அறுவடைக் காலத்தில் நாஞ்சில்கள் (கலப்பைகள்) தூங்குவதாகவும் உலகத் தொழில்கள் அற்றுப்போவதாகவும் சித்தரிக்கும் ஒரு அகநானூற்றுப் பாடல் உண்டு. ஆனால் காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரிக்கும்போது, அறுவடைக் காலம் மட்டுமல்லாது சாதா நாட்களிலும் நாஞ்சில்கள் துஞ்சிவிடக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர். அதன் ஒரு அங்கமாக, 2025 நவம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவினர் ஆசியா பசிபிக் காலநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், உலகின் மொத்தக் காலநிலைப் பேரிடர் பாதிப்பில் கால் பங்கு விவசாயத்தைத்தான் பாதித்திருக்கிறது. ஆகவே இந்த அறிக்கை மிகவும் முக்கியமானது.
ஆசியா பசிபிக் என்பது மேற்கு பசிபிக் கடலை ஒட்டிய பகுதிகளைக் குறிக்கும் ஒரு புவி அரசியல் மற்றும் பொருளாதார வரையறை. இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற 51 நாடுகள் இதில் அடங்கும். இந்த மொத்தப் பரப்பின் காலநிலைச் சூழலை, குறிப்பாக வெப்பநிலையால் இந்த நாடுகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பை இந்த அறிக்கையில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய அதீத வெப்பநிலை கொண்ட தொடர் நாட்களின் எண்ணிக்கை, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு, ஒட்டுமொத்த விவசாயத் தொழிலில் வேலைவாய்ப்பு பற்றிய தரவுகள், வேளாண்மை செய்யப்படும் நிலப்பரப்பின் விகிதம் ஆகிய பல தகவல்கள் சேகரித்து, விவசாயத்தை அதிக வெப்பம் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைக் கணக்கிட்டிருக்கிறார்கள். பொதுவாக இந்தப் பகுதியில் நிலவிவந்த சராசரி வெப்பநிலை, உமிழ்வுகள் அதிகமாக இருந்தால் ஏற்படவிருக்கும் வெப்பநிலை, குறைவான உமிழ்வுகளால் ஏற்படக்கூடிய வெப்பநிலை என்று மூன்று நிலைகளையும் ஒப்பிட்டிருக்கிறார்கள்.
வெப்பநிலை அதிகரிக்கும்போது பயிர் உற்பத்தி குறையும், கால்நடை வளம் பாதிக்கப்படும். ஒருவர் சராசரியாக எவ்வளவு நேரம் வயலில் நின்று வேலை செய்யமுடியும் என்ற சராசரி வெகுவாகக் குறையும். கிராமப்புறப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடையும். 2022ல் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டதும், அதனால் இந்தியா கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்ததும் பலருக்கு நினைவிருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் அடிக்கடி வரும் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.
அக்டோபர் 2024ல் இந்தியாவின் சராசரி வெப்பநிலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இந்தியாவின் சராசரி வெப்பநிலை 25.75 டிகிரி செல்சியஸாக இருந்தது. பல இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் மேலாக வெயில் கொளுத்தியது. ஒட்டுமொத்தமாக 17 மாநிலங்களில் 700 பேர் வெயிலால் மட்டுமே இறந்தார்கள். நாற்பத்தி நான்காயிரம் பேர் வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானார்கள். இத்தனைக்கும் அது கோடைகாலம் அல்லாத, பொதுவாக மழைக்காலமாகக் கருதப்படும் அக்டோபர் மாதம். இதைக் கவனித்தால் நிலைமை எவ்வளவு தீவிரமானதாக மாறியிருக்கிறது என்பது புலப்படும். 2024ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தமாக 25 வெப்ப அலைகள் ஏற்பட்டிருக்கின்றன. சராசரியாக 19.8 வெப்ப அலை நாட்கள் இருந்திருக்கின்றன. இதனால் அந்த ஆண்டில் மட்டுமே பலரது வேலைநேரம் குறைந்திருக்கிறது. குறிப்பாக விவசாயப் பணி செய்பவர்களின் வேலைநேரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 57% மாவட்டங்கள் அதீத வெப்பநிலையால் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என மற்றொரு அறிக்கை எச்சரித்திருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் நாம் இந்த அறிக்கையை அணுகவேண்டியிருக்கிறது. அதிகமான வெப்பத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய ஐந்து ஆசியா பசிபிக் நாடுகளை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. எதிர்காலத்தில், வருடத்துக்கு 300 நாட்கள் அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்றும், அதிகரித்துவரும் வெப்பநிலையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கென்றே தனி அதிகாரிகளை நியமிக்காவிட்டால் இதைச் சமாளிக்கமுடியாது என்றும் இந்த அறிக்கை தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறது. விவசாயத் தொழிலாளர்களின் செயல்திறன் 27% குறையும் என்றும் இது வேளாண்மையைப் பாதிக்கும் என்றும் ஆய்வுக்குழுவினர் கூறுகிறார்கள்.
2024 அக்டோபரில் வெப்பஅலைகளை “மாநிலப் பேரிடராக” (State Specific Disaster) தமிழ்நாடு அரசு அறிவித்தது. வெப்ப அலையை ஒரு பேரிடராகக் கருதுவதன்மூலம் அதற்கான நிதி உதவி, தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா போன்ற பல மாநிலங்கள் வெப்ப அலையை ஒரு மாநிலப் பேரிடராக அறிவித்திருக்கின்றன.
இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் 2024 சட்டத்திருத்தங்களில் வெப்ப அலை ஒரு பேரிடராக இன்னும் சேர்க்கப்படவில்லை. “வெப்ப அலைகளை ஒரு பேரிடராக இந்தச் சட்டம் அறிவித்தால் வெப்ப அலை மேலாண்மைக்கான நிதி உதவி கணிசமாக உயரும்” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஷிவானி தாஸ். இந்தப் பரிந்துரையை முன்வைக்கும் அதே நேரம், வெப்ப அலைகளையும் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகளையும் சரியாக வரையறுப்பதில் நிலவிவரும் குழப்பங்களையும் பட்டியலிடுகிறார். இவற்றை சரிசெய்தால் மட்டுமே சரியான மேலாண்மை சாத்தியப்படும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
வெப்பநிலைக்கான பொது வரையறைகளைத் திருத்துவது, வெப்பம் சார்ந்த பாதிப்புகளுக்கான நிதியை அதிகரிப்பது, வெப்பம் சார்ந்த பாதிப்புகளுக்கான வேலையைச் செய்யவேண்டிய சரியான துறைகளை முடிவுசெய்து பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவது, வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மருத்துவத் துறையினருக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவை அடுத்தகட்ட நடவடிக்கைகள் என ஷிவானி தாஸ் பட்டியலிடுகிறார்.
காலநிலை செயல்பாடுகள்மூலம் மட்டும் காலநிலைப் பிரச்சனையை முற்றிலும் தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை கைநழுவிப் போய்விட்டது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கும் அதே நேரத்தில், காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளவும் நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். சரியான நிர்வாகம், ஊழலால் அரிக்கப்படாத நிதி உதவி மற்றும் நிதி ஒதுக்கீடு, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கொள்கை முடிவுகள், புதிய செயல்பாடுகளுக்கான போதுமான பயிற்சி, விழிப்புணர்வு ஆகியவை அனைத்தும் துல்லியமாக இருந்தால்மட்டுமே பிரச்சனையின் வீரியத்தைக் குறைக்கமுடியும். நாஞ்சில்களானாலும் அவற்றின் நவீன நண்பர்களான டிராக்டர்களானாலும், அவை அறுவடைக் காலத்தில் மட்டுமே துஞ்சலாம். பிற நாட்களில் அவை உறங்கிப்போவது நம் உணவுப்பாதுகாப்புக்கு நல்லதல்ல. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவேண்டுமானால் நாம் அறிவியலைத் துணைக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.
நாராயணி சுப்ரமணியன்
கும்பகோணத்தில் பிறந்தவர். உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது, பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் கடல்சார் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். பிரபல இதழ்களிலும், சிறுவர்களுக்கான அறிவியல் இதழ்களிலும் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும்,நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply