ஆங்கில மூலம் : கிளார்க் அஷ்டன் ஸ்மித்
தமிழில் : எழில் சின்னதம்பி
“பழங்கால மந்திரவாதிகள் அவனைப் பற்றி அறிந்துகொண்டு, அவனுக்குக் ‘குவாச்சில் உத்தவுஸ்’ என்று பெயரிட்டனர். அவனை வெகு அரிதாகவே வெளிக்கொண்டு வர முடியும். ஏனெனில், அவன் வெளியுலகத்தின் வட்டங்களுக்கு அப்பால், வடிவமற்ற காலத்திலும் இடத்திலும் உள்ள இருண்ட வெறுமையில் வாழ்பவன். அவனை இவ்வுலகிற்கு வரவைக்கும் மந்திரச்சொல் மிகவும் அச்சம் தரும். அந்தச் சொல் சிந்தனையில் மட்டுமே சொல்லப்பட வேண்டும், வார்த்தையால் அல்ல. ஏனெனில் குவாச்சில் உத்தவுஸ் என்பவன் ஓர் உச்சபட்சமான சிதைவு. மேலும், அவன் வரும் ஒருசிறு கணமும் பல யுகங்கள் கடந்து செல்வது போல இருக்கும்; அவனது காலடி மிதியைச் சதையோ, கல்லோ – எந்தப் பொருளும் தாங்கமுடியாது. அவன் மிதித்ததெல்லாம் அணு அணுவாக உடைந்து துகள் துகளாக மாறிவிடும். இதன் காரணமாக, சிலர் அவனைத் ‘தூசியாக்கி’ அல்லது ‘துகளாக்கி’ என்ற பெயரில் அழைத்து வந்துள்ளனர்.”
‘கார்னாமகோஸின் ஏற்பாடுகள்’ என்கிற புத்தகத்திலிருந்து
நிலைகுலைவிக்கச் செய்யும் பல வாத-விவாதங்களைத் தனக்குள்ளே நிகழ்த்தினான் அவன்; அவனுக்குள் தோன்றியிருந்த மங்கலான, உடலற்ற, படை போலப் பரந்திருந்த பயங்களை விரட்டுவதற்குப் பெருமுயற்சிகள் செய்தான்; கடைசியில் அவசரமாக நீங்கிச்சென்ற தனது வீட்டிற்கே திரும்பினான் ஜான் செபாஸ்டியன். அவன் மூன்று நாட்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே இருந்தான்; தாராளமான வருமானம் கொண்டிருந்த அவன், தனிமையில் இருக்க விரும்பி, ஒரு பழைய மாளிகையை வாங்கி, அங்கே தனது படிப்பு விசயங்களில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவன். அவன் வீட்டை விட்டு வெளியேறியிருந்த அந்த மூன்று நாட்களும் அவனது படிப்புக்கு ஒரு தடையை ஏற்படுத்தியிருந்தன. அவன் ஏன் அந்த வீட்டிலிருந்து தப்பித்துச் சென்றான் என்பதற்கான காரணத்தை அவனால் முழுமையாக வரையறுக்க முடியவில்லை. ஆயினும், தப்பித்துச் செல்வது அவனுக்கு அவசியமாகவே தோன்றியது. அவனை வெளியே விரட்டிய ஒரு கொடூர அவசரம் இருந்தது; ஆனால் இப்போது, திரும்பி வீட்டுக்குச் செல்ல முடிவு செய்ததால், அந்த அவசரம் புத்தகங்களில் அவன் செலவளிக்கும் அதிக நேரம் காரணமாக மனரீதியான பிரச்சினையாக மாறிவிட்டது. அவன் சில விஷயங்களைக் கற்பனை செய்திருந்தான்; ஆனால் அந்தக் கற்பனைகள் அபத்தமானதாகவும், அடிப்படையற்றதாகவும் இருந்தன.
அவனைத் தொந்தரவு செய்த நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையல்ல என்றாலும், குழம்பிய அவனது மனதில் தோன்றிடாத இயற்கையான தீர்வு ஒன்று இருந்திருக்க வேண்டும். புதிதாக வாங்கிய ஒரு நோட்டுப் புத்தகம் திடீரென மஞ்சள் நிறமாக மாறுவதும், அதன் ஓரங்கள் நொறுங்குவதும், சந்தேகத்திற்கு இடமின்றி, அந்தக் காகிதத்தின் ஒரு குறைபாட்டினால்தான் இருக்கும். மேலும், அவன் எழுதிய குறிப்புகள் ஒரே இரவில் பல நூற்றாண்டுப் பழமையான எழுத்துகளைப் போல மங்கலாக மாறியதற்குக் காரணம் மலிவான, குறைபாடுள்ள இரசாயனங்கள் கொண்ட மையின் விளைவாகத்தான் இருக்கக் கூடும். சில மரச்சாமான்கள் மற்றும் மாளிகையின் சில பகுதிகளில் வெளிப்பட்ட வெறுமையான, நொறுங்கிய, பூச்சி அரித்த பழங்காலத் தோற்றத்துக்குக் காரணம், அவன் தனது இருண்ட, ஈர்க்கக்கூடிய ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் கவனிக்காமல் இருந்ததே. மேலும், பல ஆண்டுகளாக இடைவிடாமல் உழைத்து, தன்னை அடைத்து வைத்திருந்த இந்த ஆராய்ச்சியே அவனது முன்கூட்டிய வயோதிகத்திற்குக் காரணம். அவன் தப்பித்து ஓடிய அன்று காலையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, ஒரு சுருங்கிய பதப்படுத்திய மம்மியின் தோற்றத்தில் தான் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு அதிர்ச்சியடைந்தான். வேலைக்காரன் டிம்மர்ஸ் – செபாஸ்டியனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே டிம்மர்ஸ் வயதானவன்தான். சமீபத்தில் டிம்மர்ஸிடம் ஒரு தீவிரத் தளர்ச்சியை செபாஸ்டியன் கண்டான்; அது உடல்நிலை சரியில்லாத அவனது நரம்புகளின் மிகைப்படுத்தலால் மட்டுமே இருக்கக் கூடும். எந்த நேரத்திலும் கல்லறைக்குச் சிதைவுக்குள் விழுந்துவிடுவானோ என்பதைப் போலத் தளர்ந்திருந்தான் டிம்மர்ஸ்.
