“நாளைக்கு என்னோட ஃபாரின் ஃபிரண்ட் வர்றா… அவ வரும் போது வீடு க்ளீனா இருக்கணும்.. சும்மா என்னத்தையாச்சும் போட்டுக் குப்பையா ஆக்கி வெக்கக் கூடாது…”
கடந்த ஒரு வாரமாக இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறாள் தாரணி. சொல்லிக் கொண்டிருந்ததோடு மட்டுமின்றிக் கிடைக்கும் இடைவெளிகளில் குனிந்து குனிந்து வீட்டைச் சுத்தமும் செய்து கொண்டிருந்தாள். சிதறிக் கிடந்த பிள்ளைகளின் பள்ளிக்கூடப் புத்தகங்கள், அவர்கள் ஓவியம் வரைவதாகச் சொல்லிக் கொண்டு கசக்கிப் போட்ட காகிதங்கள், துண்டு துண்டு கிரேயான்கள், பென்சில்கள், சோஃபாவின் அடியில் கிடந்த பொம்மைகள் என எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள்.
“இந்தப் பொம்மைகளை எல்லாம் வாங்கும் போது எவ்வளவு அடம் பிடிக்குறாங்க.. வாங்கி ஒரே நாள் ஆனதும்… ஒடச்சி நாசம் பண்ணி குப்பையாக்கிடுறாங்க… தயவு செஞ்சு இனிமே பொம்மைங்க வாங்கி வீணாக்காதீங்க…” தாரணியின் குரலில் கண்டிப்பும் வேண்டுதலும் தெரிந்தது.
கடந்த சில மாதங்களாகச் சற்று சாந்தமாக ஒலித்துக்கொண்டிருந்த அவளுடைய குரல் இன்று அதை மீறி ஒலிப்பது போல இருந்தது. சூழலுக்கேற்ற கோபத்தை இயல்பாக வெளிப்படுத்துபவள்தான் அவள். ஆனால் சமீப காலங்களில் சுமார் ஓராண்டாக அவளுடைய குரலில் மென்மை கூடியுள்ளதை கதிரவன் கவனித்துக்கொண்டிருந்தான். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் அவளுடைய குரலில் கோபம் தெரிவதைப் போலிருந்தது. அதற்குக் காரணம் நாளைக்கு வீட்டுக்கு வரவிருக்கும் அவளுடைய வெளிநாட்டுத் தோழி. அவளுக்கான ஏற்பாடுகள்.
“யார்ப்பா அந்த ஃபாரின் ஃபிரண்ட் உனக்கும் தெரிஞ்சவங்களா” என அருகில் வந்து மெலிதாகக் கேட்டான் பெரிய மகன். ஆறாம் வகுப்பு. தாரணியின் குரல் சற்றுக் கோபமாக ஒலிக்கும் போது மகனின் குரல் இப்படி மெலிதாக ஒலிக்க ஆரம்பித்து விடும்.
“ப்ச்.. எனக்குத் தெரியாது” உதட்டைப் பிதுக்கினான் கதிரவன்.
அம்மாவுக்கு மட்டும் ஃபாரின் ஃபிரண்டெல்லாம் இருக்காங்க, அப்பாவுக்கு இல்லையே என அப்பாவின் செல்லப்பிள்ளையாக மகன் வருத்தப்படுகிறானோ என ஒரு கணம் நினைத்தான் அவன்.
“நீயும் அம்மா மாதிரி ஐடி கம்பெனில வேல செஞ்சிருந்தா உனக்கும் ஃபாரின் ஃபிரண்ட் கெடச்சிருப்பாங்கல்ல” என்றான் மகன். என்னதான் மகன்களுக்குச் செல்லம் தந்து பானுப்புப் பண்ணி வளர்த்தாலும் அவ்வப்போது சராசரி மக்களின் மனங்கள் பெருமைப்படும்படியும் நடந்து கொள்ளவேண்டும் என்பதை கதிரவன் உணராமல் இல்லை.
“வீட்டை ஒட்டடை அடிக்கச் சொல்லி எவ்ளோ நாளா சொல்லிட்டிருக்கேன் ஒரு வேலையும் செய்யறதில்ல.. இன்னிக்கு ஒழுங்கா ஒட்டடை எல்லாம் அடிச்சிடணும்” தாரணியின் குரல் உரத்தது. இனி அவள் சொல்லிக் கொண்டிருக்கும் வேலைகளைச் செய்யாமல் வேறு எந்த வேலை செய்தாலும் அது கூடுதலாக அவளின் குரலை உயர்த்திப் பழையபடி ஆகலாம் என்பதால் அவன் மெதுவாக எழுந்து போய்த் துடைப்பத்தை எடுத்தான். அவனுடைய உயரத்திற்கு எட்டிய மட்டும் ஒட்டடையைத் துடைத்து எடுத்துக் கொண்டிருந்தான்.
ஹாலை சுத்தம் செய்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தவன் வியப்பானான். படுக்கை அறை முன்னரே சுத்தம் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. விரிப்புகள் எல்லாம் நேர்த்தியாக விரிக்கப்பட்டும், தலையணைகள் பொருத்தமாக உறையிடப்படும் இருந்தன. புதிய வீட்டிற்குக் குடி வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறை இவ்வளவு தூய்மையாக நேர்த்தியாக இருந்ததாக நினைவில்லை. இருவருமே அவரவர் வேலைகளின் பொருட்டு மன அலைச்சலில் இருப்பதால் வீட்டுப் பராமரிப்பு என்கிற ஒன்றைப் பற்றி அவ்வளவாக யோசிப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் ஆளாளுக்கு ஒரு வேலையைச் செய்து கொள்வதால் வீடு சுத்தமாக இருப்பது போல ஒரு தோற்றமும், பாவனையும் தந்து கொண்டிருக்கும். ஆனால் இன்று அப்படி அல்ல. உண்மையிலேயே அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்தப் படுக்கையின் மீது படுத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அந்த எண்ணத்தைக் கண்டு பிடித்து விட்டவள் போல ஹாலிலிருந்து குரல் கொடுத்தாள் தாரணி. “பெட்டு தலையணையெல்லாம் ஒழுங்கா மடிச்சு வெச்சிருக்கேன்.. கலைச்சி விடக் கூடாது…நாளைக்கு கெஸ்ட் வந்து போற வரைக்கும் பெட் ரூமை வேற யாரும் யூஸ் பண்ணக் கூடாது”
மாஸ்டர் பெட்ரூம் வரவிருக்கும் வெளிநாட்டு விருந்தினருக்கு என முடிவு செய்திருக்கிறாள் போல. அடுத்தநாள் முழுக்க படுக்கை அறையில் நுழைய அனுமதி இல்லை என்பதால் அங்கிருக்கும் அவனுடைய அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான். ஆனால் அவற்றை எல்லாம் ஏற்கனவே எடுத்து வெளியில் வைத்து விட்டிருந்தாள் தாரணி. இவ்வளவு முன்னேற்பாடுகளும் வரவிருக்கும் அந்த விருந்தினருக்காக எனும் போது கதிரவனுக்கும் கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டானது. யார் அந்த வெளிநாட்டுப் பெண்?
♦
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் தாரணி அப்படிச் சொல்லுவாள் என கதிரவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “எங்க சித்திங்கலாம் சேர்ந்து மாசா மாசம் பவுர்ணமிக்குக் கிரிவலம் போயிட்டுருக்காங்க. இந்த மாசம் நானும் அவங்க கூடப் போலாம்னு இருக்கேன்” அவள் அப்படிச் சொன்னது அனுமதி கேட்க அல்ல என்பது அவனுக்குத் தெரியும். திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில் இருவரும் அவரவரின் விருப்பமான வேலைகளைச் செய்வதற்கு யாரும் யாரிடமும் அனுமதி கேட்டுக் கொள்வதில்லை. ஒரு தகவலாகச் சொல்வதுடன் சரி. இந்த முறையும் அவள் அப்படித்தான் சொன்னாள்.
“கிரிவலமா.. எந்த ஊரு”
“கிரிவலம்னாலே திருவண்ணாமலைதான் வேற எந்த ஊரு” அவன் கேள்வியிலிருந்த கேலியைப் புரிந்து கொண்டதால் சட்டெனச் சொன்னாள்.
“ஓ… என்ன திடீர்னு”
“எங்க சித்திங்க ரொம்ப வருசமா போயிட்டிருக்காங்க.. அடிக்கடி என்னையும் கூப்பிடுவாங்க.. அப்பல்லாம் போனும்னு தோணலை ..சரி ஒரு முறை போயிட்டு வரலாமேன்னு இப்போ தோணுது”
“மலை சுத்தறது சாதாரண விஷயம் இல்ல.. பத்துப் பதினைஞ்சு கிலோ மீட்டர் நடக்கணும் தெரியுமா”
“எங்க சித்திங்களே நடக்குறாங்க என்னால முடியாதா.. சும்மா ஒரு ரிலாக்ஸ்சா இருக்கட்டும்னுதான்”
“சரி போய்ட்டு வாங்க”
“பசங்க ..?”
“ஒன்னும் பிரச்சினை இல்ல ஒரு நாள் தானே நான் பாத்துக்குறேன்”
அன்றைக்கு அவளுடைய உறவினர்களுடன் சேர்ந்து திருவண்ணாமலை சென்று வந்தாள். அடுத்த மாதம் பவுர்ணமிக்கும் சென்று வந்தாள். பிறகு தனியாகவும் ஒருமுறை சென்று வந்தாள். அதன் பிறகு தாரணியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களைக் கண்டான் கதிரவன். அதிகம் கோபப்படுவதைக் குறைத்துக் கொண்டாள். ஏன், பேசுவதையும் கூடத்தான். மேலும் திருமணமான இவ்வளவு ஆண்டுகளில் விருப்பப்பட்டு எந்த கோவிலுக்கும் சென்றதில்லை அவர்கள். கடவுள், கோவில், பக்தி என்கிற விஷயங்களே அவர்களின் வாழ்வில் வந்ததில்லை. ஆனால், இப்போது அடிக்கடி கோவிலுக்குப் போவதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டு வருகிறாள். அவள் கோவிலுக்குப் போவதில் ஒரு வித்தியாசத்தைக் கண்டான் அவன். வழக்கமான இந்துக் கடவுள்களுக்கெனச் சொல்லி வைத்திருக்கும் நாட்களான செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அவள் கோவிலுக்குப் போவதில்லை. மாறாக மற்ற நாட்களில் கோவிலுக்குப் போவதைக் கண்டறிந்தான்.
தாரணி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அந்நிறுவனங்கள் தரும் மன அழுத்தம் காரணமாக அவள் ஆன்மீகத்தின் பக்கம் செல்வதாக நினைத்துக் கொண்டான். மனிதர்களுக்கு மகிழ்ச்சியை மீறிய மன அமைதி எங்கே எதிலே கிடைக்கிறதோ அவற்றை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை என எண்ணிக் கொண்டான்.
ஒரு விடுமுறை நாளின் மதிய வேளையில் ஹாலில் வெறும் தரையில் தலையணையை மட்டும் தலைக்கு வைத்துக் கொண்டு அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்தாள் தாரணி. பிள்ளைகள் இருவரும் பக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாடப் போயிருந்தார்கள். அவர்களின் நச்சரிப்புகள் இல்லாததால் அவள் படுத்திருக்கும் பாங்கில் ஒரு நிம்மதி தெரிந்தது. அவளுடைய ஓய்வை தொந்தரவு செய்யாமல் சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வரலாம் என நினைத்து மெதுவாக ஹாலைக் கடந்து போனான் கதிரவன்.
அவளைக் கடந்து போகையில் “கால் வலிக்குது கொஞ்சம் பிடிச்சி விடறியா.” எனச் சத்தமாகச் சொல்ல எண்ணி மெலிதாகச் சொன்னாள்.
தண்ணீர் குடித்து விட்டு வந்தவன் அவளைப் பார்த்தான். முகத்திலும் உடலிலும் களைப்பு தெரிந்தது. அவளின் கால்களின் அருகில் அமர்ந்தான். கால்களை மெதுவாக எடுத்துத் தனது மடியில் வைத்துக் கொண்டான். அவள் இதமாக உணரும்படியாக மென்மையாகக் கால்களைப் பிடித்து விட்டான்.
“கிரிவலம் போனதோட பின் விளைவா” என மெல்லிய சிரிப்புடன் கேட்டான்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவளுடைய அமைதியால் அவனும் அமைதியானான். சிறிது நேரம் அவளுடைய கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தவன் கேட்டான். “சரி எதனால இந்த மாற்றம், சொன்னாதான் காலை அமுக்குவேன்”
தாரணி மெதுவாகப் புன்னகைத்தாள். “போன வருஷம் ஒருமுறை ஒரு கோவிலுக்கு கூட்டிப் போனியே நியாபகமிருக்கா” எனக் கேட்டாள்.
கோவிலுக்கா.. அப்படியெங்கும் கூட்டிப் போனதாக அவனுக்கு நினைவில்லை.
“இல்லையே” என்றான்.
“ஒரு புத்தர் கோவில்” அவள் குரலில் எவ்வித ஏற்ற இறக்கமுமில்லை.
“அதுவா.. புத்த விஹார்.. பெரம்பூர்ல இருக்குதே..”
“அங்க போனப்போ கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்து தியானம் பண்ணோமே.. நினைவிருக்கா” கண்களைத் திறக்காமலே பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆமா.. ஆனா பானா ஸதி. சுவாசத்தைக் கவனித்தல்”
“அந்த தியானம் ரொம்ப நல்லா இருந்துச்சி… மனசு ரொம்ப லேசா ஆன மாதிரி ஒரு ஃபீல்…”
“ம்ம்..
“அதுக்கப்புறம் அங்க போலாம்னு பார்த்தா அது ரொம்ப தூரமா இருந்துச்சி… அதனால இங்க பக்கம் இருக்குற ஒரு அம்மன் கோவில்ல உக்காந்து தியானம் பண்ணேன்.. அதுவும் ரொம்ப நல்ல அமைதியா இருந்துச்சி..”
“சரி..”
“அப்புறம் இப்போ இங்க திருப்போரூருக்கு ஷிப்ட் ஆகி வந்த பின்னால ஊரைச் சுத்தி நெறைய கோவிலுங்க இருக்கு… அங்க போய் உக்காந்து தியானம் பண்றது அவ்ளோ ஹாப்பியா இருக்கு… அதும் அந்தச் சின்ன மலை மேல ஏறிப் போய் உட்காந்தா உடம்பு பறக்குற மாதிரி உணர்றேன்”
ஓ ..
“ஆனா கூட்டம் இல்லாத நாட்கள்ல போனாதான் நிம்மதியா இருக்கு…”
ஓ…
“உண்மையிலேயே அந்த இடங்கள்ல ஒரு எனெர்ஜி இருக்குன்னு உணர்றேன்…ஆனா இது என்னோட பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ்தான்..”
“அதனால என்ன, நான் ஒன்னும் சொல்லலையே..”
“உனக்கு இதெல்லாம் புடிக்காதுல்ல..”
“அப்படில்லாம் ஒண்ணுமில்ல. அவங்க அவங்க விருப்பம்.. யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் இருக்கும் வரை, அதுவுமில்லாமல் திருவண்ணாமலை பவுத்தர்களின் மலைதானே.”
கதிரவனுக்கு ஓரளவு விளங்கியது. தாரணி புத்த விஹாரில் தியானித்த போது தனது மனம் அமைதியை விரும்புகிறது என்பதைக் கண்டடைந்திருக்கிறாள். அதன் பிறகு தியானத்திற்கு ஏற்ற இடம் அவளுக்கு அமையவில்லை. எங்கிருந்தும் தியானம் செய்ய முடியும் என்கிற இடத்தை அவள் இன்னும் அடையவில்லை. வீட்டின் அருகிலுள்ள சில இந்துக் கோவில்களுக்குச் சென்று அங்கே தியானம் செய்கிறாள். அவளைப் பொறுத்தளவில் தியானம் செய்ய ஒரு இடம் வேண்டும். அங்குள்ள சிலைகள் அல்ல. அவனுக்குப் புரிந்தது.
♦
வெள்ளிக்கிழமை காலை கதிரவன் அலுவலகம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த போது தாரணி போனில் யாருக்கோ வழி சொல்லிக் கொண்டிருந்தாள். “செங்கல்பட்டிருலிருந்து மாமல்லபுரம் போகும் ரோடு, அந்த வழியா வந்தா பூஞ்சேரி ஜங்ஷன் அதிலிருந்து லெஃப்ட்.. ஓகே… லொகேஷன் சென்ட் பண்ணிருக்கேன்.. கிட்ட வந்துட்டு கால் பண்ணுங்க”
அந்த போனை வைத்து விட்ட பிறகு வீட்டை இன்னும் ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள். கதிரவனுக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. விருந்தினர் வரும் வரை இருக்க வேண்டுமா அல்லது அலுவலகம் கிளம்பிச் செல்வதா? தாரணியே சொன்னாள். “அவங்க இப்போதான் செங்கல்பட்டு வந்திருக்காங்க.. இங்க வரணும்னா கண்டிப்பா ஃபாட்டி ஃபைவ் மினிட்ஸ் ஆகும்… உன்னால வெய்ட் பண்ண முடியுமா”
“கண்டிப்பா முடியாது.. நான் சாயந்திரம் வந்து சந்திக்கிறேன்” எனச் சொல்லி விட்டு அலுவலகம் செல்ல காரை எடுத்தான். “கார் இருக்கட்டும் நீ பைக்கில் போ அந்தப் பொண்ணு வந்தா அவளுக்கு மகாபலிபுரம் சுத்திக் காட்டணும்.. கார் வேணும்” என்றாள்.
கதிரவன் பைக்கை எடுத்தான். பைக்கில் போகும்போது அவன் நினைத்துக் கொண்டது சற்று அற்பமாக இருந்தாலும் அதுதான் இயல்பானதாக இருந்தது. ஒரு வேளை சாயந்திரம் நாம வரும்போது அந்த வெளிநாட்டுப் பெண் கிளம்பி விட்டிருந்தால்?
ஆனால் அந்தப் பெண் வீட்டில் இருந்தாள். அந்த வெளிநாட்டுப் பெண்ணைக் கண்ட கதிரவன் இரண்டு விஷயங்களுக்காக வியந்தான். ஒன்று அவளுடைய தோற்றம். இவ்வளவு நேர்த்தியாக வடிவாக இருக்கும் வெளிநாட்டுப் பெண்ணொருத்தியை இவ்வளவு அருகில் இப்போதுதான் பார்க்கிறான். இரண்டாவது அவளுடைய இளமை. பொதுவாக பெரும்பான்மை வெள்ளைத் தோல் கொண்டவர்களின் வயதைக் கணிக்க இயலாது. அப்படியான உடல்வாகு கொண்டவர்கள் அவர்கள். ஆனால், இந்தப் பெண்ணைக் கண்டால் உறுதியாகச் சொல்லலாம். சின்னப்பெண்தான். இவ்வளவு சிறிய வயதில் தன்னந்தனியாக வெளிநாட்டுப் பயணம்.
வீட்டின் உள்ளே நுழைந்தவனை நோக்கி “மை ஹஸ்பெண்ட்” எனச் சொன்னாள் தாரணி. சோஃபாவில் உட்கார்ந்திருந்த அந்த வெளிநாட்டுப் பெண் எழுந்து என்னிடம் கை நீட்டினாள். வெள்ளை ஆடை கசங்கி அழுக்கேறியிருந்தது.
“ஹாய் ஐம் விர்ஜீனியா..”
“ஐம் கதிர்” சராசரி கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கே உண்டான தயக்கம் அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்தத் தயக்கத்தை உணர்ந்த அவன் அதைக் களையும் முயற்சியாகக் கேட்டான், “விச் கன்ட்ரி யு ஆர் ஃப்ரம்”
“இட்டாலி” புன்னகையுடன் சொன்னாள்.
“ஓ.. ஃபைன்” என்றான்.
அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் வெறுமனே புன்னகைத்தான். சட்டென வந்து ஒட்டிக் கொண்ட ஒரு தயக்கத்துடன் அவளைப் பார்த்தான். இத்தாலியில்தானே ரோமாபுரி இருக்கிறது. அங்கு தானே கிளியோபாட்ரா இருந்தாள். அங்கிருக்கும் அவ்வளவு பெண்களும் அவளைப் போலவோ அல்லது அவளது சாயையிலோ இருப்பார்களா என்ன ? இந்தப் பெண் ஒடிசலாக நளினமாக இருந்தாலும் அதைப் பற்றிய சிறு கவனமும் தன்னுணர்வும் இல்லாமல் இருந்தாள். சோஃபாவில் கால்களை மடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது எதைப் பற்றியும் கவலையற்ற மனவுணர்வுடன் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. என்ன காரணத்தினாலோ அவளுடைய அழகிய தோற்றத்தை உடனடியாக எதிர்கொள்ள முடியாதது போலிருந்தது அவனுடைய தயக்கமான தோரணை. அதை மறைப்பதற்காக உடை மாற்றக் கிளம்பியவனிடம் சைகையால் சொன்னாள் தாரணி “பெட்ரூமுக்குள் போக வேண்டாம் பக்கத்து ரூமில் போய் உடை மாற்றிக் கொள்” கதிரவன் புரிந்து கொண்டு இன்னொரு அறைக்குள் நுழைந்தான். உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தவன் சோஃபாவில் அந்தப் பெண்ணுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்தான். மகன்கள் இருவரும் அவனிடம் வந்து ஒட்டிக் கொண்டார்கள். சின்னவன்- ஒன்றாம் வகுப்பு – அந்தப் பெண்ணை வித்தியாசமாகப் பார்த்து “இவங்க ஜப்பான்காரங்களா” என்று கேட்டான். எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.
அவனை அடக்கி விட்டு “அப்புறம் மாமல்லபுரம்லாம் நல்லா சுத்திப் பாத்தீங்களா” தாரணியைப் பார்த்துக் கேட்டான். அதுவொரு சடங்கான கேள்வி என்றாலும் அப்படித்தான் கேட்க தோன்றியது அவனுக்கு.
“ம்ம் நல்லா சுத்திப் பார்த்தா.. அவளிடமே கேளேன் என்றாள். “அவளுக்கும் இங்கிலிஷ் அவ்வளவா தெரியாது.. ஓரளவுதான் பேசுறா, அதனால பயம் வேணாம்.” தாரணியின் குரலில் மெல்லிய கேலி தெரிந்தது.
“ஆங்கிலம் தெரியாதா” வியப்பானான். ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு வெளிநாட்டுப் பெண்ணை இப்போதுதான் பார்க்கிறான் அவன். “தென் வாட்ஸ் யுவர் மதர் டங்” அவளைப் பார்த்துக் கேட்டான். அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதால் சிறிது தன்னம்பிக்கை வந்து விட்டதாக உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த அடிப்படை ஆங்கிலத்தில் கேட்டான்.
‘இட்டலியன்’ என்றாள். முன் நெற்றியில் வந்து விழுந்த இரண்டு முடிக் கற்றைகளைக் கைகளால் அனிச்சையாகத் தள்ளி விட்டுக் கொண்டாள். நிறைய கருமையும் சற்றே பழுப்பு நிறமும் கலந்திருந்தன. நெருங்கிப் பார்க்கையில் வெளிநாட்டுப் பெண் போல இல்லாமல் வட இந்தியப் பெண் போலத்தான் இருந்தாள்.
“ஓ.. என்றவன் சிறிது இடைவெளி விட்டு, “உன் பெயர் விர்ஜீனியா இல்லையா” என்று கேட்டான்.
ஆமாம் எனத் தலையாட்டினாள்.
“விர்ஜீனியா வுல்ஃப் என்கிற பெயரில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார் உனக்குத் தெரியுமா” எனக் கேட்டான் கதிரவன்.
அவள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். “யா..யா.. ஐ நோ.. ஷி இஸ் ஃபிரம் லண்டன்” என்றவள், “என்னோட இந்தப் பயணத்தில் என் பெயரை இப்படி நினைவூட்டிய முதல் ஆள் நீங்கதான்” என்றாள் விர்ஜீனியா. அவள் அவ்வாறு சொன்னது கதிரவனுக்குச் சற்று பெருமையாகவும் தன்னம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. இவ்வாறான உரையாடல் நிறைய ஆட்கள் இருக்கும் போது நடந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் நினைத்தான்.
“அதுமட்டுமல்ல உங்க நாட்டின் சிறந்த திரைப்படங்களை நான் பார்த்த்திருக்கிறேன்” என்றான். இப்போது அவனுடைய உரையாடல் சற்று சரளமாகி விட்டிருந்தது.
“என்ன படம்” எனக் கேட்டாள்.
“பை சைக்கிள் தீவ்ஸ்”
“பை சைக்கிள்..” அவளுடைய முகம் மாறியது. “நோ நான் பார்த்ததில்லை…” அந்தத் திரைப்படத்தை அவள் பார்த்திருக்கவில்லை என்பது கதிரவனுக்கு வியப்பாக இருந்தது.
“பை சைக்கிள் தீவ்ஸ் பார்த்ததில்லையா, உலகம் முழுக்கப் புகழ் பெற்ற இத்தாலி படம் எனச் சொல்கிறார்களே”
இல்லை எனத் தலையை ஆட்டினாள்.
அவளுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அந்தப் படத்தின் இயக்குநரின் பெயரைச் சொன்னால் தெரியக்கூடும். ஆனால் அவனுக்கு அந்த இயக்குநரின் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் மட்டுமே இளைய தலைமுறையினர் தங்களின் மொழி, கலைகள் பற்றி எதுவும் தெரியாமல் அறியாமையில் இருக்கிறார்கள் போல என நினைத்திருந்தவனுக்கு உலகின் பெரும்பான்மை நாட்டு இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் போல என எண்ணிக் கொண்டான். இவர்கள் தங்கள் மொழியின் சிறந்த கலைகளைப் பற்றி அறிந்து கொள்வதில்லை.
“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” கதிரவனைப் பார்த்துக் கேட்டாள். சிறிய கண்கள் மேலும் சுருங்கின.
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என கதிரவனுக்குத் தெரியவில்லை. இந்தியர்களுக்கு சினிமா ஒரு போதை. அவனைப் போன்ற ஒரு சிலர் உள்ளூரைத் தாண்டி வெளிநாட்டு சினிமாக்களைத் தெரிந்து வைத்துக் கொள்வார்கள் அவ்வளவுதான். தாரணி குறுக்கிட்டு, “இவர் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர், ஓரிரண்டு புத்தகங்கள் எழுதியும் இருக்கிறார்” என்றாள்.
“ஓ.. க்ரேட்” என்றாள் விர்ஜீனியா.
பை சைக்கிள் தீவ்ஸே தெரியவில்லை என்பவளிடம் ரோஜாவின் பெயர் எழுதிய உம்பர்ட்டோ எக்கோ பற்றியெல்லாம் கேட்க வேணாம் என நினைத்துக் கொண்டான். “சரி, மாமல்லபுரம் எப்படி இருந்தது” என உரையாடலின் பொருண்மையை மாற்றினான் கதிரவன்.
“வாவ் .. இட்ஸ் அமேஸிங்.. எவ்வளவு பழமையான இடம்.. இந்தியா ஒரு அற்புதமான நாடு. இந்த நாட்டைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்ததை விடவும் மேலான ஒன்றாக இருக்கிறது. இந்தியாவை எனக்கு நிறையவே பிடித்திருக்கிறது” அவளது சிறிய கண்கள் பெரிதாக விரிந்தன.
“எவ்வளவு நாட்களா இந்தியாவில் இருக்கே” எனக் கேட்டான்.
“கடந்த இருபது நாட்களா இந்தியாவுல இருக்கேன். அவற்றில் பத்து நாட்கள் திருவண்ணாமலையில் மட்டுமே இருந்தேன். இப்போ இத்தாலிக்குப் போகும் போது மாமல்லபுரம் சுத்திப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.. அதுவும் தாரணி இங்க இருப்பதாகச் சொன்னதால்தான் வந்தேன் இல்லாவிட்டால் நேராக ஏர்போர்ட் போயிருப்பேன்”
“நல்லது வெல்கம்” என்றான்.
அன்றிரவு உணவுக்குச் சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மசாலாவும் செய்திருந்தாள் தாரணி. நாங்கள் குடும்பமாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டோம். மெலிதாக இருந்த சப்பாத்தியை ருசித்துத் தின்றாள் விர்ஜினியா.
“ஃபுட் இஸ் வெரி நைஸ் , இனிமே எங்கள் ஹோட்டலில் இந்தச் சப்பாத்தியைச் செய்து பார்க்க வேண்டும்” என்றாள்.
“ஹோட்டலா, நீங்கள் ஹோட்டல் வைத்திருக்கீறீர்களா”
“யா.. எங்க அப்பா ஒரு உணவு விடுதி நடத்துகிறார். அம்மா இருக்கிறார். எனக்கு இரண்டு சகோதரர்கள். அண்ணன்கள். இருவரும் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள்” என்று சொல்லியபடியே தனது ஐ போனிலிருந்து ஒரு போட்டோவைக் காட்டினாள். குடும்பப் போட்டோ. அம்மா அப்பாவின் தோள்களில் கைபோட்டுக் கொண்டு அண்ணன்களுடன் சிரித்துக் கொண்டிருந்தாள் விர்ஜீனியா. அவர்களுடன் இன்னொரு இளைஞனும் அந்த போட்டோவில் இருந்தான்.
“இரண்டு அண்ணன்கள்தானே, இந்த மூன்றாவது இளைஞன் யார் ?”
“மை பாய் ஃப்ரெண்ட்.”இயல்பாகச் சொன்னாள். ”
“பாய் ஃப்ரெண்டா..” மனதுக்குள் அதிர்ந்து போனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன். பாய் ஃப்ரெண்ட் இருப்பது அதிர்ச்சியில்லை. திருமணத்திற்கு முன்பாக அவனைத் தன்னுடைய குடும்பத்தினருடன் இயல்பாகக் கலக்க வைக்க முடிகிறதே.
எல்லோரும் சாப்பிட்டு முடித்தோம். தாரணி, “நாளெல்லாம் மாமல்லபுரம் சுத்தியதில் எனக்கு பயங்கர டயர்டா இருக்கு… நீங்க வேனும்னா பேசிட்டிருங்க.. நான் படுக்கப் போறேன்” சொல்லி விட்டுச் சென்றவள், திரும்பிப் பார்த்துச் சொன்னாள், “ஹலோ, அப்படியே பேசிட்டு தூங்கிறாதீங்க..அவளுக்கு விடியற்காலை ஃபிளைட் இருக்காம்”.
“அப்படியா எத்தனை மணிக்கு” விர்ஜீனியாவிடம் கேட்டான்
“4.30 க்கு.. ரெண்டு மணி நேரம் முன்னாடி செக் இன் இருக்கணும்” என்றவள், “ஏர் போர்ட் இங்கிருந்து எவ்ளோ நேரம்”
“ஐம்பது கிலோ மீட்டர் இருக்கும்” என்றான் கதிரவன்.
“டாக்சி கிடைக்குமா”
தாரணி, “நோ, டாக்சி வேண்டாம்.. இவரே கொண்டு போய் டிராப் பண்ணுவார்” என்றாள்.
“வேண்டாம் அவருக்குத் தொந்தரவாக இருக்கும்” என்றாள் விர்ஜீனியா.
“நோ நோ அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்ல, இந்த மிட் நைட்ல இங்க டாக்சி கிடைக்காது” என்றாள் தாரணி.
கதிரவனுக்கு நள்ளிரவில் கார் ஓட்டுவது சிரமமானதாக இருந்தாலும் கூட தாரணியின் பேச்சைக் கேட்டாக வேண்டும். மட்டுமின்றி ஒரு வெளிநாட்டுப் பெண்ணை அழைத்துச் சென்று விமானம் ஏற்றி விடுவது புதிய அனுபவமாக இருந்ததால் சிரமமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற காரணமாகவும் இருக்கலாம்.
“சரி நீங்க பேசிட்டிருங்க… நான் படுக்கிறேன்.. குட் நைட்.” தாரணி உள்ளே சென்றாள். பெரிய மகன் அவளுடனே உள்ளே சென்றான். சின்னவன் எப்போதும் கதிரவனின் மடியில்தான் தூங்குவான் என்பதால் அவனிடமே படுத்துக் கொண்டான்.
அதற்குப் பிறகு கதிரவன் அவளுடன் பேசியதிலிருந்து அவளைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டான். விர்ஜீனியா பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்திருக்கிறாள். பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டிருக்கிறாள். பிடிக்கவில்லை. பயணத்தில் ஆர்வம். அவளுடைய சகோதரன் பள்ளியில் படிக்கும் போது போதைக்கு அடிமையாகி விட்டிருக்கிறான். அதிலிருந்து மீள மருத்துவம் பார்க்கையில் மிலன் நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு இந்திய யோகா மையத்திற்கு அவனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவளுடைய தோழி ஒருத்தி அந்த யோகா மையத்தைப் பரிந்துரைத்திருக்கிறாள். அந்த யோகா மையத்தில் பயிற்றுனராக இருப்பவன் அல்விஸ். இந்திய தியானம், யோகா பயிற்சிகளைக் கற்றுத்தரும் மையம் ஒன்றில் அவன் மாணவனாக இருந்து இப்போது யோகா பயிற்றுனராக ஆகியுள்ளான். அவனுடைய அண்ணனுடன் சேர்ந்து விர்ஜீனியாவும் தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறாள். தியானத்தை நோக்கி நகர நகர அவளுக்கு அதனுடைய வேரை கண்டடைய வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த வேர் இந்தியாவில் இருப்பதால் அங்கே செல்ல வேண்டும் என்கிற விருப்பத்தை ஒரு லட்சியம் போல ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறாள். அந்த லட்சியத்தை அடைய இந்தியா கிளம்பி வந்திருக்கிறாள். இவ்வளவுக்கும் விர்ஜீனியாவுக்கு வயது 21. இவ்வளவு இளம் வயதில் எவ்வளவு அனுபவங்கள். இந்த வயதில் ஒரு இளம் பெண்ணை அறிமுகம் இல்லாத நாட்டிற்குச் செல்ல அனுமதித்துள்ளார்கள் அவளுடைய பெற்றோர்கள். அவர்கள் அனுமதி தராமல் இருந்தாலுமே கூட இவள் இங்கே வந்திருப்பாள். தாங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் கொண்ட சூழலில் பிறந்து வளர்பவர்கள்.
கதிரவன், இத்தனை வயதிலும் தினமும் இரவு எட்டு மணிக்கு அழைத்து விசாரித்து பத்திரம் சொல்லும் தனது பெற்றோரை நினைத்துக் கொண்டான். இந்தியக் குடும்பங்கள் தேவையற்ற அச்சத்தின் மூலம் எவ்வளவு சிறந்த அனுபவங்களை இழக்கின்றன.
விர்ஜீனியாவுக்கு இந்தியா குறித்த மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. அது அவனுடைய பாய் ஃபிரண்ட் அல்விஸால் ஏற்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டின் ஆன்மீக இடங்கள், யோகிகள், சித்தர்கள் குறித்தெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறாள். இவர்களின் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலைதான் மிகுந்த முக்கியமாக இருக்கிறது. அங்கே ஒரு ஆற்றல் இருப்பதாக அல்விஸ் சொல்லியிருக்கிறான். தமிழ் நாட்டிலுள்ள யாரோ ஒரு யோகா சாமியார் அவனுக்கு அதைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவனே இன்னும் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை. அவனுக்கு முன்பாக விர்ஜீனியா வந்து விட்டாள். பெண்கள் தாம் ஒரு செயலைச் சிந்தித்து விட்டால் அதைச் செயல்படுத்தி விடுகிறார்கள். முதலில் இந்தியாவிற்கு வரும் போது இங்குள்ள மனிதர்கள் குறித்து அவளுக்குப் பயம் இருந்திருக்கிறது. ஆனால், போகப் போக அது குறைந்திருக்கிறது. மற்றொரு முறை இந்தியாவிற்கு வந்து இங்குள்ள ஆன்மீகத் தலங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்கிற பெரிய விருப்பம் உண்டாகியிருந்தது அவளுக்கு.
“திருவண்ணாமலையில்தான் தாரணியைச் சந்தித்தாயா” எனக் கேட்டான் கதிரவன்.
“யா ..”
“ஆனால் அவளுடைய வீடு தேடி வரும் அளவுக்கு எப்படி அவள் மீது நம்பிக்கை வந்தது”
“உண்மையாக தியானம் செய்பவர்களின் கண்களை எனக்குத் தெரியும். வீடியோ காலில் அல்விஸை அழைத்து தாரணியை காட்டியபோது அவனும் அதையே சொன்னான். உண்மையில் உங்களின் மனைவி உண்மையான ஆன்மா. பரிசுத்தமான மனம் கொண்டவர்” இதை அவள் சொல்லும் போது தாரணி அருகில் இல்லாமல் போய் விட்டாள்.. நாளெல்லாம் மாமல்லபுரம் சுற்றியதில் களைப்பாகி எட்டரைக்கே தூங்கி விட்டிருந்தாள்.
“ஆனால், தாரணி என்னைப் பற்றி இவ்வளவு கேள்விகள் விசாரணைகள் செய்ததில்லை. நாங்கள் முழுக்க ஆன்மிகம், தியானம், பிரபஞ்ச ஆற்றல் பற்றியே பேசியிருக்கிறோம். ஆனால், நீங்கள்தான் என்னுடைய பின்புலம் பற்றி கேட்கிறீர்கள்” என்றவாறு சிரித்தாள்.
கதிரவன் அதை எதிர்பார்க்கவில்லை. “அப்படியா, இந்தக் கேள்விகள் உனக்குத் தொந்தரவாக இருப்பதாக நீ நினைத்தால் ஸாரி” அவன் சிறிதாக அவமானம் போல உணர்ந்தான்.
“இல்லை இல்லை.. இங்கே வந்ததிலிருந்து என்னைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளைக் கேட்கும் அளவுக்கு யாரும் பேசவில்லை, எனக்கும் யாரிடமும் பேசத் தோன்றவில்லை. ஆனால் உங்களிடம் சொல்வது எந்தத் தொந்தரவும் இல்லை” விர்ஜீனியா சாதாரணமாக அதைச் சொன்னாலும் கூட கதிரவனுக்கு அவளுடன் மேலும் உரையாட ஒரு தயக்கம் வந்து விட்டது. இரவில் விருந்தினராக வந்த ஒரு இளம்பெண்ணுடன் அமர்ந்து அவளுக்குத் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு வலுக்கட்டாய உரையாடலை மேற்கொள்கிறோமோ என்பதாக உணர்ந்தான். அவனைப் பற்றி எந்தவொரு இழி எண்ணங்களும் அவளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது போல அவனுக்கு இருந்தது.
“சரி நானும் தூங்கப் போகிறேன் எத்தனை மணிக்கு உன்னை எழுப்ப வேண்டும் ? உரையாடலை முடித்துக் கொள்ள நினைத்தான்.
“இல்லை நீங்கள் தவறாக எண்ண வேண்டாம் நான் சாதாரணமாகவே இதைச் சொன்னேன் எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை.. நாம் பேசலாம்” என்றாள்.
அவள் அப்படிச் சொன்னாலும் கூட கதிரவனுக்கு முன்பிருந்த சரளம் இல்லாது போய்விட்டிருந்தது. அதை உணர்ந்தவளாக அவளே கேட்டாள், “நீங்கள் புத்தகம் எழுதியிருப்பதாக தாரணி சொன்னாளே, என்ன புத்தகம் எழுதியிருக்கீங்க” அவள் அப்படிக் கேட்டு அவனுடைய சங்கடத்தைப் போக்க நினைத்தாலும் அவனுக்கு இன்னமும் தயக்கம் போகவில்லை. அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னான், “ஓரளவு புத்தகங்கள் வாசிப்பேன், எப்போதாவது கட்டுரைகள், பத்திகள் எழுதுவேன்”
“ஓ க்ரேட்.. ” அவள் உண்மையாகவே வியந்து சொன்னது முகத்தில் தெரிந்தது.
“நீ புத்தகம் வாசிப்பாயா” மெலிதாகக் கேட்டான்.
“என் தாத்தா லியானர்டோ டிசிகா நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.. ஆனால் இப்போது இல்லை.. என் எண்ணமெல்லாம் தியானம் பற்றியே இருக்கிறது”
டிசிகா என்கிற பெயரைக் கேட்டதும் இந்தப் பெயரை எங்கேயோ கேட்டது போல கதிரவனுக்குத் தோன்றியது. சிறிது யோசித்தவன் சட்டென நினைவு வந்தவனாக “டிசிகா.. விக்டோரியா டிசிகா அவர் தான் பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் இயக்குனர்” மிகப்பெரிய கண்டுபிடிப்பை அறிந்தவன் போல சற்று உரத்துச் சொன்னான்.
“ஓ எஸ் .. ஐ நோ .. வித்தோரிய டிசிகா க்ரேட் ஃபிலிம் மேக்கர்.. இத்தாலி மொழியில் அந்தப் படத்தின் பெயர் லாத்ரி பிஸிசெலட்டா.. நான் பார்த்திருக்கிறேன் நல்ல படம்” என்றாள். அப்போதுதான் கதிரவனுக்கு நினைவு வந்தது, அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதும் இத்தாலி மொழியில் சொன்னால் புரியும் என்பதும். அவனுக்கு இப்போது சற்று நிம்மதியாக இருந்தது. பழமையான ஒரு தேசத்திலிருந்து வந்தவளிடம் அவளுடைய தாய் மொழியில் வெளியான ஒரு சினிமாவை நினைவூட்டிப் பேசியது ஒரு சிறிய சாதனையாக உணர்ந்தான்.
“ஆனால் பாருங்கள் அவ்வளவு மகத்தான இயக்குநரின் மகன்கள் அவருக்கு முரணாக வணிகப் படங்களை எடுப்பவர்கள்” என்றாள்.
“ஓ அப்படியா அது எனக்குத் தெரியாது” என்றான்.
மணி ஒன்பது முப்பது ஆனது. சரி அவள் தூங்கட்டும் என எண்ணியவன் குட் நைட் சொல்ல எழுந்தவாறே “உன்னை எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும்” என மீண்டும் கேட்டான்.
“அதை நீங்கதான் சொல்லணும் எத்தனை மணிக்கு எழுந்தால் ஏர்போர்ட் போய்ச் சேர முடியும்” மெலிதாகச் சிரித்தாள்.
“ஓகே, ஒரு மணிக்குப் போகலாம். குட் நைட்” எனச் சொல்லி விட்டு அறைக்குள் நுழையச் சென்றவன் நின்று அவளிடம், “ஒரே ஒரு கேள்வி “உனக்கு இத்தாலிய எழுத்தாளர் உம்பர்ட்டோ எக்கோ தெரியுமா, அவருடைய நாவலின் பெயர் தி நேம் ஆஃப் தி ரோஸ்’ என்றான்.
“யா … பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன் பாடப்புத்தகத்தில்.. ” என்றாள். “இத்தாலியில் ‘இல் நோம டெல்லா ரோஸா’ எனச் சொல்வார்கள்.
“ஓ.. அப்படியா.. அந்த நாவல் எங்கள் மொழியில் வந்துள்ளது அந்த மொழிபெயர்ப்பினால் மிகப்பெரிய விவாதக் கலவரம் ஏற்பட்டுள்ளது” என்றான் சிரித்தவாறு.
“புரியவில்லை” என்றாள்.
“ஒன்றுமில்லை” எனச் சொல்லி விட்டு மடியில் தூங்கிக் கொண்டிருந்த சின்ன மகனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அறைக்குள் சென்றான். மெல்லிய நீலத்தில் இரவு விளக்கு ஒளிர்ந்தது. பெரிய மகன் பாயில் கோணலாகக் கிடந்தான். அருகில் தாரணி தூங்கிக் கொண்டிருந்தாள். சின்னவனை அவளுக்கு அருகில் கிடத்தி விட்டு அவர்களைத் தாண்டி ஒரு மூலையில் சென்று படுத்தான் கதிரவன். தூங்குவதா இல்லை விர்ஜீனியாவை எழுப்புவதற்காக முழித்திருப்பதா எனத் தெரியவில்லை. அவளைப் பற்றி யோசிக்கையில் சராசரி இந்தியப் பசங்களைப் போல அல்ல, இவள் ஓரளவு விஷயம் தெரிந்தவள்தான் என எண்ணிக் கொண்டான்.
♦
சட்டென அவன் கண் விழித்த போது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தாரணி கழிப்பறையிலிருந்து வெளியில் வந்தவள் “அந்தப் பொண்ணை அவங்க ஊருக்கு அனுப்புற ஐடியா இல்லையா” எனக் கேட்டாள்.
கதிரவன் மணி பார்த்தான். பன்னிரண்டு. எழுந்து முகம் கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு வந்து, “அவள் ரெடியாகிட்டாளா” எனக் கேட்டான்.
தாரணி படுக்கையறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.
“விர்ஜீனியா ஆர் யு அவேக் ?”
“யா.. ஜஸ்ட் வெய்ட்” உள்ளிருந்து குரல் வந்தது.
கதிரவன் காரின் சாவியை எடுத்துக் கொண்டான். தலை பாரமாக இருந்தது. மீனம்பாக்கம் வரை போய் வர வேண்டுமே என யோசித்த போது மனம் சோர்வுற்றது. ஆனால், அவன் வாழ்வில் இது புதிய அனுபவம் என்பதால் அந்தச் சோர்வை மறந்து புத்துணர்வாக இருக்க நினைத்தான். அறையிலிருந்து விர்ஜீனியா வெளியில் வந்தாள். புதிய வெள்ளை ஆடை உடுத்தியிருந்தாள். நேற்று மாமல்லபுரத்தில் வாங்கிய மல்லிப்பூவைத் தலைக்கு வைத்திருந்தாள். கழுத்தில் வெள்ளை மணிமாலை. ஒரு இந்தியப் பெண்ணாக மாற முயற்சித்திருந்தாள்.
“ஸாரி அம் ஐ லேட் ?” எனக் கேட்டாள்.
“இல்லை, ஏர்போர்ட் போகச் சரியாக இருக்கும்” என்றான் கதிரவன்.
முதுகில் பெரிய பையை மாட்டிக் கொண்டு, பெரிய டிராலியை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.
“ஏதேனும் மறந்து விட்டாளா பார்” என தாரணியிடம் கேட்டான் கதிரவன்.
“இல்லை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டாள்”
வெளியில் சென்ற விர்ஜீனியா காரின் பின்பக்கமாக நின்றாள். அதைப் பார்த்த “தாரணி டிக்கியைத் தொறந்து விடு” என்றாள். கதிரவன் வெளியில் வந்தவாறே சாவியிலுள்ள ரிமோட்டை அழுத்தினான். காரிலிருந்து க்விக் க்விக் என்கிற சத்தம் வந்தது. காரின் பின்பக்கத்தைத் திறந்து டிராலியையும் பையையும் உள்ளே வைத்தாள் விர்ஜீனியா. கதிரவன் காரில் ஏறி ஓட்டுநர் சீட்டில் உட்கார்ந்தான். காரை ஸ்டார்ட் செய்து திருப்பி நிறுத்தினான்.
விர்ஜீனியா தாரணியை அணைத்து முத்தமிட்டாள். “நான் விரைவில் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன், நாம் மீண்டும் சந்திப்போம்” என்றாள். சற்று உணர்ச்சி வசப்பட்டவளாக இருந்தது போல அவனுக்குத் தோன்றியது. காரின் அருகில் வந்தவள் எங்கே உட்கார்வது எனச் சற்றுக் குழம்பி முன் இருக்கையில் அமர்ந்தாள்.
“ஸீ யு ” தாரணிக்கு கையசைத்தாள்.
“பாத்து பத்திரமா போ” கதிரவனைப் பார்த்துச் சொன்னாள் தாரணி.
கதிரவன் காரைச் செலுத்தினான். திருப்போரூரைக் கடந்த போது பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம் என நினைத்தான். ஆனால் அங்கே பெட்ரோல் பங்குகள் இரவில் மூடியிருப்பார்கள். கேளம்பாக்கத்தில் நிரப்பிக் கொள்ளலாம் என எண்ணியபடி காரைச் சீராக ஓட்டினான். விர்ஜீனியாவிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதியாகச் சாலையில் கவனம் கொண்டான்.
கேளம்பாக்கத்தில் ஷெல் பெட்ரோல் பங்க் திறந்திருந்தது. அவன் காரை உள்ளே நுழைத்தான். தன் போனில் கவனம் கொண்டிருந்த விர்ஜீனியா கார் நிற்பதை உணர்ந்து வெளியில் பார்த்தாள். “ஜஸ்ட் வெய்ட்” எனச் சொல்லியவாறே அவளுடைய சிறிய பர்சில் இருந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் தந்தாள். அவன், “இல்லை வேண்டாம் பரவாயில்லை” என்றான். ஆனால், அந்த மறுப்பில் அவ்வளவு உறுதியில்லாதது போல இருந்தது.
“நான் விமானம் ஏறி விட்டால் இந்த ரூபாய்த் தாள்கள் செல்லாது.. இருந்தாலும் பயனில்லை, மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்” என்றாள். அவனால் மறுக்க முடியவில்லை. ரூபாய்த் தாள்களை வாங்கிப் பார்த்தான். நான்கைந்து ஐந்நூறு ரூபாய் தாள்கள். அவ்வளவுக்கும் பெட்ரோல் நிரப்பிக் கொண்டான். மீண்டும் காரைச் செலுத்தியபோது சிறிய மகிழ்ச்சி அவனுக்குள் ஏற்பட்டது.
“சோ.. ஹௌ வாஸ் யுவர் இண்டியா டூர்” எனக் கேட்டான்.
“திஸ் இஸ் நாட் எ டூர்.. மை ஸ்பிரிச்சுவல் ட்ராவல்” என்றாள்.
அதைக் கேட்டு கதிரவனுக்கு வியப்பாக இருந்தது. இந்த வெளிநாட்டுக்காரர்களை இந்தியாவின் எந்த அம்சம் ஈர்க்கிறது. அதுவும் இத்தாலி போன்ற உலகத் தொன்மையான நாட்டிலிருந்து கொண்டு இந்தியாவின் பழமையைத் தேடி வருகிறாள். இவர்கள் உண்மையிலேயே ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருகிறார்களா அல்லது இந்தியர்களுக்கு மேற்குலகின் மேல் எப்படி ஒரு கிறக்கம் இருக்கிறதோ அதே போல அவர்களுக்கு இப்படியொரு கிறக்கமோ.
“உண்மையிலேயே இந்தியா உனக்குப் பிடித்திருக்கிறதா”
“கண்டிப்பாக, இந்த நாட்டின் ஆன்மிகமும் தத்துவங்களும் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. மிக அற்புதமான ஒரு நாடு” என்றாள். இதைச் சொல்லும் போது அவள் முகம் ஒளிர்வது போல இருந்தது.
“நீ சொல்வதைப் பார்த்தால் இந்த நாட்டிலேயே செட்டில் ஆகி விடுவாய் போல” எனச் சொல்லி விட்டுச் சிரித்தான்.
“வொய் நாட்” என்றவள் சற்று இடைவெளி விட்டு, “மிலனில் அல்விஸின் யோகா வகுப்பில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவன் அங்கே அதை மிகத் தீவிரமாகப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறான். அவன் அதை விட்டு விட்டு இந்தியா வருவதாக விரும்பினால் கண்டிப்பாக இங்கேயே செட்டில் ஆகி விடுவேன். அப்படியொரு அற்புதமான வாய்ப்பு அமைந்து விட்டால் ரொம்பவே சந்தோஷப்படுவேன். இது எனக்கு ஒரு கனவு தேசம்”
“ஓ..” என்றவாறு மெலிதாகச் சிரித்தான்.
“நீங்கல்லாம் ரொம்ப ப்ளஸ்டு.. இங்கேயே இருக்கீங்க.. ஆசீர்வதிக்கப்பட்டவங்க” என்றாள். அவள் அதைச் சொல்லும் போது குரலில் உண்மையும் ஏக்கமும் இருந்தது. கதிரவன் அமைதியாக இருந்தான். வாகனங்கள் எதுவுமின்றிச் சாலை தனியாகக் கிடந்தது. அந்தத் தனிமையைக் கிழித்துக் கொண்டு கார் சென்று கொண்டிருந்தது.
“விர்ஜீனியா உன்னிடம் ஒன்று கேட்கவா”
“ம்..”
“அல்விஸ், உன் பாய் ஃபிரண்ட் அவனை உனக்கு எத்தனை ஆண்டுகளாகத் தெரியும்”
“டூ அண்ட் ஆஃப் இயர்ஸ்..”
“அவனை உன் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்களா”
“ஓ யெஸ்”
“உன் பெற்றோர் உன்னை அடித்தார்களா”
“அடிப்பதா எதற்கு” அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“நீ ஒரு ஆணைக் காதலித்ததற்கு” கதிரவன் சாலையிலிருந்து பார்வையை விலக்கவில்லை.
“எனக்குப் புரியவில்லை” என்றாள்.
“நீ உனக்குப் பிடித்த ஒரு ஆணை விரும்பியதற்கு உன்னைக் கண்டித்தார்களா” தெளிவாகக் கேட்டான்.
“இல்லையே …” அவளும் உறுதியாகச் சொன்னாள்.
“நீ அவனைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார்களா”
“ஆமாம்.. அது என் விருப்பம்”
“எனக்கு இது ரொம்ப வியப்பாக இருக்கிறது விர்ஜீனியா” என்றான். அவன் ஏதோவொரு மிகப்பெரிய விஷயத்திற்குள் நுழைபவன் போல பேசிக் கொண்டிருந்தான்.
“இதில் என்ன வியப்பு.. ஒரு பெண் அவளுக்குப் பிடித்த ஆணை விரும்புகிறாள், அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்.. இதில் என்ன வியப்பு” அவளுக்கு இன்னும் வியப்பு களையவில்லை.
கதிரவன் சிரித்தான். “உனக்கு இந்தியா எப்படி வியப்போ அப்படி எனக்கு இது வியப்பாக இருக்கிறது”.
“இல்லை எனக்கு இன்னும் புரியும்படிச் சொல்ல முடியுமா” எனக் கேட்டாள். அவள் சற்றுக் குழப்பமாகவும் ஆர்வமாகவும் இருந்தாள்.
“விர்ஜீனியா, எனக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் ஒரு பெண்ணைப் பல வருடங்களாகக் காதலித்து வந்தான். அந்தப் பெண்ணும் அவனை விரும்பினாள். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்த போது அந்தப் பெண்ணின் பெற்றோர் என் தம்பியைக் கொன்று விட்டார்கள்”
“கொன்று விட்டார்களா என்ன சொல்கிறீர்கள் ” சாலையிலிருந்து முகத்தைத் திருப்பி கதிரவனைப் பார்த்தாள் அவள்.
“இன்னொரு தம்பி இருந்தான் அவனும் ஒரு பெண்ணை விரும்பினான் அந்தப் பெண்ணும் அவனை விரும்பினாள், இருவரின் காதலை அந்தப் பெண்ணின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்ட அவர்களைத் தேடிப் போய் வெட்டிக் கொன்றார்கள் அந்தப் பெண்ணின் பெற்றோர். அதுவும் ஊரே கூடியிருக்கும் நடுத்தெருவில். என் தம்பியின் ரத்தம் சாலையில் ஆறு போல ஓடியது”
“என்ன சொல்கிறீர்கள்.. உண்மையாகவா” அவள் அவனுடைய முகத்தைப் பார்ப்பதிலிருந்து விலகவில்லை.
“இன்னொரு தம்பி.. அவனும் காதலித்ததற்காக அந்தப் பெண்ணின் பெற்றோர் அவன் வசித்த ஊரையே தீயிட்டுக் கொளுத்தினார்கள். பிறகு அவனையும் ரயிலில் தள்ளிக் கொன்றார்கள்”
“இட்ஸ் டெரிஃபிக்” மெலிதாக முனகினாள்.
வண்டலூரை அடைந்து வலது வளைவில் திரும்பி தாம்பரம் நோக்கி காரைச் செலுத்தினான்.
“என் அண்ணன் ஒருவன் காதலித்த குற்றத்திற்காக அவன் காதில் கடுமையான விஷத்தை ஊற்றி அவனைத் துடிக்கத் துடிக்கக் கொன்றார்கள்..”
“இவையெல்லாம் உண்மையாக நடந்தவைகளா”
“ஆமாம்…”
“எவ்வளவு வருடங்களுக்கு முன்பு ..”
“கடந்த ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன… எங்கள் தாத்தாக்கள் காலத்திலிருந்து.. இப்போதுவரை.. நேற்று கூட என் தம்பி ஒருவனை முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி கொடூரமாக வெட்டிக் கொன்றார்கள்.. அவனும் ஒரு பெண்ணைக் காதலித்தான் என்பதற்காக மட்டுமே”
“ஓ காட் …எதற்காக இந்தத் தண்டனைகள்”
“எதற்காக என்றால்…” கதிரவன் அவளுக்கு எப்படிச் சொல்வது என யோசித்தவாறு, “அதற்கான காரணத்தை விளக்கிச் சொல்ல முடியாது விர்ஜீனியா. மேலும் எவ்வளவு விளக்கினாலும் எப்பேர்ப்பட்ட புத்திசாலி வெளிநாட்டுக்காரராலும் அதை விளங்கிக் கொள்ள முடியாது, பைத்தியம் பிடித்து விடும்”
அவள் அமைதியாக இருந்தாள். அவனே பேசினான், “ஒரு வேளை நீ விரும்பிக் கொண்டிருக்கும் இந்த கனவு தேசத்தில் நீ பிறந்து, உன் விருப்பப்படி அல்விஸையோ வேறு யாரையோ காதலித்திருந்தால் அந்தக் காதலனுக்கும் இதுதான் முடிவு.. உனக்கும் கூட”
“என்னால் இதை நம்ப முடியவில்லை” கார் கதவின் பக்கவாட்டில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள்.
“ஆமாம், உலகிலுள்ள எந்தவொரு வெளிநாட்டுக்காரராலும் இதை நம்பவே முடியாது.. ஆனால் இதுதான் உண்மை. உங்களுக்குத் தெரிந்தவை அல்லது சொல்லப்படுபவை எல்லாம் இந்த நாட்டின் ஒரு பக்கம் மட்டுமே.. உன்னதமான புனிதமான ஆன்மிகமும் தியானமும் மட்டுமே. அவை பொய்யில்லை, ஆனால் அவற்றைத் தாண்டி வேறொரு இந்தியாவும் இருக்கிறது. அது மிக மிகக் கொடூரமானது. சற்றும் மனிதத்தன்மை இல்லாதது இவற்றையெல்லாம் உங்களுக்கு யாரும் சொல்லமாட்டார்கள் வேண்டுமானால் நீயே தேடி அறிந்து கொள்ள முயற்சி செய்” அந்த இரவில் அவனுடைய வார்த்தைகள் மிக சன்னமாக ஆனால் துல்லியமாக ஒலித்தது.
அதற்குப் பிறகு விர்ஜீனியா எதுவும் பேசவில்லை. கார் மாநகருக்குள் நுழைந்த போது அந்த இரவிலும் பல வாகனங்கள் வேகத்துடன் முந்திச் சென்றன. ஆட்டோ ஒன்று காதை அறுக்கும் இரைச்சலுடன் கடந்து போனது. மீனம்பாக்கத்தைத் தொட்டதும் விமான நிலையத்தின் ஒரு முனையில் இருக்கும் மேம்பாலத்தின் மீது காரைச் செலுத்தினான். டெர்மினல் ஒன்றை நோக்கிக் காரை மெதுவாக நகர்த்தினான். டெர்மினல் ஒன்று பாலத்தின் மறு முனையிலிருந்தது. அதை அடைந்ததும், காரை நிறுத்தி இறங்கினான். பின்பக்கம் சென்று டிக்கியைத் திறந்தான். விர்ஜீனியா காரிலிருந்து இறங்கி வந்து அவளுடைய பெரிய தோள் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு டிராலியை எடுத்துக் கொண்டாள்.
கதிரவனின் அருகில் வந்து நின்று என்ன பேசுவது எனத் தடுமாறி, பிறகு, “தேங்க் யு சோ மச்” என்றாள். அவனுடைய கையைப் பிடித்துக் குலுக்கினாள். உறுதியான கைகள். மெலிதாக அவனை அணைத்துக் கொண்டாள். “கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் உண்மையிலேயே உன் உடன் பிறந்தவர்களா” எனக் கேட்டாள்.
“ஆமாம், அப்படித்தான்” என்றான்
“ஸாரி” என்றாள். அணைப்பிலிருந்து விடுபட்டு புன்னகை செய்தவாறே விமான நிலையத்தின் உள்ளே சென்று மறைந்தாள்.
♦
சில நாட்களுக்குப் பிறகு சின்ன மகனின் பிறந்த நாள் அன்று தாரணி வாட்ஸ் அப்பில் வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு லைக் செய்திருந்தாள் விர்ஜீனியா. உடனே வீடியோ காலில் அழைத்தாள். அப்போது நாங்கள் மாமல்லபுரம் கடற்கரையில் இருந்தோம்.
“ஹாய் ஜப்பான் பேபி ஹாப்பி படே” என்றாள்.
“விர்ஜீனியாவுக்கு தேங்க் யு சொல்லு” என்றாள் தாரணி.
மகன், “தேங் யு அக்கா” என்றான். அவள் சிரித்தாள். உதடுகள் குவித்து முத்தமிட்டாள். “அப்புறம், இந்தியாவுக்கு அடுத்த டிராவல் எப்போ” எனக் கேட்டாள் தாரணி,
ஆனால், தாரணி கேட்டது விர்ஜீனியாவுக்குச் சரியாகக் கேட்கவில்லை போலிருந்தது. கடலலைகளின் சத்தமும், திரண்டிருந்த மக்களின் கூட்டமும் பேசுவதற்கு இடைஞ்சலாக இருந்தன. தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாலை நன்றாக இருட்டிய பிறகு நால்வரும் காரில் வந்து கொண்டிருந்த போது, தாரணி கதிரவனிடம் சொன்னாள், “இந்த விர்ஜீனியாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரில”
“ஏன்” எனக் கேட்டான்.
“இந்த மெசேஜைப் பார்” என செல்போனைக் காட்டினாள்.
“வண்டி ஓட்டிட்டிருக்கேன்ல. நீயே சொல்லு”
“அவள் இனி இந்தியாவுக்கு வரவே மாட்டாளாம்”
Art : bolnews.com
தருமபுரி மாவட்டம், அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சா.திருவாசகம் (1979), தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் சினிமா துறையிலும் இயங்கி வரும் இவர் தற்போது மாமல்லபுரம் அருகில் திருப்போரூரில் வசித்து வருகிறார். சல்வா ஜூடும், கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன், ஆர்ட்டிக்கிள் 15 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ‘கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ’ என்னும் நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது.








Leave a Reply