Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

வீடிலிகள்

சரிதா ஜோ
சரிதா ஜோ
November 2, 2025
வீடிலிகள்

அறை முழுவதும் அமைதி. சாளரத்தின் ஓரமாக வந்து நின்ற கதிரவன் ஒளிச் சுவரின் மையத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தைத் தொட்டு ஒளிரச் செய்தது.

வைஷ்ணவி நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் கண்கள் அந்தப் புகைப்படத்தில் இருந்த மனிதர்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.

பெரிய மேடையில் மின்சார ஒளியின் பிரகாசத்தில் கூட்டத்தின் கரகோஷத்தில் வெள்ளை வேஷ்டியில் நெற்றியில் குங்குமம் மிளிர முகமெல்லாம் பல்லாக வசந்தன் நின்று கொண்டிருந்தான். சாதிக் கட்சித் தலைவரின் கைகளால் வசந்தனுக்குப் பொன்னாடை போடப்படுகிறது. ஆறடி உயரமாக இருந்த வசந்தன் வளைந்து பவ்யமாகப் பொன்னாடையை ஏற்றுக் கொள்கிறான்.

பொன்னாடை அவன் தோளில் விழுந்தபோது வசந்தனின் முகம் வானின் மையத்தில் நிற்கும் சூரியனைப் போல ஜொலித்தது.
அவ்வொளியில் பெருமையும் சிறு கர்வமும் கலந்திருந்தன. அது அலெக்சாண்டர் உலகை வரைந்தபோது கண்ட நிமிட ஒளியைப் போலவும்,
தனது வெற்றியில் தானே பிரமித்த ஹிட்லரின் பார்வையைப் போலவும் இருந்தது.

“இந்த வீட்டுக்கே இந்தப் புகைப்படம்தான் அழகு” என்று வசந்தன் பெருமையோடு அடிக்கடி சொன்ன தருணங்கள் வைஷ்ணவிக்கு நினைவுக்கு வந்தது.

“நம்ம தலைவர்தான் நமக்குச் சாமி மாதிரி… நம்ம சாதியிலே யாருக்குக் கிடைச்சிருக்கு இந்தப் பெருமை. அவரோட கையாலே இந்தப் பொன்னாடை” என்று பெருமிதம் பொங்கக் கூறிக்கொண்டே இருப்பான். ஒரு குடும்பம் உயர்ந்த தருணத்தை அடைந்ததற்கான அடையாளச் சின்னம் அந்தப் புகைப்படம். ‌அந்தப் புகைப்படம் வீட்டுக்கு வந்தது முதல் வீடு பெரும் கௌரவத்தைப் பூசி நின்றது போல வசந்தன் நினைத்துக் கொள்வான். காலை எழுந்ததும் ஒரு நிமிடமாவது அந்தப் புகைப்படத்தின் முன்நின்று தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்வான். அந்தத் தருணத்தில் வைஷ்ணவியோ அல்லது குழந்தைகளோ அங்கு இருந்தால் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு திரும்பி அவர்களையும் ஒரு பார்வை பார்த்துப் புருவங்களைத் தூக்கி எப்படி என்பதைப் போலக் கேட்பான். அப்போதெல்லாம் வைஷ்ணவியும் பதிலுக்குப் புன்னகை செய்வார். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அதைப் பார்த்து, “அடேயப்பா! நம்ம தலைவர் கையாலேயே பொன்னாடையா? யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்!” என்று வியந்து போவார்கள்.

அதைக் கேட்கும் போது வைஷ்ணவிக்கும் பெருமையாகவே இருந்தது. அந்தப் புகைப்படத்தை வாரம் ஒரு முறையாவது எடுத்துச் சுத்தம் செய்துவிடுவார். அப்படி ஒருவேளை வைஷ்ணவி துடைப்பதற்கு மறந்து விட்டால் இதைவிட உனக்கு என்ன பெரிய வேலை இருக்கு? என்று கோபித்துக் கொள்வான் வசந்தன். கோபித்துக் கொள்வான் என்பதற்காகவே வீட்டைச் சுத்தம் செய்கிறாரோ இல்லையோ அந்தப் புகைப்படத்தைத் தவறாமல் வாரம் ஒரு முறை எடுத்துத் துடைத்து வைத்து விடுவார். வாரம் ஒரு முறைச் சுத்தம் செய்வதற்காக எடுக்கும் போது சிறிது நேரம் அந்தப் புகைப்படத்தை மடியில் வைத்திருப்பார். இப்போதும் அப்படித்தான் சுத்தம் செய்வதற்காக அந்தப் புகைப்படத்தை எடுத்துத் தன் மடியில் வைத்திருந்தார்.

இதுவரை ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தப் புகைப்படம் இப்போது அவளுக்குக் கறுப்பாகத் தெரிந்தது. அதிலிருந்த மனிதர்களின் முகங்கள் இருண்டு கிடந்தன. நறுமணம் என்று நினைத்த மலர் நஞ்சாகத் திரிந்தது. தங்கம் என்று நினைத்தது ஈயமாக இளித்தது.
ஒளி இருளாயிற்று. முகமிலியாகத் தன்னை நினைத்தார். அந்த உணர்வு வைஷ்ணவியை அறுத்தெடுத்தது. வைஷ்ணவியின் கண்களிலிருந்து அவரை அறியாமலேயே கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. விழுந்த கண்ணீரில் புகைப்படத்தில் இருந்த இருவரும் உருவம் இழந்து உருகி வழிந்தனர்.

தன் சாதியைச் சார்ந்த பெண் வேறு சாதியில் திருமணம் செய்ததற்காக அவளின் கணவனை வெட்டிக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக ஒளிரும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தத் தலைவரின் கொடூரம் தெரிந்தது. அதுமட்டுமா அந்தத் தலைவரைப் பற்றி தினசரிச் செய்திகளில் வரும் செய்திகள் அவர் மீது ஏராளமான குற்றங்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் செய்திகள். அனைத்தும் அந்தப் புகைப்படத்தில் நிழலாய் மறைந்திருப்பது போலத் தோன்றியது வைஷ்ணவிக்கு. அந்தப் புகைப்படத்திலிருந்தே வைஷ்ணவிக்குக் கேள்விகள் எழுகின்றன. வைஷ்ணவியின் உள்ளத்தில் ஒரு பிணக்கு வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்தப் பிணக்கின் ஊஞ்சலில் வைஷ்ணவி பெருமைக்கும் துக்கத்திற்கும் நடுவில் ஆடிக்கொண்டிருந்தார். புகைப்படத்தைத் தூக்கி எறிய வேண்டும் என நினைத்தார். ஆனால் முடியவில்லை. ‘என்னுடைய சுவாசம் இந்தப் படத்தில்தான் இருக்கிறது என்று அடிக்கடி வசந்தன் கூறியது நினைவிற்கு வந்தது.

வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. மடியில் இருந்த புகைப்படத்தை மீண்டும் சுவரில் மாட்டினார். கீழே இறங்கித் திரும்பி அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது கடந்த வார நிகழ்வைக் கண்முன் காட்சியாக விரிய வைத்தது.

வைஷ்ணவி வீட்டுக்குள் கால் வைத்ததும் பரிசின் ஒளி உடனே மங்கியது. அதுவரை கையில் மின்னிய அந்த வெற்றிக் கோப்பையை யாரும் தொடக்கூட விரும்பவில்லை. தொடக்கூட என்பதைவிடப் பார்க்கக் கூட விரும்பவில்லை என்று சொல்லலாம். யாருடைய கண்களிலும் பெருமையில்லை; முகத்தில் மகிழ்ச்சியில்லை; பெருமிதமில்லை. வீடு மௌனத்தை ஆடையாக உடுத்தியிருந்தது.

“இது எல்லாம் தேவையா? நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காம நீ போயிட்டு வந்துருக்க. இதெல்லாம் ஒரு பெருமையா?” என்ற வசந்தனின் சொற்கள் வைஷ்ணவி பெற்று வந்த பரிசின் பெருமையைக் கரையான்களாக அரித்தன.

ஓர் எழுத்தாளரின் எழுத்துக்குக் கிடைக்கும் வெற்றி என்பது தன் குழந்தைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் போலத்தான். அப்படி வைஷ்ணவிக்குக் கிடைத்த அங்கீகாரத்தை அவர்கள் குடும்பம் ஏற்க மறுத்து விட்டது.

யாரும் கவனிப்பாரற்று ஒரு வாரமாக அந்தக் கோப்பை ஒரு மூலையில் தனிமையில் இருந்தது. வைஷ்ணவி மட்டும் அதைக் கடக்கும்போதெல்லாம் ஏறிட்டுப் பார்ப்பார். நீண்ட பெருமூச்சு விடுவார். அப்போது அவர் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஒரு வாரம் கடந்த நிலையில். அந்தப் பரிசளிப்பு விழாவின் புகைப்படத்தை அமைப்பிலிருந்து அனுப்பி வைத்தனர். புகைப்படத்திலிருந்து அந்த நாளின் பெருமை காட்சியாகப் பிரகாசித்தது. பெருங்கூட்டம், பிரகாசமான ஒளி, அரங்கம் அதிரக் கைத்தட்டல், வைஷ்ணவி தோளில் வாழ்வில் முதல் முறையாகப் பொன்னாடை அலங்கரித்த நேரம்.

அந்தப் புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு “என்னங்க… இந்தப் போட்டோவ ஹால்ல வச்சா நல்லா இருக்கும்ல?” என்று வைஷ்ணவி மெதுவாகக் கணவன் வசந்தனிடம் கேட்டார். வசந்தனின் முகம் அந்த நிமிடமே மாறியது.

“ஓ… அப்படியெல்லாம் வேற உனக்கு நெனப்பு இருக்கா?

இந்தப் போட்டோவ இந்த வீட்டுக்குள்ள மாட்டக் கூடாது.”

என்று கூறிய குரலில் கடுமை இருந்தது. வைஷ்ணவி இதுவரை பார்த்திராத வசந்தனின் முகமாக அது இருந்தது.

“ஏன் மாட்டக் கூடாதா?” என்று கேட்ட வைஷ்ணவியின் குரல் நடுங்கியது.

“ஏன்னா… உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு? காலங்காலமா நாம‌ எந்தக் கட்சியில் இருக்கோம். என்னோட கட்சிக்கு எதிர்க்கட்சிக்காரங்க கையில போய் நீ பரிசு வாங்கிட்டு வந்திருக்க. நீ வேணா பரிசு குடுத்தா ஈனு இளிச்சுக்கிட்டு வாங்கிட்டு வந்துடுவே. உனக்கு வெக்கம், மானம் எதுவும் இல்லாம இருக்கலாம். எனக்கு எல்லா இருக்கு. அதை இங்க மாட்டினா! வீட்டுக்கு வர்றவங்க என்ன நினைப்பாங்க?” என்று கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவளுடைய முகத்தில் அறைந்தாற்போல் கூறினான் வசந்தன்.

அதைக் கேட்ட வைஷ்ணவியின் முகமும் மனமும் கூட்டுக்குள் ஒடுங்கிய நத்தை போல் ஒடுங்கிப் போயின. “நான் என்ன அந்தக் கட்சியில போய் சேர்ந்துட்டேனா? நான் ஒரு எழுத்தாளர். நான் எழுதின கதைக்கு அங்கீகாரம் குடுத்து இருக்காங்க. இது என்னுடைய எழுத்துக்குக் கிடைத்த பெருமை. இத நான் மாட்டக்கூடாதா” என்று வைஷ்ணவி கூறிய வார்த்தைகள் அவருக்கே கேட்குமா என்று தெரியாது. அந்த அளவிற்கு வார்த்தைகளின் மேல் ஒலித் தணிப்பியை வைத்தார் வைஷ்ணவி.

“இது நான் ரத்தமும் வியர்வையும் சிந்திக் கட்டின வீடு. இந்த வீட்ல எதை மாட்டணும் எதை மாட்டக்கூடாது என்று நான்தான் முடிவு செய்யணும். இந்த வீட்டுக்குள்ள அந்த நாயோட போட்டோவ எப்போவும் மாட்டக் கூடாது” வசந்தனின் குரல் மதுரை சபையில் பாண்டிய மன்னனின் குரலைப் போல ஓங்கி ஒலித்தது. ஆனால் அநீதியாக இடிபோல் முழங்கிய அந்தக் கணம் வைஷ்ணவியின் உள்ளத்தில் ஓர் மேக வெடிப்பு நிகழ்ந்து ஒட்டு மொத்தத் தண்ணீரும் தலைமீது விழுந்தது போல அந்த வார்த்தைகள் வைஷ்ணவியைத் திகைக்க வைத்தன.

இப்போது வசந்தனின் முகம் அந்நியமாகத் தெரிந்தது. இதுநாள் வரை வசந்தனோடு வாழ்ந்த வாழ்க்கையில் அவனுடைய முகம் ஒரு நாளும் இப்படி அந்நியமாக வைஷ்ணவிக்குத் தெரிந்ததில்லை. ஆத்திர ஆத்திரமாக வந்தது. அந்த ஆத்திரம் முழுவதும் பீறிட்டுக் கண்ணீரில் தெறித்தது.

“என்னது? உங்க வீடா?
அப்படின்னா வீட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?”

வைஷ்ணவியின் குரல் குலுங்கிக் கொண்டே வெளிவந்தது.

“சம்பந்தம் இருக்கு. ஆனா அதுக்காக உன் இஷ்டத்துக்கெல்லாம் பண்ண முடியாது.” என்று ஆக்ரோசமாகக் கத்தினான் வசந்தன். வைஷ்ணவியின் பெருமை, அங்கீகாரம், கனவு எல்லாமும் ஒரே நொடியிலே தகர்ந்து போனது போலத் தெரிந்தது. வைஷ்ணவி நிமிர்ந்து வீட்டின் சுவரைப் பார்த்தார். அச்சுவர் அவருக்குக் கிளிக்கூண்டு போலத் தெரிந்தது.

அந்தக் கூண்டிற்குள் வைஷ்ணவிக்கு எந்தப் பெருமையும் இல்லை. எந்த அங்கீகாரமும் இல்லை. எந்த மரியாதையும் இல்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலத்தான் இருந்திருக்கிறார். வைஷ்ணவி எழுத்தால் பெற்ற அங்கீகாரம் அந்தச் சுவரைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்க்க முடியாமல் ஒரு காகிதத்தில் சிக்கிக் கிடந்தது. வைஷ்ணவி திடீரென ஒரு பாலைவனத்தின் கடுமையான வெப்பத்துக்கு நடுவில் தனித்து விடப்பட்டவர் போல உணர்ந்தார். வைஷ்ணவிக்கு யாருமில்லை. வைஷ்ணவிக்காக எதுவுமில்லை. வைஷ்ணவியின் உள்ளத்தில் தனிமை நாக்கை நீட்டித் துரத்தும் பாம்பைப் போலத் துரத்தி வாரிச்சுருட்டி முழுங்க ஆரம்பித்தது.

ஒரு பெண்ணின் எந்த வெற்றியும் வீட்டின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து விடாது என்று நினைத்தார் வைஷ்ணவி. அந்த வேதனை வைஷ்ணவியின் உள்ளத்தைத் துளைத்தது. அவன் பேச்சில் இருந்த அந்த அகங்காரம் “இது என்னோட வீடு” என்ற சொற்கள் அவர் வயிற்றிற்குள் பிரளயத்தை ஏற்படுத்தின. அந்த இடத்திலிருந்து வெளியே போக நினைத்தார். அவர் முகம் வெளிறியது. கண்ணீர் நிற்காமல் கன்னத்தில் வழிந்து கொண்டே இருந்தது. அது எங்கிருந்து வந்தது. வேதனையா, வெறுமையா அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வைஷ்ணவி தன் கதைகளில் எத்தனையோ கதாபாத்திரங்களை உருவாக்கி வாசகர்களின் மனதில் உலவ விட்டவர். அந்தக் கதாபாத்திரங்கள் உணர்கிற உணர்ச்சிகளை எல்லாம் மிக நேர்த்தியாகக் கதைகளில் பிரதிபலிக்கத் தெரிந்தவர். ஆனால் இப்போது வைஷ்ணவிக்கு நிகழ்ந்த அனுபவத்தை உணர்வின் வெளிப்பாட்டை அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. வைஷ்ணவி பார்வையை மாற்றிய போது பக்கத்தில் இருந்த சுவரில் புன்னகை மாறாத முகத்தோடு அப்பா தோன்றி மறைந்தார். முதல் சம்பளத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. திருமணத்திற்குப் பின் வேலையைவிட்டது. எல்லாம் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

வைஷ்ணவியின் நினைவில் அத்தியாயங்கள் படிப்படியாகக் கண்ணில் தெரிந்தது. கல்யாணத்துக்கு முன் வேலையில் வைஷ்ணவியைத் திருமணத்திற்குப் பிறகு ‘வீட்டைப் பார்த்துக்க. நாளைக்கு புள்ள குட்டின்னு வந்தா அவங்களப் பார்க்கவே சரியா போயிரும்’ என்று அன்பான வார்த்தைகளை வசந்தன் அன்போடு கூறியது எல்லாம் அடுக்கடுக்காக அலையலையாக மாறி மனதின் கரையில் வந்து மோதிக் கொண்டிருந்தன. அதற்கான விலையாகத்தான் இன்று தன் சுயத்தைத் தொலைத்ததாக நினைத்தார் வைஷ்ணவி. வழக்கம்போலவே மாடிப்படியிலிருந்து விசில் அடித்தபடி இறங்கி வந்த வசந்தன் அலுவலகத்திற்குத் தேவையான கோப்புகளை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த வைஷ்ணவிக்கு என்ன மனசு இவருக்கு. நான் பேசுனது கொஞ்சம் கூட உள்ளுக்குள்ள போகலையே என்று நினைத்துக் கொண்டே கோபத்தோடு சமையல் அறைக்குள் நுழைந்தார்.

கோபத்தை எல்லாம் பெண்கள் கொண்டு வந்து கொட்டற இடம் இந்தச் சமையலறைதானே. என்று நினைத்துக் கொண்டே, பால் குண்டாவை டொம்மென்று வைத்தார். ஏய் இது உன் வீடு இல்ல என்ன உன் இஷ்டத்துக்கு டும்முனு வைக்கிற என்று கேட்டது பால் குண்டா. பிரிட்ஜ் இது உன் வீடு இல்ல. நீ இனிமேல் அதிகாரம் பண்ண முடியாது என்னைத் தொடாதே என்று கூறியது. தக்காளி வைஷ்ணவியைப் பார்த்து உன்னோட அதிகாரம் எல்லாம் இங்க பலிக்காது என்றது. பாத்திரங்கள் எல்லாம் உருண்டு கொண்டே இனி நீயும் எங்களை மாதிரி தான் பத்தோட பதினொன்னு அவ்வளவுதான் என்று கூறியன. சமையலறையில் இருந்த எல்லாப் பொருட்களும் “இது உன் வீடு இல்ல. இது உன் வீடு இல்லை” என்று கூறின. காதைப் பொத்திக்கொண்டு “ஐயோ நிறுத்துங்க!” என்று கத்தினார் வைஷ்ணவி. கோபத்தில் ஆத்திரமும் அழுகையும் பீறிட்டு வந்தன. சற்று நேரம் கீழே அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பைப்பைத் திருகினார். வழிந்த தண்ணீரைக் கைகளைக் குவித்துப் பிடித்து முகத்தில் அடித்துக் கொண்டே இருந்தார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் மனது குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தது. மெதுவாகச் சமையலறையை விட்டு வெளியே வந்து வசந்தனை மீண்டும் கவனித்தார் வைஷ்ணவி.

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான். “வைஷ்ணவி வந்து சோறு போடு. உள்ள என்ன பண்ற?” என்று எதுவுமே நடக்காதது போல் வைஷ்ணவியை அழைத்தான். இன்னொரு கையில் செல்போனில் ஏதோ வீடியோவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த வைஷ்ணவிக்கு வசந்தனின் அருகில் சென்று அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தட்டைத் தூக்கி வீசி வசந்தனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் போல இருந்தது. தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டே வசந்தனின் முன்னால் போய்ப் பெருமூச்சோடு நின்றார் வைஷ்ணவி.

“நானும் படிச்சிருக்கேன். உங்கள விட நான்தான் அதிகமாச் சம்பாதிச்சேன். உங்களைப் படிக்க வைக்கிறதுக்குக் கஷ்டப்பட்ட மாதிரி தானே என்னப் படிக்க வைக்கிறக்கு என் அம்மா அப்பாவும் கஷ்டப்பட்டு இருப்பாங்க” என்று வேக வேகமாகப் பேசினார் வைஷ்ணவி.

“அதுக்கு என்ன இப்ப? அதிகப்பிரசங்கி மாதிரிப் பேசின எனக்குக் கோவம் வந்துரும். என்ன விட நீ சம்பளம் அதிகமாகத்தான் வாங்கிட்டு இருந்தே. அதையே நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். என்னமோ வீட்டிலேயே இருந்து எழுதுறேன்னு சொன்னே. சரின்னு சொன்னேன்.சில நேரங்கள்ல பசங்களக் கூடப் பாக்காம எழுதிக்கிட்டும் படிச்சுக்கிட்டும் கிடப்பே. ஏதோ உனக்குப் பிடிச்சதைச் செய்றேன்னு சகிச்சுக்கிட்டேன். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ற மாதிரி இந்தப் போட்டோவை மாட்டுனு வந்து நிக்கிறே. உனக்குப் பிடிச்சதெல்லாம் செய்யறதுக்கு அனுமதிச்சது என்னோட தப்பு. என் வீட்ல உக்காந்துட்டு. என் சோறத் தின்னுட்டு என்ன பேச்சுப் பேசுற நீ? யார எங்க வைக்கணுமா அங்கதான் வைக்கணும். பொம்பளையா அடக்க ஒடுக்கமா இரு. அதை விட்டுட்டு எழுதராலாமா. எழுதிக் கிழிக்கறாலாமா? பெரிய பரிசு வாங்கிட்டு வந்துட்டா பரிசு. கொஞ்சம் சுதந்திரம் குடுத்தா தலை மேல ஏறி உக்காந்துக்கறீங்க. என்ன பண்ணுனாலும் நீ என் காலுக்குப் போடுற செருப்பு மாதிரிதான்” என்று கண்களில் கோபம் தெறிக்கப் பேசிவிட்டு டைனிங் டேபிள் தண்ணீரோடு இருந்த சொம்பைத் தூக்கிச் சுவரில் அடித்து விட்டு டைனிங் டேபிள் மீது கோபத்தில் குத்தினான்.