அவனைத் தொந்தரவு செய்த அனைத்து விசயங்களையும், தான் ஆழ்ந்து ஆய்வு செய்த காட்டுமிராண்டித்தனமான, அறிந்திராத நிலங்களின் தொன்மைக்கதைகள், பேய்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவற்றுடன் சம்மந்தப் படுத்தாமல் அவனால் விளக்கிச் சொல்ல முடியும். அவன் விசித்திரமான திகிலுடன் ஆழ்ந்து யோசித்து ஆராய்ந்த ‘கார்னாமகோஸின் ஏற்பாடுகள்’ எனும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தவை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த பைத்தியக்கார மந்திரவாதிகள் மட்டுமே நிகழ்த்தியிருக்க முடியும்.
ஆனால் செபாஸ்டியன் இந்தக் கோட்பாடுகள் திட்டவட்டமானவை என்று நம்பினான். சூரியன் மறைந்ததும் தனது வீட்டிற்குத் திரும்பினான். தேவதாரு மரங்கள் அடர்ந்து இருட்டிய வெளிப்புறத்தைக் கடந்து, வீட்டின் முன் படிகளில் அவன் ஏறியபோது அவனுக்கு நடுக்கமோ தயக்கமோ இல்லை. படிகளில் புதிதாக ஏதோ சேதாரம் ஏற்பட்டிருப்பதாக அவன் நினைத்தான்; ஆனால் அதை அவனால் உறுதி செய்ய முடியவில்லை. மேலும், அவன் அருகில் சென்றபோது வீடு சற்றே சாய்வாக இருப்பதைப்போல் தோன்றியது, ஒருவேளை அடித்தளத்தின் இடிபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இருள் சூழ்ந்ததால் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரமை இது என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
விளக்குகள் எதுவும் ஏற்றப்பட்டிருக்கவில்லை. செபாஸ்டியன் இதனால் பெரிதாக ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், டிம்மர்ஸ் தனியாக வீட்டில் இருந்தால், விளக்கு ஏற்றும் நேரத்திற்குப் பிறகும் ஒரு வயதான ஆந்தையைப் போல இருட்டில் தள்ளாடித் திரிவான் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் செபாஸ்டியன் எப்போதுமே இருட்டு அல்லது அடர்ந்த நிழலைக் கூட விரும்பாதவன். சமீபகாலமாக இந்த வெறுப்பு அவனுக்குள் அதிகரித்திருந்தது. பகல் வெளிச்சம் மங்கத் தொடங்கியவுடன் வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் அவன் ஒளிரச் செய்வான். இப்போது டிம்மர்ஸின் கவனக்குறைவைக் கண்டு முணுமுணுத்தவாறே கதவைத் திறந்து, கூடத்தின் மின்விளக்கை ஏற்றும் இழுவிசையை நோக்கிக் கையை நீட்டினான்.
உள்மனதில் ஏற்பட்டிருந்த விரும்பாத, ஏற்கமுடியாத ஒரு பதட்டத்தின் காரணமாகவோ என்னவோ, சில நிமிடங்கள் இழுவிசையைத் தேடித் தடுமாறினான். ஆனால் அதனைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை. அந்தப் பெரிய கூடம் வித்தியாசமான இருட்டாக இருந்தது. அவனுக்குப் பின்னால் வாசலில் இருந்த உயரமான தேவதாரு மரங்களுக்கிடையே நுழைந்த மறையும் சூரியனின் சாம்பல் நிற ஒளிக் கீற்று, வீட்டின் நுழைவாயிலைத் தாண்டி ஊடுருவ முடியாதது போலத் தோன்றியது. அவனால் எதையும் பார்க்க முடியவில்லை; இறந்த யுகங்களின் இரவு அந்தக் கூடத்தில் தஞ்சம் புகுந்தது போல் இருந்தது. அவன் விளக்கின் பொத்தானைத் தேடிக் கையால் துழாவிக்கொண்டிருந்தபோது, அவனது நாசியை உலர்ந்த, காரமான ஒரு வாசனை தாக்கியது. அது பழமையான தூசியின் வாசனையைப் போலவும், நீண்ட காலமாகச் சிதைந்து அழுகிய சடலங்களின் கெட்ட வாசனையைப் போலவும் உடைந்து நொறுங்கித் தூளான சவப்பெட்டிகளின் வாசனையைப் போலவும் இருந்தது.
