியப்படுத்துவதற்காகவும், ஏதோ மாயாஜாலத்துக்குள் எங்களை இழுத்துச் சிக்கவைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட பொய்க்கனவு என்றும் பயந்து, தெருவுக்குள் காலடி வைக்காமல் வாசல்படிகளிலும் எங்கள் திண்ணைகளிலும் ஏறி நின்றோம். பின் பெரியவர்கள் தெருவில் இறங்கி நடப்பதைக் கண்டு, அதில் எந்த ஆபத்தும் இல்லையென்று முடிவுசெய்து குழந்தைகள் நாங்களும் மெல்ல தெருவில் இறங்கி, உற்சாகம் பொங்கக் கூக்குரலிட்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தபடி, ஆற்றங்கரையாகிப்போன எங்கள் தெருக்களில் கொட்டமடித்தோம். மழை வெள்ளம் காக்கா சிப்பிகளையும் கிளிஞ்சல்களையும் கூழாங்கற்களையும் எங்கள் தெருக்களில் கொண்டு வந்து சேர்த்திருந்தது. பொக்கிஷத்தைச் சேகரிப்பதைப்போல ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டியும் போட்டிபோட்டுக்கொண்டும் மணலைக் கிளறினோம். பின் அவரவருக்குப் பிடித்தமான விளையாட்டை விளையாடினோம்.
நான், அன்புமதி, கயல்விழி, வண்ணக்கிளி, இளவரசி நாங்கள் ஐந்து பேரும்தான் நெருங்கிய தோழிகள். எங்கள் அனைவருக்கும் ஒரே வயது அல்ல. ஒன்றிரண்டு வயது முன்னும் பின்னுமாக இருந்தோம். நான், அன்புமதி, கயல்விழி நாங்கள் மூவரும் ஒரே வகுப்பில் படித்தோம். வண்ணக்கிளியும் இளவரசியும் எங்களைவிட ஒரு வகுப்பு அதிகமாகப் படித்தார்கள். இருந்தாலும் தெருவில் விளையாடும்போது நாங்கள் ஐந்துபேரும் ஒன்றாகவே இருந்தோம். எங்களோடு படித்த பாலன், பிரபாகரன், சுந்தரமூர்த்தி, சம்பத், செந்தில் மாறன் எப்போதாவது எங்களோடு இணைந்து விளையாடுவார்கள். ஆனால் அவர்கள் தெருவில் இருக்கும் மற்ற பெரிய பையன்களோடு விளையாட ஆரம்பித்த பிறகு எங்களோடு விளையாடுவதைத் தவிர்த்தார்கள். நாங்களும் அவர்களோடு வருகிறோம் என்று சொன்னாலும் துரத்திவிட்டனர். அதிலிருந்து ஆண்குழுவிற்கும் எங்களுக்கும் போட்டி உருவாகியது. அவர்களின் ஒருவன் தனியாக வரும்போது அவனை நாங்கள் சேர்ந்து கேலி செய்து துரத்துவதும், அதேபோல் எங்களில் யாராவது சிக்கினால் அவர்கள் துரத்துவதுமாய் ஒரு அறிவிக்கப்படாத போர் அங்கே இருந்துகொண்டிருந்தது. எங்களின் ஓயாத சண்டையால் வெறுப்படைந்த பெரியவர்கள் பெண் பிள்ளைகள் பெண்பிள்ளைகளோடும், ஆண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளோடும் மட்டும் விளையாட வேண்டும் என்று பிரித்துவிட்டார்கள்.
அவ்வளவு மழைவெள்ளம் ஊருக்குள் புகுந்தும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யமடைந்தனர். எங்கள் ஊர் மேட்டில் இருந்ததுதான் அதற்கான காரணம் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். இறக்கமான தெருக்களின் வழியாகவும், எங்கள் தெருக்களில் இருந்த பெரிய பெரிய சாக்கடை வழியாகவும் வெள்ளநீரெல்லாம் வழிந்தோடி, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஆற்றுப்பாலத்தில் சென்று சேர்ந்தது. வீடுகள் மூழ்காத ஒருவிதமான நிம்மதி எல்லோர் மனதிலும் இருந்தது.
