தீ என்பது அசட்டையானது அல்ல. மாறாக,
உலுக்கியெடுப்பது.
————தீ
அ) ஒரு சுருங்கிய கை
எத்தனை தடவை
தீயைப் பற்ற வைத்திருக்கும்?
தழைந்து கிடக்கும்
தளருடையில்
தாறு பாய்ச்சிக் கட்டலைப் போல
உச்சியிலெரிந்த சிவப்பு
கண் முன்னே வந்து போகின்றது.
ஆ) எங்கோ நெருப்பு எரிவதாய்க்
குரல்கள் கூடுகின்றன.
நிமிடத்துக்கு 150 சொற்களைப் பேசின.
இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத தீயில்
கச்சடாக்கள்
சன்னா பின்னமாக்கப்பட்டு
கரும்புகை படர்ந்து கிடக்கின்றது.
இ) ஓர் அதிசயமான தோற்றத்தில்
எச்சரிப்புகள் அதிகம்.
பிரதிபலன் இல்லாமல்
ஏற்றப்படும் தீயில்
சமூகக் கட்டுமானத்தின்
உற்பத்தி சக்தி பதிவேற்றப்படுகின்றது.
ஈ) பளீரென ஒளிரும் தீயில்
A4 தாளின் எழுத்துகள்
படபடக்கின்றன.
தாராளமாகத் தொட்டுப் பார்க்கலாம்
பேசலாம்…
விரும்பினால் கைக்குலுக்கலாம்
எவ்வித உஷ்ணமுமில்லை…
உ) ரகசியமாக ஏற்றி வைக்கும் தீயில்
இதயத்தின் மேல்பக்க கீழ்பக்க அறைகளுக்குள்
உள்ள தடுப்புச் சுவர் அசைந்தாடுகின்றது.
அதில்,
விநோதமான நிபந்தனைகள்
தினசரி செய்திகளாகின்றன…
எல்லாச் செய்திகளும் தலைப்புச் செய்தியாவதில்லை.
ஊ) வரைபடத்தில்
இலட்சமாண்டுகளுக்கு முன் ஏற்றப்பட்ட
தீ மூட்டல் மின்னுகின்றது.
அதிலிருந்து வந்த சிறு பொறியில்
இன்னும் விளக்கேற்றுகின்றார்கள்….








Leave a Reply