அதுவரை அப்படி ஒரு காட்சியைக் கண்டிராத வைஷ்ணவி பயந்து போனார். பயத்தில் சுவரோடு சுவராகப் பல்லி போல் ஒட்டிக் கொண்டு நின்றார். வசந்தன் மீது ஒட்டிக் கொண்டிருந்த நம்பிக்கையும் பிரியமும் மொத்தமாக உடைந்து போயின. நேற்று வரை கையில் பத்திரமாக வைத்திருந்த கண்ணாடிப் பாட்டில் கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்தது போல இருந்தது வைஷ்ணவிக்கு.

நீங்க சுதந்திரம் கொடுக்கணுமா? நான் என்ன உங்களுக்கு அடிமையா? உங்க காலுக்குப் போடற செருப்பா? இந்தக் கேள்விகள் மாறி மாறி அவளுடைய நெஞ்சில் அறைந்தன. அப்படி நான் என்ன ரெண்டகம் பண்ணிட்டேன். இந்தப் போட்டோவத்தான மாட்டச் சொன்னேன் என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டே கோபத்தோடு “ஆமா இது உங்க வீடுதான். இது என் வீடு இல்லை. என் வீடு எங்க ஊர்ல இருக்குது. என்ன இருந்தாலும் அப்பா அப்பாதான். புருஷன் புருஷன்தான். எங்க அப்பா ஒரு நாளும் உங்கள மாதிரி சொல்ல மாட்டார்” என்று கோபமாகக் கத்தினார் வைஷ்ணவி.

“உங்க அப்பா உங்க அப்பாதான். யார் இல்லைனு சொன்னது. உங்க வீட்ல கொண்டு போயி தாராளமா மாட்டிக்கோ” என்று கூறிவிட்டு நக்கலான ஒரு சிரிப்பு சிரித்தபடி நகர்ந்தான் வசந்தன். வசந்தனின் அந்தச் சிரிப்பு மறுபடியும் மறுபடியும் வைஷ்ணவிக்கு வந்து போனது. அதுவரை அவன் பேசிய வார்த்தைகளை விட அந்தச் சிரிப்பு வைஷ்ணவிக்குக் கோபத்தை வர வைத்தது. அதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்.

நினைவுகளில் இருந்து மீண்ட வைஷ்ணவியின் மனம் அப்போது இலக்கியத்தின் பக்கங்களில் மறைந்து போன வீரமங்கை போல இருந்தது. உள்ளே ஒரு மௌனப் புரட்சி கொதித்தது. 

அன்று மாலை ஜே.சி.ஐ அமைப்பிலிருந்து சிலர் வந்து வாழ்த்துக்கூறி பொன்னாடை அணிவித்தார்கள். வருகின்ற மார்ச் எட்டாம் தேதி பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்கள். வைஷ்ணவி மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். கண்டிப்பாக வருவதாக உறுதி அளித்தார் வைஷ்ணவி. அனைவரும் கிளம்பி விட அவர்களோடு வந்திருந்த தோழி சிந்து அவர்களை வழியனுப்பி விட்டு வைஷ்ணவியின் அருகில் வந்து அமர்ந்தார். “எவ்வளவு பெரிய சாதனை பண்ணி இருக்கே. தமிழ்நாடு அளவில் எத்தனை எழுத்தாளர்கள் கலந்து இருப்பாங்க. எத்தனை கதைகள் வந்திருக்கும். முதல் பரிசு வாங்கி இருக்கே. ஆனா உன் முகத்தில் சந்தோஷமே இல்லையேடா. என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

“ஒன்னும் இல்லை சிந்து”

“உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா? உன்னோட வாழ்க்கையில நீ கண்ட கனவு நினைவாயிருச்சு. அப்போ நீ எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கணும். உன்னோட முகம் அப்படியா இருக்கு? உண்மையைச் சொல்லு என்ன ஆச்சு?”

பரிசு வாங்கி வந்த பின்பு வீட்டில் நடந்த அனைத்தையும் சிந்துவிடம் கூறி முடித்தார் வைஷ்ணவி.

“இதெல்லாம் சாதாரணம் வைஷு””

“என்னடி சொல்ற? இதே மாதிரி உன் வீட்டில் இப்படி நடந்து இருந்தா இப்படிச் சொல்ல மாட்டே? உன் வீட்ல இப்படி நடக்காது. ஏன்னா நீ சொல்றதுதான் சட்டம். நீ எடுக்கிறதுதான் முடிவு. அதனாலதான் நீ இப்படிச் சொல்றே”

“சரியாச் சொன்னே.
நீ சொல்றதுதான் சட்டம். நீ எடுக்கறதுதான் முடிவு.
இது எனக்கு மட்டும் இல்ல ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் ஆம்பளைங்க இதைத்தான் சொல்லுவாங்க. பொம்பளைங்க என்ன முடிவு எடுக்க முடியும்னு தெரியுமா? இன்னைக்கு என்ன சமைக்கலாம்?
தீபாவளிக்கு எங்க போயி டிரஸ் எடுக்கலாம்?
வீட்டுக்கு என்ன கலர் பெயிண்ட் பண்ணலாம்?
ஏசி டிவி எங்க வாங்கலாம்? இதுல கூட விலைய அவங்கதான் தீர்மானிப்பாங்க.
எந்தக் கோவிலுக்குப் போலாம்? வேண்டுதல எப்ப நிறைவேற்றலாம்? பிறந்தநாளுக்கு கேக் வெட்டலாமா வேண்டாமா? இப்படியான முடிவுகளை மட்டும்தான் பெண்கள் எடுக்க முடியும். நமக்கு எந்த இடத்தில முடிவு எடுக்கணும்ங்கற அதிகாரத்தை அவங்கதான் முடிவு பண்றாங்க. ஒவ்வொரு ஆணுக்குள்ளேயும் ஆணாதிக்க மனப்பான்மை இருந்துட்டுதான் இருக்கு. அது சதவீத அடிப்படையில்தான் வேறுபடுமே தவிர, எந்த ஆணோட மனசுலயும் ஆணாதிக்க மனப்பான்மை இல்ல அப்படின்னு சொல்ல முடியாது.

ஒரு இடம் வாங்குற விஷயத்திலையோ! கார் வாங்குற விஷயத்திலையோ! முக்கியமா பசங்களோட படிப்பு, கல்யாண விஷயத்திலையோ நம்மகிட்ட இன்ஃபர்மேஷன் சொல்லப்படும். கலந்து ஆலோசிப்பது போல இருக்கும். ஆனால் முடிவு அவங்கதான் எடுப்பாங்க. ஆனால் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை இது உன் வீடும்மா. நீ எடுக்கிறதுதான் முடிவு. நீ என்ன செய்றியோ செஞ்சுக்கோ யார் கேக்கப் போறாங்க அப்படின்னு சொல்லுவாங்க. இது காலம் காலமா நடக்கிறது தானே” சிரித்துக் கொண்டே சொன்னார் சிந்து. அதைக் கேட்ட வைஷ்ணவிக்குப் பளீரென்று அப்போதுதான் வெளிச்சம் போட்டது போல் இருந்தது. அதுவரை இது தனக்கு மட்டுமே நடக்கின்ற சம்பவமாக நினைத்துக் கொண்டிருந்தவருக்குத் தன் திருமண வாழ்க்கை காலம் முழுவதும் இப்படித்தானே நடந்திருக்கிறது என்று தோன்றியது.

“நீ சொன்னதுக்கு அப்புறம்தான் நான் யோசிக்கிறேன்” என்று வைஷ்ணவி சொன்னவுடன் “மாட்டுக் கழுத்துல கயித்தக் கட்டி மொளக்குச்சி அடிச்சு அதுல கட்டிடுவாங்க. அது மாதிரிதான் பொம்பளைகளுக்கும். மொளக்குச்சி எதுக்கு அடிக்கிறாங்கன்னு நம்ம கேக்குறது இல்ல. அதோட அதை எங்க அடிக்கணும்? அந்தக் கயிறோட நீளம் எவ்வளவு? அப்படிங்கறத முடிவு பண்றதும் கூட அவங்கதான். இந்த மொளக் குச்சியும் கயிறும் நம்ம கண்ணுக்குத் தெரியாத மாதிரி பாத்துக்கிறாங்க. இந்த நீளத்தைத்தான் அவங்க சுதந்திரன்னு சொல்றாங்க” என்று சிந்து கூறினார்.
அதைக் கேட்டு ஒரு நீண்ட பெருமூச்சோடு “என்ன இருந்தாலும் பொறந்த வீடு பொறந்து வீடுதான். இந்தப் போட்டோவ அப்பா பெருமையா வீட்ல மாட்டி வச்சுக்குவாரு” என்று வைஷ்ணவி கூறியவுடன் உடனே சத்தம் போட்டுச் சிரித்தார் சிந்து.

“எதுக்கு இப்ப நீ சிரிக்கிற?”

“இன்னும் நீ உலகம் புரியாம இருக்குற. அவர் இந்தப் போட்டோவை மாட்டுவார்னு நினைக்கிறியா?” என்று கேட்டார் சிந்து.

“நான் அவருக்கு ஒரே பொண்ணு. நான் கேட்டு இதுவரைக்கும் அவர் எதுவுமே மறுத்ததில்லை. நான்னா அவருக்கு உசுரு. உனக்குத் தெரியாதா?”

“வைஷு நீ ஒன்ன மறந்துட்ட. அப்பாவாவே இருந்தாக் கூட அவர் ஒரு ஆண்தான். அதனால எனக்கு என்னமோ அதுக்கு வாய்ப்பில்லைன்னு தோணுது. அதோட இந்தக் கட்சி சாதி எல்லாமே ஒரு வெறி மாதிரி அதைக் கையில பிடிச்சுக்கிட்டவங்க தன்னுடைய குடும்பம்னு கூடப் பாக்க மாட்டாங்க. தன்னுடைய தன்மானம்,கௌரவம், பெருமை, மரியாதை இதெல்லாம் அதுலதான் அடங்கி இருக்கிறதா நினைப்பாங்க. சாதிக்காக உசுரா வளர்த்த புள்ளையவே கொல்றவங்களையும் கட்சிக்காக எதை வேணாலும், ஏன் உசுரக் கூடக் குடுக்கத் துணிகிறவங்களையும் வச்சுத்தானே இந்தச் சாதியும் அரசியலும் பொழச்சுக்கிட்டு இருக்கு” என்று சிந்து சொன்னதைக் கேட்டு வைஷ்ணவியும் யோசித்தார். ச்சே ச்சே நம்மப்பா அப்படி இருக்க மாட்டார் என்று அவரின் உள் மனதில் ஒரு குரல் கேட்டது.