எங்களின் அம்மாக்கள் தெருவில் கிடந்த மணலை அள்ளி எங்கள் கொல்லைப்புறங்களிலும் வீட்டு வாசல்களிலும் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அது எங்கள் விளையாட்டைத் தடுப்பதற்கான சதிவேலையென்று நாங்கள் எரிச்சலடைந்தோம். மணலை அள்ளாதீர்கள் என்று கத்தினோம். அவர்கள் எங்களைப் பொருட்படுத்தவே இல்லை.
மலை ஓய்ந்துவிட்டதால் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்படி பெற்றோர்கள் எங்களைத் துரத்தினார்கள். அன்று நாங்கள் எதற்கும் அடங்காத பிள்ளைகளானோம். அவர்கள் எங்களை விளார்களால் சாத்துவதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், சிரித்தபடி அடிகளை வாங்கி மணல் தெருக்களில் அங்கும் இங்கும் திசைதெறிக்க ஓடினோம். அதைப் பார்க்கும்போது பெரியவர்களும் எங்களோடு சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாடுவதைப் போலிருந்தது. தாங்கள் இன்னும் உற்சாகத்தில் கொக்கரித்தோம்.
அந்த அற்புதக் கணத்தைத் தெருவில் அநாதையாக விட்டுச் செல்ல எங்களால் முடியவே முடியாதென ஒட்டுமொத்தமாக முடிவு செய்தோம். “பள்ளிக்கூடத்திற்கு இன்று விடுமுறை” என்று நாங்களே அறிவித்தோம். எங்களைக் கட்டுப்படுத்த முடியாத அம்மாக்கள் “தொலைஞ்சு போங்க பதவக் காடுகளா” என்று சொல்லிவிட்டு, மழையில் சிதிலமடைந்த எங்கள் வீட்டுக் கூரைகளை மேய்வதற்கும் கரைந்த மதில் சுவர்களைச் செம்மண்ணைக் குழைத்துப் பூசுவதற்கும் சென்றுவிட்டார்கள்.
அன்று கிழக்கு மலைக்கும் மேற்கு மலைக்கும் இடையே எங்கள் ஊரின் மணலோடிய தெருக்கள், ஊருக்குள் ஆறு ஓடுவதைப்போலவே காட்சியளித்தன. கனவுலகத்தைப்போன்று தோன்றிய அப்படியான இயற்கையின் அழகினை அதற்கு முன்னும் பின்னும் நான் கண்டதில்லை. ஊரைவிட்டு எவ்வளவு தூரம் நான் விலகியிருந்தாலும் ஊரின் மீதான வசீகரமான என் எண்ணத்தைப் பிடித்து வைத்திருந்தது அந்தக் காட்சிதான். என் நினைவில் இருக்கும் ஊருக்கும் இப்போது கட்டடங்கள் எழும்பி, தெருவெல்லாம் தார்ச்சாலையாகிப்போன ஊருக்கும் எந்தத் தொடர்பு இல்லாவிட்டாலும், பளப்பளப்பான பொட்டலத்தில் சுருட்டப்பட்டிருந்த கடந்தகாலம் என்னை வசியப்படுத்தி வைத்திருந்தது. எந்நேரமும் ஊரின் மேலும் கீழுமாக நடந்துகொண்டிருந்தேன்.
