தற்காலத்தில் ஜாதியும் என்பது வேறு ஒரு தளத்தில் மாற்றம் ஆகியிருக்கிறது. தலித்துக்கு முடி திருத்தக் கூடாது என்று நாவிதத்திற்குத் தடை. தலித்தின் துணியை இஸ்திரி போட்டுத் தரக் கூடாது என்று வண்ணாருக்குத் தடை. கோயிலில் நுழையத் தடை போன்ற கருத்துருக்களை முன்வைத்து ஜாதியம் பேசுவது பழைய பேஷன் ஆகிவிட்டது. ஜாதியம் இப்போது கார்ப்பரேட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஜாதகம் என்னும் கருத்துக்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதம் இப்போது.
இதன் தொடர்ச்சியான பார்வையில் மனுஸ்மிருதியைத் தற்போது இடைநிலை ஜாதிகள் கையில் எடுத்திருக்கின்றன. நால்வர்ணம் உருவாக்கிய ஜாதியப்படிநிலைகளின் கட்டுமானத்தை மேலும் மேலும் இறுக்கமாக்கி அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பார்ப்பனியத் தன்மையுடன் முனைகின்றன.
வெகுஜன சமூகம் சார்ந்த தற்காலச் சூழலில் பார்ப்பனர்களின் தீண்டாமை மட்டுமல்லாது, பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகளின் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் கொடுமையானது. என்னதான் முற்போக்கான அரசியல் பார்வைகளை வைத்தாலும் குலத்தொழில் ஜாதியினருக்கான ஆளுமையை ஒடுக்குவதும், ஜாதியத்தை முன்வைத்துச் சலுகைகளை அளித்து நவீன அரசியல் தீண்டாமையை அனுஷ்டிப்பதுமாகவே இருந்தது. இரண்டாயிரம் ஆண்டு பார்ப்பனியத்தின் எச்சத்தை வெகுஜன அரசியல் தளத்தில் உருவேற்றுவதிலேயே குறியாக இருக்கின்றனர் ஆதிக்க ஜாதிகள்.
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அந்தந்தக் காலச் சூழலுக்கேற்ற விதத்தில் உருமாறிப் பல்வேறு பரிமாணங்களில் தன்னைத் தகவமைத்துக் கொள்கிற பார்ப்பனியம் இன்னும் நுட்பமாகச் சொன்னால் பார்ப்பனிய மனம்.
பிறப்பால் பார்ப்பனச் சமூகத்தில் பிறப்பது என்பது வேறு, பார்ப்பனியத் தன்மை என்பது வேறு. எவரொருவர் பார்ப்பனச் சமூகத்தில் பிறந்து விட்டதாலேயே அவரை இரண்டாயிரம் ஆண்டுகால ஆதிக்கத்தன்மை கொண்டவராக வரிப்பதென்பது தற்காலத்திய சூழலில் மிகவும் பரிசீனை செய்யத்தக்க ஒரு அம்சம். பார்ப்பனர் அல்லாத சமூகத்தில் பிறந்து ஆதிக்கத்தன்மையுடன் சக மனிதனை ஒடுக்கும் மனநிலையில் செயல்படும் ஒருவரை அவரது பிறப்பு அடையாளத்தை வைத்து ஆதரிப்பது என்பதும் சரியான போக்கல்ல என்பதே தற்காலச் சூழலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.
இங்குதான் ‘பார்ப்பனிய மனம்’ என்கிற ஆதிக்கத்தன்மை கொண்ட கருத்துருவத்தைக் கட்டமைக்கலாம் என்று படுகிறது.
கடந்த காலங்களில் இந்தப் பார்ப்பனிய மனம் தவிர்க்க முடியாமல் மிகப் பெருவாரியான பார்ப்பனர்களிடம் செயல்பட்டு வந்த சூழலால் அந்தப் படிமம் அழிபடாமல் மேலும் மேலும் இறுக்கமாகிக் கொண்டே இருந்தது. காலங்காலமாக ஆழமான உளவியலில் மேலோட்டமான வெகுஜனக் கருத்தாக விதைக்கப்பட்டு வந்த பார்ப்பனிய மனத்தைக் கட்டமைக்கச் செய்கிறது.வெகுஜனப் பார்வையில் அடையாளப்படுத்தச் செய்கிறது.
இப்படிக் கட்டமையும் பார்ப்பனிய மனம்தான் மாறிவரும் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் குறிப்பாக இடஒதுக்கீட்டுச் சூழலில் தன்னை மறுவரையறை செய்து கொள்ள நுட்பமான இந்துத்துவ அரசியலைக் கையில் எடுக்கிறது.
இந்த ஜாதியச் சூழலில் இயங்கும் உயர் ஜாதி ஆதிக்க அரசியல் ‘சமூக நீதிக் கருத்துக்களின் மீது உருவாக்கப்பட்ட ஜாதியச் சமூகத்தின் சமூக நீதியாகக் கருதத்தக்க இடஒதுக்கீட்டுப் பார்வையை ‘வெறும் சலுகை’ என்று உணரும்படியாகத் தரம் தாழ்த்தி விட்டது.
இப்படியாக உயர் ஜாதிகளினூடே ஊடுருவிப் பரவும் இந்த ‘நவீனப் பார்ப்பனிய மனத்தை’ எதிர்கொள்ள வேண்டுமெனில் பழமையான சுயமரியாதை மனம் முழு முற்றாக மறுவரையறை செய்ய வேண்டியிருக்கிறது.
தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளும், பண்பாடுகளும் வளர்ச்சியடைந்து வரும் தற்காலமானது முழுக்க நுகர்வுக் காலமாக இருக்கிறது. ஆகப் புதிய கண்டுபிடிப்புகளும் நுகர்வுக் கலாச்சாரத்தில் எளிய பார்வையாக மாறுகிறது. சென்ற நூற்றாண்டில் முதன்மைப்படுத்திய பண்பாட்டுக் கூறுகள் இப்போது நெருக்கடிகளாகின்றன. பார்ப்பனர்களை திராவிட அரசியலை முன்வைத்துச் சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. அவர்களுக்குள் மறைந்துள்ள பார்ப்பனியத் தன்மையைச் சுட்டிக்காட்டிக் கடுமையாக விமர்சனம் செய்யலாம். அது வேறு விஷயம். இறையியலை முன்வைத்து சூத்திர வாழ்வியலில் நுட்பமாக ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தை விமர்சனம் செய்யும் முற்போக்குப் பார்வையாக வந்திருக்க வேண்டிய சிந்தனை வேறு விதமாய்த் திரிந்து போனது.
இப்படி பின்னிப் பிணைந்து கிடக்கிற தற்கால அரசியல் மற்றும் கலை இலக்கியச் சூழலுக்குள் ஜாதியம் பெரும் வளர்ச்சியடைகிறது. இதன் விரிவான வளர்ச்சியைக் கணிக்கும் உயர் ஜாதி மற்றும் இடைநிலை ஜாதிகள் ஜாதியத்தைக் கையில் எடுக்கின்றன.
ஜாதி என்பது ஒவ்வொருவருடைய உடலோடும் ஒட்டிய உறுப்பாக இருப்பதை வாழ்வின் பல்வேறு தருணங்களில் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அந்தக் கோட்டைத் தாண்டி வந்து விட்டவர்களைப் போல பெரும்பாலானவர்கள் வேடமிடுகிறார்கள் அல்லது அப்படி நினைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஜாதியைப் பற்றிப் பேசுவது அருவருப்பான விஷயம் என்பது போல முற்போக்கு முகமூடியை அணிந்து கொண்டு பாதுகாப்பு வளையத்துக்குள் முகத்தைத் திருப்பி. கொள்கிறார்கள்.
என்னதான் முற்போக்கான கருத்துக்களைப் பேசினாலும் திருமண உறவுகள், ஜாதி சம்பிரதாயங்கள், சடங்குகள் என ஜாதியப் பார்வைகளை அனுஷ்டித்துக் கொள்கிறார்கள். உயர் பதவி வகிக்கிறவர்களைத் தங்களவர்கள் என்று குசுகுசுப்பாய்ச் சொல்லி மகிழ்கிறார்கள்.
இப்பல்லாம் யாரு ஜாதி பார்க்கிறாங்க என்று வெள்ளந்தியாகப் பேசிக்கொண்டே மருத்துவர் வகுப்பு இளைஞனை மணந்து கொண்டார் என்பதற்காக தன் மகளையே அடித்துக் கொலை செய்கிறார்கள். புதிரை வண்ணார் வகுப்பு இளைஞனை மணந்து கொண்டாள் என்பதற்காக அப்பெண்ணின் குடும்பத்தைச் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கும் கொடுமையும் தொடர்கின்றன. தொழிற்நுட்ப யுகத்தில் ஜாதிகள் எல்லாம் ஒளிந்து போய்விட்டன என்று பேசும் அறிஞர் பெருந்தகைகள் தங்களது பிள்ளைக்கு ஜாதியத்தின் அருமை பெருமைகளைக் கனகச்சிதமாக ஊட்டிவிட்டு இருக்கிறார்கள் என்பதற்குச் சமீப காலங்களில் நடக்கும் ஜாதியத் திருவிழாக்களை சாட்சி.
அந்தக் காலத்தில் எந்தவிதமான திறமையும் ஆற்றலும் இல்லாதவர்கள், கறுப்புப் பண முதலைகள், வயதானவர்கள், கலை, இலக்கியம், கலாச்சாரம், அரசியல் சமூகம் குறித்த எந்தவிதமான பார்வையும் தேடலும் அற்ற நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் போன்றவர்கள் மட்டுமே ஜாதியைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இன்று ஜாதியம் வேறு வடிவம் எடுத்திருக்கிறது. ஜாதி என்றால் கேள்வி கேட்காமல் ஒன்று திரளும் கூட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பாதுகாப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அதன்மூலம் உருவாகும் ஒருவித அதிகார மய்யத்தை உருவாக்கிய நிறுவனங்களும் தொழிலதிபர்களும் முனைப்புடன் செயல்படுகிறார்கள். போட்டிகள் நிறைந்த உலகில் தனது அங்கீகாரத்திற்கான அங்கீகாரம் ஜாதியப் பின்னணியில் பெரும்பலம் சேர்க்கிறது என்பதையெல்லாம் கணக்குப் போட்டு பார்க்கின்ற படித்தவர்கள், இளைஞர்கள், புத்திசாலிகளாகத் தங்களை வரித்துக் கொள்வோர் ஜாதியத்தைக் கையில் எடுக்கிறார்கள்.
இந்தப் போக்கை இன்றுவரை கண்டு கொள்ளாத இலக்கியப் படைப்பாளிகள், ‘ஜாதி குறித்தெல்லாம் எழுதுவது அருவருப்பான விஷயம்- மலினமான விஷயம்’ என்று ‘புனிதமாய்த் தப்பித்துக் கொண்டு’ படைப்புத்தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள் ஜாதியத்தில் நடைபெறுகின்ற நல்லது, கெட்டது போன்றவையெல்லாம் தாண்டி உள்மடிப்புகளாகச் செருகி வைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க நுண்ணரசியலின் பல்வேறு கூறுகளை- பரிமாணங்களை வேறு யார் சுட்டிக் காட்டுவது? ஆதிக்க ஜாதிகளின் நுண்ணரசியல் கூறுகள் குறித்து எழுதுவதுதான் விளிம்பு நிலை மக்கள் இலக்கியத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும்.
1970களில் ஜாதிரீதியாக ஒன்று திரளுவது என்பது அவமானகரமான அம்சமாக இருந்த ஒரு சூழல். ஆனால் வண்ணார்கள் ஜாதி ரீதியாக ஒன்று திரளுவது முற்போக்குப் பார்வை கொண்டவர்களாக ஆதரிக்கப்பட்ட ஒன்று. அந்தப் பார்வை மெல்ல மெல்ல மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒற்றுமையையும் ஆதரிக்க ஆரம்பித்தது.
இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜாதியச் சங்கங்கள் முன்னபோதைக்கும் இல்லாத அளவுக்குத் தோன்றியிருக்கின்றன. சற்றும் கூச்சமின்றி ஜாதியப் பெருமிதங்கள் வெகுஜனத் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஜாதிய மேன்மைகளைப் பேசுவது தவறான போக்கு அல்ல என்ற பார்வை இந்த நூற்றாண்டில் உருவான மிகப்பெரிய பின்நவீனத்துவச் சிந்தனையாக வலம் வருகிறது.
ஜாதிகளின் இந்த அபரிமிதமான பெருக்கத்திற்குக் காரணம் என்ன என்பதை நுட்பமாக அணுகலாம். காலங்காலமாக ஒவ்வொரு ஜாதியினருக்குள்ளும் தீராத அதிகார ஆசை உருவாகிக்கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்கு வங்கி அதிகமாக இருக்கின்ற ஆதிக்க ஜாதியினருக்கு அவர்களுக்கே உரித்தான அதிகாரத்தன்மை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பது அரசியல் இயற்கை. அதே சமயம், தங்களது ஜாதி மக்கள் தொகை பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் கூட பொருளாதார ரீதியாக மிக மிக உயர்வு நிலையில் இருக்கிற அதிகார அந்தஸ்தே ஆதிக்கத்தன்மையை உருவாக்கும். அந்தச் சூழலில் இவர்களது ஆதிக்கத்தையும், பொருளாதாரப் பின்புலத்தையும் தங்களது கைப்பிடிக்குள் கொண்டு வர, ஜாதியச் செயல்பாடுகளைச் சூழலுக்கேற்ப அங்கீகரிப்பதும், ஒடுக்குவதும் அரசியல் கட்சிகளின் பிரதானச் செயல்பாடுகள்.
ஜாதிய ஆதரவுகள் இப்போதெல்லாம் மிகவும் வெளிப்படையாகவே நடக்கின்றன. அரசியல் கட்சிகள் என்னதான் ஜாதியில்லை, பேதமில்லை என்று வாய்கிழிய கத்தினாலும் பெருவாரியான ஜாதிப் பின்னணி கொண்டவர்களுக்கே தங்களது கட்சிகளில், ஆட்சிப் பொறுப்புகளில், அதிகாரங்களில் முக்கியத்துவம் தருகின்றன. அந்த அரசியல் அமைப்பின் ஆணிவேர்களாகவும், கிளை வேர்களாகவும், சல்லி வேர்களாகவும் முழுக்க முழுக்க ஜாதியமே இருக்கிறது.
அரசியல் என்பதே தாங்கள் அதிகாரம் செலுத்துவதற்கான அமைப்பைக் கைப்பற்றுவதற்கான ஆயுதமாகத்தான் இருக்கிறது. அதன் உண்மையான அர்த்தமும், படிமங்களும், கருத்துகளும், கோட்பாடுகளும் செல்லரித்துப் போய்விட்டன. ஒரு காலத்தில் இந்த அமைப்பு சிந்தனையாளர்களிடமும் உலகளாவிய அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்களிடமும் தானாக வந்து சேர்ந்தது. இன்று அது அதிகார அரசியல். அதை நோக்கி நகர்கிறார்கள் ஆதிக்கச் சக்தியினர்.
இப்போது அப்படியான தருணத்தில் இன்றைய அரசியல் சூழல் முழுக்க முழுக்க ஜாதியத்தையே பகடைக் காய்களாக உருட்டுகிறது. பெருவாரியான மக்கள் தொகையும், பலமான பொருளாதார அடித்தளமும் கொண்டு ஜாதியினர் அரசியல் அதிகாரத்தை நோக்கி ஆரவாரமாக முன்னேறுகின்றனர். அரசியலை வைத்து ஆதிக்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் ருசி பார்த்த அதிகார பீடங்கள் அவர்களைத் தங்கள் கையகப்படுத்திக் கொள்ளப் பல்வேறு தந்திரங்களைக் கையாளுகின்றனர்.
