Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

“சந்தை பொருளைத்தான் கொடுத்திருக்கிறது; பொருளாதாரத்தை அல்ல” – குமார் அம்பாயிரம்

பிரவீண் பஃறுளி
பிரவீண் பஃறுளி
August 1, 2025
“சந்தை பொருளைத்தான் கொடுத்திருக்கிறது; பொருளாதாரத்தை அல்ல” – குமார் அம்பாயிரம்

நேர்கண்டோர் : பிரவீண் பஃறுளி, ராஜாஜி.


குமார் அம்பாயிரம் கதைகள் அரசியல் தீர்க்கம்மிக்கப் புனைவு சூட்சமமும் மூதாதைகளின் தொன்ம நிழல்களும் படிந்தவை. அவை நவீனத்துவம், சமகாலம், வரலாறு போன்ற வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய வேறொரு தொல்வெளியில் புனைவுறுபவை. நவீனம் என்னும் காலவெட்டுக்கு முன்னும் பின்னும் ஊசலாடிச் செல்லும் வழக்காறுகளின் எல்லையின்மையைக் கொண்டவை. அன்றாடம் என்ற சலிப்பூட்டும் தகவல்-விவரண நினைவை ரத்துசெய்து தொன்மம், புனைவுகள், ஐதீகங்கள், வழக்காறுகள் போன்றவற்றின் மர்மங்களுடன், நவீனம் கடந்த அறிதிறன்களின் புதிய ஒரு மெய்யுணர்வு கொண்டவை அவரது கதைகள். பழங்குடிகள், உலகத் தொல்சமூகங்கள் சார்ந்த விசேடமான கனவுக்கூறுகளும் அறிதல்முறைகளும் அதன் புனைவுமுறைகளை உருவாக்குகின்றன. இத்தன்மையில் சமகாலச் சித்திரம், நடப்பு அரசியல் கூட குமார் அம்பாயிரம் கதைகளில் வேறொரு மூட்டமான புனைவாக உருமாறுகிறது.

சுரண்டல்களும் ஒடுக்குமுறைகளும் உலகளாவிய ஒருங்கிணைப்பில் அதி நூதனமும் அரூபமும் அடைந்து வருவதை அவரது கதைகள் ஆழ ஊடுருவிக் காட்டுகின்றன. நடப்பு உலகைப் பற்றி உரையாடத் தொடங்கும் போது கூட அதன் புற அடையாளங்கள், தகவல் குறிப்பீடுகள், தினசரித்தன்மை என்ற மேலோட்டமான படலத்தை நீக்கி அதன் உலகளாவிய மற்றும் காலவரையற்ற தொல்நினைவின் புதையுண்ட அடுக்குகளை அவை புனைவாக்கம் செய்கின்றன. நவீனத்துவத்தின் பொருள் மையங்கள், வடிவமைக்கப்பட்ட ஒழுங்குகளை மறுத்து கச்சாத் தன்மையும் எதிர்மொழியும் வேறு அழகியலுமாக தனது மனிதனும், மனிதனும் மொழியும் கடந்ததுமான பிரபஞ்ச உயிர்ப்புநிலைகளையும், பாழ்மையையும்கூடத் தனது கதைகளில் விசேடப்படுத்தியவர் குமார் அம்பாயிரம்.

குமார் அம்பாயிரத்தின் ’ஈட்டி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி தீவிர வாசிப்புச் சூழலின் பரவலான கவனத்தைப் பெற்றது. கவிஞர் பாலை நிலவன் அவரது கவிதைகளைத் தொகுத்து தனி-மை வெளியீடாகக் கொண்டுவந்துள்ளார். இயற்கை வேளாண்மை, சூழலியல், டிஜிருடு இசைக்கருவி போன்றவை குமாரது ஆளுமையின் முக்கியமான பிற பரிமாணங்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு உடனிருந்து பெற்ற அனுபவத்தின் வழி அதுசார்ந்த இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட குமார் அம்பாயிரம் தனது இயற்கை வேளாண்மை சார்ந்த பணிகள், பழங்குடிகள் நோக்கிய பயணங்கள் என ஒரு நாடோடி மனநிலையின் படைப்பூக்கத்தோடும் அலைச்சலோடும் கோவை, சேலம், திருவண்ணாமலை என மயங்கிய நிலவெளிகளில் ஊன்றியிருந்தார். வாழ்வாதார வளங்கள் பறிக்கப்பட்ட மக்களின் குமுறல்களோடும் போராட்டக் குரல்களோடும் மிக நெருக்கமாக இருந்தார்.

இடைவெளி இதழுக்காக 2016 ஆம் ஆண்டு, சேலத்தில் அவரது வசிப்பிடம் அருகே ஒரு ஏரிக்கரையின் மதிய வேளையில், மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் எழுத்து வடிவம் இது. குமார் அம்பாயிரத்தின் திடீர் மறைவு உருவாக்கும் புதிரும் வெறுமையும் திகைப்பாகவே உள்ளன.

நீங்கள் எழுத வந்த சூழல், வாசிப்பு, இலக்கிய அறிமுகம் குறித்துச் சொல்லுங்கள்…

எனது ஆரம்பக்கட்ட வாசிப்பு காமிக்ஸ் புத்தகங்கள் மீதான ஆர்வத்தில் உருவானது எனலாம். எனது அக்காக்கள் வழியாக வீட்டில் எப்போதும் சின்னச் சின்ன நாவல்கள் வாசிக்கும் ஒரு சூழல் இருந்தது. பள்ளிக்கு அருகிலேயே இருந்த நூலகம் வாசிப்புக்கான ஒரு இடமாக இருந்தது. சிக்பில், ரோஜர் மூர், இரும்புக்கை மாயாவி போன்ற காமிக்ஸ்களை வாசிப்பேன். பூர்வகுடியான செவ்விந்தியர்களுக்கும் அங்கு குடியேறிய அமெரிக்கர்களுக்கும் இடையே நடக்கும் போர்களைப் பற்றிய சித்திரம் அவற்றில் நிறைய வருவதுண்டு. காமிக்ஸ் வழியாகச் செவ்விந்தியர்களை முட்டாள்களாகவே சித்தரிப்பார்கள். அவர்கள் நாகரிகமற்றவர்கள், மருத்துவம் தெரியாதவர்கள், மந்திரங்களை நம்புபவர்கள் போன்ற பார்வையே இருக்கும். ஆனால் அதில் வரும் ஓவியங்களில் அமெரிக்கர்களின் இருப்பிடம் துப்பாக்கி, குதிரைகள், தொப்பி என ஒரு வெறுமையான சூழமைவில் இருக்கும். ஆனால் செவ்விந்தியர்களின் வாழ்விடச் சூழலில் நுட்பமான அழகுணர்வு இருக்கும். அழகான கூம்பு வடிவிலான குடிசைகள், நெருப்பு மூட்டிக்கொண்டிருப்பதாக, தொலைவில் மேலெழுந்து எரியும் தீச்சுவாலைகள், இறகால் தங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் தோற்றம், வேட்டையாடுதல், கூட்டு வாழ்வு என ஒரு நல்ல சமூகமாகத் தோன்றும்.

காமிக்ஸில் வசனங்களெல்லாம் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கும். அதில் மைக்ரோவாகச் செவ்விந்தியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணத்தைக் குழந்தைகளிடம் விதைப்பதற்கான சாத்தியங்களிருக்கும். இருந்தும் நமக்குள்ளிருக்கும் உள்ளுணர்வு அதைச் சுலபமாகப் பகுத்தறிகிறது. அந்த காமிக்ஸில் வரும் கதாநாயகர்கள் மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் சிவப்பிந்தியர்களின் பண்பாடு, இயற்கையோடு அவர்களுக்கு உள்ள உறவு, அவர்களது அழகியல் இதன் மேல்தான் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதை ஒட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்களைத் தேடி வாசிக்கும் பழக்கமிருந்தது. காமிக்ஸிலும் நிறைய வகைகள் உண்டு. மாடஸ்தி, நவீனமான துப்பாக்கி வைத்துக்கொண்டிருக்கும் நகரம் சார்ந்த காமிக்ஸில் எனக்கு விருப்பம் கிடையாது. சிக்பில் காமிக்ஸிலும், பூர்வ குடிகளுக்கு இடையே நடைபெறும் போர்கள் குறித்த எதிர்மறையான சித்திரம் இருக்கும். அங்கு ஒரு பாலம் அமைக்கவோ, கட்டுமானப் பணிக்கோ பூர்வகுடிகள் ஒரு தொந்தரவாக இருப்பது போன்ற பார்வை இருக்கும். கதாநாயகன் அங்குள்ள கொள்ளைக்கார்களை அழித்தொழித்து, பூர்வகுடிகளை ஒடுக்கி , கட்டுமானப் பணிகள் சீராகிய பிறகு வேறு ஒரு நகரம் நோக்கித் தனிமையில் பயணிப்பான். இதன்மேல் அப்போதே ஒரு விமர்சனம் இருந்தது.

அதற்கு அடுத்த கட்டமாக பாலகுமாரனை வாசித்தேன். நேரில் பார்க்கவும் அல்லது பார்த்தாலும் அருகே நெருங்க முடியாத ஐயங்காராத்துப் பேரழகிகள், அவர்களது வேட்கைகள், தொடைகள், சதைகள், முலைகள் என நாம் அடையமுடியாத எல்லாவற்றையும் அவரது கதைமாந்தர்கள் வழியே கொண்டுவந்து நம்மிடையே சிறப்பாக விற்பனை செய்தார் பாலகுமாரன். ஆனால் மோகமுள், அம்மாவந்தாள் போன்ற தி.ஜானகிராமனின் படைப்புக்கள், எம்.வி.வெங்கட்ராமன், லா.ச.ரா, தஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன் போன்றவர்களின் படைப்புகளில் வெளிப்படும் பாலியல் ஒரு தீவிரத்தன்மையில் நல்லவிதமாக எழுதப்பட்டது. பாலகுமாரனின் படைப்புகளில் முதல் பக்கம் மட்டும் தத்துவார்த்தமாகத் தெரியும், உள்ளுக்குள் போனால் போர்னோ தன்மையிலிருக்கும்.

நண்பர்களோடு மலையேறுவது, ஒரு குன்றிலிருந்து இன்னொரு குன்றுக்குச் செல்வது, கிணற்றில் மணிக்கணக்காகக் குளிப்பது என்றே பள்ளி வாழ்க்கை சென்றது. பள்ளிக்கு எதிராக ஒரு நூலகம் இருந்தது. மதிய வேளைகளில் அந்நூலகம் மந்தமாகவே இருக்கும். அங்கு யுனஸ்கோ கூரியர், அதில் வெளியாகும் படங்கள், கட்டுரைகள் வசீகரித்தன. அங்கே கூண்டிகின் கடற்பயணம் என்ற ஒரு சுவாரசியமான புத்தகம் இருந்தது. கடற்பயணம், பெரிய பாய்மரக் கப்பல்கள் கிளர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தன. பிறகு மேத்தா, அப்துல் ரகுமான் இப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது, அப்போது தேநீர்க் கடையில் ஒருவர், தமுஎச குறித்துக் கூறினார். அவர்களைப் போய்ப் பார்க்கும்படிச் சொன்னார்.

காமிக்ஸ் அல்லது இலக்கியப் பிரதிகளை வாசிப்பதோடு உங்களுக்கு வாய்மொழிக் கதைகள், வழக்காறுகளோடும் நெருக்கம் இருந்ததா? உங்கள் பிராந்தியம், குடும்பம் சார்ந்த தொன்மங்கள், புனைவுகளோடு…காமிக்ஸ் வழியாகப் பழங்குடிகளின் வேறு அழகியல் முறைகள் வசீகரித்தது போலவே இவற்றோடும் பயணம் இருந்ததா?

காமிக்ஸ், இலக்கியப் புத்தகங்கள் இது எல்லாமே புறமாக வாசித்த விஷயங்கள்தான். ஆனால் நமக்குள் அகமாகக் கட்டமையும் மொழி, புனைவு ஒன்று உள்ளது. எனக்கு என்னுடைய படைப்பு மொழி என்பது எனது அம்மா வழி வந்தது என்றுதான் சொல்வேன். நானும் அம்மாவும் சேர்ந்து ஒரு நாள் முழுதும் தொடர்ச்சியாகக் கடுமையாக வேலை பார்ப்போம். எனது அம்மாவிடம், வேலைகளில் துல்லியமான நேர்த்தி, அழகியல் இருக்கும். மிகவும் நேர்மையாக இருப்பார்கள். அவர்களிடம் ரொம்பப் பழைய காலத்தோட எத்திக்ஸ் மாதிரி ஒன்று இருக்கும். அம்மாவோட மொழிநடையே ஒரு புனைவம்சம் கொண்டதுதான். வாழ்க்கைச் சம்பவங்களை, தாத்தா பற்றிய கதைகளை, அந்தக்கால மக்கள், இது எல்லாமே அவ்வளவு ஒரு அடுக்காக, தொடர்ச்சியாகச் சொல்வார்கள். அம்மாவிடம் இருந்துதான் என் கதைக்கான மொழி உருவானது.

சிறுவயதில் இரவு நேரங்களில் எங்கேயாவது கோவிலில் போய்ப் படுத்துக்கொள்வேன். அங்கு திரௌபதி அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு நிறைய சாமியார்களெல்லாம் படுத்துக்கொண்டிருப்பார்கள். அவங்களிடம் போனால், உப்பேந்திரன்னு ஒருத்தனைப் பற்றிய கதையைச் சொல்வார்கள். ‘குதிரை வந்து விட்டை போடுது, அதுக்குள்ள இவன் இரவு நேரத்தில் தங்க நாணயத்தை மறைத்து வைத்துவிடுவான். காலையில் அதை ஒருத்தன் அள்ளிப் போடப் போவான். அவன் சரியான ஏமாத்துக்காரன், லாயக்காரன் அதை அள்ளிப் போடாதேன்னு சொல்வான். அதிலே தங்க நாணயம் இருப்பதாகச் சொல்லுவான். அவன் அந்தக் குதிரையைப் பெரிய விலை கொடுத்து வாங்கிவிடுவான். இந்த மாதிரியான விசித்திரமான வாய்மொழிக் கதைகளெல்லாம் அங்கே கேட்டிருக்கிறேன்.