கும்மாளமும் கூப்பாடுமாய் நாங்கள் மணலை வாரி இறைத்துக் கொண்டிருந்தபோது மரம் ஒடிந்து விழும் சத்தம் எங்கள் அனைவரின் மகிழ்ச்சியிலும் இடி விழுவதைப் போலிருந்தது. எங்கள் தெருவில் உள்ள மந்தையம்மன் கோவிலில் இருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. எல்லோரும் கோவிலுக்குள் ஓடினோம். பெண் பிள்ளைகளான எங்களுக்கு விருப்பமான பன்னீர் மரம்தான் மழைக் காற்றில் பலமிழந்து போய்ச் சாய்ந்திருந்தது. உடனடியாக எங்களின் அனைவரின் மனதிலும் துக்கம் மின்னல்வெட்டைப்போல் பின்னிப் படர்ந்தது. “ஐயோ பன்னீர் மரம் விழுந்துருச்சு பன்னீர் மரம் விழுந்திருச்சு” என்று அலறினோம். நாங்கள் விளையாடுவதற்கு ஆயிரம் ஆயிரம் பன்னீர்ப்பூக்களைக் கொடுத்த மரம் நொடிந்த கிழவியைப்போல மரித்துப்போனது. அன்றைய எங்களின் கொண்டாட்டம் அதோடு ஓய்ந்துபோனது. எங்களின் விளையாட்டு இடம் பறிபோனதைக் கண்ட ஆண்குழந்தைகள் எங்களைப் பார்த்துக் கொக்கரித்தார்கள். பதிலுக்கு எதிர்க்கூச்சல்போட எங்களுக்கு அப்போது திராணியில்லை. நம்பிக்கை ஒளியற்ற எங்கள் முகங்களில் ஊரின் மொத்தத் தனிமையும் வந்து ஒட்டிக்கொண்டது.
எங்களின் துயரத்தைப் போக்கும்விதமாக அரைப்பரீச்சை விடுமுறைக்காக தாத்தா வீட்டுக்கு வந்திருந்த செங்கனி நாங்கள் விளையாடுவதற்குப் புது இடத்தைக் காட்டினாள். அது அவளின் தாத்தாவுக்குச் சொந்தமான பழைய இடிந்த வீடு. மேல்கூரை இல்லாமல் மொட்டு மதில்களாக நிற்கும் அந்தச் செம்மண் வீடுதான் அதன்பின் எங்களின் ரகசிய உலகமாக மாறியது. அரண்மனையின் அந்தபுரத்தைப்போல யாரும் உள்ளே வராத, ஒருவரும் தொந்தரவு செய்ய முடியாத தனியான இடம். சிதிலமடைந்து மிகச் சாதாரணமாக நிற்கும் அந்த வீடுதான் அந்தத் தெருவிற்குக் கலை லட்சணத்தைக் கொடுத்தது. அந்த வீட்டுக்குள் இருந்தது அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த ஒரு கொய்யா மரம் மட்டும்தான். நாங்கள் மரத்தில் ஏறுவதற்கு சௌகரியமாக அதன் கிளைகள் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த மரத்தில் அமர்ந்துதான் எங்களின் அந்தரங்கமான பல முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறோம். எங்களின் ரகசியக் கனவுகள் அங்கேதான் புடம் போட்டுச் செழித்து வளர்க்கப்பட்டன. செங்கனி விடுமுறை முடிந்து ஊருக்குச் சென்றபின்னும் நாங்கள் விளையாடுவதற்காக அவள் தாத்தாவிடம் எங்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தாள்.
‘கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள்’ என்பது எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் பெயர். அந்நாவலின் ஒரு பகுதி தடாரி இதழுக்காகப் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
Art : ekdoseisglauka.gr
சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்தவர். பூனைகள் இல்லாத வீடு, காட்டின் பெருங்கனவு, அழகம்மா, சோளம் ஆகிய சிறுகதை நூல்களையும் நீங்கிச் செல்லும் பேரன்பு, வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், மிளகு, வேறு வேறு சூரியன்கள் ஆகிய கவிதை நூல்களையும் எழுதி உள்ளார். இயக்குநர் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, பின்னாளில் கள்ளன் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் பரிசு, ஆனந்த விகடன் விருது, சுந்தர ராமசாமி விருது, தேவதேவன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply