பூச்சாண்டி
கனவது
கைக்குள் இருக்கிறது
கைக்குள் குழந்தைகள்
அகப்பட்டு அகப்பட்டு
பகலிலும் இரவிலும் அழுகிறார்கள்
நாம் பாடுபடுகிறோம்
அழுகைக்குத் தாலாட்டு பாடுகிறோம்
துக்கத்தைக் கேட்டு அழுகையை
மென்று உறங்கட்டும் குழந்தை
எலிப்பூனை
குடும்பச் சண்டைகள் ஒரு விளையாட்டு. அப்பா அம்மா விளையாடும் கண்ணாமூச்சி. ஆளுக்கு ஒரு வார்த்தையைச் சொல்லி ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டை விளையாட்டாகவே விளையாடத் தொடங்கலாம். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காதவர்தான் இருவரும். ஆனால் இருவருக்கும் யார் முந்தினார்கள் என்பதில் கடுமையான போட்டி. கோவிலுக்குக் கிளம்பும் போட்டி. விழாக்களுக்குக் கிளம்பும் பொழுது கண்ணாமூச்சி. உறங்கும் நேரமும் ஓடிப்பிடி. சில சமயங்களில் விளையாட்டு தீவிரமானால் எங்களை தாத்தா வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். மாறாக, வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் விடுவார்கள்.
யார் பெரியவர் என்பது முடிவுறாத ஆட்டத்தில், நான் தீவிரமாகப் பின்தொடர்ந்த போது என் வலது பக்கக் கன்னம் இஸ்திரி பெட்டி பட்டு கிழிந்து விட்டது. விளையாட்டு முடிந்த பின்னே வாயைத் தைக்கக் கூட்டிப் போனார்கள்.
வளர்ந்ததும் நானும் இந்த விளையாட்டை ஆடுவேன்
ஊருக்கு நான் யாரென்று அப்போது தெரியும்
ஒரு குட்டி நாய்
நாய் பிடிக்கும் வண்டி வந்த போதும்
குட்டி மட்டும் எங்கோ
எப்படியோ மறைந்து கொண்டது
இல்லை தப்பித் தவறிவிட்டுப் போய்விட்டார்கள்
தனியே கிடந்து வளர்ந்ததால்
சீக்கிரமே சத்தமாகக் குரைக்க
கற்றுக்கொண்டுவிட்டது
தெருவில் எல்லா
விலங்குகளிடமும்
மோதிக் கொண்டும்
புரை பொறுக்கிக்கொண்டும்
நாட்களை ஓட்டியது
பெறும் புரைக்கு விசுவாசமாக
அந்தந்த வீடுகளுக்கு ஏற்ப
கணக்காகக்
காவல் காத்தது
ஒரு நாள் மீன் முள் அதன் முன்னே வந்து விழுக
இனி எல்லாம் சுகமேயென
எச்சில் ஒழுக முழுங்கிய இன்பம்
அதற்குத் தீரவேயில்லை
ஏனெனில்,
எல்லா நாயும் தொண்டையில் முள் சிக்கித்தானே சாகும்
அன்றாடம்
மருத்துவ விடுதியில் மாநிலத்தின் தலைசிறந்த ஊழியர் ஓய்வு எடுக்கிறார்
நோயின் காலமே வாழ்க்கையிலிருந்து அவருக்குக்
கிடைக்கும் விடுமுறைக் காலம்
அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் தப்பிக்கப் பார்க்கிறார்
அவரைச் சந்திக்க உகந்த காலமென நம்பும் அத்தனை பேரும்
விடுதியை முற்றுகை இடுகிறார்கள்
இன்றோடு முடிந்துவிடும்
இன்றோடு முடிந்துவிடும்
இன்றோடு முடிந்துவிடும்
இன்றோடு முடிந்துவிடும்
என்று சந்தித்துச் சந்தித்து
விடுமுறை நாளும் தீர்ந்து போனது
அவரும் சமாதானமாகி விட்டார்
வேலைக்குத் திரும்பி விட்டார்
மேலும்
ஒரு கொலை செய்த பெண்ணைத்
தப்பிக்கவிடுவது அவளுக்கு
முலையிரண்டு இருப்பதால்தான்
Art : etsy
டோனி பிரஸ்லர் – பொறியியல் பட்டதாரி. திருச்சி மாவட்டம் பொன்மலையைச் சேர்ந்தவர். பிறப்பு 1995. தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வரும் இவருக்கு நவீனத்துவ மயக்கங்களின் மீது கோபமிருக்கிறது. 2023இல் பாலைநிலவன் : தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பின் ஆசிரியராகவும், 2024இல் ககனம் என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். மேலும் நிறுவனமயப்படும் எப்பொருள் மீதும் கல்லெறிவது இவருக்குப் பிடித்த வேலையாகவிருக்கிறது.








Leave a Reply