Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

வீதிக்குப் பின்னும் வரலாறு உண்டு

ராமச்சந்திர வைத்தியநாத்
ராமச்சந்திர வைத்தியநாத்
September 1, 2025
வீதிக்குப் பின்னும் வரலாறு உண்டு

கிழக்கிந்திய கம்பெனி பட்டணத்தில் கால்பதிந்த காலந்தொட்டு பல்வேறு கிராமங்களின் இணைப்பில் உருவான இம்மாநகரத்தை, கட்டமைப்பதிலும் நிர்வாகத்திலும் பெரும் பங்கினைக் கொண்டவர்களாகவும் செல்வாக்கு மிக்க வர்த்தகர்களாகவும் சமூகப் பிரமுகர்களாகவும் இருந்த விதேசிகள் மற்றும் சுதேசிகளின் பெயர்களில் அமைந்த சென்னப்பட்டணத்தின் வீதிகள் ஒவ்வொன்றும், கடந்த கால வரலாற்றை நினைவுகூறச் செய்யும். இன்னும் சொல்லப் போனால் பட்டணத்தில் ஏரியை மேடுறுத்தி உருவான புதுநகரில் சாக்கடை தோண்டுகையில் மரித்த இரு இளைஞர்களின் பெயர்களை, அப்பகுதியில் உள்ள வீதிகள் கொண்டிருப்பதை வேறெங்கிலும் காணமுடியாது. இந்த அடிப்படையில்தான் பட்டணத்து பழைய வீதிகளுக்குப் புதிய பெயர்களைச் சூட்டுவது என்பது வரலாற்றை நினைவுகூறக்கூடிய வாய்ப்பைத் தடுத்து விடுகிறது என்பதன் பேரில் மாற்றுக் கருத்து இருந்து வருகிறது.

இப்போக்கில் முதலாவது பெயர் மாற்றம் என்பது மவுண்ட் ரோடுக்கு அண்ணா பெயரைச் சூட்டியதிலிருந்து துவங்கியது என்றே சொல்லலாம். அண்ணாவின் பிரபல்யம் காரணமாகக் கிட்டத்தட்ட நானூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட பெருஞ்சாலையின் பெயர் மாற்றத்தை எதிர்ப்பதில் அன்றையதினம் தயக்கம் இருந்திருக்கக்கூடும். பின்னாளில் டி.ஜி.எஸ்.தினகரன், பாபநாசம் சிவன், சி.பா.ஆதித்தனார், உத்தமர் காந்தி, வல்லபாய் பட்டேல், அன்னி பெசண்ட், காயிதே மில்லத், டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ருக்மணி லட்சுமிபதி, மகாராஜபுரம் சந்தானம், முசிறி சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற ஏராளமானோரின் பெயர்கள் பழைய சாலைகளுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றன. இது தவிர எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைந்துள்ள ஹால்ஸ் சாலை தமிழ் வழிச் சாலையென்றும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள க்ரீன்வேஸ் சாலை பசுமைவழிச் சாலை என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இவையன்றிச் சமீபகாலத்தில் நடிகர் விவேக் (மயில்சாமியை ஏன் விட்டு வைத்தார்களோ?) பெயரிலான மாற்றம் தவிர சென்னைப் பட்டினப்பாக்கத்தில் உள்ள டி மாண்டி சாலைக்கு மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரும், அவ்வாறே கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலைக்கு பேராயர் சற்குணம் பெயரும் சூட்டப்படும் என்று சென்னை மாநகராட்சியில் 1925 ஜூனில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்த மாதத்தில் மாகாணத்தின் முந்நூறாண்டு கல்வி வரலாற்றோடு பின்னிப் பிணைந்து கல்விப் புரட்சியை நடத்திய பள்ளிக் கல்வி வளாகம் அமைந்துள்ள காலேஜ் ரோடு எனும் கல்லூரிச் சாலையை மறைந்த நடிகர் ஜெயசங்கர் பெயரில் மாற்றவிருப்பதாக மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

தற்போது பெயர் சூட்டப்படவிருக்கும் சாலைகளுக்குப் புதிய பெயரை அளித்துள்ளவர்கள் இச்சமூகத்தில் பெரும் ஆகிருதிகள் என்பதோடு பல்வேறு களங்களில் போராளிகளாக, மக்களின் துணைவர்களாக, பண்பாட்டியலில் தடம் பதித்தவர்களாகச் சமீபத்திய வரலாற்றில் இடம் பெற்றவர்கள் என்பதை அனைவருமே அறிவர். தவிர இதில் எவருக்கும் மாற்றுக்கருத்தேதும் இருக்கப் போவதில்லை. ஆயின் அதே நேரத்தில் எப்பெயர்கள் மாற்றத்திற்குள்ளாகியதோ அவர்களும் இந்தப் பட்டணத்தின் உருவாக்கத்தில் தொடர்புடையவர்களாக, ஏதோ ஒரு வகையில் பங்களிப்பினைக் கொண்டவர்களாக விளங்கியவர்கள் என்பதையும், அப்பெயர்களுக்குரியோர் கடந்தகால சென்னைப்பட்டண வரலாற்றோடு இணைந்தவர்கள் என்பதையும் நாம் அறிவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பண்டைய வரலாற்றைக் கூறும் வரலாற்றுக் கட்டுமானங்களை, நினைவுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாத்து வருவதைப் போன்று பட்டணத்து வரலாற்றை நோக்கி நம்மை நகர்த்தக்கூடிய வீதிகளின் பெயர் மாற்றம் என்பது தவிர்க்கப்பட வேண்டியதுதான். ஆயின் இப்போக்கு தங்கு தடையின்றித் தொடர்ந்து வருகிறது.

இவையன்றி வேறுவிதமான வினோதங்களையும் சென்னப்பட்டணத்தின் வீதிகளில் காணமுடியும். வீதியின் பெயர்களில் திரிபு, மாற்றம், மறைப்பு, சுருக்கம் போன்றவையும் காலங்காலமாக இருந்து வருகிறது. டவ்டன் சதுக்கத்திலிருந்து பெரம்பூரை நோக்கித் தெற்கு வடக்காய்ச் செல்லும் சாலையின் தென் பகுதி வேதவினாயகர் ரோடு என்றும், வட பகுதி பெரம்பூர் பாரக்ஸ் சாலையென்றும் 1917 வாக்கில் வெளியிடப்பட்ட பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கான வரைபடம் காட்டுகிறது. 1924ம் அசைலம் பிரஸ் ஆண்டுப் புத்தகத்தில் மாநகராட்சியின் 30 டிவிஷன்களின் எல்லைகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதில் 18வது டிவிஷன் புரசைவாக்கத்தின் கிழக்கு எல்லையாக பெரம்பூர் பாரக்ஸ் சாலையும் வேதவிநாயகர் சாலையும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறே 17வது டிவிஷன் சூளையின் மேற்கு எல்லையாக அதே பாரக்ஸ் சாலையும் வேதவிநாயகர் சாலையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆயின் தற்பொழுது முழுச்சாலையுமே பெரம்பூர் பாரக்ஸ் சாலையாக மாற்றமடைந்திருக்கிறது. பாரக்ஸ் சாலை முத்து சாலை சந்திப்பில் உள்ள வேதவிநாயகர் ஆலயத்தின் வாயிலில் உள்ள பழைய எனாமல் பலகையில் மட்டும் வேத வினாயகர் ரோடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இன்றும் காண முடியும்.

