தஞ்சை இலக்கியம், கரிசல் இலக்கியம், கொங்கு இலக்கியம், தாமிரபரணி இலக்கியம் எனத் தமிழ் இலக்கியத்தில் நிலங்களைப் பொறுத்துத்தான் எத்தனை வகைமைகள்? இந்த வகைமைகள் நிலத்தினையா குறிக்கின்றன? இல்லை நிலத்தை அதிகாரமாகக் கொண்டிருக்கும் நிலவுடமைச் சமூகத்தின் எச்சமான நினைவுகளையே அடையாளப்படுத்துகிறது. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, மெளனி, எம்.வி.வெங்கட்ராம் என எனக்குப் பிடித்தமான தஞ்சை எழுத்தாளர்கள் அனேகமுண்டு. ஆனால் இவர்களின் புனைவில் வரும் தஞ்சைதான் அசலான தஞ்சையா? இவர்களின் காலத்தில் நிகழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் எங்கும் அடிக்குறிப்பாக இடம் பெறாமல் போனதேன்? எந்த ஊராக இருந்தாலும் அதற்கு வெவ்வேறு முகங்கள் இருக்கின்றன. நிலவுடமைச் சமூகத்தில் பிறந்த ஓர் எழுத்தாளர் தனது புனைவுகளில் காட்டும் நிலத்திற்கும், அதே நிலத்தில் உழைப்புக் கூலிகளாக இருந்து இலக்கியத்திற்கு வரும் எழுத்தாளர் காட்டும் நிலத்திற்கும் எத்தனை வேறுபாடுகளுண்டு.
கீழ்தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகில் சித்தமல்லி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த தியாகி எஸ்.ஜி.முருகையன் குறித்து இன்று எவராவது பேசுவதுண்டா? ஒன்பதாம் வகுப்புப் படிக்கையிலேயே இடதுசாரி கொள்கைகளைப் பேசுகிறார் என்கிற ஒரே காரணத்திற்காகப் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறார். அதன்பிறகு முழுநேரக் கட்சி ஊழியராகப் பணியாற்றியவர் கற்றதெல்லாம் மார்க்சியத்தை மட்டுந்தான். இளம் வயதிலேயே ஊர்த் தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார். பட்டியில் இனத்தைச் சேர்ந்த அவரை எதிர்த்து அன்று போட்டியிட்டவர்கள் எல்லாம் ஆதிக்கச் சாதியில் பிறந்த பெரும் பணக்காரர்கள். ஊர்த் தலைவராக ஆனதோடில்லாமல் நாற்பத்தி எட்டு பஞ்சாயத்துகளுக்குப் பெருந்தலைவராகவும் வெல்கிறார்.
தஞ்சை எழுத்தாளர்கள் உச்சத்தில் தங்களது படைப்புகளை எழுதிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் கீழ்த் தஞ்சை மாவட்டத்தின் உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரும் நம்பிக்கையை விதைத்த முருகையனும் வாழ்ந்து கொண்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே கொல்லப்பட்ட முதல் இந்தியத் தலைவர் அவர். வாழும் காலம் முழுக்கத் தனக்காகவோ தனது குடும்பத்திற்காகவோ எதையும் சேர்க்கவில்லை. குடிசை வீடுதான். அவரைக் குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் சிறிய குறிப்புகூட இல்லை என்பது எத்தனை பெரிய துயரம்?
பாண்டியக்கண்ணனின் சலவான் நாவலில் ஒரு சிறுநகரம் வருகிறது. விருதுநகரும் சில இடங்களில் எனது நகரமான திருமங்கலமும் வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை எவ்விதமான பூச்சுகளும் இல்லாமல் எழுதிய இந்நாவலைக் கரிசல் இலக்கியத்தில் சேர்த்துக் கொள்வார்களா? ஒரு வீட்டின் மலக்கிடங்கைச் சுத்தம் செய்யும் பகுதி நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. எவ்வாறு சுத்தம் செய்வார்கள்? சுத்தம் செய்யும்போது எத்தனை விதமான இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் படித்தால் நான்கு நாட்களுக்கு உறக்கம் வராது. தூய்மைப்பணியாளர்களின் இந்நிலையானது தமிழ்நாட்டின் எல்லாச் சிறுநகரங்களோடும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்த ஒன்றுதான். தின்று கொழுத்து மலத்தைக் கழிப்பவனுக்கும் அதனைச் சுத்தம் செய்வதை வேலையாயச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவனுக்கும் ஒரு நகரம் ஒரே விதமான நினைவுகளைத் தரும்?
கொல்லனின் ஆறு பெண்மக்கள் கதையில் கொல்லனின் இறப்பிற்குப் பின் ஊரின் பிற சாதிக்காரர்கள் கொல்லனின் மகள்களை அரவணைத்துக் கொள்வதாக வருகிறது. கிராமங்கள் போற்றுதலுக்குரியவை, அன்பான மனிதர்களால் நிரம்பியவை என்கிற கருத்தாக்கம் ஆதிக்கச் சமூகத்திலும் பொளாதார ரீதியில் பாதுகாப்பான சூழலில் வளர்ந்தவர்களிடமும் வலுவாக இருக்கிறது. சொத்து சொகத்திற்காக அடித்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு நிலத்தின் மீது எந்தப் புகார்களும் இருப்பதில்லை. சொந்தமாக நிலமில்லாத ஒருவன் தனது வாழ்விற்காக மற்றவர்களின் நிலங்களில் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். கல்வி ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவனைக் காப்பாற்றப் போவதில்லை. கல்விக்காகவும் அதன் பிறகு வேறு வேலைகள் தேடி இடம்பெயரவும் செய்யும் ஒருவனுக்குச் சொந்த நிலத்திலிருந்து எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது? எந்த ஊர் எனக்கு வாய்ப்புகளை வழங்குகிறதோ, எனக்கான அடையாளத்தை வழங்குகிறதோ அதனைச் சொந்த ஊராக நினைத்துக் கொள்ளலாம். ஒரு சராசரி மனிதனாக இந்த நிலைக்கு என்னால் வந்தடைய முடியும். என் வாழ்க்கை பாதுகாப்பானது என்கிற இடத்தில் நான் தேடுவதையும் மற்றவர் குறித்துச் சிந்திப்பதையும் நிறுத்திவிடுகிறேன். ஆனால் ஓர் எழுத்தாளனுக்கு இந்த நிறைவு ஆபத்தானது. நான் வந்து சேர்ந்திருக்கும் நகரில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டவனின் நிலை என்ன?
நூறு வருடங்களுக்கு முன்னால் சென்னை ஒரு நகரமாக வளர்ந்தபோது இதன் வளர்ச்சிக்காக திருவண்ணாமலை திண்டிவனம் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் உழைப்புக் கூலிகளாக அழைத்துவரப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக இந்நகரின் கட்டுமானத்திலும் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய இம்மக்கள் திடீரென ஒருநாள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து துரத்தப்பட்டுச் சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள். இருபது வருடங்களில் வளர்ந்த புதிய துறைகளில் வேலைக்கு வந்தவர்களால் இந்நகரில் எல்லா வசதிகளோடும் வாழ முடியும் போது நூறு வருடங்களுக்கும் மேலாக இந்நகரைக் கட்டமைத்த உழைக்கும் மக்களுக்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏன் ஒரு அரசால் செய்து தரமுடியவில்லை. ஓர் எழுத்தாளன் இவற்றை தானே இந்த சமூகத்தினை நோக்கிக் கேள்வியாக எழுப்ப வேண்டும். நகரங்கள் குறித்துப் பொதுச் சமூகத்தின் மனநிலையில் இருக்கும் எண்ணங்களையே எழுத்தாளர்களும் பிரதிபலிக்கக் கூடாது.