அடுத்த நாள் தன் கையில் புகைப்படத்தை இறுகப் பிடித்தபடி சிறுவயதில் தன்னுடைய பிறந்தநாள் ஒன்றில் தன் வீட்டின் முன் தன் கையால் வைத்துத் தன்னால் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட குல்மொகர் மரத்தின் அடியில் சற்று நேரம் நின்று அதன் குளுமையான நிழலை அனுபவித்துவிட்டுத் தன் வீட்டிற்குள் நுழைந்தார் வைஷ்ணவி.

கண்களைச் சுழல விட்டார். வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் நினைவுகளைச் சுமந்து நிற்கும் நினைவுச் சின்னங்களாக வைஷ்ணவிக்குத் தோன்றியது. எத்தனை எத்தனை அனுபவங்கள் வைஷ்ணவியின் வாழ்க்கையில் அந்த வீட்டோடு கலந்திருந்தது. அம்மா அப்பாவின் அளவு கடந்த அன்பு எப்போதும் வைஷ்ணவியைத் தாலாட்டிக் கொண்டிருக்கும். அந்த வீடு வைஷ்ணவிக்கு எப்போதும் பாதுகாப்பின் அடையாளமும்கூட.

அப்பாவின் வழக்கமான குரல் கேட்டது. “என்ன வைஷு? எப்படி இருக்கே? பயணம் எப்படி இருந்தது?”

“பயணம் எல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்ததுங்க அப்பா. உங்களுக்காக ஒன்று கொண்டு வந்து இருக்கேன்” என்று சொல்லி அந்தப் போட்டோவை அப்பாவின் கையில் கொடுத்தார்.

அப்பாவின் கண்கள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் பிரகாசித்தன. “அடடே ! என்னடா இது…! இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவே பொன்னாடை போட்டு, பரிசு கொடுத்திருக்காங்க… ஹா! இது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு பெரிய சாதனை நம்ம சாதிசனத்திலே யார் இப்படிப் பண்ணி இருக்காங்க. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு வைஷு. எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா ?” என்று கூறிவிட்டு வைஷ்ணவி கொடுத்த புகைப்படத்தை மடியில் வைத்துக் கண்கொட்டாமல் அதைப் பார்த்தபடியே மகிழ்ச்சி பொங்கக் கூறினார் வைஷ்ணவியின் அப்பா.

“எல்லாம் உங்களால தான் அப்பா”
“நான் என்றா கண்ணு பண்ணினேன்?”

வைஷ்ணவியின் கண்கள் கண்ணீரால் பனித்தன. “அப்பா… நான் மேடையில் பேச வேண்டும். ஒரு எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் உங்க கனவு. வாசிப்பின் மீது ஆர்வம் வர நீங்கள்தான் காரணம். ஜெயகாந்தனையும், புதுமைப்பித்தனையும் மட்டுமல்ல… ரஷ்ய எழுத்தாளர்களை உலக இலக்கியங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியது நீங்கதான். அந்த வாசிப்புத் தான் என்னை இங்கே கொண்டு வந்தது. இப்போ இந்தப் பரிசே உங்க அன்பின் சாட்சி.

இதைக் கேட்ட அப்பாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது தன் இரு கைகளையும் நீட்டி மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆசீர்வாதம் செய்வது போல ஒரு கையை வைஷ்ணவியின் தலைமீது வைத்தார்.

“என்ற சந்தோஷத்தைக் கொட்டி வைக்க இடமில்லை. அப்படி ஒரு சந்தோஷம். உலகமே இப்ப என் காலடியில் இருக்கிற மாதிரி இருக்கு”என்றார் வைஷ்ணவியின் அப்பா.
அப்பா… இந்தப் போட்டோ நம்ம வீட்டில் மாட்டினால்… அதைவிடப் பெரிய மகிழ்ச்சி எனக்கு வேற எதுவும் இருக்க முடியாது.” என்றார் வைஷ்ணவி. அதுவரை மகிழ்ச்சியாக பிரகாசமாக இருந்த அப்பாவின் முகம் ஒரு நொடியில் அம்மாவாசை இருட்டைப் போல் இருண்டு போனது. அதைக் கவனிக்காத வைஷ்ணவி “அப்பா இது யாரு வீடு?” என்று கேட்டார்.

“என்னடா கேள்வி இது உன்னோட வீடுடா. நீ பொறந்ததுக்கு அப்புறம்தான் எனக்குத் தொழில் நல்லபடியா அமஞ்சு நான் இவ்வளவு பெரிய வீடு கட்டி ஊருக்குள்ள ஒரு மரியாதை அந்தஸ்தோடு வாழ்றேன். இது உன்னோட வீடு. எல்லாமே உனக்குத் தாண்டா”என்றர் அப்பா.

“சரி சரி இந்தப் போட்டோவ உங்க போட்டோவுக்கு ரைட் சைடுல மாட்டலாமா? இல்ல நம்ம பாப்பா போட்டோவுக்குப் பக்கத்துல மாட்டலாமா? எங்க மட்டுனா நல்லா இருக்கும் பா?” என்று கேட்டார் வைஷ்ணவி. உடனே அப்பாவின் முகம் இருண்டு போனது. பேச்சற்றுத் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

“என்னப்பா எதுவுமே பேச மாட்டேங்கறீங்க?”