கடைசியாக அவன் மின்விசையைக் கண்டுபிடித்தான்; ஆனால் விளக்குகள் மங்கலாக, போதிய வெளிச்சமின்றி எரிந்தன. மேலும் மின்சுற்றில் ஏதோ கோளாறு இருப்பது போல் விளக்குகள் மினுக்கி எரிந்ததை அவன் கண்டான். இருப்பினும், வீடு தான் விட்டுச் சென்றபோது இருந்ததைப் போலவே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இது அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ஒருவேளை, கருவாலி மரப் பலகைகள் சிதைந்து நொறுங்குவதையும், தரைவிரிப்பு பூச்சிகளால் அரிக்கப்பட்டுக் கிழிந்து போவதையும், நடக்கும்போது சிதைந்த பலகைகள் உடைந்து விடுவதையும் கண்டுவிடப்போகிறேனோ என்று அவன் ஆழ்மனதில் அஞ்சியிருக்கலாம்.
டிம்மர்ஸ் எங்கே போய்விட்டான் என இப்போது அவன் யோசித்தான். அந்த வயதான வேலைக்காரன், அவனது வயது காரணமாகத் தள்ளாடிய போதிலும் எப்போதும் விரைவாக வருபவன்; மேலும் அவன் தன் எஜமானன் நுழைந்த சத்தத்தைக் கேட்கவில்லை என்றாலும், விளக்குகளை எரியவிட்டபோது செபாஸ்டியனின் வருகையை அவன் உணர்ந்திருப்பான். ஆனால், செபாஸ்டியன் மிகுந்த கவனத்துடன் செவிமடுத்தும், டிம்மர்ஸின் வழக்கமான தள்ளாடும் காலடிச் சத்தம் கேட்கவில்லை. ஒரு துக்ககரமான, அசைவற்ற திரைச்சீலையைப் போல எல்லா இடங்களிலும் அமைதி சூழ்ந்திருந்தது.
ஒருவேளை இதற்கு ஒரு பொதுவான விளக்கம் இருக்கலாம் என்று செபாஸ்டியன் நினைத்தான். டிம்மர்ஸ் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்றிருக்கலாம்; ஒருவேளை உணவுப் பொருட்களை வாங்குவதற்காகவோ, அல்லது தன் முதலாளியிடமிருந்து ஒரு கடிதம் வரும் என்ற நம்பிக்கையிலோ சென்றிருக்கலாம். மேலும், அவன் ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் டிம்மர்ஸைப் பார்க்காமல் இருந்திருக்கலாம்; ஒருவேளை அந்த வயதான மனிதன் நோய்வாய்ப்பட்டு, உதவியற்ற நிலையில் இப்போது தன் அறையில் படுத்திருக்கலாம். இந்த எண்ணத்தால் உந்தப்பட்டு, தனது மாளிகையின் பின்புறம், தரைத்தளத்தில் இருந்த டிம்மர்ஸின் படுக்கையறைக்கு நேராகச் சென்றான் செபாஸ்டியன். அந்த அறை காலியாக இருந்தது. மேலும், படுக்கை சுத்தமாக இருந்தது. முந்தைய இரவிலிருந்து அது பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒரு பயங்கரமான கனவு அவனது நெஞ்சிலிருந்து நீங்கியது போல் நிம்மதிப் பெருமூச்சு விட்ட செபாஸ்டியன், தனது முதல் யூகமே சரியாக இருந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
இப்போது, டிம்மர்ஸ் திரும்புவதற்காகக் காத்திருந்த செபாஸ்டியன், மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்யத் துணிந்து, உடனடியாகத் தனது படிப்பறைக்குச் சென்றான். எதைக் கண்டு பயந்தான் என்பதைத் தனக்குத்தானே அவன் ஒப்புக்கொள்ளவில்லை; ஆனால் முதல் பார்வையில், அந்த அறை மாறாமல் இருந்தது. அவனது அவசரப் பயணத்திற்குமுன் இருந்தபடியே அனைத்தும் இருந்தன. அவனது எழுதும் மேசையில் இருந்த குழப்பமான, உயரமான கையெழுத்துப் பிரதிகள், தொகுதிகள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை அவனது கைகளால் மட்டுமே தொடப்பட்டிருந்தன. மேலும், அவனது புத்தக அலமாரிகளில் இருந்த பிசாசு வித்தைகள், அமானுடுட வித்தைகள், மாயாஜாலம் போன்ற, ஏளனம் செய்யப்பட்டுத் தடை செய்யப்பட்ட அறிவியல்களைப் பற்றிய அனைத்து வகைப் புத்தகங்களும் கலைக்கப்படாமல் அப்படியே இருந்தன. கனமான புத்தகங்களைப் படிக்க அவன் பயன்படுத்திய பழைய வாசிப்புச் சாய்வுமேடையில், கரடுமுரடான தோல் அட்டைகள் மற்றும் மனித எலும்புகளால் ஆன கொக்கிகளைக் கொண்ட, அவனது மனதை மிகவும் பயமுறுத்திய ‘கார்னாமகோஸின் ஏற்பாடுகள்’ என்கிற அந்தப் புத்தகம் அவன் விரித்து வைத்த பக்கத்திலேயே திறந்திருந்தது.
பின்னர், அவன் வாசிப்புச் சாய்வுமேடைக்கும் மேசைக்கும் இடையே முன்னேறிச் சென்றபோது எல்லாவற்றிலும் இருந்த, புரிந்துகொள்ள முடியாத தூசியை முதன்முறையாகக் கவனித்தான். அந்தத் தூசு எங்கும் படர்ந்திருந்தது; இறந்த அணுக்களின் துகள் போன்ற ஒரு மெல்லிய சாம்பல் நிறத் தூசு. அது அவனது கையெழுத்துப் பிரதிகளின் மீது ஓர் அடர்த்தியான படலமாகப் படிந்திருந்தது. நாற்காலிகள், விளக்குக் குமிழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் மீது அடர்த்தியாகப் படிந்திருந்தது. மேலும், ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டிருந்த தரைவிரிப்புகளின் செழுமையான கசகசாப்பூ போன்ற சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள், அந்தத் தூசிக்குவிப்பின் காரணமாக மங்கலாகி இருந்தன. அவன் வீட்டிலிருந்து வெளியேறிப்போய் பல பாழடைந்த ஆண்டுகள் அந்த அறை வழியாகச் சென்றது போலவும், அழிந்துபோன அனைத்துப் பொருட்களின் தூசிகளை அவற்றின் சவத்துணி போன்ற ஆடைகளிலிருந்து உதிர்த்தது போலவும் இருந்தது. அதன் மர்மம் செபாஸ்டியனை நடுங்கச் செய்தது. ஏனெனில், அந்த அறை மூன்று நாட்களுக்கு முன்புதான் சுத்தம் செய்யப்பட்டது என்றும், அவன் இல்லாத நேரத்தில் ஒவ்வொரு காலையிலும் மிக நுட்பமான கவனத்துடன் அந்த இடத்தை டிம்மர்ஸ் சுத்தம் செய்திருப்பான் என்றும் செபாஸ்டியனுக்குத் தெரியும்.
இப்போது அந்தத் தூசு அவனைச் சுற்றி ஒரு மெல்லிய, சுழலும் மேகமாக எழுந்தது. நடைக்கூடத்தில் அவனுக்கு ஏற்பட்ட அதே உலர் வாசனையை, கற்பனை செய்ய முடியாத பழமையான சிதைவின் வாசனையை அந்தத் தூசு அவனது நாசியில் நிரப்பியது. அதே நேரத்தில், ஏதோ ஒருவகையில் அறைக்குள் ஒரு குளிர்ந்த காற்று நுழைந்ததை அவன் உணர்ந்தான். சன்னல்களில் ஒன்று திறந்திருக்கலாம் என்று அவன் நினைத்தான்; ஆனால் அவன் நிமிர்ந்து பார்த்தபோது சன்னல்கள் இறுக்கமாக மூடப்பட்டிருப்பதையும், அவற்றில் திரைச்சீலைகள் இறுக்கமாக மறைத்துக் கட்டப்பட்டிருப்பதையும் அறிந்தான். அவனுக்குப் பின்னால் இருந்த கதவும் மூடப்பட்டிருந்தது. அந்தக் காற்று, புலனாகாத பேயின் பெருமூச்சு போல மென்மையாக இருந்தது. ஆனால் அது எங்கெல்லாம் சென்றதோ, அங்கெல்லாம் மெல்லிய, எடையற்ற தூசிகள் மேலேறி, காற்றை நிரப்பி, மிகவும் மெதுவாக மீண்டும் தரையில் படிந்தன. செபாஸ்டியன் ஒரு விசித்திரமான திகிலை உணர்ந்தான். வரைபடம் இல்லாத பரிமாணங்களிலிருந்து வீசியதைப் போல, மறைக்கப்பட்ட அழிவின் பிளவுகளின் வழியாக ஒரு காற்று அவன் மீது வீசியதைப் போல அவன் உணர்ந்தான். அதே சமயம் வலுவான இருமல் அவனைத் தாக்க, தொடர்ந்து இருமினான்.
அந்தக் காற்று எங்கிருந்து வருகிறதென்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அமைதியிழந்து அங்கும் இங்கும் நடந்தபோது, அவனது பார்வை மேசையால் இதுவரை மறைக்கப்பட்டிருந்த ஒரு நீண்ட, தாழ்வான சாம்பல் நிறத் தூசுக் குவியலின் மீது விழுந்தது. அது அவன் எழுதும்போது எப்போதும் அமரும் நாற்காலிக்கு அருகில் கிடந்தது. அந்தக் குவியலுக்கு அருகில், டிம்மர்ஸ் தினமும் வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் இறகுத் துடைப்பான் இருந்தது.
ஒரு பெரிய, அபாயகரமான குளிர்ச்சி தன் முழு உடலையும் ஆக்கிரமித்துவிட்டது போல் செபாஸ்டியன் உணர்ந்தான். அவனால் சில நிமிடங்கள் அசைய முடியவில்லை. விளங்கிக் கொள்ள முடியாத அந்தத் தூசிக்குவியலை உற்றுப் பார்த்தபடி நின்றான். அந்தக் குவியலின் நடுவில், ஒரு மங்கலான பள்ளத்தை அவன் கண்டான். அது மிகச் சிறிய காலடிச்சுவடாக இருந்திருக்கலாம்; ஆனால் காற்றின் வீச்சால் பாதி அழிந்திருந்தது. அறைக்குள் இருந்த தூசியின் பெரும்பகுதியைப் பறக்கவிட்டுச் சிதறடித்துவிட்டிருந்தது அந்தக் காற்று.
இறுதியாக, செபாஸ்டியன் தன்னிலைக்கு வந்து அவனால் உடலை அசைக்க முடிந்தது. அவனைத் தூண்டிய உந்துதலை உணராமல், அவன் அந்த இறகுத் துடைப்பானை எடுக்கக் குனிந்தான். ஆனால் அவனது விரல்கள் அதைத் தொட்ட அதே நொடியில், துடைப்பானின் கைப்பிடியும் இறகுகளும் நுண்ணிய தூளாக நொறுங்கிப் போயின. அது ஒரு தாழ்வான குவியலாகத் தரையில் படிந்தது. அந்தக் குவியலின் தோற்றம் துடைப்பத்தின் தோற்றத்தைப்போல உருவரையைக் கொண்டிருந்தது.
மிகவும் தளர்வாக உணர்ந்தான் செபாஸ்டியன். ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இடையில், முதுமையின் சுமையும் இறப்பின் சுமையும் அவனை நசுக்கிவிட்டதைப் போலத் தோன்றியது. விளக்கு வெளிச்சத்தில் அவனது கண்களுக்கு முன்னால் சுழலும் நிழல்கள் தோன்றின. உட்காரவில்லை என்றால் தான் உடனடியாக மயங்கி விழுந்து விடுக்கூடும் என்பதை உணர்ந்தான். அருகில் இருந்த நாற்காலியைப் பிடிக்க அவன் கையை நீட்டினான் – ஆனால் அந்த நாற்காலி, அவனது தொடுதலில், உடனடியாக இலேசான, கீழ்நோக்கிச் செல்லும் தூசியின் மேகங்களாக நொறுங்கி விழுந்தது.
அதன்பிறகு – எவ்வளவு நேரத்திற்குப் பிறகு என்று அவனால் சொல்ல முடியவில்லை – ‘கார்னாமகோஸின் ஏற்பாடுகள்’ என்ற அந்தப் புத்தகம் திறந்திருந்த சாய்வு மேடைக்கு முன்னால் இருக்கும் உயரமான நாற்காலியில் தான் அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த நாற்காலி தனது தொடுதலில் நொறுங்கி விழாமல் இருந்ததில் அவனுக்கு லேசான ஆச்சரியம் ஏற்பட்டது. அந்தச் சபிக்கப்பட்ட வீட்டிலிருந்து விரைவாக, உடனடியாக வெளியேற வேண்டும் என்ற அவசரச் சிந்தனை அவனுக்கு மறுபடியும் ஏற்பட்டது. ஆனால், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதாகவும், சோர்வடைந்து, பலவீனமாக இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. மேலும், எந்த விசயமும் பெரிதாகத் தெரியவில்லை – அவன் உணர்ந்த தனது கொடூர விதி கூட அவனுக்கு முக்கியமாகப் படவில்லை.
இப்போது, அவன் பாதி திகில், பாதி மயக்க நிலையில் அமர்ந்திருந்தான். அவனது கண்கள் அவனுக்கு முன்னால் இருந்த மாயப் புத்தகத்தின் மீது ஈர்க்கப்பட்டன. அது கார்னாமகோஸ் என்ற தீய மெய்யுணர்வாளன் எழுதிய புத்தகம். அந்தப் புத்தகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிரேக்க-பாக்திரியக் கல்லறையிலிருந்து மீட்கப்பட்டு, ஒரு மதத்தை விட்டு வெளியேறிய துறவியால் அசல் கிரேக்க மொழியில், ஒரு கொடூர அரக்கனின் இரத்தத்தால் நகலெடுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில், பழங்காலத்தைய மாபெரும் மந்திரவாதிகளின் வரலாறுகள், பூமிக்குரிய பேய்களின் கதைகள், விண்வெளியைக் கடந்த பேய்களின் கதைககள், அந்தப் பேய்களை வரவழைக்கவும் கட்டுப்படுத்தவும் விரட்டவும் தேவையான உண்மையான மந்திரச்சொற்கள் போன்றவை இருந்தன. அத்தகைய ஆய்வில் ஆழ்ந்த மாணவனான செபாஸ்டியன், அந்தப் புத்தகம் வெறும் ஓர் இடைக்காலக் கதை என்று நீண்ட காலமாக நம்பியிருந்தான். பழைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய நூல்களை விற்கும் ஒரு வியாபாரியின் அலமாரியில் இந்தப் பிரதியைக் கண்டபோது, அவன் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தான். இந்தப் புத்தகத்தின் இரண்டு பிரதிகள் மட்டுமே இருந்ததாகவும், இரண்டாவது பிரதி பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த ஸ்பானிய விசாரணையில் அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
தீய சகுனம் கொண்ட இறகுகள் அதன் மீது பறந்தது போல, விளக்கு சுடர்நடுங்கி மினுக்கத் தொடங்கியது. நிழல் போன்ற அச்சங்களைத் தூண்டிய அந்தத் தீய, அபாயகரமான பத்தியை மீண்டும் படித்தபோது, செபாஸ்டியனின் கண்கள் நீர் நிறைந்து மங்கலாகின.
“குவாச்சில் உத்தவுஸ் அரிதாகவே வருகிறான். ஆனால் அவனது வருகை, எப்போதும் உச்சரிக்கப்படும் மந்திரத்துக்கோ, செப்படி வித்தையில் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் நட்சத்திர உருவத்திற்கோ பதிலளிக்காது. உண்மையில், ஒரு சில மந்திரவாதிகள் மட்டுமே அத்தகைய கொடூரமான ஆவியை அழைப்பார்கள். ஆனால், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உச்சாடனங்களைத் தனது அறையின் அமைதியில், தனக்குத்தானே படிக்கும் ஒருவனின் இதயத்தில் அழிவின் சிறிய ஆசை இருந்தாலும், அவன் பெரிய ஓர் அபாயத்திற்கு ஆளாக நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி வெளிப்படையாகவோ மறைவாகவோ, மரணத்தின் ஆசை இருப்பவனை நோக்கிக் குவாச்சில் உத்தவுஸ் வரக்கூடும். அவன் உடலை நித்திய தூசியாக மாற்றி, ஆன்மாவை என்றென்றைக்கும் கரைந்த ஒரு ஆவியாக மாற்றுவான். மேலும் குவாச்சில் உத்தவுஸின் வருகையை, சில அடையாளங்களால் முன்கூட்டியே அறியலாம். குவாச்சில் உத்தவுஸை அழைப்பவரின் உடலிலும், அவனருகில் இருப்பவர்களின் உடலிலும் திடீரென்று முதுமையின் அறிகுறிகள் தோன்றும்; அவனது வீடும், அவன் தொட்ட பொருட்களும், அகாலச் சிதைவடைந்து பழமையின் அடையாளங்களாகக் காட்சி அளிக்கும்…”
செபாஸ்டியன் மேற்கண்ட வாக்கியங்களைப் படித்தபோது உரக்க முணுமுணுத்துக் கொண்டே படித்தான் என்பது அவனுக்குத் தெரியாது; அதன்பின் வந்த குரூரமான மந்திரச் சொற்களையும் அவன் முணுமுணுக்கிறான் என்று தெரியாது. அவனது எண்ணங்கள் ஒரு குளிர்ந்த, உறைந்த ஊடகம் வழியாக ஊர்ந்து செல்வது போல இருந்தன. டிம்மர்ஸ் கிராமத்திற்குச் செல்லவில்லை என்ற கொடூர உண்மை அவனுக்கு மங்கலாகப் புரிந்தது. வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் டிம்மர்ஸை அவன் எச்சரித்திருக்க வேண்டும்; கார்னாமகோஸ் புத்தகத்தை மூடிப் பூட்டி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், டிம்மர்ஸ் தனது முதலாளியின் அமானுட ஆய்வுகள் குறித்து ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தான். டிம்மர்ஸ் கார்னாமகோஸின் கிரேக்க மொழியை நன்றாகப் படிக்கக் கூடியவன். உச்சகட்ட ஊழலின் பிசாசான குவாச்சில் உத்தவுஸ் வெளி அண்டத்திலிருந்து பதிலளிக்கச் செய்யும் ஆன்மாவை அழிக்கும் அந்த மந்திரத்தையும் படிக்கக் கூடியவன். அந்தச் சாம்பல் நிறத் தூசிக்கும்பலின் தோற்றம், அந்த மர்மமான நொறுங்குதல்களுக்கான காரணம் ஆகியவற்றை செபாஸ்டியன் மிக நன்றாக யூகித்தான்.
வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உந்துதலை அவன் மீண்டும் உணர்ந்தான். ஆனால் அவனது உடல், அவனது விருப்பத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கும் உலர்ந்த, இறந்த ஒரு கனவு போல இருந்தது. இப்போது மிகத் தாமதமாகிவிட்டது என்று அவன் எண்ணினான். ஏனெனில் விதியின் அறிகுறிகள் அவனைச் சுற்றியும், அவன் மீதும் குவிந்துவிட்டன. ஆனால் அவனது இதயத்தில் மரணம் மற்றும் அழிவுக்கான சிறிய ஆசையும் நிச்சயமாக இருந்ததில்லை. அவன் மனித வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருண்ட மர்மங்களை ஆராய்வதை மட்டுமே விரும்பியிருந்தான். அவன் எப்போதும் எச்சரிக்கையாகவே இருந்தவன். மந்திரச் சுழல்களையும் ஆபத்தான ஆவிகளையும் வரவழைப்பதில் அவன் ஈடுபட விரும்பியதில்லை. தீய ஆவிகள், கோபம், அழிவு மற்றும் நாசத்தின் ஆவிகள் இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், தனது சொந்த விருப்பத்தின் பேரில், அவனது இருள் சூழ்ந்த ஆழங்களிலிருந்து அவற்றில் எதையும் அழைத்திருக்க மாட்டான்.
