தீ என்பது மனதின் பேரமைதி. அதன் பூரண வடிவம் எந்தச் சத்தத்தினிமித்தத்தினாலும் கலைந்து விடாது.
(அ)
இப்பொழுது
இத்தனை பெரிய வெளியில்
தயக்கமின்றி நிற்கிறேன்.
இப்பொழுது
இத்தனை சிறிய என்னுள்
தயக்கமின்றி “தீ ” வந்தது.
கூரான அம்பில்
பசிக்கு இரையாகாத
தப்பித்தலைத்
தேடியலைந்ததில்
எத்தனை வழுக்குச் சொற்கள்.
இப்பொழுது
“சிறிய” மிகப்பெரிய வடிவில் சுடர்கிறது.
(ஆ)
நான் எதைத் தவறவிட்டேன்
புரிபடவில்லை
நேற்றிலிருந்து குண்டு
பொழிகின்றார்கள்
விமான நிலையம் மூடப்பட்டு விட்டது.
இங்குப் “பெரும் “
என எதுவுமேயில்லை
எளிமையினை
அண்டிக்கொள்ளுங்கள்
அதுவே ஆதி வடிவம்
என்ற தீயின் கண்களில்
சவுந்தர்யம் மின்னியது.
(இ)
இப்பொழுதெல்லாம்
வேகம் பிடிக்கவில்லை
அது கடினமானது.
எங்கும் காணாமல்
போய்விடவில்லை.
நானொரு
சின்னஞ்சிறு வடிவம்
கீறிப்போடுதலில்
வசமாகச் சிக்க விருப்பமில்லை
வெளிறிய சொற்களைக்
காது மூடிக் கடக்க முடியும்
என்ற. “தீ”
புரிதலான
வடிவமாக
மாறி மாறி அசைந்தது.
(ஈ)
ஒரு ஞாயிறின் பகல்
சோர்வாக நெட்டி முறித்தது.
வட்ட வடிவச் சிறு கோப்பையில்
மிடறு மிடறாக உள்ளிழுக்கப்பட்ட
களைப்புத் தெரிந்தது.
இப்பொழுது
கோப்பை நிறைய கலக்கம்…..
இதை எங்கே கொண்டு
தள்ளுவது?
என்றதற்கு
இதை அருந்தாமல் தவிர்ப்பது எப்படி என்றது
களைப்பை அறியாத “தீ”.
(உ)
அந்தப் பெருஞ்சாலையில்
பசுமையும், புதரும்
மண்டின.
வெட்டி வெட்டிப் போட்டார்கள்
திரும்பத் திரும்ப மண்டின.
நான் கேட்டேன்
வலிக்கவில்லையா? யென.
துளி “தீ ” வேண்டும்.
இராக்கால வெம்மையில் கொஞ்சம் குளிர வேண்டும்
என்ற பதிலில்
மண்டிக்கிடத்தல் அழகாயிற்று.








Leave a Reply