தமிழ் இலக்கியத்தில் பெரும்பாலான படைப்புகள் நிலத்தைப் புனிதப்படுத்துவதையும் அதன் மீதான ஏக்கங்களை ரொமாண்டிசைஸ் செய்வதையும் பிரதானமாகச் செய்திருக்கின்றன. தாமிரபரணி ஆற்றங்கரைக் குளியலும் பறவைகள் வந்தமரும் புங்கமரங்களும் மட்டுமே திருநெல்வேலியின் சித்திரமாக எத்தனை கதைகளிலும் நாவல்களிலும் எழுதப்பட்டுள்ளன. அது மட்டுந்தான் அந்நகரமா? ஒரு நகரமோ கிராமமோ அந்த ஊரைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் ஒரேவிதமான நினைவுகளைத் தருவதில்லை. ஒருவேளை உணவுக்காக என்னைக் கொத்தடிமையாய்க் கைகட்டி நிற்கச் செய்த ஊரைக் குறித்து எந்த வகையில் எனக்குப் பெருமிதமான நினைவுகள் இருக்கும்? இந்தியாவின் பெரும்பாலான சிறுநகரங்களும் கிராமங்களும் இன்றளவிலும் சாதிய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிரம்பியதாகவே இருக்கின்றன. தோழர் நக்கீரன் தனது ஒரு கட்டுரையில் இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் சேரிகள் கிழக்கு திசையிலேயே அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். யாரும் யாருக்கும் சொல்லித் தராமலேயே இந்த நிலவியல் அடையாளங்கள் எவ்வாறு யாரால் உருவாக்கப்பட்டன என்கிற கேள்வி முக்கியமானது.
இன்றைக்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களின் மூலம், உலகின் எந்தவொரு நகரின் முழுமையான வரலாற்றையும் நம்மால் வாசித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நிலமும் அதற்கான பிரத்யேகச் சிக்கல்களைக் கொண்டுள்ளது. ஆனால் அங்கெல்லாம் எழுத்தாளர்கள் அந்தச் சிக்கல்களின் மூலங்களை அடையாளம் கண்டு அதனைத் தொடர்ந்து கவனப்படுத்துவதைத்தான் பிரதானமாகச் செய்தார்கள். மாறாக இந்தியாவில் நாவல் வடிவம், தங்களது கடந்த கால நிலத்தின் ஏக்கங்களைத் தொடர்ந்து எழுதியதன் வழியாகவே பிரபலமானது. நீலகண்ட பறவையைத் தேடி, கங்கைப்பருந்தின் சிறகுகள், கங்கைத்தாய், மையழிக் கரையோரம் என ஏராளமான நாவல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கிராமங்களில் இருந்தும் சிறு நகரங்கலில் இருந்தும் ஏராளமான மக்கள் பெருநகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்ட இந்த முப்பதாண்டுகளில் கிராமங்கள் அதன் அதிகாரங்களையோ சாதியக் கட்டுமானங்களையோ இன்னும் இழந்துவிடவில்லை. முன்னைவிடவும் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்குள் சாதிய இறுக்கமும் அதிகரித்திருக்கிறது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நாளில் கூட அழகின் அடையாளமாக இலக்கியவாதிகளால் புகழ் பாடப்படும் நெல்லை மாநகரில் ஒரு ஆணவப்படுகொலை. யதார்த்தம் இப்படியிருக்க இன்றைக்கும் பெரும்பாலான படைப்புகள் கிராமங்களையும் சிறுநகரங்களையும் விதந்தோதுவது எத்தனை பெரிய நகைமுரண்?
என் முன்னோடிகளைப் போலவே நானும் என் கடந்த காலத்தையும் என் பால்ய கால நகரையும் விதந்தோதி எழுதுவேனானால் நான் இந்த சமூகத்திற்கு விளையும் தீமை. இந்த மொழிக்கோ சமூகத்திற்கோ எந்த நன்மையும் அதில் ஏற்படப்போவதில்லை. ’எனக்கு எல்லா நிலங்களும் சொந்தமானவை, எந்த நிலத்திற்கும் நான் சொந்தமானவன் அல்ல.’ என்ற நாடோடி மனம் வாய்க்க வேண்டியது அவசியம். நிலம், கடந்தகாலம், சாதி என அடையாளங்கள் அதிகாரமாக மாறக்கூடிய ஒரு காலகட்டத்தில் அடையாளமற்றவனாக எழுதுவதே எனக்கான விடுதலையாக எண்ணுகிறேன்.








Leave a Reply