Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

துவான் பக்கிரி ஒலியுல்லா: நாட்டுப்புற சமயத்தின் மதச்சார்பின்மைக்கான வடிவம்

அ.ஜெகநாதன் .
அ.ஜெகநாதன் .
February 1, 2026
துவான் பக்கிரி ஒலியுல்லா: நாட்டுப்புற சமயத்தின் மதச்சார்பின்மைக்கான வடிவம்

அது ஒரு அடர் வனம். சூரிய ஒளி புகாத வனக்காடு. அதன் மூன்று திசைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருக்கும். ஒரு கூம்பு வடிவத்தில் அவ்வனம் அடர்ந்து விரிந்திருக்கும். அதன் பெயர் அத்தி. அதனை அத்திக்காடு என்பர். அத்திமரம் அதிகம் இருப்பதால் அவ்வனக்காடு அத்தி எனப்பட்டதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். அவ்வனத்தில் பல்வேறு வகைப்பட்ட மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருக்கின்றன. அத்திமரம் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தென்படுகிறது. எனில் அந்த வனக்காட்டை அத்திக்காடு என்று மக்கள் ஏன் அழைத்தனர்?

அத்திக்காட்டின் மலையுச்சியில் பெரும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. உள் மலைப்புரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அங்குள்ள மலைவாசிகள்தான் சென்றிருக்க முடியும். நீர்வீழ்ச்சி ஆறாகப் பெருக்கெடுத்து முதல் கண்மாயை நிரப்புகிறது. அந்த ஆற்றுக்கு அத்தி ஆறு என்றும் முதல் குளத்திற்குத் தாமரைக் குளம் என்றும் பெயர். உள் மலைப்பகுதியில் உற்பத்தியாகி ஆறாக உருமாறும் இடத்தில் கருப்பசாமி கோவில் உண்டு. அந்த ஆறு மலைவாழ் மக்கள் வசிக்கும் பளியர்மேட்டை உரசிப் பயணிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்புறம் பிளவக்கல் அணை உருவாக்கப்பட்டது. அத்தி மலையின் பின்புறம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி வந்த நதியின் பெயர் அர்ச்சுனா நதி. அர்ச்சுனா நதியின் தொடக்க நிலையில் காமராசர் ஆட்சியில் கட்டுவதற்கு அனுமதி பெற்ற பின்னர் உருவானதுதான் பிளவக்கல் அணை. பிளவக்கல் மலைப்பகுதியிலிருந்து மேற்கே காட்டுப்பாதையில் ஏறி இறங்கினால் வருசநாட்டை அடைந்து விடலாம். 1955 ஆம் ஆண்டிலிருந்து திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு பிளவக்கல் அணையும், வருசநாட்டிற்குச் சாலை போடப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றிருக்கும். பிளவக்கல் அணை 1971 இல் உருவானது. சமீபகாலம் வரை வருசநாடு சாலை உருவாக்கம் பேசுபொருளாக இருந்தது. பஞ்ச காலங்களில் வருசநாட்டிற்கு நடந்து கடந்த கதைகளை அப்பகுதியில் தாராளமாகக் கேட்க இயலும்.

பிளவக்கல் அணையின் வரலாற்றில் வனப்பேச்சி கோவில் முக்கியப் பேசுபொருளாகும். அவள் ஒரு மலை நில இறைவி. தனது அண்ணன்களின் பொறாமையால் பொசுக்கப்பட்டவள். அப்போது அங்கே ஒரு பெரும்பாறை இடுக்கில் மலைத்தேன் தெப்பமாக வளர்ந்து தொங்கிக்கிடந்தது. மலைத்தேனின் வாசம் தேவாதி தேவர்களையும் அங்கு இழுத்து வரும். வண்டினங்களின் இரைச்சல் நீர்வீழ்ச்சி போன்று கேட்கும். தேவ அமிர்தம் என்பதைத் தவிர்த்து தேன் சுவையை நாக்கில் ஏந்த கடவுளர்கள் வரிசைகட்டி வந்து நிற்பார்கள். அத்தேனை யார் எடுப்பது? இரண்டு பாறை இடுக்கின் செங்குத்துச் சரிவில் ஒய்யாரமாய் வளர்ந்து தழும்பும் தேனை மலைமகள் பேச்சி எடுக்க விரைந்தாள். கடவுளர்கள், தேவர்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் பேச்சியின் தைரியத்திற்கு முன்னர் மெனக்கட்டுக் கிடந்தனர். கரணம் தப்பினால் மரணம்தான். சந்தேகத்திற்கு அங்கு இடமில்லை. பாறையின் ஒரு மூலையில் ஒரு முனை கயிற்றைக் கட்டி, மறுமுனையைப் பிடித்துச் செங்குத்து இறக்கத்தில் இறங்கினாள். ஏழேழு ஜென்மங்களாகக் கைப்படாத தேன்கூட்டின் மீது மலைமகளின் கைப்பட்டது. தேன் ஆடையை லாவகமாக முதுகில் பதுக்கி மேலெழும்பினாள். பின் என்ன? கடவுளர்கள், தேவர்களின் நாக்குகள் கொண்டாட்டத்தில் குதூகலித்தன. வரிசை கட்டி நின்ற கடவுளர்களுக்கு முதல் தேன் தரப்படவில்லை. சாமம்முட்டும் காத்துக்கொண்டிருந்த தேவர்கள் இதனால் கவலையடைந்தனர். முதல் தேனின் சுவையை அம்மூதாய் தன் மக்களுக்குப் பருகத்தந்தாள். அதன் பின்பே கடவுளர்கள் கவனம் பெற்றனர்.

பேச்சியின் புகழ் ஏழுலகம் வரை கொடிகட்டிப் பறந்தது. மலையின் மகள் வனத்தோடு நிற்கவேண்டும். வனத்தைக் கடந்த நீட்சிகள் ஆண்களின் கண்களை உறுத்தின. அப்படியொரு முடிவுக்கு ஆண்கள் வந்து சேர்ந்தனர். பேச்சியைக் கண்காணித்தனர். ஒரு முறை ஒரு கயிறு பிடித்து இடுக்குளில் தேன் வேட்டையாடிக் கொண்டிருந்த பேச்சியின் கயிற்றை ஏழூர் ஆண்கள் சேர்ந்து அறுத்தெடுத்தனர். பேரண்டம் அதிர மலைமகள் வனமகள் ஆனாள். ஆண்கள் அவள் இருக்குமிடம் செல்ல இயலவில்லை. அதையும்மீறிச் சென்ற ஆண்களை பேச்சி தண்டித்தாள். அவளது கோபத்தைப் போக்க ஆண்கள் கூடி வனமகளுக்குக் கோயில் எழுப்பினர். வனமகளை வணங்கினர். தங்களது தவறுகளை மன்னிக்க வேண்டினர். இதனால் வனப்பேச்சி சாந்தமடைந்தாள். அன்றிலிருந்து வனத்தின் மூதாய் ஆனாள். நவீன ஆட்சியில் அவளது கோவிலை மூழ்கடித்துதான் பிளவக்கல் அணை உருவாக்கப்பட்டது. ஆண்களின் தொடர் அநியாயத்தை யார் அறிவர் என்று நின்று புலம்பி வருகிறாள் வனப்பேச்சி.

இப்போது மீண்டும் நாம் அத்திக்காட்டுக்கு வந்து சேர்வோம். அடர்வனம் ஏன் அத்திக்காடு எனப் பெயர் பெற்றது என்பதை மீண்டும் ஒரு முறை கேட்டு வைப்போம். ஒரு முறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உச்சிப்பகுதியிலிருந்து ஒரு மனிதர் நடந்துவந்தார். அவர் ஒரு ஆற்றின் கரையோரத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவருக்குக் காட்சி கொடுத்து மறைந்தார். அவர் மறைந்த இடத்தில் இப்போது ஒரு அத்திச் செடி நின்றது. அது மரமானது. அப்போதிலிருந்து அக்காடு அத்திக்காடு என்றானது. அங்கு ஓடும் ஆறு அத்தி ஆறு எனப் பெயர் சூட்டிக்கொண்டது. அவ்வட்டாரத்தில் ‘காட்சி கொடுத்தல்’ என்பது தொடர் செயல்பாடாகத் தென்படுகிறது. அத்திக்கு நேர் கிழக்கே சிறுமலை எனும் இடத்தில் யேசுநாதரின் அம்மாவான மேரிமாதா காட்சி கொடுத்ததாக ஒரு வழக்காறு உண்டு. மாதா காட்சி கொடுத்த இடத்தில் பின்னர் ஒரு கோவில் கட்டப்பட்டது. அது சிறுமலை என்றும் லூர்து மாதா அல்லது அமலிமலை என்று அழைக்கப்படுகிறது. காட்சி கொடுத்த நிலத்திற்கு மக்கள் மத/சாதி பேதமின்றிச் சென்று சேர்கிறார்கள். இனி நாம் அத்திக் காட்டுக்குத் திரும்புவோம்.