ஜாதிய அமைப்பு என்பது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது வெறுமனே கேலிக்குரியதாகவும், சாதாரணமானதாகவும் தோன்றலாம். ஆனால் அரசியலில், சமூகத்தில், ஒரு பெரும் அதிகாரம் கொண்ட பெரும் பாதுகாப்புக் கொண்ட அமைப்பாக மாற்றவல்ல சக்தி என்பதை உணர்ந்து ஜாதியத் தலைவர்கள் புழுதி பறக்க ஆடுகளத்தில் குதிக்கிறார்கள்.
இந்த ஆட்டத்தை முன்னிறுத்தி ஒரு பார்வையாளனாக நாம் இந்தப் போக்குகளை உணர முடியும். சமூக அமைப்பில் ஜாதியப் படிநிலை இருப்பது போல இந்தத் தமிழ்நாடு அரசியல் அமைப்பிலும் ஜாதியப் படிநிலை இருக்கிறது.
அதாவது தொன்மையான தனிச்சிறப்புமிக்க தமிழ் மண்ணின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஜாதிய மக்கள் தொகையும் ஜாதியப் பொருளாதாரப் பின்னணியுமே அரசியலைத் தீர்மானிக்கிறது. அறம் சார்ந்த களப் போராளிகளுக்கு இங்கு கிஞ்சிற்றும் இடமில்லை. அரசியல் என்று மில்லியன் பில்லியன் கோடி தொகைகளில் கட்டமைக்கப்படும் ஒரு விளையாட்டு வடிவம்.
இதில் நில உடமை ஆதிக்கமும், பணபலமும் கொண்ட உயர் ஜாதியினர் முதன்மையாக அணிவகுக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்பங்கு வகிப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களது ஜாதியப் பெருமிதங்களும், ஜாதிய அடையாளங்களும், ஜாதியச் சிந்தனைகளும், ஜாதிய அதிகாரங்களும் பல்வேறு வடிவங்களாக, பல்வேறு பரிமாணங்களாக தமிழ்நாடு எங்கும் கோலோச்சும். இன்றும் சற்று நுணுகி ஆராய்ந்தால், இதில் உள்ள பல்வேறு பிரிவுகளே ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குள்ளும் சுழற்சி முறையாக மாறி மாறி தமிழ்நாடு அரசியலைத் தங்களது பிடிக்குள் வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் பார்ப்பனர்களின் நிலை பெரிய அளவில் இல்லை. இந்திய அரசியல் களத்தில் அவர்கள் மிகப்பெரிய சக்திகள் என்பது வேறு விஷயம்.
தந்தை பெரியாரின் பாத்திரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பங்கு வகித்தன் பின்னணியில் பார்ப்பனியம் உட்சுருங்கி விட்டது. ஆனால் சமீபகாலமாக மாற்று அரசியல் பேசும் களங்களில் வளர்ந்து வரும் போக்குகளால், பெரியார் எதிர்ப்பு, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கம் போன்ற கருத்துக் கூறுகளால் அது வேறு வடிவில் உருமாற்றம் பெற்று ஒரு பெரும் பாய்ச்சலுடன் வளர்ச்சி அடைவதற்கான தருணமும் ஏற்படும் என்று எண்ணத் தோன்றுகிறது.
நமது மொழியின் இரண்டாயிரம் ஆண்டு ஜாதியக் கட்டுமானம் நான்கு வர்ணப் பேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது என்னும் படிமத்தைப் பற்றியே இன்றுவரை பேசிக் கொண்டிருக்கிறோம். அது வெறுமனே மேலோட்டமானதுதான். அதற்குள் உள்மடிப்புகளாகச் செருகி வைக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியல் கூறுகளைத்தான் கட்டுடைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஏராளமான சூழ்ச்சிகள் நிறைந்ததும், அருவருப்பான அரசியல் கூறுகள் கொண்டதும், பார்ப்பனியத்தின் வஞ்சகமும், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கிடையே சொந்தச் சகோதரரின் ரத்தத்தை உறிஞ்சும் விதமாகவும் இந்தக் கூறுகள் கட்டமைத்ததற்குக் ‘கலை’ பெரிதும் பங்காற்றியிருப்பதை அவதானிக்கலாம்.
தொழில் அடிப்படையில் பிரித்து வைத்த ஜாதிக் கூறுகளை மேன்மேலும் அதே ஜாதிப் படிநிலைக் கூறுகளிலேயே இருத்தி வைப்பதற்கும், எக்காரணத்தைக் கொண்டும் அந்த ஜாதி வட்டத்திலிருந்தோ அல்லது ஜாதித் தொழில்களில் இருந்தோ மீள்வதற்கான வாய்ப்பைத் தந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பார்ப்பனியம் மட்டுமல்லாது, ஜாதி இந்துக்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நுண்ணரசியலையும் உணரலாம்.
கவனிக்கப்படாத குலத் தொழில் ஜாதிகள் குறித்தும், அவர்களது வாழ்வியல் குறித்தும் நிறையப் பதிவுகள் வரவில்லை. எனவே கவனிக்கப்படாத குலத்தொழில் ஜாதிகளையே இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.
வண்ணார்
மனித அடிப்படைத் தேவைகளுக்கான உணவுப் பொருள் உற்பத்தியாளர்களாகவும், இந்த வேளாண் பொருள் சார்ந்த உற்பத்தியோடு தொடர்புடையவர்களாகவும் இருக்கின்ற உயர் மற்றும் இடைநிலை ஜாதியினரான குடிமக்களுக்குத் தொண்டு ஊழியம் செய்யும் முறையே குடி ஊழிய முறை.
குடி ஊழிய முறைக்காரர்கள் உற்பத்தி எதுவும் செய்வது இல்லை. மாறாக உற்பத்தியோடு தொடர்புடையவர்களுக்கு ஊழியம் செய்பவர்களாக உள்ளதால், அவர்களது ஊழியத்தை அனுபவிக்கும் உயர் மற்றும் இடைநிலை ஜாதியினர், அவர்களது அடிப்படைத் தேவைகளை ஏற்றுக் கொள்வார்கள். இதில் வண்ணார், மருத்துவர் போன்ற ஜாதிகள் அடக்கம். இந்த குடிஊழிய முறையை ‘ஜெர்மானிய முறை’ என்று இந்தியச் சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிறப்பிலேயே சங்கீத ஞானமும் சிறந்த சாரீரமும் வாய்க்கப் பெற்றவர்கள். காரணம் ஆடைகளைத் துவைக்கும் பொழுது களைப்புத் தெரியாமல் இருக்க பாட்டுக்கட்டும் மரபு வழிச் சம்பந்தம், இரண்டரைக் கட்டையில் எழும் அந்தச் சாரீரம், சங்கீதச் சாம்ராட்களின் பீடங்களை அசைக்க வைப்பது.
இன்னார் இன்னார் ஆடைகள் என்று வகைபிரிக்க ஆடைகளுக்கு அடையாளம் இடும் இவர்களது ‘வண்ணாங் குறிகள்’ குறித்து ஒரு ஆய்வே செய்ய வேண்டும். அந்தக் குறியீடுகளுக்கு என்ன தன்மை, அதன் உருவாக்கத்தின் பின்னணி என்ன என்று பார்த்தால் அந்தக் குறியீடுகளில் ஒரு புதிய மொழியியல் பார்வையும், ஒரு புதிய குறியீட்டியல் தன்மையும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடக்கிறது.
ஒவ்வொரு குடி ஊழியம் செய்யும் வீட்டிற்கும் சென்று தங்களுக்குச் சோறு வேண்டுமென்று ‘ஊர்ச்சோறு’ எடுப்பவர்களாக இருக்கும் இவர்களது பொதுவான தொழில் மக்களின் அழுக்கு ஆடைகளை வெளுத்துக் கொடுத்தல் என்பது பிரதானமாக இருக்கிறது. ஊர்ச்சோறு எடுப்பவர்கள் பட்டியலில் மருத்துவர்கள் அடங்குவர். மேலும் பெண்களின் தீட்டுக் காலத்தில் அணிந்திருந்த உடைகளைச் சுத்தம் செய்து வைத்துக் கொடுத்தல், ஜாதி இந்துக்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளின் போது பந்தல்களுக்குத் துணிகளைக் கட்டி அலங்காரம் செய்தல், கோயில் திருவிழா, திருமண விழா போன்ற சுபகாரியங்களின் போது தீப்பந்தம் தயாரித்து பந்தம் பிடித்தல் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளில் ஜாதி இந்துக்கள் நடந்து வர காலுக்கு நடைபாதை மாத்து (துணி) விரித்தல் என்று பல்வேறு விதமான பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் 17 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அரசு ஆவணங்களில் மிகவும் பின்தங்கியவர்களாக தமிழ்நாட்டில் இருக்கும் இவர்கள் உண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள், பொதுச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன இடமோ, அதே படிநிலையில் இருப்பவர்கள்.
பொதுச் சமூகம் ஏற்படுத்திய வெறுப்பிலும், தற்போதைய நகரமயச் சூழலில் தங்களது ஆடைகளைத் தாங்களே வெளுத்துக்கொள்ளும் போக்கில் பொருளாதார வரத்தின்றிப் போய்விட்ட காரணத்தினாலும், வேறு தொழிலுக்கு மாறிவிட முனையும். இவர்களை ஜாதி இந்துக்களின் கட்டுப்பாட்டிற்குள் ஒடுங்கியே கிடைக்கும் சூழல் விட மறுக்கிறது.
மருத்துவர்
இந்த ஜாதியினுடைய தொழில் ஆரம்பகாலத்தில் மருத்துவர் தொழிலாக இருந்திருக்கிறது. பண்டிதர் என்றும் பண்டுவர் என்றும் இவர்களைக் குறிப்பிடுகிறார்கள். நாட்டுப்புறங்களிலுள்ள குடியானவர்களுக்குச் சிறு சிறு மருத்துவ உதவிகளும் காலில் முள் தைத்துவிட்டால் வாங்கி விடுவது, காலில் கட்டியுள்ள ஆணி எடுப்பது போன்ற செயல்களைச் செய்பவர்கள். அதன் நீட்சியாக முடித்திருத்தும் தொழிலையும் செய்பவர்கள். இவர்கள் தவில், நாதஸ்வரம் வாசிக்கும் இசைக் கலைஞர்கள். இவர்களைப் பரியாரிகளாக(தூதுவர்களாக) உயர் ஜாதியினர் வீடுகளில் நடக்கும் இழவு காரியங்களுக்கு வெளியூர், உறவினர்களிடம் போய் செய்தி சொல்லும் ‘ஊர் சொல்லுதல்’ வேலைகள் செய்பவர்கள்.
‘தாழ்ந்த நிலைக் குலச் சடங்குகள் செய்தல்’ போன்ற குலச் சடங்குகளுக்கு இவர்களைப் புரோகிதராகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சடங்குகள் இவர்களுக்குக் கிடைக்கும் ‘பெரிய கௌரவம்’ போன்ற படிமங்களை ஜாதி இந்துக்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
தென் இந்தியாவில் பட்டியல் வகுப்பினர் வள்ளுவர் வகுப்பினரைப் புரோகிதராகப் பயன்படுத்திக்கொள்வது போன்று வட இந்தியாவில் பட்டியல் வகுப்பினர் மருத்துவர் (நான்பிராமின்) வகுப்பினதைப் புரோகிதராகப் பயன்படுத்திக் கொள்வர்.
வண்ணார்களைப் போலவே அரசு ஆவணங்களில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கும் மருத்துவர்கள் பொதுச் சமூகப் படிநிலையில் தாழ்த்தப்பட்டவர்கள்.
Art : Rajendra Kumar Shyam
பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.








Leave a Reply