திருவல்லிக்கேணி பகுதியில் ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு அருகில் பாரதி சாலையெனும் பைகிராஃப்ட்ஸ் சாலையையும், மீர்சாஹிப் பேட்டையருகில் பெசண்ட் சாலையெனும் பீட்டர்ஸ் சாலையையும், தெற்கு வடக்காக இணைக்கும் நீண்ட சாலை ஜானி ஜான் கான் சாலை என்று இன்றைய தினம் அழைக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நடவடிக்கைகளின் மையமாகத் திகழக்கூடிய இந்த வீதியில் மாத வார நாவல்கள் மட்டுமின்றி, ஆன்மீக ஜோதிட இதழ்களும் டன் கணக்கில் அச்சிடப்பட்டு வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சியின் பட்டியலில் ஜனய் ஜஹான் கான் சாலையாக இருந்தது தற்பொழுது ஜானி ஜான் கான் சாலையாக மாறியது என்பதும், மவுண்ட் ரோட் வெலிங்டன் தியேட்டரையொட்டி திருவல்லிக்கேணியைப் பிரிக்கக்கூடிய பார்டர் (எல்லைத்) தோட்டத்தின் எல்லையாக இருந்து வரும் தஹீர் சாஹிப் சாலை, தாயர் சாஹிப் சாலையாக மாறியதோடு நில்லாது அடுத்த கட்டத்தில் தாயார் சாஹிப் சாலையாக மாநகராட்சியாலும் நாமகரணம் செய்யப்பட்டுள்ளது என்பதும் புதிராகவே இருந்து வருகின்றன. இவ்வாறே சென்னை அயன்புரத்தில் ரயில்வே பணிமனைகளின் நிர்வாக அலுவலகம் அமைந்திருக்கக்கூடிய சாலை லோகோ கேரேஜ் சூப்பரிண்டெண்ட் போர்ஷியஸ் பெயரைக் கொண்டிருந்தது. தற்பொழுது அது போர்ச்சுக்கீஸ் சாலையென மாற்றமடைந்திருக்கிறது. இத்தனைக்கும் அண்டை அயலில் போர்ச்சுக்கீசியர்கள் எவரும் குடியேறியதாகத் தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் ஏதோ தன்னிச்சையாக நிகழ்ந்தவையல்ல. இவை மாநகராட்சியின் தெருப்பெயர் பலகைகளில் மட்டுமின்றி இதர ஆவணங்களிலும் காணப்படுகிறது.

1900க்குப் பிந்திய ஆண்டுப் புத்தகங்களில் முக்கியத் தெருக்களின் பெயர் பட்டியலைக் காணமுடியும். அதில் பெயர் மாற்றத்திற்குள்ளான தெருக்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. புரசையில் வினைதீர்த்த முதலி தெருவும், கந்தப்ப முதலி ஹைரோடும் வர்த்தக மையமாகத் திகழக்கூடிய தெருக்களாகும். இவை இன்றைய தினம் முறையே வெள்ளாளத் தெரு என்றும் டாணாத்தெருவென்றும் அழைக்கப்பட்டு வருகின்றன. இதே புரசையில் சரவண பெருமாள் முதலி தெரு வேட்டைக்காரன் தெருவாகவும், மலையப்பன் முதலி தெரு பிஷப்ஸ் லேனாகவும் மாற்றமடைந்திருக்கின்றன. கீழ்ப்பாக்கத்திற்கு மனநோய் மருத்துவமனை இடம்பெயருவதற்கு முன்னர் அது புரசைவாக்கத்தில்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. ஒரு கட்டம் வரை அச்சாலை பழைய பைத்தியக்கார ஆஸ்பத்திரி சாலை என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பின்னாளில்தான் மில்லர்ஸ் ரோடாக மாற்றமடைந்திருக்கலாம்.

திருவல்லிக்கேணியில் பெரிய தெரு என்பது நகர வீதிகளில் பழமையும் கீர்த்தியும் வாய்ந்தவற்றில் ஒன்று என்பதை அனைவரும் அறிவோம். ஆதியில் இது வீரராகவ முதலி தெருவாகத்தான் இருந்திருக்கிறது. கும்பகோணத்தில் உள்ள பெரிய தெருவை டிஎஸ்ஆர் பெரிய தெரு என்று அழைப்பதைப் போன்று இதை வீரராகவ (முதலி) பெரிய தெரு என்று அழைப்பதில் பிரச்னையேதும் இருக்கப் போவதில்லை. ஜார்ஜ் டவுனில் பண நடமாட்டத்திற்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர்போன வீதிகளில் ஒன்றுதான் கிடங்கு தெரு எனும் கோடவுன் ஸ்டிரீட். பிராட்வேயில் என்.எஸ்.சி போஸ் வீதியிலிருந்து தெற்கு வடக்காக பி.வி.ஐயர் வீதியை இணைக்கும் சாலை அன்றைய பட்டணத்து வர்த்தகர் வரதாமுத்தியப்பன் பெயரிலான தெருவாக இருந்திருக்கிறது. தற்போது தென் பகுதி கிடங்குத் தெருவாக மாறிவிட்டது, வட பகுதி மட்டுமே போனால் போகிறது என்று வரதாமுத்தியப்பனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