அத்திக் காட்டின் பாதுகாவலன் யார்? கடவுளர்களே காடுகளுக்கும் பாதுகாவலர்கள். ஆனால் இப்பகுதியில் கடவுள் சற்று விலகி நிற்கிறார். மனித வடிவில் இங்கு வந்து சென்ற மறைஞானி இக்காட்டின் பாதுகாவலனாக அறியப்படுகிறான். அவர் பெயர் திவான் ஷா. மக்கள் இவரை துவான் ஷா என்கின்றனர். இன்னும் சிலர் துவான் ஒலியுல்லா; துவான் பக்கீர் அவுலியா என்றும் அழைக்கின்றனர். வேறு பகுதி மக்கள் அத்தியப்பர்; அத்திசாமி என்றும் அழைக்கின்றனர். துவான் அத்திக்காட்டின் தலைச்சாமியான கதையைத் தொடர்ந்து கேட்போம்.

II

கான்சாபுரம் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் வளமையான கிராமம். மூன்று பக்கம் மலைகளும் கிழக்குப் பக்கம் நிலங்களாலும் சூழப்பட்டுள்ளது. அவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிக்கிராமம். இக்கிராமம் ஒரு காலத்தில் ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமாக இருந்துள்ளது. ராமநாதபுரம் ஜமீனில் திருமண உறவு பூண்டவர்க்கு ஜமீனால் கான்சாபுரமும் அதை ஒட்டிய வளமான நிலங்களும் கைமாற்றப்பட்டுள்ளன. இதை ஒட்டியே அத்திகாடு என அழைக்கப்படும் வனப்பரப்பு முழுவதும் ஜமீன் சொத்தாக ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஜமீன் ஆட்டம் கண்ட தறுவாயில் அவரது பங்களாவில் பணியாற்றியவர்களுக்கும் அவர் விருப்பப்பட்ட நபர்களுக்கும் அத்திக் காடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இறுதியில் கடைசித் துண்டு நிலம் ஒன்று எஞ்சியது. ஜமீன் பங்களாவில் வேலை செய்த இசுலாமியர் ஒருவர் “எல்லோரையும் போன்று எனக்கொரு நிலம் தாருங்கள்” என்ற வேண்டுகோளின் வாயிலாக 83 செண்ட் நிலத்தை அந்த முகமதியன் பெற்றுள்ளார். இந்த நிலத்தில்தான் துவான் ஒரு இசுலாமியப் பெண்மணிக்குக் காட்சி கொடுத்துள்ளார். இந்நிலம் கால ஓட்டத்தில் மறவர் ஒருவருக்குச் சென்றது. இறுதியாக அந்நிலம் பெருமாள் என்பவரால் கூமாப்பட்டி பள்ளிவாசலுக்குத் தானமாகத் தரப்பட்டது என்ற கதையை சித்தமருத்துவர் இளங்கோவன் கூறுகிறார்.

மனிதர்களால் வளைக்கப்பட்ட வனத்தின் பாதுகாவலன் துவான்ஷா. நான்கு பக்கங்களிலும் நான்கு கருப்பன்களை வைத்து நடுமையத்தில் துவான்ஷா வீற்றுள்ளார். மேற்குத் திசையில் கருப்பன். வடக்குத் திசையில் தாமரைக்குளம் கருப்பன். தெற்குப்புறம் உருட்டுக் கருப்பன். கிழக்கே சடையால். அத்திக்காட்டின் தொடக்கம் சடையால். நாள்தோறும் உச்சி குளிரும் நடுக்குடுச் சாமத்தில் நான்கு கருப்பன்களும் துவான்ஷா நிலத்தில் கூடுவர். துவான்ஷா வழிநடத்த சடையால் நோக்கிய பயணத்தில் காத்து கருப்பு; பேய் பிசாசுகள்; திருடர்களாகிப் போன மனிதர்கள் என எதையும் அண்டவிட மாட்டார் துவான்ஷா. சடையால் வரை நடைப்பயணம் நீளும். சடையாலில் அமர்ந்து நாட்டு நடப்புகள் அங்கு விவாதிக்கப்படும். அந்திப் பொழுதுக்குள் சாமிகள் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடும். ஒரு இசுலாமியரை தலைச்சாமியாக ஏற்றுக்கொண்ட இந்து சாமிகளின் கதைகளை இன்றைய நீதிமன்றப் புலிகள் அறிவார்களா? மக்களின் நினைவில், அவர்களது பண்பாட்டில் மதத்திற்குப் பெரிய பாத்திரம் உண்டு. அதைப்போன்றே அனைத்துத் தெய்வங்களையும் தன்னகத்தே அணைத்துக்கொள்ளும் கதைகளும் நிரம்ப உண்டு. இத்தகைய இணக்கப்பாட்டை உடைக்கும் அரசியல் செயல்பாட்டை என்னவென்று சொல்ல?

III

துவான்ஷாவிற்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் முகமது அன்ஸர் இலாகிஷ். முகமது அன்ஸர் இலாகிஷ் கான்சாபுரத்திற்கு அருகேயுள்ள கூமாப்பட்டி என்ற கிராமத்தில் அடக்கமாகியுள்ளார். தற்போதுவரை கிடைத்த இவரது கதையில் பாலமஸ்தான் அல்லது வாழை மஸ்தான் என்பவரது கதை சுவாரஸ்யமானது. முகமது அன்ஸர் இலாகிஷ் அவ்வட்டார மக்களின் துயரங்களைப் போக்கிவருபவர். பிள்ளைவரம்; தீராத நோய்களைக் குணமாக்குதல்; பேய் ஓட்டுதல் என்பதான பண்பாட்டுத் துர் செயல்களை நிவர்த்தி செய்யும் மருத்துவர்களில் முகமது அன்ஸர் இலாகிஷ்சும் ஒருவர். ஒரு முறை ஒரு ஐயர் முகதுவைத் தேடி வருகிறார். மனமாகி ஏழாண்டுகள் உருண்டோடிவிட்டன. பார்க்காத வைத்தியனும் இல்லை. கும்பிடாத தெய்வமும் இல்லை. புழு பூச்சி உருவாகாத வயிற்றை எந்த மொழியில் சபிக்க இயலும்? ஊராரின் தூற்றல்கள்; மனைவியின் துயர்மிகு அழுகைகள்; ஆண் என்ற பிம்பத்தின் மீது அவமானம் எனும் சரளைக்கற்கள் மோதி மோதி உருத்தெரியாமல் ஆக்கியது.

அவமானத் தகிப்பில் ஐயர் சுழண்டு சுழண்டு துயருற்றார். இக்கொடிய பண்பாட்டு நோய்கூற்றிலிருந்து யார் தன்னை விடுவிப்பர்? சிவனிடம் அவர் சென்றிருப்பார் தானே… அங்கே வீற்றிருக்கும் உமையவளிடமும் தன் துயரத்தை எடுத்தியம்பிருப்பார்தானே… பாறைகளைத் தன்வயப்படுத்தியுள்ள பெருமாளையும் சேவித்தவர் தானே… அங்கு ஒய்யாரமாக நின்றிருக்கும் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகன்கூட ஐயரைக் கைவிட்டால் அவர் எங்குதான் செல்வார்? மொழிகளுக்குள் அடக்கமுடியாத தெய்வங்கள் அனைத்தையும் துதித்துப் போற்றிய ஐயரின் கால்கள் இப்போது முகமது அன்ஸர் இலாகிஷிடம் வந்து நின்றன. துயருரும் மனிதனுக்கு ஏது மதம்? தன்னிடம் உதவி கேட்டு வரும் மனிதனை எந்த ஒரு மறைபொருள் மதத்தால் அளந்தெடுக்கும்? முகமதுக்கு மனிதன் அனைவரும் ஒன்றுதானே. பிரச்சனையைக் காது கொடுத்துக் கேட்டார். ஐயர் மீது ஏவப்பட்ட பண்பாட்டு நோயைக் குணப்படுத்த உறுதிபூண்டார். தலைப்பிள்ளையைத் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஒப்பந்தம் முகமதுவிற்கும் ஐயர்க்கும் உருவானது.

மாதங்கள் உருண்டோடின. ஐயரின் மனைவி இன்பத்தில் திளைத்தாள். சுற்றாரும் உற்றாரும் நிகழ்ந்த அதியசத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். நடு இரவில் தலைப்பிள்ளை தப்பாமல் ஆணாகப் பிறந்தது. அடுத்தடுத்த ஐந்தாண்டுகளுக்கும் ஐயர் வீட்டை ஆண் குழந்தைகளின் மழலைச் சொற்கள் நிரப்பிக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியின் ஊற்றுகள் வீட்டின் முற்றத்தில் வழிந்தோடி அக்கிரகாரத் தெருக்களைக் குளிப்பாட்டியது. ஒன்றல்ல இரண்டல்ல. ஐந்தின் அமுதங்களைக் கண்டு ஐயரும் அவரது மனைவியும் பூரித்து மகிழ்ந்தனர். வருடங்கள் சடுதியில் கடந்து சென்றன. ஏழாண்டு இடைவெளியில் ஐயர் முகமதுவிடம் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயலவில்லை. தலைச்சான் பிள்ளையை முகமதுவுக்குத் தர மனம் ஒப்பவில்லை போலும். காலம் கடத்தினார் ஐயர். ஏழாண்டுக்குப் பின்னர் முகமதுவே ஐயரிடம் நேரிடையாகத் தோன்றினார். ஒப்பந்தம் ஐயருக்கு நினைவூட்டப்பட்டது. காடு கழனிகளில் பிள்ளைவரம் வேண்டி அலைந்து திரிந்தாலும் முகமதுவே இறுதியாகப் பிள்ளைவரம் தந்தான் என்பதை ஐயர் உணர்ந்தார். ஐந்தின் மூத்த தலைச்சான் பிள்ளையை முகமதுவிடம் ஐயர் ஒப்படைத்தார். ஆறு வயதில் முகமதிடம் வந்த ஐயரின் மகனின் பெயர் பாலமஸ்தான். சிலர் அவரை வாழை மஸ்தான் என்றும் அழைக்கின்றனர். சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றார் பாலமஸ்தான். அத்திக்காடுகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பூத்துக் குலுங்கும் தாவரங்களே அவரது மூலிகைகளாகின.

அத்தியின் மலையடிவாரத்தில் ஒரு பாறை உண்டு. பண்டாரம் பாறை என்பது அதன் பெயர். அது ஒரு ஓடைப்பாதையால் சமதளத்தை இணைக்கிறது. அதனைப் பெரியோடை என அழைக்கின்றனர். அந்தப் பாறையில்தான் சித்த வைத்திய சாலையை அமைத்திருந்தார். ககனம் பாய்வதில் சூரர். ககனம் பாய்வது என்பது கூடுவிட்டு கூடுபாய்வதாகும். கன நிமிடத்தில் இவர்கள் கண்டம் விட்டு கண்டம் கூடப் பாய்வார்கள். துவான்ஷா, முகமது அன்ஸர் இலாகிஷ், முகமதுவின் வளர்ப்பு மகன் பாலமஸ்தான் ஆகிய மூவரும் ககனம் பாய்பவர்கள்தான். அத்தியின் வனப்பரப்பில் ஒரு முக்கோண வடிவத்தில் மூவரும் வீற்றிருப்பர். தலையில் துவான்ஷாவும் இரண்டு பக்கங்களில் ஒரு மூலையில் முகமதுவும் மறு மூலையில் பாலமஸ்தானும் வீற்றிருந்து மக்களுக்கு நலன் பாவித்து வருகின்றனர்.

ஒரு சமயத்தில் அரசப் படைகள் பண்டாரம் பாறை நோக்கிப் பாய்ந்தோடின. குதிரைக் குளம்பொலிகள் ஊரையே அசைத்துப் பார்த்தன. அத்திக்காட்டுக்குள் பாய்ந்து சென்ற குதிரைகள் இப்போது பெரியோடைக்குள் நுழைந்ததும் அசைந்தாடி நகர்ந்தது. குதிரைப் படைக்குப் பின்னர் பல்லக்கு ஒன்றும் ஊர்ந்து வந்தது. பண்டாரம்பாறையில் அமர்ந்திருக்கும் பாலமஸ்தான் முன் தாழ்பணிந்தான் தளபதி. நெட்டுயரம் கொண்ட விரைப்பான மனிதன் குழைந்து வழிவதைப் பார்க்கையில் எழும் நமட்டுச் சிரிப்பை யாரால்தான் அடக்கமுடியும்? குதிரைச் சிப்பாணிகள் ஓய்ந்த தருணத்தில் தளபதி பேசலானான்.

ஏழாண்டுகளாக அரசனது கழுத்தில் உருவான கட்டியால் அரசன் துயருறுகிறான். வேனல் கட்டியாக உருவானது இன்று அரசனின் பேச்சுக்குழலை அடைத்து விட்டது. அரசன் அடையும் துயரத்தை விவரிக்க எங்களிடம் வார்த்தையில்லை. ஏழாண்டுகளாக அரசன் நோயுக்கும் பேய்க்கும் பார்த்தலைந்தான். கட்டியைக் கரைக்கும் வித்தையை எந்த வைத்தியரிடமும் காணாமல் கலைப்படைந்து விட்டான். ஒற்றர்களின் குறிப்பால் தூர தேசத்தில் நீண்டு வளர்ந்துள்ள மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் முகமதுவின் வளர்ப்பு மகன் பாலமஸ்தான் என்ற தேர்ந்த வித்தைக்காரன் ஒருவர் வீற்றிருக்கிறார் என்று கூறியதின் பயனாக வந்து சேர்ந்தேன். அரசனில் பொதிந்துள்ள கட்டியை அகற்ற வேண்டும். அதற்கு சாமிகளின் உத்தரவு வேண்டும்.

பாலமஸ்தான் பயணத்தைத் தொடங்கினார். ஏழு நாள் கழித்து எட்டாவது நாளில் பல்லக்கு எட்டையபுரம் ஜமீன் வாசலில் நிலை கொண்டது. அரசன் வெளிப்பட்டான். அரசனது முகத்தில் அப்பிடி ஒரு சிப்பாணி. தளபதி முதல் வீரன் வரை ஒவ்வொருவராகப் பெயர் சூட்டி அழைத்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான். தளபதி பல்லக்கைப் பார்த்தார். அங்கு பாலமஸ்தானைக் காணவில்லை. பாலமஸ்தான் தான் ககனம் பாய்பவராச்சே. கண நேரத்தில் எட்டையபுரம் அரசன் முன் நின்றார். கையோடு கொண்டு வந்த மருந்துகளை நாள் தவறாமல் கொடுத்தார். ஏழாம் நாள் சுகம் பெற்றான் அரசன். எட்டாம் நாள் பாலமஸ்தான் தனது கூடு சேர்ந்தார். அரசன் தனது நோயைக் குணப்படுத்திய பாலமஸ்தானுக்குச் சிறப்பு செய்ய விரும்பினான். படை பரிவாரத்தோடு அத்திக்காடு விரைந்தான். பாலமஸ்தானைத் தொழுதான். பாலமஸ்தான் சாவகாசமாகத் தங்கி நோய் தீர்க்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பொருட்டு மாளிகை போன்ற ஒன்றை எட்டையபுரம் அரசன் கட்டிக் கொடுத்தாகப் பரவலாக நம்பப்படுகிறது. அந்த இடத்திற்கு புலித்தேவன் வந்து பாலமஸ்தான், அவரது வளர்ப்புத்தந்தை முகமது; முகமதுவின் தம்பி திவான்ஷா ஆகியோரிடம் கூடுவிட்டு கூடுபாயும் கலையான ககனம் பாய்தலைக் கற்றதாகவும் சொல்லப்படுகிறது.

முகமது அன்ஸர் இலாகிஷ் ஒரு நாள் மரணித்தார். அவரது உடலை கூமாப்பட்டியில் அடக்கம் செய்ய முயன்றார்கள். முகமது தனது வளர்ப்பு மகனை அழைத்தார். “இவ்விடத்தில் சுத்தபத்தம் காண்பதரிதாக உள்ளது. இங்கு துயில் கொள்ள தாம் விரும்பவில்லை. என்னை திருப்பரங்குன்றத்தில் பொதிந்துள்ள சிக்கந்தர் கல்லறைக்கு அருகில் அமர்த்தவேண்டும்”. பாலமஸ்தான் ஒரு பேழையில் முகமதுவைக் கிடத்தி பரங்குன்றம் நோக்கி நடைபோட்டார். சிக்கந்தர் மலைக்குப் பேழை கொண்டு செல்லப்பட்டது. ஆங்கிலேய வீரன் “இறந்த பொணத்தை இங்கு பொதைப்பது வழக்கமல்ல” என்று தடுத்தான். முகமதுவின் அருளால் ஆங்கிலத்தில் பாலமஸ்தான் விடை பகன்றான். ‘முகம்மது மறிக்கவில்லை’ என்றான் பாலமஸ்தான். பின் ஏன் “பேழையில் கிடத்தித் தூக்கி வந்தீர்?” ‘பேழையில் முகம்மது அமர்ந்திருக்கிறார்’. ஆங்கிலேய வீரன் மஸ்தானின் பதிலை உறுதிப்படுத்தினான். முகம்மது அங்கு அமர்ந்திருந்தார். “பேழையில் கிடத்தி ஏன் தூக்கி வந்தீர்?” என்ற ஆங்கிலேய வீரனின் கேள்விக்கு ‘காத்து அண்டாமல் பாதுகாப்பாகத் தூக்கி வந்தோம்’ என்பதுவே பதிலாகக் கிடைத்தது.