அப்புறம் எங்க தாத்தா நிறையவே கதை சொல்வார். அவர் ஒரு நாட்டு வைத்தியர் போல. மாடுகளுக்கெல்லாம் வைத்தியம் பார்ப்பார். அவருடைய பையில் பார்த்தாலே, விசித்திரமான பொருட்களாக இருக்கும். அதில் குரங்கு வால், மண்டை ஓடு இப்படி. மண்டை ஓட்டை முன்னே வைத்து ஏதோ மந்திரம் சொல்ல வெள்ளை மண்டை ஓடு கறுப்பாக மாறிவிடும். அவர் ஒரு நாடோடி மாதிரி. தெருக்கூத்தெல்லாம் ஆடுவார். இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் விற்று நிறைய குடி, கூத்தி என்று வாழ்ந்தார். தாத்தா வழியாக நிறையக் கதைகள் பெற்றுள்ளேன். எங்கள் கடையில் ஒருவர் வேலை பார்த்தார். அவர் ஒரு திருடன் மாதிரி. ஒரு அநாதையான ஆள். விசித்திரமான கதைகள் பல சொல்வார். திருடர்களைப் பற்றிய பல கதைகளைச் சொல்வார். அவர் எனக்கு ஒரு முக்கிய ஆளுமையாக இருந்தார்.

சமகால நவீன கலை இலக்கியத் தளங்களோடு எப்போது தொடர்பு ஏற்பட்டது?

அது 1995, 96 இல் இருக்கும். அந்த வருடம்தான் பள்ளி முடித்து தமுஎசவோட தொடர்பு ஏற்பட்டது. எல்லா இடத்துலேயும் ஒருத்தர் ஏழையாக இருக்கிறார். ஒருவர் பணக்காரராக இருக்கிறார். ஒருவரிடம் சாப்பிடக்கூட எதுமே இல்லாமல் இருக்கிறது. ஒருவர் வளமாக வாழ்கிறார். இந்த ஏற்றத் தாழ்வுகள் மிகவும் தொந்தரவு செய்தன. எல்லோருக்கும் எல்லாம் சமமாகக் கிடைக்க வேண்டும், என்பது போல ஒரு தீவிர வெறியில் இருந்தேன். இதுபோன்ற விஷயங்களுக்கான காரணங்களை, தீர்வுகளைத் தேடும்போது அங்கு ஒரு நூலகத்தில் கம்யூனிச நூல்கள் அறிமுகமாயின. கார்ல் மார்க்ஸ், லெனின், எங்கல்ஸ் எழுதிய நூல்கள் அங்கு இருந்தன. ஆனால் அவை புரியாது. கொஞ்சம் புரியும், ஆனால் துல்லியமாக என்று சொல்ல முடியாது. அப்போதுதான் தமுஎசவோடு அறிமுகம் கிடைத்தது. இவர்கள்தான் சரியான ஆட்கள். இவர்கள் உடனடியாகப் புரட்சி நடத்திவிடுவார்கள் என எப்போதும் ஒரு பெரிய கற்பனை பண்ணிப் பார்ப்பேன். அவர்களிடம் போன போது தோழர்கள் ஒரு கடையில் உட்காந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படித்தான் தமுஎச தொடர்பு உருவானது.

அப்போது அவர்களிடம் ரொம்ப இன்னசென்ட்டாகவெல்லாம் கேள்விகள் கேட்பேன். நாம் எப்போது, எப்படி தோழர் புரட்சி செய்யப் போகிறோம் என… ‘ நிச்சயமாகச் சீக்கிரம் பண்ணிடுவோம் எனச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அப்போது’ நம்மிடம் ஆயுதங்கள் எதுவுமே இல்லையே தோழர், எப்படி தோழர்னு’ கேட்பேன்..’ இல்லை அதெல்லாம் கவலைப்படத் தேவையில்ல. நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தே அதெல்லாம் எடுத்துக்கலாம். அப்ப மிலிட்டரிலயும் இருக்குமே என்பேன், மிலிட்டிரிலயும் நம்ம ஆட்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு நாள் கட்சி ஆபீஸ் போய்ப் பார்த்தேன். நிறைய கட்சிக் கொடி, புத்தகங்கள், போஸ்டர்கள் இந்த மாதிரி விஷயங்கள்தான் இருந்தன. அப்போது நான் யோசித்தேன். புரட்சி வர ரொம்ப நாளாகும் போல என்று. நம் கையில் ஒன்றுமே இல்லை. புரட்சி எல்லாம் சீக்கிரம் நடக்காது என உணர்ந்து கொண்டேன். சரி இது நமக்குச் சரிப்பட்டு வராது நாம விலகிடுவோம் என் நினைத்தேன்.

அப்புறம் சில புத்தகங்கள் எல்லாம் படிக்கக் கொடுத்தார்கள். சுந்தர ராமசாமி புத்தகங்கள், க்ரியாவோட ஒட்டு மொத்தத் தொகுப்பு. தொண்ணூறு கதைகள் இருக்கும். ஏதோ ஒரு பெரிய தொகுப்பு. எனக்கு அது அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. நான் அவர்களிடமே சொன்னேன். அவர்கள் அந்தத் தொகுப்பைப் பெரிதாகப் பேசினார்கள். ஆனால் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்படவில்லை. என்னை அதிருப்தியுடன் பார்த்தார்கள். அப்புறம் அவர்களேதான் பாதசாரியோட ‘மீனுக்குள் கடல்’, ’காசி’ கொடுத்தார்கள். அது என்னை ரொம்பவே வசீகரித்தது. காசி பாத்திரம், அவனோட தர்க்க நியாயங்கள், மனோ நிலைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அந்தப் புத்தகம் படித்துவிட்டு நன்றாக உள்ளது என்று சொன்ன உடனே, ’அப்ப நீ தற்கொலை பண்ணிகிட்டுதான் சாகப் போகிற’ என்றார்கள். அப்போது அது ஒரு நெகடிவான புத்தகம். இதைப் படித்தால் தற்கொலை பண்ணிக்கொள்ளத் தூண்டும் அல்லது பைத்தியம் பிடிக்கும் போன்ற ஒரு பிரமை இருந்தது.

ஜே.ஜே.சில குறிப்புகள் படிச்சுட்டே சில பேர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்வார்கள். நான் பெரிய இன்டலச்சுவல் புக் அது என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சுந்தர ராமசாமியை நேரில் பார்த்ததும் அது தகர்ந்து போய்விட்டது. ஜே.ஜே, புளியமரத்தின் கதை போன்றவற்றைப் படித்துவிட்டு எனக்கு சுந்தர ராமசாமி மேல் முதலில் ஒரு வியப்பு இருந்தது. ஆனால் சுந்தர ராமசாமியை நேரில் பார்க்கும் போது அவர் தன்னுடைய ஆற்றாமை, ஆதங்கத்தைத்தான் தன்னுடைய எழுத்துல வெளிப்படுத்துகிறார்னு தோன்றியது. நானும் ஜீ.முருகனும்தான் அவரைப் போய்ப் பார்த்தோம். போய்ப் பார்த்து ஒரு மதிய நேரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் மேல் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ’அவுங்க என்ன மாதிரி எழுதிட்டு இருக்காங்க. என்ன வேகமா எழுதி நோபல் பரிசுலாம் வாங்கிடுவாங்க போல…’ என்று ஏளனமாகப் பேசினார். அது ஒரு பெர்சனல் மீட் மாதிரிதான். அவரோட ஆதங்கத்தைத்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு நான் ஜே.ஜே.சில குறிப்புகள் திரும்பவும் வாசித்தபோது அப்போது அறிமுகமாகியிருந்த லத்தீன் அமெரிக்க எழுத்துக்கும் இவர் என்ன எழுக்கொண்டிக்கிறார் என்பதற்கும் வித்தியாசம் தெரிந்தது.

எண்பதுகளின் இறுதியில் மார்க்சிய விவாதங்களின் நீட்சியாக, அமைப்பியல் பின்நவீனத்துவம் போன்ற கோட்பாட்டு விவாதங்களும் மறுபுறம் கனவும், மிகுபுனைவுகளுமான லத்தீன் அமெரிக்கக் கதைகளும் அறிமுகமாகின. இச்சூழலில் நவீனப் பகுத்தறிவு மரபு சார்ந்த யதார்த்தவாத எழுத்துக்கு மாறாக மிகு புனைவு, வாய்மொழிக் கதைகள், எதார்த்தவாதத்திற்கு அப்பாலான மயக்கவெளிகள் என உருவான கோணங்கி, பிரேம் ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புதிய புனைவுமொழிகள் இவற்றோடு உங்களுக்கு ஒரு நெருக்கம் உருவானதா. அவற்றை நோக்கிச் சென்றீர்களா?

ஆரம்பத்தில், கோணங்கியைப் படிக்கும் போது அப்படி ஒரு தன்மையைப் பார்க்க முடிந்தது. வேற ஒரு கதை சொல்லக்கூடிய தன்மைக்குள் அவர் போவதைப் பார்க்க முடிந்தது. கோணங்கியோட ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள், மதினிமார் கதைகள் இதெல்லாம் ஒரு சூழலை ஏற்படுத்தின. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் வந்த போது யாருக்கும் புரியவில்லை. கோணங்கி நிறைய உருமாற்றங்களை முன்வைப்பார். அவள் தண்ணீராகிறாள், சலனமாகிறாள், வேறொன்றாக ஆனாள். வேறுவேறாக அதற்குள்ளேயே கோர்த்துக்கொண்டே போவார். ஆனால் கதையை மட்டும் உருவி எடுத்துப் படித்துப் பார்த்தால் அவருடைய கதை இந்த நிலப்பரப்பு சார்ந்த, இதற்குள் இருக்கிற கதைகள்தான். மொழியில் அவர் முன்னும் பின்னும் போகிறார். காலத்துக்கு ஒரு எல்லையில்லாமல் போகிறார். குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் இருந்து கதை சொல்ல விரும்புவதில்லை என்கிற மாதிரி போகிறார். அது வாசிப்புக்கு ஒரு சவாலான வேலைதான். ஒரு தீவிரமான வாசகன்னு வரும்போது இது தேவை.

ஆனால் நான் ஒரு எழுதுபவனாக என்னளவில் எல்லாவற்றையும் வாசிக்கணும். ஆனால் யார் பேச்சையும் கேட்கக் கூடாது என நினைத்தேன். அதாவது எந்த எழுத்தாளரையும் பின் தொடரக் கூடாதென. நம்முடைய சொந்த விஷயங்கள், பயணங்கள், நம் அனுபவம் இவற்றில் இருந்து கற்றுக்கொள்வது, அதிலிருந்து ஒரு சரியான தனித்துவமான பார்வை உள்ளவனாக இருக்கவேண்டும். அதிலிருந்து எழுதவேண்டும். இப்படித்தான் நான் உருவாக்கிக் கொண்டேன். சில கோட்பாடுகள், தாக்கங்கள் வழியாக எழுதுவது எப்போதும் நிற்காது. அது ஒரு குறிப்பிட்ட காலத்தினுடைய ஸ்டைலில் இருக்கும்.

யதார்த்தத்தை எழுத வரும் ஒரு புது எழுத்தாளனுக்கு அவனது வீட்டில் ஒரு பெட்டி இருக்கு. அது அவனுடைய சாதியம் சார்ந்த, தன் சமூகம் சார்ந்த பெட்டி. அந்தப் பெட்டியில் ஒரு கதை இருக்கிறது. அது அந்த சொசைட்டியோட கதை. அந்தக் கதையை முதல் நாவலாகச் செய்கிறார்கள். இரண்டாவது மூன்றாவதில் அவர்கள் என்ன செய்வார்களென்பது தெரியாது. அப்போது நீங்கள் விரிவாகத் தேடுவதிலும், பயணம் செய்வதிலும், இன்னும் நெருங்கி இயற்கைக்குள் போவதிலும், வெவ்வேறு மனிதர்களைச் சந்திப்பதிலும், மற்றமை வழி ஒரு மறு ஆக்கம் கொள்வதும். இப்படித்தான் அடுத்த கட்டத்திற்கு வர முடியும். இல்லையென்றால் வெறுமனே இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து எழுதிக் குவிக்க வேண்டியதுதான்.

இந்த இடத்தில் நான் என்னுடைய பெரிய ஆதர்சமாக நினைப்பது யுவான் ரூல்ஃபோவைத்தான். யுவான் ரூல்ஃபோ இன்றைக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி எங்கேயுமே பொருத்த முடியும். ஏனென்றால் அது காலனிய ஆதிக்க வரலாற்றின் மீது கூர்மையான, சரியான பார்வையுடைய நாவல். வெளிப்படையாகப் பார்த்தால் டான் பெட்ரோ என்னும் ஒரு நிலப்பிரபுவினுடைய வாழ்க்கையை வேனலாக ஒரு வறண்ட இடத்தில் வைத்துக் கதையைச் சொல்லும் நாவல்தான். அங்கு இருப்பவர்கள் எல்லாரும் மறைந்து போனவர்கள். யாருமே இல்லாத இடத்தில் இருந்து ஒரு கதையைச் சொல்கிறது ‘பெட்ரோ பராமோ’. அது கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கும். இங்கே இருப்பதுபோல வழவழா கொழகொழா தன்மை, நைச்சியமாக எழுதுவது, வண்ணதாசன் மாதிரி கொழகொழன்னு மனித உணர்வுகளை அப்படியே மென்மையாக்கிக் கூழாக்குவது, ஐடியல் கேரக்டர்ஸ உருவாக்குவது அப்படியெல்லாம் இல்லாமல், ஹூயுமன் நேச்சரில் இருந்து நேரடியாக எழுதுவது இருக்கும். மனித சுபாவமும் மிருகங்கள் சுபாவமும் ரொம்ப வித்தியாசம் இல்லாமல்தான் இருக்கிறது என்பதை அதில் உணர முடியும்.