“அதுவாடா அந்த எதிர்க்கட்சி அமைச்சர் போட்டோவை என்ற வீட்டில் மாட்டறது சாத்தியமே இல்லை. நான் உயிரோட இருக்கும் வரைக்கும் இந்தச் சுவரில் அந்தப் புகைப்படத்துக்கு இடமில்லை வைஷூ…” என்று அமைதியாக ஆனால் உறுதியாகச் சொன்னார்.

அப்பாவின் வார்த்தைகள் வெட்டும் மின்னல் போல் வைஷ்ணவியின் நெஞ்சில் பாய்ந்தது. அப்பாவின் வார்த்தைகள் வசந்தனின் வார்த்தைகளைப் போலவே இருந்தன. அப்பாவின் முகத்தில் ஒரு கணம் வசந்தன் தோன்றி மறைந்தான். என்ன! வசந்தன் கோபமாகக் கூறினார். அதையே அப்பா நிதானமாகக் கூறினார். அவ்வளவே.

வசந்தன் சொன்ன வார்த்தைத் தணலில் கருகி இருந்த வைஷ்ணவிக்கு இப்போது அப்பா கூறியது மேலும் தணலைக் கூட்டியது. ஒரே வார்த்தையை இரண்டு இடங்களிலும் கேட்டார் வைஷ்ணவி. இது என்னோட வீடு

அப்படியெனில்… “ எனக்கான வீடு எது?” அந்த இடத்தில் அசைவற்று நின்று கொண்டிருந்தார் வைஷ்ணவி. கையில் இருந்த புகைப்படத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. கீழே வைக்கலாமா என்று நினைத்தவரை வார்த்தைகளின் தடிமன் அழுத்திக்கொண்டிருந்த நிலையில் கீழே வைப்பதற்குக் கூட விரும்பவில்லை. ஏனென்றால் இந்த வீடும் வைஷ்ணவியின் வீடு இல்லை என்ற உணர்வு வைஷ்ணவியின் ஆழ்மனதில் பதிந்தது. மனதில் மட்டும் பெரும் புயல். வைஷ்ணவியின் கிறுக்கல்களை ஓவியமாகச் சுமந்து கொண்டிருக்கும் வீட்டின் சுவர்கள். வைஷ்ணவியின் நினைவுகளைச் சுமந்த தரை. புழங்கிய பொருட்கள். அமர்ந்து கதை பேசிய திண்ணைகள் உட்பட எல்லாமே வைஷ்ணவியைப் பார்த்து “வைஷு இது உன்னோட வீடு இல்ல. போ போ. இது உன்னோட அப்பா வீடு. போ போ” என்று கூறியது போல் இருந்தது. அந்த ஒரு கணத்தில் எல்லாமே அந்நியமாகத் தெரிந்தது. சிறு வயது பொக்கிஷ நினைவுகள் ஒரு நொடியில் கருகியது போல் இருந்தது. கிரீடமும் செங்கோலும் இழந்த மன்னனாக உணர்ந்தார் வைஷ்ணவி.

“இவ்வளவு நாள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லையா என்று நினைத்துக் கொண்டிருந்த வைஷ்ணவிக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

வசந்தனும் சொன்னான் அப்பாவும் சொல்றாரு ‘என்னோட வீடு’ அப்போ எனக்கான வீடு எங்க இருக்குது? திரும்பத் திரும்ப ஆயிரம் முறை அந்தக் கேள்வி வைஷ்ணவியின் நெஞ்சை அறைந்து கொண்டே இருந்தது.

இப்போது சிந்து கூறியதெல்லாம் வைஷ்ணவியின் மனக்கண்ணில் காட்சியாக ஓடியது. அப்பா வீட்டில் தொங்கிக் கொண்டிருந்தது வசந்தனின் அதே புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் இருந்து வசந்தனும் பரிசு கொடுத்துக் கொண்டிருந்த கட்சித் தலைவனும் அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் இருந்தது. அப்பாவின் வீட்டுச் சுவர் அவளை நோக்கி மௌனமாக நின்றது. அந்த மௌனமே அவளுக்கு மிகக் கொடுமையான பதிலாக இருந்தது. அப்பாவின் வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் நடக்க நடக்க வானத்தை அண்ணாந்து பார்த்த போது கருமேகங்கள் கூடி வானம் இருள் சூழ்ந்து இருந்தது.


Art : Jessie Edelstein iBot

சரிதா ஜோ
சரிதா ஜோ

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் பிறந்தவர். தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழகம் முழுவதும் இதுவரை அரசு தனியார் பள்ளி கல்லூரிகளிலும் பல்வேறு தனியார் அமைப்புகளிலும் 1000க்கும் மேற்பட்ட கதை சொல்லல்களை நிகழ்த்தியுள்ளார்.

சிற்றூளி இலக்கிய இதழின் இணை ஆசிரியராகவும் இயல் சிறார்களுக்கான மின்னிதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.

நீல மரமும் தங்க இறக்கைகளும், கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி, கிளியோடு பறந்த ரோகிணி உட்பட பல சிறார் சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள இவர், அசோகமித்திரன் நினைவு படடைப்பூக்க விருது, திருப்பூர் சக்தி விருது, உலகத் தமிழ் பேரியக்கத்தின் தங்க மங்கை விருது, தனிஷ்க் புதுமைப்பெண் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் புழுதி இணைய இதழில் ‘சாவ்பாடி’ என்னும் மிக முக்கியமான கட்டுரை எழுதியவராவார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top