விருதுநகர் மாவட்டத்தில் இதைப் போன்றதொரு கதை உண்டு. விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் வெள்ளூர் என்ற கிராமம் உண்டு. அவ்வூரில் அன்றைய சாணார்கள் கும்பிட்டு வந்த பத்ரகாளியம்மன் கோவில் ஒன்று இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற சிவகாசிக் கலவரத்தில் பல ஊர்களில் நிலைகொண்டுள்ள கடவுளர்கள் சாணார் வசமிருந்து கைப்பற்றப்பட்டன. வெள்ளூரில் உள்ள பத்ரகாளியம்மனும் அவ்வாறுதான் கைப்பற்றப்பட்டார். பத்ரகாளி அம்மனை அவ்வூர் ரெட்டியார்கள் தன்வசப்படுத்தினர். அதை எதிர்த்து சாணார்கள் மதுரையில் வழக்குத் தொடுத்தனர். அனைத்து விசாரணைகளும் முடிவு பெற்றன. தீர்ப்பிற்கான தேதி குறிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் பத்ரகாளி அம்மன் தானாக ஒரு முடிவுக்கு வந்து சேர்த்தார். வெள்ளைக்கார நீதிபதியின் கனவில் சென்று பேச ஆரம்பித்தாள். “சாணார் சாதியினர் ஏழை பாழைகள். சுத்தபத்தமற்றவர்கள். கள் இறக்கும் தொழிலாளர்கள். அவர்களால் என்னை ஜீவிக்க முடியாது. என்னை ரெட்டியார்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று கூறி மறைந்தாளாம். வெள்ளை நீதிபதியிடம் ஆங்கிலத்தில் பேசிய பத்ரகாளியம்மனைக் கையெடுத்துக் கும்பிட்டு “பத்ரகாளியம்மன் ரெட்டியார் சாதிக்கே சொந்தம்” என்று வெள்ளைக்கார நீதிபதி தீர்ப்பு கூறினாராம். வழக்காடு மன்றத்தில் சட்டங்களும், சாட்சியங்களும் புறக்கணிக்கப்பட்ட வரலாறு காலனிய கதைகளில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இன்று ராமன் கோவில் எழுந்துள்ளது. இத்தீர்ப்பை எழுதிய நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூட்டும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்ற தீர்ப்பை எழுதுவதற்கு முன்னர் நடந்ததை இவ்வாறு கூறுகிறார். “நான் தெய்வத்தின் முன் அமர்ந்து அவர் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்” என்று தலைமை நீதிபதி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது. தான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகக் கூறிய தலைமை நீதிபதி, “என்னை நம்புங்கள், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்” என்றார். கதைகளில் பொதிந்துள்ள காலனிய நீதிபதியும், சுதந்திர இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் உண்மைக்கு எதிராகத் தீர்ப்பிடுவதற்குக் கடவுளை நாடுவதை இங்கு கவனப்படுத்தலாம்.

இப்போது மீண்டும் நாம் முகமதுவின் கதைக்கு வருவோம். முகமதுவின் கல்லறை சிக்கந்தர் தர்ஹாவில் இருக்கிறதா? சிக்கந்தர் கல்லறைக்கு முன்பு இருப்பது சிக்கந்தரின் மெய்க்காவலரும் உபதளபதியுமான லுக்மான் ஷெரீப் பின் கல்லரைதான் உண்டு. முகம்மது கல்லரை எங்குண்டு? முகம்மது கல்லரை சிக்கந்தர் தர்ஹாவில் இல்லை. ஆனால் சிக்கந்தர் தர்ஹாவில் சந்தனக்கூடு எடுக்கும் தினத்தில் சமீப காலம் வரை மதுரை வாழ் இசுலாமியர்கள் பாலமஸ்தான் வீற்றிருந்த பண்டாரம் பாறைக்குச் சென்று மரியாதை செலுத்தி வந்துள்ளனர். அதைப் போன்று முகமதுவும் பாலமஸ்தானும் அடக்கம் செய்யப்பட்டுள்ள கூமாப்பட்டி தர்ஹாவிற்கும் மரியாதை செய்யப்பட்டது. அன்று ஒரு நாள் பிரியாணி விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது. 1980களில் மதுரை முஸ்லீம்களை கூமாப்பட்டி முஸ்லீம்கள் அடித்ததாகவும் அதனால் ஒரு குழப்பம் ஏற்பட்டு அதன்பிறகு சந்தனக்கூடு மரியாதை இல்லாமல் ஆனதாகவும் சொல்லப்படுகிறது. அக்கால கட்டத்தில் இஸ்லாத்தில் மேலெழும்பிய தர்ஹா எதிர்ப்பு அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் முகமது / பாலமஸ்தான் தர்ஹாவை நிர்வகித்து வரும் திவான்ஷா கள ஆய்வில் தெரிவித்தார். சந்தனக்கூடு மரியாதை நின்ற போதிலும் சிக்கந்தர், முகமது அன்ஸர் இலாகிஷ், துவான் ஷா ஆகியோர் அவ்வட்டாரத்தில் இணைந்து குதிரைகளில் பயணிப்பதாகவும் மக்களின் தீராத நோய்களைத் தீர்ப்பதாகவும் முகமது / பாலமஸ்தான் தர்ஹா பராமரிப்பாளர் நம்புகிறார்.

IV

துவான் ஷாவிற்கும் அப்பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கும் அறுக்கவியலாத பண்பாட்டுத் தொடர்பு ஒன்று உண்டு. கூமாப்பட்டியின் தொடக்கம் அம்பேத்கர் சிலை. அதன் பெயர் ராமசாமியாபுரம். அங்கு 120க்கும் மேற்பட்ட பறையர் குடும்பங்கள் வசிக்கின்றன. சட்ட நடைமுறைகளின் படி அவர்கள் இந்து மதத்தினர். அந்தத் தெருவில் நீங்கள் சென்று நின்றால் சாகுல் ஹமீது, முஸ்தபா, பக்கிரி என்பதான பெயர்சுட்டல் உங்கள் காதில் விழலாம். இன்னொரு புறத்திலிருந்து ராவுத்தன், துவான் என்பதான பெயர்சுட்டலை நீங்கள் கேட்கலாம். பெண்கள் தரப்பிலிருந்து பாத்திமா என்ற பெயரொலி உங்களை வந்தடையும். அது ஒரு இந்துத் தெரு. அங்கு வசிக்கும் மக்கள் தங்களை ஏன் இசுலாமியப் பெயரில் அழைத்துக் கொள்கின்றனர்?

அது ஒரு பெரும் கதை. ஆயிரம் வழிக்கோட்ட ஆரியங்காவுன்னு ஒரு ஊர். அது செங்கோட்டைப் பக்கமாக இருக்கிறது. அப்ப அந்த ஊரில் கோட்டைகட்டி ஒரு முஸ்லீம் தனவான் வாழ்ந்து வந்தார். அந்தக் கோட்டை வீட்டுக்கு அங்கிருந்த பறையனொருவன் வேலைக்குச் சென்றுள்ளான். பருவ வயதினன். கோட்டை கட்டி குடித்தனம் நடத்தி வந்த முஸ்லீம் பாய்க்கும் பருவத்தில் ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் பாத்திமா. என்னதான் வேலைக்காரர்கள் சொச்சம் பேர் இருந்தாலும் பஞ்சும் நெருப்பும் யாருக்கும் தெரியாமல் பத்திக்கொண்டே வந்தது. ஊர் நாசியை மூட முடியதுல்ல. ஊராரின் பேச்சுகளும் முஸ்லீம் பாய்க்கு எட்டாமல் இல்லை. பருவ நெருப்பு பறையனாகத் தென்பட்டதை அந்தப் பெண்ணின் அத்தா விரும்பவில்லை. பருவ நெருப்பின் மீது நெருக்கடித் தண்ணீரை ஊற்றிப்பார்த்தார். ஏதும் நடைபெறவில்லை. ரவுடிகளைக் கொண்டு மிரட்டியும் பார்த்தார். காரியம் கைகூடவில்லை. ஊர் அழைக்கப்பட்டது. ‘நீயோ பறையன். என் மகளை அழைத்துக்கொண்டு கண்காணாத தேசம் சென்றுவிடு. இங்கிருந்தால் கொலைவிழும்’என்பது தீர்ப்பாகச் சொல்லப்பட்டது.

வாயும் வயிருமானவளைத் தூக்கிச் சுமந்தான். ஏழேழு வருசம் தாண்டி சீராய் வாழும் இடம் தன்னில் சேர்ந்தான். அங்கோர் நிலத்தில் குடிசை வேய்ந்தான். நெரசூலியைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வந்தான். அவனது வேலை நுணுக்கத்தைக் கொடிக்குளம் முத்துக்கருப்பத்தேவர் என்ற மறவர் உன்னிப்பாகக் கவனித்து வந்தான். அவன் யாராயிருக்கும்? கதைகளுக்குக் கால் இருப்பதைப் போன்று வாயும் இருக்கும் தானோ? பறையனின் கதை மறவனை நெக்குருகச் செய்தது. முதல் குடிசையிலிருந்து இடம் மாற்றப்பட்டான். புதிய குடிசைக்கான நிலம் காட்டப்பட்டது. புதிய குடிசைக்குள் பேருகாலத்திற்குப் பறையனின் மனைவி தயாராக நின்றாள். அன்றிரவு பறையன் ஒரு கனவு கண்டான். காளி அவனது கனவில் வந்தாள். உனது வம்சம் தளைக்கும். எனக்கொரு கோயில் எடு. கொடை கொடு. கடவுள் உத்தரவை முத்துகருப்பத்தேவரிடம் விவரித்தான் பறையன். காளிக்கொரு கோவில் எழுப்பப்பட்டது. கோவில் எழுந்த அன்று பறையன் குடிசையில் ஆண் மகவு பிறந்தது.

“நானோர் முஸ்லீம். தொழுகைக்குக் கூட என்னால் செல்ல முடியவில்லை. நான் சொல்வதை நீ கேட்பியா. அத்திக்காட்டில் துவான்ஷா என்றதொரு மஹான் வீற்றிருக்கிறான். அவனை வருடம் ஒரு முறையாவது நான் பார்க்க வேண்டும். அங்கிருந்து நான் தொழுக வேண்டும். நமது வம்சத்தில் முளைக்கும் தலப்பிள்ளைகளுக்கு முஸ்லீம் பெயர் விடவேணும். நமது வம்சத்தார் கட்டக்கால் துண்ணக்கூடாது”. ஆண் மகவைக் கையில் ஏந்திய பறையன் சொல்வான். ‘ஆகட்டும் ஆகட்டும்’. தகப்பன் பிள்ளையைக் கையில் ஏந்த, தாய் மண் கலயத்தில் தண்ணீர் நிரப்பித் தலைச்சுமையாக அத்திநோக்கி விரைந்தார்கள். காடு, மேடு, காட்டாற்றைக் கடந்து துவான் ஷா நிலை கொண்டுள்ள இடம் சேர்த்தார்கள். நாள்முட்டும் தலையிலிருந்த மண்கலையத்தை இறக்கி வைத்தாள் அம்மை. அத்தி துவானைச் சீராய்த் தொழுதாள். தொழுதழுதாள். புலம்பினாள். பிதற்றினாள். “தேசம் கடந்து, சொந்தம் கடந்து யாருமற்ற பூமிதனில் பொழைக்க வந்துள்ளோம் சாமி. நீ தான் என் புருசனையும் புள்ளையையும் காப்பத்தணும். அநாதைகளுக்கு ஆண்டவன்தான் துணை நிக்கணும்” என்று சொல்லிப் பெருக்கெடுத்த தண்ணீரோடு கலைய நீரை விரவி அத்திமரத்தில் ஊற்றி நிம்மதியானாள். “நீயே ஒரு பெயரை என் தலைப்புள்ளைக்கு விடுசாமி” என்றாள். குழந்தையும் பெற்றோரும் அன்றிரவு அங்கு தங்கினர். நடுக்குடுச் சாமத்தில் துவான்ஷா அங்கு தோன்றினார். அவர்களை ஆசீர்வதித்தார். பிள்ளைக்குச் சக்கரைக்கனி என்று பெயரிட்டார்.

பறையன் குடும்பத்தை ஆற்று மணல் போன்று துவான் பல்கிப் பெருக வைத்து விட்டான். தலைப்பிள்ளை ஆண் என்றால் அத்தி துவான், அத்திலிமான், சக்கரைக்கனி, சாகுல்ஹமீது, ராவுத்தன். பெண் என்றால் பாத்திமாதான். அவர்களது மூதாய் பெயர் பாத்திமா. ஆண்டுக்கொருமுறை அவர்கள் பிறைக்கொடி தைப்பார்கள். குடும்பம் குட்டியாக, நண்டு நத்தைகளை இழுத்துக் கொண்டு அத்தி நோக்கிப் பயணிப்பர். அந்தக் குடும்பத்தின் தலைச்சான் ஆம்பிளை கையில் பிறைக்கொடி ஏந்தி முன்செல்வர். அவர் பின்னால் பிஞ்சிப்பூக் கூடைகள், சக்கரை, மெழுகுவத்தி, பத்தி முதலிய பூசை சாமான்கள்; நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய ஆடு கோழிகளுடன் மதியத்திற்குப் பின்னர் கிளம்புவார்கள். கால்நடையாகப் பொழுது சாய்வதற்குள் அத்தி துவான் ஷாவை அடைவார்கள். தர்ஹா மரபில் உருவான அவுலியாக்கள் அங்கு காத்திருப்பர். பறையர் சாதி மக்கள் அவுலியாவிற்கு முன்னர் அமர்வர். துவான்ஷாவை நெக்குருக வேண்டுவர். அந்திப் பொழுதில் ஆதித்தகப்பன், ஆதித்தாயை நன்றியோடு நினைத்துக் கொள்வர். அப்பிரதேசத்தில் பொழைக்க வந்த தங்களது ஆதிப் பெற்றோருக்கு உதவி செய்த கொடிக்குளம் முத்துக்கருப்பத்தேவரை மூப்பர் என்ற பட்டத்தோடு நினைத்துக் கொள்வர். இரவு வழிபாடு தொடரும். விடிந்த பின்னர் நேர்ச்சியை நிறைவேற்றும் பொருட்டு ஆடு, கோழி பலியிடப்படும். ஊர் சார்பாக ஆடு ஒன்று அறுக்கப்படும். அன்று அன்னதானம் போடப்படும். “அத்தி ஆண்டவரே எங்களுக்கு நல்வழி காட்டு” என்ற வேண்டுதலோடு வீடடைவர்.

இன்றும் அத்தி துவான் திருவிழா தொடர்கின்றது. ராமசாமியாபுரம் பறையர்கள் காளிக்கும் கொடை விடுவார்கள். அத்தி துவானுக்கும் கொடை தருகிறார்கள். அவர்களது பண்பாட்டுப் பெயர்கள் இசுலாமியப் பெயர்களாகும். ஒரு ஏழைக் குடிசையில் இசுலாத்திற்கும் இடம் உண்டு. நாட்டுப்புறத் தெய்வத்திற்கும் இடம் உண்டு. கடவுளர்களைப் பின்தள்ளி வளரும் தமிழ்ப் பண்பாட்டின் வீச்சை நாம் அப்பகுதியில் கண்டுணரலாம். இதனைத் தமிழ்ப் பண்பாட்டின் உயிர்ப்புமிகு அடையாளமாகக் கொள்ளலாம்.

V

துவான் அத்தியின் மிக அருகேயுள்ள கிராமம் கான்சாபுரம். சேதுபதி மன்னரால் தனது உறவினர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிராமம் என்பது முன்னரே சொல்லப்பட்டுள்ளது. இங்கு செம்பிநாட்டு மறவர்கள், உள்ளூர் மறவர்கள், புலம்பெயர்ந்து இங்கு தங்கியுள்ள மறவர்கள் என்பதான மறவர் சாதியினரோடு ஆசாரி, ராஜுஸ், பள்ளர், பறையர், சக்கிலியர், செட்டியார், நாடார் முதலான சாதிகளும் இசுலாமியர்களும் வசிக்கின்றனர். இங்குள்ள இசுலாமியர்களுக்கும் துவான் ஷாவிற்குமான தொடர்பு நீடிக்கவில்லை. ஆனால் மறவர் சாதிக்கும் துவான் ஷாவிற்குமான உறவு இன்று வரை நீள்கிறது.

செம்பி நாட்டு மறவர் சாதியில் அத்திவளசல் என்ற ஒரு பிரிவு உண்டு. ஒரு சாதிக்குள் ரத்த உறவு கொண்ட சொந்தங்களையே வளசல் என்று அழைப்பர். சாதி என்பது பொது அடையாளம். வளசல் என்பது ரத்த உறவு அடையாளம். வளசல்களில்தான் பெண் கொடுத்து பெண் எடுப்பர். பிற வளசல்களில் பெண் கொடுப்பது, எடுப்பதென்பது அரிது. அகமண உறவுதான் சாதியை இயக்கும் அடிப்படைப் பண்பாகும். “சாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்ந்து சரியாக மதிப்பீட்டு உரைப்பதனால், அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் வழக்கமே சாதியின் அடிப்படையான இயல்பு” என்று அம்பேத்கர் கூறுவார்.

இங்கு அகமணம் என்பதைச் சாதி என்ற பொதுவிற்குள் அம்பேத்கர் அடக்குகிறார். ஆனால் தென் தமிழ்நாட்டில் அகமணம் என்பது சாதி என்ற சொல்லிற்குள் அடைக்கப்பட்டுள்ள வளசல் என்ற ஒன்றில்தான் நடக்கிறது. ஒரு வளசலில் இருந்து பிரிதொரு வளசலுக்கான அகமணம் முன்னர் கட்டுப்படுத்தப்பட்டது. கால ஓட்டத்தில் இன்று நெகிழ்ச்சி இருப்பினும் ‘வளசல்’ என்ற சொல்லே சாதிக்கு முந்திய வடிவமாக இருக்கலாம். மொத்தத்திலிருந்து துகள்களைப் பார்ப்பது கணிதமுறையன்று. கணித அறிவு துகள்களிலிருந்துதான் மொத்தத்தைப் பார்க்கும். இதிலிருந்து சாதி என்பதை வளசல் என்பதின் மொத்த அடையாளம் என்று சொல்லலாமா?

சாதி குறித்தான ஆய்வில் நான் இப்போது இறங்க முயலவில்லை. அதே வேளையில் வளசல் என்ற சொல் பழமையானது. சாதி குறித்தான ஆய்வில் வளசல் என்பதைக் கவனத்தில் நிறுத்தினால் புதிய திறப்புகள் கிடைக்கலாம். இங்கு வளசல் என்பதே பழமையானது என்பதை மட்டும் கவனப்படுத்துகிறேன். வளசல் பழமையானதென்றால் துவான் ஷாவையும் பழமையானவராகத்தான் அறிய முடிகிறது. செம்பி நாட்டு மறவர்களில் அத்தி வளசல் என்ற ஒரு பிரிவு உண்டு. அத்தி வளசல் எப்போது உருவானது?

மக்களால் கதையை முன்நகர்த்திச் சொல்ல இயலவில்லை. “பூமி மொளச்ச காலத்தில் இருந்து அத்திசாமி இங்க இருக்கு. எங்க தாத்தாவோடத் தாத்தாவுக்கு அங்கேதான் குடியிருப்பே. அங்கதான் எங்க தாத்தாவோட உசுரு அடங்குச்சு. அதனால்தான் எங்கள அத்தி வளசல் காரங்கன்னு சொல்லுவாங்க. அங்கு குங்குமம் வைக்க மாட்டோம். கற்பூரம் காட்டமாட்டோம். சக்கரைப் பொங்கலுதான் வைப்போம். சந்தனம், சக்கரையோடு சாம்பிராணி, பத்தி பொருத்தி வைப்போம். ஒரு மண் பாண்டத்துல பச்சரிசி மாவப் போட்டு பெசஞ்சு உப்பு இல்லாத ரொட்டி சுடுவோம். ஆட்டுக் கெடாய நிக்க வச்சு வெட்டமாட்டோம். அதப் படுக்க வச்சு கழுத்த அறுத்துத்தான் படைப்போம். கெடாய் சோறுனாலும் ரொட்டிய வச்சுதான் கும்பிடுவோம்”.

மக்களின் நினைவில் கதையின் வடிவம் இவ்வாறாகச் சுருங்கி எஞ்சி நிற்கிறது. அதைத் தாண்டி அவர்களிடம் சொல்வதற்கு இரண்டு இறைச் செய்திகள் உண்டு. துவான் அம்மக்களுக்குக் காட்சி கொடுத்த கதையின் முதல்வடிவம் இவ்வாறு உள்ளது. “எங்க அத்தி வளசல்ல மொதப்பிள்ளைக்கு எங்க குல தெய்வமான ஐயனார் சாமியோட பேர விடுவோம். ரெண்டாம் பிள்ளைக்கு கருப்பசாமின்னு பேர வைப்போம். மூனாவதுக்குத்தான் அத்திசாமி பேர விடுவோம். இங்க ரொம்பப் பேருக்கு துவான் கனி, அத்திக்கனி, நதிக்கனி, சக்கரைக்கனி, அத்தியப்பன்னு பேரு கெடக்கும். எனக்கு மொத மூனும் பொம்பளயாப் போயிடுச்சு. நாலாவதா இவன் பொறந்தான். இவனுக்கு ஐயனார்னு பேர்விட்டோம். அஞ்சாவது மகன் பொறக்கும்போது எங்க வீட்டாளு கண்ணுக்கு அத்திச்சாமி தோன்றியிருக்காரு. அந்த சாமியே வந்துட்டாரு. வெள்ள வேட்டி கட்டியிருக்காரு. ஒரு துண்ட மேல போட்டிருக்காரு. நெஞ்சாங் கூடுவரைக்கும் தாடி நீண்டு கெடக்கு. அப்ப அவரு சொல்றாரு “எனக்கு ஒரு பேரு வேனும்பா, எனக்கு ஒரு தேங்காய்கூட கொடுக்க உனக்கு இது இல்லையா? எனக்குத் தேங்கா வேணும்பான்னு” அத்திச்சாமி சொல்லிருச்சு. நாங்க கருப்பசாமின்னு பேரு வைக்கறதா இருந்தோம். சாமியே நேர்ல தோன்றி கேட்டுக்கிட்டதால துவான்கனின்னு பேர விட்டுட்டோம். இப்பக்கூட நாங்க அத்திக்குப் போயி சாமி கும்பிடும்போது எங்க தாத்தாவ நெனச்சுத் தனியா பத்தி ஏத்திக் கும்பிடுவோம். இன்னைக்கும் நாளொரு மேனிக்கு அத்திசாமிய நெனச்சுக்கிட்டேதான் இருப்போம். நாங்க கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிடப் போகும்போது அத்திச்சாமிய தொழாமப் போனதில்ல. அப்படியே மலைக்குள்ள போயி கருப்பசாமிய கும்புட வாய்க்கலைன்னா, அத்தி கோவில்ல தெக்கோரமா நின்னு கருப்பையும் கர்மல் நாச்சியாரையும் கும்புட்டுத்தான் வருவோம்”.

துவான் ஷாவின் காட்சி கொடுத்தலின் இரண்டாவது கதையையும் தொடர்ந்து பார்க்கலாம். “மேற்கேயுள்ள தேவாதிகளுக்கு அத்தி அய்யாதான் தலப்பு. அவர்ட்ட வந்து எம்பாம் பெரிய காத்து கருப்புனாலும் அண்டாதுல்ல. சடையால் வரைக்கும் வந்து எல்லை புடிக்கிறதுதான் அவரோட வேல. அப்ப ஒரு நாளு எந்தம்பி என்ன செஞ்சான்னா, நாளஞ்சு எளவட்டப் பயலுகள கூட்டிக்கிட்டு அஞ்சாரு நாய்கள ஓட்டிக்கிட்டு வேட்டைக்குப் போறான். அங்க இருந்த மண்டையன் காட்டு ஓடையில நாய்கள போட்டுட்டுப் படுத்துக் கெடக்காங்க. அந்நேரத்தில நடந்ததெல்லாம் எந்தம்பிக்குப் படுது. அங்க ஒரு பன்னிக்கூட்டம் மேயுது. கைக்கே அகப்படாத பெரிய நாயி ஒன்னு அங்க கெடக்குற நாய்களையெல்லாம் கடுச்சுப் போட்டு மேலெழும்பி வருது. அப்பிடியே எந்தம்பிய கடிக்கப் பாயயில அவனென்ன செஞ்சான்னா, இந்த நாய்க் கண்டாரளி நம்மளயும்ல கடிக்க வருதுன்னு நெனச்சு தலமாட்டுல வச்சுருந்த அருவாள எடுத்து ஒரு போடு போட்டான்.

கொஞ்ச நேரத்துலயே உடம்பெல்லாம் குதுகுதுன்னு குளிர ஆரம்பிச்சிருச்சு. செத்த நேரத்துக்குள்ள குளிரும் காய்ச்சலும் தூக்கிப் போட்டு அடிக்கு. கூட வந்தவங்கள உசுப்பி ஒன்னும் சொல்லாமக் கொல்லாம வீடு வந்து சேர்ந்துட்டான். வீட்டுக்குள்ள காய்ச்சல்ன்னா அப்பிடி ஒரு காய்ச்சல் அடிக்கு. நாங்க ஊசி போட்டோம் கேக்கல. மருந்து மாத்திரைக்கும் அந்தக் காய்ச்சல் அடங்கல. திருநீறு சுத்திப் போட்டாலும் கேக்கல. எங்க அப்பாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. ஒரு சந்தேகத்துல எந்தம்பிகிட்ட என்னதான்டா நடந்துச்சுன்னு கேட்டார். இந்தந்த மாதிரி நடந்துச்சுன்னு சொல்லிட்டான். அப்பா ஊகிச்சுட்டாரு. பையன் சடையால்கிட்ட சேட்ட பண்ணிட்டான்னு முடிவு பண்ணி திருநீறு போட்டு சடையாலப் பாத்து உக்காந்துட்டாரு. சடையால் முனி எங்க அப்பா ஓட கொல தெய்வம். அதனால அவர வேண்ட ஆரம்பிச்சாரு.

செத்த நேரத்துல எங்க அப்பா கண்ணுக்கு ஈஸ்வரன் தென்பட்டுட்டாரு. அங்க கோபமா ஈஸ்வரன் ஒக்காந்திருந்தாரு. துவான் ஷாவக் கூப்பிட ஆளு விட்டோம். அவரு கூட கருப்பசாமியக் கூட்டிட்டு சடையாலுக்கு நேரா வந்து சேர்ராரு. அப்ப துவான் அய்யா ஈஸ்வரன்ட்ட பேசுராரு. “என்னப்பா நெனக்கிற, அந்தப் பையன் சின்னப் பையனப்பா, செத்துகித்துப் போயிடப் போறான். தெரிஞ்சும் தெரியாம தப்பு பன்னிட்டான்னே வச்சுக்குவோம். அவன நீ மன்னிக்கக் கூடாதா? உனக்கு என்ன வேணும்? நாய் வாகனம்தான வேணும். உனக்குப் புதுசா ஒரு நாய் வாகனத்த வாங்கித்தரச் சொல்றேன்”ன்னு சொல்லிட்டு அவர்பாட்டுக்குப் போய்ட்டாரு. காய்ச்சல் பஞ்சா பறந்து போகவும் எங்க அப்பா நாய் வாகனத்த வாங்கிச் சடையாலுக்குப் போயி சாத்திட்டு வந்தாரு.

VI

வாய்மொழி வழக்காறுகள் தவிர்த்து எழுத்துமரபில் துவான்ஷா பேசப் படுகிறாரா? கான்சாபுரம் பள்ளத்தாக்கு குறித்து திரிங்கால் பாதிரியாரின் குறிப்புகள் உண்டு. அவருக்கு முன்னர் புதுப்பட்டிக்கு அருகே கிறிஸ்தியான் பேட்டை கிராமத்தை உருவாக்கிய ஜான் கிறிஸ்ட்டியன் அருளப்பன் எழுதியுள்ள நாட்குறிப்பில் அத்திகாட்டில் வசிக்கும் பளியர் குறித்தான குறிப்புகள் உண்டு. டேவிட் லாட்டன் வத்திராயிருப்பு பள்ளத்தாக்கு குறித்து ஆய்வு செய்துள்ளார். சுவாமி போகம் என்ற சொல் பிராமண நிலஉடமையைக் குறிப்பது. பிராமணரல்லாதார் நில உடமையைக் குறிக்கும் பண்பாட்டுச் சொல் என்ன? அது குறித்து தெளிவில்லை. ஆனால் சுவாமி போகம் உள்ள இடங்களில் அச்சொல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக வத்திராயிருப்பு பள்ளத்தாக்கில் உள்ள 8000 ஏக்கர் பிராமண மிராசிகளிடம் இருந்துள்ளன. பிராமண மிராசிகளுக்கு எதிராக வெள்ளாளர்கள், மறவர்கள், பள்ளர்கள் என்பதான சாதிகள் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளன. இதனை பிராமணரல்லாதார் ஒருங்கிணைவு என்று டேவிட் லாடன் குறிப்பிடுகிறார். 1840க்குப் பின்னர் உருவான சித்தாந்தத் தெளிவு என்றும் இதனை மதிப்பிடுகிறார். நில உரிமை என்பதில் முகிழ்ந்த பிராமணர் அல்லாதார் ஒருங்கிணைவு பின்னர் துலக்கமான அரசியலாக உருவானது என்று நாம் இதனைப் புரிந்து கொள்ளலாம். வத்திராயிருப்பு பள்ளத்தாக்கிற்கு 10 கிலோமீட்டர் தூரமே உள்ள கான்சாபுரம் பள்ளத்தாக்கின் நில உடமையாளராக செம்பிநாட்டு மறவர்கள் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் தொட்டு உள்ள பரந்து விரிந்த நிலத்தின் உரிமை பிராமணரல்லாதார் வசம் உண்டு. அப்பகுதியில் நில உரிமைக்கான போராட்டங்கள் நடந்ததற்கான தகவல் ஏதுமில்லை. வத்திராயிருப்பு பள்ளத்தாக்கு நிலங்கள் வெள்ளாளர், மறவர் சாதிகளிடம் மடைமாற்றம் ஆயின. கான்சாபுரத்தின் நிலங்கள் தற்போதுவரை மாற்றம் காணாமல் மறவர் நில உடமையாளரிடமே சிக்குண்டு கிடக்கிறது. பிராமண மிராசி முறையை ஒழித்த தமிழகம் மறவர் மிராசி முறை மீது சிறிதளவேனும் கூட நெருக்கடியை உருவாக்க இயலவில்லை. இதுதான் இருநூறு ஆண்டுகால பிராமணரல்லாதார் அரசியலாகும்.

இங்கு எழுத்து மரபில் துவான் ஷா பேசப்படுகிறாரா என்ற கதைக்குத் திரும்புவோம். “புதுப்பட்டி என்ற புதுவை நகர் துவான் அத்திக்கு வழிநடை சிந்து” என்ற நூல் 1910ல் வெளிவந்துள்ளது. வ.புதுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரப்பிள்ளை இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலின் ஆசிரியரின் தந்தை நல்லதம்பி பிள்ளை. இந்நூல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோதா விலாஸ் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் துவான் அத்திக்கு வழிநடை சிந்து என்ற நூலில் கிடைக்கிறது. ஆசிரியர் குறித்தான மேலதிகமான செய்திகள் கிடைக்கவில்லை.
1900க்குப் பின்னர் தமிழ் அச்சுப்பரப்பில் வழிநடை சிந்து எனும் வகைமை கணிசமாக வெளிவந்திருக்கிறது. வத்திராயிருப்புக்கு அருகேயுள்ள சதுரகிரி கோவிலுக்கு வந்து செல்வதற்கான வழிநடை சிந்து நூல்கள் வெளிவந்துள்ளன. அதைப்போன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து செல்லும் வழிநடை சிந்து நூல்களும் உண்டு. மேற்குறித்த நூல்களில் சமூகச் சமாச்சாரங்கள் அதிகம் தென்படவில்லை. ரயில் பயணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்நூல்களிலிருந்து நாம் அறியலாம். “சதுரகிரி மகாலிங்க மூர்த்தி பதிகமும் மகத்துவக் கும்பியும்” எனும் நூல் வீரபத்திர சிவானந்த யோகியால் இயற்றப்பட்டுள்ளது. 1914ல் உள்ளூர் அச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலில் ஒரு அறிவிப்பு உண்டு.

ரிஜிஸ்டர் அறிவிப்பு

இதனால் சகலமான அச்சுக்கூடத் தலைவர்களுக்கும் புத்தக வியாபாரிகளுக்குத் தெரிவிப்பது யாதெனில்:-

திருமங்கலம் காமாட்சி செட்டியாரவர்கள் குமாரரும் வீரபத்ர சிவானந்த யோகியும் ஜோதிட சித்தாந்தியுமான கா.வீரபத்திரச் செட்டியாராகிய என்னால் சதுரகிரி மகாலிங்க மூர்த்தி பதிகமும் மகத்துவக் கும்மியும் இயற்றப் பெற்றும் அச்சிடப் பெற்றும் கெவர்ண்மெண்டில் ரிஜிஸ்தர் செய்திருப்பதால் மேற்படி புத்தகத்தை அச்சிட விரும்புகிறவர்களும் அச்சுக்கூடத் தலைவர்களும் 1887 வருடத்து 25-வது ஆக்டின் 20வது பிரிவில் 6-வது விதியின்படி எம்பால் கோரும் நஷ்டத்திற்கு உத்திரவதிகளாகயிருப்பார்களென்று யாவரும் கவனிப்பீர்களாக.

மேற்குறித்த விளம்பரத்தின் வாயிலாகக் காப்புரிமை குறித்தான விழிப்புணர்வு சிறுநகரத்திற்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. அச்சு வரலாற்றில் இது ஒரு வரவேற்க வேண்டிய அம்சமாகும். வ.புதுப்பட்டியைச் சுற்றி இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. ராஜபாளையத்தில் வீற்றிருக்கும் அய்யனார் குறித்து ஒரு நூல் வந்துள்ளது. “இராஜபாளையத்தில் எழுந்தருளியிருக்கும் நீராற்றையனார் திருத்தாலாட்டு” என்ற நூல் 1922ம் ஆண்டு துரைச்சாமியாபுரம் ச.கவி வீரநல்லான் என்பவரால் எழுதப்பட்டு திருவில்லிபுத்தூர் சரஸ்வதி அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அய்யனார் குறித்துப் பாடவேண்டும் எனும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நூல் இதுவாகும்.

வத்திராயிருப்பில் வீற்றிருக்கும் முத்தாலையம்மன் குறித்து ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. “சதுரகிரி மலை அடிவாரத்தின் தென்புறமிருக்கும் மங்கை மாநகரமென்னும் வத்திராயிருப்பில் வாழ்ந்திலங்கும் முத்தாலை அம்மன் சரித்திரம்” என்ற நூல் சுப்பிரமணியபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. V.K.கருப்பணத் தேவரால் பார்வையிடப்பட்ட இந்நூல் வத்திராயிருப்பு கிராம மகாஜனங்கள் உதவியால் மதுரை, மீனலோசினி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு 1926ல் வெளிவந்துள்ளது. இந்நூல் முத்தாலையம்மான் வரலாற்றையும், முத்தாலையம்மன் கோவில் திருவிழாவையும் பாடல் வடிவில் விவரிக்கிறது.

முத்தாலம்மன் பறையர்சாதி தெய்வம். முத்தலாம்மன் எவ்வாறு பறையர் சாதி ஆனாள் என்பதை கங்கைக் கரைகொண்டு வியாக்யானம் செய்து அவள் பறையர் சாதியே அல்ல எனும் புது வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. வ.புதுப்பட்டியைச் சுற்றி இரண்டு நூல்கள் உருவாவதற்கு முன்பே 1910ம் ஆண்டு வ.புதுப்பட்டியில் துவான் அத்திக்கு வழிநடைச் சிந்து என்ற நூல் உருவாகி விட்டது. காலத்தால் முந்திய நூலில் சாதி பேதம் என்று எதுவும் காணப்படவில்லை. ஆனால் இந்நூல் துவான் ஒளியுல்லாவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்பதான எதனையும் குறிப்பிடவில்லை. துவான் எவ்வாறு மறைஞானி ஆனார் என்பதும் குறிப்பிடப்படவில்லை. பிள்ளைவரம் வேண்டிச் செல்லும் தம்பதியர் ஒருவர் பிள்ளைமார் சாதி தெருவில் இருந்து நேர் மேற்காக துவான் சாமி இருக்கும் இடம் சென்று வழிபடச் செல்லும்போது தென்படும் நிலத்தின் பெயர்கள் இந்நூலில் அடுக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுத்து மரபில் வெளிவந்த துவான் ஷா நூலில் அவரது வரலாறு எதுவும் காணப்படாதது ஆச்சர்யம்தான்.

VII

நாட்டுப்புற மரபில் சாதியின் பாத்திரம் என்பது அடர்த்தியானது. தெய்வ நம்பிக்கையும் அதன் வழிபாட்டு முறைகளும் ஒவ்வொரு சாமிக்கும் வெவ்வேறு சாதி நடைமுறை உண்டு. தலித் மக்களால் நாட்டுப்புற சாமிகளின் அருகே சென்று இன்றும் கூட வணங்க இயலாது. நாட்டுப்புறச் சாமிகளின் மைய இடத்தில் ஆடோ, கோழியோ பலியிட இயலாது. நாட்டுப்புறத் தெய்வங்கள் பொது வெளியை உருவாக்கி வைக்கவில்லை. சாதிப் படிநிலைக்கு ஒப்பான வெளிகள் கண்ணுக்குத் தெரியாத கம்பிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். எந்தச் சாதியும் அந்த வெளிகளைக் கடக்க முனைந்ததில்லை. தெய்வமும் அதனை விரும்புவதில்லை. அதைப் போன்று நாட்டுப்புற சாமிகள் விரும்பும் படையல் தரப்படவில்லையென்றாலும்; சுத்த பத்தமாக இருந்து சாமியைத் தொழாவிட்டாலும் அச்சாமிகள் கடும் கோபம் கொள்ளும். வெசனப்பட்டு மக்களுக்குக் கொடும் துன்பத்தை விளைவிக்கும். அதனைச் சாந்தப்படுத்துவது குதிரைக் கொம்புதான்.

துவான் ஷா என்ற நாட்டுப்புறத் தெய்வம் மக்களைத் தொந்தரவு செய்யாது. ஒரு மனிதன் எந்தத் தவறு செய்தாலும் அவனை துவான் ஷா காப்பார். தன் அருகே இருந்த சடையால் தெய்வத்தின் வாகனமான நாயை வெட்டியதற்காக, ஒருவனைக் காய்ச்சலில் வாட்டினான் சடையன். அவனை ‘ஒன்றும் செய்யாதே’ என்று துவான் ஷா உத்தரவு கொடுக்கிறார். சடையன் அதை ஏற்கிறான். துவான் அழகிய வடிவினன். அமைதி முகத்தினன். தன்னிடம் வரும் பக்தர்களுக்குத் துன்பம் விளைவிக்க மாட்டான். அவர்களுக்கு அன்பை மட்டுமே அள்ளிப்பருகத் தருவான். பண்பாட்டு நெருக்கடியான பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு அருள் புரிவான். கொடும் நோயால் நாடி வருபவர்களுக்கு சுகம் கொடுப்பான். சுருங்கச் சொன்னால் “சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்னிடம் வாருங்கள். உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்ற பைபிள் வாக்கியத்தின் நடைமுறை தெய்வமாக துவான்ஷாவை மக்கள் கண்ணோக்குகின்றனர்.

தூவான் ஷா காட்சி கொடுத்த நிலம் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. இந்நிலம் அனைவருக்குமான பொது வெளியாகும். அங்கு பறையர்கள் வருவார்கள். இரவு தங்குவார்கள். துவானைத் தொழுவார்கள். வ.புதுப்பட்டியிலிருந்து நாயக்கர் வருவார்கள். கான்சாபுரத்திலிருந்து மறவர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் வருவார்கள். துவான் ஷா மொழிபேதம், சாதிபேதம், மதபேதம் பார்ப்பதில்லை. அனைவரையும் தனது வெளிக்குள் சங்கமிக்கச் செய்வார். மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டில் சாதிச் சார்பின்மை என்பது எப்போதும் அடக்கப்படாது. சாதிச்சார்பின்மையை உள்ளடக்கிய மதச்சார்பின்மை எனும் கோட்பாடே முழுமையான மதச்சார்பின்மை வடிவமாகும். பக்தர்களிடம் சாதி, மதம், மொழி பார்க்காத,பேதமதை விதைக்காத துவான் ஷா எனும் நாட்டுப்புறத் தெய்வத்தை மதச்சார்பின்மையின் முழுமையான வடிவம் என்று கூறலாம்.

அடிக்குறிப்புகள் :

1. கான்சாபுரம் மறவர்கள் நினைவில் ராமநாதபுரம் ஜமீன் உடனான உறவுகள் நினைவுகூரப்படுகிறது. ‘சேதுபதி மன்னர் வரலாற்று’என்ற நூலை எழுதியுள்ள டாக்டர் எஸ்.எஸ்.கமால் லின் நூலில் அதற்கான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை. அதைப்போன்று டேவிட் லாடன் எழுதியுள்ள Peasant History in South India என்ற நூலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாடுகளை வரிசைப்படுத்துகிறார். ஏறக்குறைய 31 நாடுகளை அடையாளம் காண்கிறார் லாடன். அதனில் கான்சாபுரம் வரவில்லை.

2. துவான் ஷா குறித்து துக்கடா கதைகள்தான் உலவுகின்றன. அவரது சொந்த ஊர் வாசுதேவநல்லூர் என்பதை மட்டும் அறிந்ததாக துவான் ஷாவின் சீடராக அறியப்படும் சித்த மருத்துவர் இளங்கோவன் கூறுகிறார். இளங்கோவன் மீதுதான் துவான் ஷா இறங்கி மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இளங்கோவனால் கூட துவான் ஷாவின் சொந்த ஊர் தவிர்த்த மேலதிகத் தகவல்களைத் திரட்ட இயலவில்லை. கள ஆய்விலும் பெரிய அளவிலான வரலாற்றுக் கதைகள் கிடைக்கப்பெறவில்லை.

3. களஆய்வில் உடன் வந்த இளையராஜா, கில்பர்ட் ஆகியோருக்கு நன்றி.

 

 


 

அ.ஜெகநாதன் .
அ.ஜெகநாதன் .

அ.ஜெகநாதன் ஆய்வாளர்.மதுரையில் வசிக்கிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top