இயல்பிலேயே வாசிப்பதிலும் எழுதுவதிலும் அன்றாட, தினசரி வாழ்வனுபவம், தினசரி கதை மாந்தர்கள் மேல் உங்களுக்கு எப்பவும் ஒரு மன விலகல் இருந்ததா?

இருந்துகொண்டேதான் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நான் ஒரு வெறுப்பான வாசகனும் கூட. சில எழுத்தாளர்களை நான் படிக்கவேயில்லை. ஜெயகாந்தனெல்லாம் படித்ததேயில்லை. ஜெயகாந்தனைப் படிக்காமல் என்னய்யா! என்று கேட்டபோது சரி படித்துவிடுவோம் என்று ஜெயகாந்தன் புத்தகங்கள் எல்லாம் வாங்கி வந்து படித்தால், ஒரு ஐந்தாறு பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. படிக்காமல் இருப்பதால் ஒன்றும் இழப்பு இல்லை. புதுமைப்பித்தனிலேயே அதெல்லாம் இருக்கிறது. இப்போது ஜெயகாந்தனுடைய கதாபாத்திரங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் வரை வந்துவிட்டன. அந்தத் தொடர்களில் கரைந்து காணாமல் போய்விட்டன.

உங்களுடைய கதை உலகம் அதிகமாக ஐதீகங்கள், தொன்மங்கள், நாட்டார் கூறுகள், வழக்காறுகள் போன்ற புனைவம்சங்களுடன் ஒரு lore தன்மையில் அமைந்துள்ளது. ஒரு வலுவான நவீனத்துவ மறுதலிப்பு உணர்வு இதில் செயல்படுகிறதே?

இவான் ரூல்ஃபோ, லத்தீன் அமெரிக்க எழுத்து எனக்கு ஒரு முக்கியத் திறப்பு. அதேபோல இங்குள்ள யதார்த்த எழுத்துகளைப் படிக்கும் போது இவர்களை மாதிரி நம்ம எழுதக் கூடாது என்று தோன்றும். மித்தாலஜியோ, ஃபேன்டசியாகவோ எழுதும்போது பழைய சமூகங்கள் நோக்கிய ஒரு பயணம் நிகழ்கிறது. நமது மூதாதைகள், நமக்குமுன் வாழ்ந்த ஆதிச் சமூகங்கள் இவை நோக்கி ஒரு அழகியல்பூர்வமான தேடல் இருக்கிறது. இன்றும் வாழும் பழங்குடிச் சமூகங்கள் நோக்கி நான் நிறைய பயணம் செய்கிறேன். மலைகளுக்குச் செல்வேன். நானும் எனது நண்பரும் கொல்லிமலை, பச்சை மலை, கல்வராயன் மலை என எல்லா மலைகளுக்கும் நடந்தே பத்துப் பதினைந்து நாட்கள் சுத்தியிருக்கிறோம். அங்கு புழங்குகிற வாய்மொழிக் கதைகளையெல்லாம் சேகரித்து ஒரு புத்தகமாகப் போடலாம் என்று முயன்று ஆனால் அது நிறைவேறவில்லை. ஆனால் எனக்கு அது ஒரு பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.

நமது சுய விருப்பங்கள், ஆழ்மன ஆசைகள், கனவுகள் சார்ந்து நாம் விரும்பும் ஒரு சமூக அமைப்பு உள்ளது. நமது கனவுச் சமூகம். எனது விருப்பங்கள் சார்ந்து அப்படி ஒன்றைத்தான் என்னுடைய ஈட்டி கதையில் முன்வைத்துள்ளேன். அதில் வரும் ஒருவன் ஒரு கனவு காண்கிறான். கனவில் ஒருவனை அவன் குத்திவிடுகிறான். ஆனால் அதற்காக வந்து பொதுவில் நிஜத்தில் மன்னிப்பு கேட்பான். அப்படி ஒரு சமூகத்தை நான் கற்பனை செய்கிறேன். அதீதமான ஒரு நல்ல சமூகம் எப்படி இருக்கும் என ஒரு கற்பனைக்குப் போகும் போது, பழைய சமூகங்கள் கூட்டாக வாழ்ந்தது பற்றி, பங்கிட்டுக் கொண்டது பற்றி, ஒரு நோயாளியைப் பராமரித்ததைப் பற்றி, குழந்தைகளைக் கூட்டாகப் பொதுவில் வளர்த்தது குறித்து, பெண்களுக்குக் கற்பு மாதிரியான நெருக்கடிகளோ, பாலியல் தாக்குதலோ இல்லாத ஒரு வாழ்வு குறித்துப் பெரிய விருப்பம் ஏற்படுகிறது. ஆதிச் சமூகங்களில் நவீனச் சமூகத்தின் இவ்வளவு குழப்பங்கள் நெருக்கடிகள் இல்லை. நெருக்கடிகளற்ற பழங்குடிகள், தொல் சமூகங்களின் புனைவியல் சார்ந்த, ஒரு மாற்றுப் பிரதியை நான் உருவாக்கிக் கொள்கிறேன்.

காலனி ஆதிக்கச் சக்திகள் பெட்ரோலுக்கும், நாடு பிடிக்கவும் மற்றதுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போகும் போது அங்கே இருக்குற இனக்குழுக்களுக்குள்ளேயே போரை உருவாக்குகிறார்கள். அதற்கு முன்பாக அவர்களிடம் பிளவுகள் இல்லை. அப்பொகாலிப்டோ படத்தை எடுத்துக்கொண்டால், அது மாதிரியான கீழ்த்தரமான அரசியல் செய்யும் படத்தைப் பார்க்க முடியாது. இனக்குழுக்கள் தங்களுக்குள்ளாகவே பயங்கரமாக மோதிக்கொண்டு இருந்ததாகவும், அவர்களைப் பயங்கரமாகவும் கொடூரமானவர்களாகச் சித்தரித்து, கொலைகள் பண்ணிக் குவிப்பவர்களாகவும் காண்பித்து, அங்கு ஒரு ஸ்பானியக் கப்பல் போய்ச் சேரவும், லத்தீன் அமெரிக்காவில் இறங்கவும், அங்கே பெரிய சுதந்திரம், பெரிய மாற்றம் வந்தது என இந்தப் படம் சித்தரிக்கிறது. அப்போது இவர்களது வருகைக்கு முன்பாக அங்கு இருந்த தொல் சமூகங்கள், பழைய வரலாறுகள் குறித்துப் பேச வேண்டியுள்ளது. எங்கல்சின் ‘அரசு குடும்பம் தனிச்சொத்து’  போன்ற புத்தகம் குடும்பங்கள், நிறுவனங்கள், கட்டுப்பாடுகள் எந்தச் சமூகங்களில் தோன்றின என்பது பற்றி அளிக்கும் வெளிச்சத்தின் வழி பழைய சமூகங்கள் பற்றிய ஒரு ஏக்கம் கலந்த கற்பனை உருவாகிறது.

நான் சங்கப் பாடல்கள், குறுந்தொகையோ, புறநானூறோ படிக்கிறேன் என்றால் முதலில் உரையைப் படிக்க மாட்டேன். அதன் ஒலிகளைத்தான் பின் தொடர்வேன். உரை இல்லாமல் புரியாத வார்த்தைகளாக இருந்தாலும் அந்தச் சப்தங்களோடு எனக்கு ஒரு உலகம் உருவாகிறது. அதிலிருந்து நானாக ஒன்றைக் கற்பனை செய்துகொள்கிறேன். பிறகு உரையைப் பார்க்கும்போது ஓ…இதைத்தான் சொல்கிறார் போல என வேறு ஒரு உலகம் கிடைக்கிறது. வேற ஒன்றைக் கற்பனை செய்கிறேன். இசையைக் கேட்கிறோம். அதில் நம் கற்பனைக்குப் பல தளங்கள் உருவாகின்றன. ஒரு பிரதியைச் சப்தமாக, ஒலிகளாக அணுகும்போதும், அர்த்தங்களோடு அணுகும்போதும் இருவேறு பிரதிகள் கிடைக்கின்றன. அது ஒரு புதிய கற்பனைச் சாத்தியத்தைத் தருவதாக நினைக்கிறேன்.

உங்கள் கதைகளில் நில, பண்பாட்டுப் பெயர்க் குறிப்புகளோ, தனிப்பட்ட இனவரைவுக் குறிப்பீடுகளோ தவிர்க்கப்பட்ட ஓர் அடையாளமற்ற மூட்டமான தன்மை இருக்கிறது. பெயரற்ற மலைகள், பெயரற்ற நகரம் இப்படி, ஒருவித நாடோடித்தன்மை இருந்தாலும், வட்டாரம் சார்ந்த குறிப்பான மொழி, பண்பாட்டு அடையாளங்கள், பெயர்க் குறிப்புகள் தவிர்க்கப்படுதல் குறித்து?

பண்பாட்டு அடையாளங்கள் தவிர்க்கப்படவில்லை. அவை கதைகளுக்குள் இருக்கின்றன. ஆனால் நேரடி அடையாளங்களாக இல்லாமல் படிமங்களாகவும் உருவகங்களாகவும் இருக்கின்றன எனச் சொல்லலாம். ரொம்ப தூரம் சென்று பார்க்காத நிலவியல் பரப்புகளும், நுணுக்கமாக அணுகாத நிலவியல் காட்சிகளும் நாம் வாழ்கிற பகுதிக்குள்ளாகவே இருக்கின்றன. ஒரு நள்ளிரவில் எழுந்து மலை மீது ஏறினால், இதுவரை நீங்கள் காணாத அதிசயமான நிலக்காட்சியைக் காண முடியும். நகரத்தில் வாழ்பவர்களுக்கு அவர்களது ஊர் சார்ந்து நிலம் சார்ந்து ஞாபகத்தில் ஒரு பெயர் இருக்கிறது. மலைக்குப் பொதுவாகப் பெயர் கிடையாது. மலை இவர்களுக்கு முன்னாடியும் இருக்கிறது, பின்பாகவும் இருக்கிறது. ஆக, அது ஒரு பருண்மையான நித்தியத்தன்மையில் இருக்கிறது. ஆனால் ஒரு சிறிய அளவில் மனிதர்களுடைய மனத்திற்குள்ளாக இந்த மலை இந்த ஊரைச் சார்ந்தது என்னும் பதிவு இருக்கிறது. பெயரிடுதல் ஒரு அடையாளப்படுத்திக்கொள்வதாக இருக்கிறது. ஆங்கிலேயர் இங்கே ஆட்சியமைத்திருந்த போது தென்னிந்தியப் புலங்களும் குடிகளும் எனப் பதிமூன்று வால்யூம் புத்தகத்தைத் தொகுத்தார்கள். அவர்கள் இந்தச் சமூகத்தின் வரைபடத்தை, பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்காக ஆவணத்தைக் கையிலெடுக்கிறார்கள். இங்கிருக்கும் மக்கள் திரளை ஒரு பெயர் வழியாக அடையாளப்படுத்தி அவர்களது அறிவின் வழியே வரையறுக்க முயற்சிக்கிறார்கள். ஆக, பெயர்களைத் தவிர்க்கும்போது ஒரு உலகளாவியதன்மை வந்து சேர்கிறது. மலைகள் எல்லா இடங்களிலும் வெவ்வேறு தன்மையுடன் இருக்கின்றன. இதனால் ஒவ்வொருவருக்குமான சுதந்திரமான மனோவியல் காட்சி தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட பெயரால் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைத் தருவதென்பதே ஒரு அதிகாரம்தான். எழுத்தின் அதிகாரமாக இருக்கிறது.

உங்கள் கதைகளில் யதார்த்தத்தில் இல்லாத விசித்திர ஒலிகுறிப்புத்தன்மை கொண்ட பெயர்கள் (குக்கச்சி, ன்யாக், தேடு, டிம்பி இப்படி…) அதிகம் புழங்குகின்றன. அவை புனைவான பழங்குடித்தன்மையான அதீத ஒலிகளாக உள்ளன. இத்தகைய பெயர்கள் என்ன மனநிலையில் உருவாகின்றன?

இதுபோன்ற ஒலிக்குறிப்புத்தன்மை கொண்ட பெயர்கள் ஒரு பெரிய விடுதலையாக இருக்கிறது என நினைக்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு என்ன வேண்டுமானலும் கற்பனை செய்துகொள்ளலாம். திரும்ப வாசிக்கும்போது எனக்கே அது வேறு ஒன்றாகத் தோன்றும். நடப்பியல் சார்ந்த சங்கர், ஸ்ரீராம் இப்படிப் பெயர்களை வைக்கும்போது அந்தப் பாத்திரத்தின் சாதி அல்லது கலாச்சாரப் பின்புலம் சார்ந்து ஒரு விமர்சகன் எளிதில் யூகித்துவிட முடியும். அது அந்தப் பாத்திரத்தின் அகண்ட தன்மையைச் சுருக்குவதாக இருக்கிறது. நிஜ வாழ்வு சார்ந்த சங்கர் மாதிரி பெயர்களைப் பயன்படுத்தும்போது அதன் அடையாளம் குறித்த ஒரு கற்பனை, நினைவு ஏற்கெனவே உங்களுக்கு இருக்கிறது. அது வாசிப்பில் உங்கள் எல்லைகளைச் சுருக்கி விடுகிறது. இவையெல்லாம் பாரம்பரியத்தின் வழி முன்பே இருந்து வரும் பெயர்கள். எனவே ஒரு அடையாளமற்ற, குறிப்பற்ற பெயர் ஒரு விடுதலையும் கொண்டாட்டமும் அளிப்பதாக நினைக்கிறேன். சில நேரம் என்னுடைய டிஜிருடு இசைக்கருவியை வாசிக்கும்போது ஒரு கற்பனைத் தெறிப்பு, சில ஒலிகள், உருவகங்கள் எனக்குத் தோன்றும். அவற்றை நான் கதைகளில் எங்காவது பயன்படுத்திக் கொள்வேன். அது பாத்திரங்களோடும் ஏதோ ஒரு இசைமையுடன் பொருந்திப் போவதாகவே நினைக்கிறேன். அது கதைகளில் ஒரு தொடர்போடும் இருப்பதாகவே நினைக்கிறேன்.

உங்கள் கதைகளில் நவீனச் சமூகத்தையும் அதற்கு முந்தைய சமூகங்களையும் எதிரெதிராக நிறுத்தும் தன்மை உள்ளது. தொல்குடிகளின் வரலாற்றுத் தொடர்ச்சியில்தானே நவீனச் சமூகங்கள் பரிணமிக்கின்றன. தொல்மனிதனின் கல் கருவிகளுக்கும் நவீன அணு ஆயுதத்திற்கும் ஒரு சரித்திரத் தொடர்ச்சி இல்லையா. வன்முறை, அதிகாரம், வேட்டையாடுதல் போன்றவை அனைத்துமே தொல் சமூகங்களில் மிகத் தீவிரமாக இருந்துள்ளனவே.

பழங்குடிச் சமூகத்தின் தொடர்ச்சியில் இருந்து இந்த நவீனச் சமூகம் உருவாகவில்லை. காலனியாதிக்க வரலாறு தொடங்கியபோது பழங்குடிச் சமூகங்கள் பூமியின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தன. இந்தியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா இப்படி காலனி ஆதிக்க அரசுகளின் ஆக்கிரமிப்புகள், 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னான படையெடுப்புகள், தங்கம், வைரம், தேடிய வேட்டைகள் இவை திடீரென்று வரலாற்றில் ஒரு குறுக்கீடாக நிகழ்ந்தது. ஒரு பழங்குடிச் சமூகம் படி நிலையாக வளர்ந்து நவீனச் சமூகமாக மாறவில்லை. வரலாறு ஒரு குறுக்கில் வெட்டப்பட்ட நிலையில்தான் நவீனச் சமூகம் உருவானது. நாடு பிடிப்பதற்காகவும், வளங்களுக்காகவும் தங்கத்திற்காகவும் , வைரத்துக்காகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பயணங்கள், தொல் சமூகங்களைத் தன்போக்கான வளர்ச்சியை அடைய விடாமல் தடுத்துக் குறுக்கிட்டு வெட்டி அவர்களை அநாதையாக்கியுள்ளது.

ஒருவேளை பழமையான சமூகங்கள் மேல் நவீனத்துவத்தின் இந்தக் குறுக்கீடு இல்லாமல், அவை தன்போக்கில் இயல்பான வரலாற்று வளர்ச்சியை அடைந்திருந்தால் அது வேறு வடிவில் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக அது வேறு வடிவில்தான் இருந்திருக்கும். அது நம் கற்பனைக்குச் சவால் விடும் விஷயமாகக் கூட இருந்திருக்கும். இன்னும் வேறு தன்மையிலான குடிமை வந்திருக்கலாம். சிறு சிறு போர்கள் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் அது இயற்கையோடு முரண்படாத, இணக்கமான ஒரு வாழ்முறையாகத்தான் இருந்திருக்கும்.

நவீனத்துவம் ஒரு நேரான வளர்ச்சிப் போக்கு கிடையாது. நவீனத்துவத்திற்கு முன்பாகவே சிறப்பான வளர்ச்சி நிலைகள் இருந்துள்ளன. சிறப்பான கட்டடக் கலைகள், சிறப்பான அரசாங்கங்கள், சிற்பம், ஓவியம், இப்படி இருந்தன. எகிப்தை எடுத்துக் கொண்டால் அது எவ்வளவு பெரிய அமைப்பு. அதுவுமே ஒரு பழைய காலனியம்தான்.

ஆனால் எல்லாச் சமூக அமைப்புகளிலும் அதிகாரம், போர்கள், ஒடுக்குமுறைகள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதானே இருந்துள்ளன.

மனிதன் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அதிகாரத்தின் ஒரு வடிவத்தைக் கைகளில் வைத்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால் அவற்றின் வீச்சு? அப்போது சீரழிவுகள் எவ்வளவு குறைவாக இருந்தன என நாம் பரிசீலனை செய்ய வேண்டும். உதாரணமாகக் கல் உடைத்து எடுப்பதில் ஒரு பழைய மரபு முறையும் உண்டு. எங்கள் ஊரில் ஒரு சிறிய கல்குவாரி உள்ளது. கிட்டத்தட்ட நூற்றைம்பது, இருநூறு வருடங்களாக அங்கே கல்லை உடைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஐம்பது அறுபது அடிகள் கொண்ட ஒரு சிறிய குன்றுதான் அது. இருநூறு வருடங்களாக அங்கு கல் உடைத்து எடுக்கிறார்கள். ஆனால் மிகக் குறைவாகத்தான் அங்கு சிதைவு ஏற்பட்டுள்ளது. பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். மரப்பட்டைகளைப் போட்டு எரிப்பார்கள். பாறை அடுக்குகளில் (அடுக்கடுக்காகப் படிந்துதான் பாறைகள் உருவாகியிருக்கும்) உள்ள சிறிய இடைவெளிகளில் நெருப்பு மெலிதான விரிசலை ஏற்படுத்தும். பிறகு சிறு சுத்தியலை வைத்து அடிப்பார்கள். மயிரிழை போல ஒரு மெல்லிய கோடு உருவாகும், அதை வைத்துச் சிறிய பிளவுண்டாக்கிக் கற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பார்கள். இரண்டு நூற்றாண்டுகளாக இது தொடர்ந்தும் குன்று காணாமல் போகவில்லை. இது ஒரு மரபான முறையிலான தொழில்நுட்பம். ஆனால் இன்று இருக்கும் பிரம்மாண்டமான இயந்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மலைகளையே காணாமல் போக வைக்கின்றன. என்ன நடந்துகொண்டிருக்கிறது என எண்ணிப் பாருங்கள்.

இன்னொன்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், நியூட்டனின் ஆற்றலை அழிக்கவும் முடியாது ஆக்கவும் முடியாது, உருமாற்றத்தான் முடியும் என்ற கோட்பாட்டை எடுத்துக் கொள்வோம். அதன் சீரழிவை இன்று பார்க்கிறோம். அதை இதாகவும் இதை அதாகவும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இரும்பை எடுத்துக் காராக மாற்றலாம், மற்றொன்றாக மாற்றலாம். ஆனால் நிலவில் இருந்து ஒரு பெரிய பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டுவந்து இந்த பூமியில் வைத்தால் இந்த பூமியின் வாழ்க்கை முடிந்துவிடும். செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு பெரிய பொருளை கொண்டு வந்து இந்த பூமியில் திணித்தால் பூமியின் வாழ்வு முடிந்துவிடும். இந்த பூமிக்குச் சரியான ஒரு நிறை இருக்கிறது. இந்த நிறைக்குத் தகவமைந்த நிலையில்தான் அதன் இன்றைய சுழற்சி, இயக்கம் இருக்கிறது. இந்த நிறைக்குரிய பிரபஞ்ச ஈர்ப்பு விதிகளில்தான் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் நிறையைக் கொஞ்சம் கூட்டினாலும் குறைத்தாலும் அதன் இயக்கமும் சமனிலையும் குலைந்துவிடும். நவீனத்துவம் என்பது அப்படிப்பட்டதுதான். அது பேரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது.

நவீனமயமாக்கலின் வேர்களைப் பார்க்கும் போது, தொழில்புரட்சி, அறிவியல் மறுமலர்ச்சி வழி ஐரோப்பியச் சமூகத்தில் மூல வளங்களின் பற்றாக்குறையும், உற்பத்தியின் அபரிமிதமும் ஒருங்கே நிகழ்கிறது. ஐரோப்பியச் சமூகம் ஒரு நவீன குடிமைச் சமூகமாகப் பரிணாமமடைகிறது. ஆனால் அந்தச் சமூகங்களும் தனது மூலாதாரங்களில் பழங்குடிகளாகத்தானே இருந்திருக்கும். ஐரோப்பியச் சமூகம் ஒரு அறிவார்ந்த எக்ஸ்ப்ளோரர் சமூகமாக மாறினாலும் அந்தத் தன்மைகள் தொல் சமூகங்களில் இருந்து வந்த ஒன்றுதானே. பயணங்களின் வழி தேடுதல், வேட்டை என்பது ஒரு பழங்குடி இயல்பும் அல்லவா?

அது நிலவியல் சார்ந்த பிரச்சனைதான். ஐரோப்பியச் சமூகத்திற்கு வாழ்வதற்குத் தகுதியற்ற நிலவெளிகள் அவர்களிடம் நிறையவே உள்ளன. பனிப்பிரதேசங்கள் உள்ளன. அவர்கள் காலையில் எழுந்தவுடனே பருவ நிலை பற்றிதான் விசாரிப்பார்கள். அந்தப் பற்றாக்குறை அவர்களை உலகின் பல முனைகள் நோக்கிப் பயணம் செய்ய வைத்தது. அவர்கள் மேய்ச்சல் சமூகமாகவும் இருந்தார்கள். அங்கு நமக்கு உள்ள மாதிரியான விவசாயமும் கிடையாது. நைட்ரேட் வார் அதிலிருந்துதான் வந்தது. விவசாயம் வெற்றி பெறாத போது இரசாயனங்கள், தொழில்நுட்பம் வழி என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். அப்படித்தான் பயணங்கள் தொடங்கின. எப்போதும் பனியாகவே பெய்துகொண்டிருக்கும் ஒரு நிலவியல் நெருக்கடி அவர்களைப் பல்வேறு இடங்கள் நோக்கிப் பயணம் செய்ய வைத்தது. இந்தியச் சமூகத்தில் வேறு மாதிரியான பயணங்கள். ஒரு பழங்குடி மலையில் இருந்து கீழறங்கி வருவதே ஒரு பயணம்தான். இங்கு சரியான சூழல், நிலம் உள்ளது. தேவைக்கேற்ற தாவரங்கள், விலங்குகள் உள்ளன. ஆப்பிரிக்கர்கள் எங்கும் நாடு பிடிக்கப் போகவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வளங்கள் சார்ந்த தன்னிறைவு இருந்தது. லத்தீன் அமெரிக்கப் பழங்குடிகளும் யாரையும் ஆதிக்கம் செய்யச் செல்லவில்லை.

நவீனத்துவச் சமூகத்தின் ஒரு முதிர்வில், உச்சத்தில்தான் ஒரு விடுதலையை அடைய முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் எல்லோருமே நம்பி இருக்கிறார்களே. ஐரோப்பிய நவீனத்துவத்தை இங்குள்ள சமூக விடுதலை அரசியல் பேசிய ஆளுமைகள் மிகவும் ஊக்கத்துடன் பார்த்துள்ளனர். நவீனத்துவத்திற்குள்ளேயே செயல்பட்ட அதிகாரத் தரப்புகளின் பொருளாதாரச் சுரண்டல்கள் வழிதானே இன்றைய நிலைமை அல்லது நவீனத்துவத்தின் அடிப்படையிலேயே உள்ளார்ந்த பிரச்சனை இருப்பதாகப் பார்க்கிறீர்களா?

நவீனச் சமூகம் இன்றைக்குக் கொஞ்சம் வளர்ந்து மேலேறி மாறி குறிப்பிட்ட ஒரு கார்ப்பரேட் சமூகமாகப் பரிணமித்துவிட்டது. எல்லோருக்குமான விடுதலை, சமத்துவம் போன்ற நவீனத்துவ விழுமியங்களின் கட்டத்தைத் தாண்டி இன்று கார்ப்பரேட் மயமாகி வேறொரு வடிவத்துக்கு வந்துவிட்டது. இப்போது நமது விமர்சன முறைகள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியுள்ளது. அன்றைக்கு ஐரோப்பியக் கல்வி வாய்ப்புகளில், இங்குள்ளவர்கள் அங்கு சென்று படித்து விட்டு வந்த காலனியக் கட்டத்தில், மேற்கில் அவர்களுடைய உள்நாட்டுக்குள்ளேயே ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. அவர்கள் உலகம் முழுதும் பரவி, அதிகாரம், அரசாங்கம், வணிகம் செய்துகொண்டு அங்கிருந்து வளங்களைக் கொள்ளை அடித்துக்கொண்டு போகும் ஒரு வாழ்க்கை இருந்தபோது, அவர்களுக்குள்ளாகவே எதிர்ப்புகளும், சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உருவாகின.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலோ பிற காலனிய நாடுகளிலோ குடியேறிய ஆதிக்க நாடுகளின் பிரஜைகள் அங்கேயே நெடுநாள் தங்கி, நாளடைவில் அவர்களே தாங்கள் குடியேறிய நாடுகளின் பூர்வகுடி போல மாறிப் போனார்கள். பின்னர் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவே போர்த் தொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அமெரிக்காவில் சுதந்திரப் போராட்டம் அப்படித்தான் நிகழ்ந்தது. முதலில் அங்கு உள்ள பழங்குடிகளைக் கொன்று குவித்தார்கள். அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்தார்கள். பல்வேறுவிதமான சடங்குமுறைகள், வழிபாட்டு முறைகள், வழக்காறுகள் இருந்த மக்களைக் கொன்றுவிட்டு, ஆனால் அதற்குப் பிறகு தங்களின் சுயாதிக்கத்திற்காக, விடுதலைக்காகப் போராடினார்கள். இவர்களுடைய தாய்நாடு இவர்கள் மேல் விதித்த வரிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து இவர்களே போராட ஆரம்பித்தார்கள். இன்றைக்கு இந்த வரலாறுதான் சொல்லப்படுகிறது. நாம் அதற்கு முந்தைய வரலாறுக்குத்தான் போக வேண்டியுள்ளது. ஆனால் உண்மையான பூர்வகுடிகள் இந்தத் தரப்பினரால் ஒடுக்கப்பட்டவர்கள்தான். இவர்களைச் சமாதானப்படுத்தத்தான் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போன்ற தத்துவவாதிகள், ஹென்ரிக் தோரோ போன்றவர்கள், எமர்சன் மாதிரியான சிந்தனையாளர்கள் ஜனநாயகத்தை அங்கே கட்டமைக்க முயற்சி செய்தார்கள். அதை உலகெங்கும் கொண்டு போக முயன்றார்கள். அங்குள்ள காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளின் மக்களுக்குக் கல்வி அளித்தார்கள். ஒரு உடன்படிக்கை, சமரசத்துக்கு முயன்றார்கள். அப்படித்தான் இங்கிருந்து அம்பேத்கர் போன்றவர்கள் கல்வி வாய்ப்பு பெற்றுப் போனார்கள். அந்தக் கட்டத்தில் இங்குள்ள மக்களுக்கு அது ஒரு விடுதலையாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. இங்கு உள்ளூரில் உள்ள சாதியக் கட்டுமானம், இறுகியதன்மை போன்றவற்றின் சூழலில் அன்றைக்கு நவீன கல்வி ஒரு பெரிய விடுதலையாகத் தோன்றியிருக்கும்.

அம்பேத்கர் அந்த நிலைப்பாட்டில் இருந்து பேசினார். ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறியுள்ளன. பல நாடுகளில் கிளர்ச்சி எழுந்துள்ளது. (காங்கோவில் நடந்ததைப் போல) வெள்ளைக்காரர்களைக் கொலை செய்வது, அவர்களது பெண்களைப் பலாத்காரம் செய்வது, உடைமைகளைப் பறிப்பது, தீ வைத்துக் கொளுத்துவது இதுபோன்று நிறைய நிகழும் போது சொந்த மக்களை மீட்கும் பயம் வருகிறது இல்லையா. அப்போதுதான் மற்றுமொரு புதிய டிசைன், வடிவத்திற்குப் போகிறார்கள். அதிகாரத் தகவமைப்பு நடக்கிறது. நவீனத்துவத்திலிருந்து கார்ப்பரேட் வடிவத்திற்குப் போகிறது. அதன் நிர்வாக முறையில், நேரடியாக மேலாண்மை செய்யும் ஆள் தேவையில்லை. ஒரு நாட்டை காலனியாக்கி அங்கு நேரடியாகப் போய் அமரத் தேவையில்லை. அங்குள்ள வளங்களை எல்லாம் எடுத்தாயிற்று. இப்போது எல்லோரையும் நுகர்வோராக மாற்றி விடுவதுதான் தேவை. பொருட்களை வாங்குவதற்கு ஆட்கள் வேண்டும். அவர்களின் அரசியல் வேறொரு தளத்திற்கு மாறுகிறது. அன்றைக்கு நவீனத்துவம் விடுதலையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அது பெரிய அவநம்பிக்கையைத்தான் தருகிறது.

அம்பேத்கரியக் கருத்தியல்களின் இயல்பான வரலாற்று வளர்ச்சிப் போக்கிலேயே இன்று நவீனத்துவத்திற்கு எதிரான ஒரு சிந்தனை உருவாக வாய்ப்பு உள்ளது என்கிறீர்களா?

கண்டிப்பாக. இன்று அம்பேத்கர் இருந்திருந்தால் இந்தச் சூழலை எதிர்த்துதான் பேசியிருப்பார். முதல் சூழலியலாளராக அவர்தான் இருந்திருப்பார். இன்றைய நிலையில் சூழலியல் ஒரு முக்கிய அரசியலாக மாறியுள்ளது. அது எல்லா அரசியல் தரப்புகளும் கையில் ஏந்த வேண்டிய ஆயுதமாக உள்ளது. இடதுசாரிகளும் அதனை நோக்கி வர வேண்டியுள்ளது. இனியும் முதலாளி – தொழிலாளி, வர்க்கப் போராட்டம், அதன் வழி புரட்சி வரும் என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. இன்றைக்கு முதலாளி யார் என்பதே தெரியாது. எந்த முதலாளியை எதிர்த்துப் போராடுவது. இன்று முதலாளியே இல்லை. இன்றைக்கு எல்லாம் வேறு தளத்திற்குப் போய்விட்டது. மூலதனமே எல்லாம் பங்கு வடிவில் நுட்பமான உருவுக்குச் சென்றுவிட்டது. முதலாளி நம்மிடையிலேயே கூட இருப்பார். நம்முடனேயே தேநீர் அருந்துபவராக இருப்பார். ஒரு நிறுவனத்தின் தலைவர் யார், அவர் எங்கே இருக்கிறார் எதுவும் தெரியாது.

முன்பு இன்னின்ன பொருளை இவர்இவர்தான் நுகர வேண்டும் போன்ற பேதங்கள் ஏற்ற்த் தாழ்வுகள் இருந்தன. யார் வேட்டி கட்டலாம். யார் கட்டக் கூடாது என்று. ஆனால் இன்று உலகமயமாக்கல், சந்தைப் பரவல் எல்லோரிடமும் பொருளைக் கொடுத்திருக்கிறது. ஆனால் பொருளாதாரத்தைத் தரவில்லை. பொருளாதாரத்தை அது எப்போதுமே தராது. இன்று அதன் வடிவமே எப்படி உள்ளது என்றால். நீ தலித்தாகவோ, கிறித்தவராகவோ, இந்துவாகவோ யாராக வேண்டுமானாலும் இருந்துகொள். ஆனால் பொருளை மட்டும் வாங்கிக் கொள். பொருளை மட்டும் நுகர்வதற்கான ஆளாக இரு. ஒரு நுகர்வோராக எல்லோரையும் மாற்றுகிறது. இதுதான் நவீனத்துவத்தின் இன்றைய தகவமைப்பு.

ஆனால் நவீனத்துவம் என்பது ஒற்றையானது இல்லை அல்லவா. மனித விடுதலைக்கான ஒரு பெரிய ஊக்கம் நவீனத்துவத்தில் செயல்பட்டுள்ளது. நவீனத்துவமும் அதன் அறிதல் முறைகள் கூடப் பகுத்தறிவு, அறிவொளிக் கண்ணோட்டம், அறிவு மைய வாதம் இவை எல்லாம் விடுதலை அரசியல்களுக்குத் தோழமையான கருத்தியல்களாக இருந்த ஒரு கட்டம் இருந்ததுதானே?

ஆனால் நவீனத்துவத்தின் கருத்தியல் தளங்கள் அனைத்தையும் அன்றைய அரசுகள், அதிகாரச் சக்திகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதையே பார்க்கிறோம். போராடும் தரப்புகளோடு சமாதான உடன்படிக்கைகள் செய்து கொண்டு அவர்களைப் புதிய முறையில் ஆட்சி செய்யவே அவை பயன்பட்டன. இந்தியாவில் அம்பேத்கர், பெரியார் காலத்தில் இங்கு நிறைய மாற்றங்கள் வந்தன. இங்கு பகுத்தறிவு, கேள்வி கேட்கும் தன்மை எல்லாம் வந்தது. இவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருந்த தலித் மக்களுக்கு விடுதலை நோக்கிய ஒரு குறைந்தபட்ச வெளிச்சம் கிடைத்தது. அது மாடர்னிசத்தோட ஒரு அறிவுதான். ஆனால் அது பொதுவில் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டியுள்ளது. பொதுவில் அது அதிகாரத்தைப் பாதுகாக்கத்தான் இயங்குகிறது. உதாரணமாக ஒரு பழத்தை எடுத்து என் கையில் கொடுத்துச் சாப்பிடச் சொல்கிறீர்கள். ஆனால் நான் அதைச் சாப்பிடும் நேரத்தில் இந்த மரத்தையே உங்களுடையதாக ஆக்கிவிட்டீர்கள். ஒரு துண்டுதான் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். நவீனத்துவம் ஒரு சில துண்டுகளை எல்லோருக்கும் கொடுத்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்த மரமும் அவர்களிடம் திரும்பச் சென்றுவிட்டது. இன்றைக்கு அது புது வடிவம் எடுத்துள்ளது. பின்காலனியத் தன்மைக்கு மாறியுள்ளது. இப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் ஆட்சி செய்து கொள்ளலாம். பத்து நிறுவனங்கள் இந்தியாவையே கட்டுப்படுத்தலாம்.

இந்தப் புதிய மாற்றங்களை எதிர்கொள்வதில் யதார்த்தவாத கதை சொல்லல் முறைகளில் என்ன போதாமையைப் பார்க்கிறீர்கள்?

யதார்த்தவாதிகளின் கதையை, சமூகச் சிந்தனையை எதார்த்தப் புனைவில் வைக்கும் கதைகளை ஏன் மறுக்க வேண்டியுள்ளது என்றால், ஒருவர் ஒரு கதை எழுதுகிறார், ஒரு கிராமத்தில் ஒருவன் இருந்தான். அவனைப் பாம்பு கடித்துவிட்டது. அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு நல்ல சாலை இல்லை. அதனால் அவன் செத்துப் போய்விட்டான். அவன் குடும்பம் நடுவீதியில் நின்றது. இந்தக் கதை நல்ல சென்டிமென்டலாக உள்ளது. ஆனால் இப்போது நீங்கள் கேட்காமலே உலகமயம் உங்கள் தலையில் ரோடுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த மாதிரி எழுதப்படுகிற கதைகளை ஆவணப்படுத்தி டாகுமென்டாக்கி அவன் முன்வைப்பான். உங்கள் மனதிலேயே உங்கள்மீதான எதிர்ப்பையும் நீங்கள் அறியாமலேயே புகுத்திவிடுவதன் உலகமயத்தின் சூட்சுமம். அந்தக் கதையை வாசிக்கும்போது அந்த ரோடு மட்டும் இருந்திருந்தால் அவன் பிழைத்திருப்பான் என நினைக்க வைக்கும். ஆனால் ரோடு இருந்தாலும் செத்துதான் போவான். இப்படித்தான் அது இயங்குகிறது. நமக்கான குடிமை நெறிகளை அவர்கள் கற்பிப்பார்கள். நவீனத்துவத்தின் வழி உலகெங்கும் கொண்டு சென்று எல்லோர் முதுகிலும் சிலுவையை அறைந்து விட்டார்கள். சிலுவையைத் தூக்கிக் கொண்டே திரிய வேண்டியதுதான்.

இப்போது தமிழ்நாட்டிற்குள் ஒரு உள்காலனியம் உருவாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. பயணங்களின் போது பார்த்தால் நிறைய இடங்களில் வேளாண்மை செய்யப்படாத காலி இடங்கள், தரிசாக விடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பார்க்க முடிகிறது. அது ஏதோ ஒரு அரசியல்வாதியினுடையதோ அல்லது அவரது பிரதிநிதியோ வாங்கிப் போட்டிருக்கிறார். அதை ஒரு ரகசிய மூலதனமாகப் போட்டு வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் பற்றிப் பேசுவது, விவசாயம் பொய்த்துப் போய்விட்டது என்று பேசுவது எல்லாம் பொருளற்றதாகி விடுகிறது. அந்த நிலத்தை அவர் ஏதோ ஒரு பன்னாட்டுக் கம்பெனிக்கோ எதற்கோதான் தரப் போகிறார். அவன் அங்கிருந்துகொண்டு இங்கு தனக்குத் தேவையான நிலங்களை வங்கிச் சேமிப்பு போல சேமித்துவைக்கிறான். இந்த வெறுமையான நிலத்தோடு இங்குள்ளவர்கள் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாது. பெட்ரோ பராமோ நாவலில் டான் பெட்ரோ அதைத்தான் செய்வான். தன்னுடைய நிலங்களில் எந்தச் செயல்பாடுமின்றி அப்படியே வறண்டுபோக விட்டுவிடுவான். எந்த உயிர்ப்புமின்றி அதனைப் பாழடைந்துபோக வைப்பான். அவன் அதை ஏன் செய்கிறான் என்றால், அவன் ஒருத்தி மேல் பெரிய காதலுடன் இருப்பான். அவள் வேறொருவனோடு, ஒரு தீவிரமான காதலோடு அதன் நினைவுகளுடன் ஒரு பைத்திய மனநிலையி இருப்பாள். அவளை இவன் கடைசியில் கடத்திக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு அவளுடைய பார்வைக்காக, காதலுக்காக ஏங்கி எல்லாவற்றையும் கைவிரித்து அந்நகரையே ஒரு பாழ்நிலமாக மாற்றுவான். ஒரு நிலப்பிரபுவினுடைய சின்ன காதல்கூட ஒரு பெரிய பாழ்நிலத்தை உருவாக்கும் , ஒரு சமூகத்தையே சீரழிக்கும் என்று சொல்லப்படும். பெட்ரோ பராமோ நாவலில் அத்தனை அடுக்குகள் உள்ளன. அப்படித்தான் தமிழ்நாட்டிற்குள்ளும் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

இடத்திலும் காலத்திலும் உங்கள் கதைகள் எங்கோ தொலைதூரத்தில் நிகழ்ந்ததான தோரணையில் உள்ளன. நாட்டார் கதைகளின் இந்த அம்சம், எப்போதும் தொலைவான ஒரு கடந்த காலத்தையே கதையாடும் ஒரு வழக்காற்றுத்தன்மையிலேயே உங்கள் கதைசொல்லி கதை கூற விரும்புகிறான் இல்லையா?

கொஞ்சம் உருவகமாக அதற்கு அப்படி ஒரு தன்மை வருகிறது. அது தனிப்பட்ட எனது ஏக்கத்தின் அடிப்படையில் உருவானது எனலாம். அதாவது தொலைவுகளைப் பற்றி, வேறுவேறு நிலப்பகுதிகள் பற்றி, போக முடியாத ஊர்களைப் பற்றி எப்போதுமே ஒரு கற்பனை, ஏக்கம் உள்ளது. பின்னர் தீவிர முயற்சி எடுத்துப் போவது; அங்கே போய்விட்டால் இன்னொரு தூரமான இடத்துக்குப் போக நினைப்பது. இருக்கிற இடத்தில் போதுமான விசயங்கள் இல்லை என்கிற போதாமை, பயணம் செய்கிற மனநிலையைத் தூண்டுகிறது. இங்கிருக்கும் எதார்த்தத்தை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிகழிடம் என்பது சலிப்பூட்டக்கூடியதாக உள்ளது. அந்தத் தன்மையிலிருந்து இன்னொரு இடத்தைக் கற்பனை செய்கிறோம். ஒரு ஊரைக் கற்பனை செய்றோம். ஒரு மலையைப் பற்றி வாசிக்கிறோம். உடனே அந்த இடத்துக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறோம். அங்கே போன பின்னால் அங்கே உள்ள எதார்த்தம் வேறு ஒன்றாக இருக்கிறது. சில நேரம் ஒரு பெயரே பயணத்துக்கான மனத்தூண்டலை அளிக்கிறது. அங்கே இருக்கும் மனிதன் இன்னொரு இடத்தை நினைக்க ஆரம்பிக்கிறான். அங்கேயே இருந்து கொண்டு லௌகீகமாக வாழ்தல் என்பது வேறு.

நம்முடைய கற்பனை, ஏதாவது ஒரு இடத்துக்குப் போகச் சொல்கிறது. அந்தத் தூரம்தான் ஒரு கனவாகவும், ஏக்கமாகவும் எப்போதுமே இருக்கிறது. அந்த இடத்துக்கு நிஜத்தில் போய்ச் சேர்வதும் போகாமல் இருப்பதும் வேறு. அந்த இடத்தை இங்கிருந்தே உருவகப்படுத்திக் கொள்வது புனைவு வழியான ஒரு சாத்தியம். வாய்மொழி வழக்காறுகளில் அது உண்டு. ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையின் மேலேயே இன்னொரு கதை சொல்லப்படுகிறது. வழக்காறுகள், பைபிள் போன்றவற்றிலும் ஏற்கெனவே இருக்கும் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்வது என்பது உண்டு. அதன்மேல் தங்களுடைய யதார்த்தங்கள், நினைவுகளைப் படிய விடுவதுண்டு. தொலைவுகளைப் பற்றி எழுதுவது அப்படி ஒரு மன நிலையில் இருந்துதான் வருகிறது. வேறுவேறு வண்ணங்கள், தொலைவுகள், வேறுவேறு நிலக் காட்சிகள் வருகின்றன. அவற்றுக்குப் பெயர் இல்லை. கனவு போன்ற தூரங்கள் பற்றிய ஒரு விசித்திர ஈர்ப்பு எப்போதுமே உள்ளது. ஆனால் அவற்றை வெறும் கற்பனையாக எழுதுவதில்லை. நமது சமகால எதார்த்தத்தின் ஒரு சாராம்சத்தில் இருந்துதான் எழுதுகிறேன்.

அது ஒரு கடந்த காலத்தை நோக்கியதாகவோ அல்லது எதிர்காலவியல் தன்மையிலும் அமையலாம். எதிர்காலத்தை ஒரு தொலைவில் வைத்தும் கதைகள் எழுதலாம். நாய் டாக்டர் ஒரு ஃப்யூச்சர் கதை மாதிரிதான். அது இப்போது இருக்கிற ஒரு எதார்த்தம்தான். ஆனால் அது ஒரு ரகசியமான மறைவில் இருக்கும் எலும்பு, வியாபாரம், சதை வியாபாரம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அதில் சாதியம் சம்பந்தமான விசயம் நிறைய எழுதப்பட்டிருக்கு. இன்றைக்கு ’விந்து’ பார்சலில் கொரியரில் போகிறது. சாதியோட விந்தாக இருப்பதில் கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த மாடர்னிட்டியில் பழமை எதுவும் முற்றிலும் மாறவில்லை.

உங்கள் கதைகளில் வரும் கதைசொல்லி சில இடங்களில் ஒரு எக்ஸ்ப்ளோரர் மாதிரி வருகிறார். ஒரு பயணி மாதிரி வந்து வெளியேறுகிறார். உதாரணமாக ஈட்டி கதை. கதைகளின் உலகத்துக்கும், கதைசொல்லிக்கும் இடையே ஒரு இடைவெளி, ஊடாட்டத்தைப் பார்க்க முடிகிறது. ஒரு பாரம்பரிய மனோநிலையும் இருக்கிறது. அதை ஒரு நவீனப் பிரக்ஞை அவதானிப்பதும் இருக்கிறது…

ஈட்டி கதையில் வருவது நம்முடைய டபுள்தான். நான் என்ன மனஇயக்கத்தில் இருக்கிறேன். எனது சுபாவங்கள், நான் விரும்பும் ஒரு சமூகமாதிரி இதிலிருந்துதான் பழங்குடிகள் நோக்கிய, மலைகள் நோக்கிய பயணம் நிகழ்கிறது. மலைகளை, காடுகளை நாடிச் செல்வது. இது ஒரு நவீன கால மனிதனுடைய நெருக்கடி. அமெரிக்காவில் ஹிப்பீஸ் அப்படிச் செய்தார்கள். நாங்கள் செவ்விந்தியர்களாக மாறுகிறோம் என்றார்கள். பழங்குடிக் கூட்டு வாழ்கைக்குப் போனார்கள். அப்புறம் ரெயின்போ கேதரிங்க்ஸ்-னு ஒரு குழு இருந்தது. ஹிப்பீஸ் சுருங்கிப் போன பிறகு உருவானது அது. எங்கேயாவது, ஏதாவது ஒரு காட்டில் கூடுவது. அங்கு ஒரு கம்பை நட்டுவைத்துத் தலைவராக ஒருத்தரைத் தேர்வு செய்வார்கள். அதாவது இந்த நவீனச் சமூகம் எங்களுக்கு வேண்டாம். இந்த மாதிரி அதிகார மையங்கள்; கலாச்சார நிறுவனங்கள் இல்லாத இடம், வேறொரு சமூகத்தை நோக்கிப் போவதற்கான ஒரு உந்துதல். இது நவீனகால மனிதனின் ஏக்கமாக இருக்கிறது. இது அவனது மனநெருக்கடி. குறைந்தபட்சம் இந்த நெருக்கடியிலிருந்தாவது, குற்ற உணர்ச்சியிலிருந்தாவது தப்பி வெளியேறி எங்காவது போவதற்கான ஒரு ஸ்பேஸ் தேவைப்படுகிறது. ஆனால் அங்கே அவனால் முழுமையாகப் போக முடியாது, போகிறான். திரும்பி வருகிறான். இன்றைக்கு அது தொழில்மயமாக மாறி உள்ளது. சாமியார்கள் கையில் சென்றுள்ளது. அவர்கள் அதைப் பெரிய கார்ப்பரேட் தொழிலாக மாற்றி உள்ளார்கள்.

உங்கள் நவீன குற்றவுணர்ச்சி உருவாக்குகிற அழுத்தங்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிற இடமாக அது இருக்கிறது. ஈட்டி கதையில் ஒருவன் இரண்டு கேரக்டராக மாறி அங்கே மலைக்குப் போகிறான். ஒருவன் அங்கேயே தங்கி விடுகிறான். ஒருவன் திரும்பிவிடுகிறான். அது நமக்குள்ளேயே இருக்கும் டபுள்தான். நான் எனது ஒரு பகுதியை, அம்சத்தை அங்கே விட்டு வந்து விடுகிறேன். அங்கு அவன் இப்போதும் வாழ்வதாக, வேலை செய்வதாக, அவர்களுள் ஒருவனாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். எனது ஆன்மா ஒன்று அங்கு வாழ்வதாக நினைத்துக் கொள்கிறேன். இப்படி ஒரு டபுள்தான் அது.

நவீன மனிதனின் இந்தக் குற்றவுணர்ச்சி, மன நெருக்கடியை கார்ப்பரேட் சந்தை செய்வதற்கு மாற்றான ஒரு தளம் இது. டால்ஸ்டாயின் தன் நாவல்கள் வழி கிறித்தவ சமயவியல் சார்ந்த குற்றவுணர்ச்சியை வண்டி வண்டியாக நம் தலைகளில் இறக்கிவிட்டார். ஸெடெப்பி வெளி முழுவதும் குற்றவுணர்வுடைய கிறித்தவம் சார்ந்த ஒரு உளவியலில் பெரும் பகுதி இருக்கிறது. நம்மைப் போன்ற இத்தனை ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இந்தக் குற்றவுணர்ச்சிக்கு என்ன இடம் இருக்கிறது. ஸ்டெப்பி வெளி போன்ற அத்தனை நாடோடிகள், பழங்குடிகள் நிறைந்த ஒரு நிலவெளியை அவர் முழுக்க முழுக்கக் குற்றவுணர்ச்சியால் நிறைக்கிறார். இதை நாம் ஏன் ஏற்க வேண்டும். பைபிள் நம்மைப் பாவி என்கிறது. நாம் என்ன பாவம் செய்திருக்கிறோம்.

உங்கள் கதைசொல்லலில் ஒரு வட்டத்தை முடிப்பது போல, முழுமையைச் சுழித்துக் கதையாடும் பாணி உள்ளது. கதையில் ஒரு மர்மத்தன்மை உருவாகி பின் இறுதியில் ஒரு வெளிச்சம் வருகிறது. சிறுகதையின் நவீன மரபிற்கு இந்த வடிவம் புறம்பானதல்லவா.?

கதையை முழுமையோடு சொல்லி முடிப்பதில் ஒரு வாய்மொழி மரபு சார்ந்த அழகியல் உள்ளது. அது கதைசொல்லியின் ஒரு மன அமைப்புதான். பின் நவீனத்துவத்துக்குப் பிறகு துண்டித்தல் என்பது முன்வைக்கப்பட்டது. ஆனால் நமக்கென்று ஒரு கதைசொல் மரபு உள்ளது. நிறைய கதைகள் சிறு வயதில் கேட்டிருக்கிறோம். கதையின் முடிவு என்ன எனக் கூறச்சொல்லி அடம்பிடித்துள்ளோம். சில நேரம் கதையை சுவாரஸ்யத்துடன் சொல்லி முடிவை மட்டும் பிறகு சொல்வதாக எழுந்து சென்றுவிடுவார்கள். நமக்கு மிகவும் அதிருப்தியாக இருக்கும். இதெல்லாம் மனதில் தேங்கியுள்ளது. சில பொருள்கள், சுவை சம்பந்தமான நினைவு நம்மைச் சாவு வரையில் துரத்துகிறது. ஒரு கதையை நான் முழுமையாகச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அந்தரத்தில் விட முடியாது. கதைக்கு ஒரு காரணம் உள்ளது. இந்தக் காரணத்தை முடிவு அவிழ்க்கிறது. அதனையே இன்னொரு கதைக்கான முடிச்சாகக் கொண்டு போகலாம்.

90 களில் பரவலாக செல்வாக்கு பெற்ற மிகுபுனைவு கதைகூறு முறைகள், லத்தீன் அமெரிக்கப் புனைவுகள் ஏற்படுத்திய உருமாற்றங்கள், மாய யதார்த்தப் பிரதிகள் இவற்றோடு உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் குறித்துச் சொல்லுங்கள். தற்போது யதார்த்தவாதக் கதைசொல்லலே தமிழில் மீண்டும் பரவலாக எழுதப்படுகிறதே.

அது மாதிரியான உணர்வுபூர்வமான தொடர்பு என்று பார்த்தால் போர்ஹேவுடைய கதைகள், இலத்தீன் அமெரிக்காவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள், கோணங்கி கொண்டுவந்த கல்குதிரையின் உலகச் சிறுகதைகள் தொகுப்பு, நீதிபதியின் மனைவி, இஸபெல் அலேண்டே இவையெல்லாம் உத்வேகமளித்தவை. ஆனால் போர்ஹேதான் ஒரு சவாலாக இருந்தார். எல்லாக் கதைகளையும் அவர் எழுதி முடித்துவிட்டது மாதிரி இருந்தது. என்னவகையான கதைகளையும் எல்லா வகையான வடிவங்களையுமே சிறுகதைக்குள் எழுதி முடித்துவிட்டதுபோல் இருக்கும்போது நாம் இப்பொழுது மீண்டும் என்ன எழுதுவது என்ற ஒரு திகைப்பு வரும். அப்போது ஒரு புது இடத்தைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அது நமது வாசிப்பின் மூலமாக, பயணத்தின் மூலமாக இன்னும் சொல்லப்படாத கதைகள், சொல்லப்படாத வடிவங்களை நோக்கி நம்மை நகர்த்துகிறது. பின்நவீனத்துவக் கதைசொல்லல் முறை என்பதைப் பார்க்கும் போது எனக்கு இந்த மாதிரியான காலகட்டம், வரையறுப்புகள், கோட்பாட்டியல் இதன் மூலமாக ஒரு இடம் ரொம்ப வெளிச்சமாகி விடுவது போல் இருக்கிறது. இந்த வெளிச்சம் வந்துவிட்ட பிறகு அந்த வெளிச்சத்திலிருந்து நாம் எழுதமுடியாது. மேலும் மறுபடியும் இன்னும் தூரத்தில் இருக்கிற, இன்னும் ரகசியத்தில் இருக்கிற இருட்டைத் தேடித்தான் ஓடவேண்டியிருக்கிறது. அப்பொழுது இன்னும் புதிதான இதுவரைக்கும் இல்லாத ஒரு கண்டுபிடிப்பு நிகழும்.

இங்கு செயல்பட்ட யதார்த்தவாத கதை சொல்லல் எப்படிப்பட்டது எனப் பார்க்க வேண்டும். அது இங்குள்ள உள்கட்டுமானங்கள், சாதிய, சமூகக் கட்டுமானங்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல்,  ‘ஒரு வாத்தியார் கிராமத்துக்குப் போவார். அங்கு ஒரு பண்ணையார் இருப்பார். அவர்தான் வர்க்க எதிரி. அங்கு இருக்கும் மக்களை ஒன்று திரட்டி ஒரு சங்கத்தை அமைத்துக் கொடியேற்றிவிடுவார். நாவல் முடிந்துவிடும். ஆனால் அங்கு இருக்கக்கூடிய உள்கட்டமைப்பு, சாதியம், மற்ற விஷயங்கள் எதுவும் அந்த நாவல்களில் பேசப்பட்டிருக்காது. நிறைய யதார்த்தவாத நாவல்கள் முழுக்க முழுக்க அப்படித்தான் இருந்தன. யதார்த்தம் என்பதேகூட அவர்களுக்கு ஒரு கனவுவாதமாகத்தான் இருந்துள்ளது. உண்மையில் அது யதார்த்தம் கிடையாது. யதார்த்தப் பிரதிகள் என்று தப்பாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். மறுபடி நாம்தான் மிகத் தீவிரமாக யதார்த்தத்தை நோக்கி ஒரு நியோ ரியாலிசத்தை நோக்கிப் போகவேண்டியிருக்கிறது.

யதார்த்தவாதம் தமிழில் ஒரு மார்க்சியக் கனவுவாதம்தான். இவர்களுடைய கனவு எதுவோ இலட்சியம் எதுவோ அதைப் பிரதிகளில் நிறைவேற்றிக் காட்டினார்கள். அப்புறம் அது எப்படி யதார்த்தப் பிரதியாக இருக்கும்? இங்கு ஒரு தலித் சொந்தமாக மாட்டை வைத்துக்கொள்ள முடியவில்லை. கூலி மாட்டைத்தான் இன்றுவரை மேய்த்துக்கொண்டிருக்கிறார் என்பது யதார்த்தம். ஆனால் அதை அவர்கள் பதிவுசெய்யவில்லை. பண்ணையார் என்கிற வர்க்க எதிரியை ஒரு பாத்திரமாக மாற்றிப் பிரதிக்குள் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அது யதார்த்தவாதமே கிடையாது. அந்தப் பிரதிகளை பின்நவீனத்துவக் கோட்பாடுகள், அமைப்பியல் போன்றவை உடைத்துப் போட்டது. அன்று அமைப்பியலைப் பற்றி நிறைய பேர் ஒரு காலகட்டத்தில் தப்பாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் தமிழவனின் புத்தகம், அமைப்பியல்வாதம் குறித்தெல்லாம் அதிகார மையங்களைக் கட்டுடைத்தல், அமைப்புக்கு எதிரான சிந்தனை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இருப்பது, அமைப்புக்கு எதிரான ஆட்கள் என்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அமைப்பியல் ஒரு கூடுதலான அறிவு முறை.

அமைப்பியல்வாதம் கூடுதலாக ஒரு மொழிவழியாகப் பிரதியைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு அமைப்பு இருக்கிறது, (அதாவது) சாதி இருக்கிறது. பிரதிக்குள் இருக்கக்கூடிய சாதியத்தை அதன்வழியாகக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் மௌனி எழுதியது பிராமணிய மொழி என்றார்கள். அவர் பறச்சேரி நாய்கள் குரைத்துக்கொண்டு ஓடின என்று எழுதினார். ஒரு பிரதியை வார்த்தைகள் வழியாக அதன் மேல் கட்டுமானம் என்ன கீழ்க்கட்டுமானம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஓர் அறிவுத்துறையான ஒரு கருவி அது. அதை ஓர் அறிவுத்துறையாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

தமிழில் இன்று எழுதப்படும் பெரும்பரப்பிலான சிறுகதைகள் வாழ்வனுபவங்களை நேரடியாகப் புலப்பதிவுசெய்யக்கூடிய ஒரு யதார்த்தவாதக் கதைசொல்லல் முறையில்தான் இருக்கிறது. எழுதுவெளியில் ஒரு பெரிய சுதந்திரம் ஏற்பட்டிருக்கிறது. பலதரப்பட்ட வாழ்க்கைநிலையிலிருந்து பலவிதமான வரலாறுகளோடும் ஞாபகங்களோடும் எழுதவந்துள்ளார்கள். இந்தத் திறப்பு ஒரு நல்ல சூழல்தானே?

அது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. நான் இதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் அந்தக் கதையை அந்த எழுத்தாளர் எழுதவில்லை. அவரது ஆயாவோ தாத்தாவோ, மூதாதையர்தான் அதை எழுதுகிறார்கள். ஒரு குடும்பம் சார்ந்த அல்லது தன் சமூகம் சார்ந்த ஒரு கதையை எழுதுவது என்பது அந்த எழுத்தாளருடைய தனித்துவத்தில் ஒலிக்கவில்லை. அவர்கள் தாத்தா பாட்டிதான் அவர்கள் மூலமாகப் பேசுகிறார்கள். இவர்கள் இனிமேல்தான் தங்களுக்கான கதையையோ அல்லது இதிலிருந்து இன்னும் அடுத்தடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும். தாத்தா பாட்டியின் ஒடுக்கப்பட்ட குரல்களை அடக்கிவைக்கப்பட்டதை, மூடிவைக்கப்பட்டதை இவர்கள் பேசுகிறார்கள். அவர்களுடைய இரண்டாவது மூன்றாவது நாவல்களில் அடுத்தடுத்த படைப்புகளில்தான் நாம் அவர்களுடைய சொந்தப் பார்வையைப் பார்க்க முடியும். ஆனால் அதை நாம் கொண்டாடத்தான் வேண்டும். அதைக் கொண்டாடவேண்டும், வரவேற்கவேண்டும், சந்தோஷமாக அந்தப் பிரதிகளைப் படிக்கவேண்டும். கண்டிப்பாகத் தேவைதான். அவர்கள் சார்பாக ஒரு நேர்மறையான தன்மையில்தான் இதைச் சொல்கிறேன். நான்இன்னும் கூடுதலாக என்ன சொல்கிறேன் என்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக ஓர் எழுத்தாளர் பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவனாக ஒரு எல்லை தேவையில்லை.

இப்பொழுது நான் குடும்பத்தைச் சாராமல் இருக்கிறேன், தனியாக இருக்கிறேன். நாடோடியாக இருக்கிறேன். எந்த நிறுவனத்தோடும் சாதியோடும் இல்லை. இந்தச் சமூகம் கொடுக்கக்கூடிய எந்த சௌகரியங்களையும் எடுத்துக்கொள்ளக்கூடிய எந்தச் சான்றிதழும் என்னிடம் கிடையாது. அப்போது இன்னும் எனக்குப் பயணம் போகமுடியும். ஒரு குறிப்பிட்ட சௌகரியங்களுக்குள் இருந்துகொண்டு பேசும்போது அவன் தனது சமூகத்திற்காகத்தான் பேசுவான், அவன் அவனுக்காகத்தான் பேசுவான். அவன் மொழிக்காகப் பேசுவான். ஒரு சமூகம் சாராமல் நீ என்ன எழுதுவாய் எனலாம். நான் இப்போது கர்நாடகாவில் இருந்தால் என்ன சொல்வேன்? உங்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சொல்வேன். எதை நாம் சார்கிறோம் என்பது இருக்கிறது. உலகப்பொதுவான ஓர் அடையாளத்திற்குள் இயங்க வேண்டும். அடையாளம் இல்லை, அடையாளமே இல்லாமல் இருப்பது. அடையாளம் இல்லாமல் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிற எல்லாக் கொடூரங்களையும் பார்ப்பது. முதலில் சொன்னது போல் விலங்குத்தன்மையுடன் ஒரு மனிதன் இருக்கிறான். அவனை ஒரு விலங்காகத்தான் பார்க்கமுடியும். என்னுடைய சொந்தக்காரன் என்பதற்காக அவனைப் புகழ்ந்துபாடி பெருமிதத்துடன் எழுத முடியாது. இங்கே அந்த glory writingதான் இருக்கிறது. தன்னுடைய குடும்பத்தின் புகழ்பாடுவதாக, தாத்தா பாட்டியின் புகழைப் பாடுவதாக.

இன்று கவிதை பொதுவாகக் காட்சித்தன்மை, புறவயமான சித்தரிப்புகள், கதைகூறல் என ஒரு உரைநடைத்தன்மை அடைந்து வருகிறது. உங்கள் கவிதைகளிளோ ஒருவிதப் பாடல் தன்மை, நாடோடிப் பாடல், மந்திரங்கள் போன்ற ஒரு இசைமைக்கான ஓட்டம் உள்ளது. புனைவில் இருந்து கவிதைக்குள்ளான மன இயக்கம் எப்படி உள்ளது?

முதலில் நான் கவிதைதான் எழுதினேன். ஆனால் இன்னும் விரிவான ஒரு பொருளைக் கையாளும் சந்தர்ப்பத்தில் கவிதையை மிகவும் நீட்டி எழுதும்போது ஒரு உரைநடை போல அது தளர்வடைகிறது. இந்த வடிவில் இதைச் சொல்ல முடியாது என உணரும்போது வேறு ஒரு சுதந்திரமான இடத்திற்குப் போக வேண்டியுள்ளது. அப்படித்தான் கவிதையில் இருந்து சிறுகதை வடிவத்திற்குப் போவது நிகழ்கிறது. மற்றவர்கள் இன்று கவிதையை ஒரு உரைநடைத்தன்மையில் எழுதுகிறார்கள் எனக் கூறும்போது அதே சமயம், இந்த மொழியில்தான், இந்த மாதிரியான கட்டமைப்பில்தான் கவிதையை எழுதவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால் அவர்கள் எழுதுவது நேர்த்தியாகவும் அவர்கள் சொல்ல வரும் விஷயங்கள் ஒரு காத்திரமான தன்மையுடன் இருக்கின்றனவா என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையைப் போகிற போக்கில் நான்குவரிகளைக் குறுக்கும்நெடுக்கும் அடுக்கி வைத்து நான் எழுதினால் அது கவிதையாகும் என்பதெல்லாம் கிடையாது. ஆனால் உண்மையிலேயே சிறந்த தளமாக இருந்து அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் மிகவும் காத்திரமாயிருந்து நீளமான ஒரு உரைநடைத்தன்மைக்குள் இருந்தாலும் அதைக் கவிதையாக நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

நவீன கவிதை என்று பார்த்தாலே நவீன கவிதையின் மொழியே, என்னைப் பொறுத்தவரையில், மிகவும் ஈர்ப்புடன் இருப்பது மௌனியிடம்தான் என்று நினைக்கிறேன். மௌனியிடம்தான் ஒரு கவித்துவமான வேகம் இருக்கும். அவர் எழுதியது சிறுகதைகள்தான் என்றாலும் கவிதைக்கே கூட அங்கிருந்து மொழியை எடுத்துக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு இருக்கும். அவருடைய கதையில் இருக்கும் மனோ இயல்பின் சாத்தியங்கள் மனோ இயல்பின் துள்ளல்கள். அவற்றை எப்படியாவது மொழியில் கடத்திட முயற்சி செய்வார். பின்னால் அவர் மீது ஒரு பிராமணிய எழுத்தாளர், பிராமண வாழ்க்கையை, ஒரு மேட்டுக்குடி வாழ்வை எழுதினார் என்கிற விமர்சனங்கள் ஒரு பக்கம். மொழிரீதியாக அவர் எனக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். அதேபோல ஒரு மொழி வீச்சைக் கையளித்தவராக பிரமிள் இருக்கிறார்.

தமிழில், சிறுபத்திரிகை இயக்கம், அதன் மதிப்பீடுகள் இவற்றில் ஒரு சரிவு வருகிறது. இடைநிலை என்று ஒரு இடம் விஸ்தாரமாக உருவாகிறது. சீரிய இலக்கியம் – வணிக இலக்கியம் என்னும் வேறுபாடு கலைகிறது. இச்சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எழுத்தாளர்கள் மட்டும் தங்களை சீரியசானவர்களாக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்து அப்படி இருக்கவில்லை. அதன்மூலம் தங்கள் பிரதிகளின் விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்கிறார்கள். இது ஒரு முக்கியமான பிரச்சனை. எழுத்தாளர்கள் தங்களை முழு நேர எழுத்தாளர்களாக அதாவது அப்படி ஒரு பிம்பமாக வைத்துக் கொள்வதில் சிக்கல் உள்ளது. ஒரு எழுத்தாளன் தன்னளவில் சீரான எழுத்து வாழ்விற்கு எளிமையாகப் பொருள் ஈட்டி வாழமுடியும். ஆனால் அவனது குடும்பம், அவனது சந்ததிக்கு, அவனுடைய காருக்கு பெட்ரோல் போடுவதற்கு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு, பத்தாயிரம் ரூபாயில் ஷூ போடுவதற்கு, ஐயாயிரம் ரூபாய் சட்டை போடுவதற்கெல்லாம் எழுத்து சம்பாதித்துத் தராது. இவர்கள் எழுத்தின் மூலம் சம்பாதித்து இப்படி ஒரு நிலைமைக்குப் போக வேண்டும் என விரும்புகிறார்கள். எழுத்து ஒரு தீவிரமான தன்மை உடையது, அது ஒரு ஸ்பார்க்கில் இருந்து வருகிறது, சீரியசாக, அடர்த்தியாக இருப்பது போன்ற இயல்புகளை உடைத்து ஒரு நுகர்வு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

இப்போது அச்சு இயந்திரங்களும் பெருகிவிட்டன. அதற்குத் தீனி போடவேண்டும். சந்தையை நிறைவு செய்ய வேண்டும். பொதுவெளியில் கனவுகளை அள்ளிக் குவிக்க வேண்டியதாக உள்ளது. நாவல் வடிவத்தில் எதை வேண்டுமானாலும் எழுதுவது. ஒரு பேக்ட்ராப் ஸ்கிரீன் போடுவது போலதான் நாவல் உள்ளது. ஒரு கதை இருக்கிறது என்றால் அதற்கு ஒரு கான்வாஸ் போடணும். ஒரு ஸ்கிரீன் போட வேண்டும். ஜெயமோகன் தத்துவார்த்தமாகப் போடுவார். ராமகிருஷ்ணன் ஒரே கனவாகப் போடுவார். இன்னொருத்தர் வேறொன்றாகப் போடுவார். அவ்வளவுதான். இப்படி பேக்ட்ராப் மாற்றி மாற்றிக் கதையைச் சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருக்கலாம். ஏன் எழுத்தாளர் என்றால் டயருக்குப் பஞ்சர் ஒட்டக்கூடாதா. காருக்கு பெயிண்ட் அடிக்கக் கூடாதா, தமுக்கு அடித்தல், கட்சிப் பணி இதெல்லாம் செய்யக்கூடாதா. சுதந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு எந்த வேலை செய்துகொண்டும் எழுதலாம். இன்னொரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால் புரவலர்களும் இப்போது எழுத்தாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் மிக ஆபத்தானது. இப்போது புலவர்களைத் தாண்டி புரவலர்களே நானும் கவிஞன் நானும் எழுத்தாளன் எனப் புறப்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் இயற்கை வேளாண்மை குறித்துப் பேசுகிறீர்கள், இயங்குகிறீர்கள். இயற்கையைக் கொண்டாடுவது அதனோடு ஒத்திசைவில் வாழ்வது குறித்தெல்லாம் பேசுகிறீர்கள். உங்கள் எழுத்திலும் நடைமுறை வாழ்வின் செயல்பாடுகளிலும் அது இருக்கிறது. ஆனால் இயற்கையை மேன்மை செய்யும் இடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். இயற்கையை முழுமைத்துவம் கொண்டதாக, தூய்மையான ஒரு இடமாகப் பார்ப்பதன் மீதான விமர்சனம் குறித்து? இயற்கையின் இயக்கத்தில், உயிரினங்களின் இயல்பிலேயே அதிகாரம், சுயமுனைப்பு, பிறிதை அழித்துத் தன்னைத் தக்கவைப்பது, இருப்புக்கான போர் என்பதெல்லாம் இல்லையா?

இயற்கையில் அப்படிப்பட்ட வன்முறை இல்லை. மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்வது போல மிருகங்கள் கத்தி எடுத்துக் கொண்டு போய் இன்னொரு மிருகத்தைக் கொல்வது இல்லை. ஆனால் போட்டி போடுவது உள்ளது. அது உயிர் வாழ்வற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ளத்தான் அப்படிச் செய்கிறது. அது மனிதச் சமூகத்திலும் இருப்பதுதான். தாவரங்களில் சில நுட்பமான வன்முறைகளைப் பார்த்திருக்கிறேன். மேலிருந்து வரக்கூடிய அத்தி பைக்கஸில் ஒரு வகை உள்ளது. மரத்தின் மேலே விழுந்து அப்படியே வளர்ந்து வரும். அது கீழிருந்து வளராது. மேலிருந்து அப்படியே கொடியைப் பரவிக் கொண்டே வந்து தரையில் தன்னை ஊன்றி அந்த மரத்தையே உறிஞ்சிச் சாப்பிட்டுவிடும். ஒன்றை ஒன்று உண்பது இயற்கையின் இயல்புதான். இயற்கைக்கு அறம் கிடையாது. ஆனால் ஒரு லயம் உண்டு.

இயற்கை தன் பிரக்ஞையற்று வேறு ஒரு பிரக்ஞையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்குள் ஒரு ரிதம் இருக்கிறது. லயம் உள்ளது. ஆனால் அறம் கிடையாது. அறம் என்பது ஒருவிதப் பிழைப்பு. பிழைப்புக்காக நியாயப்படுத்துவதுதான் அறத்தின் வேலையாக உள்ளது. ஐம்பது பேரைக் கொன்றால் போதும். மீதி ஐம்பது பேரைக் கொல்ல வேண்டாம். அவர்களை அடிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பது போன்றதுதான் அறம். மனிதனுடைய பயத்தில் இருந்தும் ஒழுக்கவியலில் இருந்தும் அறிவைக் கருவியாகப் பயன்படுத்துபவனிடம் இருந்தும்தான் அறம் தோன்றியது. அதுதான் இன்றைய எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. அறம் ஒரு தந்திரம்தான். போராட முடியாத நிலையில் வேறுவிதமான பாவனைகளில் எதிர்கொள்வது. அறமாக, கருத்தியலாக முன்வைப்பது. உளவியல் ரீதியாக ஒடுக்குவதற்கான பதனப்படுத்தல். இயற்கைக்கு அறம் இல்லை. அதற்குள் நிச்சயமாக ஏதோ ஒரு லயம் உள்ளது அவ்வளவுதான். இயற்கையைக் காப்பாற்றுவது என்பதே ஒரு அர்த்தமற்ற சொல்தான்.

எழுத்துக்கு அப்பாலான வேறு ஈடுபாடுகள் குறித்து? உங்கள் டிஜிருடு இசை குறித்துச் சொல்லுங்கள்…

மொழிக்குள் கதை சொல்வது ஒரு வரம்பில் இருக்கிறது அல்லது வாசிப்பிற்குச் சில வரையறைகள் இருக்கின்றன – மொழியின் போதாமையை உணரும்போது இசை ஒரு பெரிய சுதந்திரமாக உள்ளது. இயற்கைக்கு இன்னும் நெருக்கமாகச் செல்லும் சாத்தியம் இருப்பதாக உணர்வதால் இலக்கியத்தைத் தாண்டி இசைக்குச் செல்லத் தோன்றுகிறது. நான் இசை சார்ந்த குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல. தீவிரமாகத் தேடும் போதுதான் டிஜிருடு பற்றித் தெரிந்தது. அது ஒரு யுனிவெர்சலான இன்ஸ்ட்ருமென்ட். அதில் ரிதம், லயம் மட்டும்தான் இருக்கிறது.

மரபான எந்த இசைக் கட்டமைப்பிற்குள்ளும் அதைக் கொண்டுவர முடியாதா?

பிற கருவிகளுடன் சேர்ந்து வாசிக்கலாம். வெளிநாட்டு நண்பர்களுடன் இணைந்து நானும் அதேபோல நிறைய கச்சேரிகள் செய்திருக்கிறேன். இது ஒரு ஃபிரீ ஸ்டைல் மியூசிக். குறிப்பிட்ட வடிவத்தில் இல்லாமல் இஷ்டம் போல பாடலாம். வாசிக்கும் போது ஆழமாக உள்ளே செல்வதாக இருக்கிறது. மற்றவர்களுக்கும் அத்தகைய உணர்வைத் தர முடிகிறது. டிஜிருடு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து உள்ளது. அதில் இங்கே இல்லாமல் வேறொரு காலத்திற்கு, இடத்திற்குப் பயணம் செய்யும் மன உலகம் இருக்கிறது. இசை ஒரு நிலவெளியை உருவாக்கித் தருகிறது. ஜப்பானில் ஒரு புல்லாங்குழல் இருக்கிறது. ஜென் துறவிகள் இசைக்கிறார்கள். அதை மூங்கிலின் கிளைகளிலல்லாமல் வேர்களிலிருந்து செய்கிறார்கள். அதை வாசிப்பது சற்று சிரமமானது. அதை வாசிக்கும்போது, சாதாரணமாக இருக்கும் மூங்கில் தோட்டம் பல ஆயிரம் அடுக்குகளாகச் செல்கிறது.

நிறைய நிலவியல், வேறு சில சூக்குமமான கற்பனைகள் உருவாகின்றன. அந்த சப்தம் வேறொன்றை உருவாக்கி விடுகிறது. கலை, இலக்கியம் எல்லாம் அரசியல் அறிவு, ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்வது என்பதைத் தாண்டி வேறோர் எழுச்சிக்கான தேவையாக இருக்கிறது. அந்த இடத்திற்கு இசையோ மற்ற விஷயங்களோ கொண்டுசெல்கின்றன. ராணுவத்திற்கான இசை, மேட்டுக்குடிக்கான இசை என இசையைப் பொருளாதார ரீதியாகப் பின்னோக்கித்தான் நகர்த்துகிறார்கள். அது தொல்நிலையில் மன எழுச்சிக்கான ஒன்றாக இருந்தது. இதைத் தேடும் போது, பறை அடித்தால் அவன் இந்த ஜாதியைச் சார்ந்தவன், கர்னாடக சங்கீதமெனில் வேறொன்று என இதற்குள்ளாக ஜாதி வகைமைகளைப் புகுத்துகிறார்கள். டிஜிருடு இப்படியாக எதற்குள்ளும் வராது. அதைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பிட்ட விதத்தில்தான் வாசிக்க முடியும். மாற்ற முடியாது. அதன் எல்லைகள் எல்லாவற்றையும் ஏற்கெனவே பழங்குடிகள் வாசித்து முடித்தாகிவிட்டது. அது நுரையீரல் மாதிரிதான். இந்த இசைக்கருவியும் மூச்சு விடுவதைப் போலதான்.

அதில் சர்குலர் பிரீதிங் என்றொன்று இருக்கிறது. வாசிக்கும் போதே நீங்கள் மூச்சை இழுத்துக்கொண்டிருக்கலாம், விட்டுக்கொண்டும் இருக்கலாம். ஒரு சுழல் முறையில். மூச்சை இயக்கிக்கொண்டே மணிக்கணக்காக வாசித்துக்கொண்டிருப்பார்கள். இது முக்கியமான ஒரு தொழில்நுட்பம். இதை அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்றே தெரியாது. இதை மாற்றாக முன்வைப்பதென்பது அரசியல்தான்.

செவ்வியல் என்பது பழங்குடிகளின் வேர்களிலிருந்து பரிணாமம் அடைந்து வந்ததுதான். செவ்வியல் என்பது மேம்படுத்தப்பட்ட பழங்குடிக் கூறுகள்தானே? அதை ஏன் எதிர்நிலைக்கு உட்படுத்த வேண்டும்?

சரிதான், அதிலிருந்துதான் வளர்ந்திருக்கிறது. ஆனால் அது பொதுமைப்படுத்தப்படாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இறுகிப் போய்ப் பிற சமூகத்திற்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. கர்னாடக இசைக் கூறுகளை எடுத்துக்கொள்ளுங்கள்; முன்பு அது தமிழர்களின் இசையாக இருந்தது, இப்போது குறிப்பிட்ட சமூகத்திற்கான அடையாளமாக மாறிவிட்டது. நீங்கள் அதைத் தெரிந்தகொள்ள முடியாது. குறைந்தபட்சமாக அதன் நுணுக்கங்களைக் கற்றுத் தர மாட்டார்கள். என்னதான் அதை இசைக்கல்லூரில் பாடமாக வைத்திருந்தாலும் ஒருவனால் அதிலிருந்து பெரியவனாகிவிட முடியாது. இளையராஜா மாதிரி சில அபூர்வங்கள்தான் அதிலிருந்து வெளிவந்து வேறோர் இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். வேறு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டு ராமா கோவிந்தா எனப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவை இயல்பாகவே எதிர்வடிவம் பெறும். உங்களால் ஒரு சபாவிற்குச் சென்று நாட்டுப்புறப் பாடல் பாட முடியுமா? பாடினீர்களென்றால் எதிர்ப்பாடல் பாடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். குறிப்பிட்ட ஜாதிக்காக, பிரபுத்துவச் சமூகங்களுக்கானதாக ஒன்று மாறும் போது அதை உடைப்பதற்காக அதற்கு எதிரான இன்னோர் இசையை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆப்பிரிக்க மரபில், அவர்களது சுதந்திரமான வேலை சார்ந்து இயக்கங்களிலிருந்து பிறந்த சப்தங்களை இசையாக மாற்றிக் கலகமாக முன்வைத்து அதை உடைக்க வேண்டியிருக்கிறது.


2016 இடைவெளி இதழ் 2 இல் வெளியான நேர்காணல். எழுத்தாளர் குமார் அம்பாயிரத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தடாரியில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இதற்கு இசைவு தெரிவித்த இடைவெளி ஆசிரியர் குழு சிவ செந்தில்நாதன், பிரவீண் பஃறுளி ஆகியோருக்கு நன்றி.

Art : நெகிழன்

பிரவீண் பஃறுளி
பிரவீண் பஃறுளி

பிரவீண் பஃறுளி, இயற்பெயர் நா.பிரவீண் குமார். சென்னை, குருநானக்கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் விமர்சன வரலாறு குறித்து ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். புறனடை, இடைவெளி, பாபல் ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியராகப் பங்களித்துள்ளார். அயல்மொழிக் கவிதைகளை ‘திணை மயக்கம்’ என்னும் நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
சிற்றிதழ்களில் அறிவியல் புனைவுகளை மொழிபெயர்த்துள்ளார்.

கல்குதிரை, மணல் வீடு, இடைவெளி, வனம், கனலி,ஓலைச்சுவடி உள்ளிட்ட சிற்றிதழ்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக “அளாவும் புல்” என்னும் நூல் வெளிவந்துள்ளது. தனி-மை வெளி, சிறுபத்திரிகை, வனம், கல்குதிரை ஆகிய இதழ்களில் புனைகதைகள் எழுதி வருகிறார். பல மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்புடன் முன்னோடியான உலக அறிவியல் சிறுகதைள் பலவற்றைத் தொகுத்து ” மீ : உலக விஞ்ஞானப் புனைவு புத்தகம் என்னும் பெருந்தொகுப்பைக் யாவரும் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top