அவனது மயக்கநிலையும் பலவீனமும் அதிகரிப்பது போல அவனுக்குத் தோன்றியது. மூச்சை இழுத்து விடும் நேரத்தில் முழு ஐந்து ஆண்டுகளின் தொகுப்பு, முழுப் பத்தாண்டு கால முதுமை அவன் மீது விழுந்துவிட்டது போல இருந்தது. அவனது எண்ணங்களின் தொடர்ச்சி அவ்வப்போது துண்டிக்கப்பட்டது, அதை அவன் சிரமத்துடன் மீண்டும் பிடித்தான். அவனது நினைவுகள், அவனது பயங்கள் கூட, ஏதோவொரு மறதியின் இறுதி விளிம்பில் தடுமாறுவது போலத் தோன்றின. மந்தமான காதுகளால், வீட்டில் எங்கோ மரக்கட்டைகள் உடைந்து விழும் சத்தத்தை அவன் கேட்டான். ஒரு வயதானவரின் மங்கலான கண்கள் போல, ஓர் அடர்கருமிருட்டில் விளக்குகள் அசைந்து அணைந்து போவதைக் கண்டான்.
ஏதோ ஒரு நொறுங்கும் கல்லறையின் இருள் அவனை மூடிவிட்டது போல இருந்தது. முன்னர் அவனை மர்மத்தால் தொந்தரவு செய்த அந்தக் காற்றின் குளிர்ச்சியான, மெல்லிய சுவாசத்தை மீண்டும் உணர்ந்தான்; மீண்டும் தூசு அவனது நாசியில் எழுந்தது. பின்னர், அறை முழுவதுமாக இருட்டாக இல்லை என்பதை அவன் உணர்ந்தான், ஏனெனில் அவனுக்கு முன்னால் இருந்த விரிவுரை மேடையின் மங்கலான வடிவத்தை அவனால் பார்க்க முடிந்தது. திரைச்சீலை கொண்டு இழுத்து மூடப்பட்ட சன்னலிலிருந்தும் எந்த ஒளியும் உள்ளே வரவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு வகையில் வெளிச்சம் இருந்தது. அவனது கண்கள், பெரும் முயற்சியுடன் நிமிர்ந்து பார்த்து, முதல் முறையாக அறையின் வெளிச் சுவரில், வட மூலையில், ஒரு கரடுமுரடான, ஒழுங்கற்ற இடைவெளி தோன்றியிருப்பதைக் கண்டன. அதன் வழியாக ஓர் ஒற்றை நட்சத்திரம் அறைக்குள் பிரகாசித்தது. அது விண்வெளிக் குவியல்களுக்கு அப்பால் ஒரு பேயின் கண் பார்ப்பது போலத் தொலைவான ஒன்றாக இருந்தது.
அந்த நட்சத்திரத்திலிருந்து – அல்லது அதற்கு அப்பால் உள்ள வெளியிலிருந்து – ஒரு வெளிறிய, உயிரற்ற, மரணம் போன்ற ஒளிக் கற்றை, ஓர் ஈட்டி போல செபாஸ்டியன் மீது எறியப்பட்டது. ஒரு பலகை போல அகலமாக அசையாமல், அசைக்க முடியாமல், அது அவனது உடலையே துளைத்து, அவனுக்கும் கற்பனை செய்ய முடியாத இருள் உலகங்களுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவது போல இருந்தது.
பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் கிரேக்கப்புராண அரக்கி கொர்கானின் பார்வை பட்டவனைப் போலக் கல்லாக உறைந்து போனான் ஜான் செபாஸ்டியன். பின்னர், அந்த அழிவின் பிளவு வழியாக, ஓர் ஒளிக்கற்றையின் வழியே, ஏதோ ஒரு திண்மம் விரைவாக அறைக்குள் அவனை நோக்கி வழுக்கி வந்தது. அது உள்ளே நுழைந்தபோது சுவர் நொறுங்குவது போலவும், பிளவு விரிவடைவது போலவும் தோன்றியது. அது ஒரு சிறு குழந்தையின் உருவம் போல்தான் இருந்தது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பதப்படுத்தப்பட்ட மம்மி உருவம் போலக் காய்ந்து சுருங்கியிருந்தது. அதன் முடியற்ற தலையும் உருவம் இல்லாத முகமும் மெலிந்த எலும்புக் கழுத்தால் கழுத்தால் தாங்கப்பட்டு, எண்ணற்ற வலைப்பின்னல் போன்ற சுருக்கங்களால் மூடப்பட்டிருந்தன. அதன் உடல், ஒருபோதும் சுவாசிக்காத ஒரு கொடூரமான, காய்ந்த கரு போல இருந்தது. குழாய் போன்ற கைகள், எலும்பு போன்ற நகங்களில் முடிந்து, முடிவற்ற தேடலில் ஈடுபட்டிருப்பதைப்போல அசைக்க முடியாதபடி நீட்டப்பட்டிருந்தன. மரணத்தின் பாதங்களைப் போன்ற குள்ளமான கால்கள், மம்மிகளின் கால்களை ஆடைச்சுருட்டுகளால் கட்டுவதைப்போல ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தன; அவற்றில் எவ்விதமான அசைவோ, நடையோ அல்லது நகர்வோ இல்லை. நேராகவும் விரைப்பாகவும் நின்ற அந்தப் பயங்கர உருவம் மங்கலான மரணச் சாம்பல் நிறக்கம்பின் வழியே, வேகமாக செபாஸ்டியனின் பக்கம் மிதந்து வந்தது.
இப்போது அது அவனுக்கு மிக அருகில் இருந்தது, அதன் தலை அவனது புருவங்களுக்கு நேராகவும், அதன் கால்கள் அவனது மார்புக்கு எதிராகவும் இருந்தன. ஒரு நொடிப்பொழுதில், அந்தப் பயங்கர உருவம் தனது நீட்டிய கைகளாலும், விறைப்பாக மிதக்கும் கால்களாலும் அவனைத் தொட்டுவிட்டதை அவன் உணர்ந்தான். அது அவனுடன் ஒன்றிணைந்து, அவனது இருப்பின் ஒரு பகுதியாகிவிட்டது போலத் தோன்றியது. அவனது நரம்புகள் தூசியால் அடைக்கப்பட்டதாகவும், அவனது மூளை அணு அணுவாக நொறுங்குவதாகவும் அவன் உணர்ந்தான். அதன்பிறகு அவன் ஜான் செபாஸ்டியன் என்பவனாக இல்லாமல் போய்விட்டான்; மடிந்த நட்சத்திரங்களும் உலகுகளும் அடங்கிய ஒரு பேரண்டமாகி, எங்கோ தொலைதூர விண்மீனின் வீச்சில் சிக்கிக்கொண்டு சுழன்று இருளுக்குள் விழுந்தான்.
பழங்கால மந்திரவாதிகள் ‘குவாச்சில் உத்தவுஸ்’ என்று பெயரிட்ட அந்தப் பொருள் திரும்பச் சென்றுவிட்டது; இரவும், நட்சத்திர ஒளியும் அந்தப் பாழடைந்த அறைக்குள் திரும்பியிருந்தன. ஆனால், ஜான் செபாஸ்டியனின் நிழலை எந்த இடத்திலும் காண முடியவில்லை. விரிவுரை மேடைக்கு அருகில் தரையில் ஒரு தாழ்வான தூசுக் குவியல் மட்டுமே இருந்தது, அதில் ஒரு சிறிய கால்… அல்லது ஒன்றாக அழுத்தி வைக்கப்பட்ட இரண்டு கால்களின் மங்கலான அச்சு போல ஒரு பள்ளம் காணப்பட்டது.
கிளார்க் அஷ்டன் ஸ்மித் (1893 – 1961), அமெரிக்கா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த கிளார்க் அஷ்டன் ஸ்மித் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர். அவரது கதைகள் அதீதக் கற்பனை, அதீத எதார்த்தம், திகில், அண்டவெளிப் பயம், புற உலகப் புனைவு, மாந்தரீக உலகம், இருண்மை, பழிதீர்வு போன்ற வகைகளில் அமைந்திருந்தன. சமகால எழுத்தாளராகிய ஹெச். பி. லோவ்கிராஃப்ட் அவரது நண்பர். அவரது கதைகளில் அழகிய, கவித்துவமான மொழிச் செழுமை மிளிரும். முற்றிலும் அறிந்திராத, புரிந்து கொள்ளமுடியாத ஒரு பெரிய மர்மமான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம் என்ற கருத்தும் அவரது கதைகளில் நிறைந்திருக்கும். மனிதருக்கு அப்பாற்பட்ட சக்திகள், பழங்கடவுள்கள், அழிந்த நாகரீகங்கள், மறைந்த நகரங்கள் போன்றவை அவரது கதைகளுக்குள் பொதிந்து கிடக்கும். ‘The Treader of the Dust’ எனும் இச்சிறுகதை 1935ஆம் ஆண்டில் ‘Weird Tales’ இதழில் வெளியானது. இந்தக் கதையில் வரும் குவாச்சில் உத்தவுஸ் என்பது பேய் அல்ல, தவிர்க்க முடியாத மரணத்தின் குறியீடு. எந்தச் சாதனையும், எந்த நினைவும், எந்த நாகரீகமும் நிலையானது அல்ல, அனைத்தும் சிதைவடையக்கூடியவை என்பதை உணர்த்தும் தத்துவக்கதை. மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மை, அறிவை அடையத் துடிக்கும் மனிதனின் பேராசை, மேலும் அந்த அறிவே அழிவை ஏற்படுத்தும் விதி ஆகியவற்றைப் பற்றி இந்தக்கதை சிந்திக்க வைக்கிறது.
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply