ஒவ்வொரு முறையும்
நெஞ்சை முட்டும் துயர வாடையில்
உறைந்துபோன கடலைத் தேடி
ஒரு பாடலுடன் வந்து விடுகிறது நிலவு
பலமுறை அழைத்தும் வராமல் போன
இராப்பாடிப் பறவைகளின் மேல்
எந்தக் கோபமும் இல்லாமல்
ஒவ்வொரு முறையும் பாடலை
விழுங்கிக் கொள்கிறது கடல்.
விடைபெறல்
அன்பின் கடைசித் துளிக் கண்ணீர்
மரணத்தின் வாயிலில்
காத்துக் கொண்டிருக்கிறது
சொல்ல நினைக்கும்
எல்லா வார்த்தைகளும்
அள்ளியணைக்கும் ஆசையில்
மௌனமாகின
பீறிட்டு அழுவதற்குப் பதில்
கடத்தப்பட்ட புன்னகையில்
உயிர் எஞ்சியிருக்கும் நம்பிக்கையுடன்
நிகழ்ந்து முடிந்தது
சற்றும் எதிர்பாராத விடைபெறல்.
மன்னிப்புப் பட்டியல்
சிரிப்பை முடக்கிய
நாட்களுக்குப் பின்னால் வந்துவிடுகிறது
என் மன்னிப்புக் கேட்கும் படலம்
ஒருநாள் மலர்களை முத்தமிட்டதற்காய்
மண்ணில் விழுந்து அழுகிறேன்
மற்றொரு நாள் வனத்தின் மத்தியில்
நின்றுகொண்டு கொலைப் பலியை
நானே ஏற்று மண்டியிடுகிறேன்
நான் வளர்த்த செம்பருத்திப் பூச்செடிகளை
நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கி
ஒவ்வொரு முறையும்
வந்த வழியே திரும்பிச் செல்கிறேன்
வாடிவிடும் நிலையிலும்
பார்வையற்றுக் குகைகளின்
காதுகள் மந்தமாக
நீண்டு கொண்டே செல்கிறது
என் மன்னிப்புப் பட்டியல்
வசந்தம்
இது எந்தக் காலமாக இருந்தாலும்
பரவாயில்லை
இப்போதே வசந்தத்திற்கு வாவென அழைக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?
நினைவை ஒன்றுதிரட்டுங்கள்
நீங்கள் சொன்ன ஏதோ
ஒரு பொய்க்குப் பின்னால்தான்
அது ஒளிந்திருக்கிறது
இன்னும் புரியும்படிச் சொல்
நீ வசந்தத்தைப் பார்த்தாயா என்று
என்னிடம் கேட்டால்
வசந்தம் என்னுடன் இருந்தது
என்னைத் தழுவிக் கொண்டிருந்தது
என்றல்லவா நான் சொல்வேன்.
Art : Lena Revenko








Leave a Reply