முக்கியப் பிரமுகர்கள் பெயரில் உள்ள தெருக்கள்தான் சுருக்கப்பட்டு முன்னொட்டோடு அழைக்கப்படுவது என்பது எல்லாப் பட்டணங்களிலும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநகரங்களில் மட்டுமின்றிச் சிற்றூர்களிலும் மகாத்மா காந்தியில் பெயரில் எம்.ஜி.சாலை ஒன்று இருப்பது தவிர்க்க முடியாததாகும். ஆயின் இறைவனையும் இக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது சென்னப்பட்டணத்து வீதி வினோதங்களில் ஒன்றாகும். இறைவனுக்கும் இனியஷிலிட்டு தெருப்பெயர்கள் இங்கே இருந்து வருகின்றன. பெரும்பாலும் வினாயகப் பெருமானுக்கு இப்பாக்கியத்தை மதராஸ் மாநகராட்சியும் மாநகர மக்களும் அளித்துள்ளனர். சைதையில் கே.(கூத்தாடும்)பிள்ளையார், மயிலையில் டி.எஸ்.வி (தெங்கூர் செல்வ வினாயகர்), விஎஸ்வி (வடகூர் செல்வ வினாயகர்), மற்றும் பி.வி (பரிபூரண விநாயகர்) போன்று தெருப் பெயர்கள் சுருக்கப்பட்டுள்ளன.

இவையாவற்றையும் கடந்து தெருப்பெயர்கள் வரலாற்று எச்சங்களையும் சுட்டுகிறது என்பதற்கு அண்ணாநகரில் கூவத்தின் வடகரையில் உள்ள பிரிவரி சாலையே சாட்சியாக உள்ளது. இச்சாலை அண்ணா நகரிலிருந்து (அந்நாளில் காவாங்கரை) கீழ்ப்பாக்கம் கல்லறை வரை செல்லக்கூடிய மிகப் பழமையான கச்சா சாலையாகும். அங்கே சமீப காலங்களில் மதராஸ் பட்டணத்தின் ஏன் தமிழகத்தின் அடையாளமாகத் திகழக்கூடிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கிறதேயொழிய மதுபான வடிசாலையேதும் கிடையாது. ஆயின் பெயரென்னவோ பட்டணத்திற்குள் மதுபான வடிசாலை இருந்திருப்பதை உணர்த்துகிறது. பின்னோக்கிப் பார்க்கையில் யுனைடெட் பிரிவரீஸ் லிமிடெட் என்று ஓரிடத்திலும் மதராஸ் யுனைடெட் பிரிவரீஸ், கீழ்ப்பாக்கம் என்று செங்கல்பட்டு ஜில்லா தொழிற்சாலைகள் பட்டியலிலும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மானேஜராக ஆர்.ஏ.கே.மேபரி, கீழ்ப்பாக்கம், மதராஸ் என்றும், வடிசாலையில் மது வடிப்பவராக எம்.சி.சிவரஞ்சன் என்றும் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் தந்தி விலாசம் பிரிவரி, தொலைபேசி எண் 526, தபால் பெட்டி எண் 1003 என்பதும் கூடுதல் தகவல்களாகும். உண்மையிலேயே அந்தத் தெருவில் கடந்த காலத்தில் மதுபான வடிசாலை இருந்தமையால்தான் அச்சாலை அப்பெயரினைக் கொண்டிருந்தது இன்றும் தொடர்கிறது என்பதை அறிகிறோம்.

இதுபோன்ற வரலாற்றுத் தகவல்களையும், வினோதங்களையும், விசித்திரங்களையும் கொண்டிருக்கும் சென்னப்பட்டணத்தின் தெருக்களின் பெயர்களைச் சகட்டுமேனிக்கு மாற்றுவது குறித்து மாநகராட்சி மட்டுமின்றி மாநில அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


Photo : Sugan Mural

ராமச்சந்திர வைத்தியநாத்
ராமச்சந்திர வைத்தியநாத்
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top