ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாய், தற்போதைய பாகிஸ்தானில் பிறந்த சிந்தி மொழியின் ஆன்மீகக் கவிஞர் ஆவார். 1689இல் பிறந்த இவர் தன்னுடைய இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் யோகிகளுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். பிறகு ஏதோ ஒரு உள்ளுணர்வின் உந்துதல் காரணமாக மக்தூம் முஹம்மத் முயின் என்பவரால் ஒரு சுபியானார். தனது குருவின் அறிவுறுத்தலின்படி வீடு திரும்பியவர் தான் விரும்பிய பிபி சையதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். குறுகிய காலத்திலேயே குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறி தனது மரணம் வரை துறவியாகவே வாழ்ந்தார். துறவிகளுடன் அலைந்து திரிந்த காலத்தில் மக்களின் துயரங்கள், அவர்களது வேதனைகள் எல்லாவற்றையும் அவதானித்தவர் மனித நேயமே ஆன்மீகம் என்று உணர்ந்தார். சுயநலம் மிகுந்த ஆன்மீகவாதிகள் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் அறியாத மக்களிடம் பணம் பறிப்பதைக் கண்ட அவர் இத்தகையச் சமூகச் சூழலை வெறுத்து மணல் குன்றுகளின் மீது தனியாக அமரத் தொடங்கினார். பிட்டாய் என்றால் சிந்தி மொழியில் மணல் குன்று என்று அர்த்தம். நாளடைவில் அவரும் ஷா பிட்டாய் என்று அழைக்கப்பட்டார்.
சுபிகள், இசை, கடவுளை அடைவதற்கான ஒரு மார்க்கம் என்ற கொள்கை உடையவர்கள். சிந்தி மொழியில் சரங் என்பது மேகத்தையும் மழைக்காலத்தையும் குறிக்கும். அது ஒரு பிரபலமான ராகமும் கூட. சுபிகள் எப்படி சூரியனின் ஒளிபட்டு நிலம் பிரகாசம் அடைகிறதோ அதைப்போல கடவுளின் கருணை மனிதனின் இதயத்தில் பொழிவதை மழையாக உருவகப்படுத்தினார்கள். ஷா லத்தீப் இயற்கை அழகை மனித உணர்வுகளோடு தொடர்புப்படுத்தி வர்ணித்தார். அவருடைய வர்ணனைகளில் மழை அதிக இடம் பெற்றது மற்ற மதவாதிகளைப் போல் அல்லாமல் ஷா மனிதர்களை அதிகம் நேசித்தார். மக்கள் கடவுளின் படைப்பு என்பதால் மக்களை நேசிப்பது கடவுளை நேசிப்பது என்று எண்ணினார். அவருடைய கவிதைகள் மனிதர்களின் நல் வாழ்க்கைக்கான பிரார்த்தனைகளாகவே இருக்கின்றன. அவர் வாழ்நாள் முழுவதும் சாமானியர்களின் பிரதிநிதியாகவே இருந்திருக்கிறார்.
ஷா வின் ‘சர் சரங்’ அதாவது ‘மேகங்களின் மெல்லிசை’, 267 பாடல்களைக் கொண்டுள்ளது. இது அவரது பாடல்களின் ஒரு சிறிய தொகுப்பு.
நேசத்துக்குரியவனின் வருகை தந்த நெருக்கம்,
இன்னலுறும் இதயத்திற்கு இதமளித்தது,
அனைத்து வலியும் துயரும் அப்படியே மறைந்தன,
அன்புக்குரியவனின் அழகின் வெளிப்பாட்டில்.
♦
இன்றும் கூட மேகங்கள் வடக்கு நோக்கியே கூடுகின்றன,
படைத்தவர் பாதைகளில் மேகங்களைப் பொழிய வைத்து,
தேசத்தைப் பிரளயத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்,
எதைச் சாக்கிட்டும் என் நேசன் என்னை விட்டு நீங்காதிருக்கட்டும்.
♦
இன்றும் கூட குயில் வடக்கு நோக்கிக் கூவுகிறது,
உழவர்கள் கலப்பைகளுடன் நிலங்களுக்கு விரைய, இடையர்கள் மகிழ,
இன்றும் கூட என் மேக நண்பன் மழை பொழிகிறான்.
♦
இன்றும் கூட மேகத்தின் சிகரங்கள் வடக்கு நோக்கியே தோன்றுகின்றன,
பருவ மழையின் மின்னல் பொய் உரைப்பதில்லை,
திரும்பி வந்துவிடு காதலனே,
சண்டைகளை மறந்து இருப்போம்
♦
இன்றும் கூட மேகங்கள் கார் குழலைப் போல வடக்கு நோக்கி விரிந்து கிடக்கின்றன,
மின்னல் தனது சிவந்த ஆடையால் மாரிக்குக் கட்டியம் கூட கூற,
தொலைவிலிருந்த என் காதலனை கார் மழை திரும்பக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
♦
இன்றும் கூட மேகங்கள் வடக்கு நோக்கித் தோன்ற,
காலம் தாழ்த்தாது வந்த மாரி காலம் சமவெளிகளில் வெள்ளத்தை நிரப்பியது,
மகிழ்ந்தனர் ஏழை நாடோடிகள்.
♦
இன்றும் கூட மேகத்திற்கான என் எல்லா நம்பிக்கைகளும் வானத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன,
ஓ தோழர்களே! மாரி காலம் எனது மணாளனை நினைவுபடுத்துகிறது,
நிலம் நனைவதற்காக நான் ஏங்குகிறேன்,
நீ இல்லத்தில் இருந்தால் என் இனியவனே, ஒவ்வொரு பருவமும் மழைக்காலமே.
♦
இன்றும் கூட மேகங்கள் வடக்கே கூடுகின்றன,
மழையானது சிற்றோடைகளை நிரப்பி எரியும் பூமியைக் குளிரச் செய்யட்டும்.
♦
நபிகளின் கல்லறையில் மின்னலுடன் எழும் மேகங்கள்,
நரா ஆற்றை நிரப்புகின்றன,
இறைவா, மேகங்களுக்கு ஆணையிடுக
வறண்ட கிணறுகளை நிரப்பும்படி,
கருணையுள்ள எனது காதலன்,
தனது கம்பீரமான அழகை வெளிப்படுத்தினான்.
♦
முற்றிலும் எதிர்பாராத விதமாக நேசரளித்த காட்சி,
என் மன அழுக்கை நீக்கி, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,
என் இதயத்தின் ஆசைகள் எல்லாம் நிறைந்தன, நேசரின் பார்வையால்.
♦
ஓ மழையே! என் கண்களைப் போல் நீ பொழிவாயானால்,
பகலிலும் இரவிலும் நீ ஓயாது தூற வேண்டி இருக்கும்.
♦
காதலனின் கலைந்த குழல் கருமேகங்களை ஒத்திருக்க,
அவனின் கண்கள் மோனநிலையைக் கொண்டிருக்கின்றன,
கார்மேகம் எப்படியோ, என் காதலனும் அப்படியே,
விழிகளை ஏக்கத்துடன் உயர்த்து என் நண்பனே
வலிகளையும் கவலைகளையும் துடைக்கும்படி.
♦
மேகங்கள் மேகங்கள் அல்ல, எப்பொழுதும் மேகமூட்டத்துடன் எனது கண்கள்,
கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது
என் காதலனின் நினைவால்,
அக்கண்கள் எப்பொழுதும் கண்ணீர் சொரியட்டும், துணைவன் தொலைவில் இருப்பதால்.
♦
மேகங்களில் மின்னல் பளிச்சிட்டது,
கிராமத்தின் குதிர்கள் தானியங்களால் நிரம்பி விடும்,
நேசரின் ஆசீர்வாதங்களை நினைக்கையில் எனது கவலைகள் மறைகின்றன,
காதலர்கள் மீது மழை வெள்ளமெனப் பொழியட்டும்.
♦
உயர் ரகக் குதிரைகள் முற்றத்தில், வளைந்த கொம்பு எருமைகள் கொட்டடியில்,
குடிசைகள் பசுமைச் சூழலில் கண்களுக்கு விருந்தாய்,
சுகந்த மணம் வீசும் திருமணப் படுக்கையில் காதலன் என் அருகில்,
மழை நிதமும் பொழியட்டும்,
எனில் நானும் என்னவனும் என்றென்றும் இணை பிரியாதிருப்போமாக.
முனைவர். SP.சாந்தி காரைக்குடி அழகப்பா பல்கலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ரிச்சர்ட் ஈபர்ஹார்ட் எனும் அமெரிக்கக் கவிஞரின் கவிதைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
மொழிஇயல் இவருக்கு மிகவும் விருப்பமான துறையாகும். தேசிய மற்றும் சர்வதேசக் கருத்தரங்கங்களில் பங்கு பெற்று ஆய்வுக் கட்டுரைகளை வாசித்திருக்கிறார்.
சமகால இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் பற்றி அழகப்பா பல்கலை சமுதாய வானொலியில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். புத்தக விமர்சனங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்ட உரைகளையும் நிகழ்த்தி இருக்கிறார். நுண் கலைகளும் நடனமும் இவர் தொடர்ந்து இயங்கும் துறைகளாகும்.








Leave a Reply